Skip to Content

12. அன்னை இலக்கியம் - அன்னை வாழ்வு

அன்னை இலக்கியம்

அன்னை வாழ்வு

இல. சுந்தரி

மனம் அழகாக உணரும் நல்ல பெண், பெண் என்ற முறையில், தனக்குரிய ஆன்மீக அம்சத்தை உணர்ந்து, சமூகத்தில் இன்றுள்ள பெண்ணுரிமையைப் புரிந்து கொண்டு, அதைப் பெறும் வாய்ப்புகளை நாடி, வாய்ப்பைப் பலனாக மாற்றும் திறமைகளை முன்னுக்குக் கொண்டு வந்து அயராது செயல்பட்டால் அன்னையருள் அவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தைத் தரும். பெண்களுக்குரிய ஆன்மீகச் சிறப்பு வாழ்வில் பெறும் உருவம் அதிர்ஷ்டம்.

- கர்மயோகி.

******

கோவையிலுள்ள பிரபல நிறுவனம் அது. திடீரென நொடித்துக் கொண்டிருக்கிறது. மாதக்கணக்கில் வாராதிருந்த முதலாளி மீண்டும் வரத் தொடங்கினார். முதல் நாள் அவர் வந்ததும், "ஏதோ அன்று வந்திருக்கிறார்" என்று தான் எண்ணினர். ஆனால் அன்றிலிருந்து வரத் தொடங்கிவிட்டார். முன்பெல்லாம் மாதம் ஒரு முறை வந்தாலே பெரிது. அவசியமென்றால், அவசரமென்றால், வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளப் போவதாயிருந்தால் வருவார். ஆனால் இப்பொழுது தினமும் வருகிறார்.

அன்று நீண்ட காலத்திற்குப் பிறகு முதன் முதலாக அவர் வந்திருந்தபோது ஒரு பைலுடன் விஜிதான் அவர் அறைக்குப் போனாள். "அவள் புதிதாக வேலையில் சேர்ந்தவள். அதனால் ஏதோ விசாரிக்கிறார்" என அனைவரும் நினைத்தனர். "ஆனால் அடிக்கடி அழைத்துப் பேசுகிறார். அப்படி என்னதானிருக்கும்? பெரிய இடம். எப்படியும் இருக்கும். முதலாளிக்கு அவள் மீது மோகமோ?"

அவளுக்குத் தனி அறை. தனி கம்ப்யூட்டர். அதை மற்றவர் பயன்படுத்த முடியாது. அவள் அறைக்கு முதலாளியும் போவார்.

அவளருகே அமர்ந்து கம்ப்யூட்டரைக் காட்டி ஏதோ பேசுகிறார். விஜி என்னவோ பவ்யமாகத் தான் நடந்து கொள்கிறாள். அவளுக்கென்ன தனிச் சலுகை? அந்த நிறுவனத்தில் அவள் ஒரே பெண் அலுவலர் என்பதாலா? நிறுவனம் சாப்பாட்டு இடைவேளையில் சலசலக்கும். இவையேதும் விஜியறியாள். தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருப்பாள். யாரேனும் வலிய வந்து பேச்சுக் கொடுத்தாலும் தேவையற்ற பேச்சை அனுமதிக்கமாட்டாள். கடுமையான குணமில்லை என்றாலும், கண்டிப்பானவள். எனவே, அவளிடம் ஒன்றும் வம்பு செய்ய முடியவில்லை.

(இவளே நம் கதாநாயகி. இனி கதையைப் படிப்போம்).

"விஜி, நேரமாச்சு. நா கௌம்பறேன்'' என்று வண்டியைப் படியிறக்கினான் வாசன்.

"கொஞ்சம் இருங்க. இதோ கௌம்பிட்டேன்'' என்று ஓடி வந்த விஜி கதவருகே வருமுன் வண்டி சென்ற ஒலி தேய்ந்து முடிந்திருந்தது.

வாசன் அவள் கணவன். அன்பான கணவன் தான். தன்னைவிட அதிக சம்பளத்தில் கிடைத்த வேலையை மனமுவந்து அவளை ஏற்றுக்கொள்ளச் செய்தவன் தான். அவளுக்கு இப்போது பிரமோஷன் வரவிருக்கிறது. அதுகூட அவனுக்குத் தெரியாது. ஆபீஸிலும் வேலை பொறுப்பானது. வீட்டிலும் பெரியவர்கள் யாரும் இல்லாததால், வேலைக்காரியிருந்தாலும் அலுவலகம் செல்லுமுன் அவளிடம் வேலை வாங்க வேண்டும். தன் சமையல் பொறுப்பு, கணவனைக் கவனிப்பது என்பதும் அவள் வீட்டு வேலையில் பெரும் பங்கு. இரண்டு வயது குழந்தை மகேஷைத் தன் பெற்றோரிடம் விட்டிருக்கிறாள். இந்நிலையில் ஆதரவான கணவன் திடீரென வேறுபடுகிறான். அவளுக்கு உதவி செய்ய விருப்பமில்லை என்பது போல் நடந்துகொள்கிறான்.

வாசல் வரை வந்தவள் ஸ்கூட்டர் சென்றுவிட்டதையறிந்து உள்ளே திரும்பினாள். சோர்ந்துவிடவில்லை. பொறுமையாய் வீட்டைப் பூட்டிக்கொண்டு தெருக்கோடியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ பிடித்து நேரத்திற்குச் சென்றுவிட்டாள்.

மாலையில் வீடு திரும்பியவள் கதவு திறந்திருப்பதைப் பார்த்து வாசன் வந்துவிட்டான் என்று புரிந்துகொண்டாள். உள்ளே நுழைந்து தோளில் மாட்டிய பையைக் கீழே இறக்குமுன், "ஒரு நாளைப்போல் காபிக்குக் காத்திருக்க வேண்டியிருக்கிறது'' என்று முணுமுணுத்தபடி "சீக்கிரம் காபி போட்டுக் கொடு'' என்று அதிகாரமாய்க் கூறினான். இதுவரை இல்லாத புது அதிகாரம் இது. அவள் எதிர்வினை (react) எதுவும் செய்யாமல், உடலின், உள்ளத்தின் சோர்வைப் புறக்கணித்தாள். அலுவலகத்தில் ஏகப்பட்ட பைல்கள். மிகுந்த நம்பிக்கையுடன் பொறுப்பான வேலையைப் பாஸ் அவளிடம் கொடுத்திருந்தார். அத்தனையும் முடித்துவிட்டு அயர்ந்து வீடு திரும்பினால் அவளிடம் எதிர்ப்புத் தெரிவிக்கக் காத்திருப்பது போல் "காபி” என்கிறான்.

ஆனால் முன்பெல்லாம், அவன் முன்னால் வந்துவிட்டால், "வேலை அதிகமா விஜி? நான் வேண்டுமானால் வீட்டு வேலையில் ஹெல்ப் செய்யட்டுமா?'' என்பான். வந்ததும் வராததுமாய் எதுவும் கேட்கமாட்டான். ஆனால் இன்று....!

மௌனமாய்க் காபி போட்டுக்கொண்டு வந்து கொடுத்தாள். டம்ளரை வாயில் வைத்தவுடன், "தூ... இது காபியா? இல்லை கஷாயமா?'' என்றான்.

விஜிக்கு அதிர்ச்சியாயிருந்தது. எத்தனை ஆர்வத்துடன் நல்ல காபி போட்டுக்கொண்டு வந்தாள். ஆத்திரமும், அழுகையும் வந்தது. "இல்லை, நான் ஆத்திரப்படக்கூடாது. அழுவதும் சரியில்லை. அவருக்கு என்ன கஷ்டமோ?" என்று தன்னைத் தேற்றிக்கொண்டு உள்ளே சென்றாள். அவன் குரல் அவளைத் துரத்திக்கொண்டு வந்தது. "என்ன திமிர் உனக்கு? ஒரு காபி போடத் துப்பில்லை, பெரிய ஆபீஸர் உத்யோகம்'' என்றான்.

அவன் மனதில் ஏதோ பிரச்சினை. திருமணமான புதிதில் தனக்கு வீட்டு வேலையே தெரியாதபோது குறையேதும் கூறாமல் ஆதரித்தவன்; அதன் பிறகும்கூட குறை சொல்லத் தயங்கியவன்; "இப்போதெல்லாம் நீ நன்றாகவே சமைக்கிறாய்" என்று பாராட்டியவன்; அவன் சுவையறிந்து கொடுத்த காபியைக் குறை சொல்கிறானென்றால் குறை காபியில் இல்லை. அவன் மனதில் ஏதோ குறை என்று புரிந்தது. எதைப் பற்றியும் சிந்திக்க முடியாமல் உடலில் சோர்வு எழுந்தது அவளுக்கு.

காலையில் எழுந்தது முதல் வீட்டு வேலை. வேலைக்காரி இருந்தாலும் அவளிடம் வேலை வாங்குவதே பெரிய வேலை. பிறகு சமையல். வேலை செய்யுமிடத்தில் திடீரென பெரும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் கடும் உழைப்பு. இப்படி அளவுகடந்து உழைத்துவிட்டு ஓய்வு, நிம்மதி, சந்தோஷம் என்று வீட்டைத் தேடி வந்தால் என்றுமில்லாத திடீர் எதிர்ப்பு கணவனிடம்.

எரிச்சலுக்கு இடம் கொடுக்கக்கூடாது என முடிவு செய்தாள். சிற்றுண்டி தயாரித்தாள். அன்புடன் சாப்பிட அழைத்தாள். இந்த அன்பும் பணிவும் அவனைச் சாந்தப்படுத்தும் என்று நினைத்தாள். "எதற்காக இப்படிக் குழைகிறாய்?'' என்று எரிச்சலூட்டினான். மனம் வலித்தது அவளுக்கு. உடனே அவள் மனக்கண்ணில்ஒரு ஆன்மீக மாத இதழில் படித்த கருத்து பளிச்சிட்டது. அது

"யாரோடு நமக்குப் பிரச்சினை வந்தாலும் நாம் வாழ்வை விட்டகன்று அன்னையிடம் (பாண்டிச்சேரி மதர்) வர வேண்டும். அதாவது யாரேனும் நம் மனம் புண்படப் பேசினால் நம் மனம் புண்படக்கூடாது. புண்படாவிட்டால் வாழ்வை விட்டகன்றுவிட்டோம். மனம் நிதானமாக இருந்தால் அன்னைக்கு வந்துவிட்டோம். வாழ்வில் எதிராளிக்கு வலிமை உண்டென்றால் அன்னையில் நமக்கு எப்பொழுதும் வெற்றியுண்டு''

என்பது.

தற்செயலாகப் படித்ததுதான். இப்பொழுது அது பயன்பட்டது. அந்த அன்னை யாரென்றுகூட அவளுக்குத் தெரியாது. கருத்தை மனம் பூரணமாய் ஏற்றது. என் மனம் வலிக்கக்கூடாது. அது அவன் அகங்காரத்தை வலுப்படுத்திவிடும் என்று எச்சரிக்கையாய் வலியைத் தவிர்த்தாள்.

"முதலில் சாப்பிடுங்கள். உங்களுக்குப் பசி'' என்று பொறுமையாக அவன் முன் பலகாரத் தட்டை வைத்தாள். தன் கோபம் அவளால் ஏற்றுக்கொள்ளப்படாமல் தன்னிடமே திரும்பி வந்தது அவனால் ஏற்க முடியவில்லை.

"அது சரி, உனக்கெதற்கு என் தயவு? உனக்கு ஏவல் செய்ய எத்தனையோ பேர் காத்துக்கிடக்கிறார்களே'' என்று மேலும் குத்திப் பேசினான்.

மெல்லச் சிரித்தாள். உண்மையில் அவன் கோபம் ஒரு விளையாட்டுக் குழந்தையின் கோபம் போன்று அர்த்தமற்றிருந்தது.

"என்ன சிரிப்பு? திமிர் பிடித்தவள். அத்தனை அலட்சியம்'' என்று கடும் வார்த்தைகளோடு கையையும் ஓங்கிவிட்டான். ஆனால் அடிக்கவும் (அடிப்பதற்காகக்கூட) உன்னைத் தீண்டப் பிடிக்கவில்லை என்பதுபோல் நடந்துகொண்டான்.

இப்பொழுது மன வலியை பொறுக்கக் கடினமாயிருந்தது. தன் சகிப்புத்தன்மையை இழந்துவிடுவாள் போலிருந்தது. "இல்லை, இழக்கமாட்டேன். போராடுவேன். மௌனமாகப் போராடுவேன். தீய குணத்தை வலுப்படுத்த நான் துணை செய்யமாட்டேன். மதர் நீங்கள் யாரோ, நானறியேன். ஆனால் உங்கள் வழி என்னை ஈர்த்துவிட்டது. அன்னையில் நமக்கு எப்பொழுதும் வெற்றியுண்டு என்பதை என் மனம் பூரணமாய் நம்புகிறது. இப்பொழுது புதிதாய் தோன்றிய இப்பிரச்சினையை உம்மை உணரும் வாய்ப்பாக நான் ஏற்கிறேன்'' என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

இரவு வேலை முடிந்து படுக்கைக்கு வந்தாள். இரவில் உறங்கு முன் பால் அருந்தும் பழக்கம் அவனுக்கு உண்டு. அதனால் இரவு ஒரு டம்ளர் பாலை மறவாமல் கொடுத்துவிடுவாள். இன்றும் அதுபோல் எடுத்து வந்தாள்.

"பாலைக் குடிக்காமல் தூங்கிவிடாதீர்கள். பால் வைத்திருக்கிறேன்'' என்று மெல்ல பால் டம்ளரை அருகிலிருந்த ஸ்டூலில் வைத்தாள். ஒன்றும் பேசாது எடுத்துக் குடித்துவிட்டுப் படுத்தான்.

பகல் முழுவதும் அதிகாரம் செய்தாலும் படுக்கையறையில் ஆண்கள் சமாதானமாகிவிடுவார்கள் என்பது வழக்கு. அதுதான் அவன் இப்போது ஏதும் பேசாததற்குக் காரணமோ என்று விஜியின் மனம் நினைத்தது. "சீச்சீ, அதுவே மெய்யானாலும் என் மனம் அப்படி நினைப்பது சரியில்லை. உறவு என்பது பிரியம், அதிகாரமில்லை. முடிந்தால் எதுவும் செய்வேன் என்பவன் மனிதனில்லை. அவன் கணவனாக முடியாது என்பது நீதியானால், நடக்கும் என்றால் நடத்திக்கொள்வேன் என்பது நல்ல மனைவிக்கு அழகன்று. அவன் கோபத்திற்கு அவன் பரிகாரம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கமாட்டேன்” என்று தனக்குள் கூறிக்கொண்டாள்.

மறுகணமே, அவன் எழுந்து உட்கார்ந்தான். "விஜி, என் மீது கோபமில்லையே?'' என்றான். விஜியின் மனதில் லேசாக அகந்தை எழப் பார்க்கிறது. மட்டென்று அதன் தலையில் ஓரடி கொடுத்து அடக்கிவிட்டு, "அதெல்லாம் ஒன்றுமில்லை. நிம்மதியாய்த் தூங்குங்கள்'' என்றாள் இதமாக. திரும்பிப் படுத்து உறங்கிவிட்டான். அவன் பேசிய குதர்க்கவாதம், குத்தல் மொழிகள் யாவும் கரைந்து உருவிழந்தன. அவளும் அமைதியாய் உறங்கினாள்.

உண்மையில் அவன் அன்பான கணவன். அவளுக்கு உறுதுணையாக நடப்பவன். அவன் என்றுமே அவளை அதிகாரம் செய்ததில்லை. அவளும் அதைப் பயன்படுத்தி அவனிடம் எதையும் சாதித்துக் கொண்டதில்லை. அன்பிற்காக அன்பு செய்பவர்கள். பிறகு ஏனிப்படி? அதுவும் இப்பொழுதுதான்.

மறுநாள் காலையில் உடலும், மனமும் தெளிந்து, "இன்றைய பொழுது இறையருளால் நன்றாக நடக்க வேண்டும்" என்ற பிரார்த்தனையுடன் எழுந்தாள் விஜி. பக்கத்துப் படுக்கையில் வாசன் இல்லை. எழுந்துவிட்டான் போலும். தினமும் இவள்தான் முதலில் எழுந்து காபி தயாரிப்பாள். இன்றென்ன அவன் எழுந்துவிட்டான்?

பல் துலக்கி, முகம் கழுவி, காபி தயாரிக்க வந்தாள். வாசல் பக்கக் கதவில் வைக்கப்பட்ட கூடையில் பால் பாக்கெட் போடப்பட்டிருக்கும். அதை எடுக்கப் போனாள். பால் பாக்கெட் இல்லை. "ஐந்து மணிக்கே வந்துவிடுமே, மணி ஆறாகிவிட்டதே” என்று உள்ளே வந்து டிகாஷன் போட முயன்றவள் அடுப்பு மேடையில் பில்டரில் டிகாஷன் இறக்கி, பால் காய்ச்சப்பட்டிருந்தது. வெளிப்பக்க வராந்தாவில் வழக்கம்போல் தண்டால் எடுத்துக்கொண்டிருந்தான் வாசன். 

"காபி கலந்து கொண்டு வரட்டுமா?'' என்றாள்.

"குடித்துவிட்டேன், வேண்டாம்'' என்றான் பாராமுகமாக.

என்ன வியப்பு! என்றுமே இப்படி நடந்ததில்லை.

பிறகு பணிகளைத் தொடர்ந்தாள்.

அன்று வழக்கத்திற்கு மாறாக காலை எட்டு முப்பதுக்கே (8.30) புறப்பட்டுவிட்டான். "என்ன அதற்குள் புறப்பட்டுட்டீங்க? இட்லி ரெடியாயிடிச்சு. எடுத்து வரட்டுமா?'' என்றாள் விஜி.

"வேண்டாம், வேண்டாம். நான் வெளியில் சாப்பிட்டுக் கொள்கிறேன்'' என்று கூறியபடி மேலும் பேச இடம் கொடுக்காமல் வண்டியை எடுத்துவிட்டான்.

எதுவும் பேச முடியவில்லை. வேலைக்காரி உள்ளே துணி துவைக்கிறாள். மூன்றாம் மனிதர் நடுவில் பேசிக்கொள்வது நாகரிகமில்லை என்று பேசாதிருந்துவிட்டாள். அவனோ அவள் சுபாவம் அறிந்து (அடுத்தவர் முன்னால் தன்னை விசாரிக்க மாட்டாள் என்பதறிந்து) அவள் பேச வழியில்லாமல், வேலைக்காரி இருக்கும்போதே வெளியேறினான்.

8.30 மணிக்கே எங்குப் போவான்? ஒழுங்குமுறை தவறினால் வீண் பிரச்சினை ஆகுமே என்ற கவலை அவளுக்கு.

வேலைக்காரி உன்னிப்பானவள். "ஐயா ஏம்மா இம்மாஞ் சீக்கிரம் போறாரு?'' என்றாள்.

"ஏதாவது அவசர வேலையாய் இருக்கும். அதனால்தான் போகிறார்'' என்று மிக இயல்பாய்க் கூறிச் சமாளித்தாள்.

"எள் வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார். உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம்பலத்துரைப்பார்”என்ற பாரதியின் வாக்கு சத்திய வாக்கன்றோ!

வேலைக்காரர்கள் முன் வீட்டு விஷயம் பேசுவது வதந்திக்கு வாய்ப்பல்லவா?

அவள் வேலை முடிந்து வெளியேறியபின், விஜி புடவையை மாற்றிக்கொண்டு, டிபன் எடுத்துக்கொண்டு புறப்பட்டாள்.

அவன் டிபன் சாப்பிடவில்லை. சாப்பாடும் எடுத்துப் போகவில்லை. எல்லாவற்றையும் டைனிங் டேபிள் மீது வைத்து மூடினாள். அவனிடம் ஒரு சாவியிருக்கிறது. திடீரென்று வந்தாலும் ஏமாறாமல் எடுத்து சாப்பிடட்டும் என்று வைத்துவிட்டுப் போனாள்.

அலுவலக வாயிலை மிதித்ததும் வீடும் பிரச்சினைகளும் மறந்துபோய் பைல்களும் பொறுப்பும் இடம்பிடித்துக்கொண்டன.

திடீரென்று முக்கிய மீட்டிங் ஏற்பாடாகி, நிறுவனத்தின் முன்னேற்றம் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பேசுவதற்கு முக்கியமானவர்கள் அழைக்கப்பட்டனர். பிரமோஷனுக்கு முந்திய நிலையில் உள்ள, அதுவும் புதிதாக வேலையில் சேர்ந்திருந்த விஜியும் அழைக்கப்பட்டாள்.

எல்லோருக்கும் ஒரே வியப்பு. இவள் எதற்கு அழைக்கப்பட்டாள்? ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ஆனால் முதலாளியின் விருப்பத்தை யார் தடுக்க முடியும்?

அவரே பேசினார். "என்ன எல்லோரும் திகைக்கிறீர்கள்? விஜியை அழைத்திருப்பதற்காகவா? ஆமாம், நான்தான் அவளையும் அழைத்தேன். அவள் இருக்கும் சீட் எதுவாயினும் அவள் செய்யும் பணி பெரியது. என் சீட்டிலிருந்து செயல்பட வேண்டிய திறமைசாலி அவள். அவள் இதில் கலந்துகொள்வது நல்லது என்றுதான் அழைத்திருக்கிறேன்'' என்றார். மானேஜரின் முகம் மாறுவதை முதலாளி கவனிக்கத் தவறவில்லை.

மீட்டிங் முடிந்து முதலாளி போய்விட்டார். திடீரென சலசலப்பு. அவரவர் அவரவர் போக்கில் பேசிக்கொண்டனர். "வயதான காலத்தில் இவருக்கு ஏன் இந்தப் பெண் பித்து?'' என்றனர். ஆனால் இதில் உண்மை ஏதும் இல்லை. விஜி அநாவசியமாய் யாருடனும் சிரித்துப் பேசமாட்டாள். அதற்காகக் கடுகடுப்பும் இல்லை. வேலையில் பொறுப்பானவள் என்பது நூறு சதவிகித உண்மை. விஜியை வேலைக்குச் சேர்த்ததில் மானேஜருக்குத்தான் சரியில்லை. அவள் முகத்தைப் பார்த்து "ஒன்றும் தெரியாத பெண், பயன்படுத்தலாம்" என்றெண்ணியது தவறாகிவிட்டது. முதலாளி உள்ளே நுழைந்ததுமே முக்கிய பைலை அவரிடம் கொடுத்துவிட்டாள். உண்மையில் அவள் மானேஜரிடம்தான் வந்தாள். முதலாளி அறையில் இருந்ததால் அவரே அவள் கூறிய கருத்துகளைக் கேட்டு பைலையும் தானே கையில் வாங்கிக் கொண்டுவிட்டார். மானேஜருக்கோ திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை. முதலாளி மானேஜரிடம் தம் உண்மையான மனநிலையை, அதாவது மானேஜரின் திருட்டுப் புத்தியைக் கண்டுகொண்டதை காட்டிக்கொள்ளவேயில்லை.

அன்று மாலை அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்தாள். அவன் இன்னமும் வந்திருக்கவில்லை. மதியமும் வந்து சாப்பிட்டிருக்கவில்லை. டேபிள் மீது எல்லாம் வைத்தது வைத்தபடியிருந்தது. இன்று அலுவலகத்தில் முதலாளி அவளைப் பாராட்டிப் பேசிய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டியவன் வீட்டிலில்லை. உண்மையில் அவளைவிடவும் அவன்தான் சந்தோஷப்படுவான். அவள் எவ்வளவோ மறுத்தும் பிடிவாதமாய் இந்த வேலையை வாங்கிக் கொடுத்தவன் அவன்தான்.

மௌனமாக அவன் வரவிற்குக் காத்திருந்தாள். இரவு பத்து மணிக்கு வந்தான். நேரமாகும் என்றால், போகும் விபரம் சொல்லிவிட்டுத்தான் போவான். அநாவசியமாய் அவளைக் காக்க வைப்பதோ, கவலைப்படச் செய்வதோ அவன் இயல்பில்லை. இனம் புரியாமல் உருமாறியிருந்தான். கதவைத் தட்டிய விதமே அவன் மனக்குமுறலைக் கூறிற்று. கதவைத் திறந்தாள். "ஏன் இவ்வளவு லேட்? எங்கு போயிருந்தீர்கள்?'' என்று அன்பான மனைவியாய்த்தான் விசாரித்தாள். ஆனால் அவனோ, "வழியை விடு'' என்று பட்டென்று அவளை விலக்கிவிட்டு நேரே படுக்கையில் போய் படுத்துவிட்டான்.

என்ன பேசுவது? எப்படிப் பேசுவது? எதையாவது சொல்லி அவனை ஆத்திரமூட்டிவிடக்கூடாது என்று கவனமாயிருந்தாள்.

"சாப்பிட வாருங்கள்'' என்றாள் இதமாக. அவன் அசைந்து கொடுக்கவில்லை. "இந்தப் பாலையாவது குடித்துவிடுங்கள்'' என்று வழக்கம்போல் பால் டம்ளரை ஸ்டூலில் வைத்தாள். அதைப் புறக்கணிப்பது போல் திரும்பிப் படுத்தான்.

காரணமே கூறாமல் இவன் ஏனிப்படி உள்ளுக்குள் புழுங்குகிறான். அவன் தன்னை வெறுக்கும்படி தான் ஏதாவது பிழை செய்தோமா என்று நினைத்துப் பார்த்தாள். அப்படி ஒன்றும் செய்யவில்லை என்றே தோன்றியது. அவளையும் மீறிய அசதியில் உறங்கிவிட்டாள்.

மறுநாள் காலை அவன் எழுந்திருக்கும் முன்பே எழுந்து பால் காய்ச்சி, டிகாஷன் தயார் செய்துவிட்டாள்.

அவன் அதைப் புறக்கணிப்பதுபோல் வெளியே போய்விட்டான். ஏனிந்த மௌனப் போராட்டம். ஏதாவது கேட்கலாம் என்றால் சரியான சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. காலையில் வேலைக்காரி இருக்கிறாள். இவள் விஷயத்திற்குக் கண், மூக்கு வைத்து ஓருருக் கொடுத்து விடுவாள். கணவன், மனைவிக்கிடையே காற்றும் நுழையாத ஒற்றுமையை விரும்புகிறவள் விஜி. எட்டு மணிக்கு வந்து ஹாலில் நியூஸ்பேப்பருடன் உட்கார்ந்தான்.

"ஐயா, குளிக்கப் போகலீங்களா? துணியைப் போட்டா துவைச்சுடுவேனே'' என்றாள் வேலைக்காரி.

என்ன பதில் சொல்லப்போகிறானோ என்று உள்ளிருந்தே கவனித்தாள் விஜி.

"நீ உன் வேலையை முடிச்சுட்டுப் போ. என் துணியிருந்தா அம்மா பார்த்துக்குவாங்க'' என்றான்.

எப்பொழுது அவன் வேலைக்காரி முன் தன்னை விட்டுக்கொடுக்கவில்லையோ அப்போதே அவனுக்கு அவள் மீது உண்மையான கோபமில்லை என்பதை நுட்பமாய்ப் புரிந்துகொண்டு உள்ளூர சந்தோஷப்பட்டாள்.

குளிக்காமல், உடை மாற்றாமல், தலை சீவிக்கொண்டு எங்கோ புறப்பட்டுவிட்டான். வேலை முடிந்து வேலைக்காரியும் போய்விட்டாள். நேரமாகிக் கொண்டிருந்தது. குளித்து, உடை மாற்றி, சாப்பிட்டுவிட்டு, கையில் டிபன் எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள். சில தினங்களாக அவளை அழைத்துக்கொண்டு போகவில்லை என்பதுடன் இன்று புறப்படும் வரை வீட்டிற்கே வரவில்லை.

என்ன நடக்கிறது இந்த வீட்டில்? தனக்கு அவனைவிட உயர்ந்த உத்யோகம், அதிகச் சம்பளம். இதெல்லாம் அவர்களுக்குள் இடையூறாய் இருந்ததில்லை. பணத்திற்காகவும் அவளை அவன் வேலைக்கனுப்பவில்லை. அவள் திறமை, படிப்பு உலகுக்குப் பயன்பட வேண்டும் என்று கூறி அவளை உற்சாகப்படுத்தியவனே அவன்தான். சம்பளக் கவரைப் பொதுவாக சுவாமி அறையில் வைத்துவிடுவார்கள். வரவு, செலவு கணக்கெழுத இருவருமே தவறியதில்லை. கணக்கு நோட்டு பொதுவாகவே வைக்கப்பட்டிருக்கும். முக்கிய செலவுகளை இருவரும் கலந்து பேசியே முடிவெடுப்பார்கள். தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே அவசியமானால் தாமே செலவு செய்து கணக்கெழுதிவிடுவார்கள். பணம் கொடுக்கல், வாங்கலில் வெளியே யாருடனும் பிரச்சினை வந்ததில்லை. கணக்கு அவ்வளவு சுத்தம். அவர்கள் இருவருமே தங்கள் வருமானம் பற்றி பெருமையாகவோ, குறைவாகவோ பேசிக்கொண்டதில்லை. பணமோ, பதவியோ தங்கள் அன்பைப் பிரிக்க இடம் கொடுக்கக்கூடாது என உறுதியாயிருந்தனர். இந்நிலையில் அவனுக்கு வேறு என்ன பிரச்சினை?

"சரி, எதுவானாலும் பொறுத்திருப்போம்'' என்று அலுவலகம் புறப்படத் தயாரானாள். மணி ஒன்பதரை ஆகியும் அவன் வரவில்லை. கதவைப் பூட்டிவிட்டாள். அவன் இன்று தன் சாவியை எடுத்துப் போகவில்லை. இருவருக்கும் தனித்தனி வீட்டுச் சாவி வைத்திருந்தனர். எங்கே போனான் என்பதும் தெரியவில்லை. சாவியை எங்கும்கொடுத்துவிட்டுப் போக இதுவரை நேர்ந்ததில்லை. இறுதியில் அவன் சாவியை எதிர்வீட்டு மாமியிடம் கொடுத்துவிட்டு, அவன் வந்தால் கொடுத்துவிடும்படி சொல்லிச் சென்றாள். மாமி கவனித்துக் கொடுக்க வேண்டுமே என்ற கவலையும் உள்ளூர இருந்தது. ஆனால், என்ன செய்ய? இதற்கு மேல் தாமதிப்பதற்கில்லையே.

தொடரும்....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பெருங்குழப்பம், செய்வதறியாது திகைத்த மனநிலை, நம்பிக்கைத் துரோகம், தாள முடியாத வேதனை, நோய், மிருகத்தனமான கொடுமை ஆகியவை தவிர்க்க முடியாத திருவுருமாற்றத்தின் தேவைகளாகும்.
 
தாளமுடியாத வேதனை தவிர்க்க முடியாத நிபந்தனை.
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
புதுமை பொங்கி, உணர்வைக் கடந்தால் நிறைவு ஏற்படும். வெளியிலிருந்து அது வந்தால், தற்காலிகமாகவும், உள்ளிருந்து எழுந்தால் நிரந்தரமாகவுமிருக்கும்.
 
புதுமை பொங்கி, உணர்வைக் கடந்தால் நிறைவு ஏற்படும்.
 
******



book | by Dr. Radut