Skip to Content

11.புலன்களுக்குப் புலப்படாதது

"அன்னை இலக்கியம்"

புலன்களுக்குப் புலப்படாதது

(சென்ற இதழின் தொடர்ச்சி)

இல. சுந்தரி

பாட்டி உன்னிடம் பேசினார்களா? என்று கேட்டாள் மீரா.

உடனே அவள் கேட்ட கேள்வி இவளை அதிரச் செய்தது. ஏன் உங்களிடம் பாட்டி பேசுவதில்லையா? என்றாள்.

குழந்தையின் நம்பிக்கையை கலைக்காதே என்று உள்ளுணர்வு எச்சரித்தது.

பேசுவாங்களே என்று சமாளித்துக் கொண்டு நானும் இரண்டு கேள்விகள் இப்போ தரப்போகிறேன். அதற்கும் நீ சரியான விடையெழுத வேண்டும் என்றாள்.

உம் கேள்வியைச் சொல்லுங்கள் என்றாள் பெருமிதமாக.

இன்றைக்கு நேரமாகிவிட்டது. எனக்குத் தூக்கம் வருகிறது. நாளை நல்ல கேள்வியாகச் ‘செலக்ட்’ செய்து வருகிறேன். இப்போது சாப்பிட்டுத் தூங்கலாம் வா என்றாள்.

வெளியேயிருந்த ராமையாவுக்கு இந்த உரையாடல் ஒன்றும் தெரியாது.

மறுநாள் அமிர்தாவுக்குத் தெரியாமல் அவள் பள்ளிக் கூடத்திற்குப் போய், அவள் தலைமையாசிரியரிடம் அமிர்தாவின் படிப்பைப் பற்றி விசாரித்தாள்.

மிகவும் நல்ல பெண். படிப்பிலும் சுட்டி. நேற்று G.K.யில் அவள் தான் கிளாஸ் பர்ஸ்ட் என்று ஒரே கைதட்டல். அவள் மிஸ்ஸைப் பார்த்துவிட்டுப் போங்கள் என்று மலர்ச்சியுடன் கூறிய தலைமையாசிரியர், பியூனை அழைத்து, மேரி மிஸ்ஸைக் கூப்பிடு. அமிர்தாவின் ஆன்ட்டி வந்திருக்காங்கன்னு சொல் என்றார்.

ஆசிரியர்கள் அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த மேரியிடம் இவளை அழைத்துப் போனான் பியூன். இவளைக் கண்ட மேரி மிஸ், மலர்ந்து சிரித்தாள். “வாங்க மிஸ் மீரா. உங்க பெண் படுசுட்டி. எந்த ஒர்க் கொடுத்தாலும் அழகாகச் செய்து வருகிறாள். நானே உங்களைப் பார்த்துப் பாராட்ட நினைத்தேன்” என்றாள். "தாயில்லாப் பெண். அதனால் அவளிடம் சற்று கவனமாக இருக்கவேண்டும். அதுதான் பார்த்துப் போக வந்தேன்” என்று கூறி வந்துவிட்டாள்.

அன்றிரவு இவள் வீட்டிற்கு வந்ததும் மறவாமல் அமிர்தாவே இவளிடம் வந்து, ஆன்ட்டி இரண்டு கேள்விகள் தருவதாய்ச் சொன்னீர்களே? என்று கேட்டாள்.

! அதுவா? என்று கூறி ஒரு தாளை எடுத்து அதில் இரண்டு கேள்விகளை எழுதிக் கொடுத்தாள்.

சாவித்ரி என்ற காவியத்தை எழுதியவர் யார்?

அவருடன் யோகம் செய்தவர் யார்?

குழந்தை சிறிதும் தயங்காமல் டேபிள் மீதுள்ள தாளைப் பார்த்துப் படிக்கிறாள். பிறகு நிமிர்ந்து ஸ்ரீ அன்னையைப் பார்க்கிறாள். பிறகு எழுதுகிறாள். இப்படியே சில நிமிடங்கள் சென்றதும், ஆன்ட்டி சரியா என்று பாருங்கள் என்று தாளை எடுத்து வருகிறாள்.

அதில் ஸ்ரீ அரவிந்தர்,

ஸ்ரீ அன்னை,

என்ற விடையைப் படித்து அதிர்ந்து போனாள்.

 தொடரும்...

****

 

Comments

புலன்களுக்குப் புலப்படாதது

புலன்களுக்குப் புலப்படாதது

para 6, line 2 -கேள்வியாகச‘செலக்ட்’  - கேள்வியாகச் ‘செலக்ட்’

 



book | by Dr. Radut