Skip to Content

04. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  • அன்பர்கள் காண மறுக்கும் அன்னை இரகஸ்யம்

    அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும் வரும் வரை உடலுக்குக் காயகல்பமில்லை.

    இறைவன் வரும் தருணம் நீண்ட நெடிய பாதையின் முடிவானது.

    அந்நேரம் ஆயிரம் ஆண்டில் நடப்பது அடுத்த நிமிஷம் நடக்கும்.

    அதை உலகுக்கு அறிவிக்க (a portion of the Lord) ஆண்டவனே வந்தார்.

    அவர் ஸ்ரீ அரவிந்தர்.

    வேதம் கண்ட அமர வாழ்வு ஆத்மாவுக்குரியது, உயிருக்கோ, மனத்திற்கோ, உடலுக்கோயில்லை.

    ஆத்மா பெற்றதைத் தவறாக உடல் பெற்றதாக நினைத்தவர் காயகல்பம் தேடினர்.

    தேடியவர் பெரிய வைத்தியரானார்.

    அதுவரை ஆத்மா வளரும் என அறியார்.

    ரிஷிகள் கண்டது காலத்திற்குட்பட்டது.

    அதனால் கர்மத்தை வெல்ல முடியாது.

    எந்த வைத்தியருக்கும் கட்டுப்படாத வியாதியிருந்தது.

    ஸ்ரீ அரவிந்தர் கண்ட ஆத்மா தெய்வீக ஆன்மா (Divine Soul).

    இது அசையும்.

    அசையாமலிருக்கும். எப்படியிருக்க வேண்டுமென அதுவே நிச்சயம் செய்யும்.

    இதைச் சைத்திய புருஷன் என்றார்.

    சைத்திய புருஷனுக்கு,

    1. மரணமில்லை.
    2. தோல்வியில்லை.
    3. இல்லையென்பது இல்லை.
    4. காலம், மனம் கட்டுப்படுத்தாது.
    5. மூன்றாம் நிலைக் காலம் (Simultaneous Time) அதன் காலம். 

    ஸ்ரீ அரவிந்தர் ரிஷியில்லை, அவதாரமில்லை, a portion of the Lord.

    ஆண்டவனுடைய பகுதி.

    அவரை விட்டு அகலாமலிருக்க பொய் எதிரி.

    சைத்திய புருஷன் வெளி வந்து வாழ்க்கை நடத்த வேண்டும்.

    அதற்குரியவர் தவறினால் தண்டனை பெரியது.

    எவரும் அதை அறியவில்லை.

    மனிதன் ஸ்ரீ அரவிந்தருக்கு முழுத் துரோகம் செய்தான் என அன்னை கூறினார்.

    துரோகம் செய்தவர் மனம் மாறவுமில்லை.

    பொய் அழிந்து, துரோகம் விஸ்வாசமாக மாறினால் அன்னை நம்மை விட்டுப் போகமாட்டார்.

    எவர் அதைச் செய்தாலும் அவர் அன்னைக்குரியவர்.

    அவருக்குத் தோல்வியில்லை, மரணமில்லை.

    உலகம் அவருள். பிரம்மம் அவருள்ளேயுள்ளது.

    அதை அறிவால் நாடாமல், அன்பால் தேடுவது நம்பிக்கை.

  • பெயிண்ட் திருடியவன்

    இராணுவ அதிகாரி ஓய்வு பெற்று தொழிலாரம்பிக்க 40 ஏக்கர் நிலம் வாங்கி, தன் பெயரில் ஒரு நகர் கட்ட ஆரம்பித்தார். அருகில் உள்ள கிராமத்தில் ரௌடி ஒருவன் அதிகாரம் செலுத்தி வருகிறான். இவர்களை ஆழம் பார்க்க அவன் ஒரு பையனை விட்டு பெயிண்ட் திருடச் சொன்னான். ஜவான்கள் பையனைப் பிடித்து நையப் புடைத்தனர். மறுநாள் அந்த ரௌடி வந்தான். யார் இங்கு முதலாளி எனக் கேட்டான். அவன் கேட்ட குரல் முதலாளிக்குப் பிடிக்கவில்லை. விசிலை எடுத்து ஊதினார். இரு ஜவான்கள் வந்தனர். ரௌடியை அறையில் தள்ளி செம்மையாக அடித்தனர். அவன் வெளியில் வந்தவுடன் முதலாளியைப் பார்த்து,

    "நான் வெகுநாட்களாக ஒரு தலைவரைத் தேடுகிறேன். இன்று கண்டு கொண்டேன். நீங்களே இனி எனக்குத் தலைவர். நாளைக்கு என் வீட்டிற்கு விருந்திற்கு வர வேண்டும்'' என்றான்.

    இது உலகம். மனிதன் நிலைமைக்குத் தகுந்தாற்போல் யோசனை செய்யாமல் தலைகீழே மாறுகிறான். நாம் அன்னைக்குரியவாறு அது போல் மாற வேண்டும். நாம் அவனைப் போல் தலைகீழே மாற வேண்டும்.

    • மனிதனால் தலைகீழே, தன் நிலைக்கு எதிராக, உடனே, தானே, பிறர் எடுத்துச் சொல்லாமல் மாற முடியும் என்று இது காட்டுகிறது.
    • மதருக்குரிய நேரம் வரும்பொழுது இது போல் மாறி மதரை ஏற்க முடியுமா?
    • "என்னால் முடியாது” என்பது "எனக்குப் பிடிக்காது” என இந்நிகழ்ச்சி காட்டுகிறது.
    • நமது சொந்த அனுபவத்தில் நாம் இது போல் மாறியிருந்தால் அதை நினைவுகூர்ந்து அதன்படி இப்படி மாற வேண்டும்.
    • அரசியலில் நேர் எதிரியிடம் சேர்வதும் பெயிண்ட் திருடியவன் மாறுவதும் ஒன்றே.
    • இது மனித சுபாவம் - நாம் அப்படியில்லை எனக் கூறுவது பொருத்தப்படாது.
      நம்மாலும் இது போல் மாற முடியும். நாம் மறுக்கிறோம் என்பதே உண்மை.
    • அந்த உண்மையை ஏற்பது (sincerity) உண்மை.
  • கதை

    இந்த ஒவ்வொரு பக்கத்தையும் ஒவ்வொரு கதையாக எழுதலாம்.

    எனக்குக் கதை எழுத வராது. கட்டுரையைக் கதையாக எழுதி வருகிறேன்.

    கதை மனத்தைத் தொடும், மனதில் பதியும், கட்டுரை பதியாது.

    கட்டுரையாக நடப்பவற்றைக் கதையாக மாற்றி மனத்தில் பதிய வைப்பது விவேகம். 

    கட்டுரை
    - வாழ்வு;
    கதை
    - அனுபவம்
     
    - அறிவு;
     
    - விவேகம்

     அறிவுபூர்வமாக உலகையறிவது என்பது இதுவே.

    உலகம் நம்மைச் சுற்றியுள்ளது.

    கண் திறந்து பார்த்தால் கடவுள் தெரிவார்.

    சிலர் பேசுவதைப் பலரும் ஆர்வமாகக் கேட்பார்கள்.

    அவர்கள் சொல் ஆன்மீக நயமுடையதாக இருப்பதால் அப்படி மற்றவர் கேட்பார்.

    கடந்தது முழுமையானது, ஒரு பெரும் உண்மை.

    கடந்தது கடந்தது, அது வேறு.

    இரண்டும் உண்மை.

  • எவ்வளவு வரும்?

    அன்னையை வழிபட்டால் அதிகம் சம்பாதிக்கலாம் என மது விலக்கு போன பின் கடை நடத்துபவரிடம் கூறினேன்.

    "இந்தக் கடைகளில் வரும் அளவு வருமா?'' எனக் கேட்டார்.

    வராது என்றேன்.

    உண்மையென்னவென்றால் உண்மைக்கு உழைப்பும் தேவையில்லை. இதைவிட அதிகம் வரும். ஏராளமாக வரும்.

    • பண வரவை நினைப்பது, பக்குவமில்லை.
      அது சரியான நினைப்பில்லை.
      இது கவனிக்கக்கூடியது.
      இதில் வரும் அளவு மற்றதில் வந்தால் அதை ஏற்கிறோம்.
      வருவதை - பணத்தை - ஏற்கிறோம். தருவதை ஏற்கவில்லை.
      "நிலையும் நினைப்பும்' - நிலையை நிர்ணயிப்பது நினைப்பு.
      மனம் முக்கியம் - பணமில்லை.
      இந்த விஷயத்தில் எத்தனை பேர் தேறுவார்கள்? - நாம் தேறுவோமா?
      பணம் யாரைத் தேடி வரும்? தன்னைவிட உயர்ந்தவரை நாடும்.
      நாம் பணத்தை நாடினால், அது நம்மை நாடுமா?
      இது அடிப்படையாக அனைவரும் அறிந்தது.
      பணம் நம்மை நாட நாம் - நம் மனம் - அதைவிட உயர்ந்திருக்க வேண்டும்.
      இது பணத்திற்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் உள்ள சட்டம்.
      எந்த நிலையில் ஜெயிக்க வேண்டுமோ, அந்த நிலைக்குரிய தகுதி வேண்டும்.
      பேச்சு, எண்ணம் சரியாக இருந்தால் போதாது.
      மனமும் சரியாக இருக்க வேண்டும்.
      மனநிலை சரியாக இருந்தால் இந்தத் தொழிலதிபர் இத்தொழிலில் சம்பாதிப்பதைவிட ஏராளமாக நல்ல முறையில் பணம் வரும் என்பதே உண்மை.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உற்சாகத்தையும் தொற்று வியாதியையும் அறிவது போல், சூட்சுமமான தெம்பும், தொந்திரவும் தெரிவதில்லை.
 

******



book | by Dr. Radut