Skip to Content

08. ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிக சிந்தனைகள் - பாகம் 1

ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிக சிந்தனைகள் - பாகம் 1

(சென்ற இதழின் தொடர்ச்சி)

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

விரிவாக்கம் மற்றும் சொற்பொழிவு: திரு. M. ஜகந்நாதன்

சொற்பொழிவு ஆற்றிய தேதி: 06.09.2015

4. ஒரு அபிப்பிராயத்தை சரி அல்லது தவறு எனக் கூற முடியாது.

வாழ்வுக்குப் பயன்படும் அல்லது பயன்படாது எனலாம். அது காலத்தால் ஏற்பட்டது.

காலப்போக்கில் அதன் பயன் குறைந்து விடுகிறது.

அபிப்பிராயத்தைக் கடந்து உயர்ந்து நெடுநாள் நீடிக்கும் விவேகத்தை நாட வேண்டும்.

அபிப்பிராயங்கள் பலதரப்பட்டவை. நாட்டுக்கு நாடு மாறும் அபிப்பிராயங்கள் உண்டு. காலத்தால் கனியும் அபிப்பிராயமும், மாறும் அபிப்பிராயமும் உண்டு. சிறுவர்கள், பெரியவர்கள் என்பதாலும் ஆண், பெண் என்பதாலும், படித்தவர், படிக்காதவர் என்பதாலும், நகரம், கிராமம் என்பதாலும் அபிப்பிராயங்கள் மாறும். இன்றைய அபிப்பிராயம் நாளைய எதிரான அபிப்பிராயமாகும். இலக்கியத்துறைக்கே ஏற்பட்ட அபிப்பிராயங்-கள் உண்டு. அதுபோல் அரசியல், நாடகம், சினிமா, பத்திரிக்கைத் துறைகளுக்கென ஏற்பட்ட அபிப்பிராயங்கள் உண்டு. அவசரப்படுவது தவறு என்றொரு அபிப்பிராயம் உண்டு. அவசரப்படாமலிருப்பது தவறு என்ற அபிப்பிராயம் எழும் நேரம் உண்டு. சாப்பிடும் பொழுது பேசக்கூடாது என்பது நம் அபிப்பிராயம். பேசும் பொழுது சாப்பிடுவதே சாப்பிடுவது என்பது மேல்நாட்டு அபிப்பிராயம். தகப்பனார் பேச்சைத் தட்டக்கூடாது என்பது பெரிய வலுவான அபிப்பிராயம். மேற்படிப்பிற்குப் போக வேண்டாம், அமெரிக்கா போவது தவறு, கலப்புத் திருமணம் உதவாது, அரசியல் தவறு, உள்ளதைச் சொல்லக்கூடாது என்று தகப்பனார் கூறும் பொழுது தகப்பனார் பேச்சை மறுப்பது சரி என்று உலகம் அபிப்பிராயம் கூறும். எழுதுவது, ஏர் ஓட்டுவது, கொழுக்கட்டை சமைப்பது, ஆகியவை திறமைகள் (skills). ஏர் ஓட்டுவது என்ற திறமை டிராக்டர் வந்தபிறகு பயன்படாது. எழுதுவது என்ற திறமை கம்ப்யூட்டர் வந்தபிறகு ஏராளமாக அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டது. கொழுக்கட்டை செய்வது பெரும் திறமையாக இருந்தது ஒரு காலம். இன்று அத்திறமை பயன்படாது. திறமைகள் முக்கியத்துவத்தை இழக்கின்றன. திறமை சரியா, தவறா என்பது பிரச்சனையில்லை. அதே போல் ஒரு அபிப்பிராயம் ஒரு காலத்தில் பயன்பட்டது. காலம் மாறியபின் அதற்குப் பயனில்லை. வில் வித்தை, மல்யுத்தம் தம் பெருமையை இழந்தன. அரசனின் வாக்கு ஆண்டவன் வாக்காக இருந்தது. இன்று அந்த அபிப்பிராயம் மாறி விட்டது. உலகில் மன்னிக்க முடியாத குற்றமேயில்லை. நகைமுகம் உலகம் படைத்துள்ளது. மனிதனுடைய பார்வை குறையானது. குறை உலகிலில்லை. பார்வையை மாற்றினால் ஜடம் மறையும். பெண் பேய் என நினைப்பது பெண்ணில்லை. அவளுடைய அற்புதமான நிலையை அறியாத மனம் நினைப்பது. வாழ்வு பயங்கரமானதல்ல. வாழ்வு சிறியது, வளர்கலை பெரியது என வளரும் கலையான பரிணாமம் வர்ணிக்கப்பட்டது. சிருஷ்டி பரிணாமமாக மாறும் பொழுது கலை வளர்ந்து பிரபஞ்சம் அழியும் நேரம் உண்டு. அதைப் பிரளயம் என்கிறோம். பிரளயம் வந்தபின்னும் இருப்பது வாழ்வு. மனம் கோணலானது என்றனர். கோணல் மனத்திலில்லை. நம் பார்வையில் உள்ளது. எப்படி மனம் உற்பத்தியாயிற்று, என்ன காரணத்திற்காக சிருஷ்டிக்கப்பட்டது என்று அறிந்தால் குதர்க்கம் மனத்திலில்லை, நாம் அதையறிவதில் உள்ளது என்று விளங்கும் என பகவான் கூறுகிறார். துன்பத்தை நாம் பாவம் செய்து அனுபவிக்கிறோம் என நினைக்கிறோம். ஜீவியம் இருளில் புதைந்து வெளிவர முயலும் பொழுது நாம் அதைத் துன்பமாக அறிகிறோம் என்கிறார் பகவான். பகவான் சிருஷ்டிக்கு வெளியிலிருந்து சிருஷ்டியைக் காண்பதால் அவருக்கு இவை தெரிகின்றன. உபநிஷதங்களும், வேத ரிஷிகளும் கூறியவை மேற்கண்டவை என்றாலும், அவர்கள் அடுத்த பக்க உண்மையைக் காணாமலில்லை. இரண்டு பக்கமும் தெரிந்தாலும் அவர்கள் ஒரு பக்கத்தையே கருதினர். நாம் இன்று புறக்கணிப்பது நாளை வலுவாக மீண்டும் வந்தால் அதை நாம் புறக்கணித்தது தவறு என்று அறிய வேண்டும். பரம்பொருளை ஏற்று ஜடத்தை மறுத்தாலும், ஜடத்தை ஏற்றுப் பரம்பொருளை மறுத்தாலும் சிருஷ்டியின் அடிப்படையான உண்மையெனும் ஐக்கியம் விலகுகிறது. ஐக்கியத்தைப் போற்றினால் அதிகபட்ச உண்மை தெரியும். இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் முழுமையில்லை. குறை எழும். இரண்டையும் ஏற்கும் பொழுது நாம் காண்பது பரம்பொருள். உலகமே அப்பரம்பொருளாலானது. நம் பார்வை சுருங்கி ரூபத்தை மட்டும் ஏற்றால் பேருண்மை விட்டுப் போகும். ரூபத்தைக் கடந்த விஷயத்தை ஏற்று சிருஷ்டியை மட்டும் கருதுவதற்கு பதிலாக சிருஷ்டியையும் பரிணாமத்தையும் கருதினால், பகுதியை ஏற்காமல் வேதம் உணர்ந்த ஐக்கியத்தை சத்திய ஜீவியத்திலும் உணர்ந்தால், குறைந்த பட்சம் அதிகபட்ச- மாகும். பகுதி முழுமையாகும், ஜடம் பரம்பொருளாகும், மனிதன் இறைவனாவான், ஜடத்திற்கும் ஜீவியம் உண்டு எனத் தெரியும். சச்சிதானந்த பிரம்மத்தை தவத்தால் உயர்ந்து மனிதன் எட்டினான். சச்சிதானந்தம் அருளாகவும் பேரருளாகவும் பொருள்களில் தன் ஆனந்தம் வளர்ந்து வெளிவர முயல்வதைக் கண்டு, ஜடம் ஆனந்தமய ஜீவன் Matter is Being of Delight எனக் காணலாம்.

(தொடரும்)

**********

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஐக்கியம், ஒற்றுமை, ஒருமை என்பன இலட்சியம் என்றால் நாம் எட்டியது எது? ஜடமும் ஆன்மாவும் சக்தியாக இணைந்தது போல் மனித குலம் ஒன்றுபட வேண்டும். தற்கால நாகரிகம் தந்தியைக் கண்டு பிடித்து செய்தியால் உலகை ஒன்றுபடுத்த முயல்கிறது. ரேடியோ வந்தபின் கம்பியும் போய் விட்டது. இனி இரு முனைகளிலும் ரிசீவர், transmitter அனுப்பும் இயந்திரம் உண்டு. எதிர்காலத்தில் அவையும் அழியும். எஞ்சி நிற்பது மனம் மனிதனில் பெற்ற அகந்தை. அகந்தை அழிந்தால் மனித ஜீவியம் (human consciousness) பிரபஞ்ச முழுவதும் பரவி ஒன்றாகும்.

*********



book | by Dr. Radut