Skip to Content

12. அன்னை இலக்கியம் - கலாகுட்டி நடத்திய கல்யாணம்

அன்னை இலக்கியம்

கலாகுட்டி நடத்திய கல்யாணம்

இல. சுந்தரி

மதியம் 12.30 மணி, ‘அரவிந்த வித்யாலயா’ பள்ளியின் தொடக்கப்பள்ளி மதிய இடைவேளை மணியொலித்தது. சிறுவர், சிறுமியர் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வெளியேறினர். இனி மீண்டும் 2 மணிக்குத்தான் பள்ளி தொடங்கும்.

மதியவுணவு கொண்டு வந்த குழந்தைகள் சிறுசிறு குழுக்களாக வழக்கமாகத் தாம் உணவு உண்ணும் இடத்திற்கு விரைந்தனர். வீட்டிற்குச் செல்லும் குழந்தைகள் வெளி வாயிலை நோக்கிச் சென்றனர்.

கலா என்ற நான்காம் வகுப்பு மாணவி வாயிலுக்கு முன்புறமுள்ள மரத்தடியில் உட்கார்ந்தாள். இவள் சகோதரி மாலா அந்தப் பள்ளியின் மற்றொரு பகுதியிலுள்ள மேனிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிப்பவள். 1 மணிக்குத்தான் அவளுக்கு வகுப்பு முடியும்.

அப்பள்ளியின் இரு பிரிவுகளாகத் தொடக்கப் பள்ளியும், மேனிலைப் பள்ளியும் உள்ளன. இங்குள்ளவர்கள் அங்கும், அங்குள்ளவர்கள் இங்கும் அனுமதியின்றி செல்லக் கூடாது. ஆனால் இரண்டு பள்ளிகளுக்கும் பிரதான வாயில் ஒன்றே. அங்குதான் இரண்டு பிரிவு பள்ளி மாணவர்களும் சந்திக்க முடியும். எனவேதான், மாலாவின் வருகைக்காகக் கலா காத்திருந்தாள்.

இவர்கள் தினமும் மதியவுணவு கொண்டு வருவது வழக்கம். என்றேனும் அம்மாவிற்கு முடியவில்லை என்றாலோ, வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றாலோ சாப்பாடு கொண்டு வராமல் மதியவுணவு உண்பதற்கு வீட்டிற்குச் செல்வது வழக்கம். இன்று அம்மாவிற்கு வேலையதிகம். அதனால் இருவரையும் மதியவுணவிற்கு வீட்டிற்கு வரச்சொல்லி விட்டாள். அப்படி வர நேரும் போதெல்லாம் இரண்டு பேரும் சேர்ந்து வர வேண்டும் என்றும் அம்மா சொல்லியிருந்தாள். அதனால்தான் அக்கா மாலாவின் வரவிற்காகக் கலா காத்திருந்தாள்.

ஒரு மணியாகிவிட்டது. மேனிலைப்பள்ளியின் மதிய இடைவேளை மணி ஒலித்தது. மாணவர் குழாம் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வெளியேறியது. மாலா வந்து தன்னை அழைத்துப் போவாள் என்று காத்திருந்த கலா எல்லோரும் வெளியேறிய பின்னும் மாலா வராததால் எழுந்து தேட ஆரம்பித்தாள். மாலாவின் வகுப்புத் தோழிகளும் கண்ணில் படவில்லை. ஒரு வேளை மறதியாகத் தன்னை விட்டு விட்டுப் போய்விட்டாளோ என்றெண்ணியவாறு, பசி, கோபம், ஏமாற்றத்துடன் விரைவாக வீடு நோக்கி நடந்தாள்.

வீட்டு வாயிலில் மாலாவின் செருப்புகள் கிடந்தன. அதைக் கண்டதும் கலாவின் கோபம் மேலும் அதிகரித்தது. விரைந்து சென்று, ‘அம்மா மாலா வந்தாச்சா?’ என்றாள்.

அம்மா பதிலேதும் பேசாமல் ‘உம், உம்’ என்றாள். ‘இரண்டு பேரும் சேர்ந்து வரணும்னு நீதானே சொன்னே. அவ என்னைத் தனியாவிட்டுட்டு வந்திட்டா’ என்று சிணுங்கினாள்.

‘அவமேல தப்பில்லை கலா. அவளுக்குக் காலையிலேயே வயிற்றுவலியாம். துடிச்சு அழுதிருக்கா. அதனால அவளோட டீச்சரே அவளை ஆயாவுடன் அனுப்பிட்டாங்க. அவளை டாக்டரம்மாகிட்டே அழைத்துப் போய் மருந்து வாங்கிக் கொடுத்தேன். இப்பதான் தூங்கறா. அவ உன்னை வேணும்னு விட்டுட்டு வரலை’ என்று அம்மா சமாதானம் செய்தவுடன், பாசத்துடன் உள்ளே போய் தூங்கிக் கொண்டிருக்கும் மாலாவைக் கனிவுடன் பார்த்தாள்.

அம்மாவிடம் வந்து, ‘அம்மா! மாலா பாவம்மா, நான் தெரியாம சொல்லிட்டேம்மா’ என்று மன்னிப்பு வேண்டினாள்.

‘சரி, சரி, நீ சாப்பிட வா. இப்போதே நேரமாகிவிட்டது. சாப்பிட்டுவிட்டு, சீக்கிரம் ஸ்கூல் போக வேண்டாமா?’ என்று கூறிய வண்ணம் அம்மா அவளுக்குத் தட்டில் பரிமாறினாள்.

கலா சுரத்தில்லாமல் சாப்பிட்டாள். ‘ஏன் என்னவோ போலிருக்கிறாய். சரியாகச் சாப்பிடு’ என்றாள் அம்மா.

‘எனக்கு சாப்பிட பிடிக்கலம்மா’ என்றாள் கலா. அம்மா பதில் பேசாது சாதம் போட்டாள். கலா விருப்பமின்றிச் சாப்பிட்டாள்.

‘சரி, புறப்படு நேரமாகிவிடும், அப்புறம் உள்ளே விடாமல் பனிஷ்மெண்ட் தருவார்கள்’ என்றாள் அம்மா. ‘நான் மட்டும் தனியா போகணுமா அம்மா?’ என்று கேட்டுவிட்டுத் தயங்கித் தயங்கி நின்றாள்.

நீ தனியாகப் போக வேண்டாம். வேண்டுமானால் நானே உன்னைக் கொண்டு விடுகிறேன் என்று அம்மா புறப்படத் தயாரானாள்.

‘போம்மா, எனக்கு ஸ்கூல் போக பிடிக்கல. நானும் மாலாவுக்குக் குணமானதும் அவளோடு சேர்ந்தே போகிறேனேம்மா’ என்று கெஞ்சிக் கேட்டாள்.

‘அப்புறம் மிஸ் லீவு லெட்டர் கேப்பாங்க, என்னவென்று சொல்வாய்?’ என்று நியாயமான காரணத்தை அம்மா சொன்னாள்.

‘எனக்கும் வயிற்று வலி என்று சொல்லிவிடுவேன்’ என்றாள் கலா.

‘என்ன புத்தியிது? பொய் சொல்லும் குணம். வாராவாரம் தியானமையத்திற்குப் போகிறோம். பொய் சொல்லக்கூடாது. பொய் சொன்னா மதர்க்குப் பிடிக்காதுன்னு படிச்சுப்படிச்சுச் சொல்றாங்க. நம்ம வீட்ல அன்னையை வைத்துக் கொண்டு பொய் பேசினா அன்னை இங்க இருக்கப் பிரியப்படமாட்டாங்க’ என்றாள் அம்மா.

துவண்டு போனாள் சிறுமி. அவளுக்கு அன்னையை மிகவும் பிடிக்கும். அவள் அப்பா தீவிர அன்னை பக்தர். எது செய்தாலும் இது அன்னைக்குப் பிடிக்காதது. இது அன்னைக்குப் பிடித்தது என்ற கோணத்தில்தான் செயல்படுவார். திடீரென்று தன் கெட்ட புத்திக்குக் கலா வெட்கப்பட்டாள்.

என்றாலும் மாலா வராமல் தான் மட்டும் போகப் பிடிக்கவில்லை அவளுக்கு. படிக்கும் காலத்தில் திடீரென இப்படிச் சுதந்திரவுணர்வு பிள்ளைகளுக்கு வருவது இயல்பு. குறித்த நேரத்தில் பள்ளி செல்லும் அந்தக் கட்டுப்பாடு, வீட்டிலுள்ளவர்கள், மற்றும் சுதந்திரமாகச் செயல்படுபவர்கள் போன்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது துன்பமாக இருக்கும். அந்த நிலையில்தான் இப்போது கலா இருந்தாள்.

அம்மா அவளை மெல்லச் சமாதானப்படுத்த முயற்சி செய்தாள். ‘அப்படியே லீவு போட்டாலும் சந்தோஷமா விளையாட முடியாது. தூங்கலாமென்றால் படிக்கும் நேரத்தில் சோம்பல்பட்டால் அன்னைக்குப் பிடிக்காது. அதற்குப் பதிலாக வேறொரு நாள் நல்ல காரணத்திற்காக லீவு போட்டால் சந்தோஷமாகவுமிருக்கலாம்’, என்றாள் அம்மா.

‘வேறு என்ன நல்ல காரணம்?’ என்றாள் கலா. ‘மகா சித்திக்குக் கல்யாணம் நிச்சயமானதும் நாலு நாட்கள் லீவு போட்டுவிட்டு எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாய் போகலாம்’ என்றாள் அம்மா.

‘சித்தி கல்யாணம் ஏன் சீக்கிரம் வரலை?’ என்றாள் கலா.

‘ஓ, அதுவா? தாத்தாவுக்குப் பணம் கிடைக்கல. பணம் கிடைச்சதும் கல்யாணம் நடக்கும்’ என்றாள் அம்மா.

குழந்தை சமாதானம் ஆகிவிட்டாள். ஆம் லீவு போட வேண்டாம். அது சரியில்லை. ஆனால் சீக்கிரம் மகா சித்தியின் கல்யாணம் வரவேண்டும் என்பதே இப்போதைய ஆர்வம். மனதைத் தேற்றிக் கொண்டு பள்ளிக்கூடம் சென்று விட்டாள்.

ஆனால், சீக்கிரம் தாத்தாவிற்குப் பணம் கிடைக்க வேண்டும். சித்திக்குக் கல்யாணம் வரவேண்டும் என்பதே அவள் நினைவாயிற்று.

மாலையில் வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் யோசனை கேட்க முடிவு செய்தாள்.

‘அம்மா! அப்பா எங்கேம்மா?’ என்றாள். ‘இன்றைக்கு என்ன கிழமை? அப்பா எங்கே போவார்?’ என்று அம்மாவும் இவளைப் பதில் கேள்வி கேட்டாள்.

ஆம், இன்று வியாழக்கிழமை. யோகா சென்டரில் பூரண யோகக் கூடல். இது இவர்கள் வீட்டிலிருந்து சற்றுத்தொலைவில் உள்ளதால் அப்பா மட்டும் சென்று விடுவார். ஞாயிற்றுக்கிழமை தியானக்கூடல் இவர்களுக்கு அருகில் உள்ள தெருவில் நடப்பதாலும், எல்லோருக்கும் அன்று விடுமுறையாக இருப்பதாலும் அன்றைய கூடலுக்கு எல்லோருமே செல்வார்கள். அது நினைவிற்கு வரவே தியான மையச் சொற்பொழிவில் அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனை பலிப்பது பற்றியும், காணிக்கை பற்றியும் கேட்டதை நினைத்துக் கொண்டாள். இவள் அம்மாவும் அப்பாவும் அதைப்பற்றி மனம் உருகப் பேசிக் கொள்வதையும் கேட்டிருக்கிறாள். உடனே அவளுக்குத் தியான மையத்திலுள்ள அன்னையின் திருவுருவம் நினைவிற்கு வந்தது. தேர்வில் வெற்றி பெற்றவர்கள், வேலை கிடைக்கப் பெற்றவர்கள், நோய் குணமானவர்களெல்லாம் அந்த அன்னை முன்பு வணங்கி நன்றியால் நெகிழ்வதை அவள் பார்த்திருக்கிறாள்.

வரும் ஞாயிற்றுக்கிழமை கூடலின்போது தானும் காணிக்கை வைத்து மகா சித்தியின் கல்யாணத்திற்காகப் பிரார்த்திக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணிக்கு எல்லோரும் மையத்திலிருந்தனர். கூடல் தொடங்கியது. சாவித்ரி படித்து, அன்பர் அனுபவம் கூறி, சொற்பொழிவும் நடந்தது. அன்றைய சொற்பொழிவில் அவளுக்கு இரண்டு கருத்துகள் கிடைத்தன.

நியாயமான பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படும். உண்மையான அன்பிற்கு அன்னை பலிப்பார் என்பவை அவளுக்குத் தெம்பூட்டின.

தியானம் முடிந்து அவரவர்கள் பணிவுடன் அன்னைக்குக் காணிக்கை செலுத்தி வணங்கினர். கலாவும் தன் சேமிப்புப் பணத்திலிருந்து கொண்டு வந்த பணத்தை அன்புடன் சமர்ப்பித்து வணங்கினாள். மனதிற்குள் அன்னையிடம் தீவிரமாகப் பிரார்த்தித்தாள். அன்னையே! எங்கள் தாத்தாவிற்குப் பணம் கிடைக்க வேண்டும். சீக்கரம் எங்கள் மகா சித்தியின் கல்யாணம் நடக்க வேண்டும். நாங்கள் மகிழ்ச்சியோடு அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று கள்ளமில்லாமல் நெஞ்சுருக வேண்டினாள்.

கலாவின் தாத்தா வீட்டில், திருமணத்திற்குக் காத்துக் கொண்டிருக்கும் இளைய மகள் மகாவைப் பற்றிய கவலை காசிநாதனுக்கு. தமக்கிருக்கும் நிலத்தை விற்று மகாவின் கல்யாணத்தையும் நடத்தி மீதித் தொகையை வங்கியில் வைத்தால் தங்களுக்கும் பாதுகாப்பு என்று எண்ணியிருந்தார். நெருக்கடி என்று நிலத்தை விற்கப் போனால் இரக்கமின்றி விலை கேட்கிறார்கள். அடிமாட்டு விலைக்கு விற்றால் மற்ற செலவுகளுக்கு என்ன செய்வது? மகா சற்றுப் பார்வையாக, நிறமாக இருந்திருந்தால் அவளைத் திருமணம் செய்து கொள்ள யாரேனும் ஆர்வமுடன் வரலாம். அவளோ பார்வைக்குச் சுமாராய் மாநிறமாயிருக்கிறாள். அவள் நல்ல குணமுள்ள, குடும்பத்திற்கு ஏற்ற பெண்தான். ஆனால் புறத்தோற்றத்திற்குக் கொடுக்கும் மதிப்பை அகத்தின் அழகிற்கு எத்தனை பேர் கொடுக்கிறார்கள். ஜாதகமும் அவளுக்கு அத்தனை சிறப்பாக அமையவில்லை. அவள் ஜாதகத்தையும், மாநிறத்தையும் இட்டு நிரப்ப வரதட்சணை தேவைப்படுகிறது. இவள் ஒரு பெண்தான் கல்யாணத்திற்கு இருப்பவள். இனி பிரச்சனை இல்லை என்று நிலத்தை விற்கப் போனால் குறைந்தவிலை கேட்கிறார்கள். இந்த நிலைமையில் நல்ல வரன் வந்திருக்கிறது. மாப்பிள்ளை வெளிமாநிலத்தில் பணிபுரிவதால் வரனின் பெற்றோர் வந்து மகாவைப் பார்த்துவிட்டு வரதட்சணை பேசி விட்டுப் போய்விட்டனர். பணம் சேர்ப்பது தன் பங்கு.

ஆத்திரத்தில் செய்வதறியாது ஊஞ்சலில் அமர்ந்து காலை அழுத்தி விந்தி வீசி, வீசி ஊஞ்சலை ஆட விடுகிறார். அவர் மனைவி அவருடைய மனவுளைச்சல் புரிந்து செய்வதறியாது தவிக்கிறாள். அவர் கண்களில் படுமாறு சற்று தூரத்தில் வந்து நிற்கிறாள். ‘என்ன?’ என்பது போல் கோபமாய்ப் பார்க்கிறார்.

‘கோபப்பட்டால் உடம்பிற்கு ஆகாது என்று டாக்டர் சொல்லியிருக்கிறார் அல்லவா?’ என்று மெல்லத் தயங்கித் தயங்கிக் கூறினாள்.

‘என்ன செய்யச் சொல்கிறாய்? என் நிலைமை அப்படி’ என்றார் கோபம் தணியாமல்.

‘உங்கள் கவலை நியாயமானதுதான். ஆனால் அதற்குக் கோபப்பட்டு என்ன பயன்? நான் கடவுளை வேண்டிக் கொண்டேயிருக்கிறேன். நல்லவழி பிறக்கும். நம்பிக்கையுடன் இருங்கள்’ என்று ஆறுதலாய்க் கூறினாள்.

அதற்குள் வாசலில் ‘போஸ்ட்’ என்று தபால்காரரின் குரல் கேட்டது. ஆவலுடன் இருவரும் வெளியே வர, மகாவும் உள்ளேயிருந்து வாசல்வரை வந்தாள். எல்லோருக்கும் பிள்ளை வீட்டாரிடமிருந்து ஏதேனும் தகவலாய் இருக்குமோ என்ற ஆர்வம், எதிர்பார்ப்பு.

தபால்காரர் ஒரு கவரைக் கொடுத்து விட்டுப் போனார். கவர் மகாவின் பெயருக்கு வந்திருந்தது. யார் போட்டிருப்பார்கள். எல்லோரும் ஆவலுடன் பார்த்தார்கள். அன்னை தியான மையத்திலிருந்து வந்திருந்தது. எல்லார் முன்பும் கவரைப் பிரித்தாள் மகா. ஒரு காணிக்கை ரசீதும் ஸ்ரீ அன்னையின் படமும் மலர்ப் பிரசாதமுமிருந்தது.

‘நீ காணிக்கை அனுப்பியிருந்தாயா என்ன?’ என்று அம்மா கேட்டாள்.

‘நான் ஒன்றும் அனுப்பவில்லையே’ என்றாள் மகா. ‘ஒரு வேளை உன் அக்கா வசுமதி உனக்காக அனுப்பிருக்கக் கூடும்’ என்றாள் அம்மா.

‘என்ன அது காணிக்கை? யாருக்கு?’ என்றார் காசிநாதன். ‘வசுவும், அவள் வீட்டாரும் அன்னை பக்தர்கள் அவள் சொல்லியிருக்கிறாள். அன்னைக்குக் காணிக்கை செலுத்தி பிரார்த்தனை செய்தால் பலிக்கும் என்று மகாவின் திருமணத்திற்காக வேண்டிக் கொண்டு நம் பெயரில் காணிக்கை செலுத்தியிருப்பாள்’ என்று அம்மா பெருமிதத்துடன் சொன்னாள்.

மகாவிற்கு மகிழ்ச்சி. தனக்காக அக்கா தன் பெயருக்குக் காணிக்கை அனுப்பியிருக்கிறாள் என்றவுடன் பிரசாதத்தை நன்றியுடன் கண்ணில் ஒற்றிக்கொண்டு உள்ளே ஓடிவிட்டாள்.

காசிநாதன் தன் மனச்சோர்வு நீங்க என்ன செய்வது என்று தெரியாமல், ‘இறைவா! எல்லோரும் உன்னை வேண்டிக் கொள்ள நினைக்கிறார்கள். நானோ, என் முயற்சி, என் கடமை என்று எண்ணிச் சோர்ந்து போகிறேன். நானும் அவர்களைப் போல் உன்மீது நம்பிக்கை வைத்துச் செயல்பட்டால் நடக்குமோ?’ என்று உள்ளூர எண்ணிய வண்ணம் உட்கார்ந்திருந்தார்.

(அன்னை உலகுக்குப் புதிய சக்தியைக் கொண்டு வந்துள்ளார். அது, சட்டம் தவறினாலும், தர்மம் தவறினாலும் தான் தவறாது செயல்படும். கோர்ட் சட்டத்தை நிலைநிறுத்தத் தவறினாலும் சமூகத்தின் மூலம் அன்னை நீதி வழங்குவார். அன்னை தம் சூழலால் நமக்கு உதவும் நபர்களாகவும், சந்தர்ப்பமாகவும் நம்மைப் புரிந்துகொள்ளும் சூழ்நிலையாகவும் செயல்படுவார்.)

‘என்ன காசி? ஏன் சோர்ந்து போய் உட்கார்ந்திருக்கிறாய்?’ என்று கேட்டுக் கொண்டே மாலி என்ற மகாலிங்கம் வந்தார்.

‘அடடே! மாலியா? வா வா, ஊருக்குப் போய் எத்தனை மாதம் ஆயிற்று? எங்களையெல்லாம் மறந்து விட்டாயா என்ன?’ என்று நெடுநாள் வெளியூர் சென்றிருந்த தன் பால்ய நண்பனை வரவேற்றார் காசிநாதன்.

‘என்ன செய்ய காசி? பிள்ளை என்னை விடமாட்டேன் என்கிறான். எனக்கோ இங்குத் தோட்டம், துரவு என்று நடந்து திரிந்து, சென்னை பிடிக்கவில்லை. ஆனாலும் ஒரே மகன். இந்தவூரில் நான் தனியேயிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. மெதுவாகச் சமாளித்து விட்டு வந்துவிட்டேன். அது போகட்டும். மகா கல்யாணம் என்னவாயிற்று? நல்ல வரன் ஏதேனும் வந்ததா?’ என்று பரிவுடன் விசாரித்தார்.

‘நல்ல வரன் வந்திருக்கிறது. என்ன குறைந்தாலும் ஐம்பதாயிரம் இல்லாமல் முடியுமா? நிலத்தை விற்க முடிவு செய்துவிட்டேன். அவசரம் என்றால் விலை குறைத்துக் கேட்கிறார்கள். என் சொத்தே அதுதான். இவ்வளவு குறைத்து விற்றால் வாழ்நாள் பூரா என்ன செய்வது? அதுதான் யோசனை இப்போது’ என்று நண்பனைப் பார்த்த மகிழ்வில் பேச ஆரம்பித்தார்.

‘இத்தனை நாட்கள் நான் அங்கேயே தங்கி விட்டதால் இப்போது கையில் நிறைய பணமிருக்கிறது. ஐம்பதினாயிரம் தானே வேண்டும். நான் தருகிறேன். நிலத்தை விற்பது பற்றிப் பொறுமையாக யோசிக்கலாம்’ என்று கூறினார் மாலி.

‘என்ன மாலி இப்படிச் சொல்கிறாய்? ஐம்பதினாயிரம் என்பது சிறிய தொகையா என்ன? என்னை நம்பிக் கொடுப்பதாய்ச் சொல்கிறாயே’ என்றார்.

‘உன்னை நம்பிச் சொல்லவில்லை. கடவுளை நம்பிச் சொல்கிறேன். உனக்குப் பொய் பேசத் தெரியாது. நீ ஏமாற்ற மாட்டாய். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு பெண்ணின் வாழ்வு என்னால் மலர்ந்தால் சந்தோஷம்தானே. ஏதோ உள்ளுக்குள் ஒன்று உனக்கு உதவச் சொல்கிறது’ என்றார் மாலி.

‘சரி, மாலி. நான் இப்போதே மாப்பிள்ளை வீட்டினருடன் பேசுகிறேன்’ என்று சுறுசுறுப்புடன் செயல்பட ஆரம்பித்தார். அதற்குள் மாப்பிள்ளை பையன் லீவு எடுத்துக்கொண்டு வந்திருக்கிறான். அவன் சிறந்த அன்னை பக்தன். எனவே தன் திருமணத்திற்குத் தன் பெற்றோர் வரதட்சணை பேசியிருப்பது அவனுக்குச் சம்மதமில்லை. அதனால் பெண் வீட்டாருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட அவன் தந்தை, வரதட்சணை வேண்டாம் எனவும் பையன் ஆடம்பரமின்றிக் கல்யாணம் செய்யப் பிரியப்படுவதாயும், நல்ல நாள் பார்க்கும்படியும் சொன்னார். எனவே, மகாவின் திருமணம் உறுதியாயிற்று. ஏற்கனவே புகைப்படம் மூலம் பெண்ணும், ஆணும் ஒருவரையொருவர் பார்த்திருந்தனர். விசாரித்தவரை பையன் நல்ல குணம் எனவும் தெரிந்திருந்தது.

பெண் வீட்டார் மகிழ்ச்சிக்குக் கேட்க வேண்டுமா என்ன? உடனே மகாவின் அப்பா தன் மூத்த மகள் வசுவிற்கும், மாப்பிள்ளைக்கும் இந்த மகிழ்ச்சியைத் தெரிவித்து திருமணத்திற்கு முன்னதாகவே புறப்பட்டு வரும்படி கடிதம் எழுதிவிட்டார்.

பள்ளிக்கூடம் முடிந்து, கலாவும், மாலாவும் வீட்டிற்கு வந்தனர்.

அம்மா எங்கோ வெளியில் புறப்படத் தயாராக இருந்தாள்.

‘கலா, மாலா இரண்டு பேரும் சீக்கிரம் கைகால், முகம் கழுவி பால் குடித்துவிட்டுப் படிக்க உட்காருங்கள். தியான மையம் சென்று வந்து விடுகிறேன்’ என்றாள் அம்மா.

‘இன்று வெள்ளிக்கிழமைதானே?’

‘இன்று ஏதேனும் சிறப்புக் கூடல் உண்டா?’ என்றாள் கலா.

‘இன்றைக்கு அன்னைக்கு நன்றி சொல்லிவரப் போகிறேன்’ என்றாள் அம்மா.

‘எதற்கு நன்றி சொல்லப் போகிறாய்?’ என்றாள் மாலா.

‘மகா சித்திக்குக் கல்யாணம் முடிவாகிவிட்டது என்று தாத்தா நம்மை எல்லாம் புறப்பட்டு வரச்சொல்லி எழுதியிருக்கிறார்’ என்றாள் அம்மா.

‘அப்படியானால் நானும் உன்னுடன் வருகிறேனம்மா. நானும் அன்னைக்கு நன்றி சொல்ல வேண்டும்’ என்றாள் கலா ஆர்வத்துடன். அவள் பிரார்த்தனை பலித்துவிட்டது.

நியாயமான காரணத்தைக் கூறி லீவு லெட்டர் அனுப்பிவிட்டு எல்லோரும் ஊருக்குச் சென்றனர். தாத்தா, பாட்டி சித்தி யாவரும் இவர்களை அன்புடன் வரவேற்றனர்.

கலாவின் தந்தை மூத்த மாப்பிள்ளை என்பதாலும், தம் பிள்ளைபோல் நடப்பவராதலாலும் அவரிடம் மனம் திறந்து பேசினார் காசிநாதன்.

மகாவின் திருமணத்தை புதுமாப்பிள்ளையின் விருப்பத்தால் தான் தாம் ஆடம்பரமின்றிச் செய்வதாய்க் கூறியதுடன் அவர் அன்னை பக்தரென்றும் அன்னை முறைப்படி வரதட்சணை, ஆடம்பரம் எதுவும் கூடாது எனக் கூறியதாயும் சொன்னார்.

அப்போது அங்கு வந்த கலா, ‘தாத்தா! நான் நம்ப மகா சித்திக்குச் சீக்கிரம் கல்யாணம் வரவேண்டுமென்று அன்னையிடம் பிரார்த்தனை செய்தேன். அதனால்தான் சீக்கிரம் கல்யாணம் நடக்கப் போகிறது. அன்னையிடம் உண்மையாக இருந்தால் நடக்கும் என்று தியான மையத்தில் சொன்னார்கள்’ என்று கள்ளமின்றிப் பேசினாள் சிறுமி.

பாப்பா சொல்வது சரிதான் என்று சொல்லிக் கொண்டே புது மாப்பிள்ளையாகப் போகும் அருண் வரவே எல்லோரும் மகிழ்ந்து அவனை வரவேற்றனர்.

முற்போக்குச் சிந்தையும், அன்னை பக்தியும் கொண்ட அருண் தன்னை மணக்கப் போகும் பெண்ணிற்குப் பரிசாக பட்டுப்புடவையும், பொன்னும் கொண்டுவந்திருந்தான்.

இவன் புதுமாப்பிள்ளை என்று புரிந்தவுடன் கலா அவனிடம் சென்று, ‘உங்களை அன்னைதானே அனுப்பினார்?’ என்று நம்பிக்கையுடன் கேட்டாள்.

‘ஆமாம்மா. அன்னை அனுப்பித்தான் நான் வந்தேன்.’ என்று குழந்தையிடம் கூறியவன், மேலும் பெரியவர்களிடம் பேசினான்.

‘நான் அன்னையை நம்புகிறவன். பொய், போலி, ஆடம்பரம் அன்னைக்குப் பிடிக்காது. வரதட்சணையும் அன்னைக்குப் பிடிக்காதது. இந்தக் கல்யாணம் தள்ளிப்போவதன் உண்மையான காரணம் எனக்குத் தெரியாது. பெண்ணின் நல்ல குணத்தை மட்டுமே விரும்பி கல்யாணத்திற்குச் சம்மதித்தேன். பெற்றோரைக் கலந்து பேசியபோது உங்களிடம் வரதட்சணை தரப் பணமில்லாமல் கல்யாணம் தள்ளிப் போவதாய் அறிந்தேன். உடனே வரதட்சணை வாங்கக் கூடாதெனச் சொல்லிவிட்டேன். இதனால் நான் என் பெற்றோரை அவமதிக்க மாட்டேன். அவர்கள் மீது எனக்கு அன்பும் மரியாதையும் குறையாது. இது தப்பு என்பதை எடுத்துச் சொன்னேன். குழந்தை சொன்னதுபோல் அன்னைதான் என் மூலம் என் பெற்றோரை ஏற்க வைத்தார்’ என்றார்.

‘எங்கள் மகளுக்கு இவ்வளவு நல்ல மாப்பிள்ளையைத் தந்தருளிய அன்னையிடம் நாங்களும் பக்தியுடனும், நன்றியுடனும் நடந்து கொள்வோம்’ என்றார் காசிநாதன்.

மாநிறம் என்றும், குள்ளம் என்றும் வரதட்சணையின்றி யார் வருவார் என்றும், யோக ஜாதகமில்லை என்றும் ஒவ்வொருவர் பேசிய பேச்சையெல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு இவ்வளவு அன்பானவரைத் தனக்குத் தந்த அன்னையை மகா மட்டும் விட்டுவிடுவாளா என்ன?

*******book | by Dr. Radut