Skip to Content

07. வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

4. புதியதாக ஒரு முயற்சி எடுக்கும் பொழுது அது சம்பந்தப்பட்ட விவரங்களை எல்லாம் அலசி, ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். முடிவைச் செயல்படுத்தும் பொழுது அதில் முழு உற்சாகம் இருக்க வேண்டும். செயல்படும் பொழுது வேலையை நேர்த்தியாகச் செய்ய வேண்டும். எனவே, இம்மூன்றும் இருந்தால் நமக்குத் தவறாமல் வெற்றி கிடைக்கும்.

காய்தல் உவத்தலின்றி ஒரு பொருட்கண் நின்று ஆய்தல் அறிவுடைமை. Well begun is half done திட்டமிட்டு, ஆராய்ந்து, துணிந்து, உணர்ந்து, முறைகளை அறிவால் புரிந்து, உணர்வால் ஏற்று, எழுத்தால் எழுதி ஆரம்பித்தால் வேலை பாதி முடிந்த தாகப் பொருள் என்று ஆங்கில வாக்கியம் கூறுகிறது. வீட்டில் நடக்கும் திருமணத்தை முன்கூட்டி யோசனை செய்து வரப்போகின்றவர்களை ஒவ்வொருவராக மனதில் கொணர்ந்து அவர்கள் தேவையை, கருத்தை முக்கியமாகக் கருதி, வேலைகளை மனதில் வரிசைப்படுத்தி, ஒழுங்கு செய்து, காலம், நேரம், இடமறிந்து செயல்பட்டால், விசேஷம் முடிந்த பிறகு, “வேலை தானே தன்னைப் பூர்த்தி செய்து கொண்டது, யார் யாரோ வந்து எந்தெந்த வேலையையோ ஏற்று எதிர்பாராத முறையில் சிறப்பாகப் பொறுப்பேற்று செய்தது கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருந்தது” என்று நினைக்கும்படி அமையும். அதுபோல் செயல்பட்டவர் உடனே அவருள்ள நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு உயர்வார். அதுவே செயல்படும் பாணியானால், அவர் முன்னேற்றம் தொடரும். உச்சியை எட்டும்வரை ஓய்வு பெறாது. எந்த நிலையில் ஆரம்பித்தாலும் எல்லா நிலைகளையும் கடந்து எட்ட முடியாத உயரத்தை எவரும் எட்டாத குறுகிய நேரத்தில் அடைவார். நெப்போலியன், அலெக்ஸாண்டர், சீஸர் அப்படி 30 வயதிற்குமுன், 20 வயதிலேயே உயர்ந்தவர் என்று வரலாறு கூறுகிறது. சங்கராச்சாரியார் 8 வயதில் தீட்சை பெற்று 16-இல் சித்தி பெற்று 32-இல் வாழ்வை முடித்துக் கொண்டவர். சங்கரபாஷ்யத்தைப் படித்தவர் எப்படி ஒருவர் இந்த வயதில் இந்தத் தத்துவத்தை எழுதுவது என மலைப்பார்கள். ஒருவர் ஆபீசில் வேலை செய்பவரானால் இன்ஸ்பெக்ஷன் நேரத்தை அறிவார். அந்த நேரம் தயாராவதுபோல் மற்ற நேரங்களில் வேலை செய்தால் ஒரு வார வேலை ஒரு நாளில் பூர்த்தியாவதைக் கண்பார். அதுபோலவே அவர் தொடர்ந்து செயல்பட்டால் அங்கு தொடர்ந்திருக்கமாட்டார். உயர்ந்தபடி இருப்பார். உச்சியை எட்டுவார். இதுபோன்று செயல்பட்ட டாக்ஸி டிரைவர் முதலமைச்சரானார். காவல்காரன் பெரு முதலாளியானான். தலைவனான தொண்டர்கள் வேலை செய்யும் பாணி இது. அலெக்சாண்டர் டுமாஸ் என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய Count of Monte Cristo என்ற நாவலில் கதாநாயகியாக வரும் Mercedes மெர்சடஸ் மீன் விற்பவள். அநாதை, படிப்பறிவற்றவள், உணர்ச்சிமயமான சிறப்பான செயல்பாடுடையவள். அவள் காதல் கருகியது. திருமணம் அவளை உயர்த்தி நாட்டில் முதன்மையான கட்டத்தில் ஒருத்தியாக்கி கோடீஸ்வரியாக்கியது. பிரபுவின் மனைவியாக பாரீஸ் பிரபுக்களிடையே சிறந்த உதாரணமாக வெகுசீக்கிரம் உயர்ந்தாள். உயர்வு உன்னதம் பெறும். உழைப்பின் சிறப்பு உயர்வு தரும். உள்ளம் உரியதை ஏற்று உரிமை என்ற எல்லைக்குள் தன்னை வலிய அடக்கிக் கொள்வது உழைப்பை உயர்வாக்கும். செகெண்டரி கிரேட் ஆசிரியர் M.L.C. ஆனது, பள்ளி ஆசிரியர் உலக ஆசிரியர் சங்க உப தலைவரானது, கல்லூரி ஆசிரியர் I.A.S. பெற்றது, பல்கலைக்கழக ஆசிரியர் நாட்டின் ஜனாதிபதியானது, வீரன் சேனாதிபதியானது, வீடு பெருக்குபவள் ராணியானது இந்தப்பாதையில் போனதால்தான். மேஜையில் சாப்பிட தட்டு, டம்ளர், ஸ்பூன், போர்க், கத்தி, 40 பேருக்கு வைக்க பட்லர் ஒவ்வொரு விருந்திற்கும் அவை இருக்க வேண்டிய இடத்தை முதலில் குறித்து வைக்க என்ன முயற்சி தேவை. நாடு முழுவதும் அதுபோல் தங்களைப் பயிற்றுவித்ததால், சிறிய நாடு பெரிய நாடுகளை ஆள்கிறது. 40 பேராசிரியர்கள் 40 ஆண்டுகள் முயன்று டிக்ஷனரி எழுதிய பொழுது, ஒருவரே அதை 7 ஆண்டில் எழுதியதின் இரகஸ்யம் இதுவே. ஆரம்பகாலத்தில் எந்த வேலையிலும் விரயம் அதிகமாகும். வேலை ஏராளமாகச் செய்ய வேண்டியிருக்கும். நீண்ட காலம் தேவை. கொஞ்சநாள் கழித்துத் திறமை பெற்றபின் 10 பேர் 1 மாதத்தில் 60% சிறப்புடன் செய்தது 100% சிறப்பாக உயர்ந்து, நேரம் 3 நாளாகும். செய்வது ஒரே ஆளாகும். 1950-இல் இங்கிலாந்தில் 100 ஏக்கர் பண்ணையை ஒரே குடும்பம் நிர்வாகம் செய்தது. இன்று அமெரிக்காவில் 500 ஏக்கர் பண்ணையை Ph.D பட்டம் பெற்ற ஒருவரே நடத்துகிறார். இதை நாம் திறமை என்கிறோம். போலந்து நாட்டில் மின்விளக்குகள் வந்த புதிதில் அதைப் பொருத்த ஏணியின்மீது ஒருவரும், இருவர் ஏணியைப் பிடித்துத் திருப்புவதாகவும் கேலி செய்வதுண்டு. பகவான் ஸ்ரீ அரவிந்தர் 5 பெரிய நூல்களை ஒரே சமயத்தில் ஆர்யாவில் எழுத ஆரம்பித்து 6 ஆண்டுகளில் முடித்தார். டார்வின் எழுதிய பெருநூல் ஆயுள் முழுவதும் எழுதியது. மார்க்ஸ் எழுதிய நூலில் 3 பாகங்களில் முதற்பகுதியே அவர் வாழ்நாளில் முடிந்தது. மற்ற இரு பகுதிகளை அவர் ஆயுளுக்குப் பின்னால் அவர் நண்பர் பூர்த்தி செய்தார். பகவான் செய்ததை உலகில் இதுவரை எவரும் செய்ததில்லை. அத்துடன் 22,000 அடி நீளமுள்ள சாவித்திரி என்ற இதிகாசத்தை ஆயுட்காலத்தில் எழுதி முடித்தார். I.C.S அதிகாரிகளுக்கு உலகில் பெரும் புகழுண்டு. ஆங்கிலேயர் ஆண்ட நாட்களில் 400 பேரேநாட்டை ஆண்டனர். ஆண்டிற்கு 4 பேரை புதியதாக நியமிப்பது வழக்கம். அது பிறகு எட்டாயிற்று. 1947-இல் அவர்கள் நாட்டை விட்டுப் போகும் பொழுது ஆண்டில் 80 பேராயிற்று. Steel frame இரும்புக் கவசம் எனப் பெயர் பெற்ற அதிகாரவர்க்கம் I.C.S உலகப் புகழ் பெற்றது. அவர்கட்குப் பயிற்சி ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜில். சுபாஷ் சந்திர போஸ், பகவான் ஸ்ரீ அரவிந்தர், ஜோதிபாசு I.C.S பயில இங்கிலாந்து சென்றவர்கள். அவர்கள் பெற்ற பயிற்சியில் மேற்சொன்ன கருத்து ஒரு அம்சம். லூயி மன்னன் உலகிலேயே தலைசிறந்த மன்னன் எனப் பெயர் வாங்கியவன். அவன் பதற்றமடையும் நேரம் அரண்மனை கலங்கும். அப்படிப்பட்ட நேரம் அம்மன்னன் தன் வீரனைப் பார்த்து இரண்டு குதிரைகளைக் கொண்டு வா என்றான். வீரன் அவை தயாராக வெளியில் நிற்கின்றன என்றான். அரசன் காதலியைத் தேடி, கான்வெண்டில் கண்டு, மூர்ச்சை அடைந்தவளைத்தேற்றி, வீரனை விளித்து ஒரு வண்டி வேண்டும் என்றான். வெளியில் தயாராக நிற்கிறது என்றான். அரசன் உன்னைப்போன்ற முன்யோசனைக்காரனைக் கண்டதில்லை என்றான். திறமை, சமயோசிதம், முன்யோசனை ஆகியவை செயல்பாட்டிற்குரிய சிறப்புகள்.

5. அதிகாரம் செலுத்த வேண்டிய இடத்தில் அதிகாரம் செலுத்தி, சுதந்திரம் கொடுக்க வேண்டிய இடத்தில் சுதந்திரம் கொடுக்க வேண்டும். இப்படி அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிய வேண்டும்.

இதுவரை உலகில் அதிகாரம், அதிக காரமாயிருந்தது, அது மாற வேண்டும் என்ற இலட்சியம் ஓரளவு பரவி வருகிறது. பரம்பரையாக நம் அனுபவத்தில் பையனுக்கு அளவு கடந்த செல்லம் கொடுத்து அழிந்த சொத்தும், மருமகனை வீட்டோடு வைத்திருந்து அழிந்தவரும் இதற்கு உதாரணமாக இருக்கிறார்கள். செட்டி நாட்டில் பெரும் பொருள் குவிந்ததற்கு அங்கு இளைஞர்களை சிறு கடைகளில் ஆளாக அமர்த்தி 1/8 ஆள், 1/4 ஆள், 1/2 ஆள், 3/4 ஆள், முழுஆளாகப் பயிற்றுவித்ததே ஒரே காரணம். பெரிய கம்பனியில் முதலாளி மகன் இளம் வயதில் நிர்வாகத்திற்கு வந்தால் அவனை கம்பெனி மானேஜருக்குக் கீழே வேலைக் கற்றுக்கொள்ள அனுப்பினால் பையனும், கம்பனியும் வளரும். நேரடியாகத் தகப்பனாருக்குரிய அதிகாரத்தை செலுத்தினால் பையனும், கம்பெனியும் அழியும். தன் மகனை ஒரு தாயார் அப்படி அழித்தார். ஒரு மந்திரி ஜில்லா தலைநகருக்கு வந்தபொழுது கலெக்டர் ஆபீசிற்கு கலெக்டர் வரவில்லை. மந்திரியுடன் இருந்தவர்கள் மந்திரியை கலெக்டர் நாற்காலியில் உட்காரச் சொன்னார்கள். “அது பெரிய போஸ்ட். நான் உட்காரக் கூடாது” என்றார் மந்திரி. அதிகாரம், பதவி, செல்வாக்கு என்பவை ஆரம்ப நாட்களில் அரசனுக்குரியது. அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி என ராஜாவின் அதிகாரம்போல் நாட்டில் அடுத்தடுத்த நிலை நிர்வாகங்கள் உருவாகின. முடிவாக குடும்பம் ராஜ்ய சபையின் சாயல் பெற்றது. சிறு விவசாயியின் ஸ்தாபனம் அரசவைபோல் செயல்பட்டது. அரசன் ஏற்படுமுன் அவ் வதிகாரம் சேனைத் தலைவனிடமிருந்தது. பின்னர் சேனைத் தலைவன் அரசனாகும் பழக்கம் ஏற்பட்டது. யார் சேனைத் தலைவனாக வருகிறான்? போர் என்று மூண்டால் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் படைகள் ஒரு தலைவனுடன் வந்து எல்லையில் குவியும். அவர்களுள் எல்லாத் தலைவர்களும் சேனாதிபதியாக விழைவார்கள். அப்பதவியை எந்த சட்டப் படியும் அங்கு நிர்ணயிப்பதில்லை. எதிரியை நேர்கொள்ள நம்படை நமக்கு அடங்க வேண்டும். நிலைமை ஆபத்தாகும் பொழுது 10 சிறுபடைத் தலைவரிருந்தால், எவர் முன்னணிக்கு வருவது என்பதை நிலைமை முடிவு செய்யும். யாருக்கு 10 படைகளும் அடங்குகிறதோ அவரே சேனாதிபதி. போர் முடிந்து வெற்றி பெற்றபின் அவரே அரசன். எல்லா அதிகாரமும் அவர் கையில், அரசனுடைய நிர்வாகத்தில் சிக்கலின்றியிருந்தால், பதவி தொடரும். புதிய நிலைகள், புதிய சிக்கலெழுந்தால், அதை சமாளிப்பவனே புதிய அரசன். நடைமுறையில் வெற்றி பெற்றது ஒரு நிலை. தோல்வியடைந்தது அடுத்தநிலை. வெற்றி பெற்ற அரசன் திறமை நீடிப்பதைவிட தோல்வி பெற்றவன் பெற்ற திறமை பெரிது. வெற்றி பெற்ற மனிதனை வெற்றி தன்னை மறக்கச் செய்யும். அதனால் அவன் ஏமாறும் சந்தர்ப்பங்கள் ஏராளம். தோல்வி பெற்றவனுக்கு எல்லா சந்தர்ப்பங்களும் எதிரியாதலால், அவன் பெறும் திறமை அளவற்றதாக இருக்கும். 1000 அல்லது இரண்டாயிரம் ஆண்டுகட்குமுன் இந்தியாவிலும், உலகிலும் அரசர்கள் எல்லா அனுபவத்தையும் பெற்று விட்டனர். அதன் பிறகு தோல்விக்கு வழியில்லை. தெரிந்த சட்டத்தை மீறுபவன் தோற்கிறான். தெரிந்த சட்டத்தைப் புறக்கணித்து அரசன் தோல்வியடைவது மக்களுக்கு அனுபவம். அது போன்ற அனுபவம் அரசனுடைய திறமை மக்களிடையே அதிகமாகப் பரவ உதவும். இன்று இந்த சட்டத்தை நாம் முக்கியமாகக் கருதுகிறோம் எனில், இன்னும் இதை ஏற்க வேண்டிய மக்கட்பகுதியுண்டு என்று காட்டுகிறது. அன்பர்கள் பிரச்சனை தீரவில்லை என்ற பொழுது அவர்கள் தெரிந்த நல்ல முறையைப் பின்பற்றவில்லை. தெரிந்த தவறான முறையை மீண்டும் பின்பற்றுகிறார்கள் என்று நாம் காண்கிறோம். சமையல்காரன் 40-ஆம் வயதில் கையைச் சுட்டுக் கொள்வதும், 50-ஆம் வயதில் எளிய கேஸை வக்கீல் இழப்பதும், 60 வயது டாக்டர் டைபாயிட்டை குணப்படுத்த முடியாததும், ஆசிரியர் மக்கள் படிப்பைப் பூர்த்தி செய்ய முடியாததும், நெடுநாள் முதன் மந்திரியானவர் மகன் M.L.A-யாகவும் வர முடியாததும், நாட்டின் ஜனாதிபதி மகன் வைஸ்சான்ஸ்லர் பதவி கடைசிவரை பெற முடியாததும், பெரிய அந்தஸ்திலுள்ளவர் சிறுகாரியங்களை செய்ய முடியாததும், பெரும்பாலான நடிகர் பெற்ற செல்வத்தை இழப்பதும், பெரிய மேதைகள், பெரும் தலைவர்கள் மக்கள் முன்னுக்கு வர முடியாததும் நாம் காண்பது. பெரும் செல்வர் மகனால் குடும்பம் நடத்தும் அளவு சம்பாதிக்க முடியாதது, 100 புத்தகம் எழுதியவர் மகளால் ஒரு புத்தகம் எழுத முடியாதது போன்றவை இக்குறையால் எழுவதாகும். தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாய்வது பெரும்பாலான அனுபவம். முன் தலைமுறை பெற்ற அனுபவத்தின் பெரும்பலனை ஏற்று அடுத்த தலைமுறை முன்னுக்கு வருவது, தகப்பனார் சிறு ஊரில் பிரபலமான வக்கீலானால், மகன் ஹைகோர்ட்டில் பிரபலமாவது நாம் ஏராளமாகக் காண்பது. தகப்பனார் M.L.A ஆனால் மகன் மந்திரியாவது பரவலாகக் காண்பது. நேரு பரம்பரை அப்படி ஓரளவு இருந்தது. காந்தி, இராஜாஜி பரம்பரையை நாம் கேள்விப்பட்டதேயில்லை. தாகூர் பரம்பரை என்ன ஆயிற்று எனத் தெரியாது. பென்னட் மக்கள் இருவர் சிறப்பாக இருந்தனர். லிடியா புல்லுருவியானாள். ஒரு பெண் தவறுவதால் குடும்பமே அழிவதுண்டு. ஒரு மகன் உயர்வதால் குடும்பமே உயர்வதுண்டு. வாழ்வில் உயர்வும், தாழ்வும் விரவிக் கிடப்பதால் இந்நிலை ஏற்படுகிறது. மேற்சொன்ன கருத்து அந்நிலைகளை உருவாக்க உதவுகிறது. பிறப்பு பெரிய காரணம். வளர்ப்பு முக்கியக் காரணம். படிப்பின் உதவி முக்கியம். சுபாவம் முடிவை நிர்ணயிக்கும். சந்தர்ப்பம் ஒரேயடியாகத் தூக்கியும் விடும். தாழ்த்தியும் விடும். பராமுகமாகவும் இருக்கும். ஏதோ சிலர் வாழ்வில் பேருதவி செய்யும் பெருமக்கள் எழுவதுண்டு. அவற்றுள் பலன் பெறுபவர் மிகக் குறைவு. பெரும்பாலோர் சிறுபலனை வற்புறுத்திப் பெற்று பெரியதை இழப்பர். சிறுபான்மையோரே விவேகானந்தர் போல் குருவால் முன்னுக்கு வருபவர். இராமலிங்க சுவாமியின் உதவியை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அன்னை, பகவான் அளித்த பெறற்கரிய பேருதவியை பெறும் நிலையில் ஒருவருமில்லை.

(தொடரும்)

********book | by Dr. Radut