Skip to Content

08. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஐயா,

என் பெயர் பழனிசாமி. வயது ஐம்பத்தேழு. நான் B.முட்லூரில் ஜமாய் முகமது தெருவில் சொந்தமாக வீடுகட்டி வசித்து வருகிறேன். நான் B.முட்லூர் அருகிலுள்ள கணக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவன். ஐந்தாம் வகுப்புவரை படித்துள்ளேன். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். என் மனைவியின் பெயர் பானுமதி. ஐயா எனக்குள்ள பிரச்சனையின் காரணமாக என் உறவினர் மூலமாக B.முட்லூரில் செயல்படுகின்ற தியான மையத்திற்கு நவம்பர் முதலில் வந்து அன்னையை அறிந்தேன். என் பிரச்சனை என்னவென்றால் மேலே குறிப்பிட்டுள்ள முகவரியில் முஸ்லீம் நண்பர் ஒருவர் மூலமாக வீடு கட்டும் மனை விலைக்கு வந்தது. அந்த மனையை விலைக்கு வாங்கி, வீடு கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசைக்கேற்றாற்போல் சொந்தமாக வீடு கட்டினோம். சொந்தமாக வீடு கட்ட ஆரம்பித்த நாள் முதல் பிரச்சனையும் ஆரம்பமானது.

அந்தத் தெரு முழுவதும் முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவர்கள். நான் மட்டும் இந்து மதத்தைச் சேர்ந்தவர். வீடு கட்ட ஆரம்பிக்கும்பொழுது முதலில் என் மனைவிக்கு பல்வலி என்று ஆரம்பித்தது. சாதாரண பல்வலி என்று கிராம வைத்தியம் செய்து பார்த்துவிட்டு, டாக்டரிடம் சென்று மருந்து சாப்பிட்டதில் உடலில் ஜன்னி வைத்ததுபோல் ஆகி விட்டது. என் மனைவி என்னிடம் வந்து யாரோ செய்வினை செய்ததுபோல் இருக்கிறது என்று சொன்னார். கோவிலுக்கு அழைத்துப் போகச் சொன்னார். உள்ளூரிலேயே உள்ள காத்தவராயன் கோவிலுக்குச் சென்று, கோவில் பூசாரியிடம் குறி கேட்டோம். அவர் அந்த இடம் வாங்கியதில் யாரோ செய்வினை செய்திருக்கிறார்கள் என்று கூறி மூன்று நாட்கள் தங்கச் சொன்னார்கள். அப்படியும் சரியாகவில்லை. பின்பு ஆ. முட்லூரிலுள்ள ஆஞ்சநேயர் வழிபாடு செய்பவரிடம் சென்று குறி கேட்டதில் அவரும் அதையே சொன்னார். அதுவும் சரியாகவில்லை. இதற்கிடையில் வீட்டு வேலையும் நம்பிக்கையோடு செய்து கொண்டிருந்தோம். வீட்டு வேலை ஆரம்பித்தது முதல் பிரச்சனை அதிகமாகிக் கொண்டிருந்தது. வீடு ஒட்டும் தருவாயில் விடியற்காலையில் எழுந்து வந்து பார்க்கும் பொழுது வாசற்படியின்முன் மாட்டிறைச்சி, அரிசி, தகடு, மாந்திரீகப் பொருட்கள் இருந்தன. மிகவும் பயந்துபோய் ஒருவரிடம் 10 ரூ. கொடுத்து வெளியில் வீசி விட்டோம். அதன் பிறகு ஜன்னல் ஓரம் சில்வரில் சூலம் செய்து கொண்டு வந்து வைத்தார்கள். வாசலில் மற்றொரு நாள் எழுந்து வந்து பார்க்கும் பொழுது இரண்டு மரக்கா நெல் இருந்தது.

இதனால் எங்களுக்குப் பயம் இருந்த போதிலும், அனைவரும் சொல்வதைக் கேட்டு கோவிலுக்கு மற்றும் மாந்திரீகம் செய்யும் இடங்களுக்கும் சென்றோம். இதற்கிடையில் வீட்டு வேலையும் நடந்தது. தோராயமாக ஐம்பதாயிரம் வரையில் செலவு செய்து விட்டோம். எந்தப் பலனும் இல்லை. மனதை தளரவிடாமல் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையில் வீட்டு வேலையை நிறுத்தவே இல்லை. பின்பு என் மனைவிக்கு ஏவல் செய்து ஆஞ்சநேயர் முகம்போல் தொங்க ஆரம்பித்தது. கடலூருக்கு அருகில் உள்ள ஒரு இடத்திலும் மூன்று முறை குறி கேட்டோம். பலனில்லை. வீடும் முடியும் தருவாயில் இருந்தது. 2000-ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 2010-ஆம் ஆண்டு அக்டோபர்வரை இந்தத் தொந்தரவு இருந்து வந்தது. இதற்கிடையில் எனக்கும் காலை பதினொன்று மணிவந்தால், தரையில் விழுந்து புரள்வேன். இரவில் நிம்மதியான தூக்கமில்லை. யாரோ கூப்பிடுவதுபோல் இருக்கும். கெட்ட கனவுகள் நிறைய வரும். வீட்டில் சண்டை, சச்சரவும் இருந்து வந்தது. வீட்டை விற்றுவிடலாம் என்று எண்ணினோம். சொந்த ஊருக்குச் சென்றுவிடலாம் என்ற எண்ணமும் வந்தது.

நவம்பர் மாதத்தில் B.முட்லூர் தியான மையத்திற்கு வந்தேன். மதர் இருக்கும் ரூமில் உட்கார்ந்த நான், மூன்று மணி நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. என்நிலை மறந்து, மதரை நோக்கி உட்கார்ந்த நான் மூன்று மணி நேரம் கழித்துதான் ரூமை விட்டு வெளியில் வந்தேன். எதுவும் என்னையறியாமல் நிகழ்ந்தது. என் உடலிலிருந்து ஏதோ பாரம் குறைந்ததுபோல் உணர்ந்தேன். அதிலிருந்து தொடர்ந்து அன்னையை நானும், என் மனைவியும் வழிபட்டு வருகிறோம், வீட்டிலும் அன்னையை வைத்து வழிபட்டு வருகிறோம். தியான மையத்திற்கும் தொடர்ந்து வந்து வழிபட்டு வருகிறோம்.

இப்பொழுது வீட்டில் அமைதியும், சந்தோஷமும் உள்ளது. எந்தவீட்டை விற்க வேண்டும் என்றோமோ அந்த வீட்டிலேயே மிகவும் ஆனந்தமாக உள்ளோம். ஏற்கனவே தங்களுக்குக் காணிக்கையுடன் இந்தப் பிரச்சனையை எழுதியுள்ளேன். அதில் விரிவாக எழுதவில்லை, இதில் விரிவாக எழுதியுள்ளேன். எங்களுக்கு உங்களின் அருளாசியும், அனுக்கிரகமும் வேண்டும் என்றும், அன்னையின் குழந்தையாக நாங்கள் இருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறோம். மேலும் தியான மைய அம்மாவின் ஆலோசனைப்படி அன்னையை வழிப்பட்டு வருகிறோம். மிகவும் கஷ்டப்பட்டுக் கட்டிய வீட்டை விற்க வேண்டும் என்ற சூழ்நிலையில் அன்னையின் அனுக்கிரகத்தால் இன்று எங்கள் குடும்பம் சந்தோஷமாக உள்ளது. இந்த விஷயம் அனைவருக்கும் ஒரு அனுபவ பாடமாக இருக்க வேண்டும் என்று எங்கள் அனுபவத்தை தங்களுக்கும் எழுதுகிறேன். அன்னையின் அருளை உணர்வு பூர்வமாக உணர்ந்து பத்து வருடப் பிரச்சனையை ஒரு நொடியில் தீர்த்து வைத்த அருட்கடாட்சம் அன்னையிடமே உள்ளது.

அந்த மனை வாங்கிய நாள் முதல் பத்து வருடங்கள் ஏவல், பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகளின் பிடியில் சிக்கிச் சீரழிந்த எங்கள் வாழ்க்கை அன்னையின் அருட்பார்வை எங்கள்மேல்பட்ட நாள் முதல், நாங்களும் தொடர்ந்து நம்பிக்கையோடு அன்னையை பிரார்த்தனை செய்து வருவதின் பலனாக, இன்று எங்கள் குடும்பத்தில், முழுப் பாதுகாப்பு, அன்பு, அமைதி, ஆனந்தமான ஒரு வாழ்க்கை இவைகளை அனுபவிக்கிறோம். இவைகளை எல்லாம் அன்னையால் மட்டுமே தர முடியும் என்பதை உணர்வு பூர்வமாக உணர்ந்து, தங்கள் பாதாரவிந்தங்களை வணங்கி நன்றியுடன் காணிக்கையை சமர்ப்பிக்கிறேன். யாராலும் தீர்க்க முடியாத பிரச்சனையை ஸ்ரீ அன்னையால் மட்டுமே தீர்க்க முடியும் என்பதை உணர்ந்து, உள்ளத்தாலும், உணர்வாலும் மீண்டும் உங்கள் பாதாரவிந்தங்களை வணங்கி நன்றியை சமர்ப்பிக்கிறேன். என்றும் அன்னையும், தாங்களும் அமைதியான ஒரு வாழ்க்கையை வழங்க உங்கள் அருளாசியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அன்னை அன்பர் பழனிசாமி, பானுமதி தம்பதியினர் B. முட்லூர்.

*******

ஜீவிய மணி
 
வாழ்வு சிறக்க எரிச்சலை விலக்குவது அவசியம்
மனம் வளம் பெற அதைச் செய்வதுபோல்,
ஆத்ம நலனுக்காகச் செய்வது அதி உத்தமம்
 

*******



book | by Dr. Radut