Skip to Content

04.அன்பரும் - நண்பரும்

அன்பரும் - நண்பரும்  

அன்பர் - சென்ற ஆண்டு நாமிருவரும் பேசியது உங்களுக்கு நினைவிருக்கும். இப்பொழுது ஓராண்டு ஆயிற்று. மீண்டும் உங்களிடம் ஆலோசனை கேட்க விரும்புகிறேன். உங்களுக்குச் சுருக்கமாகச் சொன்னால் நினைவு வரும் என நினைக்கிறேன்.

என் கணவர் சிறு வேலையிலிருக்கிறார். கடனில்லை என்றாலும், சிறு வருமானம். வீடு கட்டியதே பெரிய பாடு. அக்கடன் அடைய நாளாகும். எனக்கு என் நிலைமை தெரியும் என்பதால் பெரிய ஆசைகளில்லை. இல்லை என்றால் இல்லவே இல்லை எனப் பொருளில்லை. என் உடன் பிறந்தவர்கள் அனைவரும் பெரிய சம்பளத்திலிருப்பதால் அனைவரும் கார் வைத்திருக்கிறார்கள். அதனால் நானும் ஆசைப்பட்டேன். சென்ற ஆண்டு நாமிருவரும் அதைப் பற்றிப் பேசிய பொழுது “என் நிலைமைக்கு மீறிய ஆசை தவறு என்பதை நீங்கள் மனத்தால் மட்டுமன்று, உணர்வு பூர்வமாக ஏற்பது அறிவுடைமை” என்று கூறினீர்கள். அது எனக்குச் சரி எனப்பட்டது. ஏற்றுக் கொள்ள முடிவு செய்தேன். அறிவு ஏற்கிறது. உணர்ச்சி மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறது. கொஞ்ச நாள் போராட்டத்திற்குப் பின் ஒரு நாள் உணர்வு சம்மதப்பட்டதை வந்து உங்களிடம் சொன்னேன். நாம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது என் தகப்பனாரிடமிருந்து இங்கு வருவதாகப் போன் வந்து வீட்டிற்குப் போனபொழுது அவர் என் உடன் பிறந்தவர்கள் சேர்ந்து எனக்கு மட்டும் காரில்லாமல் இருக்கக் கூடாது எனக் கார் வாங்க முடிவு செய்ததையும் அதை அவர் மறுத்து “உங்கள் பரிசை மாப்பிள்ளை ஏற்கமாட்டார். என் மகளே ஏற்க மாட்டாள். நானே வாங்கிக் கொடுக்கிறேன். அதற்கு ஆட்சேபணை இருக்காது” என்று கூறியதையும் என்னிடம் கூறினார்.

நண்பர் - உங்களுக்குப் பிரச்சினை கார் இல்லையே. Attitude நோக்கம் தானே.

அன்பர் - அதன் பிறகுதான் எனக்குப் பிரச்சினை என்ன என்று தோன்றியது. என் வீட்டுக்காரர் எதையும் எவரிடமிருந்தும் பரிசாகப் பெற்றுக்கொள்ள சம்மதிக்க மாட்டார். அவர் இலட்சியம் என் காருக்குத் தடை. நான் அவரைக் கேட்டுப் பார்க்கவும் முடியாது. ஆரம்ப நாளிலிருந்து இது தெரிந்த விஷயம். மேலே என்ன செய்வது எனத் தெரியவில்லை. தகப்பனார் “நீ சொல்லும்பொழுது நான் காருடன் வருகிறேன்” என்று கூறிப் போய்விட்டார்.

நண்பர் - எனக்கு எல்லா விவரங்களும் நன்றாக நினைவிருக்கின்றன. பிரச்சினை காரில்லை என்று தெரிந்தவுடன் அது தீர்ந்துவிட்டது. இப்பொழுது பிரச்சினை வீட்டுக்காரரில்லை என்று புரியவேண்டும்.

அன்பர் - அவர் மட்டுமே பிரச்சினை. வேறென்ன என்று எனக்குத் தெரியவில்லை. 3 நாள் பிரார்த்தனை செய்தால் பலிக்குமா?

நண்பர் - செய்தால் மனம் அமைதியாகும். வேறு பல காரியங்கள் முடியும். கார் வாராது.

அன்பர் - 3 நாள் பிரார்த்தனை தவறியதே இல்லையே.

நண்பர் - அது தவறாது. ஒரு வேளை 3 நாள் பிரார்த்தனைக்குப் பின் என்ன செய்யவேண்டும் என்று தெரியலாம்.

அன்பர் - அது உங்களுக்குத் தெரியுமா?

நண்பர் - நாம் நெடுநாளாகப் பழகுகிறோமல்லவா?

அன்பர் - உங்களுக்குத் தெரியும் என்றால் சொல்லக் கூடாதா?

நண்பர் - சொன்னால் புரியாது. புரிந்தால் தெளிவு ஏற்படும். கார் வாராது.

அன்பர் - இரண்டாம் முறையாகக் கார் வாராது என்று சொல்கிறீர்களே.

நண்பர் - அப்படியானால் உடனே வரும் என்று அர்த்தம்.

அன்பர் - நேரடியாகப் பேசினால் புரியும். புதிர் புரியாது.

நண்பர் - போனமாதம் உங்கள் அக்கா மகன் அட்மிஷனுக்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்?

அன்பர் - அக்கா நான் சொன்னால் ஏற்கமாட்டார்கள். அவர்களுக்குச் சொந்தமாகப் புரியவேண்டும் என்றேன். நானும் அப்படியா?

நண்பர் - உங்களுக்குச் சொல்வது எனக்கு முடியும். எனக்கே நான் சொல்ல முடியாமல் காரியம் பாக்கியாக இருக்கிறதே.

அன்பர் - உங்களுக்கு அது முக்கியமில்லை. அதனால் பாக்கியாக இருக்கிறது.

நண்பர் - இத்தனை வருடமாக இதுபோல் எத்தனை காரியம் வந்துள்ளன. நீங்களே நினைத்துப் பார்க்கக் கூடாதா?

அன்பர் - நானும் என் வீட்டுக்காரரும் அடிக்கடி வாக்குவாதம் செய்வதைச் சொல்கிறீர்களா?

நண்பர் - பிரியமானவர்களும் சண்டை போடாமலிருந்தால் நல்லது. சண்டை போட்டால் கார் உடனே வரும்.

அன்பர் - கார் வரும் என்றால் சண்டையே போடத் தயார்.

நண்பர் - 5 நிமிஷம் அமைதியானால், தெளிவு ஏற்படும்.

அன்பர் - நானும் என் வீட்டுக்காரர்போல் வாங்கிக் கொள்ளாதவள் என்கிறீர்களா?

நண்பர் - உங்கள் தகப்பனாரே அதைச் சொன்னாரே.

அன்பர் - என் தகப்பனார்தானே தருகிறார். எனக்கு ஆட்சேபணை இல்லையே.

நண்பர் - குணம் அடிப்படையில் அதுவே என்பதால் தடை எழும்.

அன்பர் - நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? நானும் என் கணவர் போன்ற மனப்பான்மையுடையவள் என்பதால் என் கணவர் தடையாக இருப்பார் எனப் புரிய வேண்டுமா?

நண்பர் - “என் குணம் மாறினால் - பரிசு பெறுவது தவறு என்ற கருத்து - என் கணவர் தடை கூறமாட்டார்” என்று உங்கள் மனம் ஏற்குமா? உணர்வும் ஏற்குமா?

அன்பர் - அதை ஏற்கிறேன். இரண்டு, மூன்று நாள் கழித்து வருகிறேன்.

**** 

மறுநாள் அன்பரிடமிருந்து நண்பருக்குப் போன் வந்தது. அவர் வீட்டிற்குப் போனபொழுது அவருடைய தகப்பனார் வேறு விஷயமாக வந்திருந்தார். கணவருடன் T.Vஇல் நாடகம் பார்க்கும்பொழுது ஒரு இலட்சியவாதி மாப்பிள்ளை கார் பரிசு பெறமாட்டேன் என வைராக்கியமாக மறுக்கும் கதை அது. அதைப் பார்த்த கணவர் கதையை ரசித்தார். இலட்சியவாதியைப் பாராட்டினார். மனைவிக்கு மனம் இடிந்துவிட்டது. T.V நாடகம் தன் காரியம் முடியாது எனக் கூறுகிறது என்று நினைத்து “மனதை மாற்றிக் கொண்டு 3 நாள் பிரார்த்தனை செய்யலாம்” என்று நினைத்துக் கொண்டு உள்ளே போனவுடன் ஹாலில் ஆரவாரமாகச் சிரிப்பு கேட்டு ஓடி வந்து பார்த்தார். இலட்சியவாதியைப் பாராட்டிய மாப்பிள்ளை மாமனாரிடம், “கதை இருக்கட்டும், எனக்குக் கார் வரும் என்றால் நான் வாங்கிக் கொள்ளத் தயார்” என்று கூறியதை மாமனாரால் நம்ப முடியவில்லை.உடனே இருவரும் சேர்ந்து சிரித்தனர். கார் வந்துவிட்டது.

அன்பர் - எனக்கு இரண்டு விளக்கங்கள் தேவை. ஒன்று சென்ற ஆண்டு நடந்தது. இரண்டு இந்த ஆண்டு நடந்தது.

நண்பர் - என்ன விளக்கம் தேவை? விளக்கம் கேள்வியிலேயே இருக்குமே.

அன்பர் - ஆசை தவறு என்று உணர்ந்தவுடன், பூர்த்தியானது ஆசை. அது எப்படி? ஆசை தவறில்லை என்றாகிறதே.

நண்பர் - ஆசை யோகத்திற்கு மட்டுமன்று, வாழ்க்கைக்கும் தவறு.

அன்பர் - ஏன் பூர்த்தியாயிற்று? யார் பூர்த்தி செய்தது? அன்னை தானே?

 நண்பர் - அன்னை நம் எல்லோர் ஆசைகளையும் பூர்த்தி செய்கிறார். அதனால் ஆசை நல்லது என அன்னை கூறுவதாகாது. தவறு, நிலைமைக்கு மீறியது என்பதால் தவறு என்பதை மனம் ஏற்பது தவறு. தவறு மனத்தை விட்டுப் போனவுடன் receptivity ஏற்புத்திறன் அதிகரிக்கிறது. டென்ஷன் போய் அமைதி வந்தவுடன் அன்னை செயல்படுகிறார்.

அன்பர் - ஆசை தவறில்லையா?

நண்பர் - ஆசை சரியில்லை. என்றாலும் அது பூர்த்தியாகும், படபடப்புச் சரியில்லை, சரியேயில்லை.

அன்பர் - எதிர்பாராமல் தகப்பனார் எடுத்த முடிவு ஆச்சரியமாக இருந்தது. அவருக்குக் காரில்லை. எனக்குப் பரிசாகத் தருகிறார். ஏன் ஓராண்டு தாமதமாயிற்று?

நண்பர் - மனம் உங்களுக்கு மாறியிராவிட்டால், அது நடந்தேயிருக்காது. மனம் மாறினால் உடனே நடக்கும்.

அன்பர் - என் கணவருக்குத் தகப்பனார் கூறியது தெரியாது. எப்படி அவரே காரைப் பற்றிப் பேசினார்? ஏன் பேசினார் எனத் தெரியவில்லை.

நண்பர் - அது நடந்த வேகம் குறிப்பிடத்தக்கது. உங்கள் மனத்திலுள்ள எண்ணம் வெளிப்படாததால், அது கணவர் மூலம் வெளிப்படுகிறது.

அன்பர் - எல்லோர் மனமும் ஒரே மனம் என அன்னை கூறியது தெரியும். அது இப்படியும் செயல்படுமா?

நண்பர் - இது - silent will - ஒரு நாளைக்குப் பலமுறை நடக்கிறது. நாம் கவனிப்பதில்லை. இப்பொழுது கார் என்பதால் கவனிக்கிறோம்.

அன்பர் - அன்னையிடம் வந்தவுடன் எனக்கு silent willபுரியவில்லை. ஆச்சரியமாக இருக்கிறது. அப்பொழுது நான் சிரத்தையுடன் கவனித்தது நினைவுக்கு வருகிறது. எதிரில் உள்ளவர் புத்தகத்தை மூடிவிட்டுப் பேச்சில் கலந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன்.உடனே மூடிவிட்டார். ஒருமுறை கடைக்குப் போய் ஐஸ்கிரீம் சாப்பிட நினைத்தேன். சற்று நேரத்தில் நானிருந்த இடத்திற்கே ஐஸ்கிரீம் வந்துவிட்டது.

நண்பர் - இதைப் பலமுறை பார்க்காத அன்பரில்லை. கார் விஷயத்தில் கவனிப்பதைப்போல் மற்ற விஷயத்தில் கவனிப்பதில்லை.

அன்பர் - ஒரு வருஷம் தாமதமானது ஒரு நாளில் நடந்தது எப்படி?

நண்பர் - காலம் கணக்கில்லை. மனமாற்றம் முக்கியம்.

அன்பர் - நான் முயன்று மனம் மாறவில்லையே.

நண்பர் - மாற வேண்டும் என முடிவு செய்ததின் பலனிது.

அன்பர் - மனம் மாறினால் எந்த விஷயமும் இப்படி நடக்குமா?

நண்பர் - மாமியார், மருமகள் விஷயத்தில் இதன் பலன் ஆச்சரியமாகத் தெரியும். மருமகள் மாமியாரைச் சரியாக நடத்தாவிட்டாலும், மாமியார் கொடுமை செய்தாலும், இடர்ப்படுபவர் மனம் மாற முன் வரவேண்டும்.

அன்பர் - எனக்குக் கூறியதே (நானும் என் கணவரும் ஒன்று) அவர்கட்குச் சொன்னால் கொடுமைக்கார மாமியாருக்கும் மருமகளுக்கும் ஒரே மனம் என்றாகும்.

நண்பர் - அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? காரைவிட மாமியார் விஷயம் கடினம். அதை ஒரு மருமகள் செய்தாள். 2 நாள் மாமியார் தங்கமாக இருந்தார். மருமகளுக்குத் தானும் மாமியாரும் ஒன்று என்று நினைக்கவே கசப்பாக இருந்தது. மீண்டும் பழைய நிலை வந்தது.

அன்பர் - நிரந்தரமாக மாறிய மாமியார் தெரியுமா?

நண்பர் - நிரந்தரமாக மாறிய வாயாடி மனைவி தெரியும். மாமியார் தெரியாது.

அன்பர் - பணம் வந்தால் மாமியார், மருமகள் எல்லோரும் மாறுவார்கள்.

நண்பர் - சோதனை செய்தால் தெரியும். எனக்குச் சொந்த அனுபவமில்லை. நிச்சயமாக அன்னையால் மாறிய மாமியார், மருமகள் அநேகம் பேர்.

****

அன்பர் - சண்டை போட்டால் கார் வரும் என்பது என்ன அர்த்தம்?

நண்பர் - கார் என்பது இங்கே நீங்கள் நினைப்பது பூர்த்தியாவது. சண்டை என்பது பிணக்கு. பிணக்கு வெறுப்பால் ஏற்பட்டால் சண்டை பிளவை ஏற்படுத்தும். பிணக்கு பிரியத்தால் ஏற்பட்டால் சண்டை பிரியத்தை வளர்க்கும்.

அன்பர் - பிணக்கால், பிரியம் வளருமா?

நண்பர் - பிரியத்தைவிட புத்தி குறைவாக இருக்கலாம், அதிகமாக இருக்கலாம். புத்தி அதிகமாக இருந்தால் பிரியம் பிணக்காகாது. பிரியத்தைவிட புத்தி குறைவானால் பிணக்கு எழும்.

அன்பர் - எனக்குப் புத்தியில்லை என்கிறீர்களா? என் கணவருக்குப் புத்தி மட்டு என்று கூறுகிறீர்களா?

நண்பர் - புத்தியைவிடப் பிரியம், இலட்சியம் அதிகமாக இருப்பதால் அவை சுமுகமாகச் செயல்பட முடியவில்லை.

அன்பர் - புத்தியில்லாவிட்டால், சண்டை போட்டால் கார் வருமா?

நண்பர் - பிரியமிருப்பதால், பிணக்கும் பிரியத்தை வளர்க்கும்.

அன்பர் - பிணக்கு சிறியது, பிரியம் பெரியது என்பது உண்மை தானே. அதனால் சண்டை எப்படி காரைக் கொண்டு வரும்?

நண்பர் - எதைச் செய்தாலும் வளர்வது அடிப்படை. இங்கு அடிப்படை பிரியம். பிரியமான குடும்பத்தில் எது நடந்தாலும் பிரியம் வளரும். பூசலான குடும்பத்தில் எது நடந்தாலும் சண்டையில் முடியும்.

அன்பர் - அது சரி. நாங்கள் சண்டை போட்டால் பிரியம் வளருமா?

நண்பர் - ஆம்.

அன்பர் - அது எங்குப் போய் முடியும்?

நண்பர் - பிரியம் வளர்வது என்பது ஒருவர் மற்றவரை அதிகமாக ஏற்பதாகும். உங்களைக் கணவர் அதிகமாக ஏற்றால் வறட்டு இலட்சியம் பின் வாங்கி, உங்கள் ஆசை பூர்த்தியாகும்.

அன்பர் - அவரது இலட்சியம் வறட்டு இலட்சியமா? ஆமாம். பரிசு என்பது பணமாக வந்தால், ஆதாயத்திற்காக அளிக்கப்பட்டால் வாங்கிக் கொள்ள வேண்டாம். பிரியத்திற்காக என் வீட்டார் அளிப்பதையும் பரிசு என்று கூறுவது சரியாகாதுதான்.

நண்பர் - கார் வரும் என்றாலும் சண்டை போடக் கூடாது.

அன்பர் - மீண்டும் தலைகீழே பேசுகிறீர்களே.

நண்பர் - சண்டை காரைக் கொண்டு வரும் என்ற உண்மையை விட, சண்டையில்லாமலிருப்பது நல்லது என்பது பெரிய உண்மை.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

இல்லாததை நம்புவது மூட நம்பிக்கை. இருப்பதை நம்ப மறுப்பதும், அழிய மறுப்பதை ஏற்க மறுப்பதும் மூட நம்பிக்கை. ஒரு முறை கண்ட அனுபவத்தை முடிவாகக் கொள்ளும் அறிவீனம் ஒன்று; எதிர்காலத்தை ஏற்க மறுக்கும் அறிவீனம் அடுத்தது.

 இல்லாததை நம்புவதும், இருப்பதை நம்ப மறுப்பதும் மூடநம்பிக்கை.

**** 

Comments

அன்பரும் - நண்பரும் para 3

அன்பரும் - நண்பரும்

para 3 -Attitudeநோக்கம் - Attitude நோக்கம்

para 4, line 4 - நாளிலி ருந்து - நாளிலிருந்து

para 33, line 6 -T.Vநாடகம் - T.V நாடகம்  

  do. 47, - silent will- : - silent will - 

  do. 48 - silent willபுரியவில்லை. - silent will புரியவில்லை.

para 52 - நண்பர் - மாற வேண்டும் என முடிவு செய்ததின் பலனிது. from அன்பர் - மனம் to நடக்குமா? - to be separated.

from நண்பர் - மாமியார், மருமகள் to முன் வரவேண்டும். - to be separated.

 

 



book | by Dr. Radut