Skip to Content

09. உண்மையின் பல்வேறு பரிமாணங்கள்

உண்மையின் பல்வேறு பரிமாணங்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

என். அசோகன்

1985-ஆம் ஆண்டு Chrysler Auto Company இரண்டாயிரம் கோடி ரூபாயளவிற்கு நஷ்டத்தில் மூழ்கிய பொழுது அவ்வளவு பெரிய நஷ்டத்திலிருந்து கம்பெனியை மீட்பதற்கு வழியேயில்லை என்று பொருளாதார நிபுணர்கள் அனைவரும் அடித்துப் பேசினார்கள். Lee Iacocca என்ற ஒரு மேனேஜ்மெண்ட் நிபுணர் மட்டும் வழியுண்டு தன்னால் முடியும் என்று தைரியமாகப் பேசினார். எப்படி முடியும் என்று எல்லோரும் அதிசயமாகக் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் கம்பெனி மார்க்கெட்டிலிருந்து விலகி நிற்கிறது. மார்க்கெட்டின் தேவைகள் என்னவென்று சரியாகப் புரிந்து கொண்டு கம்பெனிக்கும் மார்க்கெட்டிற்கும் ஒரு ரீ-அலைன்மெண்ட் கொண்டு வந்தால், கம்பெனியைச் சரிசெய்து விடலாம் என்று சொன்னார். இந்த ரீ-அலைன்மெண்டை மூன்று வருடம் முயற்சி எடுத்து வெற்றிகரமாக நிகழ்த்தியும் காட்டினார். தமிழில் இதற்கழகான பழமொழியும் உண்டு. ‘மனமிருந்தால், மார்க்கமுண்டு’ என்பது. ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு எடுத்தவுடனேயே பிரச்சனையின் கடைசிகட்டம்வரை தீர்ப்பதற்கான வழி தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் இருட்டில் ஒருமைல் தூரம் நடந்து போக வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஒருமைல் தூரத்திற்கு நமக்கு டார்ச் லைட் வேண்டும் என்று நாம் கேட்பதில்லை. டார்ச் அடித்தால் அடுத்த இருபது அல்லது முப்பது அடி தூரத்திற்குத்தான் வெளிச்சம் தெரியும். தொடர்ந்து அந்த இருபது அல்லது முப்பது அடி தூரம் வெளிச்சம் இருந்தது என்றால், அந்த வெளிச்சத்தைப் பின்பற்றியே நாம் ஒரு மைல் தூரத்திற்கு நடந்து சென்றுவிடலாம்.

அம்மாதிரியே பெரிய அளவிற்கு பிஸ்னஸில் நஷ்டம் வந்துவிட்டது என்றிருப்பவர் ஒருவரை எடுத்துக் கொள்வோம். நஷ்டத்திலிருந்து மீளமுடியும் என்று நினைக்குமளவிற்கு தைரியம் இருக்கும் என்றாலும், முழுமையாக மீள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று உடனடியாகத் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. அடுத்த கட்டமாக உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தால் போதும். சரியான பராமரிப்பு இல்லாமல் கம்பெனியில் குப்பை மலிந்துள்ளது, மெஷின்கள் தூசுபடிந்துள்ளன என்று தெரிந்தால், வருமானம் குறைந்து போனதற்கு அதுவும் ஒரு காரணமாக எடுத்துக் கொண்டு, உடனடியாக அதைக் கவனிப்பது நல்லது. இரண்டாம் கட்டமாக ஊழியர்கள் அக்கறையில்லாமல் வேலை செய்ததால், உற்பத்தி செய்யும் பொருட்களின் தரம் குறைந்து விட்டது, ஆகையால் ஆர்டர்கள் குறைந்துவிட்டன என்று தெரிந்தால், அதை சரிசெய்ய முயற்சி எடுப்பது நல்லது.

மூன்றாம் கட்டமாக, புது கஸ்டமர்களைப் பிடிக்க யாருமே முயற்சி எடுக்கவில்லை. இருக்கின்ற ஏதோ ஒரு பழைய கஸ்டமர்களை வைத்துக் கொண்டுதான் பிஸ்னஸ் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்தால், புது கஸ்டமர்களைப் பிடிக்க முயற்சி எடுப்பது நல்லது. இப்படி ஒன்றன்பின் ஒன்றாகப் பல தவறுகளைச் சரிசெய்கின்ற பொழுது, இறுதிக் கட்ட செயல்பாடு என்னவென்று நமக்குத் தானே தெரியும். இதுதான் வழக்கமாக வாழ்க்கையில் நடப்பது. இப்படி இல்லாமல் கம்பெனியில் என்னென்னவெல்லாம் தவறுகள் நடந்திருக்கின்றன என்று ஒரே நேரத்தில் பத்து அல்லது பதினைந்து தவறுகளைக் கண்டறிபவரும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் தைரியசாலிகளாக மட்டுமில்லாமல் அகன்ற விஷன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். Chrysler கம்பெனியை நஷ்டத்திலிருந்து மீட்ட Lee Iacocca இப்படியொரு அகன்ற பார்வையைக் கொண்டவர். கம்பெனிக்கும் மார்க்கெட்டிற்கும் அலைன்மெண்ட் கெட்டுவிட்டதுதான் கம்பெனி நஷ்டமடைந்து விட்டதற்கே பிரதான காரணம் என்ற பெரிய உண்மையை அவர் உடனடியாக உணர்ந்து கொண்டார். அதை உணர்ந்த பிறகு அலைன்மெண்ட் கெட்டதற்கான அடையாளங்களாக கம்பெனியில் நூறு விஷயங்கள் அவர் கண்ணில் பட்டன. எல்லாவற்றையும் சரிசெய்தால்தான் கம்பெனி நிமிரும் என்று அவர் புரிந்து கொண்டார். இப்படி அகன்ற பார்வையுள்ளவர்களுக்குக் கடைசிவரையிலும் என்ன செய்ய வேண்டும் என்று தெரிவதுமுண்டு. இப்படி இல்லாமல் ஒன்றன்பின் ஒன்றாகவும் தெரிவதுண்டு. முன்னது அபூர்வம். பின்னதுதான் சகஜமாக இருக்கும்.

4. இனி அடுத்த உண்மையின் பரிமாணத்திற்கு வருவோம். ஆங்கிலத்தில் இதை Honour என்று சொல்கிறார்கள். தமிழில் இதை நாணயம், நேர்மை, சுயமரியாதை, ஆத்ம கௌரவம் என்றெல்லாம் சொல்லலாம். இங்கிலாந்தில் பிரபு வம்சத்தில் பிறந்தவர்கள் தம்மை மற்றவர்கள் honourable என்று நினைக்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினார்கள். இப்படிப்பட்ட நற்பெயரை சம்பாதிப்பது கடினம். ஆனால் இழப்பது சுலபம் என்றிருந்தது. லிஸி தன்னைத் திட்டியதில் டார்ஸிக்கு மிகவும் வருத்தம் கொடுத்ததே, தன்னை அவள் ஜென்டில்மேனாக நினைக்கவில்லை என்பதுதான். மேலை நாட்டவருக்கும், நம் நாட்டவருக்கும் இந்த Honour விஷயத்தில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. நம்முடைய நடவடிக்கைகளை எல்லாம் கவனிக்கின்ற மேலை நாட்டவர்கள் நாம் மிகவும் Honour குறைந்தவர்கள் என்று சொல்வார்கள். அதுவும் ஓரளவிற்கு உண்மை என்றுதான் நாம் சொல்ல வேண்டும். மேலை நாட்டவருக்கு, கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியம். வாங்கியக் கடனைத் திருப்பித் தருவது மிகவும் முக்கியம். மேலை நாடுகளில் நீதிமன்றங்களில் பொய் சாட்சி சொல்லும்படி அழைத்தால், மிகவும் கோபப்படுவார்கள். வக்கீலிடம் வழக்குப்போட ஒருவர் அணுகினால், உங்கள் பக்கம் உண்மையிருக்கிறதா? உண்மையிருந்தால் உங்கள் வழக்கை எடுத்துக் கொள்கிறேன் என்றுதான் சொல்வார். நம் நாட்டில் இதையெல்லாம் நினைத்துப் பார்க்க முடியுமா?

(தொடரும்)

*********book | by Dr. Radut