Skip to Content

09. The Life Divine – Outline

The Life Divine – Outline

தமிழ்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

அத்தியாயம் 11 - ஆனந்தம் - பிரச்சினை என்பது.

மனிதனுக்கு தர்மம், நியாயம், பாவம், புண்ணியமுண்டு, விலங்குக்கு அவையில்லை. தெய்வங்கட்கும் அவையில்லை. மனித தர்ம கண்ணோட்டத்தில் மூவுலகையும் புரிந்து கொண்டால் கொடுமை, கடுமை, இருள், தீமையைக் காண்கிறோம். இது நம் தவறு. உலகில் தீமையில்லை. சச்சிதானந்தம் தான் பெற்ற ஆனந்தத்தை உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளிலும் வெளிப்படுத்துகிறது. அதைக் காணும் மனிதன் சிருஷ்டியை அற்புதமாகக் காண்பான். மனிதனுக்கு ஆனந்தம் தெரிவதில்லை. ஜீவராசிகள் தெரிகின்றன. அவை வெளிப்படுத்தும் ஆனந்தத்தைப் பெற மனிதன் அப்பொருள்களை நாடுகிறான். ஆனந்தத்தை மறந்து விடுவதால், அவன் துன்பம் எய்துகிறான். B.A. படித்து பட்டம் பெற்றவன் பெயருக்குப் பின்னால் B.A. என்று போடுவதைக் கண்ட பாமரன் தன் பெயருக்குப் பின்னால் B.A. போட்டால் கேலிக்குரியவனாவான். அதையே வலியுறுத்தினால் ஜெயிலுக்குப் போவான். மனிதன் படும் துன்பம் இதுபோன்றது.

அத்தியாயம் 12 - ஆனந்தம் - தீர்வு

இந்த 11, 12 அத்தியாயங்கள் இதுவரை உலகில் எழாத தத்துவங்கள். வேதம், உபநிஷதம், பௌத்தம், கிருஸ்த்துவம், இஸ்லாம், கீதை, சங்கரர் அத்வைதம் கூறாதது அது. உலகில் இருள், கொடுமை, தீமை, கடுமையுள்ளன. இவற்றைப்பற்றி எவரும் கூறாதது ஸ்ரீ அரவிந்தம் சொல்வது. அனைவரும் எப்படித் தீமையிலிருந்து தப்பலாம் எனக் கூறினர்.

ஸ்ரீ அரவிந்தர் -

  • எப்படி தீமையை நன்மையாகத் திருவுருமாற்றலாம்.
  • ஏன் அது தீமையல்ல, நன்மையைவிடப் பெரிய நன்மை என்கிறார். 

வேதம் சரணாகதியால் தீமையிலிருந்து விலகி தப்பிக்கிறது. உபநிஷதம் வலியும், இன்ப துன்பங்களும் இணைந்தவை. இன்பத்தை நாடினால் தவறாது துன்பம் உடன் வரும். அதனால் துன்பத்தைத் தவிர்க்கும் வழி இன்பத்தை விலக்குவது என்றது. இது விரதம்.

பகவான் வலி, வலியில்லை. பார்வைக்கு வலி, அடிப்படையில், உண்மையில் வலி என்பது பேரின்பம். நாம் வலியை வலியாக ஏற்காமல் உணர்ச்சியாக ஏற்று இன்பமாகத் திருவுருமாற்ற முடியும் என்கிறார்.

அத்தியாயம் 13 - தெய்வீக மாயை

பரம்பரையாக இல்லாததை மாயம் என்றனர். மாயை எனில் இல்லாதது. உலகம் மாயை எனவும் கூறினர். பகவான் மாயையை, தெய்வீக மாயை எனக் குறிப்பிடுகிறார். இதுவே பிரம்மத்தை சிருஷ்டியாக மாற்ற உதவியது எனவும் கூறுகிறார். பிரம்மத்துள் அனைத்தும் உள. அனைத்தும் அனைத்துமாகும். மாயை இந்நிலையை சிருஷ்டியில் அனைத்தும் ஒன்றிலும், ஒன்று அனைத்திலுமாக மாற்றுகிறது என விளக்கம் தருகிறார்.

பரம்பரை சத்திய ஜீவியத்தை அறியும். ஆனால் அதை முக்கியமாகக் கருதவில்லை. மனத்தை முக்கியமாகக் கருதியது. பிரம்மா உலகை சிருஷ்டித்தார் என்றது. பிரம்மா மனம் என்ற லோகத்திற்குரிய கடவுள். விஷ்ணு, சிவன், இந்திரன், காளி, லட்சுமி, சரஸ்வதி அந்த லோகத்திற்குரிய இதர கடவுள்கள். இவர்கள் அனைவரும், பிரம்மா உள்பட, பிறந்த இடம் சத்திய ஜீவியம். பகவான் உலகை பிரம்மா சிருஷ்டித்தார் என்பதை ஏற்கவில்லை. சத்திய ஜீவியம் சிருஷ்டித்தது என்கிறார்.

சத்திய ஜீவியம் சச்சிதானந்தத்திற்கும், மனத்திற்கும் இடையேயுள்ளது. சச்சிதானந்தம் அகமும் புறமுமாக மாறிய பொழுது புறமாக ஏற்பட்டது சத்திய ஜீவியம்.

மனம் காலத்தில் செயல்படும். ஆத்மா காலத்தைக் கடந்தது. காலமும், காலத்தைக் கடந்ததும் இணையும் லோகம் சத்திய ஜீவியம். இக்காலத்தை முன்னோர்கள் கூறவில்லை. பகவானே முதலில் இக்காலத்தைக் குறிப்பிடுகிறார். இது காலமும், கடந்ததும் இணைந்து ஒன்றிய காலம் எனக் குறிப்பிடுகிறார். இக்காலம் செயல்படும்பொழுது நிகழ்ச்சிகள் க்ஷணத்தில் நிகழும். இந்த லோகத்தில் தீமையில்லை. இது பூலோக சுவர்க்கம். இதை ஒரு சிலர் அகத்தில் பெற்றனர். இராமலிங்க சுவாமியும் பெற்றார். புறத்தில் எவரும் பெறவில்லை.

அத்தியாயம் 15 - சத்திய ஜீவிய ஜீவியம்

மரபு புருஷனை முடிவாகக் கருதியது. அவன் உயர்ந்த நிலையை புருஷோத்தமன் என கீதை கூறியது. ஆத்ம, புருஷ, ஈஸ்வர நிலைகள் மூன்று. மரபு ஈஸ்வரன் பிரளயத்தில் அழிகிறது எனக் கண்டதால், புருஷனை (அக்ஷர புருஷனை) மூலமாகவும், முடிவாகவும் கொண்டனர். பகவானுடைய சிருஷ்டியில் பிரளயம் அழிகிறது. ஈஸ்வரன் அழியவில்லை. மனிதன், பிரபஞ்சம், பிரம்மம் என்ற மூன்று அம்சங்களைத் தாங்கி வர புருஷனால் முடியாது. ஈஸ்வரனாலேயே முடியும் என்றார். உலகை அற்புதமாக்குவது ஈஸ்வரன். இவன் செயல்படத் தேவையான காலத்தையும், இடத்தையும் சிருஷ்டிப்பது இந்த ஜீவியம்.

அத்தியாயம் 16 - சத்திய ஜீவியத்தின் மூன்று லோகங்கள்

இறைவன், ஜீவாத்மா, மனிதன் என்ற மூன்று நிலைகளை மையமாகக் கொண்ட மூன்று லோகங்களைச் சத்திய ஜீவியம் சிருஷ்டிக்க அது இரண்டாகப் பிரிகிறது. அகம், புறமாகப் பிரிகிறது. அகம், புறம் இவற்றிடையே மனம் உற்பத்தியாகிறது.

அத்தியாயம் 17 - தெய்வீக ஆன்மா

மரபு சிருஷ்டியைக் கூறுகிறது. பரிணாமத்தைக் கூறவில்லை. இறைவனிடமிருந்து உலகை நோக்கி கீழே வருவது சிருஷ்டி. உலகிலிருந்து மேல் நோக்கி இறைவனை நாடுவது பரிணாமம். பரிணாமம் மரபு அறியாதது. ஜடத்திலிருந்து வாழ்வுக்கும், வாழ்விலிருந்து மனத்திற்கும், மனத்திலிருந்து சத்திய ஜீவியத்திற்கும் பரிணாமம் எழுவது உடல், உயிர், மனம், ஆன்மாவாகும். அந்த ஆன்மாவை தெய்வீக ஆன்மா என பகவான் குறிப்பிடுகிறார். இது சச்சிதானந்த லீலையில் உள்ளது. எப்பொழுதும் பிரம்மத்தின் முன் இருப்பது. பரமாத்மாவிலும், ஜீவாத்மாவிலும் உறைவது. சத்திய ஜீவிய 3 நிலை வாழ்வையுடையது.

அத்தியாயம் 18 - மனமும் சத்திய ஜீவியமும்

மனம் எப்படிச் சிருஷ்டிக்கப்பட்டது என மரபு கூறியதாகத் தெரியவில்லை. வேதம் மனம் கோணலானது எனக் கூறுகிறது. பகவான் மனம் வாழ்வையும், ஜடத்தையும் உற்பத்தி செய்தது எனவும் மனத்தின் மகத்தான சிறப்புகளையும் கூறுகிறார்.

சத்திய ஜீவியம் இரண்டாகப் பிரியும்பொழுது இடையே மனம் உண்டாகிறது. மனத்தில் அஞ்ஞானமில்லை. மனம் சத்திய ஜீவியத் தொடர்பை இழந்தால் அஞ்ஞானம் உற்பத்தியாகிறது. மனம் தன்னை தன்னில் இழந்தால் அஞ்ஞானம் வலுப்படும். மனம் உயிரில் தன்னை இழந்தால் அஞ்ஞானம் பெரிதும் வளரும். மீண்டும் மனம் உடலில் தன்னை இழப்பது அஞ்ஞானம் முழுமையடைவது. உயிரிலிருந்து மனம் விடுபட்டால், உடலின் அஞ்ஞானத்தை மனம் இழந்தால், பிராணமய புருஷ தரிசனம் கிட்டும். மனம் உயிரிலிருந்து மீண்டால், மனோமய புருஷ தரிசனம் கிடைக்கும். மனத்தின் அஞ்ஞானத்திலிருந்து மீண்டால், சத்திய ஜீவன் தரிசனம் தருவான். பொதுவாக மனோமய புருஷனை ரிஷிகள் ஜீவாத்மா எனத் தவறாக அறிவதுண்டு. அது ஜீவாத்மாவின் பகுதி.

(தொடரும்)

***********



book | by Dr. Radut