Skip to Content

06. பொன்னான நேரங்கள்

பொன்னான நேரங்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

சொற்பொழிவாற்றியவர்: N. அசோகன்

சொற்பொழிவாற்றிய தேதி: 24. 04. 2014

ஒரு வீடு அல்லது நிலம் விற்கும் பொழுது பேரம் படியாமல் நிறைய சிக்கல்கள் எழுவது நம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த அனுபவம். நல்ல மார்க்கெட் விலை உள்ள இடத்தில் அமைந்திருக்கும் மூன்று அல்லது நான்கு கிரவுண்ட் பிளாட் வருடக்கணக்காக விற்காமல், இருப்பதுண்டு. அது ஏன் அவ்வளவு தாமதமாகிறது என்று விசாரித்தால் சரியாக பேரம் படியவில்லை. இடத்தின் உரிமையாளர் விலை மிக அதிகமாகக் கூறுகிறார். எவராலும் அவரை இறங்கி வரச் சொல்ல முடியவில்லை. அவரிடம் சரியாக பேசுவதற்குத் தகுந்த ஆள் கிடைக்கவில்லை என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அம்மாதிரியே கூட்டுக் குடும்பங்களில் வருடக்கணக்காக சொத்துப் பிரிப்பதில் சகோதர, சகோதரிகளுக்குள் உடன்பாடு இல்லாமல் அந்தச் சொத்துக்கள் பாழாகிப் போவதுண்டு. இம்மாதிரி சூழ்நிலையில் விஷயத்தை எடுத்துப் பேசி, அடுத்தவர் கண்ணோட்டத்தில் உள்ள நியாயத்தை மனதில்படும்படி எடுத்துச் சொல்லி, சமரசமான ஒரு உடன்பாட்டை கொண்டுவரும் பேச்சாற்றல் ஏதோ ஒரு சிலருக்குதான் அமையும். ஒரு குடும்பத்திலுள்ள ஏழெட்டு பேர்களுக்கிடையே ஒரு சமரசமான உடன்பாட்டை கொண்டு வருவதற்கே ஒரு பெரிய ஆற்றல் தேவைப்படுகிறது என்றால் 540 ராஜபரம்பரையை சேர்ந்தவர்களிடையே எந்தவித எதிர்ப்போ, கருத்து வேறுபாடோ எழாமல் அழகாக, கச்சிதமாக அவ்வளவு பெரிய வேலையை ஒருவரால் முடிக்க முடிகிறது என்றால் அவரிடம் எவ்வளவு பெரிய பேச்சுத் திறமை இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட திறமை படைத்தவர் பிற்காலத்தில் கவர்னர் பதவி வகித்து ஓய்வு பெற்றார். தான் வாழ்க்கையில் செட்டிலாகிய பிறகு தனக்கு ரூ.15 கொடுத்து உதவியவரை தேடிப்போய் அவரைக் கண்டுபிடித்து அப்பணத்தைத் திருப்பிக் கொடுக்க முயன்றபோது, அதை அவர் வாங்க மறுத்து உன்னைப்போல் சிரமப்படுபவர்களுக்கு நீ இந்த உதவியைச் செய் என்று அறிவுறுத்தினாராம். அந்த நல்ல அறிவுரையை அப்படியே ஏற்றுக் கொண்டு அவ்வாறே மேனன் அவர்களும் சிரமப்படுபவர்களுக்கு ரூ.15 நிதியுதவி செய்து வந்தாராம்.

இங்கே நான் சொல்ல வந்தது என்னவென்றால், பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தவருக்குத் தகுந்த நேரத்தில் அந்தப் பண உதவி கிடைத்தது ஒரு பொன்னான நேரம். அந்த உதவியைச் செய்ய வந்தவருடைய மனமும் பொன்னானது. அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று நினைத்த மேனன் மனமும் பொன்னானது. கொடுத்ததை ஏற்காமல் உன்னைப்போல் உதவி தேவைப்படுபவர்களுக்கு இதைச் செய் என்று சொன்னவர் மனமும் பொன்னானது. இன்று ரூ.15 நமக்கு ஒரு பொருட்டே இல்லை. இந்த ரூ.15-க்கு நாம் இரண்டு கப் டீ தான் வாங்கலாம். ஆனால் 1930-ஆம் ஆண்டு கால அளவில் ரூ.15 என்பது ஒரு பவுன் விலைக்குச் சமமாக இருந்தது. அதாவது அக்காலத்தில் ஒரு சவரனின் விலையே ரூ.15 தான்.

நாம் வாழ்க்கையில் பொன்னைப் பெரிதாக மதிக்கிறோம். ஆனால் மனிதனுக்குப் பொன்னான மனநிலைகள் உண்டு என்பதை நாம் கருத வேண்டும். ஒரு கற்புக்கரசியின் கற்புநெறி பொன் போன்றது. உண்மையில் சொல்லப்போனால் விலை மதிக்க முடியாதது என்றுகூட நாம் சொல்லலாம். ஆரோக்கியமாக இருந்த கணவன் நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாகி, உதவாக்கரையாகி விட்டான். அவருடைய இளமையான மனைவி அவருக்குப் பணிவிடைகளைச் செய்தே காலத்தை ஓட்டுகிறார். குடும்பம் நடத்த வருமானம் போதவில்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்து சொற்ப வருமானத்தில் பிழைப்பை நடத்துகிறார். இதைக் கவனிக்கும் அதே தெருவிலுள்ள பணக்காரன் ஒருவன் உன் கணவருக்கு இவ்வாறு செய்து கொண்டு ஏன் இருக்கிறாய். அவன் உடம்பு தேறப் போவதில்லை. அவன் எழுந்து நடமாடப் போவதில்லை. உனக்கு அழகிருக்கிறது, இளமை இருக்கிறது. என்னுடன் வந்துவிடு. உன்னை ராணி மாதிரி வைத்துக் கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறும்போது, வீட்டு வேலை செய்தாவது என் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வேனே தவிர, இப்படி உனக்கு விலை போகமாட்டேன் என்று தன்மானத்தோடு பேசும் நேரம் பொன்னான நேரமாகும். உயர்ந்த கற்பு நெறி என்பது நம் இந்திய நாட்டின் கலாச்சாரத்தில் உள்ள ஒரு ஆழமான பண்பாகும். இதைப் பின்பற்றி வாழும் அப்பெண்ணின் வாழ்க்கை ஒரு பொன்னான நேரமாகும்.

வாழ்க்கையில் சில பேருக்குத்தான் சிலது உரியது என்று சொல்லலாம். உதாரணமாக இறை அம்சம் கொண்ட ஆன்மீக மகான்களுக்கு மௌனம் என்பது இயல்பாகவே சித்திக்கும். அடுத்ததாகப் படைப்பாளிகளுக்கு புதிய சிந்தனைகள் தோன்றியபடி இருக்கும். இந்த ரீதியில் பார்த்தால், இயல்பாகவே காதலுக்கு டார்சி உரியவன் என்று நாம் சொல்லலாம். எல்லோருக்கும்தான் காதல் வருகிறது. ஆனால் அவையெல்லாம் நாம் தூய்மையான காதல் என்று சொல்ல முடியாது. நாம் யார்மீது பிரியம் வைக்கிறோமோ, அவர் நம்மீது பதிலுக்குப் பிரியம் வைக்க வேண்டும் என்றுதான் நாம் எதிர்பார்ப்போம். அவருக்கு நாம் ஒரு நல்லது செய்தால், சம்பந்தப்பட்ட அந்த பெண்ணிற்கு அது தெரிய வேண்டும், அவளுக்குச் சந்தோஷம் வந்து அவளுக்கு நம்மேல் காதல் வரவேண்டும் என்றுதான் நினைப்போம். இப்படி எழுகின்ற காதல் சாதாரணமாக பிரதிபலனை எதிர்பார்க்கும் காதலாகும். ஆனால், டார்சிக்கு எழுந்ததோ இவ்வித காதலில்லை. அவள் இவனை gentleman இல்லை என்றாள், அத்துடன் நிற்காமல் தான் திருமணம் செய்து கொள்ளும் கடைசி ஆள் இவனாகத்தான் இருக்கும் என்றும் கூறினாள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவள் தங்கையின் மானத்தைக் காப்பாற்றி, அவளுக்கு முறைப்படி திருமணமும் செய்து வைத்து, அது லிஸ்ஸிக்கு தெரிய வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறிவிடுகிறான். டார்சி செய்த உதவியால்தான் குடும்ப மானம் காப்பாற்றப்பட்டது என்று லிஸ்ஸிக்குத் தெரிந்து, அதனால் அவள் மனம்மாறி, அவன்மேல் காதல் கொண்டால், அதில் அவனுக்கு ஒரு பிரயோஜனம் இருக்கிறது. அதுகூட அவளுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை. நான் gentleman-ஆக நடந்து கொள்ளவில்லை என்பது உண்மை. தான் மறைத்த உண்மையால், விபரீதம் நடந்துள்ளபோது அதைச் சரி செய்வது தன் பொறுப்பு, அதுதான் gentleman-க்கு அடையாளம். எனவே நான் அதைச் செய்கிறேன் என்று அவன் முன்வந்தானே தவிர, சம்பந்தபட்ட லிஸ்ஸிக்கு அது தெரிவதே இரண்டாம்பட்சம் ஆனது. அதாவது அவள் சந்தோஷப்பட வேண்டும். தன்னால்தான் அந்தச் சந்தோஷம் வந்தது என்று அவளுக்குத் தெரியத் தேவையில்லை என்ற மன நிலைக்கு அவன் வந்து விட்டான். இதைத்தான் உண்மையான self-giving என்கிறோம். மேலும் திட்டு வாங்கும்போது அவனுக்கு கோபமே வரவில்லை. மாறாக அவள் கூறியதில் உண்மை இருக்குமோ என்று தோன்றியது. அந்த உண்மையை ஏற்று உண்மையிலேயே மனம்மாறி, அவள் குடும்பத்திற்கு வந்த இக்கட்டிலிருந்து அவளைக் காப்பாற்றி, அந்த வகையில் அவளை மகிழ்விக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றிய நேரம் அவன் வாழ்வில் ஒரு பொன்னான நேரம்.

மேல்நாட்டு இலக்கியங்களில் காதல் பிரசித்தமான ஒன்று. ஷேக்ஸ்பியரின் tragedies-ஐ எடுத்துக் கொண்டால் ஒத்தல்லோவும், ரோமியோ மற்றும் ஜூலியட் இரண்டுமே காதலை மையமாக வைத்த நாடகங்கள்தான். Desdemona-விற்கு, ஒத்தல்லோ மீதிருந்த காதல் அவ்வளவு புனிதமானது. இருந்தாலும், இந்தக் காதலின் புனிதத்தை அவன் உணரவே இல்லை. அவள் கழுத்தை நெரித்துக் கொலைதான் செய்தான். ரோமியோ மற்றும் ஜூலியட் இடையில் அரும்பிய காதல் மிகவும் தீவிரமான காதல். ஆனால் விரோதமனப்பான்மை கொண்ட இரு குடும்பத்தாரிடையே இளைய தலைமுறையினருக்கு அரும்பிய காதல் வளர்ந்து, தழைக்கவே வழியில்லை. ஆகவே அப்படி அரும்பிய காதல் மடிந்து போகிறது. இந்திய இலக்கியங்களில் பார்த்தால், காதலைவிட கற்பிற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது யாருடைய மனதிலாவது தெய்வீகமான காதல் பிறந்தால், அதை ஏற்றுக் கொள்ளக்கூட இன்னொருவர் கிடைக்க மாட்டார் என்று தெரிகிறது. டார்சிக்கு வந்த காதல் அப்படிப்பட்ட ஒரு தெய்வீகக் காதலாகும். அதில் ஒட்டிக்கொண்டு இருந்த சிறிதளவு சுயநலத்தைக்கூட அவன் தியாகம் செய்து விடுகிறான். ஆனால், அந்தக் காதலுக்குரியவளோ பெம்பர்லி மாளிகையைக் கண்டு பரவசப்பட்டுப் போகிறாள். அவளுடைய மனநிலை அவ்வளவு சாதாரணமாக இருந்தது. அவள் சாதாரணமாக இருக்கிறாளோ இல்லையோ, அவளை மகிழ்விப்பதில் அவன் நாட்டம் கொண்டான். இப்படி அவனுக்குத் தோன்றிய நேரம் அவன் அக வாழ்வில் அவனுக்கு ஒரு பொன்னான நேரம்.

தெய்வீகக் காதலை வேறெங்காவது பார்க்க வேண்டும் என்றால் பகவானின் சாவித்ரி காவியத்தில் நாம் அதைப் பார்க்கலாம். இறந்துபோன தன் கணவனின் உயிரை எமனிடமிருந்தே சாவித்ரி மீட்கிறாள். பூமாதேவியின் ஆன்மாவாக சத்தியவானை சித்தரித்து, சூரிய புத்திரியான சாவித்ரி அவனை மணப்பது, சத்திய ஜீவியம் பூவுலகிற்கு வர வழி செய்கிறது என்பது சாவித்ரி காவியத்தின் நோக்கம். ஒருவகையில் பார்த்தால், சாவித்ரியில் வெளிப்படும் காதலை divine romance என்றுகூடச் சொல்லலாம். வாழ்க்கையில் சில சமயங்களில் அதிர்ஷ்டம் என்பது வலுக்கட்டாயமாக நம்மேல் திணிக்கப்படுவதுண்டு. உதாரணமாக சுதந்திரத்திற்கு முன்னால் தமிழ் நாட்டில் இருபெரும் காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே போட்டி எழுந்தபோது இடையில், எந்தப் பிரசித்தமும் இல்லாத சாதாரண தொண்டராக இருந்த காமராஜர் அவர்கள் TNCC பிரசிடெண்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அவர் எதிர்பார்க்காத ஒன்று. அம்மாதிரியே விருதுநகரில் வீட்டிலிருந்து துரத்தப்பட்டு பாக்கெட்டில் எட்டணாவுடன் மட்டுமே சென்னைக்கு வந்த ஒருவர், வியாபாரத்தில் ஈடுபட்டு சென்னையில் ஒரு பெரும் வர்த்தகப் புள்ளியானார். இப்படி வீட்டை விட்டு துரத்தப்படும்பொழுது, இப்படித்தான் அதிர்ஷ்டம் அவரைத் துரத்துகிறது என்று அவருக்குத் தெரியுமோ? கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட அரசியல்வாதி ஒருவர் உடனடியாகத் தனிக்கட்சி ஆரம்பித்து, அடுத்த தேர்தலில் அவரே முதன் மந்திரியானார். கட்சியிலிருந்து நீக்கப்படுவது என்பது அவமானம். அந்த அவமானத்திற்குப்பின் பெரும்புகழ் மறைந்துள்ளது என்பது அவருக்குத் தெரிந்திருக்குமா? இப்படி அதிர்ஷ்டம் நம்மை வலுக்கட்டாயமாகத் தேடிவருகின்ற இடங்களில் எல்லாம் சம்பந்தப்பட்டவர் வாழ்க்கையில் அவை பொன்னான நேரமாகும்.

வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஒருவரை நாடி வர முடிவு செய்துவிட்டால், அதை அவர் அறியாதிருக்கும்போது, வலுக்கட்டாயமாக அதிர்ஷ்டம் இப்படித்தான் அவர் வாழ்க்கையில் புகுந்து வரும். தகப்பனார் இறந்து போனால், லாங்பர்ன் எஸ்டேட் காலின்ஸ் கைக்குப் போய் குடும்பமே நிர்க்கதியாக நிற்க வேண்டிய பரிதாபத்திற்குரிய ஒரு நிலைமை வரும். அப்படிப்பட்ட ஒரு அவலநிலை அக்குடும்பத்திற்கு வரக் கூடாது என்று காலின்ஸ் முடிவு செய்து, பென்னட் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணக்க முடிவு செய்கிறான். நியாயமாகப் பார்த்தால், இதுவொரு பெருந்தன்மையான செயல்பாடாகும். இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு கஷ்டமான சூழ்நிலையில் ஒரு அதிர்ஷ்டமயமான வாய்ப்பு தம்மைத் தேடி வரும்போது, யாரும் அதைச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், காலின்ஸ் எலிசபெத்தின் எதிர்பார்ப்பின்படி மரியாதைக்குரியவனாகத் தென்படவில்லை என்பதால், அவள் அவ்வளவு பெரிய அதிர்ஷ்டத்தையும் வேண்டாம் என்கிறாள். வாழ வழியின்றி தவித்துக் கொண்டிருக்கும் எத்தனை பேர் இப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நழுவ விடுவார்கள்? ஆனால், லிஸ்ஸி இந்தக் காரியத்தைச் செய்திருக்கின்றாள் என்று நாம் பார்க்கிறோம். ஒரு மரியாதைக்கில்லாத ஆண்மகன் மூலம் அதிர்ஷ்டம் வரும்போது அந்த அதிர்ஷ்டத்தையும் மறுக்க பெரிய தைரியமும், அஞ்சா நெஞ்சமும் வேண்டும். அப்படிப்பட்ட அஞ்சா நெஞ்சமும், தைரியமும் லிஸ்ஸியிடம் தென்பட்டது. அந்தத் தைரியத்திற்கு வாழ்க்கை கண்டிப்பாகப் பெரிய பரிசு அளிக்கும். அந்தத் தைரியத்திற்குக் கிடைத்த பரிசுதான் பெம்பர்லி அவளைத் தேடி வந்தது.

காலின்ஸைவிட, டார்சி ஆண்மகன் என்று பார்த்தால் எவ்வளவோ தேவலை. ஆனால், அவனுடைய பணபலத்திற்குக்கூட லிஸ்ஸி மயங்கவில்லை. தன் சகோதரியின் திருமணத்தைக் கெடுத்து விட்டான் என்ற ஒரே காரணத்தினால், கோடீஸ்வர மணமகனின் திருமண வாய்ப்பையும் ஏற்க மறுத்தாள். மெரிட்டனில் உள்ள எந்தப் பெண்ணிற்கும், கனவிலும் எட்ட முடியாத உயரத்திலிருப்பவன் டார்சி. அவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை வருவதற்குக்கூட, கரோலின் ஒருத்திக்குத்தான் அந்தத் தகுதியும் உண்டு. லிஸ்ஸி, டார்சியை ஆசைப்படும் இடத்திலேயே இல்லை. ஆனால், இவள்தான் திட்டவட்டமாக டார்சியை மணக்க மறுத்துவிடுகிறாள். அவள் ஏன் அப்படிச் செய்தாள், எதை எதிர்பார்த்துச் செய்தாள் என்று கேட்டால், அதற்கெல்லாம் சரியான பதிலே இல்லை. நம் மனம் நியாயத்தை அளவுகடந்து பாராட்டினால், வாழ்க்கை வெகுசிறப்பாக அதற்குப் பதிலளிக்கும் என்று மட்டும் புரிந்து கொள்ளலாம்.

நம் மனம் பொன்னாக இருந்தால் நாம் எதிர்பார்க்காத விஷயங்கள்கூட நம்மைத் தானாக வந்தடையும். அப்படித்தான் டார்சி எலிசபெத்தை வந்தடைகிறான். எதிர்பாராதவருக்கு வாழ்க்கை எப்படியெல்லாம் பரிசளிக்கிறது என்பதற்கு “கோமதியின் காதலன்” என்று தேவன் அவர்கள் எழுதிய நாவலே சிறந்த உதாரணம். இக்கதையில் கதாநாயகன் பெயர் ரங்கராஜன். அவன் ஒரு ஜமீன்தார் குடும்பத்துப் பிள்ளையாவான். அண்ணனிடம் கோபித்துக்கொண்டு சென்னைக்கு ரயில் ஏறி வருகிறான். பஸ் நிறுத்தத்தில் ஒரு ரவுடியிடமிருந்து ஒரு இளம் பெண்ணைக் காப்பாற்றுகிறான். கண்டதும் காதல் என்பார்களே அதுபோல் அவனுக்கு அவளையும், அவளுக்கு அவனையும் பிடித்துப் போகிறது. பஸ் வந்த பிறகு அவள் புறப்பட்டுச் சென்று விடுகிறாள். அதன் பிறகு அவள் யார்? அவள் எங்குச் சென்றாள்? அவளை மீண்டும் பார்க்க முடியுமா? என்று கேட்டால் சந்தர்ப்பமே இல்லை என்றுதான் பதில் சொல்ல முடியும். ஆனால், இருவர் மனதிலும் எழும்பியது உண்மையான காதல். அதற்கு உயிருண்டு, ஜீவனுண்டு. ஆகவே அது செயல்பட ஆரம்பிக்கிறது. ரங்கராஜன் எங்குப் போவது என்றுகூட தெரியாமல் கால்போன போக்கில் நடந்து போகிறான். எதிரே வருபவருடைய கார் breakdown-ஆகி நிற்கிறது. இவனுக்குக் கார் ரிப்பேர் வேலை ஓரளவிற்குத் தெரியும். உதவ முன்வருகிறான். காரும் சரியாகி விடுகிறது. இவனே அதை ஓட்டிக் கொண்டு போய் கார் உரிமையாளரின் வீட்டில் விடுகிறான். பஸ் நிறுத்தத்தில் எந்தப் பெண்ணைப் பார்த்தானோ அந்தப் பெண் அந்த வீட்டில் இருக்கிறாள். அவளைப் பார்த்தவுடன் அங்கேயே இருந்துவிட வேண்டும் என்று அவனுக்குத் தோன்றுகிறது. அதற்கேற்றார்போல் அந்தக் கார் உரிமையாளரும், அவனைப்பற்றி விசாரிக்க, அவருக்கு ஒரு டிரைவர் தேவைப்படுகிறது என்று இவனுக்குத் தெரிந்து அங்கேயே டிரைவர் பணியில் அமர்ந்தும் விடுகிறான். இவன் பார்த்த பெண்ணோ ஜமீன்தார் வீட்டுப் பெண். இவனோ தான் ஒரு ஜமீன்தார் வீட்டுப்பிள்ளை என்பதை மறைத்து, ஒரு சாதாரண மானவன்போல் நடந்துக் கொள்கிறான். ஒரு சாதாரண டிரைவர்போல் அவன் நடந்துகொண்டாலும், அவன் மேலுள்ள பிரியத்தை அவள் விடவில்லை. அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகள் நடந்து, நான்காம்நாள் இவன் ஒரு ஜமீன்தார் வீட்டுப்பிள்ளை என்ற விஷயம் வெளியே வருகிறது. அவனை அழைத்துக் கொண்டு போக வந்திருக்கும் அவனுடைய தந்தையார், கோமதியை அவன் விரும்புகிறான் என்று புரிந்து கொண்டு அவளை முறையாகப் பெண் கேட்டுத் திருமணத்தையும் உறுதிபடுத்திக் கொள்கிறார். இதில் நாம் கவனிக்க வேண்டியது ஒரு பெண்ணைப் பார்த்த நான்காம் நாளே அவளைத் தன் மனைவியாக ஏற்று கொள்ளும் அளவிற்கு வாழ்க்கை அவனுக்கு அதிர்ஷ்டத்தைப் பரிசாக அளிக்கிறது. டார்சியும், இப்படித்தான் எலிசபெத்தைப் பார்த்துவிட்டு, அவளை மணமுடிக்க வேண்டும் என்று விரும்புகிறான். ஆனால், அவனுக்கு இருந்த அகம்பாவம், சுயநலம் எல்லாம் விலகி அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் பக்குவம் வருவதற்கு அவனுக்குப் பத்து மாதங்களாகிறது. ரங்கராஜனோ தான் ஜமீன்தார் வீட்டுப்-பிள்ளை என்பதையே காட்டிக் கொள்ளாமல் சாதாரண ஏழை driver-ஆக தன்னைக் காட்டிக் கொண்டாலும், உள்ளத்தால், அவன் சிறப்பானவன் என்பதால் வாழ்க்கை அவன் சுயரூபத்தை நான்கே நாட்களில் வெளிப்படுத்தி அவன் திருமண ஆசையைப் பூர்த்தி செய்து வைக்கிறது.

தாம் வாழ்க்கைக்கு உகந்த மனநிலையை எட்டிவிட்டோம் என்றால், கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பதைப்போல வாழ்க்கை இருக்கிறன்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளை நமக்குச் சாதகமாக மாற்றி நாம் தேடுவதை கைமேல் பரிசாகக் கொடுப்பதைப் பார்க்கலாம். P&P-இல் எலிசபெத், டார்சி உறவைப் பாருங்கள். திருமணம் செய்து கொள்வதாக இருந்தால், நீதான் கடைசி ஆள் என்று அவள் சொல்லிவிட்ட பிறகு ஏறக்குறைய அந்த உறவு முறிந்து விட்டது என்றே சொல்லலாம். ஆனால் அவளிடம் திட்டு வாங்கிய பிறகுதான் அவனே திருந்துகிறான். அவன் திருந்திய பிறகு வாழ்க்கை அவனுக்குப் பரிசளிக்க விரும்புகிறது. அது என்ன செய்கிறது? வேறு எங்கோ உல்லாசப் பயணம் போக திட்டமிட்டிருந்த எலிசபெத்தின் மாமாவின் மனதை மாற்றி, டார்சி இருக்கும் Derbyshire-க்கு அவர்களை வரவழைத்தது. இரண்டாவதாக அவன் ஊரில் இல்லை என்று தெரிந்து கொண்ட பின்புதான் அவளே அங்கு வந்தாள். ஆனால், வாழ்க்கையோ திடீரென்று அவன் மனதை மாற்றி ஒருநாள் முன்னதாகவே அவனை ஊருக்கு வரும்படி செய்து எதிர்பாராத வகையில் இருவரையும் சந்திக்க வைத்தது. லிடியா ஓடிப்போய் விட்டாள் என்ற செய்தியைச் சாதாரணமாக அவனிடம் சொல்லக்கூடிய பெண்ணே இல்லை அவள். இருந்தாலும் அவளையும் மீறி அவனிடம் சொல்ல வைத்தது. அது தெரிந்தால், அவன் விலகித்தான் போவான் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அவன் விலகிப் போகவில்லை. தன்னைத் திருத்திக்கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றுதான் எடுத்துக் கொண்டான். லிடியாவிற்குத் திருமணம் செய்து வைத்தபின்கூட அவளின் அன்பை மீண்டும்பெற தனக்குத் தகுதி வந்துவிட்டதாக அவன் நினைக்கவில்லை. அவன் மீண்டும் proposal கொடுத்தால், தான் ஏன் மறுக்க வேண்டும் என்று கேத்ரீன் டீ பர்க்கிடம் பேசியது தெரிந்தபின்தான் மீண்டும் proposal கொடுத்தால் மறுக்க மாட்டாள் என்ற துணிவு வந்து proposal-ஐயும் வழங்கி, தன் எண்ணத்தைப் பூர்த்தி செய்து கொண்டான். இந்தளவிற்கு வாழ்க்கை அவனுக்குச் சாதகமாக நிகழ்ச்சிகளை மாற்றியமைத்து இருக்கிறது என்றால், அவனுடைய பொன்னான மனத்திற்கு அப்படியொரு பரிசைத் தந்திருக்கிறது என்றர்த்தமாகிறது.

இப்படி, தான் மீண்டும் ணீணூணிணீணிண்ச்டூ கொடுத்தால், அவள் அதை ஏற்றுக்கொள்வாள் என்று அவன் உணர்கின்ற நேரம் அவன் வாழ்க்கையில் ஒரு பொன்னான நேரம். நமக்குக் கையில் கிடைக்கும் ஆண்டவனின் பிரசாதம் பார்ப்பதற்கு எளிதாகத்தான் தெரியும். ஆனால் அதைப் பெறுவதற்குகந்த மனநிலையில் இருப்பதோ மிகவும் கடினமாகும். உதாரணமாக ராமாயணத்தில் வரும் தேரை மனதில் எந்நேரமும் ராமனைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தேரைக்குக் கிடைத்தது என்ன? ராமனுடைய பாணம்தான் அதன் முதுகில் குத்தியது. பகவானைத் தேடி அன்னை வந்தபோது இடம் தெரியாமல் ஒரு வழிப்போக்கரை பகவானுடைய வீடு எது என்று கேட்கிறார். அவரும் இதுதான் என்று பகவானுடைய வீட்டைச் சுட்டிக் காட்டினார். அது என்னவோ ஒரு எளிய செயல்தான். ஆனால் பகவானை அன்னை தரிசித்த நேரம் அவர் வாழ்க்கையில் ஒரு பொன்னான நேரம். பகவானை தரிசித்தபின் அன்னைக்குக் கிடைத்தது என்ன? அன்னை கேட்காமலேயே பகவான் அவருக்கு ஒரு ஆழ்ந்த மௌனத்தைக் கொடுத்தார். அவர் வாழ்நாள் இறுதிவரை அந்த மௌனம் அவரை விட்டு விலகவில்லை. அப்படி ஒரு சிறந்த தெய்வீகமான மௌனத்தை ஒரு நிமிடத்தில் ஒருவரால் அடுத்தவருக்குக் கொடுக்க முடியும் என்றால், அவர் உண்மையிலேயே அவதார புருஷர்தான் என்று அன்னை உணர்ந்தார். பகவானைச் சந்தித்துவிட்டு மீண்டும் தன் இருப்பிடம் சென்றவர் அன்று தன் டைரியில் “பல்லாயிரக் கணக்கான ஜீவன்கள் உலகில் அந்தகாரத்தில் மூழ்கியிருந்தாலும், நான் கண்டவர் — ஸ்ரீ அரவிந்தர் — உலகில் இருக்கும்வரை இறைவனின் திருவுள்ளம் பூவுலகில் பலிப்பது நிச்சயம்” என்று குறிப்பிட்டார். இப்படி ஒரு மௌனம் பெற்றுக்கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது அன்னையின் வாழ்வில் ஒரு பொன்னான நேரமாகும். பகவான் பெற்ற ஆன்மீக சித்திகள் எல்லாம் அவருடனேயே தங்கி விட்டிருக்கும். அன்னை அவரிடம் வந்தபின்புதான் அந்த சித்திகள் எல்லாம் அவருடனேயே நின்று விடாமல் அன்னையின் மூலம் உலகெங்கும் பரவின. ஆகவே அன்னை வந்தது பகவானுடைய வாழ்க்கையில் ஒரு பொன்னான நேரம் என்று கூறலாம். பகவானுடைய பூரண யோகத்தில் சூட்சும பயிற்சிகளுக்கு முக்கிய இடம் உண்டு. அந்தச் சூட்சும பயிற்சிகளையெல்லாம் பகவானிடம் வரும்முன்பே அன்னை தியோன் என்பவரிடம் கற்றுக் கொண்டார். முதலில் அவரைத்தான் தான் கனவில் கண்ட கிருஷ்ணனாகக் கருதினார். பின்பு அவர்தான் God of death, மரணத்தின் தலைவன் என்று அறிந்து, அவரை விட்டு விலக ஆரம்பித்தார். சூட்சும உலகில் சஞ்சாரம் செய்யும்போது, ‘வாழ்வின் மந்திரம்’ என்று சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஒரு மந்திரத்தைக் கண்டறிந்தார். ஆனால் அதை தியோனிடம் தர மறுத்து, பதிலாக பகவானைக் கண்டபோது அவரிடமே கொடுத்தார். பகவான் யோகம் செய்வதற்காக புதுவை வந்தார் என்றாலும், ஆசிரமம் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதிலில்லை. அந்த எண்ணம் தோன்றி செயல்படுத்தியவர் அன்னைதான். அம்மாதிரியே ஆரோவில்லை நிறுவ வேண்டும் என்று அன்னைதான் முடிவு செய்தார். இப்படித் தன்னிறைவாக வாழ்ந்து கொண்டிருந்த பகவானை, உலகத்திற்குத் தெரியப்படுத்தி, அவரை உலகத்தின் சொத்தாக மாற்றியவர் அன்னைதான். அவர் பகவானை முதலில் சந்தித்தது 1914-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதியாகும். நிரந்தரமாக அவருடனேயே வந்து தங்கியது, ஏப்ரல் 24-ஆம் தேதியாகும். இந்த இரு நாட்களும் பகவானுடைய வாழ்க்கையில் பொன்னான நாட்களாகும் என்று நாம் சொல்லலாம்.

முற்றும்.

***************



book | by Dr. Radut