Skip to Content

13. அன்னை இலக்கியம் - வேதம் புதிது

அன்னை இலக்கியம்

வேதம் புதிது

இல. சுந்தரி

அம்மா: கார்த்தி! ஏப்ரல் நாலாந்தேதியோடு உனக்குப் பதினாறு வயது பூர்த்தியாகிறது. நினைவிருக்கா?

(அரைகால் சட்டையணிந்து நீலநிற பனியனுடன் அப்பாவின் ஸ்கூட்டரை துடைத்துக் கொண்டிருந்தான் கார்த்தி என்ற அவள் மகன்.)

கார்த்தி: ஆமாம் அதற்கென்ன இப்போ? இம்முறை என் பிறந்தநாளை கேக் வெட்டி விசேஷமாய்க் கொண்டாட ஏதாவது திட்டம் வைத்திருக்கிறாயா?

அம்மா: இந்தக் கிண்டலில் ஒண்ணும் கொறைச்சல் இல்லை (என்று தோளில் இடித்துத் தன் எதிர்ப்பைத் தெரிவித்தாள்.)

கார்த்தி: (சிரித்துக் கொண்டே) பின்ன என்னம்மா? திடீரென்று இப்போ என்ன வயதாராய்ச்சி?

அம்மா: எதிர் அகத்து சாஸ்திரிகள் பேரனைப் பார்த்தாயா? அவனும் பத்தாவதுதான் படித்திருக்கிறான். வேதமும், சமஸ்கிருதமும் படிக்கிறான். (என்று மெல்ல பீடிகை போட்டாள்)

கார்த்தி: ஆமாம் தெரியுமே அதற்கென்ன இப்போ? (வண்டியைத் துடைக்கும் செயலில் கவனம் சிதறாமல் அம்மாவுடன் பேசுகிறான்.)

அம்மா: நீயும் பிராம்ணனா, இலட்சணமா வேதக்ளாஸ் போனா நன்னாயிருக்குமோல்யோ?

கார்த்தி: பிராம்ண லட்சணம் வேதக்ளாஸ்னு யார் சொன்னா உனக்கு?

அம்மா: குதர்க்கம் பேசாத கார்த்தி. உன்னிஷ்டம் போல் நீ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க அப்பா ஏற்பாடெல்லாம் செய்யறார். என் ஆசைக்கு நீ வேதம் படிக்கக் கூடாதா?

கார்த்தி: என் கம்ப்யூட்டர் ஆசை நிறைவேறினா, உன் வேதம் கற்கும் ஆசையும் நிறைவேறிடும்.

அம்மா: ஏதாவது பேசி என்னை ஏமாற்றப் பார்க்காதே. முகமதியர்களைப் பாரு. என்ன வேலையானாலும், காலங்கார்த்தால குர்ரான தூக்கிண்டு மசூதிக்குப் போறா. வெள்ளிக்கிழமையாச்சுன்னா தலையிலே குல்லாய் போட்டுண்டு, கடையோ வியாபாரமோ பாதியிலே நிறுத்திட்டு மசூதிக்குப் போயிடறா. கிறித்தவாளைப் பாரு, காலையிலும், இரவிலேயும் தவறாம குடும்பத்தோட ஜபம் பண்றா. நாம இந்துவா பிராமணாளா பொறந்து, நம்ம வேதத்தைப் படிச்சு, நம்ம ஜாதிய, மதத்த காப்பாத்த நெனக்கறதேயில்ல. (மனக்குறையுடன் கூறினாள்)

கார்த்தி: அம்மா! நா ஒண்ணு கேட்டா பதில் சொல்லுவியா?

அம்மா: கேளு, கேளு, தெரிஞ்சாச் சொல்றேன்.

கார்த்தி: தினமும் காலைல எட்டுமணிக்கு, காவி கட்டிண்டு ஜடா முடியெல்லாம் வெச்சுண்டு ஒரு சாமியார் வராறே, நீ ஏன் அவருக்கு ஒண்ணும் கொடுக்கறதில்ல?

அம்மா: நா சொல்றதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?

கார்த்தி: நீ பதில் சொல்லு. அப்போ சம்பந்தம் என்னங்றது தானாப் புரியும்.

அம்மா: நல்ல மேதாவிப் பிள்ளையத்தான் பெத்துருக்கேன். அந்தச் சாமி, பகல்ல பிக்ஷைக்கு வரான். ராத்ரிலே சுருட்டுப் பிடிக்கிறான். சீட்டு வௌயாடறான். போறாத்துக்கு பொம்மனாட்டிகளைக் கேலி பேசறான். அவன் சாமியாரா என்ன? (கோபமாய்க் கூறுகிறாள்)

கார்த்தி: காவி கட்டி, ஜடா முடி வெச்சிருக்காரே அதுக்கு மரியாதை தர வேண்டாமா?

அம்மா: காவி கட்டினவாள்ளாம் சாமியார் ஆயிடுவாளா? ஜடாமுடி வெச்சுண்டா என்ன வேணாச் செய்யலாமா? நம்ப கந்தசாமியைப் பாரு ஏழைதான் படிப்பும் இல்ல. நன்னா உழைக்கறான். யார் பொருளுக்கும் ஆசை படறதில்ல, பொய்யில்ல, திருட்டில்ல, அவனெப் பார்த்தால்தான் எனக்கு மரியாதை வரது.

கார்த்தி: காவி கட்டிண்டா மாத்திரம் போறாதுன்னு சொன்னியோல்லியோ. அது மாதிரிதான் இதுவும். வேதம் படிச்சா மட்டும் போதாது. பூணூல் போட்டுண்டா மட்டும் போதாது. எதுத்தாத்து சாஸ்திரிகள் பேரன் வேதக்ளாஸ் போறது மட்டும் உனக்குத் தெரியும். வேதம் படிக்கறவனுக்குத் தைரியம் வேணும்னு ஸ்ரீ அரவிந்தர் சொல்லி இருக்கிறார். அந்தப் பையன் சுத்தக் கோழை. யார் மிரட்டினாலும் பயந்துண்டு பொய் சொல்றான். தைரியமா உண்மை பேச முடிஞ்சாத்தான் வேதம் பலிக்கும். அவா ரொம்ப ஆசாரம் அப்டியிப்படிங்கறயே. நாடார் வீட்லதான் கார்த்தால இட்லி வாங்கிச் சாப்பிடறா. அது உனக்குத் தெரியுமா?

அம்மா: என்னடா கர்மம் இது?

கார்த்தி: கர்மம்னா செயல்ன்னு அர்த்தம். நல்ல கர்மம்தான் செய்யறா. நாடார் வீட்டம்மா சுத்தபத்தமாத்தான் இட்லி வியாபாரம் பண்றா. அவளும் மனுஷிதான். தான் ஒருத்தியாய் இருந்திண்டு யார் காலிலேயும் விழாம தனக்குத் தெரிஞ்சதைச் செய்து பிழைக்கிறா. அவா கிட்ட இட்லி வாங்கிச் சாப்பிடறதில தப்பென்ன? ஆனா அதை ரகசியமா செய்யறதுதான் தப்பு. தாந்தான் உலகத்தில உத்தமன்னு சொல்லிக்றதுதான் தப்பு. ஊர்ல வெள்ளம் வந்தா எல்லாரையும் ஒரேயிடத்தில தங்க வைக்கறா. அப்போ நாள், நட்சத்திரம், ஜாதிமதம் பார்க்க முடியுமா? எல்லோருக்கும் வயிறுண்டு, பசி தாகமுண்டு. முறையா வாழணும். சுத்தமா இருக்கணுங்கறது எல்லார்க்கும் பொது.

அம்மா: அப்படீன்னா பிராம்ணா வேதம் சொல்லணும்னு ஏன் வச்சிருக்கு?

கார்த்தி: பிராமணா வேதம் சொல்றது இல்லம்மா. வேதம் சொன்னா பிராம்ணன் ஆகலாம்.

அம்மா: என்னடா குழப்பற?

கார்த்தி: ஆமாம்மா. ஸ்ரீ அரவிந்தர்னு ஒரு மகா புருஷருடைய வார்த்தையை லைப்ரரில படிச்சேன். ஒவ்வொரு மனிதனும் பிராம்ணனாகுமுன் பூரண க்ஷத்ரியன் ஆகணும்னு சொல்லியிருக்கிறார். அதனால பிராமணன்னு பொறக்கறதில்ல. பொறந்தப்றம் பிராமணனாகணும். எம்.ஏ படிச்ச அப்பாவோட பிள்ளைன்னா அவனும் எம்.ஏ ஆயிடுவானா? எம்.ஏ படிச்சாத்தானே எம்.ஏ ஆவான்? அது போலத்தான் இதுவும். யார் படிச்சாலும் பட்டம் வாங்கலாம். யார் பிரம்மத்தை உணர்ந்தாலும் பிராமணனாகலாம். வேதம் படிக்க பொய் சொல்லக் கூடாது.

(மதர் சொன்னது சரிதான் என்று முணுமுணுக்கிறான்.)

அம்மா: எந்த மதர்? என்ன சொன்னா?

கார்த்தி: மதர்னா அம்மான்னு அர்த்தம்.

அம்மா: அது தெரியும் யாரோட அம்மா? என்ன சொன்னா? நீ அதைச் சரின்னு சொல்றேன்னுதான் கேட்டேன்.

கார்த்தி: யாரோடவோ அம்மாயில்ல. நம்ப எல்லார்க்கும் அம்மாவைச் சொன்னேன். என்ன சொன்னாத் தெரியுமா? நம்ப மதம், நம்ப ஜாதின்னு எதையோ காப்பாத்தற பிடிவாதத்தில எல்லாத்தையும் தாண்டி மேல இருக்கற பரப்பிரம்மத்திற்கு மதமே இல்லேங்றத மறந்துட்டோம்னு சொன்னா. அதைச் சொன்னேன்.

அம்மா: நம்ப எல்லோரோடவும் அம்மாவுக்கு மதர்னு பேரில்ல. அம்பாள்னு பேர். மதமும், மதத் தலைவர்களும் இல்லேன்னா கடவுளப்பத்தி ஒண்ணுமே தெரியாமப் போயிருக்குமே.

கார்த்தி: அங்கதான் நீ தப்பு பண்ற. அளவுகடந்த, அனந்தமான பரப்பிரம்மத்தை மனம் புரிஞ்சிக்க வச்ச ஏற்பாடுதான் மதம் என்பது. மதமே எல்லாம் இல்ல. நாட்ல எத்தனை மதமிருக்கு? என்ன பிரயோசனம்? நா பெரிசு, நீ பெரிசுன்னு சண்டைதான் மிஞ்சியது. ஒண்ணு பரம்பொருள்னு சொல்றமே தவிர அனுபவமா உணரல. உணர முயற்சியும் பண்ணாம சண்டை போட்டுக்கறோம். கொஞ்ச நாளைக்கு மதத்தையெல்லாம் விட்டுட்டு ஒத்துமையா இருந்தா தெளிவு வரும்.

அம்மா: பெரிய விவேகி மாதிரி பேசி என்ன குழப்பறத விட்டுட்டு வேதம் படிக்க ஆரம்பி. அது போதும் எனக்கு.

கார்த்தி: சரிம்மா வேதம் படிக்கறேன். அது எதுக்குன்னுதான் சொல்லேன்.

அம்மா: இது என்ன கேள்வி? பிராம்ணனா பொறந்து வேதம் படிக்கலைன்னா ஜன்மம் சாபல்யம் அடையாது.

கார்த்தி: ஜன்ம சாபல்யங்றது தன்னைக் காப்பாத்திக்கறது. மோட்சம் ஆன்மாவின் சுயநலம்னு ஸ்ரீ அரவிந்தர் சொல்லியிருக்கார்.

அம்மா: ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அரவிந்தர்ங்கறயே அவர் யாரு? அவர் சொன்னதை நாம ஏன் கேட்கணும்?

கார்த்தி: (மனம் நெகிழ்ந்து) அப்படிச் சொல்லாதே அம்மா! யாருக்கு விருப்பு, வெறுப்பு இல்லயோ அவா சொல்லறத கண்டிப்பா கேக்கணும்மா. நாமெல்லாம் ஏன் மனுஷாளாப் பொறந்தோம்னு தெரியாம நாம வாழும் போது அதைத் தெளிவிக்க நம்மிடையே அவதாரம் எடுத்து வந்த பரப்பிரம்மம்மா அவர்.

அம்மா: எனக்குத் தெரியாது கார்த்தி. சங்கராச்சாரியார், ஆழ்வார், நாயன்மார் என்றெல்லாம் பெரியவாளப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். அவாளவிடப்பெரியவரா இவர்?

கார்த்தி: அம்மா! சங்கராச்சாரியார் இறைவன்தான் நிஜம். உலகம் மாயை. பொய் என்றார். ஆனால் நாத்திகவாதியோ உலகம்தான் நிஜம். கடவுள் பொய் என்றான். ஸ்ரீ அரவிந்தர்தாம், இறைவனும் உண்மை உலகமும் உண்மை. உலகம் இறைவனின் வெளிப்பாடு என்றார். மதவாதிகளும், மற்றவர்களும் வாதி, பிரதிவாதிகள் போல் தத்தம் கருத்தே நியாயமானது என்பவர்கள். இவர்கள் ஒரு பக்கமாகச் செய்தியைப் பார்க்கின்றவர்கள். முழுமையாகப் பார்க்கக் கூடியவர் நீதிபதி ஒருவர்தாமே அம்மா? அந்த நீதிபதிதாம் ஸ்ரீ அரவிந்தர்.

அம்மா: புரியல கார்த்தி. அவர் நீதிபதியா இருந்தவரா?

கார்த்தி: ஆமாம்மா இந்த உலகத்தில இருக்கிற கோர்ட்ல இல்லம்மா. எல்லாத்துக்கும் மேல ஒருத்தன் இருக்கான். அவன் பார்த்துப்பான்னு சொல்லுவியே. அந்த ஒருவன் அவர்தாம்மா என்றான் கார்த்தி.

அம்மா: கடைசியில் நீயும் ஒரு மனுஷரைக் காட்டி அந்த ஒருத்தர் அவர்தாம் என்கிறாயே. இதுமட்டும் ஒரு பக்கமா பாக்கிறதில்லையா?

கார்த்தி: அவர் மனுஷர் இல்லம்மா. மனிதனாகத் தோன்றி இறைவனாக முடித்தவர் என்று அவரைப் பற்றி ஒரு பெரியவர் எழுதியிருக்கிறார்.

அம்மா: சரி! அப்படிப் பார்த்தாலும் மனிதனாக ஆரம்பித்துத் தானே இறைவன் ஆனார்.

கார்த்தி: ஆமாம் முதலிலேயே சொன்னேன் அல்லவா? மனிதப் பிறவியை இறைவன் எதற்காகச் சிருஷ்டித்தாரோ அதை அவர்தானே நடத்திக் காட்ட வேண்டும். நாமெல்லாம், படைப்பிலேயே மனிதன்தான் உயர்ந்த பிறவி என்று எண்ணியதுடன் மோட்சம்தான் முடிவு என்று நினைத்துக் கொண்டிருந்தோம் அல்லவா?

அம்மா: ஆமாம் அதிலென்ன தவறு? ரொம்பப் பெரியவாள்ளாமே அதைச் சொல்லியிருக்காளே.

கார்த்தி: அதற்கும் மேலே அதிமானுடம்னு ஒன்று இருப்பதை ஸ்ரீ அரவிந்தர்தாம் சொல்லியிருக்கிறார்.

அம்மா: (பெரு வியப்புடன் கார்த்தியைப் பார்க்கிறாள்.) அப்படியே பார்த்தாலும் இறைவனோட ஐக்கியப் படறதுதானே முடிவு? அதைத்தானே பெரியவாள் சொல்லியிருக்கா. அதைச் சொல்லத்தானே மதங்கள் எல்லாம் இருக்கு?

கார்த்தி: ஆமாம்மா. இறைவனோட ஐக்கியப்படற வழியைச் சொல்வதுதான் மதம் என்பது. ஆனால் அதுவே இறைவன் இல்லை.

அம்மா: அந்தப் படியிலே ஏறித்தானே இறைவன் கிட்டப் போகணும்?

கார்த்தி: ஆமாம்மா இறைவன் கிட்டப் போயி அங்கேயே இருக்கறதுதான் உசத்தின்னு நாமெல்லாம் நினைக்கிறோமில்லையா? அதை விட உசத்தி (உயர்ந்தது) எதுன்னு ஸ்ரீ அரவிந்தர் சொல்லியிருக்கார்.

அம்மா: (ஆச்சர்யத்துடன்) இறைவனை விட எது ஒசத்தி (உயர்த்தி)?

கார்த்தி: அது அப்படியில்லம்மா. இறைவனோட சேருவது நமக்குச் சந்தோஷம்னா, நமக்குள்ளே இறைவன் இங்கே வெளிப்படுவது அவருக்குச் சந்தோஷமாம். இப்போ சொல்லு. நீ எதைத் தேர்வு செய்வே?

அம்மா: நம்ப சந்தோஷத்துக்காக நாம முயற்சி எடுக்கறது சுயநலம். மத்தவா சந்தோஷத்துக்கு வாழறது ஒசந்தது. அதிலும் கடவுளை நம்மால் சந்தோஷப்படுத்த முடியும்னா அதைவிடப் பெரிய சந்தோஷம் எது?

கார்த்தி: இப்போ, நீயே, பாயிண்டுக்கு வந்துட்டே பார்த்தியா? அப்படி இறைவன் நம்மிடம் வந்து வெளிப்பட்டு இந்த பூலோக வாழ்க்கையை பூரணப்படுத்த சிருஷ்டி ஏற்பட்டதுன்னு ஸ்ரீ அரவிந்தர் சொல்கிறார். நம்மைத் தேடி பிரியமா ஒத்தர் வந்தா நாம அவாள பிரியமா வரவேற்க மாட்டோமா?

அம்மா: நீ என்ன சொல்ற கார்த்தி. கேட்கவே உடம்பெல்லாம் சிலிர்க்கிறதே.

கார்த்தி: ஆமாம்மா, மோட்சங்கறது மனிதன் நாடும் பேரின்பமாம், இறைவனாகவே நாம் மாறி இறைவனின் திருவுள்ளத்தை பூலோகத்தில் பூர்த்தி செய்யறது இறைவன் நாடும் பேரின்பமாம். இப்போ சொல்லு உன் இன்பம் உனக்குப் பெரிசா? இறைவன் இன்பம் உனக்குப் பெரிசா?

அம்மா: இறைவன் மேல உள்ள அன்பாலதான் இறைவனை வழிபடறோம். அவர்தாம் நம்மைச் சந்தோஷப்படுத்த முடியும். நாம எப்படி அவரைச் சந்தோஷப்படுத்த முடியும்?

கார்த்தி: நாம சொல்வதை அவர் கேட்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, அதாவது நம் பிரார்த்தனைகளை அவர் நிறைவேற்ற வேண்டும் என்பதற்குப் பதிலாக, அவர் திருவுள்ளம் புவியில் நிறைவேற நாம் அவருடன் ஒத்துழைப்பது சிறந்ததல்லவா?

அம்மா: அதெல்லாம் சரிதான் கார்த்தி. கடவுள்தான் சர்வ வல்லமை உடையவர். நாமோ, அவரை நம்பியிருக்கிறோம். இதில் அவருடன் ஒத்துழைக்க நம்மிடம் என்ன இருக்கிறது?

கார்த்தி: ஒன்றிருக்கிறது. அவரிடமில்லாத ஒன்று நம்மிடம் இருக்கிறது. அதைக் கொடுத்து விட்டால் சரியாகி விடும்.

அம்மா: அப்படியா? அப்படி என்ன அவரிடமில்லாதது நம்மிடமிருக்கிறது?

கார்த்தி: அகந்தை என்ற ஒன்றிருக்கிறது அதைக் கொடுத்து விட்டால் போதும்.

அம்மா: கார்த்தி என்னடா சொல்றே? எப்பிடிடா இது சாத்யம்?

கார்த்தி: அதான்மா நாம நல்லவன்னு எல்லாரும் சொல்லணும். நம்மை எல்லாரும் கொண்டாடணும். அது இதுங்கறதையெல்லாம் விட்டுட்டு நமக்குள்ள கடமை எதுவானாலும் அவன் கொடுத்தது என்று உணர்ந்து அதை அவனுக்கு அர்ப்பணமாச் செய்யறதுதான் அதற்கு வழி.

அம்மா: சரி, வேதத்தைப் பாதுகாக்கிறது நம்ம கடமை இல்லையா? அதைச் செய்ய வேண்டாமா?

கார்த்தி: ஆமாம்மா. அதைப்பத்தியும் நான் படிச்சேன். வேதத்தை எழுதி வைத்துக் காப்பாற்ற வேண்டியதில்லை. அதன் சொல்லுக்குள்ள மந்திர சக்தி தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளக் கூடியது. எழுதுகிற தாள் எப்படி ஒரு கருவியோ அதுபோல் நினைவு வைத்துள்ள மனமும் ஒரு கருவியே என்று ஒரு செய்தியும் படிச்சிருக்கேன்.

அம்மா: அப்படியே பார்த்தாலும் வேதம் அதன் சொல்லுக்குள்ள சக்தியால் தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் சக்தியுடையது என்கிறாயே. அந்தச் சக்தியைப் பெறத்தானே மனிதர்கள் வேதத்தை ஓதுகின்றனர். அது எப்படித் தேவையற்றதாகும்?

கார்த்தி: ஓதுவதைத் தவறென்று சொல்லவில்லை. ஓதும் தகுதி பெறாமல் ஓதுவது தேவையற்றது என்கிறேன். அதை ஓதும் தகுதியைக் குடுமி, பூணூல் என்ற புற அடையாளங்களை வெச்சு நிர்ணயிக்கிறது சரி இல்லம்மா. அகம் நம்ப மனசு சுத்தமாகாமல், சத்தியத்தால் நிரம்பி வழியாமல் எத்தனை முறை எவ்வளவு வேதம் படிச்சாலும் பயனில்லம்மா. வேதம்னா சத்யம். சத்யம்ங்கற நெருப்பு. அந்த நெருப்பை அடைய நெருப்பாகணும். வேற எதுவாயிருந்தாலும் அது எரிச்சுடும். அதையடைய அசாத்யத் தைரியம் வேணும். அதைத்தான் ஸ்ரீ அரவிந்தர், பிராமணன் ஆகுமுன் பூரண க்ஷத்ரியன் ஆகணும்னு சொல்லியிருக்கார். பொய்யும், தப்பும் செய்து கொண்டு வேதோபாசனை செய்து பயன் இல்லைம்மா. அது வெறும் சம்பிரதாயம் ஆகிவிடும். சம்பிரதாயங்கள் ஜீவனற்றவை. மேலும் வேத ஸ்வரூபியான இறைவனைக் காண நாம் மோட்சம் பெறத் தேவையில்லை. அவர் நம்முள் வெளிப்படக் காத்திருக்கிறார் என்பதால் அவர் நம்மில் வெளிப்பட ஏதுவாக நாம் அகமும், புறமும் சத்தியத்தால் நிறைவதே இன்றைய தேவை. அதற்கு அளவு கடந்த தைரியம் வேண்டும். முதலில் அதைப் பெறுவோம்.

அம்மா: அப்டீன்னா வேதோபாசனை தேவையில்லை என்கிறாயா?

கார்த்தி: இல்லைம்மா. அப்படிச் சொல்லலை. பாராயணம் செய்வதைவிட நடைமுறைப்படுத்துவதுதான் தேவை என்கிறேன். அம்மா! நம்பளவா கல்யாணங்களில் எத்தனை மந்திரங்கள் சொல்லப்படுகின்றன? அவற்றின் பொருள் நம்மில் யாருக்கேனும் தெரியுமா? ஐயர் சொல்லும் மந்திரத்தை மாப்பிள்ளைத் திருப்பி ஒரு தரம் சொன்னால் போதும் என்பது போல் நடைமுறை இருக்கிறது. இது அர்த்தம் புரியாமல் பாடத்தை மனப்பாடம் செய்வதைப்போல் சிறு பிள்ளைத்தனமாய் இல்லையா? இன்னும் பல இடங்களில் மாப்பிள்ளை மந்திரங்களை உச்சரிப்பது கூட இல்லை. பொருள் புரிந்து அதை உள்ளே வாங்கிக் கொண்டு அதை நடைமுறைப்படுத்த வேண்டாமா? சாங்கியமாகவும், சடங்குகள் சம்பிரதாயமாகவும் வாழ்க்கையை நடத்துகிறோம். நாம் படித்துப் பயன்பட வேண்டும் என்று எப்படியாவது பாராயணம் செய்யட்டும் என்ற முறை ஏற்பட்டிருக்கும். நாமோ அவற்றை நம் ஜீவனில் ஏற்பதேயில்லை.

அம்மா: வேதத்தை ஓதி நம் ஜாதியை மதத்தைக் காப்பாற்றாமல் கடமை தவறுகிறோம் என்றல்லவா நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் (என்று வியப்புடன் கூறுகிறாள்)

கார்த்தி: நீ மட்டும் இல்லையம்மா. நெறைய பேர் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீ சொன்னதில் ஒன்று சரி. ஒன்று தவறு.

அம்மா: என்ன கார்த்தி சொல்றே, புரியும்படி சொல்.

கார்த்தி: வேதம் கற்பது சிறந்தது. ஆனால் அது ஜாதியை மதத்தைக் காப்பாற்றவோ சாதிமதப் பிரிவினைக்கோ ஏற்பட்டதில்லை. பரப்பிரம்மத்தை உணர, உணர்ந்து இன்புற ஏற்பட்டது. ஸ்ரீ அரவிந்தர் வேதத்தைப் பத்தி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

மனிதனுள் பரமாத்மா சொல்லாக வடிவெடுத்தது வேதம் என்று சொல்லியிருக்கார்.

அம்மா: கார்த்தி எப்டிடா உனக்கு இந்தப் பெரிய விஷயமெல்லாம் தெரியறது? (வியப்புடன் மகனைப் பார்க்கிறாள்)

கார்த்தி: அதுவா அம்மா? ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் ஆறுமணியானா டாண்னு ஆபிஸ் போற மாதிரி போயிடற. மெதுவா எட்டு மணிக்குத்தான் வரே என்று சொல்லுவியே. அந்த ஆபிஸில்தான் இதெல்லாம் தெரிஞ்சுண்டேன்.

அம்மா: அட! இதெல்லாம் ஆபிஸ் வச்சு நடத்தறாளா?

கார்த்தி: (சிரித்துக்கொண்டே ) அம்மா! ‘ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்’ என்று ஒருவர் நடத்துகிறார். அங்கே ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை நமக்காகச் சொன்னதை எல்லாம் எடுத்துச் சொல்றா. லைப்ரரியும் வெச்சுருக்கா. அங்க போயிதான் இதெல்லாம் தெரிஞ்சுண்டேன்.

அம்மா: அதனால நீ இப்ப என்ன சாதிச்சிருக்க?

கார்த்தி: முதல்ல சுத்தம் முக்கியம்னு தெரிஞ்சுண்டேன். அதனாலதான் வண்டியைத் துடைக்கிறேன். வீட்டைக் கிளீன் பண்றேன். ரூமை நன்னா வெச்சுக்கறேன்.

அம்மா: கார்த்தி எல்லாம் சரி. என்ன பலனைக் கண்டே.

கார்த்தி: இப்ப உனக்கு அதெல்லாம் சொல்ல முடிஞ்சது ஒரு பலன்தானே. (இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே எதிர் வீட்டு சாஸ்திரிகள்மாமா இவர்களை நோக்கி வருகிறார். கார்த்தியின் அம்மா, அரைகுறையாய் இவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டு சண்டை இட வருகிறாரோ என்றஞ்சி ஒன்றும் புரியாது எழுந்து நிற்க கார்த்தியோ கம்பீரமாக, பணிவாக வரவேற்கிறான்).

கார்த்தி: வாங்கோ மாமா

மாமா: கார்த்தி! நான் இவ்வளவு படிச்சு, இத்தனை வயசாகி உன்னைப் போல நான் ஒரு நாளும் சிந்திச்சது இல்லையப்பா. நான் பெரிய வேதப் பிராமணன் என்ற கர்வம்தானிருந்தது. எத்தனை அழகா அம்மாவுக்கு எடுத்துச் சொன்னே. உன் கால்ல விழுந்தாலும் தப்பில்ல. என் அகம்பாவம் அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்காது. நீ நாளையிலிருந்து என்னண்டை வந்து வேதம் கத்துக்கோ. அதனால நான் ஸ்ரீ அரவிந்தர் பத்தி உங்கிட்ட தெரிஞ்சுப்பேன் (என்று அவன் கையைப் பற்றி உருக்கமாய்ச் சொன்னார்)

கார்த்தி: ஆகட்டும் மாமா நிச்சயமா வந்து வேதம் கத்துக்கிறேன்.

********



book | by Dr. Radut