Skip to Content

01.யோக வாழ்க்கை விளக்கம் IV

யோக வாழ்க்கை விளக்கம் IV

கர்மயோகி

661) இந்த நான்கு நிலைகளையும் நாம் ஒரு கரணத்திலாவது புரிந்து கொள்ள வேண்டும். இதைச் சமூக வளர்ச்சியில் எளிதில் புரிந்து கொள்ளலாம். அதுவே ஆரம்பத்திற்கு நல்ல முறை.

சமூகத்தில் இந்நிலைகளைப் புரிந்து கொள்வது நல்ல ஆரம்பம்.

பிழைக்க சிரமம் என்பவன் பிழைக்க முடிவது முதல் நிலை.

அதே நிலையில் அதிக வசதி பெறுவது வளர்ச்சி.

நிலையுயர்வது அடுத்த கட்ட வளர்ச்சி.

இந்தக் கட்டத்திற்கில்லாதது என்று நாம் அறியும் அடுத்த கட்டம் பரிணாமத்திற்குரியது.

உதாரணம்:

       சர்க்கார் உத்தியோகம் கிடைக்கவில்லை என்பது முதல் நிலையாகவும், அதில் தொடர்ந்த பிரமோஷன் தடையின்றி வந்து உயர்வதை வளர்ச்சியாகவும், தனது திறமையால் சிறந்து IAS பெறுவது அடுத்த கட்ட வளர்ச்சியாகவும், அவரின் சிறப்பை அறிந்து ஓர் அகில இந்திய ஸ்தாபனம் அவரைத் தலைவராக அழைப்பதைப் பரிணாமம் என்றும் கொண்டு ஒவ்வொரு நிலைக்குரிய விளக்கத்தையும் பார்ப்போம்.

       சர்க்கார் உத்தியோகத்திற்குத் தகுதியுள்ள ஆயிரம் பேரில் கிடைப்பது நூறு பேருக்கு என்றால், (வழி தவறி முயல்பவர்களை விலக்கி) அவர்கள் முயற்சியை சுருக்கமாக சொன்னால்,

1. சர்க்கார் உத்தியோகத்திற்குள்ள தகுதியை அழிக்கும் எந்த செயலையும் விலக்கியவராக இருப்பார்கள்.

2. அதற்குரிய பரீட்சை, நேர்முகத் தேர்வில் முதல் நூறு இடங்களில் வர, கல்லூரிப் படிப்பில் காட்டிய ஆர்வத்தைப் போன்று பதின் மடங்கு காட்டுவார்கள். அத்துடன் பொறுமை, நிதானம் சமயோசிதம், சாதுர்யம், சிறந்த பழக்கம், தைரியம் போன்றவை நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றுத் தரும். இவர் குமாஸ்தாவாகவோ, ஆபீசராகவோ தேர்ந்தெடுக்கப்படுவர்.

       இவர்களுக்குள்ள தகுதியிருந்தும், அதற்குரிய முயற்சியில்லாதவர், முயற்சியிருந்தும் இதர தகுதிகள் - பழக்கம், தைரியம் etc இல்லாதவர் வேலையைப் பெறுவதில்லை. இது முதல் நிலை வெற்றியானாலும், இந்த நிலையிருப்பவர்களுக்கு இவ்வெற்றி பெரிய வெற்றியாகும். இந்த நூறு பேரில் தொடர்ந்து தடையின்றி பிரமோஷன் பெற்று நல்ல பெயருடன் உயர்ந்து வருவது 20, 30 பேருக்கு மேலிருக்காது. அவர்கள் முதல் நிலையில் உள்ள தகுதிக்கு மேல் உயர்வதற்குத் தேவையான முயற்சியையும், புதிய நிலைக்குத் தேவையான நாணயம், கௌரவம், நல்ல பெயரும் எடுக்க வேண்டும், தொடர்ந்தும் பல ஆண்டுகள் அந்நிலை நிலைக்க வேண்டும். இந்த நூறு பேரில் 30 பேர் தொடர்ந்து பிரமோஷன் பெற்றால் IASக்கு வாய்ப்பு ஓரிருவருக்குக் கிடைக்கிறது. அவர்கள் நல்ல பெயர், நாணயம், திறமையில் தலை சிறந்து விளங்குபவராக இருப்பார்கள். அவர்களில் - அது போன்ற 100 பேரில் - மூன்று நான்கு பேர் பிரபலமடைந்து தனியார் துறையில் அல்லது சர்க்காரில் சிறந்த தலைமைப் பதவிக்கு அழைக்கப்படுகின்றனர்.

       எல்லாத் துறைகளிலும் - குடும்பம் நடத்துவது, விவசாயம் செய்வது, வியாபாரம் செய்வது, ஸ்தாபனத்தை நிர்வாகம் செய்வது, எலக்ஷன் நடத்துவது, அன்னையை ஏற்றுக் கொள்வது - இந்த 4 நிலைகளுக்குரிய வித்தியாசத்தை நாம் அறிவது பயன் தரும். அதில் சில உண்மைகளும் விளங்கும்.

போதிய முயற்சியில்லாதவனுக்கு முதல் நிலையே இல்லை.

போதிய முயற்சி தொடர்ந்து இல்லாதவனுக்கு இரண்டாம் நிலை உயர்வு கிடையாது.

முயற்சியுடன், தகுதியிருந்தால்தான் மூன்றாம் நிலையுண்டு.

முயற்சியும், தகுதியுமிருந்து, சிறப்பான சுபாவம் பல இருப்பவரே நான்காம் நிலைக்குரியவர்.

       நாமுள்ள துறையிலும், நமக்குத் தொடர்புள்ள துறைகளிலும் இந்நிலைகளைச் சிந்தனை செய்து, ஆராய்ந்தால், நிலைகளுக்குள்ள வேறுபாடும், அவற்றிற்குள்ள நிபந்தனைகளும் விளங்கும். அந்தத் தெளிவை மற்ற எல்லாத் துறைகளுக்கும், குறிப்பாக அன்னையை ஏற்றுக்கொள்வதிலும் கண்டால் அன்னையை அடுத்த அடுத்த நிலைகளில் எப்படி அடையலாம் என விளங்கும்.

நாம் எந்த நிலைக்குத் தகுதியுள்ளவரானாலும், அன்னையை ஏற்றுக் கொண்டால் ஒரு நிலை உயர்ந்து அடுத்த நிலை பலிக்கும் என்பது அன்னைக்குரிய சிறப்பு.

****

662) சமுதாயம் சட்டத்திற்குட்பட்டது, மனித சுபாவத்தால் கட்டுப்பட்டது, என்பதை அறிவுடைய ஒருவன் புரிந்து கொள்ளலாம். தெளிவில்லாதவன் கண்ணில் இது படுவதில்லை.

மனித சமுதாயம் அதன் தெளிவுடைய முன்னோடிகளால் நடத்தப்படுகிறது என்பதை அறிய அதிக தீட்சண்யம் தேவை. முதல் இரு நிலைகளையும் தத்துவ ஞானி விளக்கலாம். மூன்றாவதை விளக்க ஒரு கவிஞன் தேவை. அவன் யுகதர்மத்தை நாடும் கவிஞனாக இருந்தால் மனித சமுதாயத்தின் இலட்சியக் குறிக்கோள் தனி மனிதனின் அந்தரங்க அபிலாஷைகளை வெளிப்படுத்துவதைக் காணலாம்.

தன்னையறிந்த யோகி தன் ஆன்மாவின் அசைவுகளை அறிவான். அதைப்போலவே மற்ற ஆன்மாக்கள் ஆன்மாவின் தாயாரை நோக்கிப் போவதையும் அறிவான். இதை உலகின் ஆன்மீகப் பரிணாமத் திருஷ்டி என்போம்.

அக்காட்சி ஆசையைத் தொட்டால் ஆர்வமாகிறது. அங்கு ஆரம்பித்து சரணாகதி மூலம் தன்னை பூரணமாக அர்ப்பணிக்கிறது.

மனித சுபாவம் என்ற சட்டத்தால் சமுதாயம் கட்டுப்படாது. ஞானி, கவி, யோகி இதை அறிவார்.

       சமுதாயச் சட்டதிட்டங்களை, அதன் ஸ்தாபனங்களை, கல்வித் திட்டத்தை, பண்பு முறையை, மார்க்கெட் நிலவரத்தைப் பள்ளியிலும் கல்லூரியிலும் விவரமாக விளக்குகிறார்கள். பத்திரிகைகள் மேலும் தெளிவுபடும் விவரங்களை அளிக்கின்றன.

       மார்ட்டின் லூதர் சமுதாயத்தைவிட மேம்பட்டவர். உள்ளொளியால் உலகம் இயங்குகிறது. சட்டத்தை, தோற்றத்தைப் புறக்கணித்து, உள்ளொளியைப் பாராட்டு என்றார். சாக்ரடீஸ் அறிவின் சிறப்பை உலகுக்கு அறிவித்தார். மகாத்மா காந்தி அஹிம்சையைச் செயல்படுத்தினார். டால்ஸ்டாய் மனித இயல்புகள் மனிதனை ஆள்வதை விவரித்தார். இந்த மேதைகள் ஒருவகையில் ஞானிகள், தத்துவம் பேசுபவர்கள், மனித சுபாவத்தின் இரகஸ்யங்களை உலகுக்கு எடுத்து உரைத்து நம் நிலையை நமக்கு விளக்கி வழிகாட்டியவர்கள்.

       சமுதாயம் மேலெழுந்த வகையிலே சட்டத்தின் சக்திக்கும், அடுத்த நிலையிலேயே மனிதனின் அபிலாஷைக்கும் கட்டுப்படுவது போல், மூன்றாம் நிலையில் பூமியின் சுபாவத்திற்கும், மனித சுபாவத்திற்கும் (universal laws of nature and man)கட்டுப்படுவதை ஷேக்ஸ்பியர், ஹோமர், டாண்டே, வால்மீகி, வியாசர், கன்பூஷியஸ், இளங்கோ அடிகள் போன்ற பெருங்கவிகள் கண்டு, அவர்கள் கண்ட காட்சியைக் காவியங்களாக வடித்தவை ஆயிரமாயிரம் ஆண்டு உலகை ஆண்டு வருகின்றன.

       இதுவே சிருஷ்டியின் முடிவல்ல. முடிவான நிலை பேராசிரியருக்கோ, மேதைக்கோ, கவிஞனுக்கோ புலப்படுவதில்லை. அதைக் காண்பவன் யோகி. திரிகாலத் திருஷ்டி மூலம் அவன் உலகத்தை அற்புதமாகக் காண்கிறான். தீயவனான துரியோதனனும், இராவணனும், கம்சனும் யோகியின் பார்வையில் பிரம்மமாகக் காட்சியளிக்கின்றார்கள். அவருக்குத் திருடனுடைய அடி திருவடியாகத் தெரிகிறது. கொலையாளியின் நெஞ்சில் கருணை தெரிகிறது. துரோகம் செய்பவன் இறைவனுடைய கருவி, இறைவனுக்குரிய விஸ்வாசத்தை மனிதரிடம் துரோகமாகக் காண்கின்றான். பூகம்பமும், புயலும், வெடிக்கும் எரிமலையும் துர்அதிர்ஷ்டமல்ல, ஆண்டவனின் அரவணைப்பு அமிர்தமாக இல்லாமல், அனலாக இருக்கும் நிகழ்ச்சிகள். விபசாரியின் தொழில் தீமையானதன்று, சாதாரண ஆன்மாவால் செய்ய முடியாத சேவையை ஏற்றுக்கொண்ட பெரிய ஆன்மாவின் தியாகம், என்று அறிய முடிகிறது.

       திருஷ்டி - காட்சி - ஆன்மாவைத் தொட்டால் தவம் பலிக்கும், மனத்தைத் தீண்டினால் மேதையாகி பெருநூல்களை எழுதுவான். அவன் உணர்வின் உறைவிடமான பிராணனைத் தொட்டால், இறைவன் மீது ஆர்வம் எழுந்து, பக்தியாக உருவாகும். ஆர்வம் தனக்குரிய 9 நிலைகளைக் கடந்து - நம்பிக்கை, வழிபாடு, பணிவு, துதி, அர்ப்பணம், ஆனந்தம், அன்பு, பூரிப்பு, சரணாகதி - ஒன்பதாம் நிலையில் சரணாகதியாகிறது. சரணாகதியை உலகம் அறியும். வைஷ்ணவம் சரணாகதியைப் போற்றுகிறது. கீதைக்குச் சரணாகதியே மூச்சு. அவை மோட்சத்தையடைய சரணாகதியை நாடின. பூவுலகம் இறைவன் வாழும் திருத்தலமாகும். பொன்னொளி வீசும் புண்ணிய பூமியாக மாறுவதற்காக பகவான் சரணாகதியை நாடுகிறார்.

****

663) இந்தப் பெரிய ஆன்மீக அனுபவத்தைச் சமாதி நிலையில் காண்பது ஆன்மீக அனுபவமான காட்சி. அதையே ஒரு சிறு வேலை மூலமாகப் பெறலாம். நடைமுறையில் அவ்வேலை நமக்குக் கட்டுப்பட வேண்டுமானால், பூரணயோகத் திருஷ்டி தேவை.

  1. ஆசை திருஷ்டியால் சரணாகதியைப் பூர்த்தி செய்யும்.
  2. திருஷ்டி தரும் சமாதி; .
  3. பூரண யோகத் திருஷ்டி வாழ்வை யோகமாக்கும்.

       புலன்கள் அவிந்த பின்னரே தியானம், நிஷ்டை, அதன் சிகரமான சமாதி நிலை. தியானத்தின் நிலைகள் பல. விழிப்பான நிலை ‘ஜாக்கிரதா’ எனப்படுவது. புலன் அவிந்து உள்ளே மனம் விழிப்படைந்து நிகழ்ச்சிகள் காட்சிகளாகத் தெரியும் ‘சொப்பன நிலை’. அடுத்தது மனதைக் கடந்த ‘ஷுஷுப்தி’ நிலை. கடைசி கட்டமும், நான்காம் கட்டமுமான ‘துரிய நிலை’. இவற்றிற்கு அடிப்படைப் புலன்கள் செயலிழப்பது. ஆன்மீக அனுபவம் உயர உயர அதைப் பெறும் ‘சமாதி’ நிலையும் உயர வேண்டும். சமாதி நிலையில் பெறுவது சமாதியிருக்கும்வரை தெரியும். சமாதியை விட்டு வெளிவந்து தியானம் கலைந்த பின் சமாதியில் கண்டது தெரியாது. ஏதோ உயர்ந்த ஒன்றைத் தொட்டது போன்ற உணர்வு விவரமில்லாமலிருக்கும். இதுவரை செய்த யோகங்களின் நிலை இது.

       பூரண யோகத்தில் ‘சமாதி’ நிலை என்பதில்லை. சமாதியை unconscious stage தன்னையறியாத நிலை என்பதால் அது பூரணமாக இருக்க முடியாது என்பதால், பூரண யோகம் சமாதியை நாடவில்லை. மற்றும் பூரணயோக முறைகள் எதுவும் சாதகனை சமாதிக்கு அழைத்துச் செல்ல முடியாது. ‘சமாதி’ என்றே பகவான் ஓர் அத்தியாயம் எழுதியுள்ளார். யோகிகள் சமாதி நிலையில் புலன்களை அவித்து ஆன்ம விழிப்பால் பெறும் தெளிவை, புலன்களைத் தூய்மைப்படுத்தி, அவிக்காமல், விழிப்போடு வேலை செய்யும்பொழுது பெற்றால் அதையே நாம் சமாதி எனக் கருதலாம் என்கிறார். சமாதி நிலையில் ஆன்மா மட்டுமே விழித்துள்ளது. புலன்களும், மனமும், உணர்வும், உடலும் தங்களை அறிய முடியாத அளவுக்கு மறந்திருக்கின்றார்கள். அதனால்தான் நிஷ்டையில் உள்ள ரிஷி மேல் செல்லு, புற்று எழுந்தாலும் அவர் அதை அறிவதில்லை. பூரண யோகத்தில் எந்தக் கரணத்தையும் அவிப்பதில்லை. மாறாக எல்லாக் கரணங்களையும் துலக்கி, தூய்மைப்படுத்துவது முறை. புலன்களும், கரணங்கள் தூய்மைப்பட்டதால் அங்கு இருளில்லை. இருள் நிறைந்த கரணம் இடையூறாக இருப்பதால் தபஸ்வி அதை அவிக்கின்றார். இருளில்லாத கரணம் ஒளியால் நிரப்பப்பட்ட பொழுது அதை அவிக்க வேண்டிய அவசியமில்லை. அது இடையூறாக இருக்காது. கரணங்களும் அப்படியே அவிக்கப்படுவதில்லை. துலக்கப்படுகின்றன. சமாதியில் ஆன்மா மட்டும் பெறும் ஞானத்தை பூரணயோகம் ஆன்மாவுக்கும், ஏனைய அனைத்துக் கரணங்களுக்கும் அளிக்கின்றது. அதற்கு, செயல் - கர்மம் - தேவை. செய்யும் செயல் சமர்ப்பணமானால், சமர்ப்பணம் பூர்த்தியானால், பூர்த்தியான நிலையில் எந்த வேலையும், சிறு வேலையானாலும், சமாதி யோகிக்குப் பெற்றுத் தந்த அகக்காட்சியை, திருஷ்டியை vision - பெற்றுத் தரவல்லது. அந்நிலையை எய்தினால் அது பூரணயோக திருஷ்டியாகும். அதைத் திரிகாலத் திருஷ்டி என்பர்.

       திரிகாலத் திருஷ்டி பெற காலத்தைக் கடக்க வேண்டும். Synthesis of Yoga சின்த்தஸிஸ் ஆப் யோகா எனும் யோக நூல் கடைசி அத்தியாயத்தை பகவான் திரிகால திருஷ்டியை விவரிக்கப் பயன்படுத்துகிறார். மனித நிலையை - மனத்தை - மூன்று நிலைகளாகப் பிரிக்கின்றார். முதல் நிலை இன்று நாம் உள்ள நிலை. இது அறியாமை மனம் (mind of ignorance) என்கிறார்.உலகத்து ஞானம் முழுவதும் உள்ளேயுள்ளது என அறிந்தபின், பெருமுயற்சி செய்து புறவழிச் செல்லும் பார்வையை, அகவழிச் செலுத்தி, உள்ளேயுள்ள ஞானத்தை எட்டினால் வெளியில் தேடி கிடைத்த அனைத்தும் உள்ளிருப்பதையும், தேடிக் கிடைக்காதவையும் உள்ளிருப்பதையும் காணலாம். அதை (mind of self forgetful knowledge) தன்னை மறந்த மனம் என்கிறர். இதை எய்தியபின் திருஷ்டி திரிகாலத் திருஷ்டியாகிறது.

       ஞானம் நிறைந்த மனத்தை எட்டி, திரிகாலத் திருஷ்டி பெற ஆரம்பித்தால், சமாதி நிலை விலகிப் போகும். சமாதியில் பெறும் ஞானம் நாம் செய்யும் வேலையில் எழும். அதுவே பூரண யோக திருஷ்டி எனப்படுவதாகும்.

****

664) பெண்மையே ஆண்மையை எல்லா இடங்களிலும் பூர்த்தி செய்கிறது. முதல் நிலையில் அவனது உடலின் அடுத்த பகுதிபிள்ளைப்பேறு அதன் விளைவு. கடைசி நிலையில் அவள் ஈஸ்வரனான மனிதனுக்கு சக்தி.

பிள்ளைப் பேற்றிலிருந்து பெண்மை ஆண்மையை ஈஸ்வர சக்தியை பூர்த்தி செய்கிறது.

       வேலை பல பகுதிகளாகப் பிரிந்து, பகுதிகள் சேர்ந்து முழுமையாகி பூர்த்தியாகிறது. அவை பலவிதம். ஆண், பெண் தத்துவம் அதில் முக்கியமானது. இதையும் பல தலைப்புகளில் பிரித்து எழுதலாம்.

       ஒரு மெஷினில் பல பகுதிகள் உண்டு. ஒரு கடிகாரத்தில் நூறுவிதமான பகுதிகளுள்ளன. முள், டயல், கூடு, சாவி, அலாரம் நம் கண்ணுக்குத் தெரிகின்றன. மற்றவை தெரிவதில்லை. பகுதிகள் சேர்ந்து முழுமையை ஏற்படுத்துவது வேலைக்குரிய இலக்கணம். சிருஷ்டியின் அமைப்பு.

       இரவும், பகலும் எதிரெதிரானவை. அவை சேர்ந்து நாளாகின்றது. மண்ணும் மரமும் ஒன்றுக்கு ஒன்று ஆதரவாகவும், அவசியமாகவுமிருக்கின்றன. ஒன்றில்லாமல் அடுத்ததில்லை (complimentaries). ஆணியும், மறையும் (nut and bolt) சேர்ந்து பிடித்துக் கொள்கின்றன. தனியாக ஒன்று பயன்படாது. இரண்டும் சேர்ந்து பயனை உற்பத்தி செய்யும் தன்மையுடையன. இரட்டை மாட்டு வண்டியின் ஒரு மாடு, அடுத்த மாட்டிற்கு அவசியம். வண்டியிலுள்ள ஒரு சக்கரம் அடுத்த சக்கரத்திற்கு அர்த்தம் கொடுக்கிறது. ஒன்றில்லாமல் அடுத்ததில்லை. இரு கை தட்டினால் ஓசை எழும். ஒரு கை ஓசை எழுப்பாது. வெறும் சாதத்தையோ, வெறும் சாம்பாரையோ சாப்பிட முடியாது. இரண்டும் சேர்ந்தால் சாப்பாடாகும். உலகத்தின் செயல்களை எல்லாம் பகுதிகளாகப் பிரித்தறியலாம். பலவற்றை எதிரெதிரான இரட்டையாகவும் (contraries), வேறு சிலவற்றை ஒன்றுக்கொன்று துணையான இரட்டையாகவும் (complimentaries) காணலாம். சிருஷ்டியில், இயற்கையில், வளர்ச்சியில், பரிணாம வளர்ச்சியில் இவை நாம் காணும் பாங்கு.

       அவற்றுள் தலையான பிரிவு ஆண், பெண் என்பது. (Positive, Negative) பாஸிட்டிவ், நெகடிவ் என்பவை எலக்ட்ரிசிட்டியின் பகுதிகள். இவ்விரு பகுதிகளின்றி மின்சாரமில்லை. ஒன்று மற்றதைப் பூர்த்தி செய்கிறது. நாம் பாஸிட்டிவ் என்பதை நெகட்டிவின் எதிரி என்று கொள்கிறோம். ஒரு பந்தயத்தில் இரு கட்சியுண்டு. அவற்றை எதிர்க் கட்சி என்கிறோம். உடன்பாடாக வேலையைப் பூர்த்தி செய்வது - மரமும், மண்ணும் - ஒரு வகை எனில், எதிர்மாறாக வேலையைப் பூர்த்தி செய்வது மற்றொரு வகையாகும்.

       எல்லா இடங்களிலும் பகவான் ஸ்ரீ அரவிந்தர் புதுமைக் கருத்துக்களைக் கூறுவதுபோல் இங்கும் கூறுகிறார். நெகட்டிவ் என்பதை நாம் பாஸிட்டிவின் எதிராகக் கருதுகிறோம். முழுமையின் ஒரு பகுதியை பாஸிட்டிவ் வெளிப்படுத்துகிறது. பாஸிட்டிவ்வால் வெளிப்படுத்த முடியாத முழுமையின் அடுத்த பகுதியை நெகட்டிவ் வெளிப்படுத்துகிறது என்கிறார். நாள் என்பது முழுமையானால் பகல் ஒரு பகுதி. பகலால் வெளிப்படுத்த முடியாத நாளின் பகுதியை இரவு வெளிப்படுத்தி, இரவும், பகலும் சேர்ந்து நாளைப் பூர்த்தி செய்கின்றன. நாம் பிறப்பை விரும்புகிறோம். இறப்பை விரும்புவதில்லை. இறப்பதால் மனிதனால் பிறக்க முடிகிறது. இறப்பு இல்லையேல், பிறப்பில்லை, முழுமையில்லை. வாழ்வு என்ற முழுமைக்குப் பிறப்பு முதற் பகுதி, இறப்பு அடுத்த பகுதி. பிறப்பும், இறப்பும் சேர்ந்தது வாழ்வு. உடல் இறந்து பிறப்பதால் life வாழ்வு உலகில் (eternal) அழியாமல் நீடிக்கிறது என்கிறார் பகவான். பூமியில் வாழ்வு நிலைபெற உடல் அழிந்து, பிறப்பதாக அவர் விளக்கம் தருகிறார்.

       ஒளியையும், இருளையும் வேறு விதமாக விளக்குகிறார். வெள்ளை நிறம் தன் மீது படும் அத்தனை ஒளியையும் பிரதிபலிப்பதால், வெண்மையாகவும், கருமை தன் மீது படும் அத்தனை ஒளியையும் உள்ளே இழுத்துக் கொள்வதால் கருமையாகவுமிருக்கின்றன. எனவே வெள்ளை நிறத்தைவிட கருமையில் ஒளி அதிகம். அடர்ந்த ஒளியே இருட்டு என்று இருளை பகவான் விவரிக்கின்றார். அறியாமையை, அடர்ந்த அறிவு என்று அதேபோல் விளக்குகிறார்.அறியாமை, அறிவைவிட உயர்ந்தது என்ற ஞானம், பூரண யோகத்திற்கு அடிப்படை ஞானமாகும்.

       பெண் ஆணைப் பூர்த்தி செய்வது நாம் அறிவது. உடலால் பூர்த்தி செய்தால் வாரிசு உற்பத்தியாகிறது. உணர்வால் பூர்த்தி செய்தால் நட்பு எழுகிறது. மனத்தின் அறிவால் பூர்த்தி செய்தால் (original thought) புதிய சிந்தனை மேதைமை மனதிலெழுகிறது. ஆன்மாவால் பூர்த்தி செய்தால் பெண் சக்தியாகவும், ஆண் ஈஸ்வரனாகவுமாகி சிருஷ்டி ஏற்படுகிறது. பெண் ஆணை எல்லா நிலைகளிலும் பூர்த்தி செய்கிறாள். பெண்ணின்றி ஆணில்லை. ஆணின்றிப் பெண்ணில்லை. அவை இரண்டும் சேர்ந்ததே சிருஷ்டி, உலகம், வாழ்வு, பூமி, பிரபஞ்சம். வானுலகம், தகப்பனாராகவும், பூமி தாயாகவும் வர்ணிக்கப்படுகிறது.

****

665) தன்னை மனிதன் தயார் செய்துகொள்ளும் காலங்களில் மனிதன் பெண்ணை விலக்குவது அவசியமாகலாம். ஆனால் மனித முயற்சி அவளின்றி பூர்த்தியாக முடியாது.

பெண்ணில் பூர்த்தியாகும் ஆண்மை, பெண்ணை விலக்கி தயாராகும்.

       பிரம்மச்சரியம் என்பது எல்லோருக்கும் ஒரு வயதுவரை உண்டு. தவத்தை மேற்கொள்பவனுக்கு அது அவசியம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் பிரம்மச்சரியம் நீடிப்பதா, தேவையில்லையா என முடிவு செய்வார்கள். தவத்தைத் தொடர்ந்து மேற்கொள்பவர்கட்கு பிரம்மச்சரியம் தவிர்க்க முடியாது. சன்னியாசி என்பவருக்குப் பெண் இல்லை. இருக்கும் பெண்ணையும் துறந்தால்தான் சன்னியாசம். மனைவியுடைய சன்னியாசி என்பவரில்லை. ரிஷி, யோகி, முனிவர் ஒரு கட்டம் பூர்த்தியானால் திருமணம் செய்து கொள்வதுண்டு. அவர்கள் சித்திக்குத் தங்களைத் தயார் செய்துகொள்ளும் காலத்தில் திருமணம் இல்லை, சித்தித்த பின் திருமணம் இருக்கலாம். சன்னியாசியின் போக்கில் எக்காலத்திலும் பெண் எழுவதில்லை, எழ முடியாது.

       எந்தக் காரியத்திற்குத் தன்னை மனிதன் தயார் செய்து கொண்டாலும், தயார் செய்கின்ற காலத்தில் அவனுடைய முழு சக்தியும் அவனுக்குத் தேவை. அக்காலத்தில் குடும்பத்துடனோ மனைவியுடனோ தன் சக்தியைப் பகிர்ந்து கொள்ள முடியாது. பகிர்ந்து கொண்டால் மேற்கொண்ட காரியம் பூர்த்தியாகாது. தொழில், அரசியல், சேவை ஆகிய இடங்களிலும் இது உண்மை எனினும் இவர்கள் சமூகத்தின் பங்காக இருப்பதால், திருமணம் வாழ்வில் ஏற்படுகிறது. ஆண் தீவிரமாக - ஒன்றை - தொழில், சேவை - நாடும்பொழுது மனைவி இருப்பதையே மறந்துவிடுவான். அவன் நோக்கம் பூர்த்தியான பின்னரே குடும்பத்தையும், மனைவியையும் கவனிப்பான். அதன் பிறகு அது நினைவு வரும்.

       தவம் அவனுடைய ஜீவனின் முழு சக்தியையும் முழுநேரம் 24 மணியும் - தேவைப்படுவதால், தவத்தை மேற்கொண்டவன் தவம் செய்யும் காலத்தில் பெண்ணை விலக்குவது அவசியம். விலக்கியதால் தவம் பலிக்கிறது. பலித்த தவம் பூர்த்தியாக, அதன் தன்மைக்கேற்ப, மனைவி தேவை.

       உதாரணமாக, தவத்தின் முதல் நிலைகளைக் கடந்து உச்சகட்டம் எய்தியவர் மனோமயப் புருஷனை அடைகிறார். ஜீவாத்மாவை அடைகிறார், மேலும் ஈஸ்வரனாக அவருக்கு சித்தி கிடைப்பது உச்சகட்டம், அரியபொருள், எனினும் அதை அடைபவருண்டு. ஈஸ்வர சித்தியடைந்தவர் தம் தவப்பலனை மற்றவர்க்களிக்க, உலகுக்குப் பயன்படுத்த, நேரடியாக முயன்றால் முடியாது. அதைச் சாதிக்க ஒரு சக்தி தேவை. பார்லிமெண்ட் தீட்டும் திட்டங்களை பார்லிமெண்ட் நேரடியாக அமுல்படுத்த முடியாது. அதற்கு ஒரு சர்க்கார் தேவை. சர்க்காரின்றி வெறும் பார்லிமெண்ட் மக்களுக்குத் தங்களுக்குள்ள அதிகாரத்தால் நல்லது செய்யமுடியாது. அதுபோல் ஈஸ்வரன் நிலை சித்தித்த பின், சக்தியின்றி சிஷ்யர்களையோ, உலகையோ அவர் எட்டித் தொட முடியாது. இந்நிலையை எய்தும்வரை பெண் விலக்கப்பட வேண்டும். எய்தியபின் பெண்ணின்றி காரியம் பூர்த்தியாகாது.

       ஆரம்பக் காலத்தில் அன்னையின் தெய்வீகத்தைச் சாதகர்கள் காணவில்லை. தங்களைப்போல் அவரும் சீடர் என்றிருந்தனர். பகவான் அன்னையின் தெய்வீகத்தை விளக்கியபின்னும் சிலரால் அன்னையை ஏற்க முடியவில்லை. என் யோகப் பலன் உங்களை வந்தடைய நீங்கள் அன்னையை ஏற்க வேண்டும். அன்னையை ஏற்காமல் அது உங்களை வந்தடையாது. அன்னையை ஏற்க முடியாதவர்கள் ஆசிரமத்தை விட்டுப் போகலாம் என்றார். அதுபோன்ற பலர் அன்னையைச் சந்திக்கும்பொழுது அன்னைக்கு நமஸ்காரம் செய்வதுமில்லை.

       சாதகர்கள் பலர் பகவானுக்கு ஒரு பெண்ணைப் பற்றியும் அவள் ஆன்மீக உயர்வைப் பற்றியும் எழுதினால் இது என்ன திருமணத்திற்கு விண்ணப்பமா? என்பார். அது போன்ற ஒருவருக்கு எழுதும்பொழுது, பகவான், “யோகம் சித்தித்து புருஷனை அடைந்தால், ஈஸ்வரன் சித்தித்தால் அந்நிலைக்கு சக்தி தேவை. அதற்கு முன் நிலைகளுக்கு ‘சக்தி’ வாழ்வில் எழுந்தால் யோக சக்தி சிதறி, யோகம் பாழாகும்” என்று எழுதினார்.

தொடரும்..

****

ஜீவிய மணி

 

பகுத்தறிவே அகந்தை.

 

 

 



book | by Dr. Radut