Skip to Content

09. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

 1. நிலைக்குரிய தரமுண்டு. தார்மீக எண்ணங்கள் மனத்திற்குரியவை. மற்ற நிலைக்குப் பொருந்தா.
  நிலைக்குரிய தரம் உண்டு. 
  • விலங்கின் சாதனை உயிர் வாழ்வது (survival).
   மனிதன் சாதனை வாழ்க்கை வளம்பெருகி வாழ்வது.
   தெய்வம் சாதிக்க விரும்புவது பரிணாமம்.
   வாழ்வு பரிணாமத்தால் மனமாகவும், ஆன்மாவாகவும் வளர்வது விலங்கிற்குரிய தரமும், மனிதனுக்குரியதும், தெய்வத்திற்குரியதும் அடுத்த அடுத்த உயர்ந்த கட்டங்களைச் சார்ந்தன.
  • குழந்தை கட்டுப்பாடாக வளர வேண்டும் - கட்டுப்பாடு திறமையை வளர்க்கும்.
   குழந்தையைச் சுதந்திரமாக வளர்க்கலாம் - சுதந்திரம் பண்பையும், அன்பையும் வளர்க்கும்.
   திறமை பண்பிற்கு உட்பட்டது.
   அச்சுதந்திரம் பெற்றோர்தரும் சுதந்திரமானால் பண்பாக அன்பாகக் குழந்தை வளரும்.
   அதே சுதந்திரம் குழந்தை விரும்பும் சுதந்திரமானால், குழந்தை மேதையாக வளரும்.
   தெய்வம் விதித்த சுதந்திரமானால் குழந்தை தெய்வமாகி, தெய்வ நிலையைக் கடக்கும்.
   நிலையுயர்ந்தால், தரம் உயரும்.
  • நிலைகள் பல.

   மனிதன் குடும்பத்தையொட்டி வளரலாம் - திறமைசாலியாவான்.
   ஊரையொட்டி வளரலாம் - தலைவனாவான், பண்பு பெறுவான்.
   இலட்சியத்தை நாடி வளரலாம் - முன்னோடியாவான்.
   நாட்டை முதன்மையாக்கி வளரும் மனிதன் நாலு வகைகளிலும் திறமையும் பண்பும் பெற்று தலைவனாக முன்னோடியாவான்.
   ஆன்மாவையொட்டி வளரும் மனிதன் முனி, தபஸ்வி, ரிஷி, யோகியின் மார்க்கத்துள் நுழைவான்.
   வளரும் ஆன்மாவை மையமாக்கிய மனிதன்,

   • சூழலின் திறம்படச் செயல்படுவான்.
   • குடும்பத்தில் எடுத்துக்காட்டாக எழுந்து நிற்பான்.
   • ஊருக்கு முன்னோடியாவான்.
   • நாட்டுக்கு நல்லவனாவான்.
   • ஆன்மீகமும் அவனுக்குரியது என்றாலும் அவன் வளரும் ஆன்மா நாடுவது வாழ்வு, அது
   • குடும்ப வாழ்வில் குதூகலம் எழுப்பும்.
   • உற்றார் உறவினரில் சுபிட்சத்தை வளர்க்கும்.
   • ஊரில் வன்முறையைத் தவிர்க்கும்.
   • நாட்டில் நல்லது வெற்றிபெற அவனை அனைவரும் நாடித் தலைமையை ஏற்கச் சொல்வார்கள்.
   • அவனுள்ள இடத்தில் அஹிம்சை அன்பாக வெளிப்படும்.
    ஹிம்சைக்கு எதிராக இருக்காது.
   • அவன் செயல் சத்தியத்தின் அஸ்திவாரத்தை ஏற்படுத்தும்.
   • சத்தியம் தானே வலுப்பெற்று எதிரானது இயல்பாக விலகும் வலிமை அவனுடையது.
   • தீமை அவனுள்ள இடத்தில் வெற்றி பெறாது, செயல்பட முடியாமல் தவிக்கும், தன்னைத் தானே எரிக்கும் நிலையை எய்தும்.

*****

 1. செயல்கள் போன்ற இவ்வமைப்புகள் கருவிகள். பண்புக்கும் தார்மீக எண்ணத்திற்கும் இவற்றிற்கும் தொடர்பில்லை. அதுவும் அவை வேறு நிலையைச் சேர்ந்தவையானால் தொடர்பேயிருக்காது.
  பண்பு பலனை நிர்ணயிக்காது.

  எய்தவனை மறந்து அம்பை நோவதில் பலனில்லை என்பது தொன்றுதொட்ட சொல். பழைய மாணவர் வாழ்வில் உயர்ந்த நிலையடைந்து பின் பள்ளி, கல்லூரி விழாவுக்கு வந்தால் இன்று நான் உயர்ந்த நிலையிலிருப்பது இந்தப் பள்ளியால் தான் என்பார்கள். பள்ளியும், கல்லூரியும், கருவிகளே, கர்த்தாவாகா.

  வாழ்வு என்பது பெருஞ்சமுத்திரம். சம்சார சாகரம் என்பார்கள். நாம் அன்றாடம் சந்திப்பவை பல; பயன்படுத்துபவை ஏராளம். அவற்றை நாம் கருதுவதில்லை. கடை, பாங்க், பஸ், போன் போன்றவை ஸ்தாபனங்கள் (organisation). கத்தி, நோட்டு, பேனா, மிக்ஸி, பல்பு போன்றவை பொருள்கள். நாணயம், விஸ்வாசம், துரோகம், நம்பிக்கை, நல்லெண்ணம், கெட்டஎண்ணம் என்பவை பண்புகள், குணங்கள், பண்பாலான குணங்கள். மானம், அந்தஸ்து போன்றவை சொரணைகள் (sensitivities).

  இவையனைத்தும் கருவிகளாகும்.
  இவற்றிற்கு நல்லது கெட்டதை நிர்ணயிக்கும் திறனில்லை.

  • போலீஸ்காரன் போக்கிரியிடமிருந்து காப்பாற்றினால் போலீஸை நாம் பாராட்டுகிறோம்.
  • ஆபத்தான வியாதி வந்தபொழுது பெரும்பணம் காப்பாற்றுகிறது. பணத்தின் முக்கியத்தை அதனினின்று அறிகிறோம். அதன் மகிமை அப்பொழுதுதான் தெரிகிறது.
  • கடைசி காலத்தில் பிள்ளைகள், பெண்கள் இரவு பகலாகச் சேவை செய்து அன்பை வெளிப்படுத்துகிறார்கள். பெற்ற பாசத்தை அறிகிறோம்.
  • 8 வருஷமாக வாடகை தாராமல், வீட்டைக் காலி செய்ய மறுப்பவர் போக்கடா. அந்த ஊருக்கு வந்த ஜட்ஜ் நம்மைத் தேடி வருகிறார்.
   "நான் உங்கள் தகப்பனாரால் முன்னுக்கு வந்தேன்'' என்கிறார். நம் குடியிருப்பவரை அழைத்து நல்ல உபதேசம் செய்கிறார். வீடு காலியாகிறது. நமக்கு பதவியின் பெருமை தெரிகிறது.
   • ஸ்தாபனங்களும், பொருள்களும், பண்பும், குணமும் கருவிகளேயாகும்.
   • இவற்றிற்கு நல்லது கெட்டதுஎன்ற பாகுபாடில்லை.
    நல்ல காரியத்திற்குப் பயன்படும் விஸ்வாசம் கொலை செய்யவும் பயன்படும்.
    கொலைகாரனுக்கு அவன் நண்பன் விஸ்வாசமாக இருப்பான்.
    (நான் விஸ்வாசம், உயர்ந்த குணம், கொலை செய்யப் பயன்பட மாட்டேன் எனக் கூறாது).
   • இலஞ்சம் கொடுக்கப் பணத்தை எடுத்தால் நான் லட்சுமி, தனலட்சுமி, இலஞ்சம் தவறான செயல். நான் அதற்கு உடந்தையாக இருக்கமாட்டேன் எனக் கூறாமல் பணம் திருமணத்திற்குப் பயன்படுவதுபோல இலஞ்சத்திற்கும் அமைதியாகப் பயன்படும்.
   • மனிதனுக்குப் பாகுபாடுண்டு, நிர்ணயிக்கும் திறன் உண்டு. ஆன்மீகம் உள்பட அனைத்தும் கருவிகளேயாகும். ஆன்மீகத் திறனை பிறரைக் கொலை செய்ய, சித்ரவதை செய்ய மந்திரமாகப் பயன்படுத்துகிறார்கள்.
    • மனிதன் மட்டுமே உயர்ந்தவன்.
     மற்றவையெல்லாம் கருவிகளே.
     பண்புகள் உள்பட வெறுங்கருவியாகும்.

தொடரும்....

******

 

ஜீவிய மணி
 
அறிவில்லாத மனத்திலும் ஆன்மா அற்புதம் நிகழ்த்தும்.

 

*****book | by Dr. Radut