Skip to Content

12.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

தம்பி - சூட்சுமம் வளர்கிறதே.

அண்ணன் - நம் நாட்டில் பலர் சமீபத்தில் ஏராளமாகப் பணம் சம்பாதித்துவிட்டார்கள். இவர்கள் எல்லாம் நான் சொன்ன சட்டத்தில் அடிப்படையானவற்றில் சரியானவர்கள். அதாவது உழைப்பு, திறமை, நாணயம், நேர்மை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டில்லாமல் எவரும் சம்பாதிக்க முடியாது.

தம்பி - வாழ்வில் தவறாகச் சம்பாதிக்கலாம், அது நமக்குத் தேவையில்லை.

அண்ணன் - தவறாகச் சம்பாதிக்கவும் திறமை வேண்டும். திறமையில்லாமல் முடியாது. இவர்கட்கெல்லாம் ஸ்தாபனம் - வியாபாரம், தொழில் - அஸ்திவாரமாக இருக்கும். தொழில் அவர்கட்கு கருவி, கருவியில்லாமல் பணம் உற்பத்தியாகாது.

தம்பி - ஆகாயத்திலிருந்து பணம் கொட்டாது அல்லவா?

அண்ணன் - ஸ்தாபனம், தொழில் கருவி, கருவி அவசியம், கருவியேயில்லாமல் முடியாது. வலிமை குறைந்தவனுக்கு கருவி அவசியம். வலிமை அதிகமானவனுக்குக் கருவி அவசியமானாலும், ஓர் அளவுக்கு மேல் கருவி தடையாகும்.

தம்பி - கருவியில்லாமலும் பணம் வருமா?

அண்ணன் - கருவி அவசியம். கருவி மூலம் வரும் பணம் சிறியது. கருவியில்லாமல் வருவது பெரும் பணம். பெரும் பணம் சம்பாதிக்கும் திறமை வந்தபின் அவர்கட்குப் பணத்தில் அக்கறையிருக்காது. இது தத்துவம். நடைமுறையில் பல அம்சங்கள் கலந்திருப்பதால் விவரம் புரியாது. தனியே பிரித்து வாழ்வில் உதாரணம் கூற முடியாது. சுமார் 20 வருஷத்தில் ஒருவர் 100 கோடி வியாபாரம் நடத்துகிறார். இவருக்கு இன்று 40-50 கோடி சொத்திருக்கும். இது போன்றவர் பலர். ஒரு சரக்கு உற்பத்தி செய்து வந்து வியாபாரம் மூலம் இந்தச் சொத்து சேர்ந்துள்ளது. இவர் எளிமையான மனிதர். இந்த வியாபாரமில்லாமல் இவரால் 1000 ரூபாய்கூட சம்பாதிக்க முடியாது. வலிமை - மனவலிமை மிக்கவர் -இதுபோல் சம்பாதித்திருந்தால், அவர் தொழிலைச் சுருக்கிக் கொண்டு சிறிய அளவில் செய்தால், அவர் மனவலிமைக்குக் கருவி தடையாக இருந்தது விலகியவுடன், வருமானம் பெருகும். அநேகமாக 100 ஆண்டாக பாங்குகளை ஆரம்பித்தவர்கள் அப்படிப்பட்டவர்கள். ஸ்தாபனம் சாஸ்திரத்திற்கு கருவி. ஆனால் அவர்கள் சம்பாதித்த பெருஞ்செல்வமெல்லாம் புதிய ideas கருத்துக்களால் என்பது உலகறிந்த விஷயம். இன்ஸுரன்ஸ் முதல் அப்படி ஏற்பட்டதே. பிற்காலத்தில் பெரியதாகிவிட்டது. Stock exchange-உம் இது போன்றதே. இவை நூறாண்டாக உலகில் நடைமுறையிலிருக்கின்றன. நம் நாட்டில் பம்பாயில் மட்டும் இது அதிகம்.

தெளிவும், வலுவும் உள்ள மனிதன் தன் ஸ்தாபனத்தால் சம்பாதிப்பதை விட, தனக்கு மனதில் தோன்றும் புதிய வியாபாரக் கருத்துகள் மூலம் சம்பாதிப்பது ஏராளம்.

அன்பர்கள் அத்துடன் நேர்மையும், நல்லெண்ணமும் சேர்த்துக் கொண்டால் அவர்கள் மன உரம் எந்த அளவு பணமும் தரும்.

மனம் எதையும் சாதிக்கும்.

அன்னை அளவில்லாமல் சாதிப்பார்.

மனத்திண்மை மூலம் அன்னை சாதிப்பது அதிகம்.

சத்தியம், நேர்மையுள்ள மனம் அன்னை மூலம் பொருளை அருளாகப் பெற அதிக வழிகளுண்டு.

தம்பி - பணம் சுலபமாக சம்பாதிக்கலாம் என்றாகிறது.

அண்ணன் - வாழ்வு கடுமையானது. அதில் பரீட்சை பாஸ் செய்வதே சுலபம். வாழ்க்கையில் எழும் பிரச்சினைகள் நமக்குத் தெரியாதவை. அனுபவப்பட்டு, அதாவது நஷ்டப்பட்டு கற்றுக்கொள்ள வேண்டும். பரீட்சையில் வரும் கேள்விகள் எல்லாம் வகுப்பில் கற்றுக் கொடுத்ததே ஆகும்.

வாழ்க்கை தெரியாத கேள்விகளை மட்டும் கேட்கும்.

பரீட்சையில் தெரிந்த பாடத்தில் மட்டும் கேள்வி கேட்பார்கள். அதனால் பரீட்சை பாஸ் செய்வது மற்ற விஷயங்களைவிடச் சுலபம் என்பது பலர் அனுபவம். பரீட்சை பாஸ் செய்ய அறிவு வேண்டும். பணம் சம்பாதிக்க உழைத்தால் போதும். உழைப்பு அறிவை விடச் சிறியது.

அறிவால் பணம் சம்பாதிக்க முனைபவர் அது எளிது எனக் காண்பார்.

அன்னை அன்பரானால் மேலும் அக்காரியம் எளிது.

கெட்டவனாக இருக்க சாமர்த்தியம் வேண்டும். நல்லவனாக இருக்க சாமர்த்தியமும் தேவையில்லை. அதனால் உலகில் மிக எளிமையான காரியம் பணம் திரட்டுவது.

எல்லோரும் சமம்

தம்பி - எல்லா மனிதர்களும் சமம் என்ற கருத்தை ஸ்ரீ அரவிந்தர் விளக்கியுள்ளாரா?

அண்ணன் - ஸ்ரீ அரவிந்தர் நேரடியாக விளக்கியதாக எனக்கு ஞாபகமில்லை. நாம் காணும் ஏற்றத்தாழ்வு உண்மை. சமம் என்பதும் உண்மை. இரண்டும் எப்படிச் சரி என விளக்க முடியும்.

தம்பி - ஜனநாயகத்தில் எல்லோர்க்கும் சம உரிமையுண்டு. சாதனையில் ஏற்றத்தாழ்வுள்ளது. அதுபோலவா?

அண்ணன் - நான் கூறுவது சற்று மாறியது. ஒருவர் 100 காணி நிலம் வைத்திருக்கிறார் அடுத்தவர் 12 வீடு உடையவர். மற்றவர் இதே வருமானத்தைத் தொழிலில் பெறுகிறார் எனில் அனைவரும் சமம் என்று கூறலாமல்லவா?

தம்பி - கிராமத்தில் மற்றவர்கட்கு மரியாதையிருக்காது. ஹைகோர்ட்டில் கிராமத்து மிராசுதாரரைச் சட்டை செய்பவரில்லை. பெரிய வக்கீலுக்கு மரியாதை. ஆனால் இந்த 3 பேருக்கும் ஒரு விஷயத்தில் சமமான இடம் உண்டு.

அண்ணன் - சமூகத்தில் பணத்திற்கு மரியாதையுண்டு. படிப்பிற்கில்லை. ஆன்மீகக் கண்ணோட்டத்தில் எல்லா ஆன்மாவும் சமம். சமமான முயற்சியை வெவ்வேறு துறைகளில் எடுக்கிறார்கள். பிறப்பில் ஆன்மாக்கள் சமம். முயற்சியில் சமம். பலனில் சமம். தோற்றத்தில் சமமில்லை.

தம்பி - அதனால்தான் ஒருவர் மற்றவர் பெற்றதை முயன்றால் பெறலாம் என்று கூறுகிறீர்களோ?

அண்ணன் - அடிப்படையில் சமமான இரு ஆன்மாக்கள் தோற்றத்தில் வேறுபட்டால் தோற்றத்திலும் சமமாகலாம். டவுனில் உள்ள 12 வீட்டை விற்று கிராமத்தில் 100 காணி நிலம் வாங்கினால் கிராமத்தில் தோற்றம் சரியாகிவிடாதா? நம்மை ஒத்தவர்கள் சாதித்ததை நாமும் சாதிக்க விரும்பினால், முயற்சி பலன் தரும்.

தம்பி - என் நண்பன் IAS பாஸ் செய்து கவர்னராக ரிடையராகியிருக்கிறான். நான் உள்ளூரில் ஓட்டல் நடத்துகிறேன் எனில் எப்படிச் சமமாக முடியும்?

அண்ணன் - முயன்றால் முடியும். அரசியல் மூலம் அது நடைபெறும். எதுவும் முடியும் என்பது பூரண யோகச் சித்தாந்தம். அதற்காக அப்படியெல்லாம் சோதனை செய்ய வேண்டும் என்று அர்த்தமன்று. கணவனுடைய தவப்பலன் மனைவிக்குண்டு என்பது அதுபோல் அல்லவா?

தம்பி - தவம் செய்யும் கணவன் தவத்தைவிட மனைவியை அதிகமாக நினைப்பதால் அவளுக்கு பலன் போய் சேருகிறது. திருமணமானவன் மனைவியை நினைக்கிறான். பிரம்மச்சாரி சக்தியை வழிபடுகிறான். இரண்டும் சமம்.

உலகம் புதிய கருத்தை ஏற்பது

தம்பி - ஸ்ரீ அரவிந்தர் 80 ஆண்டுகட்கு முன் எழுதியதை உலகம் இன்றுவரை அறியவில்லை.

அண்ணன் - உலகம் சுலபத்தில் எதையும் ஏற்காது. ஏற்றுப் பலன் பெற்றதையும் ஏற்றதாகச் சுலபமாகச் சொல்லாது. எதிரி ஏற்பது அதனினும் கடினம்.

தம்பி - ஏசுவைக் கொலை செய்ததற்காக யூதர்களை மன்னித்து போப் 2000 வருஷம் கழித்து அறிக்கை விட்டார்.

அண்ணன் - பெர்ன் சுவரை இடிக்க முனைந்தவர் கோர்பசாவ். அது 10 ஆண்டாயிற்று. இப்பொழுதுதான் அவருக்கு பெர்ன் விருது அளித்துள்ளது. சாவித்திரியின் பெருமையை இங்கிலாந்து ஏற்குமா?

தம்பி - நந்தனாரைச் சிதம்பரம் தீஷிதர்கள் இன்றுவரை ஏற்கவில்லையே! கிருஷ்ணன் பிறந்த குலம் என்பதால் இடையர் குலம் உயர்ந்ததாயிற்றா? புரட்சி பலன் தரலாம். அக்கருத்துகளை முழுவதும் ஏற்பது எளிதன்று. அதுவும் எதிரி 1000 ஆண்டுகள் பொறுத்திருப்பான். முடிவாக ஏற்பான் எனக் கூறமுடியாது. பக்தர்கள் அன்னையை ஏற்றபின் பழைய சாங்கியங்களை சுலபமாக விடுவதில்லை என்பதில் எந்த ஆச்சர்யமுமில்லை.

அண்ணன் - மாற்றம் சிரமம். முழு மாற்றம் காண்பது அரிது. நாம் தேடுவது உருமாற்றம். மேலும் திருவுருமாற்றம் காண்பது அரிது. ஐன்ஸ்டீன் பெரிய formulaசூத்திரத்தைக் கண்டுபிடித்தார். உலகம் ஏற்காது என்பதால் சூத்திரத்திற்கு எதிரானதைச் சூத்திரத்துடன் சேர்த்து எழுதினார். நாளான பின் உலகம் ஏற்றது. ஐன்ஸ்டீன் சூத்திரத்தை மாற்றிவிட்டார். உலகம் சுலபமாக ஏற்காது. உலகம் ஏற்க வேண்டுமென நாம் எதிர்பார்ப்பது அவசியமில்லை.

பிரம்மரிஷி

தம்பி - ஐன்ஸ்டீனை பிரம்மரிஷி என்று கூறலாமா?

அண்ணன் - ரிஷிகள் மேலிருந்து கூறியதை ஐன்ஸ்டீன் கீழிருந்து கண்டுபிடித்தார். கம்பன் இராமாயணம் எழுதினார். நாம் அதைப் படித்துப் புரிந்து கொள்கிறோம். கம்பனும், நாமும் இராமாயணத்தில் சந்திப்பதைப்போல் ரிஷிகளும் ஐன்ஸ்டீனும் ஞானத்தில் சந்திக்கின்றனர்.

தம்பி - நீங்கள் சொன்ன புத்தகத்தில் சீனுவாச இராமானுஜம் இதுவரைப் பிறந்த கணித நிபுணர்களில் முதன்மையானவர் என்று கூறுகிறது.

அண்ணன் - ராமானுஜம் படுக்கையாக இருந்தார். ஹார்டி என்ற பேராசிரியர் அவரைப் பார்க்க வந்தார். 6 theoremகளை இராமானுஜம் அவரிடம் கூறினார். ஹார்டிக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு theorem எழுத ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதன் முடிவாக வெளி எழுவதே theorem . எப்படி தலையிலிருந்து theorem வருகிறது என ஹார்டி ஆச்சரியப்பட்டார்.

தம்பி - எப்படி ராமானுஜம் சொன்னார்?

அண்ணன் - நாமெல்லாம் ஒருவர் பாடுவதைக் கேட்டுப் பாடுகிறோம். தானே உள்ளிருந்து சிலருக்குப் பாடல் எப்படி எழுகிறதோ, அதே போல் theorem எழுகிறது. Theorem என்பது ஜடப்பொருளைப் பற்றிய உண்மை. அதையே formula என்கிறோம். 6" நீளம் 3" அகலமுள்ள நீண்ட சதுரத்தின் பரப்பை 6x3 = 18 சதுர அங்குலம் என்கிறோம். நீண்ட சதுரத்தை சதுர அங்குலங்களாகப் பிரித்தால் நீளத்தில் 6 சதுர அங்குலங்களும், அகலத்தில் 3உம் இருக்கும். எண்ணிப் பார்த்தால் 18 இருக்கும். நாம் எண்ணிப் பார்த்து அறிவதை சூத்திரம் தெரிந்தவன் 6x3 = 18 என்பான். அது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். உள்ளிருந்து பாடல் எழுவதுபோல் ஞானமுள்ளவனுக்கு பார்த்தவுடன் 18 தெரியும். அது ஞானம். இராமானுஜம் அதேபோல் பெரிய சூத்திரங்களை அறிகிறார். உலகத்து சரித்திரம் சூட்சும உலகிலிருக்கிறது என்கிறார் அன்னை. அங்குப் போனால் சரித்திரம் முழுவதும் தெரியும். Mantra of Life வாழ்வின் மந்திரத்தை அன்னை அது போல் கண்டார். மனம் தியானத்தால் மேலே போகும். ஞானம் மேலேயிருக்கிறது. மனமும் ஞானமும் சந்தித்தால் சூத்திரம் எழும். முதிர்ந்த ஞானமுடையவனுக்கு இயல்பாகத் தெரிவது மாணவனாக இருப்பவனுக்கு கணக்குப் போட்டு, ஆராய்ச்சி செய்து அறிய வேண்டியிருக்கிறது. இராமானுஜத்தின் முன் பேராசிரியர்கள் மாணவர்கள் போலிருக்கிறார்கள். இது இந்தியாவின் பெருமை. நாம் இதை இன்றுவரை அறியவில்லை.

தொடரும்...

**** 

 

 

 

 book | by Dr. Radut