Skip to Content

12. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

இரயில்வே ஸ்டேஷனை ஒட்டி இரயில் பாதையின் ஓரங்களில் உள்ள வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர். 12-ஆம் வகுப்பு முடித்தவள். தனது சித்தியின் பராமரிப்பில் வளர்வதால், பெற்றோர் சொற்படி படிப்பை அத்துடன் நிறுத்தி, இரயில்வே பீடர் ரோடில் உள்ள கடைகளுக்கு வாசல் தெளித்து, சுத்தம் செய்து, கோலம் போட்டு, குடிநீர் எடுத்து வந்து வைப்பது போன்ற வேலைகளைச் செய்து வந்தாள்.

வேலைகளைத் திருத்தமாகவும் நன்றாகவும் செய்பவள். அப்படி வேலை செய்யும் கடைகளில் நகைக்கடையும் ஒன்று. அங்கு ஸ்ரீ அன்னை மற்றும் பகவான் ஸ்ரீ அரவிந்தரின் திருவுருவப் படங்களைப் பார்த்தவள் அந்தக் கடைக்காரரிடம், இவர்கள் யார்? நிறைய இடங்களில் இப்படங்களைப் பார்த்திருக்கின்றேன் எனக் கேட்டாள்.

அக்கடைக்காரர் அன்னையைப் பற்றியும் பகவானைப் பற்றியும் தனக்குத் தெரிந்தவற்றைக் கூறினார். சுவாமி விவேகானந்தர் பகவானுக்கு யோகத்தில் வழிகாட்டியதையும், பகவானது யோகச் சிறப்பையும் சொன்னார். மேலும் அவளுக்குப் புரியும் வண்ணம், இவர்களிடம் சொல்லிவிட்டுச் செயல்பட்டால் அனைத்தும் நல்லதாக நடக்கும் என்றார். எனக்கென்ன வேண்டும்? மேலே படிக்க வேண்டும், அதுதான் எனக்கு வேண்டியது என்றாள் இவள். இவர்களிடம் சொல் நிச்சயம் நடக்கும் என்று நம்பிக்கை ஊட்டினார் நகைக்கடைக்காரர்.

தினமும் வேலையை முடித்து ரயில் நிலையம் வழியாக வீட்டிற்கு வருவாள். அப்படி வரும் பொழுது ரயில் நிலையத்தின் சுவரில் இருந்த அறிவிப்பைக் கண்டாள். அது சுவாமி விவேகானந்தர் அந்த ரயில் நிலையத்திற்கு வந்து சென்றதை நினைவுகூறும் ஒரு அறிவிப்பு. கையில் கிடைக்கும் மலரை சுவாமி விவேகானந்தரின் ஓவியம் வரையப்பட்டிருந்த அந்த அறிவிப்பின் கீழ் வைத்து கண் மூடி வேண்டிவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டாள்.

இதைத் தினமும் பார்த்துவந்த ரயில் நிலையப் பெண் போலீஸ் ஒருவரும் இப்பெண்ணுக்குப் பழக்கமானார்.

ஆக இவளுடைய அன்றாட வேலைகளை முடித்தபின்னர் நகைக் கடைக்காரரிடமும் இந்த பெண் போலீஸிடமும் தினமும் சற்றுப் பேசிவிட்டு வீடு திரும்புவாள்.

ஒரு நாள் நகைக் கடைக்காரர், புதியதாக பழைய பேப்பர்களை வாங்கும் கடை வந்துள்ளது. அக்கடைக்காரரும் வேலைக்கு ஆள் வேண்டும் என்றார், நீ வந்ததும் அனுப்புகிறேன் என்றேன். உனக்கும் பணம் தேவைதானே, அந்த வேலையை ஏற்றுக்கொள் என்றார். அவளும் சம்மதித்து உடனே அப்புதிய கடைக்குச் சென்றாள். ‘மற்ற கடைகளுக்கு செய்வது போல் வாசல் சுத்தம் செய்வது, குடிநீர் கொண்டுவருவது ஆகியவற்றை செய்ய வேண்டும், நாளையிலிருந்து செய்கிறாயா’ என்று கடைக்காரர் கேட்க, ‘இன்றிலிருந்தே செய்கிறேன்’ என்று வேலையை ஆரம்பித்து முடித்தாள்.

பின் அங்கு இருந்த புத்தகக் குவியலில் ஸ்ரீ அரவிந்தரின் ஓவியத்தை அட்டைப்படமாகக் கொண்ட ஒரு புத்தகத்தைக் கண்டாள். கடைக்காரரிடம் கேட்கத் தயங்கியபடியே நிற்க, கடைக்காரர் ‘என்னம்மா வேண்டும். ஏதாவது பணம் அட்வான்ஸாக வேண்டுமா’ எனக் கேட்டார்.

‘பணமெல்லாம் வேண்டாம் அண்ணே, எனக்கு இந்த புத்தகம் மட்டும் கிடைக்குமா’ எனக் கேட்டாள். ‘இவ்வளவுதானா! இதென்ன பிரமாதம், எடுத்துக்கொள்’ என்றார்.

அது ஸ்ரீ அரவிந்தரின் 127-ஆவது பிறந்த நாளையொட்டி ‘ஞான ஆலயம்’ என்ற ஆன்மிக மாத இதழுடன் சிறப்பிணைப்பாக வெளியிடப்பட்ட ‘ஸ்ரீ அரவிந்தம்’ எனும் புத்தகம். அப்புத்தகத்தை எடுத்துக் கொண்டு இரயில் நிலையம் வந்தாள். கையில் புத்தகத்துடன் வருபவளைக் கண்ட பெண் போலீஸ், கையில் என்ன புத்தகம் எனக் கேட்டார். விபரம் அறிந்த பின், இவர்களைப் பற்றிய புத்தகத்தைத்தான் உனக்கு கொடுக்க வேண்டும் என்றிருந்தேன். அவர்களே உன்னிடம் வந்து விட்டார்கள் எனச் சொல்லி மகிழ்ந்தார்.

புத்தகத்தை ஆர்வமாய்ப் படித்தாள். ஒரு நாள் வழக்கம் போல் அதிகாலை வாசல் தெளித்து கோலம் போடச் சென்ற போது, ஒரு கைப் பை ரோடிலிருப்பதைக் கண்டாள். அதை எடுத்து பத்திரப்படுத்திவிட்டு, வேலைகளை முடித்துவிட்டு, நகைக்கடைக்காரரிடம் விபரம் சொல்லி அந்த கைப் பையைக் கொடுத்தாள்.

திறந்து பார்த்தால், பையில் நகை இருந்தது. விலாசம் ஏதாவது இருக்கிறதா எனப் பார்த்து கொடுத்துவிடுங்கள் எனக் கூறினாள். ‘விலாசம் ஏதும் இல்லை. நீயே வைத்துக்கொள். யாராவது வந்து கேட்டால் சொல்லி அனுப்புகிறேன். அன்னை உனக்கு படிப்புச் செலவிற்காகக் கொடுத்திருக்கிறார் போலிருக்கிறது’ எனச் சொல்லி அனுப்பிவிட்டார்.

கையில் பையோடு வழக்கம் போல இரயில் நிலையப் பெண் காவல் அதிகாரியிடம் பேச வந்தவள், ‘அக்கா இந்தப் பை வழியில் கிடைத்தது. உரியவரிடம் சேர்ப்பிக்க வேண்டும்’ எனக் கேட்டாள்.

பையை ஆராய்ந்த அதிகாரி, செல் போன் நம்பர் ஒன்று இருப்பதைக் கவனித்து, போன் செய்து பார்த்தார். எதிர்முனையில் எடுத்தவரிடம் விபரம் சொல்ல, தனது பெண் திருமணத்திற்காக எடுத்த நகை, அது தொலைந்து போனதால் அபசகுனமாகி நிலைமை மிகவும் சங்கடமாக உள்ளது எனக் கூறினார் போன் எடுத்தவர். பை விபரம், ரயிலில் வந்தது என அனைத்து விபரங்களையும் சரியாகக் கூறியதால், இரயில் நிலையம் வந்து வாங்கிச் செல்லுங்கள் என காவல் அதிகாரி சொன்னார்.

நகையைத் தொலைத்த பெண்மணி வந்து நகையைப் பெற்றுக் கொண்டு மிகுந்த நன்றிப்பெருக்கோடு தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் அந்தப் பெண் காவல் அதிகாரிடம் சொன்னார். அதற்கு அந்த காவல் அதிகாரி, நீங்கள் உண்மையில் நன்றி சொல்ல வேண்டியது இந்தப் பெண்ணிற்குத்தான். அவள்தான் இந்த பையைக் கொண்டுவந்து என்னிடம் கொடுத்து உரியவர்களிடம் சேர்க்கச் சொன்னாள் என்றார்.

அப்பெண்மணி, இந்தப் பெண்ணிடம் வந்து நன்றி கூறி பணம் எடுத்துக் கொடுக்க, பணம் எல்லாம் வேண்டாம் அம்மா என மறுத்துவிட்டாள்.

பின் இந்தப் பெண்ணின் விபரங்களைக் கேட்டு, உனது பெற்றோர்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல, அவளும் தன் வீட்டிற்கு அவர்களை அழைத்து வந்தாள்.

அப்பெண்மணி இந்தப் பெண்ணின் தந்தையிடம், இவளை நான் படிக்க வைக்கிறேன். என்னுடன் அனுப்பி வையுங்கள் எனக் கேட்டுக் கொண்டார். எங்களை இக்கட்டிலிருந்து காப்பாற்றிய உங்கள் பெண்ணிற்கு நாங்கள் செய்யும் கைமாறாகக் கொள்ள வேண்டும் எனக் கேட்டார். சில நாட்கள் கழித்து யோசித்து, பெற்றோர்களும் சம்மதித்து பெண்ணை அனுப்பி வைத்தனர்.

சமீபத்தில் காவல் நிலையப் பெண் அதிகாரி, அப்பெண் தற்பொழுது நர்ஸிங் காலேஜில் சேர்ந்து பயிலுவதாகச் சொன்னார். மேலும் அவர் கூறுகையில், என்னுடன் அப்பெண் பேசும்போது, ‘படிக்க வேண்டும் படிக்க வேண்டும் என்று கூறுகிறாயே, என்ன படிக்க ஆசை’ எனக் கேட்ட பொழுது, அவள் நர்ஸாக வேண்டும் எனக் கூறியதாகக் கூறினார். அன்னை அவளின் விருப்பப்படியே நர்ஸிங் கோர்ஸில் சேர்ந்து படிக்க அருள் புரிந்துள்ள கருணையை எண்ணி நெகிழ்ந்து இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அன்னை நம்மைத் தேடிவரத் தேவையான ஆர்வம், பரிபூரண உண்மை இந்தப் பெண்ணிடம் இருப்பதைக் காண முடிகிறது. மேலும் அன்னை இவளைத் தேடிவந்த வழிகள், - முதலில் நகைக்கடைக்காரர் வழியாக அறிமுகம், பின் பழைய பேப்பர் கடையில் கண்ட ஸ்ரீ அரவிந்த புத்தகம், அதுவும்போக, அன்னையின் புத்தகம் எதை இவளுக்குக் கொடுக்கலாம் என்ற நினைப்போடு பழகிய போலீஸ் அதிகாரி - நம்மைச் சுற்றியுள்ள சந்தர்ப்பங்கள் வழியாக அன்னை நம்மை நோக்கி வந்து, தம் கைகளால் நம்மை அரவணைத்து நம் ஆழ்மன ஆசையைப் பூர்த்தி செய்கிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

*********



book | by Dr. Radut