Skip to Content

10. அன்னை இலக்கியம் - காலன் கரைந்தான்

அன்னை இலக்கியம்

காலன் கரைந்தான்

இல. சுந்தரி

திருச்சியில் பிரபல ஹோட்டல் முதலாளி முத்துஸ்வாமி, சென்னையிலும் தன் தொழிலை விரிவுபடுத்த எண்ணி, நல்ல இடத்தில் பெரிய கட்டடம் ஒன்றை விலைக்கு வாங்க எண்ணியிருந்தார். சென்னையில் உள்ள இவரின் நம்பகமான நண்பர் பாரி, நல்ல இடம் ஒன்று, நாணயமானவர் விற்க இருப்பதை அறிந்து இவருக்குத் தெரிவித்தார். இவரும் இடத்தைப் பற்றி நன்கு விசாரித்துவிட்டு நேரில் பார்வையிட்டு மன நிறைவாக இருந்தால் தமக்கு உடனே தெரிவிக்கச் சொன்னார்.

இடத்தை விற்பவர் தமக்கு நன்கு தெரிந்தவர் என்றும் இடத்தின் பேரில் வில்லங்கம் ஏதும் இல்லை என்பதை நன்கு விசாரித்து அறிந்து விட்டதாகவும் உடனே பத்து இலட்சம் முன்பணம் கொடுத்து இடத்தைப் பிடிப்பது நல்லது என்றும் தெரிவித்திருந்தார். சென்னையில் ஜனசங்கமமான இடத்தில் இடம் பிடிப்பது கடினம் என்று இவர் நன்கு அறிந்திருந்ததால் தாம் பத்து இலட்சம் முன்பணத்துடன் நேரில் வருவதாகவும் இடத்தைப் பார்த்துவிட்டு முன்பணம் கொடுத்து பிறகு பத்திரப்பதிவிற்கு ஏற்பாடு செய்யலாம் என்றும் பாரிக்குத் தெரிவித்துவிட்டு மறுநாள் அப்பெரும் தொகையுடன் நம்பகமான டிரைவருடன் காரில் புறப்பட்டார். சென்னையை நெருங்க இன்னும் ஒரு மணி நேரமே உள்ள நிலையில், வழியில், ஒரு மக்கள் நடமாட்டமில்லாத பகுதியைக் கடக்கும் போது, திட்டமிட்டு வந்த நான்கு கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டவே, டிரைவரும், முத்துஸ்வாமியும் கதிகலங்கிப் போயினர். ஒருவன் முத்துஸ்வாமியின் வாயையும், கையையும் கயிற்றால் கட்டிவிட்டு காவலிருந்தான். ஒருவன் டிரைவரைக் கத்தியால் மிரட்டி பக்கத்துப் புதர் பக்கம் காரை ஓட்டச் செய்தான். அங்கு காரை நிறுத்தச் செய்து பணப்பெட்டியைக் கைப்பற்றி இருவரையும் கயிற்றால் கட்டிப் போட்டுவிட்டு பெட்டியுடன் ஓரடி எடுத்து வைத்ததும் ரோட்டிலிருந்து ஓர் இளைஞர் இவர்களை நோக்கி வந்தார். வந்தவர் நாலுமுழ வேட்டியணிந்து, உடம்பை ஒரு துண்டால் போர்த்தியிருந்தார்.

கருணை பொழியும் கண்கள். இனிமையான குரலில், ‘நில்லுங்கள்’ என்றார். அதில் அதிகாரம் இல்லை. வன்முறையில்லை. ஆனாலும் கொள்ளையர்கள் அக்குரலுக்கு மதிப்பளித்து நின்றுவிட்டனர்.

ஒருவேளை இவர்தாம் அவர்கள் தலைவரோ! ‘அதைக் கொடுங்கள்’ என்று அவர்கள் கையில் இருந்த பணப்பெட்டியைக் காட்டினார். இவர்பக்கம் திரும்பிய கொள்ளையரில் ஒருவன் கத்தியால் இவரைக் குத்தவந்தான். வண்டியில் இருந்த முத்துஸ்வாமியும், டிரைவரும் அதிர்ந்தனர். ஆனால் என்ன வியப்பு! அவர் மிரளவில்லை. அதே கருணை பொழியும் கண்களால் அவனை நோக்கினார். புன்னகை செய்தார். ஸ்ரீ கிருஷ்ணனின் ஆபரணங்களைத் திருடிய திருடன், பொருளையெல்லாம் போட்டுவிட்டு, “கண்ணா! எனக்கு நீதான் வேண்டும்” என்றது போல் கத்தியைக் கீழே போட்டு விட்டுக் கை கூப்பினான். நடக்குமா இது? ஆவேசத்துடன் அவரை நோக்கி வந்த மற்றவர்களும் அவர் அருகே வந்ததும் செயலற்று நின்றனர். அவர் அப்படி என்னதான் செய்திருப்பார்! அமைதியாகப் பெட்டியை அவரிடம் தந்து விட்டனர். ‘சென்று விடுங்கள்’ என்றார். கடுமையிழந்த கண்களுடன் திரும்பாமல் அப்படியே சில தொலைவு பின்னால் சென்றவர்கள் போய் விட்டனர்.

இளைஞர் இவர்களின் கட்டை அவிழ்த்துவிட்டு ‘இந்தாருங்கள், இது என் பணம். பத்திரமாய் எடுத்துச் செல்லுங்கள்’ என்றார் மிக இனிய குரலில். அந்தக் கண்களில், புன்னகையில், இனிய குரலில் ஏதோ சொல்ல முடியாத ஓர் ஈர்ப்பு இருந்தது. ‘நன்றி ஐயா’ என்று முத்துஸ்வாமி நெகிழ்ந்து கைகூப்பி அதைப் பெற்றுக் கொண்டு ‘வாருங்கள் நீங்கள் எங்கே செல்ல வேண்டுமோ அங்கே காரிலேயே கொண்டு விடுகிறேன்’ என்றார் பணிவுடன்.

‘இருக்கட்டும். நான் வருகிறேன்’ என்று எதுவும் கூறாமல் விரைந்து சென்று விட்டார். இவர் யாராக இருக்கும்! மிகவும் சாத்வீகமான இவரைக் கண்டு கொள்ளையர்கள் ஏன் பின் வாங்கினர்? ஒன்றும் புரியவில்லை. ஒரு சில நிமிடங்களில் நடந்து விட்ட இந்நிகழ்ச்சிகளிலிருந்து மீள நேரமாயிற்று.

பிறகு அவர்கள் சென்னையை நோக்கி விரைந்து சென்று பாரி கூறிய அடையாளமுள்ள இடத்தை அடைய பாரி அங்குக் காத்திருந்தார்.

‘வா. முத்து. உன்னை எதிர்பார்த்துத்தான் காத்திருக்கிறேன். இடத்தின் சொந்தக்காரர் நீ வந்ததைத் தெரிவிக்கச் சொன்னார். இங்குப் பக்கத்தில்தான் இருக்கிறார். போன் செய்தால் வந்து விடுவார். அதற்குள் காபி சாப்பிட்டு வரலாமா’ என்றார் பாரி.

‘இல்லை பாரி முதலில் இடத்தின் சொந்தக்காரரைப் பார்த்துப் பேசி விடுவோம்’ என்றார்.

‘சரி! அவருக்குப் போன் செய்து விடுகிறேன். அவர் வருவதற்குள் இடத்தைப் பார்க்கலாம்’ என்று கூறி அவருக்குப் போன் செய்துவிட்டு, காரைப் பார்க் செய்துவிடு. இந்த இடம்தான் என்று அவர் காட்டிய இடம் பிரம்மாண்டமாய் உயர்ந்த தூண்களுடன் தெரிந்தது. வெளியே காவல் நின்ற கூர்க்காவிற்குப் பாரியைத் தெரியும் போலும். ‘கதவைத் திற!’ என்றதும் பிரம்மாண்டமான அதன் புறக் கதவைத் தள்ளித் திறந்தார். கட்டடத்திற்கு முன்புறம் பெரிய முகப்பு வாயில், இருபுறமும் பெரிய சுற்றுச் சூழல் இடம் காம்பவுண்டுடன். பெரிய முகப்புக் கதவு அழகிய பூ வேலைப்பாட்டுடன் அரண்மனைக் கதவு போலிருந்தது. கல்யாண மண்டபமாய்ப் பயன்பட்ட இடம். கதவைத் திறந்தவுடன் எவ்வளவு பெரிய ஹால். நூறுபேர் தாராளமாய் அமர பெரிய இடம். நேரே நடுநாயகமாய் இரண்டு திருவுருவங்களின் பெரிய படங்கள். ஊதுபத்தி மணக்க, பூத்தட்டுகள் சூழ இருந்தது. அருகே சென்று பார்க்கப் போன முத்து வியப்பால் விழிகள் விரிய, கண்ணீர் பனிக்க ‘யாரிவர்?’ என்றார்.

அதற்குப் பாரி, ‘இங்கு ஓர் அன்னையன்பர் வாடகைக்குத் தியானக்கூடல் நடத்துவார். நேற்று இங்குத் தரிசன நாள் கூடல் நடந்தது. அவர்கள் இப்போது இவற்றையெல்லாம் எடுத்துப் போய்விடுவார்கள்’ என்றார்.

‘விபரமாய் சொல். என்ன தியானக் கூடல்? இப்படத்திலுள்ளவர்கள் யார்?’ என்று ஆர்வத்துடன் கேட்டார். அப்போது கூடல் நடத்திய அன்பர் வரவே, ‘தியாகு இவர்தான் இந்த இடத்தை வாங்க வந்திருக்கும் முத்துஸ்வாமி. உன் தியானக் கூடல் விபரம் சொல்’ என்று அவரிடம் அறிமுகம் செய்து வைத்தார் பாரி. இருவரும் கைகூப்பி அறிமுகம் செய்து கொண்டனர்.

‘இவர்கள் ஸ்ரீஅன்னை, ஸ்ரீஅரவிந்தர். பூவுலகிற்குச் சத்திய ஜீவியம் என்ற அதிமானஸத்தைத் தம் பூரணயோகத்தால் கொண்டு வந்தவர்கள். ஞாயிறு தோறும் இங்குக் கூடல் நடக்கும். அதில் இவர்களுடைய உயரிய இறைமயமான கோட்பாடுகளை பகிர்ந்து கொள்வோம். இவர்களை நோக்கித் தியானம் செய்வோம். பத்து ஆண்டுகளாக நடக்கிறது. நிலையான இடம் கிடைக்காததால் இப்படி மாற்றி மாற்றி வாடகைக்கு இடம் எடுத்துச் செய்கிறோம். இவர்களுடைய அளப்பரிய ஆன்மீகச் சக்தியை நாம் ஏற்றுக் கொள்வதற்கு இவர்கள் நம் பொருட்டுச் செய்த செயல்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம் ஆன்மாவை விழிக்கச் செய்து நம் வாழ்வை அற்புதங்கள் நிறைந்த வாழ்வாக மாற்றுவதற்கு நம்மிடையே மானுடமாய் வந்தவர்கள்’ என்று உருக்கமாய்ப் பேசினார் தியாகு.

‘இது என் பணம் பத்திரமாய் எடுத்துச் செல்லுங்கள்’ என்றாரே அவர்தாம் இவர் என்று ஸ்ரீஅரவிந்தரை அவர் உள்ளம் புரிந்து கொண்டது. அந்தப் புன்னகை. கருணை தவழும் கண்கள் இதோ இவர்தாம் வழியில் வந்து தங்களைக் காப்பாற்றியவர் என்று நன்றாகவே புரிந்தது.

‘பாரி வெளியே என் டிரைவர் இருப்பார் அவரைக் கூப்பிடு’ என்றார் முத்துஸ்வாமி.

உள்ளே வந்த டிரைவர் ‘ஐயா கூப்பிட்டீங்களா’ என்று வாயில்புறம் நின்றார்.

‘வா வா இங்கே வா. இவரை எங்கேனும் பார்த்த நினைவு வருகிறதா’ என்றார் மிகுந்த ஆர்வத்துடன்.

‘ஐயா, இவர்தாம் வழியில் கள்வர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றியிருக்கிறார். ஆமாம் ஐயா, அவர் இப்படியேதானிருந்தார். அந்தக் கண்கள், அப்படியே இவர்தாம்’ என்று மிகுந்த வியப்புடன் கூறி உடனே கீழே விழுந்து வணங்கினான்.

அதுவரை மெய்ம்மறந்திருந்த முத்துஸ்வாமியும் உடனே நமஸ்கரித்தார்.

‘பாரி வரும் வழியில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. நினைத்தாலே எனக்கு உடம்பு சிலிர்க்கிறது என்று நடந்தவற்றைக் கூறி இது என் பணம் பத்திரமாய் எடுத்துச் செல்லுங்கள்’ என்று அவர் கூறியது எனக்கு விளங்கிவிட்டது என்றார். ஒருவர்க்கும் ஒன்றும் புரியவில்லை. கூடல் நடத்தும் அன்பரிடம் ‘சிறிது காத்திருங்கள்’ என்றார். இடத்தின் சொந்தக்காரர் வந்தார்.

பாரி இருவரையும் அறிமுகப்படுத்தினார். ‘இடம் பிடித்திருக்கிறதா?’ என்றார் சொந்தக்காரர்.

‘இடமும் பிடித்திருக்கிறது, மனதில் இது இடமும் பிடித்துவிட்டது’ என்றார்.

சொந்தக்காரர் அன்பரிடம், ‘இவர்தாம் இடத்தை வாங்குபவர். நீங்கள் விரைவில் இடத்தைக் காலி செய்து விடுங்கள்’ என்றார்.

‘இல்லையில்லை காலி செய்யத் தேவையில்லை. நான் ஹோட்டல் கட்டப் போவதில்லை. தொடர்ந்து கூடலே நடக்க இந்த இடத்தை என் பிரபுவுக்காக (ஸ்ரீஅரவிந்தருக்காக) வாங்கப் போகிறேன்’ என்றார்.

(இருங்கள் இருங்கள் கதை இன்னும் முடியவில்லை.)

குதிரை வாங்கச் சென்ற மணிவாசகர் கோயில் கட்டிய கதையாக ஹோட்டல் கட்ட இடம் வாங்க வந்த முத்துஸ்வாமி ஸ்ரீஅரவிந்தரால் தடுத்தாட்கொள்ளப்பட்டு வாங்கிய இடத்தை நிரந்தர தியான மையமாக மாற்றியதுடன் திருச்சியில் ஹோட்டலை தன் மகன் பெயரில் மாற்றி அவனிடம் ஒப்படைத்ததுடன் குடும்பத்தினின்றும் பிரிந்து சென்னையில் தியான மையத்திலேயே தங்கி விட்டார். தாம் இனி பகவான் சேவையில் ஈடுபடப்போவதாயும் குடும்பப் பொறுப்பை மகனே ஏற்க வேண்டும் என்று விலகி விட்டார். இவர் மனைவி மட்டும் இவருடன் இருப்பதே தனக்குச் சரி என்று சென்னை வந்து விட்டாள்.

வாடகை இடம் வாங்கி பல இடங்களில் மையம் நடத்திய அன்பர், முத்துஸ்வாமியின் பக்தியால் மையத்திற்குச் சொந்தக் கட்டடம் அமைந்ததால் மகிழ்ந்து பல புத்தகங்களை அவருக்குக் கொடுத்தார். தியான மையக் கட்டடத்தில் தம் மனைவியுடன் முத்துஸ்வாமி நிரந்தரமாய்த் தங்கி பணக்கார தோரணை ஏதுமின்றி அடக்கமாகத் தொண்டு செய்து வந்தார். மைய அன்பர்கள் யாவரும் இவருடன் இணைந்து பணி செய்வதில் மகிழ்ந்தனர்.

தம் பழைய பணக்கார வாழ்க்கைக்கு மரித்துப் போய் அன்பர் என்று புதிதாய் பிறந்தார் முத்துஸ்வாமி. மையத்தின் வளர்ச்சிக்கும் தூய்மைக்கும் ஓயாது பாடுபட்டார். தோட்டம் அமைத்து பூஞ்செடிகளுக்கு நீர்வார்த்து பூக்கொய்யும் புனிதப் பணியையும் இவரே செய்தார். அதிகாரமாய் வாழ்ந்த தன் கணவர், அடக்கமாய் வாழ்வது கண்டு இவர் மனைவி வியந்தாள்.

இவர்தம் பக்தியாலும், பணியாலும் அன்பர்கள் யாவருக்கும் உற்ற நண்பராகி விட்டார். ஒரு நாள் எதிர்பாராது நெஞ்சுவலி ஏற்பட, ஒன்றும் செய்ய இயலாதவரானார். பேச்சு நின்று நினைவு இழந்தார். அன்பர் குழாம் இவரை நகரத்தின் உயர்தர மருத்துவமனையில் சேர்ப்பித்தது. இவர் மனைவி ஸ்ரீ அரவிந்த அன்னையை பிரார்த்தித்த வண்ணமிருந்தார். திருச்சியிலிருந்து இவர் மகன், மருமகள், பேரக்குழந்தைகள் யாவரும் வந்து விட்டனர்.

மருத்துவர் அவர் நிலைமை கவலைக்கிடமானது என்று கூறி தீவிர சிகிச்சை அளித்தவண்ணம் இருந்தனர். இவர் பக்திபூர்வமாக மையப் பணிகளில் ஈடுபட்டதையும், தம்மை விட வயதில் சிறியவர்களானாலும் பகவான் நூலைப் பயின்றவர் கூறும் உரைகளை அடக்கமாய் கேட்டதையும் எண்ணி அன்பர் குழாம் இவர் நலனுக்காக ஸ்ரீஅன்னை, பகவானைப் பிரார்த்தித்த வண்ணம் இருந்தது. ஓரன்பர் இவர் பொருட்டு அன்னை அழைப்பு என்ற முறையை மேற்கொண்டார். ஓரன்பர் இவர் நலம் பெற சாவித்ரி காப்பியத்தில் எமன் கரைந்த பகுதியைப் பக்தியுடன் படித்தார். ஓரன்பர் மூன்று நாள் பிரார்த்தனையை மேற்கொண்டார். இவை பற்றி அதிகம் தெரியாத உறவினர்கள் பாசத்தால் பதற்றமடைந்தனர்.

இவருடன் மையப் பணிகளில் ஈடுபட்ட இவர் மனைவி மையச் சொற்பொழிவுகளைக் கேட்ட அனுபவத்தில் சமர்ப்பணமே சரி என்று எவ்வித பதற்றமும் இன்றி அன்னை பகவான் முன் அமைதியாக இருந்தார்.

இதற்கெல்லாம் எதிராக மருத்துவர்களோ கணத்திற்குக் கணம் இவரிதயம் செயலிழப்பதாயும் பிழைத்தல் அரிது என்றும் கூறிய வண்ணமிருந்தனர். மருத்துவமனையில் அவருக்கு நினைவு தவறிய வண்ணமிருந்தது.

மேலுலகில் யமதர்மன் சபையில் சித்ரகுப்தர் என்றழைக்கப்படுபவர் அன்றைய நாளில் ஆயுள் முடியும் ஜீவர்களின் வரிசையைக் கூறியவண்ணமிருந்தார். இன்னும் அரைமணியில் பூவுலகில் மருத்துவமனையிலுள்ள முத்துஸ்வாமியின் உயிர் கவரப்பட வேண்டும் என்பதைச் சித்ரகுப்தர் கூற, காலன் தூதுவர்களை அழைத்துக் கட்டளை இடுகிறான். அவர் உயிருக்குப் போராடும் கட்டத்திலிருப்பதால் அதுவே காரணமாக அவர் உயிரைக் கவர்ந்து வரக் கூறுகிறான்.

இரண்டு யமதூதர்கள் சூட்சும வடிவில் முத்துஸ்வாமியின் முன் தோன்ற, முத்துஸ்வாமியும் தம் சுயநினைவு தவறும் நிலையில் அவர்களைப் பார்க்கிறார். தன்னைத் தடுத்தாட்கொண்ட பிரபுவை அவர்தம் நெஞ்சப் பேழையில் பூட்டி வைத்திருப்பது அவருக்கே இப்போது நினைவில்லை.

தூதுவரில் ஒருவன் பாசக்கயிற்றை அவர்மீது வீச முற்படும் போது, யாரோ அவனைப் பின்னால் இழுப்பதாக உணர்கிறான். அவனால் உயிரைக் கவர முடியவில்லை. மற்றவனோ ‘என்ன தயங்குகிறாய். நம் தலைவருக்குத் தெரிந்தால் கோபப்படுவார். சீக்கிரம் ஆகட்டும்’ என்கிறான்.

‘நீ முயற்சி செய்துபார் என்னால் முடியவில்லை. என்னை யாரோ பின்னால் இழுப்பது போல் உணர்கிறேன்’ என்றான் இவன்.

மற்றவனும் முத்துஸ்வாமியின் மேல் பாசக் கயிற்றை வீச, அவனும் முத்துஸ்வாமியின் உயிரைப் பறிக்க இயலாது தோற்றான். ‘என்ன இது! புதுமையாய் உள்ளது’ என்று இருவரும் பேசிவிட்டு, ‘தலைவருக்குத் தெரிந்தால் நம்மைத் தண்டித்து விடுவார். விரைவில் சென்று அவரிடம் நிலைமையைக் கூறிவிடுவோம்’ என்றான் ஒருவன். ‘ஆம் வா வா. உடனே செல்வோம்’ என்றான் மற்றவன்.

யமதர்மன் முன் சென்று இரண்டு தூதுவர்களும் தலை குனிந்து நிற்க, ‘என்னாயிற்று? எங்கே நீங்கள் கவர்ந்த உயிர்?’ என்று காலதேவன் கர்ஜித்தான்.

‘மன்னிக்க வேண்டும் பிரபு. எங்களால் அவ்வுயிரை நெருங்கவும் முடியவில்லை’ என்று ஏககுரலில் கூற, யமன் இருக்கையை விட்டுச் சினத்துடன் எழுந்து, ‘என்ன’ என்று கடுமையாய்க் கூறி முறைக்க, ‘ஆம் பிரபு உம்மிடம் கூறவே விரைந்து வந்தோம். இத்தனை காலத்தில் இப்படி எதுவும் நேர்ந்ததில்லை’ என்றனர்.

உடனே காலத்தின் தலைவன் முத்துஸ்வாமியின் முன் தோன்றினான். உள்ளங்கையை விரித்து அவர்முன் நீட்டி உயிரைக் கவரத் தொடங்கியதும் பின்புறமாக இழுக்கப்பட்டான். ‘என்ன? என்ன விந்தையிது? யார் என் கடமையைச் செய்ய விடாமல் என்னைத் தடுப்பது?’ என்று சினந்தான்.

‘நீ யார்? ஏன் என்னைத் தடுக்கிறாய்?’ என்று முத்துஸ்வாமியை நோக்கிக் கடுகடுக்கிறான்.

மயக்க நிலையிலிருந்த முத்துஸ்வாமிக்கு தன் முன்னே ஒரு பயங்கர உருவம் நின்று தன்னை மிரட்டுவது தெரிகிறது.

‘யார்? நீ யார்?’ என்று நடுங்கும் குரலில் கேட்கிறார்.

‘யாரா? நானா? நானே காலதேவன் உன் ஆயுள் முடிந்து காலமும் கடந்து விட்டது. என்னுடன் வர ஏன் மறுக்கிறாய்?’

‘ஆம் நான் உம்முடன் வர விரும்பவில்லை’.

‘உன் விருப்பத்திற்கு என் கடமையில் இடமில்லை. புறப்படு வா என்னுடன்’

‘இல்லை. நான் வரமாட்டேன். என் வாழ்நாள் புனிதப்படும் இந்நேரத்தில் என்னால் வரமுடியாது’.

‘என்னிடம் வரமுடியாது என்று சொல்ல உனக்கு என்ன துணிச்சல்’ என்று சீறி கையை விரித்து முன்புறம் நீட்டி அவர் உயிரைக் கவர முயன்ற போது பின்புறம் சரிகிறான் காலன். ‘என்ன இது! யார் என்னைத் தடுப்பது? நீ யார்? என்ன மாயம் செய்கிறாய்? கேவலம் ஒரு மனிதனிடமா நான் தோற்கிறேன்’ என்று கர்ஜித்தான் காலன்.

‘மாயமா? நானேதும் அறியேன். நான் எளிய மனிதன். என்னிடம் எந்தச் சக்தியும் கிடையாது. என்னை விட்டுவிடு. நான் செய்ய வேண்டிய நன்றிக் கடன் நிறையவுள்ளது’.

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. என் கடமையில் தவறாத என்னைத் தவற வைக்கும் மாயம் ஏதோ உன்னிடமுள்ளது. என்ன மந்திரம் அது? சொல்லி விடு’.

‘மந்திரமா? என்னிடமா? என்னைத் தடுத்தாட்கொண்ட ஸ்ரீ அரவிந்தரின் சக்தியாகிய அன்னையைத் தவிர ஒரு மந்திரமும் நான் அறியேன்’.

‘அன்னையா? யாரவர்?’ கடுமையாகக் கேட்கிறான் காலன்.

‘பராசக்தி அன்னையைத் தெரியாதவர் உளரா என்ன?’

‘பராசக்தியா? பரமனின் உத்தரவின் பேரில்தான் என் பணியே நடைபெறுகிறது. இதில் பராசக்தி எப்படித் தடை செய்வார்? முன்பு மார்கண்டேயனின் உயிரைத் கவர்ந்த போது கூட பரமன் காட்சி தந்துதான் தடுத்தார். இப்போது உன்னிடம் அவர் கூட இல்லையே’ என்று ஐயப்பட்டான் காலன்.

பகவான் போர்க்களம் செல்லாமலும் போர்க்கருவி ஏந்தாமலும் உலகப்போரை வென்ற செய்தி காலன் அறியவில்லை போலும்.

மிகுந்த பரபரப்புடன் காலன் விரைந்து சென்று பரமன் முன் சென்று வணங்கி நின்றான்.

‘என்ன காலதேவா, தொழிலில் ஏதாவது சிக்கலா?’ என்று புன்னகைத்தான் பரமன்.

‘ஆம் பிரபு! பூவுலகில் ஓருயிரைக் கவர முடியாத என் பரிதாப நிலை கூறவந்தேன்’. என்று தலை கவிழ்ந்தான் காலன்.

‘உன் பணியில் நீ சிறந்தவனாயிற்றே. அப்படியுமா சிக்கல்?’ என்றார் பரமன்.

‘ஆம் பிரபோ, கடமை தவறாத என்னை ஒருவன் என் கடமையைச் செய்ய விடாமல் தடுக்கிறான். அவனிடமுள்ள மாய சக்தி இன்னது என நானறியேன்’.

‘அவனிடமே கேட்பதுதானே?’ ‘ஆம் பிரபு! கேட்டேன் அவன் தனக்கு எந்த மந்திரமும் தெரியாது’ என்கிறான்.

‘ஓ! அப்படியொரு சாமானியனையா உன்னால் தீண்ட முடியவில்லை?’ என்று சிரிக்கிறார் பரமன்.

‘ஆனால் அவன் தனக்கு அன்னை என்ற நாமம் மட்டுமே தெரியும் என்கிறான்’.

‘அப்படியா? சரி. அப்படியென்றால் இங்கே (பராசக்தியைக் காட்டி) சக்தியிடம் கேள்’. என்றார் பரமன்.

‘தேவி! எனக்கு நேர்ந்த துன்பத்தைத் தீர்க்கமாட்டீரா’ என்று தேவியை நோக்கிப் பணிந்து கேட்கிறான் காலன்.

‘என்ன நேர்ந்தது! காலதேவா?’ என்கிறார் பராசக்தி.

‘தாயே! காலம் தவறாதவன் என்று பேர் எடுத்தேன். கடமை தவறாமலும் நடந்து வந்தேன். சிறியவர், பெரியவர் என்று வேறுபாடு கருதியதில்லை. ஏழை, செல்வந்தர் என்ற வேறுபாடும் பார்த்ததில்லை. எதற்கும் அஞ்சாது என் கடமையைச் செய்தேன். தர்மராசா என்று பேர் பெற்றேன்.

பிரபஞ்சம் முழுவதும் ஊழல் நடமாடும் இக்காலத்திலும் நான் மட்டும் என் தொழிலைச் செம்மையாய்ச் செய்தேன். ஆனால் இன்று .....’ என சோகமாய் முடித்தான்.

‘கடமையில் சிறந்தவன், அஞ்சாதவன் உன்னைப் போல் யாருமில்லை என்றெல்லாம் உனக்கு உன்னைப் பற்றி பெருமை அதிகம்’ என்று நகைத்தாள் தேவி.

சற்று நாணினான் காலன்.

‘உன் கர்வம் அடங்கி விட்டதா இப்போது?’ என்றாள் மேலும்.

கம்பீரமாய் வந்த காலன் குறுகிப் போனான். ‘தேவி, நீர் என்ன கூறுகிறீர்?’ என்று தயங்கினான்.

‘ஆம் காலதேவா. உன் பணியில் நீ உண்மையானவன்தான். ஆனால் காலப்போக்கில் உன்னை இயக்கும் சக்தியையே மறந்து நீயே யாவும் என்று மயங்கி விட்டாய். என்னிடம் ஒன்றுமில்லை எனக்கெதுவும் தெரியாது என்று என்னைச் சரணடைந்த சாமான்யனிடம் நீ தோற்று விட்டாய்.’ என்றாள் தேவி.

‘தாயே, நான் தவறிழைத்தேனா?’ என்று பணிந்தான் காலன்.

‘ஆம் காலதேவா. நீ என்ற ஒன்றை நான் என்றோ கரைத்து விட்டேன். பூவுலகில் உன்னாட்சி முற்றுப் பெறும் நேரம் வந்துவிட்டது. இனி அவர்களே அவர்களை விடுவித்துக் கொள்வார்கள்’. காலன் கரைந்தான்.

மையத்தில் அன்பர் ஒருவர், முத்துஸ்வாமியின் பொருட்டு, ஸ்ரீ அரவிந்த காப்பியம் சாவித்ரியிலிருந்து, ஸ்ரீஅன்னை காலனைக் கரைத்த பகுதியை உருக்கமுடன் படித்துக் கொண்டிருந்தார்.

மருத்துவம் தோற்றது. கருவி இயங்க மறுத்து நின்று விட்டது.

நோயாளி இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் எண்ணியபோது, முத்துஸ்வாமி உறங்கி எழுந்தது போல் கண்விழித்தார். மருத்துவர்கள் வியந்தனர். இது என்ன மாயம். இதய இயக்கம் நின்று, நாடி விழுந்து முற்றிலும் முடிந்து போன அவர் கதையை அன்னை மீண்டும் எழுதினார் என்பதை அவர்கள் அறியவில்லை.

அன்பர்கள் அறிந்ததால், அன்னையே என்று எழுந்து, “எனக்கு என்னாயிற்று எங்கிருக்கிறேன்!” என்ற அவரை அன்பர்கள் சூழ்ந்து மகிழ்ந்தனர்.

*************

ஜீவிய மணி
 
திருவுருமாற்றத்தை முதற்பலனாகத் தருவது சரணாகதி, அது அடக்கத்திற்குரியது. நாம் நல்லது
வேண்டும். கெட்டது வேண்டாம் என்கிறோம். ஒரு நாணயத்தின் தலை மட்டும் வேண்டும் என்றால் நாணயமில்லை. தங்கச் சுரங்கத்தில் தங்கம் கனிப்பொருளாக இருக்கிறது. கனிப்பொருளை சுத்தம் செய்து, உருக்கி தங்கம் பெறவேண்டும். தங்கம் வேண்டும், கனிப்பொருள் வேண்டாம், எனில் தங்கமில்லை. ஞானம், அஞ்ஞானமானதால், இனி ஞானம் அஞ்ஞானத்திலிருந்து எழ வேண்டும். அஞ்ஞானத்தை ஒதுக்கினால் எதிலிருந்து ஞானம் வரும்? ஞானம் வருவது தடைப்படும். ஏழ்மையை ஒதுக்கினால் செல்வம் எப்படி ஒதுக்கப்படும் எனலாம். ஏழை பணக்காரனாகாவிட்டால் நாடு ஏழையாக இருக்கும்.
 



book | by Dr. Radut