Skip to Content

13. அன்னை இலக்கியம் - மீன்கொடி

அன்னை இலக்கியம்

மீன்கொடி

(சென்ற இதழின் தொடர்ச்சி)

சமர்ப்பணன்

11. கல்யாணம்

கல்யாணத்தில் பொதுவாக முதல் நாள் நிச்சயதார்த்தம் அல்லது வரவேற்பு இருக்கும். மறுநாள் காலையில் கல்யாணம் நடக்கும். எனக்கும், ஜமுனாவிற்கும் கல்யாணம் மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்யாணத்திற்கு முதல் நாள் மாலை வரை உற்சாகமாக எங்களோடு பேசிக் கொண்டிருந்த தாத்தா, ஏதோ ஒரு போன் வந்தபின் இறுக்கமாகி விட்டார். மதுரை மாமாவைத் தனியாக அழைத்துச் சென்று நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.

மறுநாள் காலையிலும், கல்யாணத்தின் போதும் இறுக்கமாக, வேறேதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் தாத்தா.

கல்யாண மேடை மிக மிக எளிமையாகத்தான் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இருநூறு பேர்களுக்கும் குறைவாகவே வந்திருந்தனர்.

‘காலை ஒன்பது முதல் பத்தரை வரை முகூர்த்தம். நான் சரியாக எட்டரைக்கெல்லாம் வந்து விடுவேன்’ என்று கூறியிருந்தார் ஸ்ரீ மாசிலாமணி சுவாமிகள். அவர் கேட்டிருந்த கிரியைப் பொருட்கள் முதல் நாளிரவே வந்து விட்டன. பொதுவான திருமண தெய்வங்கள் தவிர குடும்ப தெய்வம், குல தெய்வம், சாதி தெய்வம் என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனி பையில் சாமான்கள் வைக்கப்பட்டிருந்தன.

மஞ்சள் நிற நூல் சேலை உடுத்தி நான் தாலி கட்டுவதற்காக மணப்பெண் அறையில் காத்துக் கொண்டிருந்தாள் ஜமுனா. தாலி கட்டியபின் பட்டு சேலைக்கு மாறிக் கொள்வாள்.

கவர்னசத்தை தனக்கு கட்டுப்படுபவர்களையெல்லாம் அதிகாரம் செய்து கொண்டிருந்தார். எட்டேமுக்கால் அளவில் மதுரை அத்தை ‘சுவாமிகளை இன்னமும் காணோமே’ என்று மெல்ல குரல் எழுப்பினார்.

‘அவர் எப்பேர்ப்பட்ட மகான்! தேங்காய் மூடி புரோகிதரா என்ன!’ என்றார் கவர்னசத்தை.

ஒன்பது மணி ஆனதும் கவர்னசத்தை ரகசியமாக என்னிடம் வந்து ‘ஒரு போன் பண்ணி பார்க்கலாமா?’ என்று கேட்டார். நான் போன் செய்தேன். சுவாமிகளின் போன் அணைக்கப்பட்டிருந்தது.

‘வண்டியில் வந்து கொண்டிருப்பார்’ என்றார் கவர்னசத்தை.

மணப்பெண் அறையிலிருந்த ஜமுனாவிற்கு போன் செய்தேன். ‘தாத்தாவிடம் சொல்லி புரோகிதர் இல்லாமல் கல்யாணம் நடத்தி விடலாமா என்று ஜவுளி அண்ணி கேட்டார். எனக்கும் சரி என்று தோன்றுகிறது’ என்றேன்.

‘அட, என்ன அவசரம் உங்களுக்கு!’ என்றாள் ஜமுனா.

‘நேரமாகிறதே’ என்றேன்.

‘எந்த ஜென்மத்திலும் ஏதோ ஒரு வகையில் உங்களுக்கு நான் உறவாகத்தான் இருப்பேன். அதனால் பொறுமையாக இருங்கள்!’ என்றாள் ஜமுனா.

அழைக்கப்பட்டிருந்த எல்லோரும் வந்து மண்டபத்தில் கூடி விட்டிருந்தனர். மணமக்கள் இல்லாத மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன செய்வதென்று எவருக்கும் தெரியவில்லை.

ஒன்பதரைக்கு மேல் கவர்னசத்தையால் பொறுக்க முடியவில்லை. மதுவண்ணாரை அதட்டி, பின் கெஞ்சி, சுவாமிகள் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பத்து மணிக்கு திரும்பி வந்தார் மதுவண்ணார்.

‘நல்ல ஆளைப் பார்த்து விட்டீர்கள்!’ என்று கவர்னசத்தையிடம் சொல்லிவிட்டு ‘தாத்தா, மினிஸ்டர் தமிழடியான் ஏதோ ஒரு பெரிய திட்டம் ஆரம்பிக்கிறாராம். இந்த சுவாமி அவர் வீட்டிற்கு காலையில் நான்கு மணிக்கே போய்விட்டது. இன்னமும் அங்கேதான் இருக்கிறது. நேரில் பார்த்து விசாரித்தால் ‘வேறு யாரையாவது வைத்து கல்யாணத்தை நடத்திக் கொள். தலைவர் எனக்கு வைர மோதிரம் போட்டிருக்கிறார். இப்போதைக்கு இங்கிருந்து நகர முடியாது’ என்று பேசுகிறது. திரும்பி வந்து விட்டேன்’ என்றார்.

எல்லோரும் கவர்னசத்தையைப் பார்க்க, அத்தனை சக்தியை அவரால் தாங்க முடியவில்லை. ‘ஏம்பா, அந்த அயோக்கியனுக்கு பின்னந்தலையில் ஒரு அறையாவது கொடுத்து விட்டு வந்திருக்கக் கூடாது? சாதாரண புரோகிதரை கூப்பிட்டிருந்தால் கூட கல்யாணம் இந்நேரம் முடிந்திருக்குமே! விசேஷமான ஆள் என்று இவனை நம்பினேனே’ என்று புலம்பிய கவர்னசத்தை திடீரென சன்னதம் வந்தவர் போலாகி ‘பரமா, நீ சொன்னதுதான் சரி. சாரமே இல்லாத சடங்கு எதற்கு? நாம் எந்த நேரத்தை நல்ல நேரம் என்று நினைக்கிறோமோ, அது நல்ல நேரம்தான். நடுவில் எந்த புரோக்கரும் வேண்டாம், புரோகிதரும் வேண்டாம். நீ தாலியைக் கட்டு’ என்றார்.

‘தாலி கட்டுவது கூட தேவையில்லைதான். ஆனால், திருமணப் பதிவாளர் ஒத்துக் கொள்ள மாட்டாரே. ஏதாவது அடையாளம் கேட்பாரே!’ என்று கூறிச் சிரித்தாள் ஜமுனா.

‘கல்யாணம் இல்லாமல் சேர்ந்து வாழலாம் என்று கூட இவள் சொல்வாள் போலிருக்கிறதே’ என்று குத்தலாகச் சொன்னார் கவர்னசத்தை.

‘அதை ஜமுனா ஏற்கனவே சொல்லிவிட்டாள் கவர்னசத்தை’ என்றேன்,

வாய்விட்டுச் சிரித்தாள் ஜமுனா.

‘கல்யாணப் பெண் போல லட்சணமாக வெட்கப்பட்டு தலையைக் குனிந்து கொண்டிரு’ என்று மதுரை அத்தை ஜமுனாவை அதட்டி விட்டு நிமிர்ந்திருந்த அவளது தலையை அழுத்திக் குனிய வைத்தார்.

நான் எந்த மந்திரமும், சடங்கும் இல்லாமல் தாலி கட்டி ஒரு முடிச்சு போட, மற்ற முடிச்சுகளை யசோதா அக்கா போட்டார். விருந்தினர்கள் ஒவ்வொருவராக வந்து கைகொடுத்து, போட்டோ எடுத்துக் கொண்டு, வண்ணக் காகிதம் சுற்றப்பட்ட பரிசைத் தந்துவிட்டுச் சென்றனர். பல சுவர் கடிகாரங்களும், போட்டோ சட்டகங்களும் கல்யாணப் பரிசாக வந்திருந்தன.

கம்பெனிக்கு உதிரி பாகங்கள் செய்து தரும் முருகவேள் கல்லில் செதுக்கிய உள்ளங்கையளவு பிள்ளையார் சிலை ஒன்றைப் பரிசாகத் தந்தார்.

‘அழகாக இருக்கிறது. எங்கு வாங்கினீர்கள்?’ என்று கேட்டேன்.

‘நானேதான் செதுக்கினேன். சிற்பம் செய்வது என் பொழுதுபோக்கு’ என்றார் முருகவேள்.

அருகே நின்றிருந்த என் நண்பன் ஆடிட்டர் தினகரன் ‘யந்திர வேலைகளையும் நன்றாகத்தான் செய்கிறார்’ என்றான்.

‘இவரை உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டேன்.

‘மண்டபத்தில்தான் தெரிந்து கொண்டேன். என் பழைய ஸ்கூட்டரில் விசித்திரமான சத்தம் வந்து கொண்டிருந்தது. பல மெக்கானிக்குகளிடம் காட்டியும் சரியாகவில்லை’ என்றான் தினகரன்.

‘அதனால்தானே புது மோட்டார் சைக்கிள் வாங்க முடிவெடுத்தாய்?’ என்றேன்.

‘பார்க்கிங் இடத்தில் நான் ஸ்கூட்டரை நிறுத்தும்போது, இவரும் சைக்கிள் நிறுத்த வந்தார். எதையோ கழட்டி என்னவோ செய்தார். சத்தம் நின்று விட்டது’ என்ற தினகரன் ஒரு பார்சலை கொடுத்துவிட்டு விடை பெற்றான்.

ஜமுனா சுந்தரத்தைப் பார்த்தாள். அவன் ‘வாருங்கள் சார், சாப்பிடலாம்’ என்று கூறி முருகவேளையும். தினகரனையும் அழைத்துச் சென்றான்.

தாத்தா எங்களிடம் ‘நான் அவசர வேலையாக பெங்களூருக்குப் போகிறேன். இரண்டு நாட்களில் வந்து விடுவேன்’ என்றார்.

‘அப்படி என்ன அவசரம்? நாளைக்குப் போகலாமே’ என்றார் காபி அண்ணி.

‘நீ பேசாமலிரு. தாத்தாவிற்கு தெரியாதா’ என்றார் ஜவுளி அண்ணி. இருந்தாலும் எல்லோருக்குமே ஆச்சரியமாகத்தான் இருந்தது.

தாத்தா கிளம்பி விட்டார். என்ன சிக்கல் என்று தெரியவில்லை. மர்மமாக இருந்தாலும், ஜமுனாவின் அருகாமையினால் அதை சில நிமிடங்களில் மறந்துவிட்டேன்.

12. மான்மியம்

தாத்தா கிளம்பிச் சென்ற பின் மண்டபமே காலியாகி விட்டது போலிருந்தது. பனிரெண்டு மணிக்கு மண்டபத்தில் தாத்தா குடும்பத்தினரையும், மதுரை மாமா குடும்பத்தினரையும் தவிர எவருமே இல்லை.

‘கோவிலுக்குப் போய்விட்டுத்தான் வீட்டிற்குப் போக வேண்டும் என்று சொன்னீர்களே கவர்னசத்தை’ என்றேன்.

‘நம் வீடுதான் கோவில். பரமா, இனி எந்தக் கோவிலுக்கும் போக வேண்டாம். எந்த பூசாரியின் உறவும் வேண்டாம். மாசிலாமணியால் நான் சபையில் பட்ட அவமானம் போதும். இனி எல்லோரையும் ஓட, ஓட விரட்டி நான் யார் என்று காட்டுகிறேன்’ என்று வெறுப்போடு சொன்னார் கவர்னசத்தை.

முதலில் அண்ணிகள் வீட்டுக்குச் சென்று விட்டனர். அரைமணி நேரம் கழித்து நாங்கள் கிளம்பினோம். வீட்டு வாசலில் காத்திருந்த அண்ணிகள் தலைமையில் நாங்கள் வீடு புகுந்தோம்.

அண்ணிகள் ஆரத்தி எடுத்தபின் ‘புதுப் பெண் வீட்டிற்கு வருகிறாள். யாராவது பாடுங்களேன்’ என்றார் மதுரை அத்தை.

எல்லோரும் சிரித்தார்களே தவிர எவரும் பாட முன்வரவில்லை. சற்றுப் பொறுத்து ‘நான் பாடுகிறேன்’ என்றார் கவர்னசத்தை.

எச்சரிக்கை அடைந்த ஜவுளி அண்ணி ‘பாட்டெல்லாம் எதற்கு?’ என்றார்.

‘பாட்டு வேண்டாம். உள்ளே போகலாம்’ என்றார் காபி அண்ணி.

‘ஒரு வேடிக்கைதானே. நீங்கள் பாடுங்கள்’ என்றார் மதுரை அத்தை, என் மாமியார்.

‘புதுப் பெண்ணுக்கு மாமியார் இங்கில்லை. என்னையே மாமியாராக நினைத்துக் கொண்டு செட்டி நாட்டு மாமியார் மான்மியம் பாடுகிறேன். பெரிய பாட்டு. சில வரிகள் பாடுகிறேன்’ என்றார் கவர்னசத்தை.

‘வேண்டவே வேண்டாம்’ என்று அண்ணிகள் இருவரும் கிட்டத்தட்ட கூவினர்.

ஆனால், கவர்னசத்தை பாட ஆரம்பித்துவிட்டார்.

நல்லாத்தான் சொன்னாரே நாராயணன் செட்டி!
பொல்லாத பொண்ணாகப் பொறுக்கி வந்து வச்சாரு
வல்லூறைக் கொண்டு வந்து வாசலிலே விட்டாரு
கல்லாப் பொறந்ததையும் கரும்பாம்புக் குட்டியையும்
செல்லாப் பணத்தினையும் செல்ல வைச்சு போனாரு
கண்ணா வளர்த்த பிள்ளை காலேசிலே படிச்சு வந்து
மண்ணாளும் ராசாபோல் வளர்ந்ததடி என் வீட்டில்!
வந்த நாள் தொட்டு என் மகனைப் பிரிச்சு வைச்சா
எந்த நாள் பாவமோ இப்ப வந்து சுத்துதடி
தலைகாணி மந்திரத்தால் தாயை மறக்க வச்சா
மலையரசி, காளி, எங்க மாரியம்மா கேக்கோணும்!
ராசாக் கிளி போலே நல்ல பிள்ளை பெத்தெடுத்தேன்
பேசாக் கிளியாச்சு! பெண்டாட்டி நினைவாச்சு!
பாருடா என்று சொன்னா பாக்காம போறாண்டி!
கேளுடா என்று சொன்னா கேக்க மனம் இல்லையடி!

சட்டென்று அந்த இடம் அமைதி ஆயிற்று. கலைந்த சூழலை எப்படி எதிர்கொள்வது என்று எவருக்கும் தெரியவில்லை.

கோபத்துடன் காபி அண்ணி ‘என்ன பாட்டு இது!’ உரத்த குரலில் கூற, ஜவுளி அண்ணியின் கண்களில் கண்ணீர் ததும்பியது. மதுரை அத்தை விசும்ப ஆரம்பித்தார்.

அப்போது ஜமுனா வாய்விட்டு சிரித்தாள். ‘இது என்ன அசந்தர்ப்பமான சிரிப்பு! பாட்டு இவளுக்கு புரியவில்லையா!’ என்பது போல அனைவரும் ஜமுனாவைப் பார்த்தனர்.

‘கவர்னசத்தை! இந்த பாட்டு யார் எழுதியது தெரியுமா?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘எனக்குத் தெரியாதே அம்மா’ என்றார் கவர்னசத்தை.

‘மருமக்கள் சொத்துரிமை முறையில் இருக்கும் சிக்கலைப் பற்றி கவிமணி ஒரு கேலிப் பாட்டு எழுதினார். நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழி மான்மியம் என்று அதற்கு பெயர். அதைப் பார்த்து இங்கே இருக்கும் திருமண பழக்க,வழக்கத்தைக் கேலி செய்து கவியரசர் செட்டி நாட்டு மாமியார் மான்மியம் எழுதினார்.’

‘கேலிப் பாட்டு என்று தெரியும். நான் வேறென்ன கண்டேன்! தப்பாக நினைத்துக் கொள்ளாதே’ என்றார் கவர்னசத்தை.

‘இதற்கு எதிர் பாட்டு இருக்கிறது கவர்னசத்தை. செட்டி நாட்டு மருமகள் மான்மியம் என்று பெயர். நானும் உங்களைப் போல கொஞ்சம் பாடுகிறேன். கேளுங்கள்’ என்றாள். எல்லோரும் திகைப்புடன் ஜமுனாவைப் பார்க்க அவள் பாடத் தொடங்கினாள்.

அவ கெடக்கா சூப்பநகை; அவ மொகத்தே யார் பாத்தா!
அவுக மொகம் பாத்து அடியெடுத்து வச்சேன் நான்!
தலைகாணி மந்திரமாம்; சங்கதியைக் கேளுங்கடி!
பொண்டாட்டி சொல் கேக்க புத்தியில்லா ஆம்பிளையா?
வீட்டு மருமகளா விளக்கேத்த வந்தவளை
கொட்டுகிறா கொட்டு, தேள்கூட கொட்டாது!
நாமா இருந்த மட்டும் நாலுழக்கு பாலூத்தி
தேனா கொடுத்திவளை திமிர் புடிக்க வச்சிருக்கோம்!
போனா போகட்டுமினு பொறுத்துக் கெடந்தாக்க
தானானா கொட்டுகிறா; தடம்புரண்டு ஆடுகிறா!
பாக்கத்தான் போறேண்டி; பாக்கத்தான் போறேன் நான்!
கேக்கத்தான் போறேண்டி; கேக்கத்தான் போறேன் நான்!
ஒருத்தருக்கு எம்மனசை ஒழுங்கா நான் தந்திருந்தா
இருக்கிற தெய்வமெல்லாம் எனக்காகக் கேக்கோணும்!

எல்லா பெண்களும் சிரித்தபடி கைதட்டினர். ஏதோ தங்களுக்கே நடந்து விட்ட அநியாயத்திற்கு நீதி கிடைத்து விட்டது போல மகிழ்ந்தனர்.

கவர்னசத்தையின் முகம் சுருங்கி விட்டது.

‘கேலிப் பாட்டு என்று உங்களுக்கு தெரியாதா கவர்னசத்தை? தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம்’ என்று புன்சிரிப்புடன் கூறினாள் ஜமுனா.

மதுரை அத்தையின் முகத்தில் பெருமிதம் எழுந்தது.

ஜவுளி அக்காவும், காபி அக்காவும், ஜமுனாவை அணைத்து கொண்டனர். ‘நாங்கள் வரும்போதும் இப்படித்தான் பாடி கவர்னசத்தை அவமானப்படுத்தினார். எங்களுக்கு உன்னைப் போல எதிர்பாட்டு பாடத் தெரியாமல் போய்விட்டது’ என்று ஜமுனாவின் காதோடு மெல்லிய குரலில் கூறினார் காபி அண்ணி.

அதற்கு பின்பு கவர்னசத்தை அளவோடு பேச ஆரம்பித்துவிட்டார். ஜமுனாவை பார்க்க நேர்ந்தால் பதறிப் போய் தன்னறைக்குள் புகுந்து மறைந்து கொண்டார்.

‘புதுப்பெண் மீனாட்சியா, காளியா?’ என்று ஒரு பெண் கேட்க அனைவரும் சிரித்தனர்.

‘இனி ஜமுனா வைத்ததுதான் சட்டம். புது வெள்ளம் வந்தால் பழைய நீர் வடிய வேண்டியதுதான்’ என்றார் மற்றொரு பெண்.

அண்ணிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மலர்ந்திருந்த அவர்களது பால்முகங்கள் ஒரு கணம் சுருங்கி, திரிந்து மீண்டன.

அனைவரும் உள்ளே நுழைந்தோம். ஆண்கள் கூடத்தில் உட்கார்ந்து கொள்ள பெண்கள் உள்ளறைக்குச் சென்று அமர்ந்து கொண்டனர்.

சம்பிரதாயமான பேச்சும், சம்பந்தமற்ற பேச்சுமாக இரண்டு மணி நேரம் கழிந்தது.

மாலை நான்கு மணிக்கு மதுரை மாமா புறப்பட்டார். ‘இனி ஜமுனா உங்கள் வீட்டுப் பெண். நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் இன்றிரவு ஊருக்குக் கிளம்புகிறோம்’ என்றார்.

எல்லோரும் அதிர்ச்சி அடைந்தோம். ‘அதற்குள்ளாகவா?’ என்று காபி அண்ணி கேட்டார்.

‘இன்னும் பல சடங்குகள் செய்ய வேண்டுமே. என்ன அவசரம்?’ என்றார் ஜவுளி அண்ணி.

‘நாளை போகலாம் என்றால் இன்றே போகலாம் என்று பிடிவாதம் பிடிக்கிறார்’ என்றார் மதுரை அத்தை.

‘கவர்னசத்தை பாடிய பாட்டுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்’ என்று இரண்டு அண்ணிகளும் கூறினர்.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை. வேடிக்கை பாட்டுதானே!’ என்றார் மதுரை மாமா.

‘இன்னும் மூன்று நாட்கள் இருப்பீர்கள் என்று நினைத்தோம்! அப்படி என்ன அவசரம்?’ என்றார் காபி அண்ணி.

‘எங்களுக்கும் இருக்க ஆசைதான். போக வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிவிட்டது’ என்றார் மதுரை மாமா.

‘நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று அண்ணிகள் கூறினர்.

மாமா அண்ணார்களிடம் தனிமையில் சற்று நேரம் பேசி விட்டு விடைபெற்றார்.

‘காரில் கொண்டு போய் விடுதியில் விட்டு வா’ என்று புருஷண்ணார் கூறினார். மாமா குடும்பத்தினரை நானும் ஜமுனாவும் காரில் அழைத்துச் சென்று விட்டோம். பழைய பயணச் சீட்டுகளை ரத்து செய்துவிட்டு, புது சீட்டுகள் எடுத்து மதுரைக்கு ரயிலேறும் வரை கூடவே இருந்தோம்.

13. புறப்பாடு

வீடு திரும்பும் போது லேசாக இருட்டத் தொடங்கிவிட்டிருந்தது.

‘பயமாக இருக்கிறதா?’ என்று ஜமுனாவிடம் கேட்டேன்.

சிரித்தவள் ‘உங்கள் முகத்தைப் பார்த்தால்தான் பயந்து போனவர் போலிருக்கிறீர்கள்’ என்றாள்.

நாங்கள் வீட்டிற்குள் நுழைந்த போது வாசல் கதவு சாத்தப்பட்டிருந்தது.

வாசலில் நானும் ஜமுனாவும் நின்று கொண்டு அழைப்பு மணியை சில முறை அழுத்தினோம். எவரும் கதவைத் திறக்கவில்லை.

‘எல்லோரும் ஏ.சி. அறைகளில் இருப்பார்கள். அதனால் சத்தம் கேட்டிருக்காது. பல சமயங்களில் எனக்கு இப்படி நிகழ்ந்திருக்கிறது’ என்றேன்.

ஜமுனா புன்னகைத்தாள்.

நான் என்னிடமிருந்த சாவியைக் கொண்டு கதவைத் திறந்தேன். அவளது கையைப் பற்றி உள்ளே அழைத்துச் சென்று கூடத்தில் உட்கார வைத்துவிட்டு மின்விசிறியைப் போட்டு விட்டேன். அது ஓடவில்லை. ‘மின்சாரம் இல்லை. அதனால்தான் அழைப்பு மணி சத்தம் கேட்கவில்லை. இல்லையென்றால் எல்லோரும் வாசலுக்கு வந்திருப்பார்கள். மாடி அறைகளில்தான் அண்ணிகள் இருப்பார்கள். போய்ப் பார்க்கலாம் வா’ என்று ஜமுனாவை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றேன்.

மாடிப்படி ஏறுமிடத்திலிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் கூந்தலை திருத்திக் கொண்டு, ஒப்பனையை லேசாக சரி செய்து கொண்டாள் ஜமுனா. படிகளுக்கு வலிக்காமல் ஏறி வந்தாள். மாடி அறைக்குள் நுழைய யத்தனித்த போது உள்ளே அண்ணார்களும், அண்ணிகளும் பேசுவது தெளிவாகக் கேட்டது.

கவர்னசத்தை ‘இனி இந்த வீட்டில் இருக்க மாட்டேன்’ என்று கோபத்தோடு சொல்லிவிட்டு போய்விட்டாரே! எங்கே போயிருப்பார்?’ என்றார் ஜவுளி அண்ணி.

‘இரண்டு நாள் அங்கே, இங்கே என்று அலைந்து விட்டு திரும்ப வந்துவிடுவார். யாரும் இடமோ, வேலையோ கொடுக்கமாட்டார்களே. ஒரு ஆள்தான் என்றாலும் செலவு செலவுதானே? ஜமுனா பாடியது போல நாமா இருந்த மட்டும் நாலுழக்கு பாலூத்தி தேனா கொடுத்திவளை திமிர் புடிக்க வச்சிருக்கோம்’ என்று கூறி வாய்விட்டு சிரித்தார் காபி அண்ணி.

‘பரமன் தனியாளாக இருந்த வரை வீட்டுச் செலவிற்கு நாம் அவனிடம் எதுவுமே கேட்டதில்லை. இனி செலவில் மூன்றில் ஒரு பங்கு அவன் தந்தால்தான் அவனுக்கு கௌரவமாக இருக்கும்’ என்றார் மதுவண்ணார்.

‘அவனால் அவ்வளவு தர முடியாது என்று நினைக்கிறேன். இப்போதுதானே சொந்தமாக சாப்ட்வேர் எழுதி ஏதோ சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறான்’ என்றார் ஜவுளி அண்ணி.

‘இருந்தாலும் நியாயம் என்று ஒன்று இருக்கிறதே! அவன் குடும்பத்து செலவை அவன்தானே பார்த்துக் கொள்ள வேண்டும்? என் குடும்பத்திற்காகவா கேட்கிறேன்’ என்றார் மதுவண்ணார்.

அண்ணார் குடும்பம் வேறு, என் குடும்பம் வேறா? அண்ணாரின் சொற்கள் எனக்கு வருத்தத்தைத் தந்தன. நான் இதுவரை அப்படி நினைத்ததே இல்லையே.

‘அவனால் தர முடிகிற வரை, அவன் பங்கை நானே கொடுத்து விடுகிறேன்’ என்றார் ஜவுளி அண்ணி.

பரமனும், ஜமுனாவும் நம் குடும்பம்தான் என்று அண்ணி ஏன் சொல்லவில்லை?

நான் உள்ளே நுழைவதா, வேண்டாமா என்று தயங்கி வாசலில் நின்றேன்.

‘நம் குழந்தைகளும் வளர்ந்து வருகிறார்கள். தனித்தனி அறை தேவைப்படும். பரமன் வேறு வீடு பார்த்துக் கொண்டால்தான் பரமனுக்கும், ஜமுனாவிற்கும் சந்தோஷமாக இருக்கும். புதிதாக கல்யாணம் ஆனவர்கள் இல்லையா?’ என்றார் மதுவண்ணார்.

‘இது நியாயமான பேச்சு. பரமனுக்கு மாதம் எவ்வளவு வரும்?’ என்றார் புருஷண்ணார்.

‘ஏதாவது வருகிறதா என்ன! தனியாக இருந்து குடும்பம் நடத்தினால்தான் நாம் எத்தனை சிரமப்படுகிறோம் என்பது அவனுக்குத் தெரியும்’ என்றார் மதுவண்ணார்.

‘ஒரு மணி நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்த்தால் ஒன்பது மணி நேரம் கதை படிக்கிறான். அப்படியே நம் மாமனார் மாதிரி இருக்கிறான்’ என்றாள் காபி அண்ணி.

‘அப்படியானால் ஜமுனா அதிர்ஷ்டக்காரிதான்’ என்றாள் ஜவுளி அண்ணி.

அண்ணிகள் சிரித்தனர்.

‘மாமியார் கிருஷ்ண பக்தை. மருமகள் யாருடைய பக்தையோ?’ என்று காபி அண்ணி சொன்னவுடன் மீண்டும் அனைவரும் சிரித்தனர்.

‘வயதானதால் நம் தாத்தாவிற்கு பழைய புத்தி கூர்மை மழுங்கிவிட்டது. ஜமுனா வீட்டு மனிதர்கள் ஒன்றுமில்லாதவர்கள். இருபது பவுன் கூட தேறாது. அதுவும் பழைய நகைகள். பரமன் நிலை பரிதாபம்தான்’ என்றார் மதுவண்ணார்.

ஜமுனாவின் மனநிலையை நினைத்து எனக்குக் கவலையாக இருந்தது. என் கண்கள் கசிவது போலிருந்தது. ஜமுனாவைப் பார்த்தேன். அவளோ என் கையைப் பற்றிக் கொண்டு புன்னகைத்தாள். பின் கீழே இறங்கத் திரும்பினாள். நான் அவள் கையை சிறிது அழுத்தி நிறுத்தினேன்.

‘மது சொல்வது சரிதான். பரமன் தனிக் குடித்தனம் போனால்தான் பொறுப்பு வரும். சம்பாதிக்கும் ஆர்வம் வரும்’ என்றார் புருஷண்ணார்.

‘சுந்தரம் இப்போதுதான் படிப்பை முடிக்கப் போகிறானாம். வேலை தேடி நேராக சென்னைக்குத்தான் வருவான். அப்புறம் நம் வீடு இலவச சத்திரமாகி விடும்’ என்றார் மதுவண்ணார்.

‘தனிவீடு பார்த்துப் போனால் பரமனுக்குக் கஷ்டமாக இருக்குமே’ என்றார் ஜவுளி அண்ணி.

‘தேவைப்பட்டால் கொஞ்ச காலத்திற்கு நம்மால் முடிந்ததை மாதாமாதம் கொடுத்து விட வேண்டும். மளிகை சாமான் கூட மாதாமாதம் வாங்கித் தந்துவிடலாம். ஆனால் இங்கே இருக்க வேண்டாம். சின்னச் சின்ன பிரச்சனைகள் வந்து பெரிதாகி விடும். வெளியே போனால் நான் வைர நெக்லஸ் போடுவேன். ஜமுனாவிற்கு மனக் கஷ்டம் வரும். பாவம், இல்லாத சின்னப் பெண். நம் வீட்டுப் பெண் மனம் புண்பட நாமே காரணமாகக் கூடாது’ என்றார் காபி அண்ணி.

அவர்கள் பேச்சு எனக்குக் குழப்பத்தை தந்தது. எனக்கு ஆதரவாகப் பேசுகிறார்களா, எதிர்ப்பாகப் பேசுகிறார்களா என்று புரியவில்லை.

என் கைகளை விட்டுவிட்டு பல படிகள் இறங்கிய ஜமுனா, தன் கொலுசு சத்தம் மற்றவர்களுக்கு நன்றாக கேட்கும்படி தரை அதிரப் படியேறினாள்.

அறையில் சட்டென மௌனம் பரவியது. நான் அறைக் கதவை மெல்லத் தட்டினேன்.

‘திறந்துதான் இருக்கிறது’ என்று புருஷண்ணார் குரல் கேட்டதும் கதவைத் தள்ளித் திறந்தேன். உள்ளே சென்றோம்.

எல்லோரும் எங்களை விரியும் புன்னகையோடு வரவேற்றனர்.

அண்ணிகள் ஜமுனாவைச் சிறிது நேரம் உற்றுப் பார்த்தனர்.

ஜவுளி அண்ணி ‘என்ன அழகு! சிலை போல இருக்கிறாயடி’ என்று கூறி அவளை தன்னருகே இழுத்து அணைத்து வலது கன்னத்தில் முத்தமிட்டார்.

காபி அண்ணி ‘அக்கா, உங்கள் கண்ணே பட்டுவிடும்’ என்று கூறிவிட்டு தன் கண்ணிலிருந்து சிறிது மையெடுத்து ஜமுனாவின் முகத்தில் வைத்து விட்டு ‘அக்கா சொன்னது சத்தியம்’ என்று கூறி ஜமுனாவின் இடது கன்னத்தில் முத்தமிட்டார்.

ஜமுனாவின் கண்களில் நீர் துளிர்த்தது. இருவரையும் அணைத்துக் கொண்டாள்.

மின்சாரம் வந்து ஏ.சி. ஓட ஆரம்பித்தது. வசதியாக உட்கார்ந்து கொண்டு காலையில் நடந்த திருமணத்தைப் பற்றிச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

ஜமுனா அதிகம் பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பின் ஜவுளி அண்ணியிடம் ‘அக்கா, இவர் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். நீங்கள் தவறாக நினைக்கக் கூடாது’ என்று ஆரம்பித்தாள்.

அனைவரின் முகத்திலும் புன்னகை மறைந்து தீவிரம் எழுந்தது.

‘சொல்லுப்பா’ என்றார் ஜவுளி அண்ணி.

நான் விழித்தேன்.

‘இவர் நினைப்பு என்ன தெரியுமா? ‘உங்களைப் போல எனக்கும் பொறுப்பு வர வேண்டுமானால் நான் தனியாக குடும்பம் நடத்திப் பார்க்க வேண்டுமாம். கொஞ்ச நாள் இங்கே இருந்தாலும் நீங்கள் என்னை ராணி போல நடத்துவதில் எனக்கு சொகுசு பழகிவிடுமாம். உடனே வேறு வீடு போக வேண்டும்’ என்று நினைக்கிறார். உங்களிடம் சொல்லத் தயங்குகிறார்’ என்றாள் ஜமுனா.

திகைத்தேன். மற்றவர்களும் திகைத்தனர்.

‘அக்கா, நம்மைப் பற்றி பரமன் எவ்வளவு உயர்வாக பேசியிருக்கிறான்!’ என்று மகிழ்ந்தார் காபி அண்ணி.

‘இப்போது அதுவாடி முக்கியம்?’ என்று காபி அண்ணியைக் கடிந்த ஜவுளி அண்ணி என்னிடம் ‘உன்னைக் கிறுக்குப் பிள்ளை என்று விளையாட்டாக சில சமயம் கேலி செய்வேன். அதை உண்மையாக்கி விடுவாய் போலிருக்கிறதே’ என்றார் ஜவுளி அண்ணி.

‘என்னடா பரமா? நீ அவ்வளவு பெரிய ஆளாகி விட்டாயா? ஜமுனா சின்னப் பெண்’ என்றார் புருஷண்ணார்.

‘உடனே எங்கேடா போவாய்? வீடு பார்க்க வேண்டாமா? பணம் வேண்டாமா?’ என்றார் மதுவண்ணார்.

‘எல்லாமே யோசித்து வைத்து விட்டார். சூளைமேட்டில் தாத்தா வீடு இருக்கிறதாமே. அங்கே போகலாம் என்று நினைக்கிறார்’ என்றாள் ஜமுனா.

‘அது ஓடு வேய்ந்த பழைய காலத்து வீடு. உனக்குப் பிடிக்குமோ என்னவோ?’ என்றார் புருஷண்ணார்.

‘மதுரையில் என் அப்பா வீடும் அப்படிப்பட்ட வீடுதான். ஓடாக இருந்தாலும், கூரையாக இருந்தாலும் நம் வீடு’ என்றாள் ஜமுனா.

‘இது நல்ல யோசனையாகத்தான் இருக்கிறது. வாடகை இல்லை. குடும்பம் நடத்த ஓரளவிற்கு சாமான்கள் இருக்கின்றன. பெரிய செலவு எதுவுமில்லை’ என்றார் மதுவண்ணார்.

‘இன்றே கிளம்புகிறோம்’ என்றாள் ஜமுனா.

‘இது என்ன! உன் அப்பாவும் திடீரென்று இன்றே கிளம்பிப் போனார். நீயும் அப்படியே பேசுகிறாய். பேசி வைத்துக் கொண்டு இப்படிச் செய்கிறீர்களா? இன்றே போக நீ சொல்லும் காரணங்கள் எதுவும் நம்பும்படியாக இல்லை’ என்ற ஜவுளி அண்ணி ‘என்ன நடந்தது? இவர்கள் மனம் நோகும்படி ஏதாவது பேசி விட்டீர்களா? உள்ளதை சொல்லுங்கள்’ என்று அண்ணார்களைப் பார்த்துக் கேட்டார்.

‘இது பரமனின் வீடும்கூட. நாங்கள் யார் அவனைப் போகச் சொல்ல?’ என்றார் புருஷண்ணார்.

‘அப்படிப் பேச நாங்கள் என்ன அற்பர்களா?’ என்றார் மதுவண்ணார்.

‘பின்னே எதற்கு இவள் சூடான காபி காலில் கொட்டியது போல துடிக்கிறாள்?’ என்றார் காபி அண்ணி.

எப்போதும் மலர்ந்திருக்கும் ஜவுளி அண்ணியின் முகம் வாடி விட்டிருந்தது. ‘இருப்பதும், போவதும் உங்கள் விருப்பம். சில நாட்கள் இங்கே இருந்து விட்டுப் போகலாமே’ என்றார்.

‘தாத்தா வாங்கிய முதல் வீட்டில்தான் வாழ்க்கையை ஆரம்பிக்க இவர் நினைக்கிறார்’ என்றாள் ஜமுனா.

‘அப்படியானால் சரி. வேறெங்கும் போகவில்லையே.

அதுவும் நம் வீடுதான். சாப்பிட்ட பின் காரில் கொண்டு விடுகிறேன்’ என்றார் மதுவண்ணார்.

‘இல்லை சின்னத்தான். வெளியே கடைக்குப் போக நினைத்தோம். அப்படியே சாப்பிட்டுவிட்டுப் போகிறோம்’ என்றாள் ஜமுனா.

‘புது ஜோடி வெளியே தனியே சாப்பிடப் போக நினைக்கிறார்கள்’ என்றார் மதுவண்ணார்.

‘சரி பரமன் விருப்பம். நாமென்ன செய்ய முடியும்? கல்யாணமானதும் மனைவி மூலம் தன் யோசனைகளைச் சொல்கிறான். பெரிய மனிதனாகிவிட்டான்’ என்றார் புருஷண்ணார்.

‘அண்ணி, இரண்டு மூன்று மாற்று உடைகளை மட்டும் இன்று எடுத்துப் போகிறோம். நாளை வந்து மீதியை எடுத்துக் கொள்கிறோம்’ என்றேன்.

எழுந்து வந்து என்னருகே அமர்ந்த ஜவுளி அண்ணி திடீரென அழ ஆரம்பித்தார். ‘அம்மா போல உன்னை வளர்த்தேன். பட்டு போல பார்த்துக் கொண்டேன். நீயோ என்னை விட்டுப் போக நினைக்கிறாய். அழுகைதான் வருகிறது’ என்றார்.

காபி அண்ணியின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

‘நல்ல நாளில் இதென்ன அழுகை? பார்த்துக் கொண்டேயிரு, எல்லாம் நல்லபடியாகத்தான் நடக்கும்’ என்றார் புருஷண்ணார்.

ஜவுளி அண்ணி சிறிது சமாதானமானார்.

‘நீயும் ஜவுளி அண்ணியோடு சேர்ந்து எதற்கெடுத்தாலும் அழ ஆரம்பித்து விட்டாய்’ என்று காபி அண்ணியிடம் மதுவண்ணார் சொன்னார்.

‘நான் ஜமுனாவிடம் இப்படியெல்லாம் சொல்லவே இல்லை’ என்று எல்லோரிடமும் கூற நினைத்தேன்.

ஆனால் ஜமுனாவின் ஏற்பாடு எனக்கு உள்ளூர பிடித்திருந்தது. மேலும் சற்று நேரம் கழித்து நான் விரும்பியபோதும், என்னால் செய்திருக்க முடியாத ஏற்பாடு இதுவே என்றும் தோன்றியது.

(தொடரும்)

*******

ஜீவிய மணி

முழுப்பட்டினியில் செய்யும் கடும் வேலை உடலைவிட்டுப் பிரியும் தருவாயிலிலுள்ள உயிரை மீட்கும். அருளை அந்த ரூபத்தில் பிறர்க்குத் தருவது கொடுமை. பட்டினியால் உடல் பருப்பது Oஞீஞுட்ச். பட்டினியால் உடல் மெலிவது famished exhaustion. பருத்த உடல் பட்டினியில் செய்யும் வேலையால் பிழைக்கும். மெலிந்த உடல் ஆசை பூர்த்தியாகும் ஆர்வத்தால் பிழைக்கும். அருள் அவ்வார்வமாக வருவது நல்லெண்ணம். கொடுப்பவர் கொடுக்க கொடுத்து வைத்தவராக இருக்க வேண்டும்.

கொடுமையும் அருளாகும். நல்லெண்ணமும் அருளாகும்

**********



book | by Dr. Radut