Skip to Content

11. இம்சிக்கும் வம்சி

இம்சிக்கும் வம்சி

சமர்ப்பணன்

சிந்தனைகளும், கருத்துமொழிகளும் – 407

I am not a Bhakta, for I have not renounced the world for God.
How can I renounce what He took from me by force and gave back
to me against my will? These things are too hard for me.

- Sri Aurobindo

நான் பக்தனல்ல
ஏனென்றால் நான் இறைவனுக்காக உலகைத் துறக்கவில்லை
பலவந்தமாக என்னிடமிருந்து பறித்த உலகை இறைவன் என் விருப்புறுதிக்கு எதிராக என்னிடமே திருப்பித் தந்தான்.
அதை நானெப்படித் துறக்க முடியும்?
இவையெல்லாம் எனக்குக் கடினமானவையாக இருக்கின்றன.

பக்தி உணர்வெழுச்சியால் ஆனது. எதன் மீது பக்தி செலுத்துகிறோமோ அதைத் தவிர பிற அனைத்தையும் மறக்க வைப்பது. பக்தியில் மூழ்கியவர்கள் உணவையும், உடையையும், உறவுகளையும், உடைமைகளையும் பொருட்படுத்துவதில்லை. தன்னிலை இழந்தவர்களாக, பித்து பிடித்தவர்களாக மாறி விடுகிறார்கள். இறைவனே அனைத்துக்கும் உரியவன் என்ற உணர்வில் வாழ்கிறார்கள். இது இறைவனைத் தவிர வேறெதிலும் பற்றற்ற, உலகைத் துறந்த பித்து நிலை.

ஸ்ரீ அரபிந்தோ தன் யோகத்தைப் பூரண யோகம் என்றழைத்தார். பூரணயோகம் வாழ்வில் எல்லாவற்றையும் ஏற்கும் ஒன்று. எதையும் துறப்பதோ, விலக்குவதோ பூரணயோகத்தில் இல்லை. உலகத்தைத் துறந்த பக்தன் பூரணயோகி ஆக முடியாது. எனவே அவன் பூரண யோகத்திற்கு விலக்கானவன், பொருத்தமற்றவன்.

எதையும் விலக்காமல், துறக்காமல் வாழ்வில் உள்ள அனைத்தையும் ஏற்றுச் செல்லும் நீண்ட பாதை பூரண யோகப் பாதை. எதையும் விலக்காத பூரண யோகம் பக்தி மார்க்கத்தை மட்டும் விலக்குவதை எப்படி ஏற்க முடியும்? பூரண யோகி பக்தனாகவும் இருக்கத்தானே வேண்டும்?

எதிரான இரண்டு கருத்துகளுக்கு முன் திகைத்து நிற்கிறோம். பக்தர் என்றால் இறைவனுக்காக உலகைத் துறக்க வேண்டும். துறக்காதவன் பக்தனல்ல. பூரண யோகியோ பக்தனாகவும் இருக்க வேண்டும், எதையும் துறக்கவும் கூடாது. பூரண யோகி ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் பாதை பலவாகப் பிரிந்து எது சரியான வழி என்ற திகைப்பை ஏற்படுத்தும்.

சமர்ப்பணத்தைப் பற்றி அறிந்த பின் ‘என் உடைமைகளை இறைவா உன்னிடம் சமர்ப்பணம் செய்து விட்டேன்’ என்று மேற்பரப்பு மனத்தில் நின்று கூறுகிறோம். ஆனால் நம் உடைமைகளின் மீது நம் உரிமையை, நம் பிடியை, நம் ஆதிக்கத்தை, அகத்தில் ஒருபோதும் நழுவ விடுவதேயில்லை. அவற்றின் மீது இறைவனின் ஒளி படரவிடாமல் நம் கருநிழல் தடுக்கிறது. நம் கர்மம் கரையாமல் அதற்குரிய எதிர்மறையான பலன்களை அனுபவித்துத் துன்புறுகிறோம்.

எனவே, பூரண யோகிக்கு உதவுவதற்காக அவன் உரிமை கொண்டாடும் உலகை இறைவன் பறிக்கிறான். இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்ற கையறு நிலையைப் பூரண யோகி அடைகிறான். அந்த நிலையில் அவனிடம் அனைத்தையும் துறந்துவிடும் பக்குவம் உண்டாகிறது. பற்றிக் கொள்ள எதுவுமில்லாததால் அவனுடைய அகந்தை செயலற்று விடுகிறது. ‘இனி இறைவனைத் தவிர எதுவும் தேவையில்லை’ என்ற மனநிலையில் இருக்கும் மனிதனுக்குத் தான் பறித்துக் கொண்டதை இறைவன் திருப்பித் தருகிறான்.

இப்போது பெற்றது இறைவனின் பொருள். அதன் பாதுகாவலனாக இருக்க மட்டுமே பூரண யோகிக்கு உரிமையுண்டு. இறைவனுக்கு உரிய உலகைத் தனக்கு உரிமை இல்லாத ஒன்றைப் பூரண யோகி எப்படித் துறக்க முடியும்?

மாறிய நிலையில், பூரண யோகி துறப்பதற்கென்று எதுவுமற்ற, பக்தனாகவும் இருக்கிறான், பக்தி மார்க்கத்தை தழுவும் தகுதி பெற்ற சாதகனாகவும் இருக்கிறான். உலகத்தை விட்டு விலகி நிற்காத பூரண யோகியாகவும் இருக்கிறான்.

‘நான் பக்தனல்ல. ஏனென்றால் நான் இறைவனுக்காக உலகைத் துறக்கவில்லை’ என்பது மரபுப்பார்வை பூரணயோகத்தின் மீது வைக்கும் விமர்சனத்தைக் குறிக்கிறது.

‘பலவந்தமாக என்னிடமிருந்து பறித்த உலகை இறைவன் என் விருப்புறுதிக்கு எதிராக என்னிடமே திருப்பித் தந்தான், அதை நானெப்படித் துறக்க முடியும்?’ என்பதன் மூலம் பூரணயோகம் ஏன் எதையும் துறக்கத் தேவையில்லை என்று கூறுகிறது

‘இவையெல்லாம் எனக்குக் கடினமானவையாக இருக்கின்றன’ என்பது பூரணயோகத்தின் கடுமையைக் குறிக்கிறது.

‘ஈஷா வஸ்யம் இதம் சர்வம்’ என்ற ஈஷா உபநிஷத மந்திரம் ‘அடுத்தவருக்கு உரிய பொருள் மீது ஆசைப்படாதிருப்பாயாக’ என்று கூறுகிறது. அடுத்தவருக்கு உரிய பொருள் என்பது இறைவனுக்கு உரிய பொருளைக் குறிக்கிறது. அதன் மீதுள்ள பற்றை விட்டுவிட வேண்டும். ஆனால் இறைவனின் பொருளை பொறுப்புடன் பேணிப் பாதுகாக்கும் கடமை யோகிக்கு உண்டு. ‘மதர்’ என்ற சிறு நூலில் ‘பணத்தின் மீது பற்றின்றி, அதை இறைவனுக்குரியது என்ற புரிதலோடு கவனமாகக் கையாள வேண்டும்’ என்று ஸ்ரீ அரபிந்தோ கூறுகிறார். நம்மிடம் உள்ள பொருட்கள், காலம், இடம் அனைத்தும் இறைவனுக்குரியவையே. எனவே அவற்றைத் துறக்காமல், வீணாக்காமல் கவனமாகப் பராமரிப்பது நம் கடமை. நம் மனித உரிமையை நிலைநிறுத்த முயன்றால் இறைவன் அப்பொருளை நம்மிடமிருந்து பறிப்பான். அறிய வேண்டியதை அறிந்தால் அப்பொருள் இறைவனின் பொருளாக நம்மிடம் திரும்ப வரும். பக்தனிடமிருந்து காணிக்கையைத் திருடுவதும், பறிப்பதும் இறைவனுக்குப் பிடித்தமான விளையாட்டு.

பக்தி என்றதும் நினைவிற்கு வருபவள் ராதாராணி. கண்ணனைவிட வயதில் மூத்தவள். திருமணமானவள். தாய், தந்தை, மாமனார், மாமியார் உட்பட பல உறவுகள் கொண்டவள். கோசெல்வம் பெற்றவள். அனைவராலும் விரும்பப்பட்டவள். அனைவருக்கும் நல்லவளாக இருப்பதில் பேருவகை கொண்டவள். கண்ணன் மீது கொண்ட பிரேமையால் பித்தியானாள். எத்தனை நெருங்கியும், இத்தனை விலகி இருக்கிறோமே என்று ஒவ்வொரு கணமும் வேதனையுற்றாள். கண்ணன் தன் செயல்களால் ராதையை அனைத்துக் கடமைகளையும், உறவுகளையும், உறவையும் துறந்து, மறந்து, தன் பின்னே வர வைத்தான்.

இனி இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலைக்கு ராதை வந்தாள். அப்போது மாமன் கம்சனைக் காண மதுராவிற்குப் புறப்பட்டான் கண்ணன். கோகுலத்திற்கும், பிருந்தாவனத்திற்கும் என்று திரும்புவான் என்பது எவருக்கும் தெரியாது. திரும்பி வராதிருக்கவும் வாய்ப்புண்டு. புறப்படுவதற்கு முதல் நாளிரவு, தன் உலகையும் - தன் வளர்ப்புத் தாய், தந்தையரான யசோதையையும், நந்தரையும் - பசுக்களையும் ராதையிடம் ஒப்படைத்தான் கண்ணன். ‘இனி நீயே இவற்றிற்குப் பொறுப்பு’ என்றான். தன்னைப் பார்த்துக் கொள்ளும் திறனை இழந்து பித்தியாகிவிட்ட ராதை, எப்படி இந்தப் புதிய உலகத்தை, புதிய மனிதர்களை, புதிய சொத்துக்களை பார்த்துக் கொள்ள முடியும் என்று பிருந்தாவனம் திகைத்தது.

‘நான் கண்ணன் கையில் மாடு மேய்க்கத் தவழும் வளைதடி. அவன் இதழ்களோடு இடைவிடாது உறவாடும் குழல். மேய்ப்பவன் அவன். இசைப்பவன் அவன்’ என்றாள் ராதை. ‘ஆம்’ என்ற கண்ணன் ‘இனி நான் பிருந்தாவனம் மீண்டபின்தான் குழலிசைப்பேன்’ என்று கூறி, வளைதடியையும், வம்சியையும் ராதையிடம் தந்து விடைபெற்றான்.

தன்னுலகைப் பொருட்டாக மதிக்காமல் துறந்த ராதை, கண்ணன் தந்த உலகை அவனை விடச் சிறப்பாகப் பார்த்துக் கொண்டாள். முப்பது வருடங்கள் கழித்து அவன் திரும்பி வரும்வரை தன் பொறுப்புகளைக், கடமைகளைக் கண்ணனை நினைத்தபடி செம்மையாகச் செய்து வந்தாள். அம்முப்பது வருடங்களில் ஒருமுறை கூட அவனைச் சந்திக்கவில்லை. ஆனால். அவன் எப்போதும் அவளோடுதான் இருந்தான். ஒன்றாக இருப்பதாகவே ராதை உணர்ந்தாள்.

பக்தன் வேலையை நம்பும்போது அதை இழக்கிறான். எதை நம்பினோம் என்பதை மனிதன் உணரும்போது உயர்ந்த நிலையில் வேலையோ, வணிகமோ அமைகிறது. பக்தருடைய வணிகக் கல்வியின் மீது, அறிவின் மீது நம்பிக்கை இருந்தபோது, கோடி ரூபாய் முதலீடு செய்த தொழில் முற்றிலுமாக அழிந்தது. எதை நம்புகிறார் என்பதை உணர்ந்தபோது, அழியாத் தொழிலும், சமர்ப்பண அறிவும் அவருக்குத் தரப்பட்டன. அவர் இழந்தது சிறியது, பெற்றதோ பெரியது.

இருளைப் பறித்து ஒளியைத் தந்து இம்சிப்பவன் இறைவன்.

***********

ஜீவிய மணி

18, 19-ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர் அனைவரும் இந்தியாவிற்கு வர முனைந்ததின் காரணம் இங்கிருந்த பெரும் செல்வம். செல்வம், அரசியல் நுணுக்கம், வணிகம், கல்வி, சமூகப் பண்பில் அன்று இந்தியா தலைசிறந்து விளங்கியதாக பகவான் எழுதுகிறார். சரித்திரம் கூறுகிறது. அதன்பின் நாடு அடிமைப்பட்டு வறுமையை அடைந்தது. இன்று இந்தியர் முனைந்தால், நம் மூலத்தின் திறனை அறிந்து முனைந்தால், ஏற்கனவே பெற்றதை நினைந்து மீண்டும் அதைப் பெற முனைந்தால் எதிர்காலம் ஏற்றமிக்கதாகும்.

********



book | by Dr. Radut