Skip to Content

10. அன்னை இலக்கியம் - அன்னையின் அற்புதம்

அன்னை இலக்கியம்

அன்னையின் அற்புதம்

இல. சுந்தரி

“எனக்குப் பொய் சொல்ல முடியாது" என்று முடிவு எடுத்தவுடன், அது சத்தியத்தை அழைப்பதாகும். சத்தியம் மேலே எழுந்து வரும். அது சூழலைக் கனக்கச் செய்யும். கனத்த சூழல் நிலைமையை மாற்றும். பொய் சொல்லும் சந்தர்ப்பம் எழாது. இலஞ்சம் கொடுக்கமாட்டேன் என்பதற்கும் இதுவே வழி. இதனால் நிலையான தரிசனம் நிதர்சனமாகும்.

ஸ்ரீ கர்மயோகி

என் தோழி உமா திடீரென ஒருநாள் ‘நித்யா, நான் சில தினங்களாக தியான மையம் சென்று வருகிறேன். மனதிற்கு இதமாக இருக்கிறது. பணப்பிரச்சனை தீர்ந்து சந்தோஷமாக இருக்கிறேன். இன்று உன்னையும் அழைத்துப் போகத் தோன்றியது வருகிறாயா?’ என்றாள்.

‘தியான மையமா? அப்படியென்றால்? என்றேன். ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரைக் குறித்துத் தியானம் செய்யும் இடம் என்று சொல்லலாம். இதுவே போதிய விளக்கமாகாது. போகப் போகப் புரியும்’ என்றாள்.

அங்குப் போவதால் என்ன பயன் கிடைக்கும்?’ என்று மனித சுபாவத்தை வெளிப்படுத்தினேன். ‘கடவுளைத் தியானித்தால் கடவுளருள் கிடைக்கிறது. இவர்கள் பூரண யோகம் செய்து சத்திய ஜீவிய சக்தியைப் புவிக்குக் கொண்டு வந்தவர்கள். இவர்களைத் தியானிப்பதால் இவர்கள் யோக சக்தியை நாமும் வாழ்வில் அதிர்ஷ்டமாகப் பெறலாம். ஒரு விளக்கத்திற்குத்தான் சொன்னேன். இப்படிப் பயன்கருதி நாம் கடவுளை வணங்குவது சிறந்ததா என்ன’ என்றாள்.

என் சின்னபுத்திக்கு வெட்கினேன். பயன் கருதியே செயல்பட்டுப் பழக்கமாகிவிட்டது. உள்ளே நுழையும் முன்பே அன்னையின் சட்டத்தில் ஒன்றை, அதாவது பயன் கருதிச் செயல்படுவதைத் தவிர்த்தலைப் பற்றினேன்.

முதலில் தோழியுடனும், பிறகு தனியாகவும் தியான மையம் செல்லத் தொடங்கி விட்டேன். வாய் மொழியால் நல்லது பரவும் என்பதற்குத் தியான மையச் சொற்பொழிவுகளை உதாரணமாய்க் கூறலாம். அங்கு நிகழ்ந்த சொற்பொழிவுகள் வாயிலாகத்தான் என் ஆன்ம விழிப்பிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பழைய வாழ்வை நினைவு கூர்ந்து, அதை அன்னை வாழ்வாக மாற்றக் கற்பிக்கப்பட்டது.

தியான மையம் என்ற இடத்தில் நான் கண்டது மிகத் தூய ஒரு சூழல். மிகப் பெரிய ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் திருவுருவப்படங்கள். ஊதுபத்திகளின், மற்றும் மலர்களின் நறுமணம். மிகுந்த அடக்கத்தோடு தொண்டு செய்யும் அன்பர் குழாம். மொத்தத்தில் சுமுகமான இனிய சூழல்.

மாலையில் 6 மணி முதல் 8 மணி வரை தியானம் செய்வோர் தினமும் வருகின்றனர். காலையிலும் 6 மணி முதல் 9 மணி வரை வந்து தியானம் செய்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புக் கூடல் நடைபெறுகிறது. அப்போது ஸ்ரீ அரவிந்தரின் ‘சாவித்ரி’, ‘Life Divine’ நூல்களிலிருந்தும், ஸ்ரீ அன்னையின் ‘பிரார்த்தனைகளும் தியானங்களும்’ என்ற நூலிலிருந்தும் சில பகுதிகள் படிக்கப்படுகின்றன. அன்பர் ஒருவரின் ஸ்ரீ அன்னை பகவானின் கருத்துகளை, கோட்பாடுகளை வாழ்வில் ஏற்றுப் பயன்பெறும் வண்ணம் எழுதப்பட்ட கட்டுரைகள் சொற்பொழிவாகவும், கலந்துரையாடலாகவும் அளிக்கப்படுகின்றன. மைய நிர்வாகி மாதவன் தன் வாழ்வை அன்னை மயமாக ஆக்கிக் கொண்டவர் எனலாம். தனக்கென குடும்பம், தேவை ஏதுமில்லாதவர். மலர்ந்த முகத்துடன் அன்பர்களின் வினாக்களுக்கு மேற்படி கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு பதிலளிப்பார். பிரச்சனைகளுக்கு அன்னை முறை தீர்வுகளை அன்பர் ஒருவரின் நூல்கள் வாயிலாகக் கூறுவார். ஸ்ரீ அன்னை, பகவான் எழுதிய நூல்கள் மற்றும் மையம் நடத்த வழிகாட்டி உதவும் அன்பர் எழுதிய நூல்கள், மேற்படி வழிகாட்டும் அன்பரிடமிருந்து வரும் செய்திகள் யாவற்றையும் முறையாக வைத்துப் பாதுகாப்பதுடன் ஆர்வத்துடன் படிக்கக் கேட்டவர்க்குத் தந்தும் உதவுவார். எந்நேரமும் மையத்தின் சுத்தத்தையும் சூழலையும் பாதுகாப்பதைத் தம் பணியாகக் கொள்வார்.

நான் இம்மையத்தின் சூழலால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இங்குத் தொண்டு செய்யும் அன்பர்களுக்கு வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் மனித வாழ்வின் மிகச்சிறந்த நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும். சுயபெருமையில்லாது இங்கு தொண்டு செய்ய வேண்டும். சுயக்கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும். மிதியடிகளை கழற்றும் போதே, மனமாசுகளையும் கழற்றிவிட்டு வரவேண்டும். அன்னையின் திருமுன்பு யாருடனும் பகையுணர்வு, பொறாமையுணர்வு கொள்ளாதிருக்க வேண்டும். அன்பர்களில் அன்னையைக் காண வேண்டும்.

எப்பொழுதும், கோபதாபங்களுடனும் போட்டி பொறாமைகளுடனும் ஆரோக்யமில்லாத வாழ்வு வாழும் சூழலிலிருந்து, சிறிது சிறிதாக ஆரோக்யமான ஒரு சூழலுக்கு வந்து விடுவோம். இது முதற்பயன்.

இங்குச் சுத்தமும், சத்தமின்மையும் வலியுறுத்தப் பெற்றன. இவற்றை நாம் மூட நம்பிக்கையாகப் புரிந்து கொள்ளாமல் அதன் ஆன்மீகப் பயனுடன் விளக்கப்பட்டது. சுத்தமும், சுமுகமும் செல்வம் வரும் வழிகள் என்பது பல அன்பர்களின் அனுபவமாக இங்கு நிரூபிக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக சமர்ப்பணம் என்ற உபாயம் (பொறுப்பை அன்னையிடம் ஒப்படைப்பது) கிடைத்தது.

அன்னையிடம் ஒப்படைக்கும் போது பாதிப்புகள் விலகி பாதுகாப்புக் கிடைப்பதை பலரும் கூறினார்கள்.

கெட்டது போய் நல்லது வரவேண்டும். அல்பசொல்பங்கள் போய் அழகும், பெருந்தன்மையும் வரவேண்டும், நல்லெண்ணம் வேண்டும், பிறர் வாழ்வு சிறப்பதை மனம் விரும்ப வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டது. நம் சாதாரண வாழ்வில் இவையெல்லாம் நல்ல பெயரையோ, ஏமாளிப்பட்டத்தையோ பெற்றுத் தரும். அன்னைக்காக இவற்றைச் செய்யும் போது வாழ்வில் அன்னை வெளிப்படுவார் என்று சொல்லப்பட்டது. அன்பர்கள், சத்தியத்தின் சக்தியாகிய அன்னை சக்தியைப் பெற சத்தியத்தை விரும்ப வேண்டும். இலஞ்சம் கொடுப்பதோ, பெறுவதோ கூடாது எனவும் கூறப்பட்டது.

அன்பர்கள் அன்னையால் தங்கள் பிரச்சனைகள் தீர்ந்ததை, வறுமை நீங்கி வளம் வந்ததை நன்றியுடன் கூறுவதன் மூலம் தங்கள் அனுபவங்களை அன்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

இதுவரை தியானமையம் சென்றதையும், அங்கு கூறக் கேட்டதையும் கூறினேன். என் வாழ்வில் அன்னை வெளிப்பட்ட அனுபவத்தைக் கூற வேண்டாமா? ஒருவர் நம்பிக்கையை அனைவரும் ஏற்பது இதுவரை உலகம் ஏற்ற வழிபாடு. அன்னை கோட்பாடு, அவரவர்கட்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பது.

அன்னையிடம் வந்த சில தினங்களுக்குள்ளேயே என் சகோதரர் மூலம் எனக்கொரு செய்தி வந்தது.

என் கணவர் இறந்த போது அரசாணைப்படி எனக்கும் குடும்ப ஓய்வூதியமாக ஒரு கணிசமான தொகை மாதாமாதம் கிடைத்தது. குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க அது பயன்பட்டது. ஆனால் நானும் பணியாற்றிக் கொண்டிருப்பதால் அவ்வோய்வூதியத்திற்கு D.A. போன்ற சலுகைகள் கிடையாது என்பதால் தவறுதலாகக் கொடுத்த தொகையைத் திரும்பக் கட்டும்படி நோட்டீஸ் வந்தது. செலவிட்ட தொகையை ஒரே மூச்சில் கட்டத் திணறினேன் என்றாலும் கடன் பெற்றுக் கட்டி விட்டேன்.

இப்போது அன்னையிடம் வந்தவுடன், பணியில் இருக்கும் பெண்களுக்கும் குடும்ப ஓய்வூதியத்திற்கு D.A. மற்றும் சலுகைகள் உண்டு என புதிய அரசாணை வந்திருப்பதைத்தான் என் சகோதரர் (வெளியூரில் இருப்பவர்) தொலைபேசியில் கூறினார். விண்ணப்பம் கொடுத்து மேற்படி தொகையைப் பெற்றுக் கொள்ளச் சொன்னார்.

அன்னை வாழ்வு, இல்லை என்பதை உண்டு என மாற்றும்; கிடைக்காது என்பதைக் கிடைக்கச் செய்யும் என்றெல்லாம் சொற்பொழிவில் கேட்டதை நினைத்துச் சிலிர்த்தேன். மிகுந்த மகிழ்வுடன் உரிய முறையில் சார்நிலைக் கருவூலத்திற்கு விண்ணப்பமும் கொடுத்தேன். சம்பந்தப்பட்ட அலுவலர் என் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டு என் ‘பென்ஷன் புக்’கைக் கேட்டார் கொடுத்தேன். இரு தினங்களுக்குப் பிறகு வரும்படி கூறினார்.

உடனே மையத்திற்குச் சென்று அன்னை பகவானை நமஸ்கரித்து, மையப் பொறுப்பில் இருந்த மாதவன் சாரிடம் சொன்னேன்.

‘ரொம்ப சந்தோஷம்மா’ என்றார். இரண்டு நாட்களுக்குப் பிறகு கருவூலத்திற்குச் சென்று மேற்படி அலுவலரைச் சந்தித்தேன்.

‘உங்கள் விண்ணப்பத்தில் கண்டபடி ஆவன செய்து விட்டேன். பாங்கிற்கும் அனுப்பி விட்டேன். இம்மாத பென்ஷனுடன் புதிய தொகை பெற்றுக் கொள்ளலாம். இங்கு ஏற்கனவே வேலை அதிகம். அத்துடன் உங்கள் வேலையும் சேர்ந்து கொண்டது. எப்படியோ முடித்து விட்டேன்’ என்றார்.

‘ரொம்ப நன்றி சார். என் பென்ஷன் புக்கைத் திருப்பித் தரலாமா?’ என்று கேட்டேன்.

‘புக் இங்குதானிருக்கிறது. எடுத்து வைக்கிறேன். அதற்கு முன் நீங்கள் ஒரு கணிசமான தொகை தரவேண்டும். நான் இங்குப் பலரைக் கவனிக்க வேண்டியுள்ளது’ என்றார்.

அவர் வாங்கும் சம்பளத்திற்குச் செய்ய வேண்டிய வேலையிது. அதற்கு என்னிடம் பணம் கேட்கிறார் என்றால் இலஞ்சம் என்றல்லவா பொருள்.

‘பொய் சொல்ல முடியாது என்றால், இலஞ்சம் தருவதை மனம் மறுத்தால் அன்னை சூழலை மாற்றுவார்’ என்று சொற்பொழிவில் கேட்டது நினைவுக்கு வந்தது. அன்னையே உம் பொருட்டு நான் இலஞ்சத்தை மறுப்பேன் என்று எண்ணிக் கொண்டு,

‘மன்னிக்க வேண்டும் சார். நான் அன்னை அன்பராகவே இருக்கப் பிரியப்படுகிறேன். என்னால் தொகை தரவியலாது’ என்றேன்.

இதுவரை உற்சாகமாய்ப் பேசியவர் திடீரெனக் கடுமையானார். ‘சரிசரி போங்கள். போய்விட்டு பத்து நாட்கள் கழித்து வாருங்கள், பார்ப்போம்’ என்று எரிச்சலாய்க் கூறினார்.

பணம் கொடுக்காமல் பென்ஷன் புக்கைத் திரும்பப் பெற முடியாது என்று புரிந்தது. மனம் சோர்ந்து வீடு திரும்பினேன்.

‘அன்னையிடம் வந்தால் பிரச்சனை தீரும்’ என்றல்லவா கூறினார்கள். இப்போது பிரச்சனை அல்லவா உருவாகியிருக்கிறது’ என்று எண்ணத் தொடங்கினேன். ஆனாலும் மையத்தில் கேட்ட சொற்பொழிவுகளில் கேட்ட செய்திகள், அன்பர்கள் கூறிய அவர்கள் அனுபவங்கள் போன்றவற்றை மீண்டும் மனதில் கொண்டுவந்து பார்த்தேன். அன்னையை ஏற்று தன் சுபாவத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்த அன்பர் கொடிய கொலையிலிருந்து உயிர் தப்பிய நிகழ்ச்சி, ஓரன்பரிடம் தவறாக நடந்து கொண்ட மேலதிகாரி, ஒரு நாள் கையும் களவுமாய்ப் பிடிபட்டு அவமானப்பட்ட நிகழ்ச்சியாவும் நினைவில் வந்து நின்றன. மேலும் அபிப்ராயம் கூடாது, கைவிட வேண்டும் என்பதையும் நினைவு கூர்ந்து, பணம் தராமல் பென்ஷன் புக் பெற முடியாது என்ற என் அபிப்ராயத்தையும் விட்டுவிட முடிவு செய்தேன்.

தியான மையம் சென்று அன்னை பகவான் முன்னிலையில் சிறிது நேரம் அமைதியாக இருந்தேன். அன்னையே இப்போது மாதவன் சாரிடம் நடந்தவற்றைக் கூறப் போகிறேன். அவர் கூறுவதைத் தாங்களே கூறியதாக மனப்பூர்வமாய் ஏற்று நடக்கப் போகிறேன் என்று மானசீகப் பிரார்த்தனை முடித்துவிட்டு மாதவன் சாரிடம் போனேன்.

‘சார் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்’ என்றேன்.

‘தாராளமாய் கேள்’ என்றார். நடந்தவற்றைக் கூறினேன்.

‘அன்னை அன்பராக இலஞ்சம் கொடுக்க மனம் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் பணம் தரமாட்டேன் என்றவுடன் கடுமையாக நடந்து கொண்டதும், பேசிய விதமும் மனதை மிகவும் வருத்துகிறது’ என்றேன். ‘நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்’ என்று கேட்டேன்.

‘அவர் கூறுவது உங்களைப் புண்படுத்துகிறது, வருத்துகிறது என்றால் நீங்கள் வாழ்வில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இன்பமோ, துன்பமோ அதை வருடுவது போல் அசைபோட்டு சுவைப்பது மனித இயல்பு. இங்கு நீங்கள் அன்னையன்பராக இருப்பதை விரும்பினால், தயக்கமோ, அச்சமோ இன்றி அவர் கூறியதை மறந்துவிட வேண்டும். அன்னையின் கோட்பாடுகளோடு சமூகம் முரண்படுமிடத்தில் சமூகத்தைப் புறக்கணித்து அன்னையை ஏற்பது அன்பன் வழி.

பணம் கொடுத்து பென்ஷன்புக்கை வாங்கி விடலாம் என்று கருதினால் பணம் கொடுத்து வாங்கி விடுங்கள். ஒரு முறை கொடுத்தால் அதுவே தேவையாகிவிடும். இந்தப் பிரச்சனையை வாய்ப்பாக மாற்றிக் கொள்ள விரும்பினால் தயங்காமல் அந்நிகழ்ச்சியை மறந்து விடுங்கள். மறப்பது சிரமமாகத்தானிருக்கும். அதற்கு வழி அந்நினைவு வரும் போதெல்லாம் அதைப் புறக்கணித்து அன்னையை நினையுங்கள். அன்னையைப் பற்றிய புத்தகம் தருகிறேன். அதில் மனம் ஈடுபட்டால் மற்றதெல்லாம் மறந்து விடும்’ என்றார்.

மறப்பது எப்படிப் பிரச்சனைக்குத் தீர்வாகும்? புறத்தை அகமாக்க வேண்டுமானால் எதிர்ப்பும், வெறுப்புமின்றி புறத்தை ஏற்க வேண்டும்.

‘புரியவில்லை சார்’.

‘நாம் அன்னையை ஏற்றிருக்கிறோம். அன்னைக்குச் சம்பிரதாயம், சடங்குகள் விலக்கு. இலஞ்சமும்தான்.

இந்நிலையில் நம் கூட்டாளி பூஜை செய்கிறார். நம் முதலாளி இலஞ்சம் வாங்குகிறார். நம் நண்பர் அர்த்தமின்றிச் செயல்படுகிறார் என்றால் நாம் எரிச்சல் படக்கூடாது. பட்டால் அவை நம்மை பாதிக்கும். எரிச்சல் படாமல் ஏற்றால் அவை நம்மை விட்டு நீங்கும். அவர்கள் அவ்வாறு செய்வதன் காரணத்தைப் புரிந்து கொண்டு மலர்ச்சியுடன் இருக்க முடிந்தால் அவை நீங்குவதற்குப் பதில் திருவுருமாறிவிடும். இதற்கு நாம் அன்னையில் இருக்க வேண்டும். அன்னையைப் பற்றிய நூல்களைப் படிக்கும் போது நாம் உயர் உணர்வில் இருப்போம். ஜீவியம் மலரும் நேரம் அது. ஜீவியம் மலர்ந்தால் சூழலில் இனிமையானவையே நடக்கும். நாம் அன்னையில் இருக்கும்போது, அதாவது பிரச்சனையால் தீண்டப்படாத நிலையில் நமக்கு வலு அதிகம். பிரச்சனையை மதிக்கும் போது நாம் வாழ்வில் இருக்கிறோம். அப்போது பிரச்சனை வலுவடைகிறது’ என்றார்.

எனக்கு ஒரு தெளிவு கிடைத்துவிட்டது. ‘இலஞ்சம் கொடுத்து அன்னையை இழக்க மாட்டேன். நீங்கள் கூறியதுபோல் இப்பிரச்சனையை அன்னையைப் பெறக்கிடைத்த வாய்ப்பாக எண்ணிக் கொள்கிறேன். அன்னையைப் பற்றிய புத்தகம் கொடுங்கள் சார்’ என்றேன். இலஞ்சம் கொடுக்க எனக்கு வசதியில்லாமலில்லை. எனக்கு விருப்பமில்லை. இதற்கு முன் வாழ்க்கையில் இப்படிப்பட்ட சந்தர்ப்பம் எதுவும் வந்ததில்லை. வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்த நேரத்தில், எத்தனையோ பேர் நேர்முகத் தேர்விற்கு வந்திருந்தும், எவ்வித சிபாரிசுமில்லாத நிலையில் கடவுளை மட்டுமே நம்பிய எனக்கு வேலை கிடைத்தது என்றேன்.

‘கடவுள் நம்பிக்கை பொக்கிஷம் போன்றது என்பார் அன்னை. இயல்பாகவே அருளைப் பெறும் அம்சம் உங்களுக்கிருக்கிறது. அன்னை பகவானின் அருட்சக்தியைப் பெற ஏதேனும் ஒரு சிறப்பம்சம் அதாவது, தூய்மை, சத்தியப்பற்று, நல்லெண்ணம் sincerity இருந்தால் சிறந்த தகுதியாகும் என்று என் குருநாதர் சொல்வார். இந்த நிகழ்ச்சி உங்கள் வாழ்வில் அன்னை வரும் வாயிலாக வந்திருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இந்தாருங்கள் புத்தகம்’ என்று அன்னையின் அருளை விளக்கும் புத்தகம் ஒன்றைக் கொடுத்தார். அன்று நான் அவரிடம் வாங்கிக் கொண்டது வெறும் புத்தகமில்லை, ஸ்ரீ அன்னையை, என்று பின்பு புரிந்து கொண்டேன். ஒரு புத்தகத்தை வாங்கிச் சென்று படித்த நான் மேலும் மேலும் அன்னையை அறிய ஆவல் கொண்டேன். இடைவிடாமல் புத்தகங்கள் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். மையப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். பென்ஷன் புக் மறந்தே போனது. இப்போது நான் எவ்வித எதிர்பார்ப்புமின்றி அன்னை பணியில் கலந்து கொண்டேன். அன்னையே என்னை ஆக்கிரமித்துக் கொண்டார்.

அன்று தியான மையச் சிறப்பு புஷ்பாஞ்சலிக்காக நிறைய பூக்கள் வாங்குவதற்கு மலர் மண்டிக்குச் சென்றேன்.

திடீரென அருகில் ஒரு குரல் என்னை நோக்கி-

‘என்ன மேடம்? பிறகு நீங்கள் ஆபீஸ் பக்கமே வரவில்லை?’ மிகுந்த நட்புணர்வோடு கேட்கப்பட்டது.

திரும்பிப் பார்த்தேன். அதே அலுவலர். நான் எதுவும் கூறுமுன், ‘நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம். ‘பென்ஷன் புக்’ கை பெற்றுக் கொள்ளுங்கள் போதும்’ என்றார்.

நான் அவருள் அன்னையைத் தரிசித்தேன். உடல் சிலிர்த்து கண் பனித்து விட்டது எனக்கு.

‘அன்று அப்படிப் பேசியவன் இன்று இப்படிப் பேசுவது வியப்பாயிருக்கிறதா மேடம்! அது ஒரு பெரிய கதை நானே உங்களை வீட்டில் பார்க்க எண்ணியிருந்தேன்’ என்றார். மேலும் ‘இவ்வளவு பூக்கள் வாங்குகிறீர்களே, புஷ்பாஞ்சலியா? எங்கே நடக்கிறது?’ என்றார்.

மையத்தை அடையாளம் கூறினேன்.

‘நல்லது. நாளை நானும் தியானத்தில் கலந்து கொள்ள வருகிறேன், நடந்ததை அங்கு வைத்துச் சொல்கிறேன்’ என்றார்.

பிறகென்ன நல்ல அன்பர்களும், நண்பர்களுமாகி விட்டோம்.

சொன்னது போலவே, புஷ்பாஞ்சலியில் கலந்து கொள்ள அந்த அலுவலர் வந்து விட்டார். அன்னையின் சந்நதியில் கசப்பில்லாத மன நிலையில் சந்தித்துக் கொள்வது எத்தனை ஆரோக்யமாயிருந்தது.

கூடல் முடிந்து, புஷ்பப் பிரசாதங்களுடன் எல்லோரும் புறப்பட்டோம்.

‘மேடம்! இந்தாருங்கள் உங்கள் பென்ஷன்புக். அன்னையின் முன்னிலையில் கொடுத்து விடுகிறேன்’ என்று கையோடு எடுத்து வந்த பென்ஷன்புக்கை என்னிடம் கொடுத்தார்.

அதை நான் அன்னையாகவே பார்த்தேன். பணம் இல்லைöயன்றால் தரமாட்டேன் என்பது போல், பிடி தன் கையில் இருப்பதாக யார் அன்று பேசினாரோ அவரே, இன்று தானே கொண்டு வந்து கொடுக்கிறார். அன்னையின் செயலில் அவர் முத்திரை இதுவல்லவா!

இந்த அளவிற்கு அவர் மனம் மாறக் காரணம் என்ன என்றறிய ஆவலாயிருந்தது என்றாலும் நான் எதுவும் கேட்கவில்லை.

அவரே கூறினார். மேடம் அன்று உங்களிடம் கடுமையாகப் பேசி அனுப்பி விட்டேன். அந்தக் கோபம் தணியாமலேதான் வீட்டிற்குப் போனேன். எங்கள் நெருங்கிய உறவினர், எங்கள் வீட்டாரின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய பெரியவர் சென்னையிலிருந்து வந்திருந்தார். அவரைப் பார்த்தவுடன் யாவும் மறந்து அவரை வரவேற்று உபசரித்தேன்.

அவர், தாம் மறுநாள் நெய்வேலியில் ஒரு தியானத்தில் கலந்து கொள்ள வந்திருப்பதாயும் என்னையும் உடனழைத்துப் போக ஆவலுறுவதாயும் கூறினார். அதுதான் அன்னையின் அழைப்பு என்று அப்போது புரியவில்லை. அவர் பேச்சை நாங்கள் என்றும் மீற மாட்டோம். எனவே, மகிழ்வுடன் ஒப்புக் கொண்டேன்.

அன்றிரவெல்லாம் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னையைப் பற்றி நிறைய பேசினார். அன்னையின் மகிமையும் தாம் எப்படி அன்னையிடம் வந்தோம் என்பது பற்றியும், வந்த பிறகு பெற்ற நலன்கள் பற்றியும் மனம் நெகிழ்ந்துருகிக் கூறினார். பல அன்பர்களின் அன்னை அனுபவங்கள் பற்றிக் கூறினார். மந்திரத்தில் கட்டுண்டது போல் நான் அவர் கூறியவற்றை என்னுள் கிரகித்தேன். நானே இப்படி மாறுவேன் என்று எதிர்பார்க்கவில்லை.

குறிப்பாக அவர் கூறிய ஒரு செய்தி என்னைப் பெரிதும் பாதித்தது. ஓரரசாங்க அதிகாரி மிகவும் இலஞ்ச ஊழல் மிகுந்தவராயிருந்தாராம். தாம் வாங்கும் சம்பளத்திற்காகச் செய்ய வேண்டிய வேலைக்கே பணம் கேட்பாராம். தாமிருந்த பொறுப்பான, மதிப்பான உத்தியோகத்திற்கே சிறுமை தரும் வண்ணம் செயல்படுவாராம். அவரிடம் நியாமான உதவி கேட்டு வருபவர்களிடம் பணம் பெறாமல் எதுவும் செய்யமாட்டாராம். வருபவர்கள் வேறு வழியின்றி மனம் கொதித்துக் கொண்டு பணம் கொடுத்துப் பயன் பெற்றுப் போவார்களாம். ஓர் அன்னையன்பர் நியாயமான உதவி கேட்டு அவரிடம் வந்தாராம். வெளிப்படையாகத் தாம் பணம் பெறாமல் எதுவும் செய்வதில்லை என்று கூறிவிட்டாராம்.

அந்த அன்பர் சிறிதும் மனம் தளரவில்லையாம். அன்னையின் கோட்பாடுகளோடு சமூகம் மாறுமிடத்தில் சமூகத்தைப் புறக்கணித்து அன்னையை ஏற்பவர் அன்பர் என்று கூறிய தம் குருநாதரின் வாக்கைச் சத்தியவாக்காக எண்ணி பணம் கொடாது திரும்பிச் சென்று விட்டாராம்.

சில தினங்களிலேயே மேற்படி அதிகாரியை இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாய்ப் பிடித்து அவர் ஊழல்களை படங்களுடன் செய்தித்தாளில் வெளியிட்டுப் பணி நீக்கமும் செய்துவிட்டனராம்.

இதுவரை அவர் நடத்திய ஊழல்நாடகங்களுக்குத் தீர்வு ஓரன்னையன்பரால் வந்தது என்று மற்றவர்கள் பேசிக் கொண்டனராம். அன்பருக்கு நல்லது வந்தால் அது பலருக்கும் வருமாம். அன்பர்க்குத் தீங்கு செய்தால் அத்தீங்கிற்கே முடிவு வருமாம். இதை அவர் கூறியவுடன் எனக்கு என் கடந்த காலமும், நான் தங்களிடம் நடந்து கொண்டதும் நினைவிற்கு வந்தது.

அதே நேரம் தவறு செய்தவர் தம் தவற்றை உணர்ந்து திருந்தினால் வாழ்வில் அவருக்குக் கிடைப்பது நிம்மதி மட்டும்தான். ஆனால் அன்னையிடம் பரிசே உண்டு என்றார். அக்கணமே நான் மனதால் மாறிவிட்டேன்.

மறுநாள் நெய்வேலி தியானத்திலும் அவருடன் சென்று கலந்து கொண்டேன். மேலும் மனம் தெளிவடைந்தது. என் கடந்த காலம் எனக்கு அருவருப்பூட்டியது.

‘உங்கள் பென்ஷன் புக்கை உங்கள் வீட்டிற்கே வந்து கொடுத்து, செய்த தவற்றுக்கு மன்னிப்புக் கேட்க நினைத்தேன். ஆனால் அன்னை அவர் சந்நிதியில் கொடுக்க வைத்தது அன்னை என்னை மன்னித்து விட்டாரென்று உணரவைக்கிறது’ என்றார்.

எதைத் தேடிப் போய் பெற முடியாத நிலை இருந்ததோ அது தேடி வந்தது அன்னையின் தனி முத்திரையல்லவா. இருங்கள், இருங்கள் கதை முடியவில்லை. புத்தகத்தை மூடி விட வேண்டாம்.

மறுநாள் அந்த அலுவலர் தெளிந்த மனநிலையுடன் அலுவலகம் சென்றவர், முதன் முதலில் வேலைக்குச் சேர்ந்தவர் போல் மிகுந்த உற்சாகத்துடன் நடந்து கொண்டார்.

இனிமேல் என் பணிகளைக் கடமைக்காக மட்டுமல்லாமல் ஆர்வத்துடன் செய்வேன். ஆர்வமாக மட்டுமல்லாமல் அன்னைக்கு அர்ப்பணமாய்ச் செய்வேன். என் உழைப்பின் பயன் அடுத்தவர்க்குக் கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் உழைப்பேன் என்று மனதில் குவிந்து அன்னையை நினைத்து சீட்டில் அமர்ந்தார். இது திருவுருமாற்றம் அல்லவா!

மேலதிகாரி போனில் அழைக்கிறார். சண்முகம் கங்கிராட்ஸ். இன்று உங்களுக்குப் பிரமோஷன் ஆர்டர் அனுப்பியுள்ளோம் என்கிறார். சீனியரான ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பிரமோஷன் அவரைத்தாண்டி இவருக்கு வருகிறது.

குறுகிய காலத்தில் அதிக பைல்கள் பார்த்திருக்கிறீர்கள் என்று பாராட்டு வேறு. நெகிழ்ந்து போனார் சண்முகம்.

எனக்கு போன் வந்தது. ‘மேடம் ஒரு குட் நியூஸ். நான் சண்முகம் பேசுகிறேன்’ என்றார்.

‘சொல்லுங்கள் சார்’ என்றேன்.

‘மேடம் எனக்கு இப்போது அன்னையின் தரிசனம் கிடைத்தது. பிரமோஷனாக அன்னை வெளிப்பட்டு விட்டார்.

இந்த நற்செய்தியை அதற்குக் காரணமாயிருந்த தங்களிடம் பகிர்ந்து கொள்வது பொருத்தம் என்று நினைத்து போன் செய்தேன்’ என்றார்.

‘மிகவும் சந்தோஷம் சார். மேலும் மேலும் நீங்கள் அன்னையைப் பெற வாழ்த்துகிறேன்’ என்றேன்.

எனக்கு இல்லை என மறுக்கப்பட்டது உண்டு என்று ஆனது. அதை நிறைவேற்றும் செயலில் ஒருவருக்குத் திருவுருமாற்றம் நிகழ்ந்தது. இதுவே அன்னையின் அற்புதம்…

*********



book | by Dr. Radut