Skip to Content

08. தனித்தன்மையும் அதற்குரிய அடையாளங்களும்

தனித்தன்மையும் அதற்குரிய அடையாளங்களும்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

மூலம்: ஸ்ரீ கர்மயோகி

விரிவாக்கம் - சொற்பொழிவு ஆற்றியவர்: திரு. N. அசோகன்

சொற்பொழிவு ஆற்றிய தேதி: 24.04.2015

தனித்தன்மையை நிரூபிக்க original-லாக நாம் சிந்திக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எல்லோருக்கும் தெரிந்த பல விஷயங்களை எவரும் முன்வந்து செய்வதில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நல்ல விஷயத்தை நாம் ஏன் செய்யக்கூடாது என்று முனைந்து செயல்வடிவம் கொடுப்பவர்-கள் அந்த வகையில் originality உள்ளவர்களாகக் கொள்ளப்படுவார்கள். அந்நியனான வெள்ளையன் நம்மை ஆட்சி செய்வது தவறு. அவனிடமிருந்து விடுதலை பெறுவது நாட்டிற்கு நல்லது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் எவருக்கும் வாய்விட்டு அதை உரிமையுடன் கேட்க தைரியமில்லை. அப்படி வாய்விட்டு தைரியமாகக் கேட்டவர் காந்திஜி ஒருவர் மட்டும்தான். சரி கேட்டுவிட்டோம் அதை எப்படி செயல்படுத்துவது என்ற அடுத்த கேள்வி வருகிறது. அதற்கும் சத்தியாக்கிரகம், ஒத்துழையாமை இயக்கம் என்று செயல்வடிவம் கொடுத்தார். அம்மாதிரியே சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து 1960 வரைநாட்டில் உணவுப் பற்றாக்குறை இருந்தது. அதன் விளைவாக பஞ்சமும், பட்டினியும் மக்கள் அனுபவித்தார்கள். ஜனத்தொகை பெருகிவரும் காலத்தில் நாளாக நாளாக இந்தப் பஞ்சமும், பட்டினியும் அதிகமாகும் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் மேலை நாடுகளிலிருந்து கோதுமை, அரிசி போன்ற தானியங்களை இறக்குமதி செய்து சமாளித்துக் கொள்ளலாம் என்றுதான் ஆட்சிப் பொறுப்பிலிருந்தவர்கள் நினைத்தார்களே தவிர நம் நாட்டிலேயே பற்றாக்குறையாக இருக்கும் உணவை உற்பத்தி செய்து கொள்ளலாம், மேலை நாட்டு அரசிடம் கையேந்தத் தேவையில்லை என்று முதன்முதலில் வெளிப்படையாகப் பேசியவர் காலஞ்சென்ற மத்திய உணவு அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவர்கள்தான். அதாவது அவருடைய ணிணூடிஞ்டிணச்டூடிtதூ மேலை நாடுகளுடைய தயவை எதிர்பார்க்காமல் நம் சொந்தக் காலிலேயே நிற்போம் என்று பேசியதில்தான் இருக்கிறது. அந்த விஷயத்தில் அவர் முன்னோடியாகச் செயல்பட்டார். அவர் சொல்லியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அதைச் செயல்படுத்தியும் காட்டினார். அதாவது பசுமைப் புரட்சி என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்து இயக்கத்திற்கு ஆதரவாக உயர்ரக தானிய விதைகள், உரமூட்டைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், புதியதாக உற்பத்தியாகும் தானிய மூட்டைகளைச் சேகரித்து வைத்துக் கொள்ளத் தேவையான உணவுக் கிடங்குகள், மூட்டைகளை எல்லா இடத்திற்கும் கொண்டு செல்லத் தேவையான லாரிகள், minimum floor price என்று எல்லாவற்றையும் கொண்டுவந்து பசுமைப் புரட்சி வெறும் பேச்சில்லை நிஜம் என்று அவர் மாற்றிக் காட்டினார். மறைந்த தலைவர் காமராஜர் அவர்களும் அப்படி முன்னேற்றத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதில் மிகுந்த originality உள்ளவர். இந்திய மக்கள் முன்னேற எது உதவியாக இருக்கும் என்று நாட்டின் தலைமை விவாதம் செய்து கொண்டிருந்தபோது அவரவருக்குத் தேவையான கல்வியறிவைக் கொடுத்துவிட்டால், அவரவரும் தன்னைத் தானே முன்னேற்றிக் கொள்வார்கள் என்று அவரொரு யோசனை வழங்கினார். பள்ளிக்குப் பிள்ளைகள் ஒழுங்காக வருவதில்øலயே அதற்கு என்ன செய்வது என்று அடுத்த கேள்வி எழுந்தபோது, மதிய உணவு பள்ளியில் வழங்கிவிட்டால் பிள்ளைகள் தவறாமல் வருவார்கள் என்று சொல்லி மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் அவர்தான். இம்மாதிரி செய்ய வேண்டிய காரியங்களை முன்வந்து தைரியமாக அமல்படுத்துபவர்கள் அந்த வகையில் ணிணூடிஞ்டிணச்டூடிtதூ உள்ளவர்கள் என்று சொல்லவேண்டும். அப்படிப் பார்த்தால், பென்ஷன் வாங்கும் அரசு ஊழியர்கள் காலமாகும்போது அந்தப் பென்ஷன் நிறுத்தப்பட்டு வந்தது. பென்ஷன் நிறுத்தப்படுவது காலஞ் சென்றவரின் குடும்பத்தினரை மிகவும் சங்கடத்திற்கு ஆளாக்கியது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் எவரும் எதுவும் செய்யவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் இப்படி விதவையாகிப் போகும் பெண்கள் படும் கஷ்டத்தை உணர்ந்து, அரசு ஊழியர் காலமானாலும், அவருக்குக் கொடுக்கப்பட்ட பென்ஷன் அவருடைய மனைவி- யாகிய விதவைக்கும் வழங்கப்பட வேண்டும் என்றவொரு சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தார். அம்மாதிரியே ரயில்வே துறையும் அரசைச் சேர்ந்ததாக இருந்தாலும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் ஏதோவொரு காரணத்தால் ரயில்வே ஊழியர்களுக்குக் கிடைக்காமல் இருந்து வந்தது. இதற்காக சிலபேர் சட்டத் திருத்தம் கொண்டுவர முயற்சி செய்தபோது, அது நடைமுறைக்குவர இருபது வருடங்களுக்கு மேல் ஆகியது.

ஏற்கனவே அமலிலுள்ள சர்க்கார் பென்ஷனை ரயில்வே துறைக்கும் நீட்டிக்க முடிந்ததை ரயில்வே துறையில் நிகழ்த்திய ஒரிஜினல் சாதனையாகத்தான் நாம் நினைக்க வேண்டும். நம் நாட்டில் எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் எவரும் எடுத்துச் செய்ய முன்வருவதில்லை. அப்படி ஒருவர் எடுத்துச் செய்தால் அவரை ஏதோ ஒரு அதிசயப் பிறவிபோல் பார்க்கின்றனர். உதாரணமாக இந்தியா சுத்தமாக இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் விமான நிலையத்தைவிட்டு வெளியேறி டாக்ஸி பிடித்து வரும்போதே நம் நாட்டு நெடுஞ்சாலைகள் சுத்தமாக இல்லை என்று உடனே சொல்லிவிடுகிறார்கள். இதைச் சொல்லாத வெளிநாட்டுப் பயணியே இல்லை. சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இது நம் காதில் விழுந்தாலும், எந்த ஆட்சியும் இதுவரையில் எதையும் செய்ததில்லை. தற்போதையப் பிரதமர் திரு. மோடி அவர்கள்தான் ‘ஸ்வச்ச பாரத்’ கிளீன் இந்தியா என்ற சுத்தப்படுத்தும் இயக்கத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இந்த ஒரு செயலுக்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Originality-ஐ நாம் அறிவின் செயல்பாடாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால் திரு. கர்மயோகி அவர்கள் originality என்பது ஆன்மாவின் விசேஷத்திறன் என்கிறார். அதாவது மனத்தை நாம் தாண்டிச் சென்றபின்தான், ஆத்மாவின் originality செயல்பட ஆரம்பிக்கும் என்று சொல்கிறார். அறிவின் திறனை மிகவும் நம்புகின்ற வெளிநாட்டு அறிஞர்கள் இக்கருத்தை அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அறிவிலிருந்துதான் originality பிறக்கிறது, ஆத்மாவிற்கு இங்கு வேலையே இல்லை என்றுதான் அவர்கள் அடித்துப் பேசுவார்கள். அவர்களுடைய எதிர்ப்பை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. நம்நாட்டு அறிஞர்களின் செயல்பாட்டை நாம் கவனித்தால், இது எந்தளவிற்கு உண்மை என்று விளங்கும். பகவான் சாவித்ரி, லைப் டிவைன் எழுதும்போது அவர் சிந்திக்கவே இல்லை. அவருக்குத் தோன்றிய எண்ணங்கள் எல்லாம் அறிவைத் தாண்டிய நிலையிலுள்ள ஒரு ஆன்மிக மௌனத்திலிருந்து எழுந்தவைதான் என்று அன்னை சொல்கிறார். பகவான் ஒரு ஆன்மிகவாதி எனும்பொழுது அவருக்கு ஆன்மிகத்தில் எழுச்சி இருந்ததில் ஆச்சரியமில்லை என்று நாம் நினைக்கலாம். ஆனால் கணிதமேதை ராமானுஜம் அவர்களை எடுத்துக் கொள்வோம். கணிதத்திற்கும் ஆன்மிகத்திற்கும் தொடர்பே கிடையாது. அதனால் முழுக்க முழுக்க ராமானுஜம் அவர்களின் கணிதப் புலமை அவருடைய அறிவின் originality-யாகத்தான் இருக்க வேண்டும் என்று நாம் பேசலாம். ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாற்றில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், என் இஷ்ட தெய்வமாகிய நாமகிரியின் அருள் எனக்கு ஒளியாக அவருடைய விக்கிரகத்திலிருந்து கிளம்பி வருகிறது. அது என் தலையினுள் நுழைந்து என் அறிவைத்தூண்டி கணித சூத்திரங்களாக வெளிவருகிறது. நாமகிரி தெய்வத்திடமிருந்து வரும் அருள்ஜோதிதான் என்னுடைய அறிவை இயங்க வைக்கிறதே தவிர என்றைக்குமே என்னறிவின் சொந்தத் திறனை நான் நம்பியதே இல்லை என்று சொல்லியிருக்கிறார். இப்படிக் கணித மேதையே அறிவின் originality-க்குப்பின் ஆத்மாவின் ஜோதி இருக்கிறது என்று சொல்லும்போது நாம் இவர் சொல்வதைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர பகுத்தறிவை நம்புகின்ற மேலைநாட்டு அறிஞர்களின் வாதத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

(தொடரும்)

*********



book | by Dr. Radut