Skip to Content

07. வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

10. வெளித்தோற்றத்தைக் கருதாமல் உள்ளுறை சாரத்தைக் கருத வேண்டும். போலியான தோற்றத்தைக் கண்டு ஏமாறக் கூடாது. தோற்றம் சரியில்லை என்றாலும் உள்ளுறை விஷயம் உண்மையாக இருந்தால் நாம் அதை ஆதரிக்கத் தயங்கக் கூடாது.

விக்காம் பெற்றது வெளித் தோற்றம். டார்சிக்குரியது உள்ளுறை சாரமான விஷயம்.

  • கோபமாகப் பேசும் நண்பன் கோபப்படுகிறான் என அறிவது வெளித் தோற்றம். இந்த நேரம் நண்பன் அதிக தீவிர நட்பால் நெருங்கி வர விரும்பி அதற்குரிய பண்பில்லாமல் தீவிரத்தை நெருக்கமான இதமாகத் தெரிவிக்க முடியாமல் கோபமாக வெளிப்படுத்துகிறான் என அறியும் விவேகம் - (a more deliberate View P.2, The Life Divine) - பரந்த நோக்கம், நிதானம், பொறுமை, இதம், இங்கிதம், பதம், பக்குவம், பவித்திரம் உள்ளவரைக் காண்பதரிது. அரிதானாலும் காணலாம். காணும் பக்குவம் நமக்கு வந்தவுடன் கண்ணில் படும்.
    கண்ணில் படாதது அது இல்லாததாலில்லை, காணும் பக்குவம் இனியும் வராததால் என அறிகிறோம்.
  • தோற்றம் பொதுவாகப் பணிவாக அமையும். பணிவான மௌனத்தை மேலேயுள்ளவர் பக்குவமான நடத்தையென எடுத்துக் கொள்வர். முதலாளி பணத்தில் குறியில்லாதவர் எனக் கண்டு அவரிடம் அளவு கடந்து பணிந்து அவருக்கு ருசியான விஷயங்களில் பங்கு கொண்டு, இதமாகப் பழகிய கணக்குப்பிள்ளை ஊரறிய 10 ஆண்டுகள் கொள்ளையடித்தான். முதலாளி இல்லாத நேரம் வண்டி வைத்து மகசூலை எடுத்துப் போனான்.
    வெளித் தோற்றம் - இதம் இங்கிதம்.
    உள்ளுறை சாரம் - கொள்ளையடிப்பது.
  • செட்டி நாட்டு ராஜா 200 ஏக்கரில் 64 அறைகள் கொண்ட அரண்மனையை 1930-இல் கட்டினார். அவரைப்போல் இரு மடங்கு சொத்துள்ள மற்றொரு செட்டியார் ஒரு சிறுவீட்டில் குடியிருந்து ஒரு பாங்கையும் இன்ஷுரன்ஸ் கம்பெனியையும் ஸ்தாபித்தார். இவர் பிள்ளைகள் பெரும் தொழிலதிபர்களானார்கள்.
    ராஜாவின் பிள்ளைகள் ‘நாங்கள் எதையும் சம்பாதிக்கவில்லை. தகப்பனார் சம்பாதித்ததைக் காப்பாற்றி வருகிறோம்’ என்றனர்.
  • ‘மூர்த்தி பெரியதா, கீர்த்தி பெரியதா’ என்பது சொல். ‘செட்டியார் முடுக்கா, சரக்கு முடுக்கா’ என்பது மற்றொரு வாக்கு. ‘சிறுகக் கட்டிப் பெருக வாழ்’ எனப் பழமொழி உண்டு.
  • சிவந்த அழகுள்ள பெண் சிடுமூஞ்சி. நிறமில்லாமல் அழகுமில்லாத பெண் அமிர்தமான குணம் படைத்தவள். அழகியை உடனே மணந்து அவலப்படுவது உலகம். அமிர்தமான குணம் கல்யாண மார்க்கெட்டில் இரண்டாம் தாரமாகப் போகும். ஹோட்டலில் பழக்கமான சர்வரிடம் பாதாம் அல்வா கொடு என்றால் அவன் சுடச்சுட கோதுமை அல்வா கொண்டு வந்தான். நான் ஸ்டாலில் பாதாம் அல்வாவைப் பார்த்துத்தானே கேட்டேன் என்ற வாடிக்கைக்காரரை பிரியமாகப் பார்த்து, இனிமையாகச் சிரித்து அது போன வார சரக்கு. இது இப்பொழுது தயாரானது என்றான்.

(தொடரும்)

***********

ஜீவிய மணி

அன்னை மயமான வாழ்வு அன்பு மயமான வாழ்வு. அற்புதம் நிறைந்த அகவாழ்வு. அதிசயம் தன் ஆச்சர்யத்தை இழந்த மனித வாழ்வு. மனிதனை மற்றவர் மகோன்னதப் பிறவியாகப் போற்றும் மக்கள் மனநிலையைக் காணும் நேரம் மனித வாழ்வு அன்னை வாழ்வாகிறது.

********



book | by Dr. Radut