Skip to Content

09.அன்பர் கடிதம்

"அன்பர் கடிதம்"

அன்னையின் அருளமுதம்

       நான் எழுதும் அனுபவங்கள் அனைத்தையும் முதலில் என் அன்னைக்கு, அருளின் வடிவத்திற்கு, கருணையின் உருவத்திற்கு, சாந்தத்தின் சொரூபத்திற்கு, அன்பின் சாகரத்திற்கு சமர்ப்பணம் செய்து அன்னையின் அருளையும், அவர்கள் எங்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களையும் அன்னையின் பாதாரவிந்தங்களில் சரணடைந்து அவர்களின் பேரருள் வேண்டி எழுதுகிறேன். இப்படியொரு சந்தர்ப்பத்தை எனக்களித்த அன்னைக்கு என் கோடானுகோடி நன்றிகளைக் காணிக்கை ஆக்குகிறேன்.

       எங்களுக்குத் திருமணமாகி 10 மாதங்கள் ஆகியது. குழந்தைப்பேறு வேண்டுமென்று மனமுருகி அன்னையிடம் பிரார்த்தனை செய்தோம். அன்னையின் அருளால் நான் கருவுற்றேன். அப்பொழுதே பிறக்கப் போவது ஆண் குழந்தையானால் அரவிந்த் என்றும் பெண் குழந்தையானால் மீரா என்றும் பெயர் வைக்கப் போவதாக அன்னையிடம் வேண்டிக் கொண்டோம். கருவுற்ற 74ஆம் நாள் திடீரென்று threatened abortion ஆனது. எங்களுக்கு அன்னையிடம் பிரார்த்தனை செய்வதைவிட வேறு எவரையும் எந்த உதவியும் கேட்கத் தோன்றவில்லை. நான் மிகவும் மனமுடைந்து அழுதேன். என் கணவருக்கும் ஒன்றும் செய்யத் தோன்றவில்லை. அப்பொழுது அதிகாலை 5.30 மணி இருக்கும் என்று நினைக்கிறேன். நாங்கள் இருக்கும் இடத்தில் மருத்துவர் 3-4 கி.மீ தள்ளி இருக்கிறார். மேலும் கிளினிக் 9 மணிக்கு மேல்தான் திறப்பார்கள் என்று அறிந்தோம். நான் அழுது கொண்டே அன்னையிடம் இந்தக் குழந்தையை நல்லபடி காப்பாற்றிக் கொடுங்கள் தாயே என்று வேண்டிக் கொண்டு அன்னையின் மலரை வயிற்றில் வைத்துக் கொண்டு என் கணவருடன் two wheelerஇல் மருத்துவர் யாரேனும் இருப்பார்களா என்று தேடிக் கொண்டு புறப்பட்டோம். அப்பொழுது காலை 7.00 மணி. நாங்கள் அந்த ஊருக்குப் புதிதாய் வந்தவர்கள், ஆதலால் மருத்துவமனைகள் எங்கெங்கே இருக்கும் என்று தெரியவில்லை. சென்ற ஓரிரு இடங்களிலும் மருத்துவர் 10 மணிக்கு மேல்தான் வருவார்கள் என்று கூறிவிட்டனர். இப்படியே அங்கும் இங்கும் அலைந்து இறுதியில் 10.15 மணியளவில் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் சென்று காண்பித்தோம். அவர்களும் முதலில் scan செய்து பார்த்தபிறகுதான் treatment கொடுக்க முடியும் என்று கூறிவிட்டார்கள். இறுதியில் scan செய்து பார்த்தபின் அன்னையின் அருளால் அது சிறிய பாதிப்பு என்றும் இருந்தாலும் 6 மாதங்கள் ஆகும் வரை complete bed restஇல் இருக்க வேண்டும் என்றும் கூறி மருந்துகள் கொடுத்து injection போட்டு அனுப்பினார். அந்த மருத்துவரின் உருவத்தில் நான் அன்னையைத்தான் பார்த்தேன். இப்படியாக 8 மாதங்கள் நல்லபடியாக போனபின் ஒரு நாள் நடந்து போகும் போது தவறி விழுந்து அடிபட்டு கை, கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டும் வயிற்றில் அடிபடாமல் என் அன்னைதான் காப்பாற்றினார். எங்கள் ஊரில் மருத்துவ வசதி அவ்வளவாக இல்லாததாலும், மேலும் எனக்கு 75% சிசேரியன் நடக்கலாம் என்று மருத்துவர் கூறியதாலும் சென்னைக்குச் சென்று பிரசவம் பார்க்கலாம் என்று அன்னையிடம் பிரார்த்தித்தோம். சில குடும்பப் பிரச்சனைகளால் என்னால் என் தாய் வீட்டில் இருக்க முடியாததாலும், மேலும் எங்கள் family doctorஇன் nursing home எங்கள் வீட்டிலிருந்து 1 மணி நேரம் travel செய்ய வேண்டிய distanceஇல் இருந்ததாலும் nursing home க்கு அருகிலேயே வீடு பார்க்கலாம் என்று நினைத்து அன்னையை வேண்டி முயற்சியில் இறங்கினோம். 2 மாதங்கள் என்பதால் சென்னையில் யாரும் இடம் தரமுடியாது என்று கூறிவிட்டனர். இருந்தாலும் நாங்கள் மனம் தளரவில்லை. அன்னையால் எதுவும் முடியும் என்பது யாவரும் அறிந்த உண்மை. ஆதலால் நாங்கள் சென்னைக்குச் செல்ல நாள் பார்த்து preparation எல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டோம், அன்னை எங்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில். எங்களின் நம்பிக்கையை நிறைவேற்றி அன்னை உடனே ஒரு வீடு, அதுவும் nursing homeக்கு அருகிலேயே அமைத்துக் கொடுத்தார். இதை எழுதும்போது ஆனந்தத்தில் என் மனம் நெகிழ்ந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது. என் தாயின் கருணையை விவரிக்க இந்த ஜென்மம் போதாது, அதற்கு வார்த்தைகளும் போதாது. அன்னை கருணையின் கடல். ஒரு சிறிய கரப்பான் பூச்சியைப் பார்த்தாலே பயப்படும் எனக்கு சிசேரியன் என்ற போது ஒரு சிறு பயமோ, கலக்கமோ ஏற்படவில்லை. காரணம் அன்னை என்னையும் என் குழந்தையையும் காப்பாற்றுவார்கள் என்ற அபரிமிதமான நம்பிக்கை. மேலும் மருத்துவர் மற்றும் nurseகளின் உருவத்தில் நான் அன்னையைத்தான் பார்த்தேன். 9ஆம் மாத முடிவில் scan செய்து பார்த்தபோது கொடி சுற்றிக் கொண்டிருப்பதால் 90% சிசேரியன் என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது. திடீரென்று ஒரு நாள் மூச்சு விட மிகவும் கஷ்டப்பட்டு மருத்துவரிடம் சென்றபோது உடனே சிசேரியன் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் anesthetist வராததால் மேலும் ஒரு நாள் அவர்களின் observationஇல் வைத்துக் கொண்டிருந்துவிட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு operation செய்ய ஏற்பாடு செய்துவிட்டார்கள். நான் operation theatrக்கு செல்வதற்கு 10 நிமிடம் முன்பு என் கணவர் நாங்கள் வைத்திருந்த முகம் பார்க்கும் கண்ணாடியை கைதவறி சுக்கு நூறாக உடைத்துவிட்டார். என் தாயாருக்கோ மிகவும் வருத்தம், பயம் எல்லாம். என் கணவரோ மனம் வருந்தி உடனே வெளியில் சென்றுவிட்டார். நானோ சிறிதும் கவலைப்படவில்லை. ஏனென்றால் காலை எழுந்ததிலிருந்தே நான் centreல் தினமும் எழுதும் messageஐ படித்துக் கொண்டிருந்தேன். கண்ணாடி உடையும் முன்பு நான் படித்த வாசகம்

“Difficulties come alwys to make us progress;

The greater the difficulty, the greater can be the progress;

Be confident and endure;

The hours preceding victory are most often the most difficult.”

அதனால் நான் சிறிது கூட பதட்டப்படாமல் அன்னையின் மலரை எடுத்துக்கொண்டு operation theatre சென்றுவிட்டேன். அன்னையின் அருளால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. நானும் மிகவும் சீக்கிரமே recover ஆகி Chennaiஇல் இருந்து குழந்தையுடன் எங்கள் ஊருக்கு வந்துவிட்டேன். குழந்தைக்கு அரவிந்த் என்று பெயர் வைத்து இருக்கிறோம். Operation செய்திருப்பதால் 6 மாதங்கள் அதிக கஷ்டமான வேலைகளைச் செய்யக்கூடாது என்பதால் என்ன செய்யப்போகிறோம் என்று கவலைப்பட்டோம். ஏனென்றால் இங்கு எனக்கு உதவி செய்ய வேறு யாரும் இல்லை. நானும், என் கணவரும், என் குழந்தையும் மட்டும் தான் இருக்கிறோம். Operation முடிந்து 45 நாட்களே ஆன நிலையில் அன்னை இருக்கிறார் என்ற தைரியத்தில் கைக்குழந்தையுடன் எங்கள் ஊருக்கு வந்துவிட்டேன். அன்னை மறுநாளே ஒரு மிக நல்ல அம்மையாரை எனக்குத் துணையாக அழைத்து வந்தார். நாங்கள் அடைந்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. எங்கள் குழந்தைக்கு 6 மாதம் ஆகும்வரை எங்கள் வீட்டில் இருந்தார். அவரை நாங்கள் அன்னையாகவே கருதினோம். கருதுகிறோம். மேலும் ஓர் அற்புதம் பற்றி எழுதுகிறேன். Scanஇல் கொடி சுற்றியுள்ளது என்று தெரிந்த பின் என் தாயார் மிகவும் பயந்தார்கள். குழந்தை பிறந்தவுடன் மாமா இருவரும் எப்படி உடனே குழந்தையை வந்து பார்ப்பது? என்று வேதனைப்பட்டார்கள். ஆனால் அன்னையின் அருளால் குழந்தை கொடி சுற்றாமலேயே பிறந்தது. மாமா இருவரும் அடைந்த மகிழச்சிக்கு எல்லையே இல்லை. நான் கருவுற்றது முதல் குழந்தை பிறந்தவரை நடந்த, அன்னை எங்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள் அனைத்தையும் மனம் நெகிழ்ந்து எழுதி இருக்கிறேன். இவை அனைத்தும் வெளிப்படுத்தும் உண்மை என்னவென்றால் அன்னையிடம் பூரண நம்பிக்கை வைத்து நம் குறைகளை, நம் தேவைகளை, நம் பிரச்சினைகளை மறைக்காமல் சொல்லி முழு மனத்துடன் சமர்ப்பணம் செய்து பிரார்த்தனை செய்தால் கண்டிப்பாக அன்னை எல்லாத் தடைகளையும் தகர்த்தெறிந்து நம் பிரச்சினைகளைத் தீர்த்து நம் பிரார்த்தனையை நிறைவேற்றி வைப்பார். ஆகவே எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மனம் தளராமல் அன்னை நமக்கு நல்லதே செய்வார் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் நமக்கு வெற்றி நிச்சயம். என்னுடைய அனுபவங்களை, அன்னை எங்கள் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை எழுத எனக்கு அளித்த இந்த சந்தர்ப்பத்திற்கு மீண்டும் மீண்டும் மனமுருக என் நன்றியை அன்னைக்குக் காணிக்கையாக்குகிறேன். அன்னையின் பேரருள், அன்னையிடம் சரணடையும் எல்லோருக்கும் அள்ள அள்ளக் குறையாத கற்பக விருட்சமாக வளரும் என்று அன்னையிடம் பிரார்த்தித்து என்னுடைய இந்தக் கடிதத்தினை நிறைவு செய்கிறேன்.

 

****

 

 book | by Dr. Radut