Skip to Content

1. உங்களுக்குக் கொடுக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்

உங்களுக்குக் கொடுக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்

அன்பர் உள்ளம் அழகானது, அற்புதமானது, அவரேயிதையறியாதது, பெரும்பாலான அன்பர்கள் அறியாதது. தாழ்ந்த மனிதனிலும் உயர்ந்த அம்சம் இது. மனிதன் தாழ்ந்தவனில்லை. உயர்ந்தவனுமில்லை. மனிதன் தெய்வப் பிறவி. ஐயோ பாவம் என உதவினால் 6 மாதத்துப் பாவம் கையோடு வரும் என்று மக்கள் மனிதனை அறிந்துள்ளனர். அது சரி. அதற்கெதிரான உண்மையுண்டு. எல்லா மனிதனுக்கும் பொருந்தும். அன்பர்கட்கு அதிகமாகப் பொருந்தும். நல்ல குடும்பம். சிரமம் வந்தது. படிப்பும், திருமணங்களும் முடிக்க வேண்டிய நேரம் பொறுக்க முடியாத சிரமம் வந்தது. அன்னையிடம் வந்து அவரும் அன்பரானார். எவரையும் உதவி கேட்கும் நிலையில்லை. ஒரு உறவினர் வந்தார். உறவைக் கொண்டாடினார். மனம் இதமானது. நல்ல மனம் நல்ல காரியத்தில் பயன்படுமா? மனம் வேறு, செயல் வேறு. "நல்ல மனமுள்ளவர்க்கு உதவும் திறன் வேண்டும் என அன்பர் பிரார்த்திக்கலாம்" என இருவரும் சேர்ந்து முடிவெடுத்தனர். ஓரிரு வாரங்களில் அன்னை செயல்பட்டார். இது 1990. சம்பளம் பெற்று குடும்பம் செய்பவருக்குத் தேவை சில இலட்சம். அது சிரமமான நேரத்தில் ஆயிரம் புரளாது. அன்னை செயல்பட்டார். ஆயிரங்களைக் காணாத நல்ல மனமுடையவருக்கு இலட்சங்களாகப் பணம் வந்தது. வந்தது அவருக்கு வரவில்லை. தேவைப்பட்ட அன்பருக்கு அவர் பிரார்த்தனையால், வந்த சிரமம் தீர்ந்தது. அதன்பின் நடந்தது அற்புதம், அது அன்னையின் அற்புதம். கொடுத்தவருக்குக் கொடுத்த அளவு அடுத்த மாதமும், அதைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வந்தது. பெற்றவர் மனம் நன்றியாலும் நல்லுணர்வாலும் அன்னை பக்தியாலும் நிறைந்ததால் கொடுத்தவரை கொடுத்து வைத்தவர் ஆக்கியது. 1955க்குப் பின் சத்திய ஜீவியம் வந்த பின் மனிதனின் நிலை இதுவே.

*******



book | by Dr. Radut