Skip to Content

08. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

விஜயலட்சுமி, அம்பத்தூர்

என் பெயர் விஜயலட்சுமி. நான் அம்பத்தூரில் வசித்து வருகிறேன். நான் கடந்த ஜூன் 2000-ஆம் ஆண்டு முதல் அம்பத்தூர் தியானமையம் சென்று வருகிறேன். எங்கள் வீட்டில் கிணற்றிலிருந்துதான் மோட்டாரில் தண்ணீர் வரும். கிணற்றில் தண்ணீர் இல்லாததால் மோட்டார் எடுக்கவில்லை. எங்கள் வீட்டில் போர் போடவில்லை. அதனால் நாங்கள் தெருவில் வரும் மெட்ரோ வாட்டரைத்தான் உபயோகித்து வந்தோம்.

பத்து வருடங்களாகத் தண்ணீர் கஷ்டம் இருந்துகொண்டுதான் உள்ளது. நான் தினமும் ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் பிடித்து அன்னைக்கு வைத்து தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வேன். அம்பத்தூர் தியான மையத்தில் ‘மாநிலம் காக்கும் மழை புத்தகத்தை வாங்கி தினமும் உங்கள் வீட்டில் படியுங்கள். உங்கள் வீட்டில் தண்ணீர் கஷ்டம் தீரும்’ என்று சொன்னார்கள். எனக்கு மாநிலம் காக்கும் மழை புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தார்கள். நானும் ஏப்ரல் 3-ஆம் தேதி அப்புத்தகத்தை வாங்கி வீட்டில் வைத்து தினமும் படிக்க ஆரம்பித்தேன். ஐந்து நாட்கள்தான் படித்தேன். ஏப்ரல் 8-ஆம் தேதி என் சகோதரர்கள் எல்லோரும் சேர்ந்து போர் போட்டு விடலாம் என்று முடிவெடுத்து, உடனே ஏப்ரல் 18-ஆம் தேதி வெள்ளிகிழமை அன்றே போர் போட்டு விட்டோம். தண்ணீர் வந்து விட்டது. எங்கள் வீட்டில் போர் போடுவார்கள் என்று நாங்கள் கனவில்கூட நினைக்கவில்லை. அன்னை தண்ணீர் கஷ்டத்தை தீர்த்து விட்டார்கள். ‘அன்னை கிள்ளிக் கொடுக்கமாட்டார்கள். அள்ளித்தான் கொடுப்பார்கள்’ என்று சொற்பொழிவுகளில் நான் கேட்டிருக்கிறேன். அதேபோல் அன்னை பெரிய அற்புதம் நடத்திவிட்டார்கள்.

தண்ணீர் கஷ்டம் தீர்ந்ததற்கு அன்னைக்கும், அம்பத்தூர் தியான மையத்திற்கும், பானுமதி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் சென்னையில் இப்போது தண்ணீர் கஷ்டம் அதிகமாக உள்ளதாலும், மழை இல்லாத காரணத்தினாலும் அன்னை அன்பர்கள் எல்லோரும் ‘மாநிலம் காக்கும் மழை’ என்ற புத்தகம் வாங்கிப் படித்தால் அன்னையின் அருளால் அனைவரும் பயன் அடையலாம் என்ற கருத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!

**********

ஜீவிய மணி
கடவுளுக்குப் பயப்படுவதற்கு பதிலாக, செயலை ‘இது ஆண்டவன் செயல், இதை நான் பூர்த்தி செய்வது ஆண்டவனுக்கு மகிழ்ச்சி தரும், எனவே இதை ஆண்டவனுக்கே அர்ப்பணமாகச் செய்கிறேன்’ என்று செய்தால் மனம் அளவு கடந்து அடங்கும், சாந்தி நிலவும், அமைதி உடலெல்லாம் பரவும், பொறுமை எழும், சக்தி உற்பத்தியாகும், அடுத்தவர் பேச்சு காதில் விழாது. வேலையில் மனம் அதிகமாக ஈடுபடும், வேலை மேலும் புரியும், செய்யும் வேகம் அதிகரிக்கும், தவறு, குறை, பிசகு, பிழை வாராது. குழப்பம் நீங்கும், 3 மணி வேலை இரண்டரை மணியில் முடியும், மனம் மகிழ்வால் நிறையும். நாம் நம்மை ஆபிஸுக்கோ சம்பளத்திற்கோ, கடமைக்கோ கட்டுப்படுத்திக் கொள்ளும் பொழுதுள்ளதைவிட திறமை, ஆர்வம், வேகம், தெளிவு எழுவதைக் காணலாம். சுதந்திரம் அதிகமானால் - சமூகம், சம்பளம், மனச்சாட்சி ஆகியவற்றிலிருந்து விடுபட்டு - சுதந்திரம் ஒன்றே சூழல் என்றானால், செயல் இறைவன் செயலாக மாறும். இது அன்னை விரும்பும் முறை.

 



book | by Dr. Radut