Skip to Content

08.அபரிமிதமான செல்வம்

அபரிமிதமான செல்வம்

(சென்ற இதழின் தொடர்ச்சி...)

வேலை : மனிதனுடைய உற்பத்தித் திறன் அதிகமாவதால் மனிதன் தன் உழைப்பால் அதிகப் பணத்தை உற்பத்தி செய்கிறான்.

உறவு : நாளுக்கு நாள் மனிதன் மற்றவர்களுடன் பழகுவது அதிகமாகிறது. உறவு அதிகமானால் உற்பத்தி அதிகமாகும் என்ற கருத்து முழு உண்மையானாலும், பொருளாதார ரதியாகவோ, தத்துவமாகவோ விளக்குவது எளிதன்று. உறவு அதிகமான இடத்தில் பணம் அதிகமாகப் புழங்குவதைக் காட்டலாம். பாங்க் டெப்பாசிட் 9 மடங்கு வளர்வதுபோல் இருவர் இனிக்கப் பழகுவது ஓர் உற்பத்தி ஸ்தானம். Human exchange is a point of production.

ஒரு புது ஸ்தாபனம் - ரயில்வே, தந்தி, தபால், கல்வி, சர்க்கார், internet போன்றவை - வந்தால் ஏற்கனவே உள்ள அத்தனை ஸ்தாபனங்களும் அதனுடன் இணைகின்றன. அதனால் அத்தனையும் உயர்வடைகின்றன.

இப்படிப் பார்த்தால் பணத்தின் அளவும் திறனும் உயர்கின்றன. அதன் மூலம் மனிதனுடைய திறமை அதிகரிக்கிறது. அவனால் மேலும் பணம் உற்பத்தி செய்யமுடிகிறது. இதற்கு முடிவில்லை.

நம்பிக்கை ஆரம்பத்தில் சிறியது. நாளாக ஆக நம்பிக்கை அதிகரிக்கிறது. சர்க்கார் நெல்லை நல்ல விலைக்கு வாங்கிக் கொள்ளும் என்றால் நம்பிக்கை மேலும் உயர்கிறது. நம்பிக்கை உயர்ந்தால், பணம் பெருகும்.

அதேபோல் வேகம், ஆயுள், ஸ்தாபனம், சக்தி, எண்ணம், ஏற்றுமதி ஆகியவை அதிகரித்தால் பணம் பெருகும்.

அகந்தையை வெளிப்படுத்த அனுமதியில்லை. தானே கொண்டாடலாம். வெளியில் “நானே பெரியவன்” என்று கூற இனி இடமில்லை. அகந்தை அழிந்தால், பணம் பெருகும்.

பணமும், பண்பும் :

நெல், கம்பு, மணிலா, உளுந்து போன்ற தான்யங்கள் பணம். மேஜை, நாற்காலி, பாத்திரம், மிக்ஸி போன்ற பொருள்கள் பணம். தையல், வைத்தியம், கூலி வேலை, கல்வி போதிப்பது, வழக்காடுவது போன்ற services சேவைகள் பணம். பொருள்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்பவன் பணம் சம்பாதிக்கின்றான். நாணயம், நல்லெண்ணம், நட்பு, கடமை, கட்டுப்பாடு, ஆகியவை பண்புகள். பொருள் பணம் என்பதை ஏற்கலாம். பண்பு பணம் என்பது விளங்கவில்லை. பண்பு என்பது மனித உறவில் மட்டுமன்று, வேலையிலும், வியாபாரத்திலும், ஆபீசிலும், தர்ம நியாயத்திலும், தனிப்பட்ட முறையிலும், ஆன்மீகத்திலும் பண்புண்டு. வேலையை அழகாகச் செய்வது (work value) வேலைக்குரியது. ஸ்டூல் ஆடினால், கால் தரையில் படியாவிட்டால் அது வேலையில்லை. ஸ்டூல் அழகாக நன்றாக இருப்பது அவசியம். வீட்டுக்கு வருபவரை “யார், ஏன் வந்தீர்கள்?” என யாரும் கேட்கமாட்டார்கள். வருபவரை அன்பாக உபசரித்து வரவேற்பது (social value) பழக்கத்திற்குரிய பண்பு. வியாபாரத்தில் விலையின் நேர்மை, பொருள் தரமாக இருப்பது (commercial value) வியாபாரத்திற்குரிய பண்பு. பண்பில்லாத மனித உறவில்லை. வியாபாரிக்குப் பண்பில்லாவிட்டால் வியாபாரம் நடக்காது. ஆபீசில் வருபவர்களிடம் முகம் சுளித்தால் கெட்ட பெயர் வரும். பழகத் தெரியாவிட்டால் ஒதுக்கப்படுவோம். பண்பு நிறைந்தவர் வசதியாகவும், குறைந்தவர் வசதி குறைவாகவுமிருப்பார்கள். பண்பு பணம்.

பொருளை உற்பத்தி செய்தால் அதன் மூலம் வேலை வரும். தான்யம் பத்திரப்படுத்தப்பட வேண்டும். பேப்பர் உற்பத்தி செய்தால் லாரி மூலம் அனுப்ப வேண்டும். உற்பத்தி, பொருள் எனில் வேலையுண்டு. வேலைக்குரிய பண்புண்டு. வேலைக்குரிய பண்புகள் (functional values) என்பன அலமாரியைத் திறந்தால் மூடவேண்டும், சாவியை உரியவரிடம் தரவேண்டும். அது தவிர மனிதனுக்குரிய பண்புண்டு. சிறியவரிடம் சாவியைக் கொடுக்கும் போது அன்பாகக் கொடுக்க வேண்டும். பெரியவரிடம் தரும்போது பணிவாகத் தரவேண்டும். பெண்களிடம் தரும்பொழுது பெண்ணுக்குரிய மரியாதை வேண்டும். இவை (pure values) பண்புகள், மனிதத் தன்மைக்குரிய பண்புகள். பொருள் உற்பத்தியாவதும், வேலை செய்வதும் மனிதனுக்குரியது. பண்பு என்பது சூட்சுமமானது. அது மனிதனுடன் நிற்பதில்லை. அதற்கு முடிவில்லை. மரியாதைக்கும், நாணயத்திற்கும் எல்லையில்லை. அவை முழுமை பெறும்வரை, முடிவில்லாமல் வளர்பவை. பண்பு பணமானால், பண்புக்கு முடிவில்லை என்றால், பண்பால் உற்பத்தியாகும் பணத்திற்கும் முடிவில்லை.

 பண்புகளை முடிவில்லாமல் உற்பத்தி செய்பவன், பணத்தை

முடிவில்லாமல் உற்பத்தி செய்ய முடியும் என்பது தத்துவம்.

தரமான பொருள், குறித்தபடி கொடுப்பது, அழகான பேக்கேஜ், நாணயமான வியாபாரம், நம்பிக்கையான கொள்முதல், இனிய பழக்கம் ஆகியவை சரக்குக்கு மரியாதை தரும். அதேபோல் டாக்டர், வக்கீல், ஆடிட்டர், ஆசிரியர், ஆபீசர் ஆகியவர் செய்யும் வேலைகளும் பணியால் சிறப்படைகின்றன. பண்பு பொருள்களிலிருந்து வேறுபட்டன என்றாலும், வேலையுடன் கலந்து வரும் பண்புகளே அதிகம். மனம் ஜடத்தை உற்பத்தி செய்தது. பண்பு பொருள்களை உற்பத்தி செய்தது. நாம் பொருள்கள் என்று கூறுவது மனிதனுக்குரிய பல்வேறு பண்புகளால் உற்பத்தி செய்யப்பட்டவை. நாம் பொருள்களை ஜடமாகவும், வேலையை உழைப்பாகவும், பண்புகளை மனத்திற்குரியனவாகவும் கருதுகிறோம் என்றாலும், முடிவாக அனைத்தும் ஒன்றே.

சமூகம் பொருள்கள் மூலம் பணம் உற்பத்தி செய்வதுபோல், பண்புகள் மூலமும் பணத்தை உற்பத்தி செய்கிறது. சமூகம் பண்பால் பணத்தை உற்பத்தி செய்தால், மனிதன் பண்பால் பணத்தை உற்பத்தி செய்யலாம். பண்புள்ளவர் பண்பற்றவரைவிட அதிகமாகச் சம்பாதிப்பதைக் காண்கிறோம். பண்பு தனியாகப் பணம் சம்பாதிப்பதைக் காண்பது அரிது. ஒரு புதிய பழக்கம், ஸ்தாபனம் சமூகத்தில் உற்பத்தியானால், சமூகம் ஓரளவுக்கு அதற்குத் துணை செய்யும். அப்பழக்கம் வேரூன்றிவிட்டால், அதுவே தானாக வளரும். ஒரு செடியை நட்டால் நாம் அது வேரூன்றுவதுவரை தண்ணீர் விடுகிறோம். அதன்பிறகு தானே வளர்வதுபோல் சமூகப் பண்புகள் ஓரளவுக்கு வளர்ந்தபின் தாமே வளரும்.

ஆயிரம் ஆண்டுகட்கு முன் மனிதன் பேச்சை அதிகமாக அறியவில்லை. ஓரூரில் கொஞ்சம் பேர்தான் சரளமாகப் பேசுவார்கள். மற்றவர்கள் எளிய சொற்களை மட்டும் அறிவார்கள். அன்று ஒருவன் சளைக்காமல் பேசுவதை ஆச்சரியமாகப் பார்த்தனர். ஒரு நாள் ஊரிலுள்ள அனைவரும் அவன்போல் பேசுவார்கள் என்று அன்று கூறியிருந்தால், எவரும் நம்பியிருக்கமாட்டார்கள். இன்று ஓரூரில் ஒரு கோடி பணம் உள்ளவர் சிலர். ஒரு நாள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி சொத்திருக்கும் என்று இன்று கூறினால் நம்புவது கஷ்டம்.மொழி பரவியதுபோல் பணமும் பரவும். மொழி வளர்ந்து வேரூன்றி தானே வளர ஆரம்பித்துவிட்டது. தன்னயறியாமல் வளர்கிறது.

இது மொழிக்கும், பணத்திற்கும் மட்டும் உரிய சட்டமன்று. கல்விக்கும் உரிய சட்டம் இதுவே. நாணயத்திற்கும் அதுவே பொருந்தும். நம்பிக்கைக்குரிய சட்டமும் அதுவே. சமூகம் ஏற்படுத்துகிற ஸ்தாபனங்களாகிய விவசாயம், வியாபாரம், மார்க்கட், போக்குவரத்து,விளையாட்டு, கல்வி, குடும்பம், பணம், மொழி ஆகிய அனைத்து ஸ்தாபனங்கட்கும் இது பொது விதி.

ஆயிரமாண்டாக மார்க்கட் வளர்ந்தது. கடந்த 20 வருஷமாக மார்க்கட் வளர்வது, tourism வெளிநாட்டுப் பிரயாணிகள் எண்ணிக்கைக் கூடுவது இந்தச் சட்டப்படிதான். நாம் வளர்ச்சியைக் காண்கிறோம், வளர்ச்சியின் காரணத்தை அறிய முயல்வதில்லை. பொருள்கள் பணம், தொழில் பணம். பண்பு பொருள்களுக்கு அதிக விலை தரும், தொழிலுக்கு அதிக பீஸ் தரும் என்பவை விளங்கும். பண்புகள் மட்டும் பணம் என்பது விளங்காது. கடந்த 20 அல்லது 30 ஆண்டுளாக இந்திய மார்க்கட் அது போன்ற பண்புகள், வியாபாரத்திற்குரிய பண்புகளை - punctuality, சுத்தம், நாணயம், அழகான பேக்கேஜ் போன்ற பண்புகள் - ஏற்றதால் விரிவடைந்துள்ளது. எந்த நாட்டில் மார்க்கட் வளர்ந்தாலும், இப்படித்தான் வளர்கிறது. பண்பால் வளர்ந்தன என எடுத்துக் கூறலாம். எந்தக் கோணத்தில் விளக்கினாலும், பண்புகள் அதனுள் அடக்கம்.

கம்ப்யூட்டர் அசுர வேகத்தில் வளர்கிறது. வேகத்திற்குரியது கம்ப்யூட்டர். வேகம் வளர்ச்சி. வேகத்தை வளர்க்கும் கம்ப்யூட்டர் வளர்வதில் ஆச்சரியமில்லை. வேகம் காலத்தைச் சுருக்குகிறது. சக்தியைக் குறைக்கிறது. வேலையைக் குறைக்கிறது. இவையெல்லாம் பணம் பெருகும் வழிகள். பொருளாதாரம் ஒரு நாட்டில் முன்னேறுவதை டெக்னாலஜி மூலம் அறிகிறோம், முதலீடு மூலம் அறிகிறோம், நிலக்கரி, எண்ணெய் போன்றவை கிடைத்ததன் மூலம் புரிந்து கொள்கிறோம். பண்புகளால் பொருளாதாரம் வளர்வதை நாம் கவனிப்பதில்லை.

சமூக வளர்ச்சிக்குப் பல அங்கங்களுண்டு. பொருளாதாரம் அதில் ஒன்று. அரசியல் வளர்ச்சி முக்கியமானது. ராணுவம் அடுத்தது. கல்வி, கலை எனப் பல அம்சங்களில் பொருளாதாரம் ஒன்று என்பதை நாம் முக்கியமாகக் கருத வேண்டும்.

 தொடரும்....

****

Comments

அபரிமிதமான செல்வம் After the

அபரிமிதமான செல்வம்

After the sub-heading பணமும், பண்பும் :

para 1, line 1 - நாற்காலி , - நாற்காலி,

do.  1, do. 12 -(social value)பழக்கத்திற்குரிய - (social value) பழக்கத்திற்குரிய

 do. 1, do. 17 - வசதிகுறைவாகவுமிருப்பார்கள். -

வசதி குறைவாகவுமிருப்பார்கள்.

para 2, line 8 - (pure values)பண்புகள் - (pure values) பண்புகள்

para 3, line 4 - பொருள்களிருந்து - பொருள்களிலிருந்து



book | by Dr. Radut