Skip to Content

12. அன்னை இலக்கியம் - மனிதனும் மிருகமும்

"அன்னை இலக்கியம்"

மனிதனும் மிருகமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

சியாமளா ராவ்

மாமி, அவளுக்கு ஒரு வீட்டில் காலை சமையலுக்கு ஏற்பாடு செய்திருந்தாள். அந்த வீடு, பார்வதியின் கணவன், யாருக்குக் குழந்தையைக் கொடுத்து, பணம் வாங்க நினைத்தானோ, அதற்குப் பக்கத்து வீடு.

அதையறிந்த பார்வதியின் மனதுக்குள் எந்த சஞ்சலமும் ஏற்படவில்லை. அன்னையின் விளையாட்டு, "எல்லாம் நன்மைக்கே”, அன்னையின் எண்ணங்களை, நமக்குத் தரும் சில சந்தர்ப்பங்களைப் பற்றி அலச, நாம் யார்? நம்மையே அலசி, நல்லவைகளை நமக்குத் தந்து, அல்லாதவைகளைத் தூக்கியெறியச் செய்யும் அன்னையின் லீலைகளை யாரே அறிவர்?

அறியக்கூடாது. அறியவும் முடியாது. அதற்கான வழிவகைகளை நாம் செய்யவும் கூடாது.

"அன்னை'' என்பவர் யார்? அவர் அனைவருக்குமே தாயாவார். தாய்க்கு, தன் குழந்தைகளுக்கு, எது சரி, எது தப்புஎன்று சொல்லத் தெரியாதா? நல்ல வழிக்கு அழைத்துச் செல்லத் தெரியாதா? அவற்றையெல்லாம் நேரிலா சொல்வார்? மாட்டார். எல்லாவற்றையும் சூசகமாகவே செய்துவிடுவார். அதை உணரும் சக்தி, அன்னையிடம் நமக்கு எவ்வளவு பக்தியும், உண்மையும் இருக்கிறதோ... அதற்கேற்ப... நிச்சயம் நமக்குக் கிடைக்கும். இது உறுதி.

பெற்ற தாயார், குழந்தையிடம்... இது மிளகாய். வேண்டாம் எடுக்காதே. அதைத் தொட்டு, கண்களைத் தொடாதே, என சொல்கிறார்என்றால் எதற்கு? குழந்தைக்கு, மிளகாய் காரம், அது எரிச்சலைத் தரும்எனத் தெரியாது. அதனால் தாய் சொல்கிறாள் அது காரம் என்று.

அதே போல்தான் அன்னை, வளர்ந்த குழந்தைகளாக நம்மை பாவிக்கிறார். அதனால், நம்மிடமுள்ள நல்லவை அல்லாதவைகளை விலக்கப் பலவிதங்களிலும் வழிகாட்டுகிறார். அந்த நல்வழிகளை நாம் ஏற்றுக் கொள்வதும், ஏற்காததும் நம் பொறுப்பு. நம் பொறுப்பிற்கேற்ப, நம்மை அணைப்பதும் அன்னைதானே. நாம் காரம்என்று தெரிந்தும் சில விஷயங்களை ஏற்கிறோம்என்றால், அது நம் பொறுப்பு. அன்னை மறுப்பதையும், மறுக்கும் நாம், நம்மிஷ்டப்படி நடப்பது, பிறகு காரியம் கைகூடவில்லைஎன்று அன்னையிடமே முறையிடுவதுஎன்பது சரியா? யோசித்துப் பார்க்க வேண்டும்.

அன்னையிடம் முறையிடுங்கள். அது தவறே அன்று. நம் அத்தனை மனக்கிலேசங்களையும், ஆதங்கங்களையும், அன்னையிடமே கொட்டித் தீர்க்கலாம். ஆனால், அந்த மனக்கிலேசங்களோ, ஆதங்கங்களோ, நம்மால், நம் சுய எண்ணங்களால், சுயநலங்களால் ஏற்பட்டதுஎன்றால், அதை நமக்கு நாமே, நம்மை, வாசனை சோப்பு போட்டு சரீரத்தை மணமாக்கிக் குளிப்பதைப் போல், நல்லெண்ணங்களை நமக்குள், சரீரம் முழுவதும் ஊடுருவச் செய்து, நம்மை நாமே புடமாக்கிக் கொள்ள வேண்டாமா?

இது உடனே சாத்தியமா? முடியுமா? குடும்பச் சூழ்நிலையில் இவையெல்லாம் நடக்குமா?

நடக்க வைக்க வேண்டும். அன்னையிடம் எத்தனை உரிமையோடு, நம் மனதிற்கிசைந்தபடி கேட்கிறோமோ, அதே உரிமையோடு, அன்னையின் கோட்பாடுகளையும் நாம் ஏற்க வேண்டும். ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

"என்னிஷ்டப்படி நான் நடந்தாலும், நீ அன்னை தானே! என்னிடமுள்ள வேண்டாதவைகளையகற்றி, எனக்குத் தர வேண்டியது உன்னுடைய பொறுப்புத்தானே...''

இந்த விதண்டாவாதத்துடன் அன்னையை வேண்டுபவர்கள் எத்தனை பேர்? "வாதம்' என்பது வேறு. "விதண்டாவாதம்” என்பது வேறு. வீண் விவாதங்களிலும், விதண்டாவாதமும் என்றும் வெற்றிப் பெற்றதாகச் சரித்திரமேயில்லை.

பண்டைய காலம் தொட்டு, பூக்களை, தெய்வங்களுக்கு அர்ப்பணித்து வருகிறோம். அது ஒரு கடமையைப்போல், பெரியவர்கள் சொன்னபடி செய்கிறோம். ஆனால், அதன் உள்ளர்த்தம் நமக்குத் தெரிந்ததில்லை.

அன்னை, ஒவ்வொரு பூவுக்கும், எத்தனை அழகாக, அததன் பலனைக் கூறியிருக்கிறார். இது நாமறியாத புதுமை அல்லவா? அதைப் படித்து நம் மனம் எத்தனை சந்தோஷிக்கிறது? உடனே, நம் நிலைக்கு ஏற்ப, அந்தந்த பூக்களைத் தேடிச் செல்கிறது. சந்தோஷத்தோடு பறித்து, அன்னைக்கு வைத்து, மகிழ்ச்சியோடு, "இனி என்னுடைய இந்தச் சங்கடங்கள் நீங்கிவிடும்' என்கிற மன அமைதியோடு, திருப்தியோடு, இரண்டும் கலந்த பக்தியோடு, "அப்பாடா'' என்கிற நிம்மதியடைகிறது. இந்த நிம்மதியை, பூக்களின் விளைவுகளை... நாம் அனுபவிக்கிறோம்... இது அற்புதமில்லையா?

எந்த ஒன்றையும், பக்தியோடும், உண்மையோடும், நம்மையே அந்த நேரத்திற்கு அர்ப்பணம் செய்து, வேண்டினால், "பூலோகத்தில் சொர்க்கத்தை''யே பார்க்கலாமே.

அன்னையிடம் நம்மையே ஒப்படைத்த பிறகு, கிடைக்கும் "அருள்'' எப்படியிருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்குள் நிச்சயமாக அரும்ப வேண்டும். அரும்பி மலர வேண்டும். அப்போதுதான் அன்னை நமக்குத் தரும் "அன்றாட அற்புதங்கள்'' புரியவரும்.

சில வேளைகளில் நம்மையறியாமலேயே நாம் செய்த சில நன்மைகளுக்குக் கூட, அன்னை பலன் தருவார். அப்போதுகூட நாம் வியப்போம், ஆச்சரியப்படுவோமே தவிர, புரிந்து கொள்ளும் திறமையற்றவர்களாகவே உள்ளோம். ஏனெனில் நம் மனம் மண்டூகமானது. புரிந்து கொள்ளும் சக்தியற்றது. அந்த சக்தியை உற்பத்தி செய்துகொள்ளும் வழிகளுக்கான அலசல்களை செய்யும் திறனில்லாமலிருப்பதால், அந்தத் திறனையும் நாம் வளர்த்துக் கொள்ள, நமக்குப் புரிவதுபோல், ஒவ்வொன்றையும் விலாவரியாக, தெளிவாக எழுதியுள்ள புத்தகங்களை, நாம் படித்துத் தெளிவது அவசியம்.

மாமியிடம் கூறினாள் பார்வதி.

"மாமி, நான் இப்ப சமைக்கிறதுக்குப் போற வீட்டுக்குப் பக்கத்து வீட்டுலதான் என் குழந்தையை விற்கப் பார்த்தார் மாமி...''

"என்னடீ சொல்றே? வேண்டாம். வுட்டுடு. பயமாயிருக்குடி பாரு'' படபடத்துப் பேசின மாமியை சமாதானப் படுத்தினாள் பார்வதி.

"மாமி... இதுகூட, நம்ம அன்னையின் விளையாட்டுன்னு புரியலையா? மாமி, பக்கத்துப் பக்கத்து வீட்டுல எது நடந்தாலும், நமக்கும் தெரியுமில்லையா? அதனால எங்காத்துக்காரர் இனிமே அந்த வீட்டுக்குப் போகமாட்டார். அதுவுமில்லாம, இப்போ அவரை வெளியேத்தியாச்சு. இனிமே... அவர் என்ன நாடகம் போட்டாலும், அன்னை எனக்குக் காட்டிக் கொடுத்துடுவார்ங்கற நம்பிக்கை, பரிபூரணமாயிருக்கு. அவரால, எதையும் செய்ய முடியாது. முடியாதுங்கறதைவிட, செயல்படவே விடமாட்டார் அன்னை. அந்த தைர்யம் என் சரீரத்துக்குள்ளேயே ஓடிண்டிருக்கு. நான் எப்ப வெளியில போனாலும், போகாட்டாலும், தூங்கி எழுந்துக்கறதிலிருந்து, மறுபடி தூங்கறவரை எனக்குள்ளே அன்னைதான், ஓடிண்டிருக்கார் மாமி. அந்த ஓட்டத்தை என்னால, நான் என் மூச்சை நிறுத்தறவரை விட முடியாது. விடவும்மாட்டேன். இது சத்தியமான உண்மை மாமி. அதுவும், அன்னை, ஸ்ரீ அரவிந்தரைக் காட்டிக் கொடுத்த, உங்க வீட்டுக்கே, என்னையும் கூட்டிண்டு வந்துட்டாரே மாமி. இது எத்தனை பெரிய உதவி. மாமி, நான் அன்னையை மட்டுமில்லே, உங்களையும் விட்டு எங்கேயும் போகமாட்டேன்னா மாட்டேன்தான் மாமி''.

மாமியின் கரங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவளின் கண்களில் நீர் தளும்பியது. ஆனால் முகத்தில் ஒரு மலர்ச்சி துளிர்த்திருந்தது.

மனம் என்பது, மனசு என்பது சாதாரணமானதேயில்லை. அதனுள் எத்தனையோ கோடிக்கணக்கான எண்ணங்களின் ஓட்டங்கள். நாம் நம் மனதை நம்மிடம், அதாவது மனதின் ஓட்டங்களை, நம் பிடிமானத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்தப் பிடியை எப்போது தளர்த்த வேண்டும்... எப்போது இறுக்கிப் பிடிக்க வேண்டும் என்னும் உபாயத்தைக் கண்டிப்பாய் கடைப்பிடிக்கத் தெரிந்தவர்களாயிருக்க வேண்டும். அப்போது தான், நம்மால் சரிவர இயங்க முடியும். "ம்... ஹும்... விதியை மதியால் வெல்லலாம் என்கிறார்களே? அது பொய்யா?''

விதி என்பது என்ன? நம்மால் அதை வெல்ல முடியவே முடியாதா? யோசித்துப் பாருங்கள்.

"விதியை மதியால் வெல்லலாம்'' என்கிற வசனமே, மிக மிக உண்மையானதுதான். அதை எப்படிப் பொய்யெனக் கூற முடியும்?

"விதி" என்னும் இரண்டெழுத்து, நம் மதி என்னும் இரண்டெழுத்துக்கு மிகவும் நெருங்கிய உறவுகொண்டது. அதனால்தான் நாம் அந்த மதியைக்கொண்டு விதியை வெல்ல முடிகிறது.

நல்லவர்களை விதி தோழனாக நின்று அரவணைக்கிறது. அதே விதி புத்தியுள்ளவர்களுக்கு, மிக சாதுர்யமான வழிகாட்டியாக அமைகிறது. அதே விதி மூடர்களுக்குத் தன்னை அவர்களைவிட உயர்ந்த ஸ்தானத்திலிருப்பதுபோல் பாவித்து அதிகாரம் செய்கிறது. கெட்டவர்களுக்கு, தன்னை எதிரியாகவே பாவித்து மோதுகிறது.

மதிக்கு, தன் அந்தந்த நிலைக்கு ஏற்ப, நாடகமாடும் நிலையை ஏற்படுத்திக் கொண்டு நடப்பது மனிதர்களாகிய நாம்தான். அதனால்தான் விதியை மதியால் வெல்லலாம் என்பதை, நமக்கேற்ப உபயோகிக்கிறோம்.

ஆனால், அன்னையிடம் சரணாகதியடைந்துவிட்டால், நமக்கு விதியும் சரி, மதியும் சரி ஒரு துச்சமானது. அந்த இரண்டைப் பற்றியும் கவலைப்படவே வேண்டாமே. நம்முடைய எண்ணங்களின் மேல் மதிப்பு வைக்காமல் அன்னையின் மேல் நம்பிக்கையோடு பூரணமாக தியானமோ, நினைப்பதோ வேண்டுதலோ செய்தோமானால், நமக்குத் தேவையானது எதுவோ, அதை நமக்கு நிச்சயமாகத் தந்துவிடுவார் அன்னை. அந்த நம்பிக்கை நம் சரீரம் பூராவும் ஊடுருவி, அன்னையையே நினைக்க வேண்டும்.

பார்வதியின் அந்த தைர்யம், நம்பிக்கை இரண்டுமே அவளுள் ததும்பி நின்றதால் எதற்கும் அவள், "எனக்கு அன்னையின் துணை கூட வருகிறது, அன்னையிருக்க பயமேன்'' என்கிற தாரக மந்திரத்தை, தன்னுள்ளேயே பொதிந்து எப்போதும் பத்திரமாக வைத்திருந்ததால், அன்னை அவளைக் கைவிடுவாரா என்ன?

******

நாள், மாதத்தைத் தொட்டு, வருஷத்தை முழுவதுமாக எட்டிப் பிடித்தே விட்டது.

பெரியவனை ஸ்கூலில் சேர்த்தாயிற்று. சின்னவனை மாமி பார்த்துக் கொண்டார்.

சமையல் ஒரு வேளையிலேயே இரண்டு நேரத்திற்கும் சமைத்து வைத்துவிடுவாள். டிபனுக்கு அரைக்க வேண்டியதையும் அரைத்து, சப்பாத்திக்கு மாவு பிசைந்து, சப்பாத்தியும் செய்து வைத்துவிட்டு, வந்துவிடுவாள். ஒரு டம்ளர் காபியைக் கூட எதிர்பார்ப்பவளில்லை. அவள் சரீரம் முழுவதும் "அன்னையே சரணம்” ஓடிக்கொண்டிருந்ததால், களைப்பு என்பதே அற்றுப்போனது.

வீட்டிற்கு வந்தும் மாமியின் உதவியுடன் பட்சணம் பாடி செய்து கவரில் போட்டு, கடைகளுக்குத் தருவாள். சுத்தமும், ருசியும் அதிகமாயிருந்ததால், சில கடைகளில் பதிவாக அவளிடமே வாங்கினர்.

மனது தெம்பு கூடியபோது, உடலிலும் தெம்பு அதிகமானது. அதனால் உழைப்பும் அதிகமாக, வியாபாரமும் பெருக, வரும்படியும் அதிகரித்தது.

அன்று கொஞ்சம் அசதியுடன் படுத்திருந்த பார்வதியைப் பார்க்கப் பார்க்க மனசு விண்டு விரிந்தது மாமிக்கு. ஆனால் பார்வதியிடம் அசதியிருந்ததே தவிர, மனது கொஞ்சம் கூட துவளவில்லை. அரை மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டவள், துடிப்புடன் எழுந்து, ஏழு சுத்து முறுக்கை, சுற்றத் துவங்கினாள். பார்வதி மறுத்தும் மாமி முறுக்கை எண்ணையில் போட்டு எடுத்தாள்.

மாமி... இப்ப ஆர்டர் நிறைய வருது. இது நிஜம்மா அன்னையோட கருணையாலதான் மாமி. அந்தந்த டைமுக்குத் தரணும்னா, நான் ஒருத்தியே செய்ய முடியலே... ஆளைப் போட்டுக்கலாம்னா... பயமாயிருக்கு. நல்லவாளா கிடைக்கணுமே. அன்னையைத்தான் வேண்டிண்டிருக்கேன். நிச்சயம் வழி பொறக்கும் மாமி.

"இதோ பாரு, வழி பொறந்துடுத்துன்னே வச்சுக்கோடி. என்ன அதிசயம்டி பாரு. அதிசயமேதாண்டி. அதிசயமே அன்னைதாண்டி. என்ன பிரமிச்சுப் போயிருக்கே. காலம்பற நீ சமைக்கப் போயிருந்தபோது, உன் வயசு பொண்ணு வந்தாடி. அவளுக்கு யாருமில்லையாம், ஏதாவது வேலை கிடைக்குமான்னு கேட்டாள். ஒரு நிமிஷம் உனக்கு ஒத்தாசையா வச்சுக்கலாமேன்னு தோணித்து. திரும்ப, நீ வந்தபிறகு கேட்டுண்டு, ரெண்டு பேருமா தீர்மானிக்கலாம்னு...''

கதவைத் தட்டும் சத்தம் கேட்க, பார்வதி எழுந்து கதவைத் திறந்தாள். பின்னாடியே வந்த மாமியும், வரவேற்றாள்.

"பாரு... இந்தப் பொண்ணுதாண்டி வந்தது. நீயே பேசிக்கோம்மா...''

"அக்கா... எனக்கு ஆதரவுன்னு யாருமில்லே. ஏழ்மைக் குடும்பம். பெத்தவாளுமில்லை, கட்டிண்டவனும் விட்டாச்சு. அப்பப்ப கிடைக்கிற வேலையை செஞ்சுண்டிருந்தேன். கடையில, ஏதாவது வேலை கிடைக்குமா, கூட்டிப் பெருக்கி செய்யலாமேன்னுதான், அந்த பெரிய கடைக்குப் போனப்ப, அவங்கதான் சொன்னாம்மா. உங்களுக்கு உதவிக்கு ஆள் வேணும்னு கேட்டிருந்தீங்கன்னு சொல்லி விலாசம் குடுத்தா... அதான்...'' மேலே பேச தயங்கினாள்.

பாவமாகயிருந்தாலும், கொஞ்சம் பயமும் மனசுக்குள்ளிருந்தது பார்வதிக்கு. சட்டென அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் படத்தை ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் பார்த்து, மனமார வேண்டினாள். தெம்புடன் பேசினாள்.

"இதோ பாரும்மா... நீ யாரு... என்னன்னு எனக்குத் தெரியாது. அந்த கடைக்காரர் சொன்னதால சரின்னு சொல்லலாம்னு இருக்கிறேன். ஆனா, உனக்கு இருக்கிறதுக்கு இடம் இருக்கோல்லி லியோ? இத்தனை நாள் எங்கேயிருந்தே? யார் வீட்டுல இருந்தே? என்ன வேலை செஞ்சே? இதெல்லாம் எனக்குத் தெரியணுமே...''

மாமி அசந்தே போனாள். என்ன தெளிவாகப் பேசுகிறாள் பார்வதி. இந்த திருத்தமான, சாமர்த்தியமான பேச்சு... ஒண்ணுமே தெரியாத அவளுக்கு, அன்னை கொடுத்த வரம்தானே... "அன்னையே உன்னுடைய கருணையும், ஆதரவும் என்னென்னிக்கும் கிடைக்கணும்மா. பாருவோட குழந்தைகளும் உன்னருளால் நல்லவிதமா வளரணும்மா... அம்மா...''

"அக்கா, அக்கா... நான்... நான்...'' மேலே பேச்சு வராமல் விம்மினாள். பார்வதி மனது தவித்தாலும், பேசவில்லை.

"அக்கா, நான் இப்ப அனாதை மாதிரிதான். ஒரு குடிசையில தான் இருக்கேன். தட்டு முட்டு சாமான்னு ஒரு சின்ன கூடையிலதானிருக்கு. உறவுன்னு யாருமில்லே. அனாதைதான். நல்ல வேளை... கட்டிண்டவனால எனக்கு வயத்துல புழு, பூச்சி ஒண்ணும் குடியேறல. அதனால நான் ஒண்டிக்கட்டைதான் என்னைத் தேடிண்டு யாரும் வரமாட்டா. நானும் யாரையும் தேடிண்டு போகமாட்டேன் மாமி. அக்கா... நான் சொல்றது அத்தனையும், அத்தனையும்...''

மேலே பேச்சு வராமல் அங்குமிங்கும் கண்களை சுழற்றினாள்.

"என்னம்மா... என்ன சுத்துமுத்தும் பார்க்கரே... என்ன தேடறே. புரியலையே...''

"இல்லே... சாமி மேலே சத்தியம் பண்ணணும். நான் சொல்றதெல்லாம் உண்மைன்னு சொல்லத்தான் தேடினேன். ஆனா, இந்தாத்துல ஒரு சாமி படம்கூட இல்லையே... ஏன்? எனக்குப் புரியலையே...''

"என்ன சொன்னே... என்ன சொன்னே... எங்காத்துல சாமி படமில்லையா? யாரு சொன்னது? உயிரோட்டமான, ஜீவனோட... நம்மையே பார்க்கிற இந்த "அன்னை”யோட நாலு அவதாரத்தைப் பத்தி உனக்குத் தெரியாதே. மனுஷாளுக்கு, மனுஷா மாதிரியேயிருக்கிற... இந்த உலகம் பூராவும்... அன்னை, மதர், அம்மான்னு, அவாவா பாஷையில எப்டி கூப்பிட்டாலும் சரி, சத்தியமான, உண்மையான வேண்டுதலுக்கு, நம்மை அரவணைத்து, ஆதரவு தந்து, இதமா தடவிக் கொடுக்கிறாரே பெத்த தாய்க்கும் மேலா...

அது மட்டுமா... நாம செய்யிற எந்த தவறையும் நம்மையே உணரச் செய்து, அதுலேருந்து நம்மை நல்ல பாதையில செல்ல வைக்கிறாரே... இன்னும், இன்னும்... ம்... இவாதாம்மா நாங்க ஆராதிக்கிற அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும். புரிஞ்சுக்கோ.

முக்கியமா... நாம தவறு செஞ்சாலும், செய்யவிடாம தடுத்துடுவார். எப்படியாவது நம்மையே உணரச் செய்வார். சரி, சரி, இப்போதைக்கு இது போதும். பார்வதி, உன்னோட அபிப்ராயம் எப்படியோ, அப்படியே நடந்துக்கோம்மா... புரிஞ்சுதா?...'' மாறி, மாறி, மாமியும் பார்வதியும் கூறியதுடன், புரிந்து கொண்ட பார்வதி, அந்தப் பெண்ணையே பார்த்தவள் அன்னையை மனமார வேண்டினாள்.

"அன்னையே... நீ இருக்கும் இடத்தில், நிச்சயமாய் நல்லவரைத் தான் அனுப்புவாய், நல்லதையேதான் செய்வாய் என்கிற நம்பிக்கை என்னுள் பூரணமாக இருக்கிறது. இதுவும் உன் விருப்பப்படிதான் நடக்கிறது. அதனால், யாருமில்லாத இந்தப் பெண்ணை, உன்னை என் மனதிலிறுத்தி, வேண்டியே இந்த உன் இருப்பிடத்தில் அனுமதிக்கிறேன். அருள்வாய் அம்மா...''

கண்களை மூடி பிரார்த்தித்தவள், அந்தப் பெண்ணை ஆதரவோடு கரங்களைப் பிடித்து அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் முன்பு நிறுத்தினாள்.

"இதோ பாரும்மா... உம் பேரு...''

"கீதாம்மா... அக்கா... நீங்களும் பேர் சொல்லியே கூப்பிடுங்கக்கா''.

"சரிம்மா கீதா... நீயும்... இனிமே எந்த கஷ்டமும் இல்லாமயிருக்க அன்னையை வேண்டிக்கோ... உனக்கு விருப்பமில்லேன்னா... கட்டாயமில்லே கீதா...''

"அக்கா... எப்ப உங்காத்துல எனக்கும் ஒரு இடம் தந்துருக்கேளோ, அப்பவே நானும் இந்த வீட்டு மனுஷியாகவே மாறிட்டேங்கா. நீங்க என்ன கொடுக்கிறேளோ, அதைத்தான் சாப்பிடப் போறேன். நீங்க என்ன வேலை தரேளோ, அதைத்தான் செய்யப்போறேன். நீங்க எந்தத் தெய்வத்தை ஆராதிக்கிறேளோ, அதே தெய்வத்தைத்தான் நானும் ஆராதிப்பேன். இதுல எந்த மாற்றமுமில்லேக்கா. மாமி, நான் இந்த வார்த்தைகளை உண்மையா, நீங்க வணங்கற, இந்த, அன்னை, ஸ்ரீ அரவிந்தர் எதிரே நின்னு சத்தியமா சொல்றேன் மாமி. என்னை நம்புங்கோ மாமி''.

கண்கள் தளும்ப சொல்லும் கீதாவை இருவருமே அணைத்துக் கொண்டனர்.

******

மூவரின் கூட்டணியில், அன்னையும், ஸ்ரீ அரவிந்தர் மட்டுமே தெய்வமாகயிருக்க, வியாபாரம் மட்டுமல்லாமல், குழந்தைகளும் வளர, மூவரும் நல்ல ஆரோக்கியத்தோடு, சந்தோஷத்தோடு, உற்சாகத்தோடு வேலை செய்தனர். இத்தனையிலும், காலையில் சமைக்க ஒத்துக் கொண்ட வேலையை பார்வதி விடவேயில்லை.

"பார்வதி... காலையில சமைக்கறதை விட்டுடேம்மா. இப்ப நாம மூணு பேருமா, நிறைய "ஆர்டர்"களை ஏத்துண்டு செய்யறோம். அதுவும், உனக்குக் கொஞ்சம் கூட ரெஸ்டேயில்லே. அதனால அந்தாத்து சமையலை விட்டுடேம்மா... சரியா...''

கண்களை ஒரு வினாடிக்கும் குறைவாக மூடித் திறந்தாள். கண்கள் பனித்திருந்தது.

"மாமி... நீங்க சொல்றது ரொம்ப சரிதான். ஆனா... என்னால அந்த வீட்டை விடமுடியாது மாமி. ஏந்தெரியுமா? அந்த வீட்டு மனுஷாளும் நல்லவா மட்டுமில்லே, நான் போய் வேலைன்னு நீங்க சொன்னதை வச்சுண்டு கேட்டபோது, தயக்கமேயில்லாம வேலை தந்தா. ஒரு நாள் கூட கடுஞ்சொல் சொன்னதில்லே. என்ன சொன்னாலும் கேட்காம கூடமாட ஒரு சின்ன ஒத்தாசையாவது செய்வா. அதெல்லாமே விடுங்கோ. எனக்கு என்ன படிப்பிருக்கு? வேறே வேலை செய்ய? அந்த சமயத்துல எனக்கும், என் குழந்தைகளுக்கும் பசியாற வழி செய்தது அந்த வேலைதானே. அவாளை, அந்த வயசானவாளை நான் தடுமாற விடமாட்டேன் மாமி. இங்கேயிருந்து அனுப்பலாமே சாப்பாட்டைன்னு சொல்லலாம். ம்... ஹும். கூடாது. வயசானவாளுக்கு, ஒவ்வொரு நாளும் அவாளைக் கேட்டு, அவா ருசிக்கேற்ப சமைச்சுத் தரதே ஒரு சந்தோஷந்தானே... அதுவும் எனக்கு மட்டுமில்லே... அவாளுக்கும்தான். அதை அவா இழக்கக் கூடாது. நானும் விடவே மாட்டேன். அவாளே போதும்மா நீ வேலை செஞ்சதுன்னு சொல்லட்டும். அப்ப விடறேன். அது வரைக்கும் காலம்பற போய், அவாளுக்கு சமைச்சு வச்சுட்டு, டிபனுக்கும் ஏற்பாடு பண்ணிட்டுத் தான் வருவேன். தப்பா எடுத்துக்காதேங்கோ மாமி...''

"பார்வதி... என்னமா... மனுஷாளோட மனசைப் புரிஞ்சுக்கற சக்தியை அன்னை உனக்குத் தந்துருக்கா. நான் ஒரு மூடத்தனமானவடி. அதான் அப்படி பேசிட்டேன். தப்புதான். நீ ரொம்பவே சரியாச் சொன்னே. வயசானவா மனசுக்கும், வாய்க்கும், இதமா செய்யிறதும், பேசறதும்தாண்டி சரி. கீதா, பார்த்தியா... பார்வதியோட மனசைப் புரிஞ்சுண்டியா... நீயும் எங்களோட நல்லதனமா நடந்துக்கோ... அப்ப நிரந்தரமா, இங்கேயே இருந்துக்கலாம்... சரியா... கீதா...''

சட்டெனத் திரும்பிய கீதா... அன்னை, ஸ்ரீ அரவிந்தர் படத்தின் முன் நின்றாள். கண்களை மூடி பிரார்த்தித்தாள். வீழ்ந்து வணங்கியவள் கூப்பிய கரங்களுடன், "மாமி, அக்கா... நான் எப்பவுமே உங்க ரெண்டு பேரோடதானிருப்பேன். எனக்கு இப்டியொரு இடம், கூடப்பொறந்தவாபோல, உங்க ரெண்டு பேரோடவும், குழந்தைகளோடவும், இந்தத் தெய்வங்களோடவும் இருக்கக் குடுத்து வச்சிருக்குன்னுதான் சொல்லுவேன். என்னை இந்த மாதிரி ஒரு இடத்துல சேர்த்ததுகூட நீங்க வணங்கற அன்னையோடதாதானிருக்கும். இனிமே என்னோட தெய்வமும் அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும்தான். அதுல மாத்தமேயில்லேக்கா...''

"இதோ பாரு... இனிமே நாமளே ஒருத்தருக்கொருத்தர் பாராட்டிக்கறதை விட்டுட்டு, நம்ம வேலையை எப்டியெப்டி செய்யணும்னு ஆலோசிச்சு செய்யலாம். சரியா கீதா...''

கீதா ஆமோதிக்க, அவர்களின் வேலைகளை ஆரம்பித்து, வருடம் ஒன்று ஓடியே போனது.

******

இதில், இவர்களுடைய கைப்பக்குவம் பிடித்துப் போக, எல்லோரும் இவர்களையே ஒருவருக்கொருவர் சொல்லி ஆர்டர் வர, அவர்களால் முடிந்த அளவுதான் ஒத்துக் கொண்டனர்.

"அக்கா, வந்ததை விடவேண்டாம். நான் செய்யறேனேக்கா'' என்று கீதா கூறினாலும், மாமியும், பார்வதியும் மறுத்துவிடுவார்கள்.

"வேண்டாம் கீதா. நம்ம சரீரமும் ஒரு மிஷின் போலதான். சக்திக்கு மீறி வேலை செஞ்சோம்னா, மிஷின் ரிப்பேராகிறதுபோல, நம்ம உடம்பும் நமக்கு ஒத்துழைக்காது. அப்புறமா டாக்டருக்குத்தான் தர வேண்டியிருக்கும். எதையும் நாம நிதானத்தோடவே செய்யலாம் கீதா. மாமி என்னைவிட வயசானவா. நான் உன்னைவிடப் பெரியவ. நீதான் வயசுல எங்களைவிட சின்னவ. அதனால நீ துடிப்போடயிருக்கே. அந்தத் துடிப்பு எப்பவும் இருக்கணும்னா, நம்ம வேலையில எப்பவுமே நிதானம்தான் இருக்கணும் கீதா. நம்ம மூணு பேரோட பேர்லயும், பேங்க்குல கொஞ்சம், கொஞ்சமா பணம் போட்டுண்டு வரேன்...''

"என்னடி சொல்றே... என்ன சொல்றே நீ... நான் உன்னோட அம்மா மாதிரிடி. எம் பேர்ல ஏன் போடறே? எனக்குப் பிடிக்கலே. அப்ப நீ என்னை, வேத்து ஆளாத்தானே நினைக்கறே... ம்...'' மேலே பேச முடியாமல் கண்கள் தளும்ப, பேசும் மாமியை, சட்டென எழுந்து அணைத்துக் கொண்ட பார்வதியின் கண்களிலும் நீர்.

"மாமி... தப்பா நினைச்சுட்டேளே... எல்லாமே உங்க பேர்ல தான் போட்டிருக்கணும். ஆனா... எதுக்குப் பிரிச்சுப் போட்டேன். எப்ப... எப்டி... என்ன நடக்கும்னு தெரியாது. திடீர்னு எங்காத்துக்காரரோ... இல்லே கீதாவோட வீட்டுக்காரரோ வந்து, தடாலடி பண்ணினா... ம்... சொல்லுங்கோ... அப்ப என்ன பண்றது? எங்க பேர்ல பணத்தைப் போட்டா எல்லாமே கொள்ளை போயிடுமே... மாமி... நான் உங்க வீட்டுக்கு வாடகைத் தரேன்னு என்னிக்காவது சொல்லியிருக்கேனா? இல்லையே... ஆனா... வயசான நீங்களும்தானே கூடமாட செய்யிறேள். இதையும் அன்னைகிட்டே ரெண்டு நாள் இடைவிடாத பிரார்த்தனை பண்ணித்தான் இந்த முடிவுக்கு வந்தேன் மாமி... இது தப்புன்னு சொல்லுங்கோ உங்க சொல்படி நடக்கிறேன்... சரியா...''

கீதாவுக்கு, மனசு பொங்கிப்போய், நின்ற இடத்திலிருந்து ஓடி வந்து, பார்வதியைத் தன்னோடு இறுக அணைத்தபடி, கேவிக் கேவி அழலானாள். மாமியோ, கண்கள் மல்க... பேச்சு வாராமல் தவித்தார். ஆனால் கீதா... "முடியலே... என்னால முடியலே... மனசுங்கறது இப்டிகூட பூவா மலர்ந்திருக்குமா... அந்த மனசுலயிருக்கிற பூ... வாடவே வாடாதா? கசங்கவே கசங்காதா? எப்போதுமே அப்ப பூத்த பூ போலவே புதுசா, வாசனைங்கற ரம்யமான மனசையேதான் உள்ளே வைத்திருக்குமா? இதுவரைக்கும் நான் இப்பேர்ப்பட்ட மனசோட இருக்கிறவாளைப் பார்த்ததேயில்லைங்கறது உண்மைன்னா, உண்மைதான். ஆனா... இங்கே நிஜத்தைத்தான் பார்க்கிறேனே ஒழிய... எந்த ஒரு... ஒரு... சொல்ல வார்த்தைகளே வரலையேக்கா... தெரியவுமில்லையே... நான் இங்கேருந்து போகவேமாட்டேன். உங்களோடவேயிருந்து, அன்னையோட பாதங்களையே மனசுல கெட்டியாப் பிடிச்சுண்டிருக்கப் போறேன். எனக்கு வேறே ஒண்ணும் சொல்லத் தெரியலே. சத்தியமா தெரியலேக்கா...''

அழும் கீதாவையும், மாமியையும் இறுக சேர்த்துப் பிடித்தபடி, பொங்கிப் போனாள் பார்வதி. பொழிந்தன அவள் விழிகளும்.

"இது போதும்... இது போதும் அன்னையே... எனக்கு இது போதும். இந்த அன்பான உறவு எனக்கு எப்போதும் உடனிருந்தால் போதும்... அம்மா... உன்னையே சரணாகதின்னு வந்ததுக்கு, எனக்கு மட்டுமல்ல... இன்னொரு அபலைக்கும் வழிகாட்டி, எங்களோட பிணைச்சுவிட்டதுக்கு நன்றிம்மா... நன்றி... உன் பாதங்களை என்னோட மனசுக்குள்ளேயே பிரதிஷ்டை பண்ணிட்டேம்மா... அம்மா... அன்னையே என் இதயத்துடிப்பு உன் பாதங்களைச் சுத்தித்தாம்மா செயல்படும். அம்மா... உன் சரணம்தான் எனக்கு பாதுகாப்பு. அதை நழுவவே விடமாட்டேன். விடமாட்டேன்...'' நாட்களின் நழுவலில், மாதங்கள் உருண்டு, வருடங்கள் சுழல ஆரம்பித்தன.

பார்வதியின் பெரிய மகன் பத்தாவதும், சின்னவன் எட்டாவதும் படிக்க ஆரம்பித்தாயிற்று. இருவரும் நன்றாகவே படித்தார்கள். ஒருவருக்கொருவர் உதவியபடி, சண்டை என்பதில்லாமல், காலை, மாலை இரு வேளைகளிலும் அன்னை ஸ்ரீ அரவிந்தரை வணங்கி தியானம் செய்தபின்பே, அவர்களின் படிப்பு, மற்ற எல்லாவற்றையும் கவனித்தனர்.

மாமிக்கு வயதானாலும் தெம்புடனேயே பார்வதியையும், கீதாவையும் அன்போடு பேசியும், கூடமாட வேலை செய்தும், குழந்தைகளோடு சந்தோஷமாகவுமிருக்க, வீடு எந்தவிதமான கோபதாபங்களில்லாமல், அமைதியாக, சந்தோஷமாக, மகிழ்ச்சியாகவிருந்தது.

நினைவு அறிந்த நாளிலிருந்து, அன்னை, ஸ்ரீ அரவிந்தரையும், பூக்களையும், தியானத்தையும் கண்கூடாகப் பார்த்து வளர்ந்திருந்த பெரியவன் சீனுவும், சின்னவன் ராமுவும், தினமும் அந்த தியானத்தைத் தங்கள் வயதிற்கேற்ப, ஐந்து நிமிடங்களில் ஆரம்பித்து, இப்போது அரை மணி நேரம் அமர்வது அவர்களின் வழக்கமானது. அதுவும் காலையிலேயே எழுந்து, குளித்து, தியானம் செய்தபின்பே, எதானாலும் பாலோ, காபியோ குடிப்பது. அதன்பின்தான் மற்றவை. படிப்பிலும் ஓரளவுக்கு இரண்டு பேரும் நன்றாகவே படித்தனர். தம்பிக்குத் தெரியாததை அண்ணன் பொறுமையாகவே சொல்லித் தந்தான். தனக்குத் தெரியாததை, பார்வதி சமைக்கும் வீட்டில், அந்த தாத்தா அவனுக்கு அன்புடன் புரியும்படி சொல்லித் தந்ததில் இருவருமே படிப்பின் முக்கியமறிந்து படித்தனர்.

அன்று பார்வதி சமைத்துவிட்டு, வீட்டை நோக்கி நடந்தபோது... யாரோ பின் தொடர்வது போலிருந்தது. அந்த உணர்வு அவளுள் ஏற்பட்டதும், அன்னையின் சரணத்தை தன்னுள் சுழலவிட்டாள். நிதானமாகவே நடந்தாள். அன்னையின் சரணம் மனதில் சுழன்று கொண்டிருக்க, அவள் அமைதியாகவே, சாதாரணமாகவே நடந்தாள் சலனமில்லாமல். வீட்டிற்குள்ளும் நுழைந்தாயிற்று. கதவையும் மூடி தாழ்ப்பாளும் பூட்டும் போட்டாயிற்று. யாரென்று திரும்பியும் பார்க்காவிட்டாலும், உணர்வு கூறிவிட்டது, அவள் கணவன்தானென்று. நேராக அன்னையின் முன்பாக, கண்ணிமைகளை மூடி அமர்ந்தவள்தான்... எத்தனை நேரம்... எத்தனை மணி என்பது கூட அவளால் அறியயியலாமல், அன்னையுடனேயே ஐக்கியமாயிருந்தாள்.

மாமியும், கீதாவும் மட்டுமல்ல, சீனுவும், ராமுவும் துளிக்கூட சத்தமில்லாமல் நடந்து கொண்டனர். எதனால் "அம்மா" திடீரென்று "அன்னை"யின் முன் தியானத்தில் அமர்ந்துவிட்டாள் எனத் தெரியாவிட்டாலும், அவர்களும் அன்னையை, "அன்னையே... என் அம்மாவிற்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது. எதுவானாலும் தடுக்கும் சக்தி உங்களுக்கிருக்கிறது. என் அம்மா இனிமேலும் எந்தவிதமான சஞ்சலங்களோ, யோசனைகளோயில்லாமல் நன்றாகயிருக்க வேண்டும். அன்னையே... உங்களின் பாதங்களையே பற்றிக்கொண்டு நாங்களிருவரும் வேண்டுகிறோம் அன்னையே... சரணம்... அன்னையே சரணம்...'' எத்தனை முறைஎன்பதை நினைத்தும் பார்க்காமல் இடைவிடாது சொன்னார்கள். முதலில் சின்னவன் வணங்கி எழுந்திருக்க, மேலும் சிறிது நேரத்திற்குப் பிறகு பெரியவனும் அன்னையின் பாதங்களை வணங்கி எழுந்தான். ஆனாலும் அவன் விழிகள் அன்னையை விட்டு விலகவில்லை. தீர்க்கமாகப் பார்த்தபடி நின்றிருந்தவனை, யாரோ, கதவைத் தட்டும் சத்தம் கேட்டதும், சட்டென கலைந்து, ராமுவைத் தடுத்து அவன் விரைந்தான்.

வந்தவரின் முகம் சிரித்தது. ஆனால் அவர் சிரித்தபோது திறந்த வாயிலிருந்து வந்த நாற்றம் சீனுவின் முகத்தை சுளிக்க வைக்கப் புரிந்தே போனது.

"யார் நீங்க? என்ன வேணும்? ம் சொல்லுங்க?... யார் நீங்க?'' கேள்விக்கணைகள் ராமநாதனை துளைத்தது. ஆனால் அவனால், கேட்கும் பையன் "என் மகன்களில் பெரியவனா? சிறியவனா?'' புரியாமல், தள்ளாடியபடியே பார்த்தான். சட்டென உள்ளே போன சீனு, கீதாவைக் கூப்பிட்டு, மேலோட்டமாக, இது தன் அப்பாவாகத்தா- னிருக்க வேண்டும். அதனால் எப்படிப் பேச வேண்டுமோ அப்படி பேசி அனுப்பிவிடும்படி கூறினான். கீதாவும் முதலில் தன் மனதில் அன்னையை நினைத்து, தன் அதரத்திலிருந்து வெளிவரும் ஒவ்வொரு வார்த்தைகளும், உன்னுடையதாகத்தானிருக்க வேண்டும் அம்மா... எந்த அசம்பாவிதமும் நடக்காமல் நீயே என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்து விடு. எல்லாமே உன் விருப்பப்படித்தான் நடக்க வேண்டுகிறேன்'' என பிரார்த்தித்தவள், தைர்யமாகக் கதவருகில் நின்றாள்.

"யார் நீங்க? என்ன வேணும்? ம்... சொல்லுங்க...''

"என்ன... நீ யாரு மொதல்ல சொல்லு. பாருவைக் கூப்பிடு... அப்ப... தெரியும்... போ... அதுக்கும் முன்னாலே கதவத் தொற...''

கதவைத் தட்ட ஆரம்பித்தான். அதற்கும் மேல் பொறுக்க முடியாமல் மாமி வந்து நின்றார்.

"இதோ பாரு ராமனாதா. இங்கே வந்து நின்று கத்தாதே... பார்வதி, தியானத்துலயிருக்கா. அதனால வரமாட்டா. உன் வழியப் பார்த்துண்டு போ... அவ்வளவுதான் நல்லபடியா சொல்லுவேன்...''

"மாமி... எம் பிள்ளைகளைக் கூப்பிடுங்கோ. அவாளைப் பார்த்து, நான் என்னோடு கூட்டிண்டு போகப் போரேன். அப்புறமா இந்தப் பக்கமே வரமாட்டேன்... அனுப்புங்கோ பிள்ளைகளை... ம்...''

குளறியபடி பேசும் அவனைப் பார்த்து ஆக்ரோஷமாக வந்த ராமுவை அடக்கி சீனு, முன் நின்றான்.

"எங்க ரெண்டு பேருக்கும் இதுவரை அப்பாவைத் தெரியாது. எங்க ரெண்டு பேருக்கும் அம்மா, மாமி ரெண்டு பேரைத்தான் தெரியும். அதனால... வீணா கத்தி, கலாட்டா பண்றதை வுட்டுட்டு, உங்க வழியில போங்கோ... அவ்வளவுதான்...''

"அதெப்டிடா சொல்லுவே... அப்பாவைத் தெரியாதுன்னு. இதோ உசுரோட நிக்கிறேனே...'' ஆத்திரத்தோடு குழறிப் பேச... ராமுவுக்கு ஆத்திரம் வந்தது.

"ஆமா... நான் சொல்லுவேந்தான். நான் பொறந்தன்னிலேருந்து நினைவு தெரிஞ்ச நாளுல, என்னோட அப்பாவை எனக்குத் தெரியாது. அப்பா... அப்பான்னு இதுவரை யாரையுமே நாங்க கூப்பிட்டதில்லே. கூப்பிட, அந்த அப்பாங்கற மனுஷன் எங்களோடயில்லே. அதுக்கப்புறம், யாரோ ஒருத்தர் வந்து, கதவைத் தட்டி, நான்தான் உங்கப்பான்னு சொன்னா, அதை ஏத்துண்டு உள்ளேவிட நாங்க என்ன படிக்காதவாளா? எங்கம்மா... எங்களைப் படிக்க வச்சுண்டிருக்கா. அதுக்காக, எங்கம்மாமட்டுமில்லே, மாமியும், கீதா சித்தியும் எங்களுக்காக பாடுபடறா. அவாதான் எங்களுக்கு சொந்தமே தவிர வேறே எந்த சொந்தமும் எங்களுக்குக் கிடையாது. இனிமே புதுசா எந்த சொந்தமும் வேண்டவும் வேண்டாம். அதனால வர தொந்திரவும் வேண்டாம். எங்களுக்குத் துணையா அன்னையும், ஸ்ரீ அரவிந்தருலி மிருக்கா. அவா ரெண்டு பேருந்தான் எங்களுக்குத் தெய்வம். அவாதான் எங்களை பாதுகாக்கறா. நீங்க என்ன அழிச்சாட்டியம் பண்ணி, ஊரைக் கூட்டினாலும், உங்களை நாங்க ஏத்துக்கவும் முடியாது. வீட்டுக்குள்ளவும் விட முடியாது. நீங்க போகலாம்... ம் வாண்ணா... நாம உள்ளே போயிடலாம். அவர் பாட்டுக்குக் கத்திண்டிருக்கட்டும்...'' ராமு, சீனுவை, தரதரவென இழுத்தபடி உள்ளே சென்றுவிட்டான்.

வாசல் கதவு எப்போதும் பூட்டி வைத்திருப்பது வழக்கமானது. மூவரும் பெண்களானதால் அதைக் கடைப்பிடித்து வந்தார்கள். அது இப்போது அவர்களுக்கு, ராமனாதனிடமிருந்து பாதுகாப்பைத் தந்தது.

கத்தி, கதவைத் தட்டிவிட்டு, முடியாமல் தள்ளாடியபடியே சென்றேவிட்டான் ராமனாதன். அக்கம், பக்கம் கூட யாரும் அவனுக்கு ஆதரவாக வரவில்லை என்பதுதான் உண்மையாகிப் போனது.

******

தியானம் கலைந்து எழுந்தவளின் மனம், அலைகளற்ற நடுக்கடல் போல் அமைதியாகயிருந்தது. வீழ்ந்து வணங்கிய பின், அருகே நின்றிருக்கும் பிள்ளைகளை அணைத்துக் கொண்டாள்.

சமையலறையில் இருபது பேருக்கான சாப்பாடும், முப்பது பேருக்கான இட்லி, வடை, சம்பார், சட்னியும், தயாராகி, தூக்கில் போட்டு வைத்திருந்ததை, அதன் மேலிருக்கும் சீட்டில் விலாசமும் எழுதப்பட்டிருக்க, சைக்கிளில் சீனுவும், ராமுவும் எடுத்துக் கொண்டு கிளம்பினர்.

நடந்ததைப் பற்றி எவருமே பேசவில்லை. ஒரு காற்று பெரியதாக அடித்து, ஓய்ந்தது போலிருந்தது. அவ்வளவுதான். மற்றபடி எதுவும் பேசவில்லை. மறந்துதான் போனார்கள்.

பார்வதியும் மளமளவென்று எல்லாவற்றையும், பேக் செய்து, கீதாவிடம் தர, அவள் ஒரு ஸ்கூட்டரில் வைத்து, அதற்காகவே செய்திருந்த கேரியரில் வைத்துக் கட்டி எடுத்துப் போனாள். இன்னும் இரண்டு பேர், அவர்களே காரில் வந்து எடுத்துப் போனார்கள். எல்லாமே ஏழு மணிக்குள் முடிந்தது.

நடந்ததைப் பற்றி யாரும், எதுவுமே பேசவில்லை. அதைப் பற்றிய எண்ணம்கூட அவர்களிடம் இருந்ததாகத் தெரியவில்லை.

நம்மால் முடியுமா? கேட்பது தெரிகிறது. அன்னையைப் பரிபூரணமாக நம்புபவர்களுக்கு, பேரிழப்புக்கூட, அன்னையிடம் சமர்ப்பணம் செய்துவிட்டு, அதைப் பற்றிய எண்ண ஓட்டங்களை, தங்களிடமிருந்து ஓட வைத்து விடுவதால், அன்னையின் அருள், அவர்களுக்கு முழுமையாகக் கிடைப்பது கண்கூடு.

நிதர்சனம் என்பதில் நடப்பது எத்தனையோ. அந்த நிதர்சனத்தில் நம் பக்திக்கும், மனதின் உறுதிக்கும் ஏற்ப "அன்னை' கண்டிப்பாக, நிச்சயமாக நம்மோடு துணை வருவார். அதில் துளிக்கூட சந்தேகமே கிடையாது. இது அவரவர் வாழ்வில் நடக்கும், எத்தனையோ சந்தர்ப்பங்களின் மூலம் அறிய முடியும். ஆனால் அந்த சந்தர்ப்பங்களில், அன்னையை மறந்து, நம் மனதை இறுக்கிப் பிடித்திருக்கும் வேண்டாதவைகளை இன்னும் இறுக்கி நம்மோடே வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் நம்முடைய மன இயல்பு.

குளத்தில் குளிக்கப் போகிறோம். அப்போது அந்தக் குளத்திலிருக்கும் பாசிகளை, நம் கரங்களால், தள்ளி விட்டு, பிறகுதானே அந்த நீரில் முங்குகிறோம். அது போலத்தானே நம் மனம் என்னும் குளத்திலுள்ள, வேண்டாதவைகளைப் பாசிகளாக நினைத்து அகற்ற வேண்டியது, நம் பொறுப்பேதான். நாம், நம் பொறுப்புக்களை, அவ்வப்போதிருக்கும் நம் மனநிலையைப் பொறுத்தே செயல்படுகிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை என்பதுதானே நிஜம்.

"அருளமுதம்'' பதினேழு கட்டுரைகள் அடங்கிய மிக அருமையான புத்தகம். ஒவ்வொரு கட்டுரையிலும், நம் வாழ்விற்கு மட்டுமன்று, அப்போதைக்கு, அப்போது மாறும் மனநிலையிலுள்ள நம் மனதை, எண்ணங்களை, சரியான, நேரான வழியில் அழைத்துச் செல்லும், வழிகாட்டி.

எத்தனையோ நேரங்களில், நம் மனதின் எண்ணங்களின் தொந்தரவுகளினால், நம்மை நாமே அடக்கிக்கொள்ளும் திறனின்றி, எங்கே வழி? எங்கே நிம்மதி? என்று நம் மனம் அலைவதை நம்மால், ஆம்... நம்மாலேயே தடுக்க முடிவதில்லையே... இதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி மறுப்பவர்கள், வேண்டுமென்றே... தன்னை உள்ளடக்கி, வெளியே திறமையாகப் பேசுபவராகயிருக்க வேண்டும். ஆனால், அன்னையை வணங்கும் நம் மனம், உண்மையில், அவருடைய கோட்பாடுகளில் சில... சிலவற்றை மட்டுமே கடைப்பிடித்துப் பார்த்தால், நமக்கு நாமே வியத்தகு நிகழ்வுகளைக் கண்டு ஆச்சரியம் ஏற்படும். இது உண்மை.

நம்முடைய மனதை அடக்க முடியாதபடி, நம்மால் ஒரு முக்கியமான ஒன்றை செய்யமுடியாதபடி, மனம் அலையும்போது... அன்னையின் எதிரில் உட்காருங்கள். அலையும் மனது, பேரலைகளை எழுப்பும். சீறும், உறுமும்... ம்... ஹூம். நம்மால் அடக்க முடியவில்லையே என நினைக்காமல், அன்னையைமட்டும் மனதிலிறுத்தி, தொடர்ந்து நாம் அன்னையையே நினைப்போம். மனதின் குழப்பங்கள், வலிகள், வேதனைகள்... எதுவானாலும் சரி, தானாகவே சரிந்து, சரிந்து, நம்மை விட்டு விலகியே போய்விடும். இது நிதரிசனம்.

எப்போதும், தினமும் நாம் அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும், ஊதுவத்தி ஏற்றி வணங்கி, தியானம் செய்தாலும், நம் மனம், அன்னையோடு நெகிழ்ந்து, உருகிப்போகும் நிலை, சிற்சில சந்தர்ப்பங்களில்தான் முடிகிறது. தினந்தோறும், நம் மனதையடக்கி, அன்னையை நினைப்பதை மட்டுமே செய்து வந்தால் நிச்சயம் தியானத்தை... தியானமாக நம்மால் செய்ய முடியும்.

"அருளமுதத்தில்" பக்தனின் வாழ்வில், அன்னையின் பிரத்யட்சப் பலன் மிக அருமையான, ஒவ்வொன்றும் நம் மன இயல்பை அப்படியே அப்பட்டமாகக் கூறி, அதற்கான வழிமுறைகளும் கூறுவதாக உள்ளதாகும்.

நாம் புத்தகங்களைப் படிக்கலாம். நம் வாழ்க்கையில் வரும் சந்தர்ப்பங்களுக்கேற்ப படித்ததை, செயல்படுத்தலாம். ஆனால், அந்த செயல்படுதல் என்பது, நம் மனதின் உள்ளே, அன்னையின் முழு ஆக்ரமிப்பையும் கொண்டுவர வேண்டும். அன்னை ஆக்ரமிக்கும் இடத்தில் வேறு எதுவுமே நுழைய முடியாது. அப்படியொரு சக்தியை நம் மனதிற்குள்ளேயே சுழலவிடும் பக்குவம் நமக்கு வரவேண்டும். அதற்கு... நம்முடைய பக்தியும், பிரார்த்தனையும்தான் மிகச் சிறந்த வழி.

அன்னையை வழிபடும் நாம், நம் மனதையும் சரியான வழியில் நடத்த முயல வேண்டும். எப்போதுமே நம்முடைய மனது, "நான் செய்தது சரி. மற்றவர் செய்வதுதான் தவறு'' என்றுதான் தயக்கமில்லாமல் கூறும்; நினைக்கும். இது மனித இயல்பு. அதை நாம் உணர்ந்து சரிவர நடக்க, நம்மை நாமே திருத்திக்கொள்ள, கடினமாகச் செயல்பட வேண்டியது நம் கடமையேதான். சிறுக, சிறுக சேர்த்தால்தானே, ஒரு பெரிய "முதல்' (பணம்) நமக்குக் கிடைக்கிறது. அது போல, சிறுக, சிறுக நம்மை நாமே, தவற்றை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். அந்த திருத்தம் நம்மிடம் வளர, வளர, அன்னையும் நம்மிடம் நெருங்கி, நெருங்கி வருவார் என்பது சத்தியம்.

"அண்ணா... அப்பாங்கறவரை நாமே விரட்டிட்டோம். ஏன்னா அவர் பெரிய குடிகாரராயிருக்கிறது தெரிஞ்சு போச்சு. நிச்சயமா, நம்ப அம்மா, அவரை ஏதோ காரணத்துக்காகத்தான் வீட்டை விட்டு வெளியேத்திட்டாங்கறது புரிஞ்சுக்க முடிஞ்சாலும், அது என்னன்னு தெரியலையேண்ணா. நமக்கு நினைவு தெரிஞ்ச நாளுலேருந்து "அப்பா' நம்மகூடஇல்லே. நாமளும் இன்னிக்குவரை அவரைப்பத்தி யோசிக்கவுமில்லே, அம்மாவையும் கேட்டதில்லே. இப்போ... அப்பாவோட உண்மையான சொரூபம், விஸ்வரூபமா தெரிஞ்சு போச்சு. ஆனா, ஒரு சந்தேகம் கூடவே வரதுண்ணா. அம்மா, அப்பாவை விட்டு, விலக இந்த "குடி" காரணமா? இல்லே அம்மா விலகினதால இந்த குடிக்கு அப்பா ஆளானாரா? புரியலேண்ணா... உனக்கு... ஏதாவது தெரியுமாண்ணா?''

இத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்த மாமி, நிதானமாய் எழுந்து வந்தாள்.

"ராமு, உனக்குப் புரியலே... அதே போல உங்கண்ணாவுக்கும் ஒண்ணும் தெரியாதுன்னு உனக்குத் தெரியாதா? தெரியாதுடா கண்ணா. ஆனா, எனக்கு எல்லாமே தெரியும்டா கண்ணுகளா. இப்பத்தான் உங்க ரெண்டு பேருக்கும் புரியற வயசு. அதனால உங்ககிட்டே எல்லாத்தையும் சொல்லிடறது நல்லது.

நடந்தது பூராவும், அவர்களுக்குப் புரியும்படிக் கூறினாள். அதுவும், "குடி” என்பது எத்தனை பெரிய தவறு என்பதையும் கூடவே உணர வைத்த மாமியின் கண்கள் நிரம்பின. அதுவும் ராமுவை விற்கத் துணிந்த தந்தையின் குணம் அவர்களை கோபப்பட வைத்தது.

"பாவம் அம்மா, இல்லையாடா சீனு... இனிமே அம்மாவை, நாமளும் கஷ்டப்படுத்தக் கூடாதுடா. நாம நன்னா படிச்சு, பெரிய வேலைக்குப் போய், மாமி, அம்மா, கீதா சித்தி எல்லாரையும் ரெஸ்டெடுக்கச் சொல்லிட்டு, நாம சம்பாதிச்சுத் தரணும்டா... சரியா...''

தழுதழுத்தபடி சொல்லும் சீனுவையும், ராமுவையும், மாமி தன்னோடு சேர்த்து அணைத்தபடி... அவள் கண்களைத் திருப்பியது, அன்னை, ஸ்ரீ அரவிந்தரிடம்தான்.

"அன்னையே! உன்னுடைய சூழலில், உன்னுடைய கண்பார்வையில் வளரும், இந்த இரண்டு சிறார்களுக்கும் உன்னையும், ஸ்ரீ அரவிந்தரையும் தவிற யாரையும் தெய்வமாகத் தெரியாது. நீயே இவர்களுக்குப் பொறுப்பாகயிருந்து, வழிநடத்த வேண்டுகிறேன். நல்லவைகளை அவர்களுக்குக் காண்பி. அல்லாதவைகளை அண்ட விடாமல் பார்த்துக் கொள் தாயே... அன்னையே சரணம்... அன்னையே சரணம்...'' வேண்டியவளின் இமைகள் மூட, சரணங்கள் அவளுள் சுழல ஆரம்பித்தது.

******

காலங்களும் சுழல ஆரம்பித்ததில், இருவரும் படிப்பில் மிகமிக வேகமாக முன்னேறினார்கள். அதுவும் "தந்தை” என்பவரின் கோலத்தைப் பார்த்ததிலிருந்து, படிப்பின் மேன்மையை உணர்ந்து, மனம் முழுவதும் படிக்கவேண்டும், படிக்கவேண்டும் என்னும் எண்ணம் மட்டுமே, மனதில் ஆணித்தரமாகப் பதிந்து, படிப்பையே தங்களது "ஆஸ்தி”யாக நினைத்து, முக்கியத்துவத்தோடு படித்தார்கள். கூடவே, சாப்பாடு, அல்லது டிபன் எதுவானாலும், அவர்கள் பள்ளிக்குப் போகும் முன் அவர்களால் இயன்றளவு, அந்த வேலையையும் செய்தார்கள்.

இரண்டு வருடம் ஓடியே போனது துள்ளிக்கொண்டு. அதுவும் பார்வதி சமைக்கும் அந்த வீட்டுப் பெரியவர், இருவருக்குமே மிக நன்றாக பாடங்களைச் சொல்லித் தந்து, ஒவ்வொரு கேள்விக்கும், விரிவாக, அதே சமயம் சுருக்கமாக எழுத சொல்லிக் கொடுத்ததில் இருவரின் திறமைகளும் நன்றாகவே விகசித்தது.

சீனுவின் மார்க்குகளைப் பார்த்து, பார்வதியின் கண்களில் நீர் தளும்பல். அப்படியே மகனைக் கட்டி அணைத்து, அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் எதிரில் நிறுத்தினாள். கண்ணிமைகள் தானாகவே ஒன்று சேர்ந்தன. மனம், அன்னையிடமே சரணடைந்ததில், எந்தவிதமான வெளியுணர்வு அவளை அண்ட மறுத்து, ஒதுங்கியே போயின. எந்த வேண்டுதலுமில்லாமலே, நம்பிக்கையோடு வணங்கினாள்.

சீனுவுக்கு இன்ஜினியரிங் படிக்க வேண்டுமென்ற விருப்பம். அதற்கான மார்க்குகளும் வாங்கியிருந்தான். ஆனால் "பணம்'தான் அவன் முன் நின்று பயமுறுத்தியது. அன்னையை மனமுருக வேண்டினான்.

"அன்னையே... எனக்குப் படிக்கணும். நிறைய படிக்கணும்.

ஆனா... ஆசைக்குத் தகுந்த பணமில்லையே... நிச்சயமாய் எனக்கு ஏதாவதொரு வழியைக் காட்டும்மா. நிச்சயம் எனக்கு நல்லது செய்வீர்கள். அந்த நம்பிக்கை எனக்குள்ளே நிறைய இருக்கும்மா... உங்கள் சரணம்தான் அம்மா நிச்சயம் எனக்கு வழிகாட்டும். காட்டுவீர்கள் என்கிற நம்பிக்கையோடுதாம்மா இன்ஜீனியருக்கு படிக்க, அந்த காலேஜுக்கு "அப்ளிகேஷன்' போட்டுருக்கேன். இது என் விருப்பம். ஆனால்... உங்கள் விருப்பம் எதுவானாலும் ஏற்றுக் கொள்ளும் மனதோடுதாம்மாயிருக்கிறேன். சரணம்... அன்னையே சரணம்... அன்னையே சரணம்...''

மனதில் ஒரு தெளிவும், அமைதியும், மெல்ல, மெல்ல புகுந்தது. தைர்யம் தானாக உள்ளே நுழைந்து மண்டியிட்டது.

அன்னையைப் பார்த்து, சந்தோஷமாக சிரித்தான்.

"தேங்க்யூ மதர்", "தேங்க்யூ மதர்", "தேங்க்யூ மதர்" என மூன்று முறை கூறி வணங்கியவன், சிரித்த முகத்துடன் திரும்பினான் உற்சாகமாய்.

தொடரும்.....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சலனம் மேல்நிலையில் நம்மை நிறுத்துகிறது. எண்ணமோ, உணர்வோ அசைந்தால் அது சலனம். சலனமற்ற நிலை ஆழத்திற்கு நம்மை இட்டுச்செல்லும்.
 
ஆழம் நாடும் அமைதி.

******



book | by Dr. Radut