Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/33. அந்தந்த லோகத்திற்குரிய மௌனம்
பூரணமாகாமல் அந்த லோகத்தைக் கடக்க
முடியாது. பேசாத மௌனம், சிந்திக்காத
மௌனம், புரிந்து கொள்ள விரும்பாத மௌனம்,
ஜோதியை நாடாத மௌனம், பிரிவை நாடாத
மௌனம், அடுத்தடுத்த கட்டத்திற்குரிய
நிபந்தனைகள்.

  • மௌனம் பெரியது, சக்தி வாய்ந்தது. சக்தி பார்ப்பவர் அறிய முடியாதது.
  • ஒரு மனிதனுடைய படிப்பை, நாணயத்தை, அவனைக் கண்டு அறிய முடியாது.
  • மௌனம் உள்ளவர்க்கு மௌன நிலைக்குரியவாறு பிரார்த்தனை பலிக்கும்.
  • மனம் பேயாக அலைபவருக்கு மூன்று நாள் பிரார்த்தனை செய்தால் எளிய பிரார்த்தனை பலிக்கும்.
  • மௌனம் முதல் நிலையில் உள்ளவர்க்கும் அதே பிரார்த்தனை நினைத்தால் பலிக்கும். அது மௌன சக்தி.
  • மௌனம் முடிவான நிலையிலுள்ளவர்க்கு வேகமாக எழும் சூறாவளிப்புயல் நினைவால் அடங்கும்.
  • மௌனம் என்றால் என்ன?
  • மனம் அமைதியானால் அது மௌனம் எனப்படும்.
  • மனம் என்பது மனிதன் பெற்ற உயர்ந்த கருவி.
  • அதன் திறன் அறிவு, புரிந்து கொள்வது.
  • புரிந்து கொள்வது என்றால் என்ன?
  • நாயைப் பார்த்து நாய் என அறிவது (fact) விஷயமறிவது.
  • நாய் கடிக்கும் என்று அறிவது நாயின் குணத்தை அறிவது.
  • நாய் கடிக்கும், ஆனால் தானே கடிக்காது, நாம் நாயை அடித்தால் கடிக்கும் என்று புரிவது நாயால் நமக்கு ஏற்படும் தொந்தரவை அறிவது.
  • நாய் நன்றியுடையது என்று அறிவது நாயின் நல்ல குணத்தை அறிவது.
  • நாய் கடிக்கும், நன்றியும் உடையது, எதுவும் நம்மைப் பொறுத்தது என்று புரிவது நாய்க்கும் நமக்கும் உள்ள தொடர்பை அறிவது.
  • இந்த அறிவு தானே உடனே வருவதில்லை. அனுபவத்தால் வருவது. ஒரு முறை கடித்தால் புரியும்.
  • மனித மனம் பெற்ற அறிவு அனுபவத்தால் பல நாளில் பெற்ற அறிவு.
  • நாய் கடித்தால் மனிதன் சிந்திக்கின்றான். சிந்தனை புரிய வைக்கிறது.
  • முனிவர் மனம் மௌனமானது. அது சிந்தனையைக் கடந்தது. மனிதனுக்கு சிந்தனையால் புரிவது முனிவர்க்கு சிந்தனையின்றி புரியும்.
  • பத்ரகிரியார் மனைவியின் துரோகத்தை பட்டினத்தாரிடம் சொல்லிய பொழுது முதலில் தான் பார்த்தவுடன் அவள் துரோகம் செய்பவள் எனத் தான் புரிந்து கொண்டதாகக் கூறினார்.
  • ரிஷிக்கு சிந்தனையில்லாமல், பார்த்தவுடன் அவள் ஆத்மா தெரியும்.
    அதில் கறுப்பு தெரியும்.
  • யோகியிடம் அவள் பெயரைச் சொன்னால் அவள் நடத்தை கெட்டவள் என்பார்.
  • கடவுளிடம் அவளைப்பற்றிக் கூறினால், அவளால் பாதிக்கப்படாத திறமையைத் தருவார்.
  • அவள் சத்திய ஜீவிய ஒளி முன் வந்தால், அவளிடம் உள்ள கறுப்பு மாறி விடும்.
  • ஒவ்வொரு நிலைக்கும் மௌனம் உண்டு, சக்தியுண்டு, கருணையுண்டு, அருளுண்டு.
  • அன்னையிடம் வருபவர் மனித நிலையிலும், மேற்பட்ட, கீழ்ப்பட்ட நிலைகட்கும் உரியவர்.
  • மனித நிலைக்கு மேற்பட்டவர் வந்தால், அவர் நிலைக்குரிய மௌனம் வரும்.
  • கீழ்ப்பட்டவர் வந்தால் அதற்குரிய மௌனம் வரும்.
  • அவர் விரும்பினால், அந்நிலை உயரும்.
  • கயவன் வந்தால், அவன் கயமை கரையும்.
  • நமக்குரிய மௌன நிலை எது என அறிய நமக்கு எது பலிக்கிறது என்று கண்டால் நிலை புரியும்.
  • படிப்பது சிரமமானது புரிந்தால், அறிவிற்குரிய மௌனம் உண்டு.
  • செய்யும் காரியம் கூடி வந்தால் காரியத்தின் நிலைக்குரிய மௌனம் உண்டு.
  • சமாளிக்க முடியாத நிலையில் எவரும் கைவிட்ட விஷயம் அன்பர் சமர்ப்பணத்தால் பூர்த்தியானால் அவர் சராசரிக்கு மேற்பட்ட மனிதன் என அறிகிறோம்.
  • மௌன சக்தி, வாழ்விலும், அறிவிலும், செயலிலும், உயர்ந்த நிலையிலும், உள்ள நிலையிலும், எந்த நிலையிலும் பலிக்கும். பலிக்கும் நிலையை அன்பர் முயற்சியால் உயர்த்தலாம்.
  • உடை, உணவு, வீடு, உதவி, ஊர், வாகனம் போன்றவை ஆயிரம். ஒவ்வொன்றிலும் 100-க்கு மேற்பட்ட நிலைகள் உண்டு. அது எல்லாவற்றிற்கும் உண்டு. மௌனத்திற்கும் உண்டு. ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டம் போக B.A. பட்டம் பெற்றவன் M.A. பட்டம் பெற முயல்வது போன்ற முயற்சி வேண்டும். நிலைகளை அறிவது அவசியம். அவற்றைக் கடக்கும் முறைகளையும் பவரையும் அறிவதும் அவசியம். இந்தத் தலைப்பை விளக்கி ஒரு பெரு நூலே எழுதலாம். பிறர் மனத்தை அறிய மௌனம் தேவை. பிறரை நாம் விரும்பும்படி நடக்க வைக்க வேண்டியது பெரிய மௌனம். பகவான் ஹிட்லரை அழிக்க சர்ச்சிலுக்குப் பலத்தை அனுப்ப உதவிய மௌனம் பலமானது. அஹிம்சை ஹிம்ஸைக்கு எதிரானது. ஹிம்ஸையை விலக்கி அஹிம்சையால் ஒரு காரியத்தை சாதிக்க முயன்றால் ஹிம்ஸை குறுக்கிடும். அந்த ஹிம்ஸையை அடக்க உபயோகப்படும் அஹிம்ஸையை செயல்படுத்த வேண்டிய மௌனம் வேறு. தன்னைக் கடத்திச் செல்ல முயன்ற மேயரை அவர் மைத்துனனே சுட வைத்ததும் மௌன சக்தி. அது அதற்குரிய நிலையையுடையது. சென்னையிலிருந்து திருச்சி போகும் ரயிலும் மதுரையிலிருந்து சென்னைக்குப் போகும் ரயிலும் என்றும் தஞ்சாவூரில் சந்திப்பதில்லை. கோமதியின் காதலன் அவளுக்காக டிரைவர் வேலை செய்யும் பொழுது அவன் தகப்பனார் ஜமீன்தார் மதுரையிலிருந்து விஷயம் தெரியாமல் ஆத்திரமாக தஞ்சாவூர் வந்தபொழுது அந்தச் செய்தி அவர் காதில் விழும்படிச் செய்ய ஒரு மௌனம் வேலை செய்தது. செய்தி ஜமீன்தார் காதில் விழுந்தது. கொதித்தெழுந்தார். தோற்ற கேஸ் ஜமீன் அவரை வந்தடைய, கோமதியை ரங்கராஜன் மணக்க அவர் நேரடியாகப் போய் ஏற்பாடு செய்தார். இதைச் செய்த மௌனம் சாதிக்கும் மௌனம். எல்லாச் செயல்கட்கும் பின்னால் அதற்குரிய மௌனம் உண்டு. மௌனம் என்றால் என்ன? சப்தமின்றி இருப்பது மௌனம். அசைவின்றி இருப்பது மௌனம். உலகம் ஆத்மா (Spirit) எடுத்த ரூபம். ஆத்மாவின் அம்சங்கள் 12. அவை: மௌனம், சாந்தி, சத்தியம், ஐக்கியம், ஞானம், உறுதி, அழகு, சந்தோஷம், அன்பு, அனந்தம், சாஸ்வதம், ஜீவன். மேடைப் பேச்சை நாம் சப்தமாக அறியலாம். மௌனமாகவும் அறியலாம். ஒரு கட்சி ஒரு கொள்கையை ஏற்கும்முன் உள்ள மௌனம் அக்கொள்கையாக உருவாகி, அது ஒரு பேச்சாளனுடைய பேச்சாகிறது. இந்தப் பேச்சிற்கு மேற்கூறிய 12 அம்சங்களுண்டு. நாம் இங்கு மௌனம் என்ற கோணத்திலிருந்து மட்டும் கருதுகிறோம். எல்லாக் கோணங்களிலிருந்தும் காண முடிவது பூரணயோக ஞானம். ஒரு பெண்ணுக்கு நடக்கும் திருமணமும், ஒரு இளைஞன் பெறும் வேலையையும் அவரவர் கோணத்திலிருந்து மட்டும் கருதுகிறோம். எல்லாக் கோணங்களிலிருந்தும் காண முடிவது பூரண யோக ஞானம். ஒரு பெண்ணுக்கு நடக்கும் திருமணமும், ஒரு இளைஞன் பெறும் வேலையையும் அவரவர் அவர் கோணத்திலறிந்தாலும் இந்த 12 அம்சங்களும் அதனுள் பொருந்தியுள்ளன. இந்தியா ஆகஸ்ட் 15, 1947-இல் சுதந்திரம் பெற்றது என்பது ஒரு நிகழ்ச்சி. இதை அரசியல் நிகழ்ச்சியாக மட்டும் உலகம் அறியும். நாமும் அப்படியே அறிவோம். இதற்கும் இந்த 12 அம்சங்கள் உண்டு. மனிதனுக்குப் புரிவது என்பது மனம் அறிவது. மனம் நம் ஜீவனில் நான்கில் ஒரு பகுதி. மெஜாரிட்டி ஓட்டு பெற்றவன் எலக்க்ஷனில் வென்றான் என்பது அனைவருக்கும் புரிகிறது. இதைப் புரிந்து கொள்பவர்கள் இதை நினைவில் வைத்துக் கொள்ளலாம். ஒருவர் எலக்க்ஷனில் நின்றால் வெற்றி பெற இந்த அறிவு பயன்படாது. தனக்கு மெஜாரிட்டி ஓட்டு வந்து ஜெயித்தால் இந்த சட்டம் செயல்படுபவரை அறியலாம். தனக்கு வந்த ஓட்டு மெஜாரிட்டியில்லை எனில் அதனால் தோற்றோம் என்பதை இது விளக்கும். அறிவு உள்ளதை விளக்க உதவும். பெறவேண்டியதைப் பெற உதவாது. மெஜாரிட்டி வந்தால்தான் ஜெயிக்கலாம் என்ற அறிவு மெஜாரிட்டி பெற உற்சாகம் தரும். மெஜாரிட்டியைத் தாராது. Sensation உடல் உணர்வு அதை — மெஜாரிட்டி ஜெயிக்கும் — உணரும்பொழுது மெஜாரிட்டி பெறும் திறனைக் கொடுக்கும். மெஜாரிட்டி வரும். இவை மனம் பெறும் அறிவு, நெஞ்சு பெறும் அறிவு, உடலுணர்வு பெறும் அறிவை வேறுபடுத்தி விளக்கும். இதைக் கடந்த முதல் நிலையுண்டு. மெஜாரிட்டி என்பது ஒரு விஷயம். அது யாரிடம் போக வேண்டும் என முடிவு செய்கிறதோ அவரிடம் போகும். இந்த நிலைகட்கு எல்லாம் உரிய மௌனம் உண்டு. மௌனமும் சமர்ப்பணமும் இணைந்தவை. அதே போல் மௌனம் இந்த 12 அம்சங்களுடனும் இணைந்தவை. இவை நம்முள் பொறுமையாக எழும். நம் வழக்கில் ஒருவரை நாம் கணிக்கும்பொழுது இக்குணங்கள் சேர்ந்து செயல்படுவதை பக்குவம் என்கிறோம். சொல் எதுவானாலும், சொல்பவர் யாரானாலும், சொல்லும் விஷயம் எதுவானாலும், எது எப்படியிருந்தாலும் இவற்றை முழுமையாகத் தழுவும் சமர்ப்பணம் உண்டு. அதற்கு அத்தனையும் கட்டுப்படும். அதே போல் எல்லா அம்சங்களும் — உதாரணமாக மௌனம் — செயல்படும் என்றாலும் அது சிரமம். சமர்ப்பணம் சிரமத்தை விலக்கி காரியத்தை முடிக்கும். எல்லா அம்சங்களும் இணைந்து முழுமையாக மாறி செயல்படுவது திருவுருமாற்றம். அம்சம் பலவானாலும் அவை பின்னணியில் இணைவதே முக்கியம். இணையுமிடத்துச் செயல் சமர்ப்பணம். முழுமையாக இணையுமிடம் செயல்படுவது திருவுருமாற்றம்.

***********

ஸ்ரீ அரவிந்த சுடர்

வேதம் போற்றுவது அக்னி.
கீதையின் கரு அன்பாக உருவாகும் சரணாகதி.
தழலே ஆர்வமான தண்ணொளி ஸ்ரீ அரவிந்தர்.
தவம் தந்த வேகம் பொறுமையால் தண்ணொளியானது யோகம்.
அக்னியின் வேகம் அமைதியின் இனிமை பெற்றது யோகம்.
அக்னி குளிர் நிலவாவது மனிதன் தெய்வமாவது.
உள்ளம் உயர்வது மனம் குளிர்வது.

***********



book | by Dr. Radut