Skip to Content

13. அன்னை இலக்கியம் - பார்வைகள்

அன்னை இலக்கியம்

பார்வைகள்

(ஜூலை 2015 இதழின் தொடர்ச்சி)

சமர்ப்பணன்

22. சந்துருவின் பார்வை

நீச்சல் தெரியாத பக்தன் ஒருவன் ஆற்று வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டான். ‘இறைவா, என்னைக் காப்பாற்று’ என்று அக ஆழத்திலிருந்து குரலெழுப்பினான். அப்போது அவனருகே படகொன்று வந்தது. ‘ஏறிக் கொள்’ என்றான் படகோட்டி. ‘உன் உதவி எனக்கு வேண்டாம். இறைவன் என்னைக் காப்பாற்றுவான்’ என்று கூறினான் பக்தன். படகு விலகிச் சென்றது. அதன்பின் வெள்ளத்தில் அல்லல்பட்டு எப்படியோ கரை சேர்ந்தான். ‘இறைவா, ஏன் என்னைக் கைவிட்டாய்?’ என்று வருந்தினான். அப்போது அப்பக்கமாக வந்த பெரியவர் ‘எப்போதுமே பிரச்சனைக்குள்ளும், அதன் அருகிலும் இறைவன் தீர்வாக இருப்பான். இறைவன் மறைமுகமாக படகாக வந்தான். அவனை நீ பொருட்படுத்தவில்லை என்பது உனக்குப் புரியவில்லையா?’ என்றார்.

‘இப்போது புரிகிறது’ என்ற பக்தன் உற்சாகமாக காட்டு வழியில் நடக்கத் தொடங்கினான். இருட்டியபோது புதரில் ஓநாயின் எரியும் கண்களைக் கண்டான் பக்தன். ‘இறைவா, காப்பாற்று’ என்று அவன் நினைத்தவுடன் ‘நேரில் செல்வதுதான் இவன் விஷயத்தில் சரி வரும்’ என்று இறைவன் அவனருகே தோன்றினான். பயந்து போயிருந்த பக்தனுக்கு ஆண்டவனை அடையாளம் தெரியவில்லை. பெரியவரின் அறிவுரை நினைவிற்கு வந்தது. ‘அட, என் கையில்தான் தீர்வாக தடி இருக்கிறதே’ என்று நினைத்து கொண்டு தடியை ஓநாய் மீது வீச அது ஓடி விட்டது. ‘தடியே இறைவன்! அய்யா, இனி பயப்படாமல் உங்கள் வழியே செல்லுங்கள்’ என்று தான் அடையாளம் கண்டு கொள்ளாத இறைவனிடம் கூறிவிட்டு மனிதன் தன் வழியே நடக்கத் தொடங்கினான். இறைவன் திகைத்து நின்றான்.

கையில் கிடைப்பதெல்லாம் கடவுள்தான் என்று செயல்பட வேண்டுமா அல்லது நிச்சயம் இறைவன் நேரடியாக வருவான் என்று நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டுமா?

விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் விடுத்த புதிர் போல இக்கேள்வி என்னுள் தோன்றியது. ஆனால் விடைதான் கிடைக்காமல் இருந்தது.

மன்னாதி மன்னனான விக்கிரமாதித்த பூபதியிடம் ஓர் இளவரசி தூதனுப்பினாள். ‘நீர் சகல கலைகளும் அறிந்தவர் என்றும், நுண்மதி படைத்தவர் என்றும் கேள்விப்படுகிறேன். நான் உடல் முழுவதும் திரையிட்டு மின்னலைப் போல சுழன்று நடனமாடுவேன். என்னைச் சித்திரமாக வரைய முடியுமா? நீர் வென்றால் பேரழகியான நான் உமக்கு மாலையிடுவேன்! சித்திரத்தில் சிறு தவறு இருந்தாலும் நீர் எனக்கு அடிமையாக வேண்டும்’ என்றாள்.

‘நீ தாராளமாக தலை முதல் பாதம் வரை திரையிட்டு மறைத்துக் கொள். ஆனால் போட்டி துவங்கும் முன் உன் இடப்பாத பெருவிரலை ஒரே ஒரு முறை தொட்டு வணங்க விரும்புகிறேன்’ என்றான் விக்கிரமாதித்தன். ‘பெண்ணின் பாதத்தை வணங்குவதை விட ஆணுக்கு வேறு பெரிய பெருமையும், இன்பமும் இல்லை என நினைக்கிறார் போலிருக்கிறது’ என்று பூரித்த இளவரசியும் பெருவிரல் தரிசனம் தந்து பின் நடனமாட ஆரம்பித்தாள்.

மோகினி உருவெடுத்த மகாவிஷ்ணு ஆடியது போல வேகமாக ஆடினாள் இளவரசி. அவையினர் கண்ணுக்கு ஓர் ஒளிவட்டம் சுழல்வது போலிருந்ததே தவிர வேறெதுவும் தெரியவில்லை. ஆனால் விக்கிரமாதித்தன் வேற்று மனிதர்கள் எவருமே பார்த்திராத, திரையிட்ட இளவரசியின் உருவத்தை திரையின்றி அசலாக வரைந்திருந்தான்.

‘இது எப்படி சாத்தியம்?’ என்று வியந்தபடி மாலையிட்ட இளவரசியிடம், ‘மரத்தின் சாரம் விதைக்குள் இருக்கிறது.

முழுமையின் சாரம் பகுதியில் இருக்கிறது. பிரபஞ்சத்தின் சாரம் புள்ளியில் இருக்கிறது. அளவின்மையின் சாரம் அளவிற்குள் இருக்கிறது. சமூகத்தின் சாரம் குடும்பத்தில் இருக்கிறது. சாரத்தை அறிந்தவன் முழுமையை அறிந்து சாதிக்கப் பிறந்தவன். பாதவிரலைப் போற்றுகிறவன் பெண்ணை அறிகிறான். பெண்ணைப் போற்றுகிறவன் பெண்மையை அறிகிறான். பெண்மையைப் போற்றுகிறவன் பிரம்மத்தை அடைகிறான். பாரதக் கலைகள் எல்லாமே ஆன்மிக நூல்களில் பிறந்த ஞானப் பூக்கள்’ என்றான் விக்கிரமாதித்தன்.

‘ஆச்சரியமாக இருக்கிறதே, அதெப்படி முடியும்?’ என்று சிறு வயதில் என் பாட்டியிடம் கேட்டேன்.

‘விக்கிரமாதித்தன் வேதாளத்தின் உதவியோடு இளவரசியை ஏமாற்றியிருப்பான். உன் தாத்தாவைப்போல அப்பாவிப் பெண்ணை ஏமாற்றுவதுதான் எல்லா ஆண்களும் செய்வது’ என்று என் பாட்டி கொடுத்த அனுபவ விளக்கம் என் தர்க்க தாகத்தை தற்காலிகமாகத் தீர்த்தது.

மூலத்திலிருந்து வெளிப்படும் பெருநிகழ்வுகளை காலத்திலும், வெளியிலும் எதிர்கொள்ளும் மனிதன் அந்த அனுபவங்களின் சாரத்தைத் தன்னுள் பெறுகிறான். பெற்ற சாரத்தை தலைமுறை தலைமுறையாக தன் சந்ததியினருக்குத் தருகிறான். சாரத்தை அறிந்தவன் அதன் விளக்கமான அனுபவங்களையும், அனுபவங்களைத் தரும் நிகழ்வுகளையும், இறுதியாக மூலத்தையும் கால, வெளி அலைச்சலின்றி அடைகிறான்.

மூலமான பிரம்மம் ஆனந்த அனுபவம் பெற, அளவற்ற தன்னை அளவிற்குட்படுத்தி, அனைத்தும் அறிந்த தன்னை அறியாமைக்கு ஆளாக்கி, எங்குமிருக்கும் தன்னை தனக்குள் இழந்து தன்னை மறந்தது. கணக்கிடமுடியாத காலந்தொட்டு விரிந்து கொண்டேயிருக்கும் வெளியெங்கும் பிரம்மத்தின் பிரதிநிதியாக ஆன்மா சைத்திய புருஷன் என்ற பெயரில் வளர்ந்து வருகிறது. எண்ணற்ற உருவங்கள் வழியாக, பற்பல பிறவிகள் வழியாக தான் பெறும் அனுபவங்களின் சாரத்தைச் சேகரிக்கிறது. தனக்குள் இருக்கும் சைத்திய புருஷனைக் கண்டறிபவன், பரிணாமச் சாரத்தை அறிகிறான். கால,வெளித் தடைகளின்றி படைப்பின் அத்தனை ரகசியங்களையும், அனைத்துப் பிறவிகளில் பெற்ற அனுபவங்களையும் அறிகிறான். பிரம்ம மூலத்தையும் அறிகிறான். வாசிக்க நன்றாக இருந்தாலும், மறைநூல்கள் சொல்வதை மனம் எளிதில் ஏற்றுக் கொண்டு விடுமா?

அறிவியல் ஆராய்ச்சி கூடத்தில் அமர்ந்து கொண்டு அமெரிக்க விஞ்ஞானி ஆங்கிலத்தில், ‘மரபணுக்கள் மூலம் மனிதனை முழுவதுமாக அறிய முடியும்’ என்று கூறினால்தான் மனம் நம்புகிறது. நம் வீட்டுப் பிள்ளைகளும், பிடிக்கிறதோ, இல்லையோ, மரபணுப் படிப்பில் பட்டம் பெற்று வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும் என்று மனம் ஆசைப்படுகிறது.

விஞ்ஞானி தனக்குரிய சோதனைச்சாலை சாதனங்களைக் கொண்டு சில அறிவியல் உண்மைகளை அறிகிறார். யோகி தனக்குரிய ஆன்மிக சாதனங்களைக் கொண்டு தானறிந்த உண்மைகளைக் கூறுகிறார். அவர் கருவியைக் கொண்டு இவர் முடிவுகளை மதிப்பிடுவதுவும், இவர் கருவியைக் கொண்டு அவர் முடிவுகளை மதிப்பிடுவதுவும் சரியான செயலாக இருக்க முடியாது. ஆனால் அப்படித்தான் இருவருமே சச்சரவு செய்து கொண்டிருக்கிறார்கள். தறியில் சேலை நெய்பவனைப் பார்த்து, ‘அடுப்பில் சமைக்காத சேலை நன்றாக இருக்காது’ என்று சமையல்காரன் கேலியாகச் சிரித்தானாம். அதற்கு நெசவாளி ‘தறியில் செய்யாத இடியாப்பம் எப்படிச் சுவையாக இருக்க முடியும்?’ என்று பதிலுக்கு சிரித்தானாம்.

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு பொருளும், எத்தனையோ ஆயிரம் வருடங்களாகப் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று இன்று நமக்குப் பயன்படுகின்றன. ஒரு வார்த்தை என்பது பல்லாயிர வருடப் பண்பாட்டின், வரலாற்றின் ஒரு பகுதியின் சாரம். ஒரு வார்த்தையைக் கொண்டு ஒரு மனித இனக்குழுவின் முக்கிய அம்சங்களை அறிய முடியும் என்று மொழியறிஞர்கள் கூறுகிறார்கள்.

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால், மகாபாரதம் நிகழ்வதற்கும் முன்னால் இருந்த சிந்து சமவெளி நாகரிகத்தை அறிய, மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் கிடைத்த உடைந்த பானைகள் உதவியாக இருக்கின்றன. அப்பானைகள் அவர்கள் வாழ்க்கை முறையை, சமைத்த விதத்தை, வாழ்ந்த விதத்தை சாரமாக நமக்குச் சொல்கின்றன. அங்குக் கிடைத்த பொருட்களில் இருக்கும் சித்திரப்பெண்கள் சேலை போன்ற உடையணிந்திருக்கிறார்கள். சேலை பல்லாயிர வருடப் பண்பாட்டின் பகுதியின் சாரம்.

மகாபாரதத்தை எத்தனை ஆயிரம் வருடங்களாக நாம் பயின்று வருகிறோம். அதில் சேலையின் பங்கைப் பற்றி என்றாவது எண்ணியிருக்கிறோமா? திரௌபதி ஒற்றை வஸ்திரமாக சேலை கட்டியிருந்த காரணத்தால்தானே துச்சாதனனால் துகிலுரிய முடிந்தது? கண்ணனும் தொடர்ச்சி- யாக சேலை தந்து, பெண்கள் போற்றும் தெய்வமாக தன்னைக் காட்டிக் கொள்ள முடிந்தது? திரௌபதி சல்வார் கமீசோ, சுரிதாரோ போட்டிருந்தால் துச்சாதனனும், கண்ணனும் என்ன செய்திருப்பார்கள்? மகாபாரதப் போர் கூட நிகழாதிருந்திருக்கக் கூடும்.

பெண்ணின் மானத்தை மட்டுமல்ல, ஆணின் மானத்தையும் சேலை காப்பாற்றியிருக்கிறது. சனீஸ்வரனின் சதியால் நளன் ஆடையிழந்த போது, தமயந்தி தன் சேலையை இரண்டாகக் கிழித்து ஒரு பாதியை கணவனுக்குத் தந்தாளே!

சேலையின் பயன்பாடுகள் பற்பல.

என் பாட்டி தின்பண்டங்களைச் சேலை மடிப்பில் முடிந்து வைத்திருப்பார். அவை தீரும்வரை அவர் பின்னால் அலைந்து கொண்டிருப்பது என் சிறுவயதுப் பழக்கம். அவரது இடுப்பில் இருக்கும் பணமும் சில்லறையும் நிரம்பிய சுருக்குப்பைமீது எப்போதும் என் தாத்தாவிற்கு ஒரு கண்ணுண்டு. சாவிக் கொத்தைப் பத்திரமாகச் செருகி வைத்து வீட்டிற்கு யார் எஜமானி என்பதை அனைவருக்கும் அறிவிக்க, சேலையைவிடச் சிறந்த உடை எதுவுமில்லை. கைக் கழுவியபின் துடைக்கத் துண்டெதெற்கு? முந்தானை போதாதா?

சம்பளமில்லாத வேலைக்காரியாக, சம்பாதித்துத் தரும் அடிமையாக, ஆசையெழும்போது விளையாடத் தேவைப்படும் பொம்மையாக, குழந்தைகளை வளர்க்க உதவும் ஆயாவாக, சுயசிந்தனைகளோ, நுண்ணுணர்ச்சிகளோ இருக்கக்கூடாத ஜடமாக மனைவியரை நடத்தும் இந்தியக் கணவர்களால் உண்டாகும் அளவற்ற கண்ணீரைத் துடைக்கச் சேலை போன்ற பெரிய துணிதான் பொருத்தமாக இருக்கும். கைக்குட்டை போதாது.

நகரங்களில் நீரை வீணடிக்கிறோம். ஒரு குடம் நீருக்காக பல மைல் நடக்கும் பாரத கிராமத்துப் பெண்களின் பாரத்தை குடந்தாங்கும் சேலைத்தலைப்புதானே அறியும்? குடம் சுமக்கும் அவர்களது இடைக்கும், தலைக்கும் சேலையே சற்று ஆறுதல் தருகிறது. எரிக்கும் வெயிலில் இருந்தும், எதிர்பாரா மழையில் இருந்தும் அப்பெண்களின் தலையைக் காப்பதில் சேலைத் தலைப்பிற்கு நிகர் எதுவுமே இல்லை. எந்த மண்தரையிலும் சேலைத் தலைப்பைச் சிறு விரிப்பாக்கி தூங்கி விடலாம். சற்றே சுருட்டினால் தலையணை தயார்.

சேலையைக் கையில் தந்து விட்டால், அம்மா கூடவே இருப்பதாக நினைத்துக் கொண்டு குழந்தை தூங்கி விடும். குழந்தைக்கு பிடித்தமான தொட்டிலாகச் சேலையை நிமிடத்தில் மாற்றி விட முடியும்.

சேலையில் இருக்கும் தங்கச் சரிகை அல்லது வெள்ளிச் சரிகையின் அகலத்தின் மூலம் சமூக அந்தஸ்தைக் காட்ட முடியும். தவிர அது பண நெருக்கடி ஏற்படும்போது அடகு வைக்கவும், நல்ல விலைக்கு விற்கவும் பயன்படும். பக்தன் தன்னைப் பல ரூபங்களில் இறைவனுக்கு அர்ப்பணிப்பது தாந்திரீக யோகமுறைகளில் ஒன்று. பெண்ணாகத் தன்னைப் பாவித்து இறைவனைக் காதலிக்கும் ஆண் பக்தன் அகஎழுச்சியில் சேலையும், நகைகளும், அணிந்தால் அதை மனப் பிறழ்வு என்று பகுத்தறிவுப் பாமரர்கள் எள்ளி நகையாடுவதுண்டு.

சேலையை அறுபத்தி நான்கு பாணிகளில் அணிய முடியுமாம். பன்னிரெண்டு பாணிகளில் பெண்கள் சேலை கட்டி நான் பார்த்திருக்கிறேன்.

பிராமண குடும்பத்தில் மடிசார் கட்டுகிறார்கள். எட்டு அல்லது ஒன்பது கஜம், கிட்டத்தட்ட இருபத்தியேழு அடி நீளம் இருந்தால்தான் பாந்தமாக மடிசார் கட்ட முடியும். நீளமான சேலை கனக்கிறது என்று நீளம் குறைவான சேலையிலும் சிலர் மடிசார் அணிகிறார்கள்.

‘பல்லு’ என்கிற முந்தியை இடப்பக்கம் விடுவது தென்னகப் பாணி என்றால், வலப்பக்கம் விடுவது குஜராத்திப் பாணி.

திருவிடைத் தமிழ்ப் பாணியில் நான்கு கொசுவ மடிப்புகள் எடுத்து முன்புறமாக வயிற்றுப் பகுதியில் செருகிக் கொள்ள வேண்டும். எந்தப் பெண்ணாவது கச்சிதமாகக் கொசுவ மடிப்புகள் வைத்திருந்தால், சேலை கட்டும்போது கணவன் அவளது காலடியில் அமர்ந்து, மடிப்புகளை ஒவ்வொன்றாகப் பிடித்து, நீவி விட்டுச் சரி செய்திருக்கிறான் என்று உத்தரவாதமாகச் சொல்லலாம். இந்தக் கொசுவ மடிப்புகளை பின்புறமாக செருகிக் கொண்டு, சேலையை மார்பின் மீதிருந்து கால்வரை அணிந்து கொண்டால் குடகு பாணி ஆகிவிடுகிறது. இப்பாணியில் சேலை கட்டும் கன்னடத்துப் பெண்கள் எப்படித்தான் பின்பக்கமாக மடிப்பு எடுக்கிறார்களோ!

நேரியல், முண்டு என்று சேலையை இரண்டு துணிகளாக அணிவது மலையாள பாணி. நடக்கும்போது கால்கள் தட்டாமல் இருக்க, கால்களின் நடுவே மடிப்பை செலுத்தி, கால்சட்டை போல சேலையை மாற்றுவது வேளாண்மைத் தெலுங்கரின் பாணி.

இந்தியத் திருநாட்டுப் பேரழகியரிடையே இப்போதெல்லாம் நிவி பாணிதான் மிகவும் பிரபலமாக இருக்கிறது. அதை சரியானபடி பின்பற்றினால் மயில் தோகை விரித்தது போலிருக்கும். சற்று தவறினாலும், பாம்பு படமெடுத்தது போலாகி விடும்.

மனைவியை ஆராதிக்கும் கணவனை ‘முந்தானையைப் பிடித்தபடி அலைகிறான்’ என்றும், கணவனுக்கு நல்வழி காட்டி நடத்திச் செல்லும் பெண்ணை ‘முந்தானையில் முடிந்து விட்டாள்’ என்றும் இடித்துக் கூறுவது தமிழரின் பழம்பண்பாடு.

முந்தானை முடிச்சு, முந்தானை பிடிப்பு, முந்தானை விரிப்பு போன்ற சொலவடைகளால் முந்தானையை பிரபலமாக்கிய தமிழ் கூறும் நல்லுலகம் ஏன் கொசுவத்திற்கு ஒரு பெருமையும் தரவில்லை?

வீரமற்ற ஆண்களைப் பார்த்து ‘சேலை அணிந்து கொள்’ என்று பிறர் இடித்துரைப்பது உண்டு. வீரமுள்ள பெண்களைப் பார்த்து ஏன் எவரும் ‘வேட்டி அணிந்து கொள்’ என்று சொல்வதில்லை?

சிக்கலே சிந்தனைக்கும் சாதனைக்கும் பிறப்பிடம். பல பெண்களுக்குக் கச்சிதமாக சேலை அணியத் தெரியவில்லை என்பது ஒரு சிக்கல். அதைத் தீர்க்கும் விதமாக முந்தி, இடக்கால், வலக்கால், கொசுவம் என்று பல பகுதிகள் கொண்ட சேலை சில கடைகளில் கிடைக்கின்றது. பகுதிகளைத் தனித்தனியாக அணிந்து கொண்டு மறைவாக இருக்கும் பித்தான்கள் மூலம் அவற்றை ஒருங்கிணத்து விடலாம்.

ஒற்றைச் சேலை போலத் தோன்ற வைத்து, பகுதிகளே முழுமை என்று நம்பும்படியான புலன் மயக்கத்தைப் பிறருக்குத் தந்து விட முடியும். பல மடங்கு விலை கொடுத்து வெளி நாட்டில் வாழும் இந்தியர் இதை வாங்குவதாக வியாபாரி ஒருவர் ரூபாய் நோட்டுக்கற்றைகளை அடுக்கிக் கொண்டே கூறினார்.

பல வடநாட்டுக் குடும்பங்களில் பிறந்த வீட்டில் பெண்கள் பலவித உடைகளை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அணியலாம். ஆனால் புகுந்த வீட்டில் சேலை மட்டும்தான் அணிய முடியும். கல்யாணமான பெண்கள் பெரியவர்களைப் பார்க்கும்போது முந்தியால் முக்காடிட்டுக் கொள்ள வேண்டும். வண்ணங்களே வாழ்வு என்பதை வடநாட்டினர், குறிப்பாக ராஜஸ்தானியர் அறிந்தது போல தென்னாட்டினர் அறியவில்லை. திகைக்க வைக்கும் பிரகாசமான வண்ணங்கள் கொண்ட ராஜஸ்தானிய சேலைகள் கலைஞனை பரவசப்படுத்துபவை.

முன்பெல்லாம் இன்ன சாதியினர் இன்ன வகையில் சேலை அணிய வேண்டும் என்று சமூகச் சட்டமே இருந்தது. உலகப் புகழ்பெற்ற தமிழகப் பாடகி ஒருவர் மடிசாரோடு பாரம்பரியப் பெருமையுள்ள ஒரு மடத்திற்குள் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. சில வருஷங்கள் கழித்து அவரது இனிய சாரீரமும், தூய பக்தியும், மடாதிபதியின் மனதை மாற்றின. கச்சையும், சேலையும் அணிவதுதான் இங்கே வெகுகால வழக்கம். இஸ்லாமியர் இந்தியாவை ஆளவந்த பின் சல்வார் கமீஸ் மோகம் பரவியது. ஆங்கிலேயர் ஆட்சியில் விக்டோரியா மகாராணியின் விருப்பப்படி இந்தியரின் கலாசாரமும், ஒழுக்க விதிகளும், மாற்றப்பட்டன. உள்ளாடையும், பாவாடையும், ரவிக்கையும் அப்போது வந்தவை.

சிறுவர்கள் முழு ஆண்களாக மாறும்வரை, கால்சட்டையில் பாதியான அரைக்கால் சட்டையை அணிகிறார்கள். சிறுமிகள் முழு பெண்களாக மாறும்வரை, சேலையில் பாதியான தாவணியை அணிகிறார்கள்.

சாதாரண இடத்துப் பெண்கள் பகட்டான பட்டுச்சேலையோடு, ஏராளமான நகைகளை அணிந்து கூட்டத்தின் கவனத்தைப் பெறுகிறார்கள். பெரிய இடத்துப் பெண்கள் அலங்காரமற்ற பருத்திப் புடவையும், எளிய நகைகளையும் அணிந்து வந்து தங்கள் பெருமையை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.

பொதுவாக எல்லாவிதமான நகைகளையும் சேலையோடு பொருத்திவிட முடியும். மற்ற உடைகளோடு அப்படி எளிதாக பொருத்திவிட முடியாது. அப்புறம் இருக்கவே இருக்கின்றன பூக்கள். சேலையோடு மட்டும்தான் பூச்சரங்கள் அழகாக ஒத்துப் போகின்றன. கொலுசின் நிலையும் அதுவே.

நான் பிறந்த ஊரில் பெரும்பாலான பெண்கள் கிழிந்த சேலை அணிந்து கொண்டு, வீட்டுவேலை செய்வதோடு பட்டுச் சேலை நெய்து கொண்டிருப்பார்கள். ஆண்கள் திண்ணையில் உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டு அரசியல் பேசுவார்கள். எல்லா வீடுகளிலும் ஒரு தறியாவது ஓடிக் கொண்டே இருக்கும். தட்தட்டென்று அது இயங்கும் ஓசை கேட்டுக் கொண்டே இருக்கும். சிறுவனாக இருக்கும்போது தறியை இயக்கப் பார்த்து, முடியாமல் பெண்களின் நகைப்பிற்கு ஆளாகி இருக்கிறேன். ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒருவராவது படித்து அமெரிக்கா சென்று விட்டபின் ஊரின் நிலைமை இப்போது முற்றிலும் மாறி விட்டது. படிப்பாலும், படிப்பு தந்த பணத்தாலும், கிழிசலும், வறுமையும் மறைந்து விட்டன. யாரும் கூலிக்குத் தறி அடிப்பதில்லை.

இக்காலப் பெண்களுக்கு கால்சட்டையும், சுரிதாரும்தான் வசதியாக இருக்கின்றன. வண்டி ஓட்டும்போது சேலை பறக்குமே என அஞ்ச வேண்டியதில்லை. ஆண்களோடு பேசும்போது நிமிடத்திற்கொரு முறை முந்தியை இழுத்துவிட்டு சரி செய்யும் அவஸ்தை தேவையில்லை. சேலையை மடித்து வைப்பதிலும், இஸ்திரி போடுவதிலும் நேரம் விரயமாகிறது. ஒரே ஒரு நல்ல சேலை எடுக்கும் பணத்தில் நாலைந்து நல்ல சுரிதார்கள் எடுத்து விடலாம். அதனால் பெண்கள் சேலை அணிவது வெகுவாகக் குறைந்து வருகிறது.

சேலை இன்னமும் இந்தியரின் ஆழ்மனதில் ஒரு புனிதமான மங்கலக் குறியீடாகத்தான் இருக்கிறது. இன்றுவரை தாலி கட்டும்போது மணப்பெண்ணிற்கு சேலைதான் அணிவிக்கப்-ப டுகிறது. ஜீன்ஸ் அணிந்து தாலி கட்டிக் கொண்டவர்களை நான் இன்னமும் சந்திக்கவில்லை. எல்லா அம்மன் கோவில்களிலும் தேவியருக்கு சேலைதான் உடுத்தி விடுகிறார்கள். மதுரை சொக்கநாதர் அருகே மீனாட்சி அம்மன் கால்சட்டை அணிந்து நிற்பது போல என்னால் விளையாட்டாகக் கூட கற்பனை செய்ய முடியாது. ஆழ்மனக் குறியீடுகள், பிம்பங்கள், பதிவுகள் அந்த அளவிற்கு வலிமையோடு இருக்கின்றன.

இந்தியப் பெண்கள் மேல்நாட்டு உடையணிந்தால் பொருட்படுத்தாத நாம், வெளிநாட்டினர் சேலை அணிந்தால் வேடிக்கைப் பார்க்கிறோம். கூடவே அவர்கள் பொட்டும், பூவும் வைத்துக் கொண்டார்கள் என்றால் நம் கலாச்சாரத்திற்குப் பெருமையும் அங்கீகாரமும் கிடைத்து விட்டதாக எண்ணி அர்த்தமற்ற பெருமிதம் கொள்கிறோம்.

புகழ் பெற்ற ஓவியரான ராஜா ரவிவர்மாவின் படங்களில் உள்ள பெண் தெய்வங்களும், புராண மங்கையரும் பல பாணிகளில் சேலை அணிந்திருப்பார்கள். நான் ஓவியப் பள்ளியில் சேர்வதற்கு முன்புவரை, அவரது ஓவியங்ளையே அற்புதமானவை என்றும், இந்திய ஓவிய சாதனையின் சிகரம் என்றும் தவறாக நினைத்துக் கொண்டிருந்தேன். அது எத்தனை அபத்தமான கருத்து என்பது சில காலம் ஓவியம் பயின்றபின், இந்தியக் கலைகள் பற்றிய சுவாமி விவேகானந்தா, ஸ்ரீ அரபிந்தோ ஆகியோரது கருத்துகளை அறிந்தபின், புரிந்தது. ரவிவர்மா தன் ஓவியப் பெண்களுக்குச் சேலையும், இந்திய நகைகளும் அணிவித்தாலும், ஓவியங்களை காலாவதியாகிவிட்ட ஐரோப்பிய, பார்ஸி பாணியில் மட்டுமே வரைந்தார். அதுவும் தகவல் பிழைகளோடு! ‘ஐரோப்பியர் கழற்றி எறிந்துவிட்ட நைந்த மேலங்கியை அணிந்து கொண்டிருக்கிறார் ரவிவர்மா’ என்கிறார் ஸ்ரீ அரபிந்தோ.

அதன்பின், பொதுமக்களின் கருத்துகளை ஏற்காமல், ஸ்ரீ அரபிந்தோ போன்றவர்களின் பல்கோண கருத்துகளை வாசித்து, சொந்தமாகவும் சிந்தித்து எனது கருத்துகளை உருவாக்கிக் கொள்ள எனக்கு நானே பயிற்சி தந்து கொண்டேன். சொந்தமாகச் சிந்திக்கக் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கற்றுத் தருவதில்லையே! இந்த வகையில் சுயசிந்தனை உருவாக்கிக் கொள்ளும் முறையை கற்றுத் தந்ததில் சேலைக்கும் ஒரு பங்குண்டு.

சேலையைப் பற்றி இந்த அளவிற்கு நான் யோசிக்கக் காரணம் காலையில் திருமண அழைப்பிதழ் தந்த நித்யாதான். வசதியும், வருமானமும் மிகக் குறைவாயிருந்த குடும்பத்தில் பிறந்தவள் நித்யா. ஆனால் பார்ப்பதற்கு, ஓவியங்களில் நான் ரசித்த ராஜபுதனத்து ராஜகுமாரி போலிருப்பாள்.

ஒரு சிலர் செல்வந்தர்களாக இருந்தாலும், விலையுயர்ந்த ஆடைகள் அணிந்த கூலி வேலை செய்பவர்கள் போலிருப்பார்கள். வேறு சிலர், ஒரு வசதியுமில்லை என்றாலும். எளிய உடை அணிந்த இளவரசிகள் போலிருப்பார்கள். நித்யா இரண்டாவது ரகம். நான் குறிப்பிடுவது தோற்றத்தைப் பற்றி மட்டுமல்ல. பேசும்விதம், உபயோகிக்கும் வார்த்தைகள், நடத்தை என எல்லாவற்றையும் கணக்கிலெடுத்துக் கொண்டுதான் சொல்கிறேன்.

நித்யா ஏதோ ஒரு பெண்கள் கல்லூரியில் இலக்கியம் படித்தாள். வசதியற்ற குடும்பத்தில் பிறந்து இலக்கிய பட்டப்படிப்பு படித்தால் எதிர்காலம் இருண்டு விடும் என்று தமிழ் சமுதாயம் நம்புவதால், அவளும் தட்டச்சு படித்தாள். நான் பயிற்சி எடுத்து வந்த ஆடிட்டர் அலுவலகத்தில் அவள் நம்பிக்கைக்கேற்ப தட்டச்சு வேலை கிடைத்து அதை கவனமாகச் செய்து வருகிறாள்.

மிக மிக சாதாரணமான நான்கைந்து சேலைகள்தான் அவளிடமிருந்தன. ஆங்காங்கே வண்ணம் வெளிறியவை, சாயம் போனவை. திரும்பத் திரும்ப அவற்றைத்தான் அணிந்து வருவாள். விசேஷங்களுக்கும் விதிவிலக்கில்லை. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

ஆடிட்டரிடம் ‘நித்யா மிக நன்றாக வேலை பார்க்கிறாள். சம்பளத்தை சற்று உயர்த்தித் தரலாம்’ என்றேன்.

‘ஏன், உனக்கு சம்பளம் கூட வேண்டுமாக்கும்?’ என்று கேலியாகக் கேட்டார் சார்.

‘அவள் குடும்பச் சூழ்நிலை உங்களுக்குத் தெரியும். ஊக்கத்தொகை போல ஏதாவது தந்தால், நல்ல உடைகள் வாங்கிக் கொள்வாள்’ என்றேன்.

‘தன் தம்பிக்கும், தங்கைக்கும்தான் வாங்குவாள். தனக்கு வாங்க மாட்டாள். நீ சொல்வது சரிவராது. என்னால் வேலைக்குத்தான் சம்பளம் தர முடியும். அவள் கஷ்டத்தைத் தீர்ப்பது என் கடமையில்லை’ என்று எந்த உதவியும் செய்ய மறுத்து விட்டார் ஆடிட்டர்.

என் செலவில் வாங்கித் தர நினைத்தாலும், அதைச் செய்யவில்லை. அது சிறுமைபடுத்தப்பட்ட உணர்வைத் தந்து அவள் மனதைப் புண்படுத்தலாம். அல்லது என் நோக்கம் தவறானதாகப் பிறரால் திரிக்கப்படலாம். பெண்களோடு வேலை பார்க்கும்போது ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகப் பயன்படுத்தாவிட்டால் பிரச்சனைகள் உருவாகிவிடக் கூடும். உதவி செய்யக் கூட எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கிறது! ‘உதவவேண்டும் என்ற மனப்பான்மை இருந்தால் போதும், உதவவேண்டிய அவசியமில்லை’ என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

பேசாமலிருந்தால் ‘ஆணாதிக்க அகம்பாவம் பிடித்தவன்’ என்ற பெயர் கிடைக்கும். நிறைய பேசினால் ‘பெண்ணை பார்த்ததும் புத்தி மயங்குபவன்’ என்ற பெயர் கிடைக்கும். கண்டிப்புடன் வேலை வாங்கினால் ‘வேண்டுமென்றே கஷ்டம் தருகிறான்’ என்ற கண்ணீரை காண நேரும். முடிந்தவரை உதவலாம் என்று முயன்றால் ‘எல்லா வேலைகளையும் நீங்களே செய்து தந்தால் தேவலை’ என்ற வேண்டுகோள் வரும்.

கடுமையான வார்த்தைகளை சொல்லிவிட்டால் ‘பெண்ணைப் புரிந்து கொள்ளாத கிராதகன்’ என்ற பட்டமும், அன்பான வார்த்தைகளை சொல்லிவிட்டால் ‘பெண்ணிடம் முறை தவறி நடப்பவன்’ என்ற பட்டமும் கிடைக்கும். ஆணும், பெண்ணும் சேர்ந்து வேலை பார்க்கும் இடங்களில் எப்படி பழகுவது என்பது எனக்கு இன்னமும் பிடிபடாத ரகசியமாகவே இருக்கிறது, எதிலும் அளவோடு இருக்க வேண்டும் என்று தோன்றினாலும் ஆளுக்காள் அளவு வேறுபடுவதால் எது சரியான அளவு என்பது புரிவதில்லை. சரியான அளவு என்ற ஒன்று மனித சுபாவத்தில் இருக்கிறதா என்ன?

புறம் அகத்தை பிரதிபலிக்கும் ஆடி என்பதை ஏற்றால், எந்த உறவில் சிக்கல் வந்தாலும் அது அகத்தில் உள்ள திரிபு என்பதையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். நான் ஒருவரிடம் சரியாகப் பழகவில்லை என்ற புகாருக்கு ஆளானால், ‘புகார் செய்பவர் பொய் சொல்கிறார். என்னை அவர் புரிந்து கொள்ளவில்லை. என் நல்லெண்ணத்தை ஏற்கும் திறனற்றவர்.

அகந்தையுள்ளவர். தீய சக்தி, என்னை குறை சொல்லியதற்காக தண்டனைக்கு ஆளாவார்’ என்று கூறி புகார் கூறியவரை சிறுமைப்படுத்தவே பொதுவாக மனித மனம் விழைகிறது. என் மீது எழும் எத்தகைய கடுமையான குற்றச்சாட்டுக்கும் உரிய காரணம் தெளிவாகவோ, மறைவாகவோ, வித்தாகவோ என்னிடம் இருக்கிறது என்பதை ஏற்றால் மட்டுமே சமர்ப்பணம் சிறிதேனும் முன்னகர்கிறது, சில எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய நூல்களின் முன்னுரையில், ‘என் நூலில் உயர்ந்தவை இருப்பின் அதன் பெருமை என் குருவையும், இறைவனையும் சேரும். பிழைகளுக்கு மட்டுமே நான் பொறுப்பு’ என்று எழுதுவதுண்டு. நூல்களுக்கு மட்டுமன்றி வாழ்வில் ஒவ்வொரு சிறிய, பெரிய நிகழ்ச்சிக்கும் இந்த மனப்பான்மை பொருந்தி வரக் கூடியது, எனக்கு நடக்கும் எல்லா தீமைக்கும், நன்மைக்கும் நான் மட்டுமே காரணம், பிறரில்லை என்பதே இறுதி உண்மை என்றாலும், நடைமுறையில் அடக்கம் வளரஇந்த மனப்பான்மை உதவுகிறது. நான் ஒரு நண்பரின் வீட்டிற்கு செல்கிறேன். அவருக்கு அதன்பின் நல்லது நடந்தால் என் தொடர்பால் அவருக்கு நல்லது நடந்தது என்று சொல்கிறேன். ஆனால் நான் வாழுமிடத்தில் அன்றாடம் நடக்கும் தகாத செயல்கள், என் குடும்பத்தில் நிகழும் தவறுகள் எல்லாமே என்னால்தான் நிகழ்கின்றன என்பதை ஏற்காவிட்டால் நான் ஆன்மிக வழியில் செல்பவன் என்று என்னைப் பற்றி சொல்லிக் கொள்ள முடியுமா?

ஸ்ரீ அரபிந்தோவை படித்து நடப்பதெல்லாம் எனக்குத் தேவையான, அகம் விரும்பும் அனுபவமே என்ற அறிதல் வந்தபின், விஷம் கலந்த விமர்சனங்களிலிருந்தும், அமுதம் கலந்த பாராட்டுகளிலிருந்தும் விலகி நின்று புன்னகைக்கும் பக்குவம் வந்திருக்கிறது, சமர்ப்பணம் செய்துபின் பழக ஆரம்பித்தால், மேன்மக்கள் தங்களை தாழ்த்திக் கொண்டு என்னை பிரியத்துடன் நெருங்குவதும், அர்த்தமற்றவர்கள் தங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு சச்சரவு செய்து தாமாக விலகிப் போவதும் நடக்கிறது.

உதவி செய்பவரிடமும், உதவி பெறுபவரிடமும் பரஸ்பரம் நல்லெண்ணமும், அகந்தையால் கறைபடாத அன்பும் இருந்தால் மட்டுமே உதவியால் பிரச்சனை உண்டாவதில்லை.

அப்படி இல்லையென்றால், உதவி பெறுபவர் தவறாமல் உதவியவரை தாக்கி இழிவுபடுத்துவார். அத்தாக்குதலை ஏற்கத் தயாராக இருந்தால் மட்டுமே அடுத்தவருக்கு உதவத் துணியலாம். ஆனால் நித்யாவிற்கு என்மீது நல்லெண்ணம் மட்டுமே இருந்ததால், அவளுக்கு நான் உதவியபோதெல்லாம், இருவருக்குமே நன்மைகள்தான் கிடைத்தன.

ஒரு முறை மாதக் கடைசியில் ‘சந்துரு, சில்லறை இருக்குமா? பஸ்ஸிற்காக கேட்கிறேன்’ என்றாள் நித்யா.

‘எப்போதும் சில்லறையோடு இருக்க நானென்ன நடமாடும் பலசரக்குக் கடையா? எவ்வளவுக்கு சில்லறை வேண்டும்? நூறுக்கா, ஐநூறுக்கா? எதிர்கடையில் மாற்றித் தருகிறேன்’ என்று கை நீட்டினேன்.

‘என்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லை’ என்றாள்.

அப்போதுதான் அவள் ஏன் சில்லறை கேட்டாள் என்பது புரிந்தது. பெண்கள் கூறுவதை நான் எப்போதும் தாமதமாகத்தான் புரிந்து கொள்வேன்.

என் பையில் இருந்த நூறு ரூபாயை எடுத்துத் தந்தேன்.

‘போதுமா? இப்போது என்னிடம் இதுதான் இருக்கிறது.

இன்னும் தேவை என்றால் தயங்காமல் கேள். யாரிடமாவது வாங்கித் தருகிறேன்’ என்றேன்.

‘உன்னிடம் கேட்கவோ, வாங்கவோ எனக்கென்ன தயக்கம்? இது போதும். நாளைக்குச் சம்பளம் வந்து விடுமே. வருகிறேன்’ என்று கூறிச் சென்றாள் நித்யா.

ஏதேனும் தேவை என்றால் அவள் என்னிடம் தயங்காமல் கேட்பாள். எதையும் திருப்பித் தர மாட்டாள். அப்படிச் செய்தால் என் மனம் புண்படும் என்பதை நுட்பமாக உணர்ந்திருந்தாள். திருப்பித் தராததன் மூலம் என்னை நெருக்கமானவனாக உணர வைத்துக் கௌரவப்படுத்தினாள்.

நித்யாவின் பணக்கஷ்டம் தீரவேண்டும் என்று ஆழ்ந்து விரும்பினேன். ஆனால் அவள் இருந்த சூழ்நிலையில் அவளுக்குத் திருமணம் நடக்குமென்று நான் நினைத்ததே இல்லை. அதனால் அவள் திருமண அழைப்பிதழ் தந்தபோது ‘யாருக்குக் கல்யாணம்?’ என்று கேட்டேன்.

அவள் முகம் லேசாக சிவந்தது. ‘எனக்குத்தான்! பத்திரிக்கையை வாசித்துவிட்டு கேள்விகளை கேட்கக் கூடாதா?’ என்றாள்.

அழைப்பிதழை வாசித்துவிட்டுத் திடுக்கிட்டேன்.

‘என்ன இது! விவரமாகச் சொல்’ என்றேன்.

‘கல்லூரியில் என்னோடு படித்த ஒரு பெண் மிக வசதியானவள். அவளோடு பழக எல்லோரும் பயப்படுவார்கள்’ என்றாள் நித்யா.

‘ஏன்?’ என்றேன்.

‘மிக இனிமையானவள். ஆனால் அவள் அம்மாவைப் பற்றி ஏதேதோ வதந்திகள். எல்லோரும் அவளிடமிருந்து விலகியே இருந்தார்கள். நான் மட்டும் அவளோடு விரும்பிப் பழகினேன்’ என்றாள் நித்யா.

‘உனக்கு பயமில்லையா?’ என்றேன்.

‘நான் யாருக்கு, எதற்குப் பயப்படவேண்டும்? அவளும் என்னைப் போல பெண்தானே? மேலும் எவரையும் எந்தக் காரணத்திற்காகவும் தாழ்வாக என்னால் நினைக்க முடியாது’ என்றாள் நித்யா.

‘நான்கூட அப்படித்தான். விஞ்ஞானிகளையும், படிப்பாளிகளையும்கூட நான் தாழ்வாக நினைப்பதில்லை! மிகுந்த சிரமத்தின் பேரில் அவர்களையும் சமமானவர்களாகவே நினைக்கிறேன்’ என்றேன்.

சிரித்தாள் நித்யா.

‘அவளுக்கும் என்மீது மிகவும் பிரியம். அவளுக்கு இலக்கியத்தில் ஈடுபாடு. நானோ வேலைக்குப் போவதற்காகப் படித்தேன். அதனால் நாங்கள் படிப்புப் பற்றி பேசிக் கொண்டதே இல்லை!’ என்றாள் நித்யா.

‘நீ அவளுக்குப் பெரிய உதவி செய்திருக்கிறாய்!’ என்றேன்.

‘எந்தக் கேலிக்கும் நான் கவலைப்பட மாட்டேன் தெரியுமா? படிப்பு முடிந்தபின், அவளும், நானும் சந்திக்கவே இல்லை. போன மாதம்தான் எதிர்பாராமல் ஒரு சமையல் போட்டி நிகழ்ச்சியில் அவளைச் சந்தித்தேன். நான் வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன். அவள் போட்டியாளராக வந்திருந்தாள். அவளுக்கு எந்தப் போட்டியிலும் விருப்பமில்லை. ஆனால், சமையல் நிகழ்ச்சி என்பதாலும் ஏதாவது புதிதாகக் கற்றுக் கொள்ளலாம் என்பதாலும் வந்திருந்தாள். அவள் சமையல் பிரமாதமாக இருந்தது. அவளுக்கு முதல் பரிசு கிடைத்து விட்டது. நானே ஜெயித்தது போல சந்தோஷமாக இருந்தது’ என்றாள் நித்யா.

அடுத்தவர் வெற்றியை எத்தனை பேரால் தன் வெற்றியாக உணர முடியும்? நினைப்பது வேறு. உணர்வது வேறு.

‘முதல் பரிசாக இருபதாயிரம் மதிப்புள்ள டிசைனர் சேலை கிடைத்தது. என்ன அழகு! வானவில்லில் நூலெடுத்து நெய்தது போலிருந்தது. தொட்டால் புதிதாகப் பிறந்த குழந்தையைத் தொடுவது போலிருந்தது. என் தோழியிடம் ‘உனக்கு மிகவும் பொருத்தமாக, அழகாக இருக்கும்’ என்றேன்.

அவளோ ‘இதை நீதான் உடுத்த வேண்டும். இந்தச் சேலை உனக்குத்தான்’ என்றாள். நான் திடுக்கிட்டுத் தயங்கினேன்’ என்றாள் நித்யா. ‘சந்தேகம் வரத்தானே செய்யும்? ஒரு பெண்ணால் சொத்துக்களைகூட விட்டுத்தர முடியும். சேலையையும், பாத்திரங்களையும் தந்துவிட முடியுமா?’ என்றேன்.

‘இதெல்லாம் பெண்களை மட்டம் தட்டுவதற்காக ஆண்கள் சொல்வது. எனக்கு அவள்மீது எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால், அதை வாங்கிக் கொள்ள என் அகந்தை தயங்கியது’ என்றாள் நித்யா.

‘அதை ஏன் அகந்தை என்கிறாய்? சுயமரியாதை என்று சொல்லலாமே?’ என்றேன்.

‘எங்கு, யாரிடம் சுயமரியாதையும், கௌரவமும் பார்க்க வேண்டும் என்ற பொதுபுத்தி, அறிவு வேண்டாமா? என் தயக்கம் அகந்தை என்று உடனே புரிந்து விட்டது. சேலையை வாங்கிக் கொண்டேன். அவளுக்குத்தான் எவ்வளவு சந்தோஷம்! அவளுக்கு வாயால் நன்றி என்று சொல்லவில்லை. ஆனால் என் நெஞ்சம் முழுவதும் அது மட்டும்தான் இருந்தது. வெளியே சொல்லவில்லை என்றாலும் எனக்கும் விதவிதமாக உடுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது. கடைகளுக்கு போகும்போது அங்கிருக்கும் பொம்மையாக மாறக் கூடாதா என்று தோன்றும். தினமும் விதவிதமான புதிய சேலைகளை கட்டிக் கொள்ள முடியுமே! நான் இதுவரை உடுத்தியது எல்லாமே என் அம்மா கட்டிய பழைய சேலைகள்தான்.

எனக்கென்று சொந்தமாக வந்த புதிய சேலை இதுதான். அதை ஒரு சேலையாகப் பார்க்கவில்லை. பாஞ்சாலிக்கு கண்ணன் தந்த சேலை வெள்ளமாகத்தான் பார்த்தேன். என் கண்ணன் தோழி உருவத்தில் வந்தான்’ என்றாள் நித்யா. அவள் குரல் நெகிழ்ந்திருந்தது.

‘அப்புறம்?’ என்றேன்.

‘வீட்டிற்குப் போனேன். அம்மாதான் சேலையை முதலில் நன்றாக விரித்துப் பார்த்தார். ‘அழகாக இருக்கிறது’ என்றார். அடுத்த நாள் நானும், அப்பாவும், அம்மாவும் கோவிலுக்குக் கிளம்பினோம். சந்தோஷமாக புதிய சேலையை உடுத்திக் கொண்டேன். அம்மா ‘இதெல்லாம் நமக்கு வேண்டாம், திருப்பிக் கொடுத்து விடு’ என்றார். ‘பேசாமல் இரு’ என்று அப்பா அதட்டியபின் அம்மா எதுவும் சொல்லவில்லை’ என்றாள் நித்யா.

‘கபாலீஸ்வரர் கோவிலா?’ என்றேன்.

‘நடக்கும் தூரத்தில் அதுதானே இருக்கிறது? கற்பகாம்பாளிடம் என் தோழி நன்றாக இருக்க வேண்டும் என்று மட்டும்தான் அன்று முழுவதும் வேண்டிக் கொண்டேன். தரிசனம் முடிந்து சுற்று மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது ஒரு பெண் என்னருகே வந்து உட்கார்ந்து கொண்டார். என் சேலையை சற்று நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, ‘இந்தச் சேலை நன்றாக இருக்கிறது. எங்கு வாங்கினாய்? என்றார், உடனே என் அம்மா ஏதோ ஒரு கடையின் பெயரைச் சொல்லி ‘அங்கே வாங்கிய பல பட்டு சேலைகளில் இதுவும் ஒன்று’ என்றார். ‘சரி’ என்று கூறி அப்பெண் போய்விட்டார். அம்மாவிற்குத் தெரியாமல் அவர் பின்னால் போனேன். என் தோழி போட்டியில் ஜெயித்ததையும், அவள் சேலையை எனக்குத் தந்ததையும் சொன்னேன். அந்தப் பெண் என்னை அணைத்துக் கொண்டார். ‘இந்தச் சேலையை சமையல் போட்டிக்காக நாங்கள்தான் விசேஷமாக நெய்து உன் தோழிக்குப் பரிசாகத் தந்தோம். நானும் நேற்று போட்டி மண்டபத்தில் இருந்தேன்’ என்றார். என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் விசாரித்தார். ‘அட, நீங்களும் நம் ஆட்கள்தான்’ என்று சந்தோஷப்பட்டவர் என் விலாசத்தை வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டார்’ என்றாள் நித்யா.

‘அப்புறம்?’ என்றேன்.

‘இரண்டு வாரங்கள் கழித்து அவர் வீட்டு மனிதர்கள் அப்பாவைச் சந்தித்தார்கள். என்னைப் பெண் கேட்டார்கள். அவர்களது கடை பெயரை கேட்டதும் அப்பா அதிர்ந்துவிட்டார். ‘சென்னையில் எவ்வளவு பெரிய பட்டு சேலைக் கடை! எங்களுக்கு இது பேரதிர்ஷ்டம். உங்களுக்குச் சரி வருமா?’ என்று பல தடவை கேட்டுவிட்டார். நான் கோவிலில் சந்தித்த பெண்தான் மாப்பிள்ளையின் அம்மா. அவர் ‘எனக்கு பெண்தான் முக்கியம்’ என்று கூறிவிட்டார்’ என்றாள் நித்யா. ‘மாப்பிள்ளையை நேரில் பார்த்தீர்களா?’ என்று தயக்கத்துடன் கேட்டேன்.

அம்மாவிற்கு விஷயம் தெரிந்ததும் ‘இதில் ஏதோ சூதுவாது இருக்கிறது. என் பெண்ணின் வாழ்க்கையைக் கெடுக்க சம்மதிக்க மாட்டேன். மாப்பிள்ளைக்கு நோயோ, அல்லது வேறு என்னவோ பிரச்சனை இருக்கிறது’ என்று அழுதார். அப்பா சத்தம் போட்டபின் அடங்கினார். அதன்பின் அவர்கள் குடும்பத்தினர் முறைப்படி என்னைப் பெண் பார்க்க வந்தார்கள். அப்போது என்னோடு மாப்பிள்ளை கால்மணி நேரம் தனியாகப் பேசினார். எத்தனை நல்ல மனிதர்! மேல்நாட்டில் மேற்படிப்பு படித்தவர். அடக்கமானவர்.’ என்றாள் நித்யா.

‘காதல் வந்துவிட்டதாக்கும்?’ என்றேன்.

சிரித்தாள் நித்யா. ‘மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கல்யாண நாள் நிச்சயம் செய்து விட்டுப் போன மூன்றாம் நாள் அம்மாவிற்கு நல்ல காய்ச்சல். ‘மாப்பிள்ளை வீட்டார் வந்து போனதும் உடல் நலம் கெட்டுவிட்டது. அவர்கள் சரியில்லை. அந்த சம்பந்தமே வேண்டாம்’ என்றார் அம்மா. ‘அவர்கள் உனக்கு ஏற்றவர்கள் இல்லை. ஆனால் நித்யாவிற்கு ஏற்றவர்கள். அதனால் நீ கல்யாண காரியங்களில் கலந்து கொள்ளாதே’ என்றார் அப்பா. ‘என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்!’ என்று அழுதார் அம்மா. ‘பெண் நல்ல கணவனோடு சேரவும், வாழவும் உதவுகிறவள்தான் உத்தமத் தாய். நல்ல கணவனோடு வாழவிடாமல் பெண்ணைப் பிரித்து வைத்திருக்கப் பார்ப்பவள் பொறாமைப் பேய்!’ என்றார் அப்பா. எனக்குக் கஷ்டமாக இருந்தது’ என்றாள் நித்யா.

‘பெண்ணாக இருந்தாலும், அம்மாவாக இருந்தாலும் இது போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்றேன்.

‘எப்படி இருந்தாலும் அவர் என் அம்மா அல்லவா? அன்று அப்பா அப்படி பேசியபின், அம்மா மாறிவிட்டார். தப்பாக எதுவும் பேசாமல் காரியங்களில் கலந்து கொள்கிறார்’ என்றாள் நித்யா.

‘உன் தோழிக்கு அழைப்பு தந்து விட்டாயா?’ என்று கேட்டேன்.

‘அவள் வெளியூர் சென்றிருப்பதாக அவள் அம்மா சொன்னார். ஆனால் விலாசம் தரவில்லை. சரியாக விவரம் எதுவும் சொல்லவில்லை. என்ன செய்வது? மனதிற்குள் அவளுக்கு முதல் பத்திரிக்கை தந்து விட்டேன். உனக்கு இரண்டாவது பத்திரிக்கை’ என்றாள் நித்யா.

குறைந்த சம்பளத்திற்கு நிறைய வேலை செய்த நித்யா வேலையை விடப் போகிறாள் என்பதில் ஆடிட்டருக்கு அதிர்ச்சி. ‘என்னம்மா இது! உன்னைப் போன்ற நல்ல ஆளை எங்கே போய் தேடுவது! உன் கணவரிடம் பேசிப் பார். சம்பளத்தை கூட்டித் தருகிறேன்’ என்றார்.

‘சார், மாப்பிள்ளையின் நிறுவனத்தில் நூறு பேருக்கு மேல் வேலை பார்க்கிறார்கள். இனி நித்யா நம்மிடம் வேலை பார்க்க வாய்ப்பில்லை’ என்றேன்.

‘அவள் சம்மதித்தாலும் நீ கெடுத்து விடுவாய் போலிருக்கிறது. நித்யா! நன்றாக இரு. நீ சிரமப்பட்ட காலத்தில் இந்த அலுவலகம்தான் ஆதரவு தந்தது. மறந்து விடாதே. உன் கணவரிடம் பேசி, உங்கள் நிறுவனத்தின் வருமானவரி கணக்கை இங்கே கொண்டுவர ஏற்பாடு செய். அது உன் கடமை. நீ செலுத்த வேண்டிய நன்றிக் கடன்’ என்றார் ஆடிட்டர்.

ஆடிட்டர் அப்பால் சென்றபின், ‘சந்துரு, நீ எப்போது உன் சொந்த அலுவலகத்தை ஆரம்பிக்கப் போகிறாய்?’ என்று என்னிடம் நித்யா கேட்டாள். நித்யா விடை பெற்று சென்றபின்தான் அவள் கேள்வியின் பொருள் வழக்கம் போல தாமதமாக எனக்குப் புரிந்தது, கூடவே அவள் வேதாளத்தின் கேள்விக்கும் பதில் தந்திருக்கிறாள் என்றும் தோன்றியது. அன்றாட விஷயங்களில் பொதுபுத்தியோடு நடந்து கொள்ள வேண்டும். நீச்சல் தெரியாமல் வெள்ளத்தில் இறங்குவதும், துணை இல்லாமல் காட்டு வழியே போவதும் பொதுபுத்திக்குப் புறம்பானவை.

இறைவனே அனைத்துமாக மாறினான் என்று நம்பினால், அவனை எதிலும் அறிய முடியும். அனைத்துமாக இருந்து, அதற்கு அப்பாற்பட்டும் இருப்பவனை, ‘அவன் மறைமுகமாகத்தான் வருவான்’ என்றோ அல்லது ’நேரில் வந்துதான் ஆக வேண்டும்’ என்றோ யாரால் உத்தரவிட முடியும்? நேரில் வருவதோ, மறைமுகமாக வருவதோ அல்லது வராமல் இருப்பதோ சர்வாதிகாரியான அவன் விருப்பமல்லவா? அவன் விருப்பம் எதுவோ அதைத் தன் விருப்பமாக ஏற்பதுதானே மனிதன் செய்ய வேண்டியது? அகந்தையை விட்டு தானே வந்ததை, பிரம்மம் தந்ததை வரவேற்றவளுக்கு, தோழி தேடி வந்த தெய்வம்தான். கடை பொம்மையாக நிற்க நினைத்தவள், கடை அதிபதியாக உட்காருவது அவள் தனக்குத்தானே உருவாக்கிக் கொண்ட அதிர்ஷ்டம்தான். பள்ளியில் தமிழாசிரியர் பொற்குன்றன் சொல்லித் தந்த ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்ற பாடம் இதுவரை பிழையாகிப் போனதே இல்லை.

அகந்தையில்லாமல் செயல்படுவது நீண்டகால யோக சாதனையின் சாரம். யோகத்தைப் பற்றி அறியாத நித்யா சாரத்தைத் தெரிந்து வைத்திருக்கிறாள்.

அன்று மாலை பூரணியிடம் நித்யா பற்றி சொன்னேன். ‘நேற்று நித்யா விடுப்பு எடுத்திருந்தாள். அதனால்தான் அவளை அறிமுகம் செய்து வைக்க முடியவில்லை’ என்றேன். புன்னகையோடு கேட்டுக் கொண்டாள் பூரணி. பதில் எதுவும் சொல்லவில்லை.

(தொடரும்)

***********



book | by Dr. Radut