Skip to Content

11. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

15. அசுர சூறாவளி (Tornado)

இந்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவருக்கு அமெரிக்காவில் ஒரு மாதம் (visiting professor) சில பல்கலைக்- கழகங்களில் சொற்பொழிவு ஆற்றும் பணி ஏற்பட்டது. இவர் அமெரிக்காவில் தங்கி ஏற்கனவே 5 ஆண்டுகள் படித்துப் பட்டம் பெற்றவர். அடிக்கடி அமெரிக்கா, கானடா போன்ற இடங்களுக்கு இதுபோன்று பணியாற்றச் சந்தர்ப்பம் கிடைத்துப் போகும்பொழுது தம்முடைய பழைய நண்பர்களைச் சந்திப்பது வழக்கம்.

இம்முறை பேராசிரியர், கம்ப்யூட்டர் விஞ்ஞானி ஒருவரைச் சந்திக்க அவரிருந்த ஊருக்குப் போனார். அவருடன் இரு நாட்கள் தங்கினார். மறுநாள் திங்கள் கிழமை காலை 11 மணிக்கு 100 மைலுக்கு அப்பாலுள்ள கல்லூரியில் சொற்பொழிவு. ஞாயிறு மாலை புறப்பட்ட அவரை நண்பர் மறுநாள் காலையில் போகலாம் எனக் கேட்டுக்கொண்டதை மறுத்து, பேராசிரியர் புறப்பட்டுப் போய்விட்டார். திங்கள் காலை 8 மணிச் செய்தியில் முதல் நாள் அவர் தங்கியிருந்த பகுதியில் (Tornado) சூறாவளியால் சேதம் என்று அறிவித்தார்கள். பேராசிரியர் நண்பரைப் போனில் கூப்பிட்டு விசாரிக்க நினைத்த அதே நேரத்தில் நண்பரிடமிருந்து போன் வந்தது.

தென்னிந்தியாவில் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் அடிக்கும் காற்றை நாம் புயல் என்றும், சுழற்காற்றென்றும் அறிவோம். சுமார் 50 மைல் முதல் 70, 80 மைல் வேகத்தையும் எட்டிவிடும். அளவுகடந்த சேதம் ஏற்படுவது அப்பொழுதுதான். பூமத்திய ரேகை நாடுகளான ஜாவா, சுமத்திரா, பிலிப்பைன்ஸ் ஆகிய இடங்களில் டைபூன் (typhoon) என்று வர்ணிக்கப்படும் காற்று அதிகச் சேதம் விளைவிக்கக்கூடியது. தீவுகளில் வீசும் புயலுக்கு ஹரிகேன் (huricane) என்று பெயர். சேதம் விளைவிப்பதில் தலைமையானது இது. அமெரிக்காவில் டார்னடோ (Tornado) என்று கூறப்படும் காற்று 300 மைல் வேகத்தில் வீசும். ஏதோ ஒரு சமயம் இதன் வேகம் 500 மைலைத் தொடக்கூடும். புயல் இரவெல்லாம் அடிப்பது உண்டு. டார்னடோ சில நிமிஷங்கள் வீசி அடங்கிவிடும். 1964-இல் அதுபோன்ற சேதம் அமெரிக்காவில் ஏற்பட்டபொழுது 70 டன் எடை உள்ள ரயில்வே கோச்சுகள் 100 அடி தூரத்திற்குத் தூக்கி எறியப்பட்டன, கார்கள் காற்றில் பறந்தன, 50 குழந்தைகளைக் காற்றில் உயரே தூக்கிப் பலூன் போல வெகுதூரத்தில் போட்டுவிட்டது. அதுபோன்ற ஒரு விபத்து நேர்ந்துள்ளது என்பது பேராசிரியருக்குக் கவலையளித்தது.

நண்பர் போனில் பேசினார். தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் ஆபத்தில்லை என்றார். தன்னைச் சுற்றிப் பெரிய சேதம் என்றார். பேராசிரியருக்கு நிம்மதி ஏற்பட்டது. தான் முன் இரு தினங்களும் நண்பர் வீட்டில் தங்கியிருந்தபொழுது அன்னை படத்தின்முன் அமர்ந்து தியானம் செய்தது நினைவுக்கு வந்தது. அன்னைக்கு நன்றி தெரிவித்துவிட்டுச் சொற்பொழிவாற்றப் போனார். அது முடிந்தவுடன் நேரே நண்பர் தங்கிய இடத்திற்குச் சென்றார். அது ஒரு செல்வர்கள் உள்ள காலனி. 90 வீடுகள் மட்டுமேயுள்ள இடம். வீடுகள் தரை மட்டமாக இருந்தன; வீடுகள் இருந்த இடத்தில் இடிந்த குவியல்களே (debris) காணப்பட்டன; மரங்களைக் காணோம்; வேஷ்டியைத் துவைத்துப் பிழிவதைப் போல் எலக்ட்ரிக் கம்பங்கள் சுருட்டி வளைத்துக் கொண்டிருந்தன; எங்குப் பார்த்தாலும் காற்றின் அமர்க்களம்; உயிர்ச் சேதம் அதிகம்; அடிபடாதவர்களேயில்லை. நண்பருடைய மாடி வீடு மட்டும் நிலைகுலையாமல், ஆடாமல், அசையாமல் இருப்பதைக் கண்ட பேராசிரியர் ஸ்தம்பித்துப் போனார். நண்பரும், அவர் குடும்பத்தினரும் உயிர் தப்பியது ஆச்சரியம். அவர்கள் வீடு சேதமடையாததை அங்கு நின்றுகொண்டு இருக்கும்பொழுது அவரால் நம்ப முடியவில்லை. (நண்பர், தாம் எப்படிக் காப்பாற்றப்பட்டோம் என்று தெரியாமல் திகைப்பதாகச் சொன்னார்). நண்பர் வீட்டில் நின்ற 150 அடி உயர மரம்கூட சேதப்படவில்லை, அவர்களுடைய இரண்டு கார்களும் சேதப்படவில்லை. மரத்தின் கிளை ஒன்று ஒடிந்து கார் மீது விழுந்து, கண்ணாடி மட்டும் சேதப்பட்டுள்ளது. வீட்டு மாடியில் கொரனாஸ் சிறிதளவு சேதப்பட்டது. பேராசிரியரை நண்பர் மீண்டும் மீண்டும் கேட்டார், “எப்படி நான் காப்பாற்றப்பட்டேன்?’’ என்று.

பேராசிரியருக்கு எதுவும் சொல்ல முடியவில்லை. ‘அன்னையின் அற்புதங்களை நான் 20 ஆண்டுகளாகப் பல வகைகளில் பார்த்திருக்கிறேன், இது என்னால் நம்ப முடியாத ஒன்று. இரண்டு நாட்களுக்குமுன் நான் பார்த்த இந்த இடம் எங்கே? என்னைச் சுற்றியுள்ள பாழடைந்த வீடுகள் எங்கே? இதன் நடுவில் ஒரு வீடும், அதன் உறுப்பினர்களும் முழுமையாகக் காப்பாற்றப்பட்டார்கள் எனில் அன்னையின் அருள் அவர்களுடைய வீட்டை இரும்புக் கவசமாகச் சூழ்ந்திருக்க வேண்டும்’ என்றெல்லாம் நினைத்த அவர், “அன்னையின் படம் இரண்டு நாட்கள் உங்கள் வீட்டில் இருந்தது. அதனுடைய பலனே இது” என்று சொல்லி முடித்தார்.

16. பரம்பரை வழி வந்த நோய்

ஒரு குடும்பத்தில் பலருக்கு ஒரு தலைமுறையில் ஆஸ்த்மா இருக்கிறது. அடுத்த தலைமுறையிலும் அது குழந்தைகளுக்கு வருகிறது. அன்னையிடம் அவர்களுள் ஒருவர் வந்தபின் 90% வியாதி குறைகிறது. மிச்சம் அப்படியேயிருக்கிறதென்றால், மிச்சமான அந்த 10% வியாதியை அருள் எப்படிக் குணப்படுத்தும்?

வியாதி என்பது உடலைப் பற்றியதானாலும், உணர்வுக்கும், அறிவுக்கும் வியாதியுடன் தொடர்புண்டு. போன தலைமுறை-யி லிருந்து தொடர்பு வந்து, அடுத்த தலைமுறைக்குப் போகிறதென்றால், அது உடலைப் பொறுத்தது. உடற்கூறு அப்படி (constitutional defect) இருக்கிறது என்றுதான் பொருள். மேலும் உடலிலுள்ள வியாதிக்கு வேர் சூட்சும உடலிலிருக்கும். சூட்சும உடலில் வியாதியின் வேர் அழிந்தால்தான் உடலிலிருந்து நோய் அறவே விலகும். சூட்சும உடலில் பல பகுதிகள் உள. மனதிற்கும், உணர்வுக்கும் சூட்சுமம் உண்டு. அதுபோல் உடலில் (physical body) சூட்சுமம் மூலாதாரத்தில் இருக்கிறது. அந்தச் சக்கரத்தில் வியாதி அழிந்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வியாதியிலிருந்து விடுதலை கிடைக்கும்.

அருள் 90% வியாதியைத் தானே குணப்படுத்துவது பொதுவான வழக்கம். அதைத் தொடர்ந்து அன்பரின் முயற்சி அருளைப் பெற முயன்றால், மீதி 10% வியாதியும் ஒழியும். பொதுவாக 90% அழியத் தேவையான முயற்சி அடுத்த 10% அழியத் தேவை. அன்பர் இதில் வெற்றியடைய தாம் பல காரியங்கள் செய்யலாம்.

  1. இதுவரை குணமானது போதும் என்று மனம் முடிவு செய்தால், அந்த முடிவே பலிக்கும். மீதியும் போக வேண்டுமானால், அறிவு தன் முடிவை மாற்றி, மீதியும் அறவே போகவேண்டும்; அதை ஒழிக்க முடியும் என்று புது முடிவை எடுக்க வேண்டும். (Reinforce by hourly consecration*). * Hourly Consecration - மணிக்கொரு முறை சமர்ப்பணம்
  2. ஆஸ்த்மா மூச்சு சம்பந்தப்பட்டதானதால் தினமும் முடிந்த அளவு மூச்சு உள்ளே போகும்பொழுதும், வெளியே வரும்பொழுதும் ஒளியாக இருப்பதாக கற்பனை செய்தல் வேண்டும். Lungs முழுவதும் ஒளியால் நிரப்பப்பட்டதாக கற்பனை செய்தல் நலம். தினமும் பல முறையும் நினைக்கலாம்.
  3. மூச்சுக்குரிய சூட்சுமச் சக்கரம் நாபிக்குப் பின்னால் முதுகு எலும்பில் இருப்பதால், அந்தச் சக்கரத்தில் ஒளியைக் கற்பனை செய்ய வேண்டும். இது மூச்சைத் தூய்மைப்படுத்தும்.
  4. மூலாதாரம் ஒளியால் நிரம்புவதாகக் கற்பனை செய்தால் உடலின் சூட்சுமப் பாகங்கள் ஒளியால் நிரம்பி, வியாதியின் வேர் உடலின் சூட்சுமத்தில் அற்றுப்போகும். அதையே தீவிரமாகச் செய்தால், உடலை ஒளி ஊடுருவும்பொழுது, குடும்பத்திலுள்ள மற்றவர்கள் நோய் அழியும்; அடுத்த தலைமுறையில் உள்ளவர்கள் நோயும் அழியும்.
  5. ஹிருதயத்திற்குப்பின் உள்ள ஆன்மாவில் ஒளியை நிரப்பினால் ஆன்மிக ஒளி பெருகும்போது, அந்த வியாதி கர்மபலனால் ஏற்பட்டிருந்தால், கர்மத்தின் வேரை அழிக்கும்.
  6. இந்தப் பல்வேறு இடங்களில் ஒளியை நிரப்புவதற்குப் பதிலாக, அன்னையின் உருவத்தைக் கற்பனை செய்தால் அதிகப் பலன் உண்டு.

இது ஒரு முழு முயற்சி. பலித்தால் பூரண குணம் கிடைக்கும். சமர்ப்பணத்தை மேற்கொண்டு மணிக்கு ஒரு முறை வியாதியை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், பெரும்பலன் உண்டு.

அதற்குப் பதிலாக மணிக்கு ஒரு முறை என்பதை விட்டு, மணியடிக்கும்பொழுது அதாவது 10 மணி, 11 மணி, 12 மணிக்குச் சமர்ப்பணம் செய்ய மேற்கொண்டால் முழுப் பலனிருக்கும். 10 மணி என்றால், 9.59, அல்லது 10.1க்கு செய்வது 10 மணியாகாது. வினாடி முள் 59ஐத் தாண்டி 60ஐத் தொடும் க்ஷணம் செய்வதே முழுப் பலன் கொடுக்கும். ஒரு நாளில் நாம் விழித்திருக்கும் 15, 16 மணி நேரத்தில் இதுபோல் வினாடி தவறாமல் 5, 6 முறை சமர்ப்பணம் செய்ய ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக 15, 16 மணியும் தவறாமல் அதைச் செய்யும் நாளில் வியாதியின் சுவடுகூட இருக்காது. சமர்ப்பணம் என்பது ஒரு வினாடி (Mother) அன்னை என்று நினைப்பதுவே. அதுவே இந்த முறைக்குப் போதும்.

நாம் அன்னையை ஏற்றுக்கொண்டதால் வியாதியின் சம்பந்தப்பட்ட (here it is breath and the chakra behind the stomach) சக்கரத்தில் அன்னையை உருவகப்படுத்தி, மூலாதாரத்திலும் அதையே செய்து, மூச்சின் பாதையை ஒளியால் நிரப்பி, ஆன்மாவிலும் அன்னையைக் கண்டு, ஒவ்வொரு மணி அடிக்கும் வினாடியில், வினாடி தவறாமல் அன்னையை நினைவுகூர்ந்தால், மீதியுள்ள வியாதி தனக்குக் குணமாவதுடன், தன் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கும், அடுத்த தலைமுறை-யி ல் நோயுற்றவர்களுக்கும் குணம் ஏற்பட்டு, உடலின் சூட்சுமத்திலும், ஆன்மாவின் அஸ்திவாரத்திலும் வியாதி பரம்பரையையும், கர்மத்தின் ஆதியையும் இழக்கும்.

17. மனநிம்மதி

மனநிம்மதி என்பது கிடைக்க பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள். எது கிடைத்தாலும் கிடைக்கும், மனநிம்மதி கிடைப்பது அரிது என்பது நம்முடைய அனுபவம். பதவி உயர உயர நிம்மதி குறைவது இயல்பு. சொத்து, பதவி, அந்தஸ்தை எல்லோரும் விரும்புகிறார்கள். அத்துடன் இன்றுள்ள அமைதி அவை எல்லாம் கிடைத்தபின் இருக்குமா என்றால், இருப்பது கடினம் என்பதை எல்லோரும் அறிவார்கள்.

கடவுள் சிருஷ்டியை வர்ணிக்கும் செய்யுள் ஒன்று. கடவுள் மனிதனைச் சிருஷ்டிக்கின்றார். பின்னர் தன்னருகேயுள்ள பல பாத்திரங்களிலுள்ள செல்வங்களை அவன் மீது வர்ஷிக்கின்றார். முதலில் ‘ஆரோக்கியம்’ என்ற பாத்திரத்தை எடுத்து அவனுக்கு அபிஷேகமாகத் தலை மீது கொட்டினார். பின்னர் ‘கல்வி’, ‘தைரியம்’, ‘செல்வம்’, ‘சந்தோஷம்’ என அங்கிருந்த அத்தனைப் பாத்திரங்களிலும் உள்ளதை, ஒன்று போக, மீதியை அவனுக்குக் கொடுத்துவிட்டார். அருகே இருந்தவர், கடைசிப் பாத்திரத்தில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முற்பட்டு, அதிலுள்ளது ‘நிம்மதி’ என்று அறிகிறார். கடவுள் அதை அவனுக்குக் கொடுக்கப்போவதில்லை என அறிந்த அவர், “ஏன் அதைக் கொடுக்கவில்லை?’’ என்று கடவுளைக் கேட்டதாகச் செய்யுள் எழுதப்பட்டுள்ளது. “அதையும் கொடுத்து விட்டால் மனிதன் என்னை மறந்துவிடுவான்” என கடவுள் பதிலிறுத்ததாகச் செய்யுள் முடிகிறது. உலகத்தில் மனநிம்மதி பெறுவது அரிது என்ற கருத்தை ஆண்டவன் செயலாகவே வர்ணிக்கும் செய்யுள் அது. நம்மை ஆழ்ந்து நோக்கினால், நாம் வாழும் உலகத்தில் உள்ள அனைவரையும் பற்றி நினைத்துப்பார்த்தால் இந்த உண்மை விளங்கும். இது போன்ற பெரிய உண்மைகளை அன்னை எப்பொழுதும் ஏற்றுக்கொள்வார். ஆனால் அதையே முடிவானதாகக் கொள்ள மாட்டார். அன்னை இது சம்பந்தமாக நமக்கு அறிவுறுத்துவது வேறு. ஆரோக்கியம், சக்தி (energy), அறிவு, உணர்வு, உற்சாகம், சந்தோஷம் ஆகியவை நம் வாழ்வில் அளவிறந்து ஏற்பட்டுள்ளன. அதேபோல் மனநிம்மதியும் எல்லையற்ற அளவில் நம் வாழ்வில் இருக்கின்றது. நாம் வாழ்வை அமைத்துக்கொண்ட வகையால், இயற்கையையும், இறைவனையும் விட்டுக் கொஞ்சம் அகன்று வருவதால் ஆரோக்கியம், சந்தோஷம் ஆகியவை குன்றிவருகின்றன. அதேபோல் மனநிம்மதி குறைவதும் நாம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வகையால்தானே தவிர, நம் நிம்மதிக்குக் குறைவில்லை என்பது அன்னையின் கருத்து. தன்னிடம் வரும் அன்பர்களுக்கு இந்தக் கருத்தைச் செயலில் விளங்குவது போல் முதலிலேயே அன்பரின் மனத்தில் நிம்மதியை உற்பத்தி செய்து, ‘அன்னையைப் பற்றி நினைத்த மாத்திரம் மனம் நிம்மதியடைகிறது’ என்று சொல்லும் வகையில் மனத்தை மாற்றிவிடுகிறார். தாமிருக்கும் இடம் வந்தாலும், தம்மைப் பற்றிப் படிப்பவருக்கும், தன்னை மனதார நினைப்பவருக்கும் மனதில் உடனே நிம்மதியை உற்பத்தி செய்வது அன்னையின் இயல்பு.

சாதாரண மனிதன் எப்படி இந்த நிம்மதியைப் பூரணமாக, நிலையாகப் பெறலாம்? அவன் நிம்மதியிலிருந்து விலகுவது எதனால்? எப்படித் திரும்ப வரலாம்? அதை நிலைபெறச் செய்யலாம்? அறிவும், உணர்வும், செயலும், பிரார்த்தனையும், அன்னை நினைவும் அதற்கு எப்படி உதவி செய்யும் என்பதைப் பற்றியதே இக்கட்டுரை.

(தொடரும்)

************



book | by Dr. Radut