Skip to Content

12. அன்னை இலக்கியம் - பெண்ணின் பெருமை

அன்னை இலக்கியம்

பெண்ணின் பெருமை

இல. சுந்தரி

பெண்ணின் இனிமையும், பெருமையும் யோகத்தை வாழ்வாகவும், வாழ்வை யோகமாகவும் மாற்றவல்லது. வாழ்வு யோகமாவது பெண்ணின் பெருமை. யோகம் வாழ்க்கையாவது பெண்ணின் இனிமை.

ஸ்ரீ கர்மயோகி

சேவை ஸ்தாபனம் ஒன்றில் கடை நிலை ஊழியர் என்னும் அளவில் பணி செய்பவள் நான். நான் முன்பு வேலை செய்த வீட்டு எஜமானி பணிமாற்றல் பெற்று வேற்றூர் சென்று விட்டதால் அவருக்கு விஸ்வாசமாயிருந்த என்னை இங்கு வேலையில் சேர்த்துவிட்டு வயிற்றுப் பிழைப்பிற்கு வழி செய்ததோடு, பாமரப் பெண்ணாகிய எனக்கு ‘ஆன்மிகம்’ என்ற அற்புதத்தையும் பெற வழி செய்திருக்கிறார்.

என் பெயர் சாரதை. எனக்கு முப்பத்தெட்டு வயதாகிறது. மகப்பேற்றிற்கு வாய்ப்பில்லாதபடி, இளம் வயதில் வயிற்றுவலியால் துடித்த போது எனக்குச் செய்த அறுவை சிசிச்சையால் பாதிக்கப்பட்டேன். அதனால் திருமணம் கூடி வரவில்லை. பெற்றோரையும் இழந்தேன்.

அந்த நேரத்தில்தான் மூன்று சிறு குழந்தைகளுடன் தனியாக இருந்த என் எஜமானியம்மாள் வேலைக்குப் போய்வர மிகவும் சிரமப்படுகிறார் என்ற விபரம் தெரிய வந்து அவர்களிடம் வேலை கேட்டுச் சென்றேன். முழுநேரமும் வீட்டோடு இருக்கும் உதவியாள்தான் தனக்கு வேண்டும் என்றார்கள். ஆதரவற்ற நான் அவர்களுடன் தங்கி இட்ட வேலையைச் செய்வேன் என்றும், சோறும் துணியும் போதும். வேறு தேவை ஏதுமில்லை என்றேன். “அன்னையே! உன் கருணையே இது. இவளை நான் என் வீட்டு மனுஷியாகவே நடத்துவேன். நீரே இவளாக வந்தீர்’’ என்று அவர் வழிபடும் தெய்வத்திடம் நன்றி கூறி என்னை வேலையில் சேர்த்துக் கொண்டார். அவர்கள் கணவர் வேற்றூரில் பணி செய்வதாயும் அவர் இவர்களுக்கு ஆதரவு தரவில்லை என்பதையும் நான் தெரிந்து கொண்டேன். எப்படியோ, எனக்கு ஆதரவளித்த அவர்கள் குடும்பப் பொறுப்பை, வீட்டு வேலை, சமையல், சாமான் வாங்குவது, குழந்தைகளை நர்சரியில் விட்டு, அழைத்து வருவது யாவும் பொறுப்பாகச் செய்தேன். எஜமானி நிம்மதியாகத் தம் அலுவலக வேலைகளைச் செய்ததோடு குழந்தைகளையும், என்னையும் அழைத்துக்கொண்டு ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் தியான கூடத்திற்குச் செல்வார். அங்கு அவர் சிநேகிதியின் ஆலோசனையை ஏற்று அன்னையைப் பிரார்த்தித்து என்னை வேலைக்காரியாய் பெற்றதை நன்றியுடன் கூறுவார்.

எஜமானியம்மாள் தம் அலுவலகத்தில் திறம்படப் பணியாற்றி பதவி உயர்வும், பணிமாற்றலும் பெற்று விட்டார்கள். குழந்தைகளும் 15, 16 வயதை அடைந்து விட்டனர். அவர்கள் கணவரும் எஜமானியின் அருமை உணர்ந்து வீட்டாருடனும் இவர்களுடனும் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். குழந்தைகள் ஹாஸ்டலில் சேர்ந்து படிக்கச் சென்றனர். எனவே, என்னைத் தொடர்ந்து வேலையில் வைத்துக் கொள்ள முடியாததாலும், எனக்கு வேறு சொந்தம் இல்லாததாலும் அவர் சிநேகிதியின் மூலம் எனக்கு இந்தச் சேவை ஸ்தாபனத்தில் நிரந்தர வேலை வாங்கிக் கொடுத்துவிட்டார்கள்.

இந்த ஸ்தாபனத்தின் முக்கியப் பொறுப்பேற்றிருக்கும் பெண் அதிகாரியும் என்போல் குடும்ப பந்தம் இல்லாதவர். அவர் மட்டும் இங்கு மாடியில்தான் தங்குவார். அவர் தேவைகளைக் கவனிப்பது என் பொறுப்பு. அலுவலக நேரத்தில் (காலை 9 முதல் மாலை 5 வரை) அங்குப் பணி புரியும் எல்லோர்க்கும் தேவைப்பட்டதை நான் செய்ய வேண்டும். சுத்தப் பணியும் என்னுடையது. ஓரளவு படித்திருந்த எனக்கு ஆங்கிலம் கற்கவும் ஏற்பாடு செய்தனர். அலுவலகப் பணிகளில் தபால் அனுப்புவது போன்றவற்றிற்குப் பயிற்சியும் அளித்தனர்.

இங்குப் பணியாற்ற பட்டப்படிப்பு மட்டும் முழுத் தகுதியாகாது. ஆன்மிக ரீதியில் செயல்படுவது ஸ்தாபனத்தின் முக்கியக் குறிக்கோளாயிருந்ததால் ஆன்ம நாட்டம் உள்ளவர்களே இங்கு அதிகம். அத்தகுதியைப் பெற பயிற்சிக் கூடம் போல் இவர்களுக்கு ஒரு தியானக் கூடம் இருந்தது. அங்குச் சென்று தியானம் செய்வதுடன் இங்குப் பணிபுரிபவர்களுக்காக சொற்பொழிவுகள் நிகழ்த்தப் பெறுவதைக் கேட்டு அதன்படி நடக்கவும் ஏற்பாடு. என் பழைய எஜமானியம்மாளுடன் நான் முன்பே இங்கு வந்திருப்பதால் ஓரளவு தெரியும்.

இந்தச் சேவை ஸ்தாபனம் வெறும் தொழில் நிறுவனம் மட்டுமில்லை. இங்குப் பணியாற்ற கையாளும் ஆன்மிக முறைகள் (சுத்தம், ஒழுங்கு, சுயக்கட்டுப்பாடு, பணியை அர்ப்பணிப்பாகச் செய்தல், யாருடனும் சுமுகம் கெடாதிருத்தல், நாணயம், விஸ்வாசம், பலன் கருதாத தன்மை, தன் செயல் அடுத்தவர்க்கு நலன் விளைவிக்க வேண்டும் என்ற தன்னார்வம், பொறுமை, நிதானம்) மூலம் உள்ளிருக்கும் ஆன்மாவை செயலில் வெளிப்படுத்துவது இங்குள்ள இலட்சியம். எனவே, அப்படிப்பட்டவர்கள்தாம் இங்கு அதிகம். ஆரம்பத்தில் அப்படிப்பட்ட ஆர்வத்தில்தான் இங்கு வருவார்கள். ஆனாலும் ஆங்காங்கே மனித சுபாவம் வெளிப்படாதிராது. அங்குப் பயிற்சிக்காகத் தரப்படும் சொற்பொழிவைக் கேட்கும்போது அமைதியாகும் மனம் இங்குச் செயலுக்கு வரும்போது அலைபாய்வது பலருடைய அனுபவம்.

ஒருநாள் ஒரு அலுவலர் தம் சக அலுவலருடன் பேசியதை நான் கேட்க நேர்ந்தது. “கலாவுடன் சேர்ந்து பணி செய்யும் போது ஏதேனும் தகராறு வந்து விடுகிறது. நான் எவ்வளவுதான் விட்டுக் கொடுத்துப் போனாலும் அவள் தன் கடுமையை மாற்றிக் கொள்வதில்லை. எங்கே பொறுமையை இழந்து விடுவேனோ என்று ஆகிவிடுகிறது” என்றார் வசுமதி. அதற்கு அவர் தோழி, “அவசரப்படாதே வசு, அதுதான் நாம் கவனமாக இருக்க வேண்டிய இடம். சுமுகத்தை நம் அறிவு, உணர்வு, உடல், ஆன்மா, ஜீவன் யாவும் ஏற்க வேண்டும் என சொற்பொழிவில் கேட்டதை மறந்து விட்டாயா? பொறுமையை இழக்காமலிருப்பது ஆன்மா சுமுகத்தை ஏற்றதன் அடையாள- மல்லவா, அங்குச் சொற்பொழிவு தியரி கிளாஸ்தான். இங்குதானே நமக்குப் பிராக்டிகல் கிளாஸ்” என்று கூறியதை நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். சம அந்தஸ்த்தும் திறமையும் உள்ளவரிடமே கடுமையாய் நடப்பவர் என்போன்ற சாமான்யருடன் எப்படி நடந்து கொள்ளக்கூடும் என்று நினைத்துப் பாருங்கள். “இதில் தேறும் போதுதான் நமக்கு அன்னை’’ என்று அவர் கூறியது எனக்கே கூறியதாய் எடுத்துக் கொண்டேன்.

அங்கு, எல்லோரும் என்னைவிட படிப்பு, பதவி, பணம், அந்தஸ்த்து என்று எல்லாவிதத்திலும் உயர்ந்தவர்கள். எனவே, எல்லோரும் என்னிடம் சில நேரங்களில் அலட்சியமாய் நடந்து கொள்வார்கள். நான் கவலை கொள்வதேயில்லை.

“எவர் எப்படிப் பழகினாலும் நாம் பிரியமாய்ப் பழகினால் -தான் நம் மனம் சரியாக இருப்பதாக அர்த்தம்’’ என்று சொற்பொழிவில் கேட்டதை மனதில் பச்சைக்குத்தி வைத்-தி ருந்தேன். யார் எந்த வேலையை மீதிவைத்து விட்டுப் போக நேர்ந்தாலும் அதை அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அதாவது வேலையை முடித்துவிட்டு இன்றியமையாத அவசர நேரங்களில் file-ஐ எடுத்த இடத்தில் வைத்து டிராவை மூடி பொருட்களை அடுக்கிப் பூட்டாமல் போக நேரும் போது நானே பொறுப்பாக அவற்றைச் சரி செய்து அவர்களை விடுவிப்பேன். இங்குப் பணியாற்றுபவர்களுக்குக் குடும்பம், அது சார்ந்த கடமைகள் இருப்பதால் அவர்களுக்கு உதவியாக மளிகை, கறிகாய் வாங்கித்தரும் வேலையும் செய்வேன். ஆட்டோ வரவில்லையானால் குழந்தைகளை நானே நர்சரியில் கொண்டுவிட்டு அழைத்து வருவேன். வேலையைப் பெற்றுக்கொண்டு, என்னைச் சமமாக நடத்தினால் அவர்கள் மரியாதை குறைந்து விடும் என்ற அச்சத்தில் என்னை அலட்சியம் செய்து விட்டுப் போய் விடுவார்கள். நானோ இதுதான் என் அகந்தை கரைய அன்னை செய்த ஏற்பாடு என்று மனவலிபடாமல் விலகி விடுவேன். என் வாழ்வில் கடந்தகாலம் எனக்குக் குடும்பம் என்ற அமைப்பைக் கொடுக்காத சூட்சுமம் இப்போது புரிவது போலிருந்தது. குடும்பம் என்ற அமைப்பில் விரிசல் வரும் போது அதை ஒட்டிவிடப் பயன்படும் (ஞ்தட்) பசையாக நான் இருக்க வேண்டும் எனப்புரிந்து கொண்டேன். யாருக்கு எந்த வேலை செய்தாலும் அதை அன்னைக்கு அர்ப்பணிப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.

இந்த ஸ்தாபனத்தின் வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில்தான் என்றாலும் சிலர் வேலையை முடிப்பதற்காக Night Duty என்ற அமைப்பு இங்கில்லாத போதும் வந்து சில மணி நேரம் வேலை செய்வார்கள். மற்ற என் பணிகள் முடிந்த பின்னும் இவர்களுக்காக நானும் விழித்திருந்து உதவி செய்வேன். சிலர் நன்றியுடன் நடப்பார்கள். சிலர் எவ்வித நெகிழ்வும் இல்லாது சென்று விடுவார்கள். இங்குப் பணிபுரிபவர் ஏற்று நடப்பதற்காகவே மாதாமாதம் ஆன்மிகக் கோட்பாடுகளை விளக்கிச் சொற்பொழிவுகள் நடக்கும். அவற்றைக் கேட்டுக் கேட்டு வயிற்றுப் பிழைப்பிற்கான வாழ்வு மறந்தே போனது. ஆன்மதாகம், அன்னைமீது நாட்டம் வந்துவிட்டது.

சொற்பொழிவுகளில் அன்னையின் பெருமையும், அவர் அவதார நோக்கமும் அடிக்கடி கூறப்படும். அதைக் கேட்கும் போது அன்னைக்கே வாழ வேண்டும் என்ற எண்ணம் எழுவது உண்மையானாலும், வெளியுலகத் தொடர்பு வரும் போது சுபாவம் மேலெழுந்து விடுவதைக் கவனித்தால் புரியும்.

“ஆயிரம் காரணங்களுக்காக அன்பர்கள் அன்னையை விட்டு விலகுகின்றனர். அன்னையை நெருங்க அவர்கள் மனதில் ஒரு காரணமும் தோன்றுவதில்லை’’ என்று அன்னையை ஆழமாக ஏற்ற அன்பர் ஒருவர் மனம் உருகிக் கூறிய சொற்கள் என் நெஞ்சின் உள்ளாழத்தில் ஆணி அடித்தாற் போல் வந்தமர்ந்தது.

நாளடைவில் இவர்கள் தங்கள் பணிகளை அனிச்சை செயலாகச் செய்ய ஆரம்பித்தார்கள் சொற்பொழிவைக் கடைப்பிடிக்க ஆர்வப்படவில்லை. ஆனால் என்னார்வம் குறையவில்லை. பிறப்பின்பயன் புரிந்துவிட்டது. அன்னை எனக்கு இன்றியமையாதவரானார். எனவே, யார் என்ன சொன்னாலும், எப்படி நடந்து கொண்டாலும் நான் மாறாதிருக்க அன்னையைப் பிரார்த்தித்த வண்ணம் செயல்பட்டேன்.

என்னை உறுதிப்படுத்திக் கொள்ளும் நேரம் வந்தது. முக்கியப் பொறுப்பில் உள்ள (மேலதிகாரி) பெண்மணி சுபாவமாகவே கடுமையானவர். அவர் எவ்வளவுதான் மாறிக் கொள்ள முயன்றாலும் சுபாவம் முன்வந்து விடும். எனவே, கீழுள்ளவர்களிடம் கண்டிப்பு என்ற பெயரால் கடுமையாக நடந்து கொள்வார். மிகச்சிறந்த பணியாளர்களும் இவரால் மனம் புண்படுவர் ஒருவரோடொருவர் மன ஆறுதல் தேடி அவரால் தாம் புண்பட்டதைக் கூறி வருந்துவார்கள்.

பக்குவமான நிதானமுடைய மனம் புண்பட்டபொழுது உள்ளே உள்ள கருணை அதைக் கரைக்கும் என்றறியாது ரணத்தை ஆற்றும் மனிதாபிமானத்தை நாடி, மனிதாபிமானத்தையே நிலை நிறுத்துவர். பெரிய மனிதனும் மனம் புண்பட்ட போது சிறிய மனிதனாகிறான் என்று சொற்பொழிவில் கேட்ட கருத்து என்னுள் ஒலிக்கும். நான் ஆறுதல் கூறவோ, ஆறுதல் தேடவோ முயற்சி செய்யாமல் இங்கு ஏற்படும் மனவலி, அலட்சியப் போக்கு யாவற்றையும் விருப்பு, வெறுப்பின்றி ஏற்று மகிழப்பழகிக் கொண்டேன். இந்நிலையில் முக்கியப் பொறுப்பில் இருந்த பெண்மணி, பெரிய ஆர்வங்களோடு இங்குப் பணியாற்ற வந்தவர் என்று பாராட்டப்பட்டவர், நாளடைவில் இலட்சியம் மறந்து போய் தானே தலைவி, தன் கீழ்ப் பணியாற்றுபவர்கள் தன் விருப்பப்படி நடக்க வேண்டுöமன எதிர்பார்த்துச் செயல்பட ஆரம்பித்தார். இது மேலிடம் தொடங்கிச் சிறிது சிறிதாகப் பரவி அனைவரையும் பற்றிக் கொண்டது. இதன் விளைவு எல்லோராலும் நான் அதிகாரம் செய்யப்படவும் அலட்சியப்படுத்தப்படவும் ஆளானேன். என் இலட்சியம் அன்னையே என்பதை வலுப்படுத்த ஏற்பட்ட வாய்ப்பாகப் புரிந்து கொண்டு புண்படாத மனத்துடன் பணிவுடன் நடந்து கொண்டேன்.

இவையாவும் ஏதோவொரு நாடகம் போல் மேலிருந்து யாரோ இயக்குவது போல் தோன்றியது. இந்நிலையில் ஸ்தாபனத்தில் சுமுகக் குறைவு ஏற்பட்டு, வெளியுலகில் இதன் பெயர் கெட்டுவிடும் நிலை உருவானது. அப்போதுதான் அது நடந்தது. தீமை முழுமை பெற்றவுடன், நன்மை உருவாகும் என்ற வாசகம் நினைவு வந்தது.

ஸ்தாபனத்தின் முக்கியப் பொறுப்பிலுள்ள பெண் அதிகாரி விலகிட, புதிய முக்கியப் பொறுப்பாளர் வரப்போவதாக அனைவரும் கூடிக் கூடிப் பேசிக் கொண்டனர். நான் எது பற்றியும் கவலை கொள்ளவில்லை. யார் எனக்கு என்ன வேலை கொடுத்தாலும் பொறுமையுடன் எவ்வித எதிர்பார்ப்புமின்றி அன்னை நினைவுடன் சந்தோஷமாகச் செய்து கொண்டிருந்தேன். பழைய மேலதிகாரி வேலையை விட்டு விலகிவிட்டார். இனிப் புதியவர் வருகையை அனைவரும் எதிர் நோக்கியிருந்தனர். நானோ எந்த எதிர்பார்ப்புமின்றி சொற்பெõழிவில் சொல்லப்பட்ட கருத்துகளை — சுய ஆனந்தம் எழ சுயநலமான அகந்தை அகன்று அழிய வேண்டும், திட்டு அதிர்ஷ்டத்தின் டிரான்ஸ்பர் ஆர்டர், மன வலியை உள்ளே உள்ள கருணை கரைக்கும், நாம் செய்யும் வேலை அடுத்தவரைப் பாதிக்கக் கூடாது, யாருடனும் சுமுகம் கெடக் கூடாது, சுத்தமும் சத்தமின்மையும் அன்னை, நம்முள் அன்னை உள்ளார் என்பதையுணர்ந்து, நான் கருவி இல்லை. கர்த்தாயில்லை, செயலுக்கு நான் எந்தவகையிலும் தேவையில்லை — மனதில் நிறுத்தி எனக்கு இடப்பட்ட பணிகளைச் செய்த வண்ணமிருந்தேன்.

அந்த நாளும் வந்தது. காலை 9 மணிக்கு ஊழியர்கள் அனைவரும் தயாராகி, வரும் அதிகாரியை வரவேற்கச் சித்தமாயிருந்தனர். இங்கு ஆடம்பரம், ஆரவாரம் இரண்டும் விலக்கப்பட்டதால் அமைதியுடன் அனைவரும் காத்திருந்தனர்.

சாரதை! இப்போது புதிய அதிகாரி வரப் போகிறார். உள் வேலைகளை (முக்கிய பொறுப்பிலுள்ள வரும் மேலதிகாரிகள் மட்டும் இங்கு மேலே மாடியறையில்தான் தங்குவார்கள். அவர்கள், காலைச் சிற்றுண்டி முதல் உணவுத் தேவைகளைக் கவனிப்பது என் பொறுப்பு) முடித்துவிட்டு இங்கே வந்துவிடு என்றனர். கூறியபடியே வந்து விட்டேன். அவரவர் டேபிள்களை விட்டு வெளியே இருபுறமும் நிற்க, சற்றுப் பின்னால் ஒதுங்கி நானும் நின்று கொண்டேன்.

அழகிய பென்ஸ்கார் ஒன்று வாயில் முகப்பில் வந்து நின்றது. என் மனம் அதை புஷ்பகவிமானமாகக் கண்டது. அதிலிருந்து இறங்கி வந்த தேவதை போன்ற பெண் அதிகாரியின் முகத்தில் பொலிந்த புன்னகை அரவிந்த அன்னைக்கே உரிய தெய்வீகப் புன்னகை. பெருந்தன்மை, கனிவு, சமரசம் நிறைந்த புன்னகை. மெத்தென்ற திருவடிகளைப் பூப்போல் எடுத்து வைத்து உள்ளேவர அனைவரும் கைக்கூப்பி புன்னகை செய்ய அந்தத் தேவதையும் கையைக் கூப்பிய வண்ணம் அனைவரையும் விழிகளால் வருடியது. மென்மையாகச் சிரித்த வண்ணம் அனைவரையும் கடந்து வந்து ஒதுங்கி நின்ற என் தோள்மீது கையைப் பதித்து அணைத்த வண்ணம் உன் பேர்? என்றது.

உடம்பெல்லாம் மின்சாரம் பாயும் சிலிர்ப்பு எனக்கு. அவர்கள் அகத்தின் அழகைப் பிரதிபலிக்கும் முகமலர்ச்சி, விழிகளின் சிரிப்பு, அவர்களின் தெய்வீகத்தை உணர்த்தும் நறுமணம், அந்த மணம் தாழம்பூவின் மணம். ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனேன். இன்னும் உனக்குப் பெயரே வைக்கவில்லையா? என்று சிறு குழந்தையிடம் விளையாடுவது போல் கேட்கவே விழித்துக் கொண்டேன். என் பெயர் சாரதை என்று தணிந்த குரலில் கூறினேன்.

அனைவரையும் அன்புடன் நோக்கி, நீங்கள் உங்கள் பணிகளைத் தொடருங்கள் என்று கனிவுடன் கூறினார். வரும் அதிகாரிகளைக் கவனிக்கும் பொறுப்பிற்குரிய முகிலன் அதற்காக முன் வந்தார். நீங்கள் மற்ற வேலைகளைப் பாருங்கள். சாரதை என்னுடனிருப்பாள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று, தனக்கு யாரும் உதவிக்கு வரவேண்டாம் என நயமாகத் தடுத்து விட்டார்.

‘சாரதை! வா,’ என்று நீண்ட நெடுங்காலம் பழகிய தோழியைப் போல் என்னை உள்ளே அவருக்குரிய கேபினுக்கு அழைத்துச் சென்றார்.

‘அம்மா! டிபன் எடுத்து வரவா?’ என்று மிகப் பணிவுடன் மெல்லிய குரலில் கேட்டேன். ‘எடுத்து வரவேண்டாம். நானே அங்கு வருவேன்’ என்று இனிமையாய்க் கூறி சமையற் கூடத்திற்கே என்னுடன் வந்தார். அதுவொரு சிறிய சமையற்கூடம். இங்கேயே தங்கிவிடும் மேலதிகாரிகளுக்கு உணவளிக்க ஏற்பட்டது. இரவில் அதிக நேரம் இருந்து பணி செய்பவர்களுக்கும் இங்கு உணவோ, டீ, காபியோ நான் தயாரித்துத் தர வேண்டும். நான் வேலைக்கு வந்தது முதல் இது என் பொறுப்பு. தேவையான சமையற்பொருட்களைத் தட்டுப்பாடின்றி வாங்கி வைத்து விடுவேன். இந்த இடத்தையும் கோயில் போல் பக்தியாகக் கையாள்வேன்.

உள்ளே வந்தவர் எல்லாவற்றையும் பார்வையிட்டார். என்னைப் பாராட்டுவது போல் புருவத்தை உயர்த்தி கண்கள் மலர அவருக்கே உரிய முத்திரைச் சிரிப்பை உதிர்த்தார்கள். நான் எந்தவுலகில் இருக்கிறேன் என்று எனக்குப் புரியவில்லை. உள்ளே ஆனந்தம் அலைமோதியது. ஹாட்பேக்கில் (டணிtணீச்ஞிடு) இட்டு வைத்திருந்த இட்லி, தோசைகளில் இரண்டு எடுத்து பிளேட்டில் வைத்து, சட்னி கப்பை ஸ்பூனுடன் அருகில் வைத்தேன். நாற்காலியில் அமர்ந்த வண்ணம், உனக்கு? என்றார்கள். அதிர்ந்தே போனேன். அவர் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த அதிகாரி. நானோ கடைநிலை ஊழியர் என்று எல்லோராலும் ஒதுக்கப்படும் சாதாரணப் பெண். என்னை அவர் சமமாக நடத்துவது எனக்கே தாங்கவில்லை. மற்றவர் கண்டால் எப்படித் தாங்குவர்?

நீங்கள் சாப்பிட வேண்டும் என்று உபசரித்தேன். ஏன் நீ இன்று விரதமா? என்று என்னைக் கேலி செய்தார். இல்லை-யி ல்லை. அன்னைக்கு விரதம் ஏற்றதில்லை என்று அவசரமாய் என்னையறியாமல் கூறிவிட்டேன். ஓ! அப்படியென்றால் டிபனை எடுத்துக் கொண்டு இப்படி வா என்றார். அதில் ஒரு தாயின் பரிவு இருந்தது. சிறிதும் அதிகாரம் இல்லை. உருகிப் போனேன். எப்படி இதைச் செய்வேன்? மனம் துணியவில்லை. “நீ வரமாட்டாயா? நானும் இன்று விரதம்’’ என்று எழுந்துவிட்டார்கள். “தயவு செய்து சாப்பிடுங்கள்” என்று என்னையறியாமல் எழுந்திருந்த அவர்கள் கையைப்பற்றி உட்கார வைத்தேன். நீ என்னை விட்டு விடுவாயா என்ன? என்பது போல் என்னை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, அவருக்கே உரிய அன்னையின் முத்திரைச் சிரிப்புடன் அவர் கையைப் பிடித்திருந்த என் கையைப் பார்த்தார்கள். அப்போதுதான் என் அதீதச்செயல் புரிந்து சட்டென்று கையை எடுத்தேன். ஆனால் அந்தத் தெய்வம் மேலும் மேலும் எனக்குச் சச்சிதானந்த அபிஷேகம் செய்தது. ‘பரவாயில்லை வா. வந்து உட்கார். என்னுடன் சாப்பிடு’ என்றார்கள். தட்டில் இரண்டு இட்லிகளுடன் வந்தேன். நின்ற வண்ணம் உண்பதா தரையில் அமர்ந்து விடலாமா என்று நான் தவித்துக் கொண்டிருக்கும் போது நாற்காலியைத் தன் பக்கமாக நகர்த்தி என்னைப் பிடித்திழுத்து அதில் உட்காரச் செய்து விட்டார்கள். என் நிலை எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். நாற்காலி விளிம்பில் உட்கார்ந்து மிகுந்த தயக்க உணர்வுடன் இட்லியைச் சாப்பிட்டு முடித்து கைகழுவி அவர்கள் கை கழுவ குழாயைத் திறக்கவும், கையைத் துடைத்துக்கொள்ள டவலைக் கொடுக்கத் தயாராகவும் நின்றேன். என் செயல்களைக் கண்டு ரசித்துச் சிரித்த வண்ணம் கைகழுவ வந்தார்கள். கை கழுவி நான் கொடுத்த துண்டில் கையைத் துடைக்காமல் மிகுந்த குறும்புப் பார்வையுடன் என் புடவை முன்றானையில் கை துடைத்துக் கொண்டார்கள். அந்த அன்பு, உரிமை யாவும் என்னை நெகிழச் செய்தது (இந்த வரியை இங்கு எழுதும் போது என் கண்கள் கசிந்துருகுவதை அன்னையே அறிவார்). ‘ஙுணித ச்ணூஞு ணீஞுணூஞூஞுஞிt’ என்றார்கள். வெட்கத்தால் கூசிப் போனேன். (“ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின் கருணை’’ என்று இந்த மனநிலையில்தான் பாடியிருப்பார்களோ?)

‘சரி. நீ ரூமைக் கிளீன் செய்துவிட்டு, ஒரு கப் சூடான காபி- யுடன் கேபினுக்கு வா’ என்று மெல்ல என் முதுகில் தட்டிய வண்ணம் கூற மகிழ்ச்சிக் கடலில் மிதந்த வண்ணம் தலையாட்டினேன். ஏதோவொரு ஆனந்த வெள்ளத்தில் மிதந்த வண்ணம் ரூமைக் கிளீன் செய்துவிட்டு என் நெஞ்சத்து அன்பையெல்லாம் கொட்டி ஒரு கப் காபி தயாரித்து எடுத்துக் கொண்டு கேபினுக்குப் போனபோது இடக்கையால் இண்டர்காமில் இனிமையாக ஏதோ உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டே, வலக் கையால் கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருந்தார். ரசித்த வண்ணம் நின்றிருந்த என்னை புன்னகை பூத்த முகத்துடன் தலையசைத்து வா என்று ஜாடை செய்தார்கள். இரண்டு கைகளாலும் காபி கோப்பையை ஏந்திக் கொண்டு பணிவுடன் பக்கத்தில் போய் நின்றேன். மேனனும், சக்ரவர்த்தி சாரும் ‘மே ஐ கம் மின் மேம்?’ என்று கேட்க, புன்னகை மாறாத முகத்துடன் ‘எஸ் ப்ளீஸ் கம்’ என்றார்கள். இடக் கையால் என் கையிலிருந்த கோப்பையை எடுத்துக் கொண்டு வலக்கையால் அவர்களிடம் சில பைல்களைக் கொடுத்து விளக்கினார்கள். அவர்களும் அதைப் பெற்றுக் கொண்டு வெளியேறினார்கள். காபியைப் பருகிய வண்ணம், கண்கள் மலர்ந்து பாராட்டைத் தெரிவித்து, ‘நீ காபி குடித்தாயா?’ என்று எத்தனை பரிவுடன் கேட்டார்கள். இல்லை என்று தலையசைத்து கப்பை வாங்கிக் கொண்டேன். அவர்கள் அன்பில் என் இதயம் நெகிழ்ந்து கண்ணீராய் வெளிப்பட மெல்லத் துடைத்துக் கொண்டேன். கப்பை எடுத்துக் கொண்டு சமையலறைக்கு வந்த நான், என்னை மறந்து உணர்ச்சி வசப்பட்டு, அம்பாளின் வெற்றிலைப் பாக்கு எச்சிலை ”வைத்த மூகனைப் போல் எஞ்சிய சொட்டுக் காப்பியை அண்ணாந்து வாயில் கவிழ்த்துச் சுவைத்து சந்தோஷமாய்ச் சிரித்துக் கொண்டேன். அதே நேரம் பின்னால் யாரோ வருவது போன்றதொரு உள்ளுணர்வு தூண்ட திரும்பினேன். அவர்கள் தான் கையைக் கட்டிக் கொண்டு தலையைச் சாய்த்து என் செயலை ரசித்துக் கொண்டிருந்தார்கள். குற்றவுணர்வாலும், வெட்கத்தாலும் முகம் வியர்த்து படப்படப்பானேன். ‘ஒன்றும் தவறில்லை’ என்று இதமாகக் கூறினார்கள். கோப்பையை மேடை மீது வைத்துவிட்டு ஓடிப்போய் அவர்கள் பாதங்களில் குனிந்து மன்னிப்பு வேண்டினேன். ‘நீ தவறொன்றும் செய்யவில்லை. என்னைக் கண்டு பிடித்து விட்டாய்’ என்றார்கள்.

‘மதியவுணவு தயாரித்துவிட்டு எனக்கு வேலையில் உதவி செய்ய கேபினுக்கு வந்துவிடு’ என்றார்கள். எனக்கு என்ன தெரியும். பெரிய அதிகாரிக்கு வேலையில் நீலமேகம் சார்தான் உதவி செய்வார். அவரை விடுத்து என்னைப் போய் அழைக்கிறாரே என்று ஒரே குழப்பமாயிருந்தது. சொல்லி விடுவோமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே என் மனதைப் படித்தவர் போல் நீலமேகத்தை வெளியில் ஒரு வேலையாக அனுப்பி விட்டேன் என்றார்கள். வியப்புக் கூடியது.

அவர்கள் கூறியது போல் மதியவுணவு சமைத்தேன். எனக்கு இதில் திறமை ஏதுமில்லை. இருந்த அன்பையெல்லாம் கொட்டிச் சமைத்தேன். சமையல் முடித்து யாவற்றையும் பக்குவமாய் மூடிவைத்துவிட்டு கேபினுக்குச் சென்றேன். ‘வா’ என்பது போல் புன்னகைத்துத் தலையசைத்தார். அருகில் சென்றவுடன் சில பைல்களை எடுத்து என் கைகளில் கொடுத்தார். பழக்கமே இல்லாததால் என்ன செய்வதென்று புரியாமல் மலைப்புடன் இரண்டு கைகளையும் நீட்டிப் பெற்றுக் கொண்டேன். அந்த அறையில் புதிதாக ஒரு டேபிளும் சேரும் சற்று தள்ளிப் போடப்பட்டிருந்தது. ‘வா’ என்று என்னை அந்த டேபிளுக்கு அழைத்துச் சென்று, ‘இந்தா இப்படி வைத்துக் கொள். பைலைப் பிரி. இந்தா பேனா. நான் சொல்வது போல் செய்’ என்று அந்த பைலில் படித்து நான் கண்டுபிடிக்க வேண்டிய செய்தி அதைப் பற்றி நோட் எழுதக் கற்றுக் கொடுத்தார்கள். முன்பின் அறிந்திராத அப்பணியை எப்படிச் செய்தேன் என்றறியாமல் செய்துவிட்டேன். பைலையும், நோட் தயாரித்ததையும் அவர்களிடம் கொடுத்தேன். ‘வெரிகுட்’ என்றார்கள். அப்போதுதான் ‘மே ஐ கமின்’ என்ற காயத்ரி என்னிலையைக் கண்டு வியந்தாள். ‘காயத்ரி கமின்’ என்று அவளை அழைத்துவிட்டு ‘இந்தா சாரதை அந்த பைலையும் வாங்கிக் கொள்’ என்று காயத்ரி கொண்டு வந்த பைலையும் என்னிடம் கொடுக்க வைத்தார். அதை வாங்கி நான் என்ன செய்யப் போகிறேன் என்று காயத்ரி என்னை வியப்புடன் பார்க்க ‘இதிலும் நோட் எடுத்து விடு’ என்றார்கள். நான் ஓரளவு படித்தவள் என்று அங்குள்ளோர்க்குத் தெரியும். இங்கு வந்தவுடன் ஆங்கிலத் தனிப் பயிற்சியும் கொடுத்தார்கள். ஆனால் எனக்குப் பணியில் யாரும் பயிற்சியளிக்கவில்லை. இன்று இவர்கள் இதைத் தொடங்கி வைத்தார்கள்.

மதியம் மணி ஒன்று. கேபினுக்கு வெளியே வந்து, ‘நீங்களெல்லாம் சாப்பிடப் போகவில்லையா?’ என்று அன்புடன் விசாரித்தார்கள். எல்லோரும் ஓய்வறையில் உணவு கொள்ளச் சென்றனர். மீண்டும் கம்ப்யூட்டரில் வேலை தொடங்கினார்கள். நானும் எனக்களித்த வேலையைச் செய்தேன். மணி 1.30 ‘வா வா. சாப்பிடப் போவோம்’ என்று முதுகில் தட்டினார்கள்.

பைல்களில் அவர் கொடுத்த வேலையை முடித்துவிட்டிருந்தேன். அவர் டேபிளில் ஒரு புறம் அடையாளமாக வைத்துவிட்டு அவரைப் பின் தொடர்ந்தேன். கை கழுவிக் கொண்டு டைனிங் டேபிள் முன் வந்தமர்ந்தார்கள். நானும் கை கழுவிக் கொண்டு பிளேட் எடுத்து வைத்து, சமைத்த உணவுப் பண்டங்களை டேபிளில் கொண்டு வைத்துப் பரிமாறத் தயாரானேன். ‘நானே பரிமாறிக் கொள்வேன். நீயும் வா’ என்று உடன் சாப்பிட அழைத்தார்கள். என் நிலை தர்ம சங்கடமாயிற்று. அவருடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவது எனக்குக் கூச்சமாய் இருந்தது. நாற்காலி விளிம்பில் அமர்ந்து எப்படியோ சாப்பிட்டு எழுந்து விட்டேன். அவர்கள் ஒவ்வொரு பதார்த்தத்தையும் சிறிது சுவைத்துவிட்டு, ‘வெரிகுட் வெரிகுட்’ என்றார்கள். சிறப்பாகச் சமைக்கத் தெரியாத நான் அவர்மீது கொண்ட நன்மதிப்பால் அன்பைக் கொட்டிச் சமைத்தேன். என்ன சொல்வார்களோ என்று நினைத்தேன். இவர்களோ வெரிகுட் என்கிறார்கள். தெய்வம் பொய் கூடப் பேசுமா என்று நினைத்தேன். நான் பொய்யேதும் சொல்லவில்லை சாரதை. ஒவ்வொன்றிலும் உன் அன்பைத்தான் சுவைக்கிறேன் என்று என் நினைவிற்குப் பதில் போல் கூறினார்கள். எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. யாரிவர்? மேலதிகாரிதானா? அந்த வேடத்தில் வந்த தெய்வமா? என்று என் சிந்தனை ஓடியது.

வேஷம் போட்டு நடிக்கிறேன் என்று நினைக்கிறாயா? என்றார். இல்லையில்லை நீங்கள் நீங்களேதான் என்றேன். மாலை அலுவலக நேரம் முடிந்து யாவரும் விடை பெற்றுச் சென்று விட்டனர். நானும் அவரும் மட்டுமேயிருந்தோம். பழைய மேலதிகாரி மாலை 6 மணிக்கெல்லாம் தியானகூடம் சென்று விடுவார். 8 மணிக்குத்தான் வருவார்கள். நான் அவருக்கு இரவு நேர சிற்றுண்டி தர காத்திருப்பேன். உண்ட பிறகு மேலே அவர்கள் அறைக்குப் போய் விடுவார்கள். இரவில் அவருக்குப் பசும்பாலருந்தும் பழக்கமுண்டு. அதைப் பிளாஸ்க்கில் கொடுத்துவிட வேண்டும். அத்துடன் என் வேலை முடிந்து விடும். கீழே சமையலறையைப் பூட்டிவிட்டு மேலே என் அறைக்குப் போய்விடுவேன். இந்தப் புதிய மேல் அதிகாரியோ எல்லாவற்றிலும் வித்யாசமாயிருப்பதால் ஒன்றும் புரியவில்லை.

‘சாரதை! என்ன நினைக்கிறாய்? நான் எங்கும் வெளியில் செல்வேன் என்றா? இல்லை எனக்கு எப்போதும் உள்ளேதான் வேலை’ என்றார். புரியாது நின்றேன். ‘மேலே போகலாம் வா’ என்றார். உடன் சென்றேன். ‘உனக்கு எங்காவது போக வேண்டுமென்றால் போய்வா. தியானக் கூடம் செல்வாயா?’ என்றார். ‘பயிற்சிக்காகச் சொற்பொழிவு செய்வார்கள். அப்போது மட்டும்தான் போவேன். எனக்குத் தியானம் வராது. ஆனால் அன்னையைப்பற்றிய இனிய நினைவுகளுடன் அவருக்குப் பிடித்தது போல் வேலையைச் செய்து கொண்டிருப்பேன்’ என்றேன். ‘உன் சாதனை முறையானதுதான்’ என்றார். ஏதேதோ உயரிய கருத்துகள் ஆன்மிகம் தொடர்பாகப் பேசினார்கள். பரம சிஷ்யையாய் இருந்து கேட்டுக் கொண்டேன். இரவு 8 மணி ஆயிற்று. சாப்பிட அழைத்தேன். ‘போகலாமா?’ என்றார்.

‘நீங்கள் கீழே இறங்கி வரவேண்டாம். தோசை வார்த்துச் சூடாக நானே இங்குக் கொண்டு வருகிறேன்’ என்றேன். ‘நீ தவறாகச் சொல்கிறாய். நான் இரங்கி வரவில்லையென்றால் உன் போன்றோர் நிலை என்ன?’ என்றார் குறும்பாக.

உண்மைதான் என்று எண்ணிக் கொண்டேன். சிரமம் பாராது உடன் வந்தார். விரைவில் அடுப்பை ஏற்றி தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்துவிட்டு பிரிஜ்ஜிலிருந்து தோசைமாவு வைத்திருந்த பாத்திரத்தை எடுத்தேன். சூடாக மெல்லிதாக தோசை வார்த்து பிளேட்டில் வைத்தேன். ‘தொட்டுக் கொள்ள சட்னி வைக்கவா, பொடி வைக்கவா?’ என்றேன். ‘பொடி வைப்பது எனக்குப் பிடிக்காது’ என்று என்னைக் குறும்பாகப் பார்த்துச் சிரித்தார். எனக்கு வெட்கமாயிற்று. ‘உங்களுக்கு எது பிடிக்குமோ அதைச் செய்து தருகிறேன்’ என்றேன். ‘இங்கே வா’ என்றார். ஏதோ சொல்லப் போகிறார் என்று அருகில் சென்றேன். ‘இப்படி உட்கார்’ என்றார். தயங்கியபடியே உட்கார்ந்தேன்.

இடக்கையால் என்கையைப் பிடித்துக் கொண்டு வெறும் தோசையைச் சாப்பிட்டார்கள். துடித்துப் போனேன். ‘என்ன பார்க்கிறாய்? வெறும் தோசை என்றா? இல்லை சாரதை உன் அன்பு முழுவதும் இதில் சுவைக்கிறது. எனக்கு உணவுச் சுவையைவிட பக்திச் சுவையே பிடிக்கும்’ என்றார். இவருடைய ஒவ்வொரு சொல்லும், செயலும் என்னை உருக வைப்பதை என்னென்பேன். என் நெஞ்சம் உருகி கண் வழியே வந்து விடுகிறது. கை கழுவ நீர் வார்த்தேன். மதியவுணவருந்தியபின் என் சேலை முன்றானையில் அவர் கை துடைத்துக் கொண்ட ஆனந்த நினைவுடன் நானே என் சேலை தலைப்பை நீட்டி விட்டேன். சிரித்துக் கொண்டே கையைத் துடைத்துக் கொண்டார்கள். சற்று வரம்புமீறி விட்டேனோ என்று சஞ்சலம் வந்தது.

‘சரி. நீ சாப்பிட்டுவிட்டு மேலே வா. நான் இன்றிரவு நிறைய வேலைகளை முடித்துவிட்டு நாளை புறப்பட வேண்டும்’ என்றார்.

‘அதற்குள்ளாகவா?’ என்று பதறினேன். ‘வந்த வேலை முடிந்தால் போக வேண்டியதுதானே’ என்றார். ‘வந்த வேலையா? அதற்குள்ளாகவா முடிந்தது?’ என்றேன். ‘நான் உள்ளே வந்தவுடன் வேலை முடிந்து விட்டது. உனக்காகத்தான் இன்னும் இருக்கிறேன்’ என்றார். அவர் பூம் பாதங்களைப் பற்றிக் கொண்டு அழுதேன்.

‘தியானம் பழக்கமில்லை. வேறு ஏதோ செய்வேன் என்றாயே, அதைச் செய்’ என்று குறும்பாய்க் கூறிய வண்ணம் சென்றார்கள்.

இரவு மடிக்கணிணியில் நிறைய வேலை செய்தார்கள். என்னை அருகே அழைத்துப் பக்கத்தில் உட்காரச் சொன்னார்கள். மிகுந்த மரியாதையுடன், கூச்சத்துடன் உட்கார்ந்தேன். அந்தக் கணிணிப் பொறியைப் பயன்படுத்தக் கற்றுக் கொடுத்தார்கள். ‘நீண்ட நேரம் ஆகிவிட்டது. இந்தா. இது உனக்கே. பொறுமையாய் எல்லாவற்றையும் தெரிந்து கொள்’ என்று அந்தப் புத்தம் புதிய கணிணியை எனக்கே அளித்தார். விழிநீர் பெருகப் பெற்றுக் கொண்டேன்.

அவருக்கென இடப்பட்ட படுக்கையைச் சரி செய்து புதிய விரிப்பை விரித்தேன். ‘நேரமாகிவிட்டது. படுத்துக் கொள்ளுங்கள்’ என்றேன். ‘எனக்கேது நேரம் காலம்? காலத்தை, கடந்ததை, கடந்ததைக் கடந்தவள் நான்’ என்று கூறிய போது அந்த முகத்தின் பிரகாசம் அன்னை முத்திரையான பூஞ்சிரிப்பு என்னை என்னவோ செய்தது. ‘விஸ்வரூப தரிசனமா! என்ன பிரமித்துவிட்டாய்? அன்னையை நினைத்து நினைத்து யாவும் உனக்கு அவராகத் தெரிகிறது’ என்று என்னைக் கேலி செய்தார். அந்தப் பாதங்களில் முகம் பதித்தேன். சிரித்தார்கள் மனமில்லாது எழுந்து விடை பெற்றேன். ‘குட்நைட்! காலையில் பார்ப்போம்’ என்றார்கள். அன்று முழுதும் அனுபவித்த ஆன்மிக சுகந்தம் என்னை மெய்ம்மறக்கச் செய்தது. அயர்ந்து உறங்கிவிட்டேன். கண் விழித்த போது காலை 6 மணி. அலறி அடித்துக் கொண்டு எழுந்தேன். பல்துலக்கி, முகம் கழுவி காபி தயாரிக்க சமையல் அறையைத் திறக்க நினைத்த போது உள்ளே விளக்கு எரிந்தது. எப்படி? வியப்புடன் உள்ளே சென்ற நான் தடுமாறிப் போனேன். அவர்களே பால் காய்ச்சி டிகாஷன் போட்டிருக்கிறார்கள். பழைய அதிகாரியாயிருந்தால் இந்நேரம் வசைமாரி பொழிந்திருப்பõர்கள். இவரோ வா என்று புன்னகையுடன் அழைத்தார்கள். ‘எப்போதும் தவறியதில்லை. இனியும் இத்தவற்றினை செய்ய- மாட்டேன்’ என்று மன்னிப்பு வேண்டினேன். ‘உன் அன்பைப் பெற்ற எனக்கு ஒரு வாய்ப்பளித்தாய்’ என்றார். நான் அவருக்குச் செய்ய வேண்டியதை அவர் எனக்குச் செய்தார். கோப்பையில் காப்பியை ஊற்றி என்னிடம் தந்தார். அவர் முன் அதைப் பருகத் தயங்கினேன். ‘பரவாயில்லை குடி’ என்றார்கள். தயக்கத்தோடு பணிவாக அதைக் குடித்துவிட்டேன். தெய்வத்திற்கு நிவேதித்-ததை பிரசாதமாக எல்லோரும் பெறுவார்கள். இங்கோ தெய்வமே எனக்குத் தயாரித்தளிக்கிறது என்று நினைத்தேன். என்னைப் பார்த்துச் சிரித்தார். புதிய மேலதிகாரி வருவார். உன் சாதனா முறையைத் (அன்னை நினைவுடன் அன்னைக்குப் பிடித்ததைச் செய்வது) தொடர் என்றார். நான் பிரிவுத் துன்பத்தால் பற்றப்படுமுன் அவர் “நான் பௌதிகம் களையப் போகிறேன். இனி என்னை அங்கே (என் நெஞ்சைத் தொட்டுக் காட்டி) காண்’’ என்றார்கள். உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்துக் கரைந்தேன்.

அவர் விட்டுச் சென்ற நினைவும், ஸ்பரிசமும் இனிக்கப் பணியைத் தொடர்ந்தேன்.

மீண்டும் புதிய மேலதிகாரி வரப் போகிறார்.

எப்படியிருப்பாரோ என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை. என் தெய்வத்தின் நினைவும் தீண்டலும் என்னைச் செம்மையாக இயங்க வைக்க, நான் கருவியில்லை, நான் கர்த்தாயில்லை. இந்த வேலைக்கு நான் தேவையுமில்லை என்று அன்னையை என்னுள் செயல்படவிட்டுச் சும்மாயிருந்து சுகம் பெறுகிறேன்.

(முற்றும்)

***********

ஜீவிய மணி

நாம் அன்னையை அறிய முயலும் பொழுது நம் பலனைக் கொண்டு கணிக்கக் கூடாது. ஸ்ரீ அரவிந்தர் அன்னையை எப்படி வர்ணித்திருக்கிறார் என்று அறிய வேண்டும். நம்மைச் சூழ்ந்துள்ள காற்றை நாம் அறிவதில்லை. அதன் அத்தியாவசியத்தை மேல் நாட்டினர் தற்சமயம் கண்டு கொண்டனர். ஏராளமாக இருக்கும் பொழுது நினைவில் வராத காற்றை, அது கெட்டுப் போய் மூச்சடைக்கும் பொழுது நினைக்கிறோம். ஆகர்ஷண சக்தி என ஒன்று உள்ளது என்பதைப் புத்தகம் படிக்கும்பொழுது நினைக்கிறோம். மற்ற நேரம் மனத்தை அது தொடுவதில்லை. அப்படியிருக்க, நாம் எப்படி அன்னையை அறியப் போகிறோம்?

அன்னை நம்மைச் சூழ்ந்தும், உள்ளே நிறைந்தும் இடைவிடாது நம் எண்ணங்களில் கலந்தும், உணர்ச்சிகளில் ஊடுருவியும், செயலாக மாறியும் உள்ளார்.

அன்னையே எல்லாம், நாமே அன்னை.
நம் நினைவும் அன்னை, மறதியும் அன்னை.

********



book | by Dr. Radut