Skip to Content

08. T.V. சீரியல் - நடைமுறை, தத்துவம்

T.V. சீரியல் - நடைமுறை, தத்துவம்

கர்மயோகி

"15 இலட்ச ரூபாயை எடுத்துப் போகும் பெண், ரோட்டில் கூட்டமாக இருப்பதைக் கண்டு, ஆட்டோ ரிக்ஷாவை விட்டிறங்கி கூட்டத்துள் போய்ப் பார்த்து வருவதற்குள் பணம் திருடு போய்விட்டது. அவள் நொறுங்கி நிலைகுலைந்து விட்டாள். அந்தப் பெண்மணிக்கு ஆறுதலும், ஆதரவும்தர அன்னை அருள் உதவுமா, அவளுக்கு நான் என்ன சொல்ல முடியும்'' என்பது அன்பர் கேள்வி. இது கதை, எனினும் கருத்துக்கு அர்த்தம் உண்டு. நிஜமான வாழ்வில் ஒருவர் இதுபோல் பணமிழந்தால், அவர்கள் போலீஸ்க்குப் போவார்கள். இக்கதையிலும் போலீஸில் கம்பிளெயிண்ட் கொடுக்கிறார்கள்.

அன்னை அருள் அனைவருக்கும் உண்டு.

  1. இப்பெண் அன்னை அன்பரானால், அன்னைக்குப் பிரார்த்திப்பதால் பணம் கிடைக்கும், பிரார்த்தனை செய்யுமுன், ஆட்டோவில் பணத்தை வைத்துவிட்டுப் போன தவற்றை உணர்ந்து வருந்தி பிரார்த்தனை செய்வது முறை.
  2. அவர் மீது பற்று, கடமையுள்ள கணவன், உடன்பிறந்தவர், நண்பர் அவருக்காகப் பிரார்த்தனை செய்தாலும் பணம் கிடைக்கும். பிரச்சினைக்கு உரியவர் பிரார்த்தனை எளிதில் பலிக்கும். அடுத்தவர் பிரார்த்தனை பலிக்க அவர் பக்தி வலிமையுடையதாக இருக்க வேண்டும்.
  3. அவர் வீட்டார், நண்பர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தாலும் பலிக்கும். பலர் பிரார்த்தனை எளிதில் பலிக்கும்.

    இவை நடைமுறை.

    அன்பர் கேள்வி, "அவரறியாமல் ஒருவர் பிரார்த்தனை பலித்து பணம் வருமா"?

    இது பணம் கிடைக்கும் என்பதைவிட பிரார்த்தனை பலிக்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது. நிச்சயம் பணம் வரும். அவர் எளிமையானவரானால் அவருக்கு அத்தொகையை இழக்கும் வாய்ப்பு வரும். அதை இழந்தால் பிரார்த்தனையால் மீண்டும் கிடைக்காது. எவர் பிரார்த்தனை செய்தாலும் அது நல்லெண்ணம். நல்லெண்ணம் பலிக்கும். அதனால் நஷ்டம் வாராது. ஓரளவு நல்லெண்ணமிருந்து அதை மீறி வலிமையாகப் பிரார்த்தனை செய்தால் மீறிய அளவில் பாதிக்கும்.

  4. ஆபத்திற்கு உதவும் எண்ணம் பாதிக்காது.
  5. ஆத்ம வலிமையுள்ள அளவுக்குப் பாதிக்காது.
  6. நல்லெண்ணம் உள்ள அளவுக்குப் பாதிக்காது.
  7. கடமையுள்ள இடத்திலும் பாதிக்காது.
  8. "நான்” பிரார்த்தனை செய்தால் பலிக்கும் என்ற முனைப்போடு பிரார்த்தனை செய்தால் பணம் கிடைக்கும், "நான்” அடிபடும் அளவில் பாதிப்பு எழும். பொதுவாக அது பணம் தொலைவதாகவே அமையும். ஆட்டோவில் தொலைந்தால் ஆச்சரியமில்லை. செயல் அதேபோல் தவறாது திரும்ப வரும்.

அன்பர் கேள்வி, "எவருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், என் பிரார்த்தனை அவருக்குப் பயன்பட்டு விடுதலை கிடைக்குமா? இது தொடர்ந்தும் நடக்குமா? இது அன்னையின் அருள் செயல்பட வேண்டிய வகையல்லவா"?

அன்பர் மகானாக இருந்து, காருண்யம் உடையவரானால், அவர் வலிமை இப்பலனை நிர்ணயிக்கும். தம் ஆத்ம வலிமையை மீறியும் அவர் செயல்படலாம், அதற்குள்ளும் செயல்படலாம். தம் வலிமைக்குள் செயல்பட்டால், பாதிப்பு இருக்காது. யோகத்திற்காக தாம் சேகரித்த வலிமையை அவதிப்படுபவருக்குக் கொடுப்பதாக அமையும். வலிமையை மீறிச் செயல்பட்டால், அந்த அளவுக்குப் பாதிக்கும். மகான் செயல்படச் சட்டம் உண்டு. பிரச்சினை அவரிடம் வந்துவிட்டபின் பணத்தை இழந்தவர் பிரார்த்தனை எளிதில் பலிக்கும். இழந்தவர் பிரார்த்தனை உதவியின்றி பலிப்பதைவிட மகான் விஷயம் அறிந்ததால் எளிதில் பலிக்கும். எவருக்கும் பாதிப்பு இருக்காது. மகான்என்பவர் அந்த லிமிட்டிற்குள் செயல்படுவது முறை. அது சட்டம். பகவான் யோகத்தில் இந்த அம்சத்தைப்பற்றி எழுதும்பொழுது சிஷ்யர்கள் குருவுக்கு இலஞ்சம் கொடுக்கவே பிரியப்படுகிறார்கள்என்று எழுதுகிறார். ஜட்ஜ் கட்சிக்காரருக்கு, சட்டப்படி நியாயம் வழங்கலாம். சட்டத்திலில்லாத சலுகையைச் செய்வது சரியில்லை. மாணவர் ஆசிரியரிடம் பாடம் கற்பதைவிட கேள்வித்தாளை எதிர்பார்ப்பது வழக்கம்.

ஓர் அன்பர் ஆன்மீக வலிமை ஏராளமாக உள்ளவரானால், அவருக்கு நாட்டுப் பற்று, குடும்ப இலட்சியம், தொழில் முன்னேற்றம் எவையும் பொருட்டல்ல, பிறர் பிரச்சினையைத் தீர்ப்பதுமட்டுமே குறிக்கோள் என்றிருந்தால்,

  1. அவருடைய வலிமை 100பேர் பெரிய பிரச்சினையைத் தீர்க்கும் எனில், அவர் செய்யலாம். அவரைப் பாதிக்காது.
  2. பிறருக்கு இது அவர் செய்யும் ஆன்மீகச் சேவையென அவர் நம்பினால் அது உண்மையன்று. ஒருவர் மாதம் 50 இலட்சம் சம்பாதிப்பதால் அண்ணன், தம்பி, தமக்கை, தங்கை குடும்பங்களை முழுப்பொறுப்பு ஏற்று நடத்த முன்வந்து நெடுநாள் செய்வது அவரைப் பாதிக்காவிட்டாலும், அக்குடும்ப இளைஞர்கள் சொந்தமாகச் சம்பாதிக்கும் திறனை இழந்து நலிவார்கள். அதுபோல் ஆன்மீகச் சேவையை ஒருவர் செய்தால், சேவையைத் தொடர்ந்து பெறுபவர் சொந்த ஆன்மீக முன்னேற்றத்தை இழப்பர். இது சிறுபிள்ளைத்தனம் என அன்னை கூறியுள்ளார். பகவான் புதுவை வந்த ஆரம்பத்தில் ஒருவர் தம் மனைவிக்குள்ள நோயைக் குணப்படுத்தும்படிக் கேட்டார். "அது என் கடமையில்லை" என பகவான் கூறினார்.

விதிவிலக்கு: மேற்சொன்னதுபோல் நடக்கும் ஒருவர் அந்த நோக்கத்தை ஆன்மீக இலட்சியமாக ஏற்றால், அவருடைய ஆன்மீக முன்னேற்றத்திற்குரிய பாதையாக அந்தச் சேவையை மேற்கொண்டால் அவர் ஆன்மா வளரும், அவர் யோகமோ, வாழ்வோ அதனால் பாதிக்கப்படாது. ஆனால் தவறாது ஒரு பலன் உண்டு.

ஆன்மீகப் பலன் பெற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து பலன் கொடுத்தவரை ஊரை விட்டு விரட்டுவர், உயிரை எடுப்பார்கள், சூன்யம் வைப்பார்கள், பொல்லாத கெட்ட பெயர் எழும். இது தவிர்க்க முடியாத பலன். இவற்றையும் மீறி அவர் ஆன்மா வளர்ந்தபடியிருக்கும்.

 

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மனத்திலிருந்து சைத்தியபுருஷனுக்குப் போவது என்பது ஆசையால் பீடிக்கப்பட்டவன் அதை மீறி வந்து அதன் பலனைச் சிந்திப்பது போலாகும்.
 
ஆசையை விலக்கி, பலனை நினைப்பது
மனத்திலிருந்து சைத்தியபுருஷனுக்குப் போவதுபோன்றது.

 
*******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஜடம் சக்தியால் முழுவதும் ஆளப்படுகிறது. நாம் அதைவிட்டு விலகியுள்ளோம். மனத்தால் அதை அறிய முற்படுகிறோம். அதனால் நமக்கு சக்தியின் முழுமை விளங்குவதில்லை.
 
சக்திக்குட்பட்ட ஜடத்தை மனத்தால் புரிந்துகொள்ள முடியாது.
 
*******

 



book | by Dr. Radut