Skip to Content

11. பூரண யோகம் - முதல் வாயில்கள்

பூரண யோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

(18) யுகம் க்ஷணமாகும்

புறம் அகமானால் யுகம் க்ஷணமாகும்என்பது சத்தியஜீவன்என்ற 55ஆம் அத்தியாயத்தின் (The Life Divine) மையக் கருத்து.

இந்த அத்தியாயத்தின் இதர முக்கிய கருத்துகள்.

 • சத்தியஜீவியம் தெய்வீகமனத்தின் கடவுள்கள்மூலம் அறியாமையின் சத்தியத்தை நாடுகிறது அறியாமையில் வாழும் நம் அடிப்படை சத்தியம். அதை சத்தியஜீவியம் கடவுள்கள் மூலம் நெருங்குகிறது.
 • பிரபஞ்சத்தை சத்தியஜீவியம் தனி மனிதனாக்குகிறது. அதுவே பிரம்மத்தையும் மனிதனாக்குகிறது.
 • புறத்தை அகமாக மாற்றுகிறது.
 • ஆத்மாவிலிருந்து வந்த ஜடம், ஆத்மாவை வெளிப்படுத்துகிறது.
 • புறத்தை அகம் கட்டுப்படுத்தும் திறமையையும், வலிமை ஆனந்தமாக்கும் திறமையையும் அது உடையது.
 • எதையும் சாதிப்பது சத்தியஜீவிய இலட்சியமில்லை. இருப்பதே அதன் இலட்சியம்.
 • பக்தி ஆர்வம் ஆனந்தப் பூரிப்பாகிறது.
 • ஜீவன் புருஷனாக மாறுகிறது.
 • ஆத்மாவுக்கு ஞானம் இயல்பாகவுண்டு. அது ஞானத்தைத் தேட வேண்டாம்.

இது முடிவான சித்தி. சத்தியஜீவன் பிறந்த பிறகு எழும் சித்தி. ஆத்மபக்குவம் உள்ளவர்க்கு அதுவும் ஓரளவு கண்ணில் படும். அவர்கட்கு யோகம் பலிக்கும். 16ஆம் நெம்பர் இதே கருத்தை அகம், புறம் என்ற நோக்கில் கூறிற்று. இது காலம் என்ற நோக்கில் பேசுகிறது.

 • ஒரு வகையில் இரண்டும் ஒன்றானாலும், வேறு வகையில் அது மாறுபடும். வேஷ்டிஎன்பதை ஆண்கள் இடுப்பில் உடுத்தும் உடை எனக் கூறலாம்.
  பேண்ட் என்பதையும் அப்படிக் கூறலாம்.
  அரைக்கால் சட்டையையும் அப்படிக் கூறலாம்.
  ஒரே விளக்கம் மூன்றுக்கும் பொருத்தமானாலும், மூன்றும் வெவ்வேறானவை.
 • அதுபோல் யுகம் க்ஷணமாகும்என்பதும், அகம் புறத்தை ஆளும் என்பதும் மூன்றாம் நிலைக் காலத்தில் க்ஷணத்தில் காரியம் முடியும் என்பதும் ஒரே நிகழ்ச்சியை காலத்தாலும், அகம், புறம்என்பதாலும், காலத்தை வெல்ல முடியும்என்ற கருத்தாலும் கூறுகிறோம். இவற்றைத் தொடர்ந்தால் வெவ்வேறு இலட்சியங்கள் கூடி வரும்.
  1. காலம் தன்னையிழக்கும்.
  2. புறம் அகத்துள் மறையும்.
  3. மனிதன் காலத்தை வெல்வான்.

நெம்பர் 28 நினைத்தால் நடக்கும் என்பது. அது இதே நிகழ்ச்சியை உடல் உயர்ந்து மனமாகும்என்று விளக்குகிறது. நெம்பர் 32 அருள் பேரருளாகும்என்பது மனிதன் கர்மத்தை நம்பாமல் அருளை நம்பி, பிறகு தன் திறமையில் உள்ள நம்பிக்கையை இழந்து அருளை நாடும்பொழுது அருள் பேரருளாகும் என்று கூறுகிறது. நெம்பர் 23 ஜடம் சூட்சுமமாகி, காரணலோகமாகிறது என்பதும் இதையே கூறுகிறது எனலாம். அது லோகங்கள் நோக்கில் கருத்தை எடுத்து கருத்து ஒரு லோகத்தினின்று அடுத்த லோகம் போகும்பொழுது என்ன மாற்றம் ஏற்படுகிறதுஎன்ற கோணத்தில் பேசுகிறது.

(19) அணுவிலிருந்து ஆனந்தம் எழும்

ஒரு வகையான பூட்டில் 8 அல்லது 10 நம்பர் இருக்கும். அந்த நம்பரை மாற்றலாம். உருட்டினால் மாறும். அப்பூட்டிற்கு ஒரு நம்பர் உண்டு. அந்த நம்பரை வைத்துத் திறந்தால் பூட்டு திறக்கும். மற்ற எந்த நம்பருக்கும் திறக்காது.

 • அனந்தம் - பிரபஞ்சம், பிரம்மம் - அணுவாயிற்றுஎன்பது தத்துவம்.
 • அணு, அணுவாகவேயிருக்கும். அதற்குரிய இரகஸ்யம் நமக்குத் தெரிந்தால் அணுஎன்ற பூட்டு திறந்து அனந்தத்தை வெளிப்படுத்தும்.
 • அன்னையை மனத்தின் ஆழத்தைக் கடந்த நிலையில் உருக்கமாக நினைப்பது அந்த இரகஸ்யம்.
 • அந்த இரகஸ்யத்திற்கு ஆயிரம் வடிவங்களுண்டு. தூய்மை பூரணமாகி - எதிரையும் ஏற்றதால் பூரணம் பெற்று - perfection சிறப்பெய்துவது அந்த இரகஸ்யம்.
 • ஆன்மாவின் அம்சங்கள் 12.
  அதன் மறுஉருவங்கள் ஏராளம்.
  எந்த உருவத்தின்மூலமும் அந்த அம்சங்களை எட்டலாம்.
  எட்டியவுடன் அணு தன் சுயரூபமான பிரம்மத்தை வெளிப்படுத்தும்.
  ரூபம் எதுவானாலும் மூலம் ஒன்றே.
  • திறமை, பொறுமை, விஸ்வாசம், நன்றி, முறை, அடக்கம், சுத்தம், பணிவு, நேர்மை, தூய்மை, வெற்றி, பிரபலம், பெருந்தன்மை போன்ற எந்தக் குணம்மூலமும் சத்தியம், ஐக்கியம், நன்மை, ஞானம், திறமை, அன்பு, அழகு, ஆனந்தம், அனந்தம், காலம் கடந்தநிலை, உண்மை, மௌனம், சாந்தி ஆகிய ஆன்மீக அம்சங்களை அடைய முடியும். அது திறவுகோல்.

நமக்கு பிரார்த்தனை பலிக்கும்பொழுது இந்த இரகஸ்யத்தின் மூலம் பலித்தால் அது யோகம் சித்திக்கும் அறிகுறிஎன கண்டு கொண்டால், நாம் வாழ்வைவிட்டு யோகத்திற்குப் போகலாம். சர்க்கார் வேலையில் பிரமோஷன் முறைப்படியே வரும். ஒரு கட்டம் கடந்து பிரமோஷன்பெற, சட்டம் இடங்கொடுக்காது. தனியார் வேலையிலும், அரசியலிலும் திறமை சட்டத்தைமீறிப் பலன் பெறும். 8-ஆம் நிலை வேலையிலிருக்கும்பொழுது இலாக்காத் தலைவராகும் திறமை பெற்றவர் உண்டு. அன்பர்கள் அந்நிலையை எய்துகிறார்கள். அதைப் பெற முயன்றால் ஏதாவது ஒரு ரூபத்தில் அது பலித்து விடும். நாம் வேலை செய்யுமிடத்தில் சட்டம் இடம் கொடுக்காவிட்டால், அதற்குரிய இடம் வந்து நம்மை உயர்த்தும். இது வாழ்வில் முன்னேற்றம். மனம் நம் திறமைக்குரிய பரிசை நாடாவிட்டால் கதவு திறந்து அன்னை தன்னிடம் நம்மை அழைத்துக் கொள்வார்.

 • அனந்தம் வாழ்வில் பலிப்பது அபரிமிதம், அதிர்ஷ்டம்.
 • வாழ்வைக் கடந்து அன்னை பலிப்பது அருள், யோகம்.
 • அனந்தம், நம் மனநிலைக்கேற்ப, அதிர்ஷ்டமாகவோ, யோகமாகவோ சித்திக்கும்.

தொடரும்.....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
(Perfection) பூரணச் சிறப்பு நாமுள்ள நிலையில் பிரம்மத்தை வெளிப்படுத்தும். அத்துடன் அடுத்த நிலைக்கு நம்மை அழைத்துச் செல்ல வல்லது.
 
சிறப்பு நிலைக்குரிய பிரம்மம்.

 

********
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சைத்தியபுருஷனை அடைய நாம் இதயத்தின்பின்னால் மனத்தை ஒருநிலைப்படுத்த வேண்டும். வெளி நோக்கிச் செல்லும் சக்திகள் ஓரிடமாகச் சேர்ந்தால்தான் அது முடியும்.
 
புறநோக்கு அகநோக்காகும்.
 
*******

 book | by Dr. Radut