Skip to Content

02. ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

N. அசோகன்

41.
பரப்பிரம்மம் :
சச்சிதானந்த நிலையையும் கடந்து எந்தக் குண விசேஷத்தையோ, வர்ணனையோ ஏற்காத நிலையில் இருக்கின்ற ஆதியைப் பரப்பிரம்மம் என்கிறோம்.
42.
பேரின்பம் :
அசையாத சச்சிதானந்தத்தில் காணப்படும் இன்பம், அசைகின்ற இயக்கத்தில் வெளிப்படும் பொழுது பேரின்பம் என்று அழைக்கப்படுகிறது.
43.
இறை வெளிப்பாடு :
பரப்பிரம்மத்தில் மறைந்திருக்கும் படைப்பாற்றல்முடிவில்லாமல் இயக்கத்தில் வெளிப்படும் பொழுது அதை நாம் இறை வெளிப்பாடு என்கிறோம்.
44.
வரம்பற்ற நிலை :
முதலும், முடிவும் இல்லாத ஒரு நிலையைவரம்பற்ற நிலை என்கிறோம். இந்த வரம்பற்ற நிலைதான் பிரம்மத்தினுடைய சுதந்தரத்திற்கும்,
ஆனந்தத்திற்கும் காரணமாக அமைகிறது.
45.
சமநிலை :
எதனாலும் பாதிக்கப்படாத ஒரு நிலையை சமநிலை என்கிறோம்.
46.
மானிட அறிவு :
சத்தியஜீவியத்தினுடைய இரு பகுதிகளுக்கிடையே உள்ள இடைவெளியில் பிரிவினையை உண்டு பண்ணக்கூடிய ஜீவியம் பிறக்கும் பொழுது அதை நாம் மானிட அறிவு என்கிறோம்.
47.
உள் அசரீரி :
இறைவனின் எண்ணம் நமக்கு ஆன்மாவின் குரலாகக் கேட்கும் பொழுது அதை நாம் உள் அசரீரி என்கிறோம்.
48.
சூட்சும ஜட நிலை :
சூட்சும உலகத்தில் நம்முடைய உடம்பிற்கே ஒருசூட்சும பாகம் உண்டு. பகவான் அந்தச் சூட்சும பாகத்தைத்தான் உண்மையான ஜட நிலை என்கிறார்.
49.
அவதாரம் :
பரிணாம வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக இறைவனே மானிட உருவெடுத்து பூமியில் பிறப்பதை நாம் அவதாரம் என்கிறோம்.
50.
பிறப்பு :
புதிய அனுபவங்கள் பெற்றுக் கொள்வதற்காக ஒரு ஆன்மா புதிய உடம்பை ஏற்கும் பொழுது அதை நாம் பிறப்பு என்கிறோம்.
 
 
தொடரும்.....

*******

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அழியா இலக்கியம் அமர காவியம்.
இலக்கியம் அழிக்க முனைந்தால் சமூகம் அழியும்.
அது அழிக்கும் இலக்கியமாகும்.
சமூகத்தை அழியா இலக்கியமாக்குவது அழிக்கும் இலக்கியம்.
மனித வாழ்வே அழியா இலக்கியம்.
அன்னை வாழ்வு அமரர் இலக்கியம்.
 

*******



book | by Dr. Radut