Skip to Content

11. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

Life Exists in Brahman in order to discover Brahman in itself (P.36)

பிரம்மத்தை பிரம்மமாக அறிய வாழ்வு பிரம்மத்துள் உறைகிறது.

மனிதன் ஏன் வாழ்கிறான் என்ற கேள்வி இலட்சியவாதிக்குத் தான் எழும். தெய்வ பக்தியுள்ளவர்கள் மோட்சமடைய மனிதன் வாழ்கிறான் என்பார்கள். மற்றவர்கள் மனிதன் குடும்பத்திற்காக வாழ்கிறான், சமூகத்திற்காக வாழ்கிறான், நல்ல பெயர் எடுக்க வாழ்கிறான் எனக் கூறுவார்கள். தனக்காகவே வாழ்பவருண்டு. அவருள்பட எவரும் மனிதன் சுயநலத்திற்காக வாழ வேண்டும் எனக் கூறமாட்டார்கள். எதற்காக வாழ்ந்தாலும், அவரவர் குறிக்கோளை அவரவர் அடையும் பாதையை ஆராய்ந்தால் எல்லோருடைய பாதையிலும் இலட்சியம் வேறுபட்டிருந்தாலும் போக்கு, பாணி, நோக்கம், முறை (approach) பொதுவாக இருக்கும்.

எதையடைய முனைகிறோமோ அதனுள் நாம் உறைய வேண்டும்.

மோட்சத்தையடைய விரும்புபவன் மோட்சத்துள் வாழ்வை அமைக்க வேண்டும்.

போகிற கதிக்கு வழி செய்வோம் என்பது கொச்சையான வழக்கு. நமது இலட்சியம் மோட்சமானால் நம் எண்ணம், செயல், வாழ்வு மோட்சத்துள் அமைய வேண்டும். எதைச் செய்தாலும் அது நம்மை மோட்சத்திற்கு அழைத்துப் போகும்படிச் செய்ய வேண்டும். எளிய பாஷையில் சொன்னால் "வாழ்வு முழுவதும் குறிக்கோளையடைய முயல வேண்டும்".

பணம் சம்பாதிப்பது எளிமையாகப் புரியக்கூடியது;

பணமே குறியாக இருப்பவன் அவன் திறமைக்கேற்ப சம்பாதிக்கிறான். மேற்சொன்ன சட்டப்படி பணம் ஈட்டும் செயல் பிரம்மத்தைக் காண உதவும். சமூகத்தைக் காண உதவும். அந்த நோக்கங்கள் பணம் ஈட்டுவதையே குறியாக உள்ளவன் சம்பாதித்ததைப் போல் பல மடங்கு சம்பாதிக்கும்.

  • சமூகத்தைக் காண முயல்பவன் உலகத்துச் செல்வத்தைச் சம்பாதிப்பான்.
  • பிரம்மத்தைக் காண முயல்பவன் சிருஷ்டியின் செல்வத்தைச் சம்பாதிப்பான்.

பணத்தில் பிரம்மத்தைக் காண முயல்வது யோகம். அவரடைவது பிரபஞ்ச செல்வம். அவருக்குச் செல்வம் பொருட்டல்ல. வாழ்வை மேற்கொண்டவன் பணத்தில் சமூகத்தைக் காண முயன்றால் உலகத்துச் செல்வத்தை நல்ல முறையில் சம்பாதிப்பான். பணமே குறியானவன் பணத்துள் பணத்தைக் காண்கிறான். எதிலும் பணத்தைக் காண முயல்கிறான். பெரும் பணம் சேர்கிறது. சமூகம் செல்வத்தைவிடப் பெரியது. செல்வத்துள் சமூகத்தைக் காண முயன்றால் சமூகத்தின் முழுத் திறனும் நம்மை வந்து அடையும். பணம் அதன் பகுதி. செல்வத்துள் சமூகத்தைக் காண்பது என்றால் என்ன? நாம் 500 ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்கினால் அதன் கருத்தையறியப் படிக்கிறோம். அப்புத்தகம் வெளிவர சமூகத்தின் எந்த எந்த பகுதிகள் எப்படியெல்லாம் செயல்பட்டன என அறிந்தால் புத்தகத்துள் சமூகத்தைக் காணலாம். அதன் வழி புத்தகம் அதனுள் எழுதப்பட்டவை மட்டுமின்றி அப்புத்தகம் தயாராக சமூகம் செய்த அத்தனை முயற்சிகளையும் நமக்கு ஞானமாகத் தரும். செல்வத்தைப் பணமாகக் கருதினால் செலவு செய்யலாம். சமூகம் எப்படிப் பணத்தை உற்பத்தி செய்தது என அறிந்தால்*, (* இக்கருத்தை விளக்கும் நூல் எழுதப்படுகிறது.) அறிவது பூரணமானால், உலகத்துச் செல்வம் முழுவதும் அந்த ஞானம் வழி அவரைத் தேடி வரும். அமிர்தமான செல்வம் அபரிமிதமாக நம்மை வளரும் ஆனந்தமாகத் தேடி வரும்.

*****



book | by Dr. Radut