Skip to Content

02. வாழ்வில் பெருவெற்றி பெற்றவர்கள்

வாழ்வில் பெருவெற்றி பெற்றவர்கள்

N. அசோகன்

பொதுவாக உலகத்தில் உத்தமர்கள் என்று பெயர் பெற்றவர்கள் பண்பாலும், நன்நடத்தையாலும், உழைப்பாலும், திறமையாலும் உயர்ந்தவர்களாக இருப்பார்கள். இப்படி வாழ்க்கையில் உச்சிக்குச் சென்றவர்கள்கூட தமக்கு ஒரு பெயர், புகழ் வேண்டுமென்று பிரியப்படுவார்கள். ஒருவருக்கு உயர்ந்த ஆன்மீக அம்சம் இருக்கிறதென்றால் அதற்கேற்றபடி அவருடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டாரென்றால் அவரைத் தேடி புகழும், பிரபலமும் தானே வரும். பொதுவாக ஆயிரம்பேர் நல்ல பெயருக்கும், புகழுக்கும் ஏங்கினாலும் ஏதோ ஒருவருக்குத்தான் அது கிட்டும். இந்தியக் கலாச்சாரம் ஆன்மீகம் நிறைந்த கலாச்சாரமாக இருப்பதால் இங்கே ஆன்ம விழிப்புள்ள எவருக்கும் ஆன்மாவின் தரிசனம் சுலபமாகக் கிடைக்கும். அவரை மகான்என்று மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ரிஷி, முனி, தபஸ்வி என்று பெயர் வாங்கிய எல்லோருமே தம்முடைய ஆன்மீக அம்சத்தை உணர்ந்து அதை வளர்த்துக்கொண்டு ஆன்மீக உயர்வை எட்டியவர்கள் தாம். அமெரிக்காவில் நானூறு ஆண்டுக் காலச் சரித்திரத்தில் ஆன்மீகச் சிறப்புப் பொருந்திய ஒருவர் பிறக்காதது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க மண்ணே ஆன்மீகத்திற்கு ஒத்து வாராது என்று சொல்லலாம். பணம் சம்பாதிக்க வேண்டும்என்று இந்தியர்கள் ஆர்வம் காட்டினாலும், பலகோடிஸ்வரர்கள் இந்தியாவில் தலை எடுத்திருந்தாலும் இந்தியக் கலாச்சாரத்தில் ஆன்மீகம் ஆதிக்கம் செலுத்துவதால் பணம் சம்பாதிப்பது இந்நாட்டில் இரண்டாம் பட்சம் ஆகிவிட்டது.

இந்தியாவினுடைய பாரம்பரிய ஆன்மீகம், பணம் ஆன்மீகத்திற்கெதிரானது என்று விளக்கி வைத்திருந்தது. ஆனால் அன்னை ஸ்ரீ அரவிந்தர் துவக்கி வைத்துள்ள புதிய ஆன்மீகம் பணம் வாழ்க்கையை தெய்வீக மயமாக்குவதற்கு உதவும் என்று சொல்கிறது. இந்தப் புதிய கருத்து உலகில் பரவி வருகிறது. பணம் ஆன்மீகத்திற்கு ஓர் அஸ்திவாரம் என்று உலகம் உணர்கின்ற நேரம் வந்துவிட்டது. பொதுவாக வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும்என்று எல்லோருமே விரும்புவார்கள். அப்படி எடுத்த காரியம் எதிலும் வெற்றி பெறுவதற்கு உதவக் கூடிய ரகசியம் ஒன்று இருக்கிறது. அந்த ரகசியம்

ஏற்ற லட்சியத்தை ஒரே குறியாகக் கொள்ளுதல்.

ஆன்மா விழித்துக் கொண்டால் அது தன்னுடைய நோக்கத்தைத் தானே பூர்த்தி செய்துகொள்ளும் அதனுடைய வெற்றியை யாரும் தடை செய்ய முடியாது. வாழ்க்கையில் மற்ற எந்தத் துறையில் வெற்றியடைய விரும்பினாலும் இதே தீவிரம் இருக்க வேண்டும். பெரும் பணம் சம்பாதித்து அதிர்ஷ்டசாலிகள்என்று பெயரெடுத்தவர்கள் பணம் சம்பாதிப்பதில் ஒரே குறியாகவே இருந்திருப்பார்கள். அதிர்ஷ்டத்தைத் தேடுபவர்களுக்குப் பின்னால் பல ரகசியங்கள் இருக்கின்றன. அவை பின்வருமாறு.

  • சமூகத்தில் தனக்கிருந்த அந்தஸ்து மரியாதையை இழந்தவர்கள் பணம் சம்பாதித்து அதன்மூலம் இழந்த அந்தஸ்த்தை திரும்பப் பெற முயல்வார்கள்.
  • தமக்குள்ள வறுமையை ஏற்பவர் பலர் வறுமையிலிருந்து விடுபட்டே ஆக வேண்டும்என்று தீர்மானம் செய்கின்ற ஒரு சிலர் வறுமைக்கு நிவாரணமாகச் செல்வத்தைத் தேடுகிறார்கள்.
  • நாம் எதைத் தீவிரமாக நாடினாலும் அது நமக்குக் கிடைக்காமல் போவதில்லை.
  • சம்பாத்தியத்தைவிட செலவைக் குறைவாகச் செய்பவர்களுக்கு நாளடைவில் பணம் சேரும். ஆனால் சம்பாத்தியம் குறைவாகவும் செலவு அதிகமாகவும் செய்பவர்களுக்குப் பணம் என்றுமே சேராது.
  • வறுமையின் காரணமாக ஊராரால் ஒதுக்கப்பட்டு, அவமானப்பட்டவர் அந்த அவமானத்திற்குப் பரிகாரமாகப் பணத்தைத் தேடினாரென்றால், அதிலேயே குறியாக இருந்தாரென்றால் அவர் அநேகமாகப் பெரும் பணக்காரராக மாறுவார்.
  • வசதியான மற்றும் அன்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்குப் பணம் பழக்கமான ஒன்றாகிவிடுவதால் அவர்கள் வறுமையில் வாடியவர்களைப்போல பணத்தைத் தீவிரமாகத் தேடுவதில்லை.

அமெரிக்க கோடிஸ்வரர்கள் பத்துப்பேர், வெளிநாட்டுக் கோடிஸ்வரர்கள் பத்துப்பேர்என்று இருபதுபேர் வாழ்க்கையில் நடந்தவற்றை ஆராய்ச்சி செய்து மேற்கண்ட உண்மைகளை ஸ்ரீ கர்மயோகி அவர்கள் கண்டறிந்துள்ளார். இந்த இருபதுபேரும் திறமையால் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களேயன்றி பண்பால் உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. இவர்கள் எல்லோருமே அனாதைகள், தாழ்த்தப்பட்டவர், தகப்பனார் யார்என்று தெரியாதவர், வீடு வாசல் இல்லாமல் வீதியிலேயே வாசம்செய்து வளர்ந்தவர்கள்என்ற சமூகப் பின்னணி கொண்டவர்கள். இவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்று ஆராய்ந்தால் அதன்மூலம் சில பெரிய உண்மைகள் தெரிய வரும்.

  • ஊருக்கு அடங்கி வாழ்பவர்கள் ஓரளவுதான் வெற்றி பெறுவார்கள்.
  • ஊராரால் ஒதுக்கப்படுபவர்கள் ஊரைவிட பெரியதான உலகத்துக்குள் தள்ளப்படுகிறார்கள். ஊர் சத்என்றால் உலகம் அசத். அசத் சத்தை விடப் பெரியது. ஆகவே இப்படிப்பட்டவர்கள் சாதிப்பது ஊரார் கண்டறியாத பெருவெற்றியாக அமையும்.
  • மேதைகளைக் கல்லூரிகள் உருவாக்குவதில்லை. ஸ்ரீநிவாச ராமனுஜம் போல ஒரு கணித மேதை இதுவரை பிறக்கவில்லை. அவர் எழுதியதைப் புரிந்துகொள்வதற்கு இதுவரை எந்தக் கணிதப் பேராசிரியராலும் முடியவில்லை. அவருக்கு B.A. மற்றும் M.A. பட்டம் கொடுத்தால் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தான் பெருமைப்பட்டுக் கொள்ளலாமே தவிர அவருக்குப் பெருமை சேராது.
  • ஒன்றுமே இல்லாமல் வாழ்க்கையைத் துவக்கி பெரும்பணம் ஈட்ட வேண்டும்என்று ஒரே குறியாய் நிற்பவர்கள்தாம் பெருஞ் செல்வர்களாக மாறுகிறார்கள். இந்தப் பெரும்பணத்தினுடைய மூலம் ஒன்றுமே இல்லாத அவர்களுடைய ஆரம்ப வறுமை நிலையாகும்.

******

 



book | by Dr. Radut