Skip to Content

12. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

P. நடராஜன்

அன்பர், விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருபவர். அவரது இல்லம் எளிமையானதாக இருந்தாலும், அன்னை முறைகளான சுத்தம் மற்றும் ஒழுங்கிற்கு (orderliness) எடுத்துக்காட்டான ஒன்று. வீட்டில் பொருள்களே இல்லையோ என்று எண்ணும்படியாக அவர் வீட்டில் சாமான்கள் ஒழுங்குற அமைந்திருக்கும் பாங்கு மனத்தைக் கவரும். வீட்டிற்கு வெளிப்புறம், வீட்டைச் சுற்றியுள்ள இடம் யாவும் துப்புரவாக இருக்கும். வீட்டின் உட்புறம், டிவி, வாஷிங் மெஷின் போன்றவை வைக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களும் சுத்தமாகவும், இருக்க வேண்டிய இடங்களில் கச்சிதமாகவும் இருக்கும். தியான அறை மிகவும் நேர்த்தியாக அமைந்திருக்கும். சுருங்கச் சொன்னால் வீட்டிற்கு வருபவர் கண்ணைக் கவரும் வகையில், நம் வீட்டையும் இப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என ஆர்வம் எழும்படியாக அன்பருடைய வீடு இருக்கும்.

கடந்த ஜுன் மாத இதழில் வெளிவந்த காணாமற்போன பொருள் அன்னைக்குக் காணிக்கை வைத்தவுடன் கிடைத்த அனுபவத்தை அன்பர் படித்துக் கொண்டிருந்தார். அதே நேரம் மனைவி, கொசு அடிக்கும் பேட்டைக் காணவில்லை என கடுகடுத்தார். சாதாரண பேட்டைவிட விலை அதிகமான பேட் அது. வீட்டில் இருக்கும் நேரமே குறைவு; புத்தகத்தைக் கூட படிக்க முடியவில்லையே என எண்ணியபடி, இந்தப் பக்கத்தை மட்டும் படித்து முடித்துவிட்டு தேடுவோம் என படிப்பதைத் தொடர்ந்தார்.

அன்னையிடம் கூறியவுடன் அருள் காணாமல் @பான பொருளின் ஜீவனைத் தீண்டும் எனப் படித்தவுடன், தனது மகளிடம் மட்டும் இது பற்றிக் கூறி, இருவரும் தியான அறையில் காணிக்கை வைத்துப் பிரார்த்தித்துக் கொண்டனர்.

பின் வெளியே வந்து டிவி பார்க்க எண்ணி டிவி சுவிட்ச் போட குனிந்த போது, டிவிக்குப் பின்னால் உள்ள குறுகிய சுவர் அலமாரியில், கீழ்ப்படியில் தேடும் பேட் இருப்பதைக் கண்டார். ஆனந்தப்பட்டார். சூழல் மாறியது. தேடும் பொருள் சிறியதோ பெரியதோ, அன்னை வழியில் அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் பொழுது இன்னதென்று சொல்லத் தெரியாத ஆனந்தத்தை அளிக்கிறது என உணர்ந்தார். அவரது பெண், அன்னை ஒரு சூட்சும ஸ்தாபனம் என்று படித்ததை நினைவு கூர்ந்தார்.

*******

மற்றொரு அன்னை அன்பர், அன்னையின் தரிசனம் என்ற நூலை ஆழ்ந்து வாசித்தவர். அனைத்திற்கும் பதில் இந்தப் புத்தகத்தில் உள்ளது எனக் கூறுவார். ஆதார நூல் என்பார். ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகப் படிக்க வேண்டும் என வலியுறுத்திக் கூறுவார்.

மரவாடி மற்றும் மரம் அறுக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார். ஒரு நாள் மதிய உணவிற்குப் பிறகு சற்று ஓய்வெடுத்து, அலுவலகம் சென்றார். பணியாளரைத் தேநீர் எடுத்துவரச் சொன்னார். வாசலில் ஒரு ஜீப் நின்று கொண்டிருந்தது. அறையில் நுழைந்தால் நான்கு பேர்கள் அமர்ந்திருந்தனர். நாங்கள் squad என்றனர். வந்தவர்களில் ஒருவர் அடுத்தடுத்து கேள்விகள் கேட்டார். அன்பர் வந்தவர்களிடம் எதுவும் பேசவில்லை. அன்னையை நினைவு கூர்ந்தார். எந்த விஷயத்தில் நாம் செம்மையாக இல்லை என்ற யோசனையில் மௌனத்தைக் கடைப்பிடித்தார். பணியாளர் கொணர்ந்த தேநீரை வந்தவர்களுக்குக் கொடுக்கும்படி சைகை காட்டினார்.

அன்னை தரிசனத்தில், வரித்துறை அதிகாரிகள் வந்திருப்பதாக சொன்ன அன்பருக்குத் திரு. கர்மயோகி அவர்கள் கூறியதாக வாசித்த வரிகள் அவரது நினைவிற்கு வந்தன.

விளைவுகளைச் சந்திக்கும்போது பயமோ, பதற்றமோ கூடாது. பிரச்சனைகளை நேசக்கரம் நீட்டி வரவேற்கும் போது, அவை நமக்குச் சாதகமாக அமைந்துவிடும். தம் பக்தனுக்கு இதுபோன்ற ஒரு சூழ்நிலையைத் தந்து, அன்னை செம்மைப்படுத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இதை நினைவு கூர்ந்த அடுத்த சிறிது நேரத்தில் ஐந்தாவதாக ஒருவர் உள்ளே நுழைந்து, மற்றவர்களிடம், ‘சார் நாம் தவறான இடத்திற்கு வந்துள்ளோம். நாம் போக வேண்டிய இடம் வேறு’ என்று சொல்லி அனைவரையும் அழைத்துச் சென்றார்.

அன்பர் நிம்மதியானார். அன்னைக்கு மானசீகமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

*********



book | by Dr. Radut