Skip to Content

11.எது நியாயம்

 “அன்னை இலக்கியம்”

எது நியாயம் (செப்டம்பர் இதழ் தொடர்ச்சி...) 

இல. சுந்தரி 

        “ஐயய்யே, என்னங்க இதைப் போய் இவ்வளவு பெரிசுபடுத்துகிறீர்கள். பெத்த மனம் துன்பப்படுது. உங்க மேல உள்ள பாசத்தால வருகிற கோபம் அது. வெளிப்படும் விதம்தான் கோபமே தவிர, அதன் ஆரம்பம் உங்கமேலே உள்ள அன்புதான். எனக்கு அது புரியுது. அதனால அவங்க மேல எனக்குக் கோபம் வரலங்க. அனுதாபந்தானிருக்கு. உங்க தங்கமான மனசு ஊருக்கு ஒதவுறீங்க. அதைத் தடுக்க எனக்கு மனசில்ல” என்றாள்.

       “உண்மையில் நீதான் என் பலம்னு நெனக்கிறேன் கண்ணம்மா” என்றான்.

       “அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. என்னைக் கல்யாணம் பண்றதுக்கு முன்னாலேயும் நீங்க இப்படித்தான் இருந்தீங்க” என்றாள்.

       “அப்போ பலமில்லாமல் இருந்தேன். இப்போ பலமா இருக்கேன். உன் ஆதரவுதான் என் பலம்” என்றான்.

       “அதுதானே என் தர்மம்?” என்றாள்.

       இவ்வாறு காலம் செல்லும்போது இரண்டு ஆண் மக்களுக்குப் பெற்றோராயினர். இவள் பிரசவம், குழந்தைகளின் காய்ச்சல் யாவும் அவன் அம்மாவின் துணையால் கணவனின் பொதுத் தொண்டு நேரத்தில் நடைபெற்றன. இப்படி வயசான காலத்தில் தனியா கஷ்டப்படணும்னு என் தலையெழுத்து. இவனுக்கு ஆசையா கல்யாணம் கட்டி வெச்சேன். பொண்டாட்டி புள்ளங்க சுகத்தைப் பாக்காம ஊருக்கு நல்லது செய்யப்போறான் என்று புலம்பினாள் வள்ளியம்மை.

      கவலப்படாதீங்க அத்தை உங்க பேரங்க உங்களை வயசான காலத்துல தாங்குவாங்க என்பாள் கண்ணம்மா. சிறுவயது முதலே அவர்களைப் பாட்டியின் மீது அன்புடனும் மரியாதையுடனும் நடக்கப் பழக்கிவிட்டாள். எந்நேரமும் குழந்தைகள் பாட்டியின் பரிவில் மகிழ்ந்தனர்.

       வேலையில் அவன் காட்டிய நேர்மை, கடும் உழைப்பு இவையெல்லாம் அவனை உயர்த்தின. இவன் பொதுத் தொண்டு வலுப்பெற்று அது பதவியாக (கட்சித் தலைவர்) உருப்பெறும் நேரத்தில் கண்ணம்மா தடுத்தாள். வாய் பேசாத கண்ணம்மா வாய் திறந்தது வியப்பளித்தது.

       என்ன கண்ணம்மா? நான் தருமத்திற்குத் துணை போவதால் என்னால் எத்தனையோ தொல்லைகளைப் பொறுத்துக் கொண்டாய் இப்போ ஏன் தடுக்கிறாய்? என்றான்.

       நீங்கள் சுயமா செய்தது தர்மம். பதவியில வந்தா உங்க சுயரூபம் இழக்க நேரிடும். பெரிய பெரிய மகான்களெல்லாம் பதவி வகிக்கில அதனாலதான் தடுக்கிறேன் என்றாள்.

       சரி கண்ணம்மா. நீதான் என் குரு. எனக்குப் பதவியில பிடிப்பில்ல. நீ சொன்னா எதுவும் சரியாத்தானிருக்கும் என்று மறுத்துவிட்டான். எல்லோரும் வியந்தனர்.

       எங்கே தப்பு நடந்தாலும் தட்டிக் கேட்டான். அதனால் நீதி ஒன்றும் நிலை நாட்டப்படவில்லை. எங்கும் ஊழலும், லஞ்சமும் நடமாடிக் கொண்டுதான் இருந்தது. மனம் வெறித்தான். பொதுத்தொண்டு செய்து பேர் வாங்குவது இவன் நோக்கமன்று, நியாயத்திற்குத் துணைபோகும் குணத்தால் இவன் எதிர்த்துப் போராடுவதைக் கண்ட ஆதரவற்றவர் இவன் துணை வேண்டிய போது உதவினான். அதுவே அவனைத் தொற்றிக் கொண்டது. அநியாயங்களை அக்கிரமங்களைக் கண்டு அலுத்துவிட்டது.

       வாழ்க்கை என நாமறிந்ததில் தவறாது வெற்றி பெறுவது நல்லெண்ணமில்லை, நியாயமில்லை, தைரியமில்லை; பணமில்லை; சட்டமில்லை. ஜெயிப்பது பலம். எவனுக்குப் பலமிருக்கிறதோ அந்த நேரம் அவன் ஜெயிப்பான்.

       அன்னை சக்தி வாழ்வில் நமக்குப் பலனளிக்கிறது. அதே நேரம் பலசாலியைத் தடுக்கவல்லது. நம் நியாயத்திற்குப் பலன் தரவல்லது.

                                                                                                                                  (பேரொளியாகும் உள்ளொளி)

       அலுவலகம் முடிந்து வரும் வழியில் ஒரு குடிகாரன் ஒரு பெண்ணை அடிக்க முயல்வதும், அவள் அழுது விலகுவதும் கண்டு பொறுக்காமல் குடிகாரனைப் பிடித்து நிறுத்தி அடிக்கப் போனான். அந்தப் பெண் ஓடி வந்து இவன் காலில் விழுந்து, அதை ஒண்ணும் செஞ்சிடாதீங்க. அது எம் புருசன். குடிச்சாத்தான் இப்பிடி. மத்தபடி அது ரொம்ப நல்ல ஆளு என்று கெஞ்சினாள்.

       வெறுப்புடன் திரும்பினான்.

       பணம் குறைத்துக் கொடுத்ததற்காக கூலியாள் கெஞ்சினான். பெரிய மனிதன் போலிருந்தவன் கூலிக்காரனை பிச்சைக்காரனை விரட்டுவதுபோல் விரட்டினான். இவன் அங்கே சென்று ஏன்யா, பார்க்க வெள்ளையும் சள்ளையுமா பெரிய மனுஷன் போலிருக்கே இந்த ஏழையை ஏன் ஏமாத்துறே? என்றான். அவன் ஒரு பெருந்தொகையை ஏழையிடம் கொடுத்துவிட்டு நான் ஏன் விரட்டினேனென்று உனக்குத் தெரியுமா? ரொம்ப நல்லவன்போல்  தலையிட்டாயே. அவனை இப்போது என்னை சபிக்கச் சொல் பார்க்கலாம் என்றான் ஏளனமாக. கூலிக்காரன் பெரிய மனிதனைப் பார்த்து நீ நல்லாயிருக்கனும் சாமி. உன் நல்ல மனசு தெரியாம நாந்தான் பேசிட்டேன். நீ ஏஞ்சாமி குறுக்க வந்து மவராசனை சண்டைக்கிழுக்கிற? என்றான். சற்று முன்வரை கெஞ்சிக் கொண்டிருந்தவன் பணத்தைக் கண்டதும் தான் நியாயம் கேட்கப்போய் கிடைத்தது என்பதையே அலட்சியப்படுத்தி இவனை ஒதுக்கியது கண்டு சலிப்புற்றான். என்ன மனிதர்கள் இவர்கள்!

       இந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே இவனை மாற்றிவிட்டன. இனி எவர் விஷயத்திலும் தலையிடுவதில்லை என்று ஒதுங்க ஆரம்பித்தான். கணவன் ஏதோ சோர்வாய் இருப்பதைக் கண்டாள் கண்ணம்மா.

       கண்ணம்மா, நீ சொல்லுவியே எதையும் மேலோட்டமா பாத்து முடிவு செய்யக்கூடாதுன்னு, அது சரின்னு தோணுது. சமூகத்தில் எப்படியோ எங்கோ தீமை புரையோடிவிட்டது. அதைத் தீர்க்க இந்தச் சாதாரண குமரன் பொருத்தமில்லை என்றான். அவன் சூனியமாய் உணர ஆரம்பித்தான். கண்ணம்மா இவனைத் தேற்றத் தொடங்கினாள்.

       சிறுவயது முதலே எங்கே தவறு நடந்தாலும் பொறுக்காமல் தட்டிக் கேட்பேன். அது குறித்து எனக்கு ஒரு கர்வமோ, பெருமிதமோ கிடையாது. ஆனால் தவறு செய்பவர் தம் தவற்றை நியாயப்படுத்த மேலும் ஒரு தவறு செய்து பாதிக்கப்பட்டவனும் அதை ஏற்கும்போது எத்தனை கொடுமை அது என்றான்.

       வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஓர் அனுபவம். அது ஒரு பாடம். அதன் மூலம் மேலும் ஒருபடி முன்னேறிவிடவேண்டும் என்று கண்ணம்மா ஆறுதலாகக் கூறினாள்.

       வேலை முடிந்து குறித்த நேரம் வீடு திரும்பத் தொடங்கி விட்டான். ஆனால் மனதில் ஒரு வெறுமை. ஏதோவொரு பெரியதை நோக்கிச் செல்லவேண்டும் என்று அடிக்கடி தோன்றுகிறது. அதற்கு முதலில் தன்னைத் தயாரித்துக் கொள்ள வேண்டும் என்றும் தோன்றுகிறது.

       கண்ணம்மா, உனக்கு இரண்டு பிள்ளைகள் போதுமல்லவா என்றான்.

       சீச்சி. இது என்ன கேள்வி. எனக்கு மட்டுமல்ல. நாடே இன்று, நாமிருவர் நமக்கிருவர் என்றல்லவா பேசுகிறது என்றாள்.

       நான் அரசாங்கம் அமல்படுத்தும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைக் கேட்கவில்லை. உன் விருப்பத்தைக் கேட்கிறேன் என்றான்.

       குழந்தை பெற்றுக் கொள்வதே வாழ்வின் லட்சியமல்ல. நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்கள்தான் இல்வாழ்வில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் இல்லை. சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களுக்குத்தான் அரசின் திட்டம். வாழ்வின் செயல்கள் ஒவ்வொன்றிலும் ஒரு புனிதம் வேண்டும் என்றாள்.

       அதெல்லாமிருக்கட்டும். உனக்குப் பெண் குழந்தையில்லையே. ஒரு வேளை மூன்றாவது பெண்ணாக இருக்கலாம் என்று ஏதேனும் ஆசையில்லையா?

       இல்லைங்க ஆணா, பெண்ணோ பெற்ற குழந்தைகளின் பெருமைக்குரிய பெற்றோராய் இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை.

       அவ்வாறெனில் நான் மேற்கொள்ளப் போகும் பிரம்மச்சரியத்திற்கு நீ தடையாக இருக்கமாட்டாயல்லவா?

       நிச்சயம் இருக்க மாட்டேன். நீங்கள் மேல் நோக்கிச் செல்லும் போதெல்லாம் நீங்கள் ஏறும் படியாக நானிருப்பேன் என்றாள்.

... தொடரும்

  

புதிய வெளியீடுகள்

 

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

கர்மயோகி

ரூ.100.00

சமூகம் -அதிர்ஷ்ட சாகரம்

கர்மயோகி

ரூ.20.00

சிறியதும் பெரியதும்

கர்மயோகி

ரூ.20.00

Sri Aravindam (English)

கர்மயோகி

ரூ. 40.00

ஸ்ரீ அரவிந்தம் -தத்துவம்

கர்மயோகி

ரூ. 40.00

சச்சிதானந்தம்

வசந்தா

ரூ. 20.00

 

 

தபால் செலவு தனி

 

 book | by Dr. Radut