Skip to Content

13. அன்னை இலக்கியம் - மீன்கொடி

அன்னை இலக்கியம்

மீன்கொடி

(சென்ற இதழின் தொடர்ச்சி)

சமர்ப்பணன்

14. சித்தப்பா

சூளைமேடு வீட்டுச் சாவியை எடுத்துக் கொண்டு ஆறு மணிக்கு விளக்கு வைக்கும் நேரத்தில் நானும் ஜமுனாவும் வீட்டை விட்டு வெளியேறினோம்.

மோட்டார் சைக்கிளில் சற்றுத் தயங்கி விட்டு ஏறும் போது ‘இந்த வண்டி யாருடையது?’ என்றாள் ஜமுனா.

“ஆடிட்டர் தினகரனுடையது. என்னோடு பள்ளியில் படித்தவன். ‘கல்யாண சமயத்தில் தேவைப்படும். சைக்கிளில் அலையாதே. ஒரு வாரம் வைத்திரு’ என்று சொல்லித் தந்தான். நான் வேண்டாம் என்று கூறியும் சாவியை என் கையில் திணித்துவிட்டுப் போய்விட்டான்” என்றேன்.

‘புது வண்டி போலிருக்கிறது’ என்றாள் ஜமுனா.

“உன்னை நான் பெண் பார்த்துவிட்டு வந்த மறுநாள் தினகரன் என்னைப் பார்க்க வந்தான். ‘இந்த வண்டி ஒன்றரை லட்சம் ஆகிறது. பேங்கில் கடன் தர ஜாமீன் கையெழுத்து கேட்கிறார்கள். என் வாடிக்கையாளர் எவரிடமும் உதவி கேட்க விருப்பமில்லை. நீ போடுகிறாயா?’ என்றான். பதிவு செய்த பின் போன வாரம் வண்டி வந்தது. என்னிடம் கொண்டு வந்து கொடுத்து, உன் கல்யாணம் முடிந்த பின் வாங்கிக் கொள்கிறேன் என்றான். புது வண்டி” என்றேன்.

‘இருந்தாலும் அடுத்தவர் வண்டிதானே?’ என்றாள் ஜமுனா.

பின்னால் உட்கார்ந்து கொண்டு ஒரு பெரிய பையை மடியில் வைத்துக் கொண்டாள். என் பொருட்கள் இருந்த சிறிய பையை வண்டியின் பக்கவாட்டில் தொங்கவிட்டுக் கொண்டேன்.

‘பாட்டியையும், சின்ன மாமாவையும் பார்த்து விட்டு போகலாமா?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘வீடு எங்கே இருக்கிறது என்று தெரியும். வளர்ந்தபின் ஒரு தடவை கூட உள்ளே போனதில்லை’ என்றேன். பின் தயக்கத்துடன் ‘சித்தப்பா பற்றி கேள்விப்பட்டிருப்பாயே’ என்றேன்.

‘எவரைப் பற்றியும் நான் எந்த முடிவான கருத்தையும் வைத்துக் கொள்வதில்லை’ என்றாள் ஜமுனா.

சித்தப்பா வீட்டிற்குச் சென்ற போது கூடத்தில் ஒரே ஒரு மின்விளக்கு துயரத்துடன் தனிமையில் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. ஒரு சாய்வு நாற்காலியில் சித்தப்பா கண்களை மூடி சரிந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்.

‘இவர்தான் சித்தப்பா’ என்று ஜமுனாவிடம் மெல்லிய குரலில் கூறினேன்.

அவரருகே சென்று தரையில் அமர்ந்த ஜமுனா ‘மாமா’ என்றழைத்தாள்.

கண்களை மெல்லத் திறந்த சித்தப்பா ‘யாரம்மா நீ?’ என்றார்.

‘உங்கள் புதிய மருமகள். கொஞ்சம் எழுந்து நில்லுங்கள்’ என்றாள் சற்று அதிகாரமாக.

திகைப்புடன் மெல்ல எழுந்து தள்ளாடியபடி நின்றார் சித்தப்பா.

எனக்கும் ஜாடை காட்டினாள் ஜமுனா. நானும் அவளும் சித்தப்பாவின் கால்களில் விழுந்தோம். ‘நன்றாக இருங்கள்’ என்றார். தன் சட்டைப்பையை தடவிப் பார்த்தார். அங்குமிங்கும் பார்த்து விட்டு ‘நன்றாக இரும்மா’ என்று கூறிவிட்டு மீண்டும் சாய்வு நாற்காலியில் சரிந்தார்.

‘எனக்கு அழைப்பு வந்தது. வரக்கூடிய நிலையில் நானில்லை. உங்கள் கல்யாணத்தைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். உன் பெயர் ஜமுனாதானே?’ என்றார் சித்தப்பா.

‘ஆமாம்’

‘இவன் பெயர் என்ன? மறந்துவிட்டேன்’ என்றார் சித்தப்பா.

‘சொல்லுங்கள்’ என்றாள் ஜமுனா.

‘பரமார்த்தன்’ என்றேன்.

‘ஜமுனா, எனக்கு மரியாதை கொடுத்து என் காலில் விழுந்த முதல் ஆள் நீதான்’ என்றார் சித்தப்பா. அவர் கண்களில் நீர் திரண்டது. ‘என்னிடம் பணம் வாங்கியவர்கள் கூட என் காலில் விழுந்ததில்லை. நானோ பணத்தையும் கொடுத்துவிட்டு வைப்பாட்டிகளின் கால்களிலும் விழுகிறவன். என்னை எவன் மதிப்பான்?’ என்றார் சித்தப்பா.

‘பாட்டி எங்கே?’ என்று கேட்டேன்.

‘யாருக்குத் தெரியும்? காபி கூட தராமல் வெளியே போய்விட்டார்’ என்றார் சித்தப்பா எரிச்சலுடன்.

‘நான் போட்டுத் தருகிறேன் மாமா’ என்று எழுந்தாள் ஜமுனா.

‘எனக்கும்’ என்றேன்.

புன்னகைத்துவிட்டு உள்ளே சென்றாள் ஜமுனா.

நானும் சித்தப்பாவும் பேசாமல் சில நிமிடங்கள் வெவ்வேறு திசைகளில் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம்.

எங்களுக்கு ஜமுனா காபி கொண்டு வந்த போது ஆவலுடன் சித்தப்பா வாங்கிக் கொண்டார். ‘நான் கேட்காமல் எனக்கு கிடைத்த முதல் காபி இதுதான்’ என்றார்.

சித்தப்பா எங்கள் வரவால் குழம்பிப் போயிருந்தார்.

‘என்னைப் பற்றி உனக்குத் தெரிந்திருக்குமே?’ என்று கேட்டார்.

‘நான் இன்றுதான் இந்தக் குடும்பத்திற்குள் வந்திருக்கிறேன்’ என்றாள் ஜமுனா.

‘எனக்குப் பெண்பித்தன் என்ற கெட்ட பெயருண்டு’ என்றார் சித்தப்பா.

‘அழகை ஆராதிப்பவரை வாய்ப்பு கிடைக்காத பொறாமைக்-கார ர்கள் அப்படித்தான் கேலி பேசுவார்கள்’ என்று கூறிச் சிரித்தாள் ஜமுனா.

சற்று நிமிர்ந்து உட்கார்ந்த சித்தப்பா ‘எப்போதும் மயக்கத்தில் வேறு உலகத்தில் இருப்பவன்’ என்றார் சித்தப்பா.

‘சகஜ சமாதியில் இருக்கும் யோகியைப் போல’ என்றாள் ஜமுனா.

‘அப்படியா சொல்கிறாய்? நான் சூதாடத் தயங்காதவன்’ என்றார் சித்தப்பா.

‘முன்னோடிகள், தொழில் செய்பவர்கள் எல்லோரும் வாழ்க்கையோடு சூதாடிக் கொண்டுதானே இருக்கிறார்கள்? மாமா, தப்பு என்று எதை யார் சொல்வது? எந்தத் தப்பும் ஏதோ ஒரு பெரிய நல்லதிற்கு நம்மைக் கூட்டிச் செல்லும் வழிகாட்டி’ என்றாள் ஜமுனா.

சித்தாப்பாவின் முகத்தில் புன்னகை அரும்பியது. ‘கெட்டிக்காரிதான்’ என்று பாராட்டிவிட்டு ‘உனக்கு ஏதாவது தர வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. என்ன தருவது என்று தெரியவில்லை’ என்றார் சித்தப்பா.

‘மனதில் அன்பிருந்தால் போதும். உண்மையான நினைப்பு கொடுப்பதற்குச் சமானம். எண்ணம் என்பது செயல்தான். நல்ல எண்ணம் நல்ல செயல்’ என்றாள் ஜமுனா.

‘போயும், போயும் வீணாகிவிட்ட என்னை எதற்குப் பார்க்க நினைத்தாய்?’ என்றார் சித்தப்பா.

‘இவருடைய அப்பா எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. அப்படியானால் இவருக்கு இப்போது நீங்கள்தானே அப்பா?’ என்றாள் ஜமுனா.

‘ஆமாம். நான்தான் உனக்கு மாமனார்’ என்று தலையை ஆட்டி ஆமோதித்தார் சித்தப்பா.

‘உங்கள் ஆசிர்வாதம் இல்லையென்றால் நான் எப்படி நன்றாக வாழ முடியும்? அது மட்டுமில்லை மாமா. உலகம் முன்னேறுகிறது என்றால் எல்லா நாடுகளும் முன்னேற வேண்டும். அமெரிக்கா மட்டும் முன்னேறிவிட்டு ஆப்பிரிக்கா முன்னேறவில்லை என்றால் அது எப்படி உலக முன்னேற்ற- மாகும்?’ என்றாள் ஜமுனா.

‘அதனால்?’ என்று கேட்டார் சித்தப்பா.

‘நீங்கள் ஒருவர் சந்தோஷமாக இல்லாவிட்டால் கூட நம் குடும்பம் சந்தோஷமாக இல்லை என்றுதானே அர்த்தம்? உங்களைச் சந்தோஷப்படுத்தத்தான் வந்தேன்’ என்றாள் ஜமுனா.

‘நான் வாழ்க்கையில் முதல் தடவையாக இன்றுதான் உண்மையாகவே சந்தோஷமாக இருக்கிறேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள், இருந்தால் தருகிறேன்’ என்றார் சித்தப்பா.

‘நம் குடும்பத்தில் எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். வேறென்ன கேட்கப் போகிறேன்?’ என்றாள் ஜமுனா.

சிறிது நேரம் யோசித்த சித்தப்பா எழுந்து அறைக்குள் சென்று ஒரு பெரிய காகிதக் கட்டோடு திரும்பி வந்தார். ‘இருபது வருஷமாக கேஸ் நடத்துகிறேன். இதனால் யாருக்கும் சந்தோஷமும் இல்லை. பிரயோசனமும் இல்லை என்றார்.

சில வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து போட்டு, காகிதக் கட்டோடு ஜமுனாவிடம் கொடுத்தார். ‘நீயே போய் வக்கீலிடம் கேஸை நிறுத்தச் சொல்லி விடு. இருபது வருஷமாக தொடர்ந்து வரும் வருமானம் நிற்குமென்றால் அவருக்கு வருத்தமாகத்தானே இருக்கும்? அவர் எப்படியும் என்னைத் தேடி வருவார். நான் பேசிக் கொள்கிறேன்’ என்றார் சித்தப்பா.

பாட்டிக்காகக் காத்திருந்தோம். வரவில்லை. மேலும் சற்று நேரம் சித்தப்பாவோடு ஜமுனா பேசிக் கொண்டிருந்தாள். அதன்பின் கிளம்பினோம்.

‘அடிக்கடி வந்து காபி போட்டு தந்துவிட்டுப் போம்மா’ என்றார் சித்தப்பா. வாசலுக்கு வந்து வழியனுப்பினார்.

புன்னகைத்தாள் ஜமுனா.

மோட்டார் சைக்கிளில் சூளைமேடு வீட்டை நோக்கி போகும் போது ‘எத்தனையோ லட்சங்களை சித்தப்பா தொலைத்திருக்கிறார். தாத்தா நேர்மையாக சம்பாதித்தது’ என்றேன்.

‘பாட்டி மீது தாத்தா வஞ்சம் வைத்திருக்காவிட்டால் அந்த நஷ்டம் கூட வந்திருக்காது. சந்தோஷமான மனநிலையில் கட்டியிருந்தால் பங்களாக்கள் பயன்பட்டிருக்கும். பாட்டியை பழி வாங்கத்தானே பெரிய பெரிய வீடுகளைத் தாத்தா கட்டினார்?’ என்றாள் ஜமுனா.

‘தாத்தாவைப் பற்றி உனக்கு தெரியாது’ என்றேன்.

‘நன்றாகத் தெரியும். எப்போது மதுரை வந்தாலும் வீட்டிற்கு வருவார். சுந்தரமும், நானும் எப்படிப் பேசிக் கொள்வோமோ, அதே போல நானும், தாத்தாவும் பேசிக் கொள்வோம்’ என்றாள் ஜமுனா.

‘சித்தப்பா இப்படி சட்டென மாறுவார் என்று நான் கற்பனை கூட செய்ததில்லை’ என்றேன்.

‘அவர் மாறவில்லை. எப்போதும் போலத்தான் இருக்கிறார். நாம்தான் அவரைப் பற்றி இப்போது வேறு வகையாக நினைக்க ஆரம்பித்திருக்கிறோம்’ என்றாள் ஜமுனா.

மணி ஒன்பதாகிவிட்டிருந்தது.

‘எங்கே சாப்பிடலாம்?’ என்றேன்.

‘எனக்கு பசியே இல்லை’ என்றாள் ஜமுனா.

‘எனக்கும்தான்’ என்றேன்.

‘போனதும் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்’ என்றாள் ஜமுனா.

‘பங்களாவிற்குப் போகுமுன் எப்படி இருந்ததோ அதே போல இன்று வரை சூளைமேடு வீட்டைத் தாத்தா பராமரித்து வருகிறார். மல்லிகா என்ற பெண் தினமும் சுத்தம் செய்து விட்டுப் போவாள். அடுப்பு, மேஜை நாற்காலி எல்லாமே இருக்கிறது’ என்றேன்.

‘ஏதாவது பலசரக்குக் கடையில் நிறுத்துங்கள்’ என்றாள் ஜமுனா. ஏதோ சில பொருட்களை வாங்கிக் கொண்டாள்.

சிறிது தூரம் சென்றதும் ‘நிறுத்துங்கள், நிறுத்துங்கள்’ என்றாள் ஜமுனா.

சென்னை பர்னிச்சர் மார்ட் என்ற கடையின் கதவை சாத்திக் கொண்டிருந்தார்கள். ‘அண்ணே கொஞ்சம் பொறுங்கள்’ என்றவாறு வண்டியிலிருந்து இறங்கி கடைக்குள் சென்றாள். ‘இரண்டு பாய்களும், தலையணைகளும் வேண்டும்’ என்றாள்.

‘வீட்டில் எல்லாமே இருக்கிறதே’ என்றேன்.

புன்னகைத்தாள் ஜமுனா. ‘புதிதாக வாங்கலாம். நீங்கள் காட்டுங்கள் அண்ணே’ என்றாள் ஜமுனா.

அவளுடைய புது மணக்கோலத்தையும், கையிலிருந்த பெரிய பையையும் சற்று சந்தேகமாகப் பார்த்த கடைக்காரர் ‘வீட்டை விட்டு ஓடி வந்து கல்யாணம் பண்ணிக் கொண்டுவிட்டீர்களா?’ என்று மெல்லக் கேட்டார்.

‘அப்படி இல்லை அண்ணே. கல்யாணம் பண்ணிக் கொண்டதும் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டோம்’ என்று கூறி சிரித்தாள் ஜமுனா. கடைக்காரரும் புரியாமல் சிரித்தார்.

‘என்று கல்யாணம் நடந்தது?’ என்று கேட்டார் கடைக்காரர்.

‘இன்று காலையில்தான்’ என்றாள் ஜமுனா.

கடைக்காரர் காட்டிய பல உயர்தர பாய்களையும், தலை- யணைகளையும், போர்வைகளையும் புரட்டிப் பார்த்து தனக்கு பிடித்தவற்றை என்னிடம் காட்டினாள்.

‘நன்றாக இருக்கிறதா?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘எல்லாமே நன்றாக இருப்பது போலத்தான் எனக்குத் தெரிகிறது. நீயே முடிவெடு. என்னிடம் கேட்காதே’ என்றேன்.

திடீரென நினைவு வந்தவளாக ‘பணம் எவ்வளவு இருக்கிறது?’ என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

என் சட்டை பையிலிருந்த எல்லா நோட்டுகளையும் மொத்தமாக அள்ளி அவள் கையில் கொடுத்தேன். எண்ணிப் பார்த்துவிட்டு சிறிது யோசித்தாள்.

பின் ‘அண்ணே, பாய்களும், தலையணைகளும் போதும்’ என்றாள்.

‘நல்ல போர்வையம்மா. குளிர் காலம் வேறு. எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார் கடைக்காரர்.

‘இன்னொரு நாள் வந்து வாங்கிக் கொள்கிறேன். இப்போது பணமில்லை’ என்றாள் ஜமுனா.

தலையசைத்த கடைக்காரர் போர்வைகளையும் சேர்த்தே கட்டினார். பில்லில் போர்வையை சேர்க்கவில்லை.

‘பில் தப்பாக இருக்கிறது’ என்றாள் ஜமுனா.

‘எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. பாய் வாங்கினால் போர்வை இனாம்’ என்றார் கடைக்காரர்.

‘முதலில் சொல்லவில்லையே’ என்றாள் ஜமுனா.

‘இப்போதுதான் அந்த யோசனையே வந்தது. இன்றுதான் உங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கிறீர்கள். உங்கள் குடும்பமும், தொழிலும் வளரும் போது என் கடையை மறந்துவிடவா போகிறீர்கள்?’ என்றார் கடைக்காரர்.

பின் மோட்டார் சைக்கிளைப் பார்த்து விட்டு ‘இந்த மூட்டையை மோட்டர் சைக்கிளில் கொண்டு போக முடியாது’ என்றவர் கடை பையனை அழைத்து ‘டேய், நீ இதை மீன்பாடி வண்டியில் எடுத்துக் கொண்டு போய் இவர்கள் வீட்டில் கொடுத்து விடு’ என்றார்.

‘மணி ஒன்பதரையாகிவிட்டது’ என்று ஆரம்பித்தான் பையன்.

‘கஷ்டம்தான்’ என்று கூறிக் கொண்டே அவனிடம் இருபது ரூபாயை தந்தாள் ஜமுனா.

‘கஷ்டமெல்லாம் ஒன்றுமில்லை அக்கா. லேசாக குளிருகிறது என்று சொல்ல வந்தேன்’ என்றான் பையன்.

அவனிடம் வீட்டு அடையாளம் சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

***

15. முதலிரவு

நாங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் கடைப் பையன் வந்து பாய், தலையணை, போர்வை மூட்டையை கொடுத்துவிட்டுப் போனான்.

சிறிய வீட்டைச் சுற்றிப் பார்த்தாள் ஜமுனா. ‘நன்றாக இருக்கிறது’ என்றாள்.

‘அண்ணார்கள் நாம் வெளியே போக வேண்டும் என்று சொன்னபோது அண்ணிகள் அதை மறுத்துப் பேசவில்லை. நாம் வீட்டை விட்டுப் போனால் என்ன செய்ய வேண்டும் என்று பேசினார்கள். நாம் வெளியே போகப் போவதாக சொன்னதும் கண்ணீர் விடுகிறார்கள். எதை உண்மை என்று எடுத்துக் கொள்வது?’ என்றேன்.

‘இரண்டுமே உண்மைதான். அக்காக்கள் மனதில் இருப்பதைத்தான் அத்தான்கள் பேசினார்கள். அக்காக்களுக்கு உங்கள் மீது அபாரப் பிரியம். என்னை சிலை என்று புகழ்ந்து திருஷ்டி பொட்டும் வைத்தார்கள். எந்தப் பெண்ணும் அதை செய்யமாட்டாள். உங்களை முழுப் பிரியத்துடன் ஏற்பதால்தான் அதைச் செய்தார்கள். ஆனால் அதற்காக அதிகாரத்தைப் பறி கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. அதனால்தான் வீட்டை விட்டு வெளியே அனுப்ப நினைத்து கூடவே கண்ணீரும் விட்டார்கள்’ என்றாள் ஜமுனா.

‘நீ எப்படி அதிகாரத்தை எடுத்துக் கொள்ள முடியும்?’ என்று கேட்டேன்.

‘எடுத்து கொண்டு விடுவேனோ என்ற பயம் அவர்களுக்கு வந்து விட்டது. என் மருமகள் மான்மியத்தைக் கேட்டதால் அந்த பயம் வந்திருக்கலாம்’ என்றாள் ஜமுனா.

‘நீ அதை பாடியபோது சந்தோஷப்பட்டார்கள். உன்னைக் கட்டி அணைத்துக் கொண்டார்களே!’ என்றேன்.

‘கவர்னசத்தையை அவர்கள் சார்பில் பழி வாங்கி விட்டேன் என்று நினைத்ததால் அக்காக்கள் அப்படிச் செய்தார்கள். அதன்பின் கவர்னசத்தையின் கதி தங்களுக்கும் வந்து விடுமோ என்று பயந்து விட்டார்கள்’ என்றாள் ஜமுனா.

‘தான் வெளியே போகும்போது நெக்லஸ் போட்டால் உன் மனம் சுருங்கும் என்றாரே அண்ணி? உன்னை அற்பப் பெண் என்பது போல பேசியது எனக்கு வருத்தமாக இருந்தது’ என்றேன்.

‘மாமியார் இல்லாத வீட்டில் தன்னைத்தான் மாமியாராக இரண்டு பேருமே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் உங்களோடு வெளியே போவதைத் தன்னால் தாங்க முடியாது என்பதைத்தான் காபி அக்கா அப்படிச் சொன்னார். ஜவுளி அக்கா வாய்விட்டு அதை சொல்லவில்லை. நாம் அந்த வீட்டில் இருந்தால் அக்காக்களால் ஒரு வினாடி கூட நிம்மதியாக இருக்க முடியாது. அதனால்தான் உடனே வெளியே வர நினைத்தேன்’ என்றாள் ஜமுனா.

‘நீ பேசுவது உண்மை என்றே தோன்றுகிறது. ஆனால் நீ யோசித்துப் புரிந்து கொண்டது தவறாகவும் இருக்கலாமே?’ என்றேன்.

‘நான் அறிவை வைத்து யோசித்து இதையெல்லாம் புரிந்து கொள்ளவில்லை. அரைகுறையாகப் புரிந்து கொள்ளத்தான் புத்தியும். ஆராய்ச்சியும் வேண்டும். உள்ளது உள்ளபடி எதையும் சரியாக அறிந்து கொள்ள அவை தேவை இல்லை. ஒருவர் பேசும்போது, அந்தக் கணத்தில் அவரோடு ஒன்றாகி, அவராக மாறிவிடுவது உள்ளதை உள்ளபடி எனக்குக் காட்டுகிறது’ என்றாள் ஜமுனா.

‘மனோதத்துவ நிபுணர் போல பேசுகிறாய்’ என்றேன்.

‘பாராட்டுவது போல கேலி செய்கிறீர்களே! எதுவும் தெரியாமல் எல்லாம் தெரிந்தது போலவா பேசுகிறேன்?’ என்றாள் ஜமுனா.

ஜமுனா சமையலறைக்குள் சென்று வாங்கி வந்த சாமான்களை அடுக்கி வைக்கத் தொடங்கினாள்.

பாய்களை விரித்து, அவற்றின் மீது போர்வைகளை விரித்து விட்டேன். சுவரோரமாக தலையணையை சாய்த்து, அதன் மேல் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

அறைக்குள் வந்த ஜமுனா ‘என்ன யோசனை?’ என்றாள்.

‘உன்னைப் பற்றிய யோசனைதான். மாசறு பொன்னே வலம்புரி முத்தே, காசறு விரையே கரும்பே தேனே, அரும்பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே! பெருங்குடி வாணிகன் பெரு மடமகளே!’ என்றேன்.

‘உங்கள் ஜமுனா சிறுகுடி வாத்தியாரின் சாதாரண மகள்!

வான்நிகர் வண்கை மாநாய்கன் குலக்கொம்பான கண்ணகி போல வண்டி நிறைய நகையோடு வரவில்லை’ என்றாள் ஜமுனா.

‘நான் மாதவியோடு பழக வழியில்லாமல் செய்துவிட்டாய். அதுவும் நல்லதற்குத்தான். சிலப்பதிகாரம் தெரியுமா?’ என்று கேட்டேன்.

‘ஏதோ கொஞ்சம்’ என்றாள்.

நான் வாசித்து ரசிப்பதையெல்லாம் பகிர்ந்து கொள்ள தோழி கிடைத்த மகிழ்ச்சியோடு ‘மலையிடைப் பிறவா மணியே என்கோ? அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ? யாழிடைப் பிறவா இசையே என்கோ?’ என்றேன்.

‘தீராக் காதலின் திருமுகம் நோக்கி இளங்கோ அடிகள் பாடுவதை மனப்பாடமாக சொல்வதை விட்டுவிடுங்கள். உங்கள் தீராக் காதலியின் திருமுகம் நோக்கி சொந்தமாக ஏதாவது சொல்லுங்கள்’ என்றாள் ஜமுனா.

‘எனக்குச் சொந்தமாக சாப்ட்வேர் மட்டும்தான் எழுதத் தெரியும். இந்த நேரத்தில் உன்னிடம் சாப்ட்வேர் பற்றியா பேச முடியும்?’ என்றேன்.

‘முடியாதுதான். தத்துவம் அல்லது காவியம் பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும்’ என்றாள் ஜமுனா புன்னகையோடு.

‘கேலி செய்கிறாயோ?’ என்றேன்.

‘இல்லையே’ என்றாள் ஜமுனா.

‘எனக்குத் தெரிந்ததையெல்லாம் உனக்குச் சொல்லித் தருகிறேன். இன்று சிலப்பதிகாரத்திலிருந்து ஆரம்பிக்கலாமா?’ என்று ஆவலுடன் கேட்டேன். நான் எவரிடமும் இதுபோல கேட்டதில்லை.

‘உங்கள் விருப்பம்’ என்றாள் ஜமுனா.

‘கண்ணகியிடம் கோவலன் நகையைப் பற்றி என்ன சொல்கிறான் தெரியுமா? ‘மறுவின் மங்கல அணியே அன்றியும், பிறிதணி அணியப் பெற்றதை எவன் கொல்’ என்கிறான். ‘மாசற்ற உன் இயற்கை அழகின் மேல், செயற்கையான தங்க நகைகளைப் போடுவது தேவையே இல்லை’ என்று அர்த்தம்’ என்றேன்.

‘இப்படி மனைவியிடம் நைச்சியமாகப் பேசி ஏமாற்றி எல்லா நகைகளையும் எடுத்துக் கொண்டு போய் மாதவியிடம் கொடுத்துவிட்டான் கோவலன்’ என்றாள் ஜமுனா.

‘இளவயது அப்பாவி. மாதவி அழகில் மயங்கி, ஆசையால் அறிவில்லாமல் நடந்து கொண்டுவிட்டான். அதற்குப் போய் அவனை திட்டலாமா?’ என்றேன். பின் என் பையிலிருந்து ஒரு சிறு பொட்டலத்தை எடுத்து ஜமுனாவிடம் நீட்டினேன். ‘உனக்காக இந்தப் பிறிதணியை வாங்கினேன். இது என் பிரியணி. பொன்னணி வாங்க தற்சமயம் வசதியில்லை’ என்றேன்.

பொட்டலத்தைப் பிரித்தாள் ஜமுனா. உள்ளே வெள்ளிக் கொலுசுகளும், பல வண்ணக் கண்ணாடி வளையல்களும் இருந்தன. ஒவ்வொன்றாக நிதானமாகப் பார்த்தாள்.

‘எல்லாமே அழகாக இருக்கின்றன. எனக்குப் பிடித்திருக்கிறது’ என்றாள் ஜமுனா.

கைகளிலிருந்த ஆறு தங்க வளையல்களையும், கால்களிலிருந்த வெள்ளி கொலுசுகளையும் கழற்றிவிட்டு, ‘நீங்கள் வாங்கி வந்தவற்றை நீங்களே போட்டு விடுங்கள்’ என்றாள்.

தட்டுத் தடுமாறி போட்டுவிட்டேன்.

அவள் கைகளை வளையல்கள் நிறைத்தன. கால்களை கொலுசுகள் தழுவின. அவள் கைகளால் வளையல்கள் மேலும் வண்ணமயமானது போலவும், கணுக்கால்களால் வெள்ளிக் கொலுசுகள் மேலும் பிரகாசிப்பது போலவும் கற்பனை செய்து கொண்டேன். எல்லாக் கணவர்களுக்கும் என்னைப் போலவே உளமயக்கு உண்டாகுமா என்று தெரியவில்லை.

அவள் கழற்றி வைத்த தங்க வளையல்களை எடுத்தேன். ‘வேண்டாம்’ என்று கூறிவிட்டு அவற்றையும், முதலில் போட்டிருந்த கொலுசுகளையும் பைக்குள் போட்டு பத்திரப்படுத்தினாள்.

என் பையில் இருந்த புல்லாங்குழலைப் பார்த்தாள். ‘வாசிப்பீர்களா?’ என்று கேட்டாள்.

‘தெரியாது. ஒரு இசை நிகழ்ச்சியில் ஆயிரமாவது ஆளாக டிக்கெட் வாங்கியதற்குப் பரிசாகக் கிடைத்தது’ என்றேன்.

குழலை எடுத்துப் பல கோணங்களில் பார்த்தாள்.

‘பழைய காலம் என்றால் விறகு அடுப்பு ஊத உனக்கு பயன்பட்டிருக்கும். கேஸ் அடுப்பிற்கு தேவைப்படாது’ என்றேன்.

புன்னகைத்த ஜமுனா குழலை இசைக்கத் தொடங்கினாள். ‘தீராத விளையாட்டு பிள்ளை’ பாட்டை இசைத்தாள். இனிமையாக இருந்தது.

‘எனக்குத் தெரிந்தவர்களில் குழல் வாசிக்கும் ஒரே பெண் நீ தான்’ என்றேன்.

‘உலகத்தில் என்னென்ன இசைக்கருவிகள் உள்ளனவோ எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றாள் ஜமுனா.

‘இதையெல்லாம் கற்றுக் கொள்ள உனக்கு நேரம் இருந்ததா?’ என்று கேட்டேன்.

‘நேரத்திற்கு என்ன பஞ்சம்? முடிவே இல்லாமல் இருக்கிறது’ என்றாள் ஜமுனா.

‘நீ யாரிடம் கற்றுக் கொண்டாய்?’ என்று கேட்டேன்.

‘குருவிற்குக் காணிக்கை தந்து கற்றுக் கொள்ளும் அளவிற்கு வீட்டில் ஏது வசதி? பக்கத்து வீட்டு குட்டி பையனுக்கு ஒரு பெரியவர் அவன் வீட்டிற்கே வந்து சொல்லித் தருவார். அவர் சொல்லித் தரும்போது அந்தப் பையனாக என்னை நினைத்து கேட்டுக் கொள்வேன். முன்னூறு ரூபாய் சேர்த்து வைத்து குழல் ஒன்று வாங்கினேன். இரவு தூங்குவதற்கு முன் நானாக ஊதி கற்றுக் கொண்டேன். பல வருஷங்கள் கழித்து கல்யாணம் நிச்சயமானதும் பெரியவருக்கு வேட்டி, சட்டை எடுத்துக் கொடுத்து அழைப்பு தந்தேன். புல்லாங்குழல் கற்றுக் கொண்டதைச் சொல்லி இதுதான் என் காணிக்கை என்று சொன்னேன். சந்தோஷப்பட்டார். ‘காணிக்கை என்ன காணிக்கை! ஆர்வத்தோடு நீ இருப்பது தெரிந்திருந்தால் நான் உனக்குக் காணிக்கை கொடுத்துச் சொல்லித் தந்திருப்பேன். நல்ல குருக்களுக்கு நாட்டில் பஞ்சமே இல்லை. நல்ல சிஷ்யர்கள் கிடைப்பதுதான் சிரமமாக இருக்கிறது’ என்று வருத்தமும் பட்டார்’ என்றாள் ஜமுனா.

‘எனக்கு வீணை பிடிக்கும்’ என்றேன்.

‘அதையும் வாசிப்பேன். தோழி வீட்டில் இருந்தது’ என்றாள் ஜமுனா.

‘வீணை ஒன்றும் வாங்கியிருக்க வேண்டியதுதானே?’ என்றேன்.

‘அப்பா ‘ஆயிரக்கணக்கில் ஆகுமே!’ என்று சொல்லி விட்டார்’ என்ற ஜமுனா குழலில் மேலும் சில பாடல்களை வாசித்துக் காட்டினாள்.

அவள் மடியில் சாய்ந்தேன்.

‘உங்கள் கம்ப்யூட்டரை நாளை கொண்டு வந்து விட வேண்டும். நீங்கள் வேலை பார்க்க வேண்டுமே!’ என்று கூறியபின்தான் என்னை மடியில் அனுமதித்தாள்!

(தொடரும்)

******

ஜீவிய மணி

அன்பர்கள் பழைய சடங்குகளை மறுத்தால் அது விலகும். திருவுருமாறி நம் நிலைமை உயரும். இராகு காலம் பெரிய நல்லதைச் செய்யும். காலம் வலுவானது. மனிதன், முக்கியமாக மனிதனுடைய ஆத்மாவுக்கு வலிமை அதிகம். அன்னை கூறும் விளக்கங்களை அறிந்து, பாகுபாடு செய்து, நுணுக்கமாக உணர்ந்து, பழைய-தானா லும், புதியதானாலும், நல்லதை ஏற்று மற்றதை விலக்கினால் பலன் நூறு மடங்கல்ல, ஆயிரம் மடங்கு பெருகும்.

**********



book | by Dr. Radut