Skip to Content

10. உண்மையின் பல்வேறு பரிமாணங்கள்

உண்மையின் பல்வேறு பரிமாணங்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

என். அசோகன்

இங்கே பொய்சாட்சி சொல்ல வெட்கப்படுவதுமில்லை. பொய் வழக்குப் போட்டு வாதாட எந்த வழக்கறிஞரும் தயங்குவதுமில்லை. மேலை நாட்டு நீதி மன்றங்களில் பொய் சாட்சி சொன்னார் என்று தெரிந்தாலே அதற்குத் தண்டனையுண்டு. இங்கே பொய்வழக்கு என்று தெரிந்தால்கூட அதற்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படுவதில்லை.

ஸ்ரீ கர்மயோகி அவர்கள் மேலை நாட்டவர்களைப்போல நாமும் நாணயமானவர்கள் என்று பெயரெடுத்திருந்தால், நாடு எவ்வளவோ முன்னேறியிருக்கும் என்று சொல்வதுண்டு. இங்கே வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் இருப்பது மிகவும் சகஜம். விவசாயிகள் வாங்கிய கடனை எல்லாம் திருப்பித் தராமல் போனதால், அரசாங்கம் 65 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கடனைத் தள்ளுபடி செய்யும்படியாயிற்று. இப்படி ஒருமுறை செய்ததால் அடுத்தமுறை கடன் வாங்கும் பொழுதே இக்கடனைத் திருப்பித் தர வேண்டியதில்லை, அரசாங்கம் தள்ளுபடி செய்துவிடும் என்ற நினைப்புடன்தான் விவசாயி கடனையே வாங்குகிறான். ஏதோ ஓரிரு விவசாயிகள் இப்படிச் செய்தால் பரவாயில்லை. விவசாயிகள் முழுவதுமே இப்படித்தான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நினைவுடன் பயிர் செய்தால் பயிர் எப்படி வளரும். பருவ மழை பொய்த்து விட்டது, காவிரியில் தண்ணீர் இல்லை என்று நாம் வருத்தப் படுகிறோமே தவிர வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் தட்டிக் கழிக்கலாம் என்ற மனநிலையின் நேரடி விளைவிது என்பதை நாம் அறிவதில்லை. ஜப்பானில் திருடன் வீட்டிற்குள் நுழைந்து பணத்தைத் திருடினால் “நான் வாங்கிய கடனை திருப்பித் தருவதற்காக வைத்துள்ள பணமிது. அதனைத் தொடாதே” என்றால் அவன் அதற்குக் கட்டுப்பட்டு அந்த பணத்தை வைத்துவிட்டுப் போவான் என்று சொல்கிறார்கள். அந்தளவிற்கு நாணயம் ஊறிப்போன கலாச்சாரம் ஜப்பானியக் கலாச்சாரம்.

இப்பொழுதுகூட அரசாங்க இனாம், மற்றும் இலவசங்களை நம்பியிருக்கக் கூடாது. உழைக்காமல் லஞ்சம் வாங்கிப் பிழைக்கக் கூடாது. நியாயமான உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தைத்தான் நம்பி இருக்க வேண்டும் என்று மக்கள் மனப்பான்மையை திருத்திக் கொண்டார்கள் என்றால், நாடு அந்தளவிற்கு வேகமாக முன்னேறும். பிரேஸில் நாட்டில் ஒரு நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் ஊழியர்களை வரவழைத்து இந்தக் கம்பெனியில் அவரவர்கட்கு ஏற்ற சம்பளத்தை நிர்ணயித்துக் கொள்கின்ற சுதந்திரத்தை உங்களுக்குக் கொடுக்கிறோம். என்ன சம்பளம் முடிவு செய்துள்ளீர்கள் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கவும் என்றறிவித்தார்கள். இப்படிச் செய்வது ஒரு ஆபத்தான வேலை. இருந்தாலும் அக்கம்பெனி மேனேஜ்மெண்டிற்குத் தம்முடைய ஊழியர்மேல் ஒரு நம்பிக்கை இருந்தது. அம்மாதிரியே அந்நம்பிக்கை வீண் போகவுமில்லை. யார் யார் என்ன சம்பளம் கேட்பார்கள் என்று மேனேஜ்மெண்ட் எதிர்பார்த்ததோ அந்தச் சம்பளத்தைத்தான் அவர்கள் கேட்டார்கள். மேனேஜ்மெண்ட்டும் அவர்கள் முடிவைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டது. நம் நாட்டில் இப்படி ஒரு நிலையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இங்கே இப்படியொரு சுதந்திரம் அளித்தால், வாட்ச்மேன் இருபதாயிரமும், டிரைவர் முப்பதாயிரமும், எழுத்தர் வேலை செய்பவர்கள் ஐம்பதாயிரமும் தயங்காமல் கேட்பார்கள். அதாவது ஓரிரு மாதங்களில் கம்பெனியை இழுத்து மூட வேண்டியதுதான். தகுதிக்குமேல் கேட்பது தன்மானத்திற்கு இழுக்கு என்பது வெளிநாட்டாருடைய குணம் என்பது இந்த ஒரு சம்பவத்திலிருந்தே தெரிகிறது. இந்த ஓர் இடத்தில் இந்தியர்கள் மாறினாலே போதும். நாட்டில் வரவேண்டிய சுபிட்சம் விரைவாக வந்துவிடும்.

5. இப்பொழுது Harmony-க்கு வருவோம். அன்னை அன்பர்களுக்கு இது மிகவும் பிடித்தமான விஷயம். எங்கெல்லாம் வளர்ச்சி முன்னேற்றம் இருக்கிறதோ, அங்கெல்லாம் Harmony நிச்சயமாக இருக்கும். Harmony என்றால் என்ன என்று பார்ப்போம். பல பேர் கூடி வேலை செய்யும்பொழுது எல்லோரும் கருத்தொருமித்து வேலை செய்வது Harmony-யைக் காட்டுகிறது. அதேசமயத்தில் ஒரே வேலையில் சம்பந்தப்பட்ட பல பேருக்கு மாறுபட்ட கருத்திருந்தால், அங்கே disharmony இருக்கிறது என்றர்த்தம். இப்பொழுது Harmony ஏன் சாதிக்கிறது disharmony ஏன் பலனைக் கொடுக்காமல் போகிறது என்பதையும் பார்க்க வேண்டும். ஒரு வேலையைச் செய்து முடிக்கவேண்டும் என்ற எல்லோருடைய கவனமும் அவ்வேலையின்மேல் இருக்கும்பொழுது அந்த வேலை தீவிரம் பெறுகிறது. தீவிரம் பெறுவதால் பலன் விரைவாகவும், அதிகமாகவும் வருகிறது. இதற்கு மாறாக வேலையை முடிக்க வேண்டும் என்று சிலருக்குத் தான் ஆர்வம் இருக்கிறது. பலருக்கு ஆர்வம் இல்லை. ஸ்தாபனத் தலைவரின் அதிகாரத்தைப் பலபேர் ஏற்பதில்லை. அவர் ஒன்று கூறினால் இவர்கள் வேறொன்று செய்கிறார்கள். கம்பெனி சம்பாதிக்க வேண்டும் என்ற பொது நோக்கமில்லாமல், அவரவர் சுருட்டிக் கொண்டுப் போகவே பிரியப்படுகிறார்கள் என்ற நிலை இருந்தால், விரயம் அதிகமாகி பலன் மிகவும் சுமாராகத்தான் இருக்கும். நாம் இப்படி நினைத்துப் பார்க்க வேண்டும். அதாவது ஒரு பெரிய பாறாங்கல்லை கயிறு கட்டி எல்லோரும் ஒரே திசையில் இழுக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், அது நம்மை நோக்கி விரைவாக வரும். இவ்வாறின்றி பத்துபேர் பாறையை கிழக்குப் பக்கமாகவும், மேலும் பத்து பேர் பாறையை மேற்குப்பக்கமாகவும் இழுக்கிறார்கள் என்றால், பாறை எந்தப் பக்கமுமே நகராமல் வேலையே நடக்காத நிலை உருவாகிவிடும். நிறைய ஸ்தாபனங்களில் இம்மாதிரியான நிலைதான் உருவாகி இருக்கிறது. சிலர் வேலையை முடிப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். இன்னும் சிலர் யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மையுடன் வேலையைக் கெடுத்துக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட சூழலில் வேலை நடப்பதால் முழு ரிஸல்ட் வரவேண்டிய இடத்தில் பாதி ரிஸல்ட்தான் வரும். ஒரு வருடத்தில் முடிய வேண்டிய வேலை இரண்டு வருடத்தில் முடியும். அதாவது பலனும் குறைவாக இருக்கும். காலமும் நிறைய விரயம் ஆகும்.

மனிதனுக்கு இப்பொழுதுள்ள பிரச்சனையை எடுத்துக் கொண்டால் இவற்றில் பெரும்பாலானவை Harmony கெட்டுப் போனதால் வருகின்ற பிரச்சனைகள்தாம். உலகளவில் சுற்றுச் சூழல் கெட்டுவிட்டது என்றொரு பிரச்சனை உருவாகியுள்ளது. காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. ஒன்று கனமழையினால் வெள்ளம் வருகிறது. அல்லது மழையின்றி வறட்சி நிலவுகிறது. வாகனங்களும் தொழிற்சாலைகளும் ஏராளமான புகையைக் கக்குவதால், காற்று மண்டலம் மிகவும் மாசு அடைந்துள்ளது. இதுபோக கார்பன்-டை-ஆக்ஸைடு காற்றில் அதிகரித்துள்ளதால், அது சூரியனின் வெப்பத்தைக் கிரகித்துக் கொள்வதால் புவி நாளுக்குநாள் வெப்பமடைந்து வருவதாகக் கருதப் படுகிறது. தொழிற்புரட்சி வருவதற்குமுன் உலகில் இப்பிரச்சனை இல்லை. ஆனால் தொழிற்புரட்சி வந்த பிறகு சுற்றுச்சூழல் சுகாதாரம் மிகவும் கெட்டுவிட்டது. அதாவது மனிதனுக்கும் இயற்கைக்கும் முன்பிருந்த Harmony கெட்டு disharmony வந்துள்ளது. இப்பொழுது பழைய Harmony வந்தால்தான் மனித குலத்திற்கு நல்லது. அல்லது இப்படியே விட்டால், மனித குலத்திற்கே பெரிய ஆபத்து என்று சொல்கிறார்கள். Harmony எப்படிக் கெட்டது என்பதை நாம் பார்க்க வேண்டும். மனிதனுடைய நடவடிக்கைகளால் உண்டாகின்ற கழிவுப் பொருட்களை இயற்கைக் கிரகித்துக் கொள்வதற்கு ஓரளவு இருக்கிறது. இப்பொழுது இயற்கையே சமாளிக்க முடியாத அளவிற்கு மனித நடவடிக்கைகள் கழிவுப்பொருட்களின் உற்பத்தியைப் பெருக்கி விட்டதால், பழைய Harmony பேலனஸ் கெட்டுப்போய் disharmony வந்து விட்டது. ஆகவே நகரங்களில் குப்பைகள் வந்துவிட்டன, காற்று அசுத்தமாகிவிட்டது, குடி தண்ணீர் சுத்தமாகவில்லை, உஷ்ணம் அதிகரித்து விட்டது என்பதெல்லாம் இயற்கையே சமாளிக்க முடியாத அளவிற்கு மனிதனுடைய நடவடிக்கைகள் பெருகிவிட்டன என்பதைக் காட்டுகிறது. பழைய Harmony வருவதற்கு என்ன வழி என்றால், மனிதனுடைய வாழ்க்கை பழையபடி எளிமையாக வேண்டும். எல்லோரும் இன்று கார் வைத்திருக்கப் பிரியப்படுவதால் தான் air pollution வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களைக் கட்டுக் கடங்காமல் பயன்படுத்துவதால்தான் கழிவு நீர் குழாய்களும், கால்வாய்களும் பிளாஸ்டிக் பைகளால் அடைக்கப்பட்டு மழைக்காலத்தில் மழை நீர் வடியாமல் வீதிகளிலெல்லாம் வெள்ளம் வருகிறது. மேலைநாடுகளில் இந்த விபரீதத்தை உணர்ந்து காரைப் பயன்படுத்துவதை வெகுவாகக் குறைத்து மாநகரங்களுக்குள் பஸ் மற்றும் இரயிலில் மக்கள் போக ஆரம்பித்துள்ளனர். ஆனால் நம் நாட்டில் இப்பொழுதுதான் மக்கள் கார் வாங்கவே ஆரம்பித்திருக்கிறார்கள். ஐம்பது அறுபது வருடங்களுக்குமேல் கார் ஓட்டி சலித்துப் போனவர்கள் காரை விடுவது சுலபம். ஆனால் இப்பொழுதுதான் கார் என்ற சௌகரியத்தை அனுபவிக்க ஆரம்பித்திருக்கும் இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தச் சௌகரியத்தையும் விட வேண்டும் என்றால் அது கடினம்.

முன்னேறுகின்ற குடும்பங்களைப் பொதுவாக கவனித்தால் Harmony சிறப்பாக இருக்கும். கூட்டுக் குடும்பமாக இருந்தால், குடும்பத்தில் பெரியவர்களின் வார்த்தையை இளைய தலைமுறையினர் அப்படியே மறுக்காமல் ஏற்றுக் கொள்வார்கள். சொத்துத் தகராறு, பாகப்பிரிவினை எல்லாம் அநேகமாக இருக்காது. மாமியார் மருமகள்களை தன் மகள் போலவே நடத்துவார்கள். பேரப்பிள்ளைகளுக்கிடையில்கூட போட்டி, பொறாமை என்றிவையெல்லாம் இருக்காது. ஆனால் இப்படிப் பட்ட சுமுகம் அவ்வளவு சுலபமாக வராது. அதற்குக் குடும்பம் மிகவும் பண்பானதாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட கூட்டுக் குடும்பங்கள் பொதுவாக அன்னை பக்தர் குடும்பங்களாக இருந்தால், தினமும் சுமுக மலர்களை அவர்கள் அன்னைக்கு வைத்து வழிபட்டார்கள் என்றால், பல தலைமுறைகளாகப் பண்பால் கிடைக்கக் கூடிய சுமுகம், இம்மலர்களை வைத்து வழிபடுவதாலேயே கிடைக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு சென்னையில் வசிக்கும் அன்னை பக்தர் ஒருவர் ஸ்ரீ கர்மயோகி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் எனக்கு நான்கு பெண்கள் இருக்கிறார்கள். நால்வரும் வீட்டிற்கு வருவதில்லை. என்னுடனும் பேசுவதில்லை. அவர்களுக்குள்ளும் பேசிக் கொள்வதில்லை. இது எனக்குப் பெரிய குறையாக இருக்கிறது. இக்குறையை அன்னை தீர்த்து வைப்பார்களா என்று கேட்டெழுதியிருந்தார். இதற்கு ஸ்ரீ கர்மயோகி அவர்கள் சுமுக மலரை அன்னைக்கு வைத்து வழிபட்டு வர, பலன் தெரியும் என்றெழுதினார். அந்தப் பெண்மணியும் அவ்வாறே ஒரு வாரம் செய்தார். அச்சமயம் தீபாவளி வந்தது. எந்தத் தீபாவளிக்குமே வராத பெண்கள் அனைவரும் அந்தத் தீபாவளிக்கு வந்தனர். வீடே கலகலப்பாகி விட்டது. அவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. உடனே ஸ்ரீ கர்மயோகி அவர்களுக்கு இந்த நற்செய்தியை எழுதித் தெரிவித்து தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார். வெறும் மலருக்கே இந்த ஆற்றல் இருக்குமா என்று நாம் அறிவால் கேட்டால் நம்மால் நம்ப முடியாது. ஆனால் மலர்களை அன்னையின் அருட்சக்தியை தாங்கி வரும் கருவிகளாகப் பார்ப்பவர்களுக்கு இத்தகைய பலன் கிடைப்பதில் எந்தவித ஆச்சரியமுமில்லை.

6. அடுத்ததாக பணிவு என்ற உண்மையின் சொருபமான நற்குணத்திற்கு வருவோம். பணிவு உண்மையிலேயே ஒரு தெய்வீகமான குணம். பகவான் ஸ்ரீ அரவிந்தர் மிகவும் பணிவு நிறைந்தவர். அவர் தன்னுடைய கவிதைப் படைப்புகளை அவருடைய சீடர்களாக இருந்த மற்ற கவிஞர்களுக்கே அனுப்பி விமர்சனம் செய்யச் சொல்வாராம். எங்கேயாவது குரு தன்னுடைய சீடர்களிடமே விமர்சனத்தை வரவேற்கிறார் என்பதை நாம் பார்த்திருக்கிறோமா? அன்னையும், பகவானைப் போலவே மிகவும் பணிவு நிறைந்தவர். பொதுவாக குருநாதர் என்றாலே சீடர்கள் கைகட்டி, வாய் பொத்தி, சிரம் தாழ்த்திதான் நிற்பார்கள். ஆனால் அன்னை அப்படி யாரையும் கட்டுப் படுத்தவில்லை. சீடர்களாக இருந்தாலும்கூட நெருக்கமாக நண்பர்களாகத்தான் பழகினார். ஆரோவில்லை நிறுவியதற்காக அவருக்கு அமைதிக்காக நோபல் பரிசு வழங்க நோபல் கமிட்டி முன்வந்த பொழுது “பகவானுடைய சேவையைத்தான் நான் தொடர்ந்து செய்கிறேன். இந்த உடம்பிற்கென்று தனிப்பட்ட எந்த மரியாதையோ, அங்கீகாரமோ தேவையில்லை” என்று சொல்லி அப்பரிசை வாங்க மறுத்தார். இப்படிப்பட்ட பணிவை நாம் யாரிடமாவது பார்க்க முடியுமா? அன்னை, இறைவன் இயற்கையிலேயே மிகவும் பணிவானவர் என்றுதான் கூறுகிறார். ஆண்டவன் மனிதர்களைப்போல் எப்பொழுதும் தன் பெருமைகளையே நினைத்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருப்பதில்லை. ஆனால் மனிதர்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பெண் தன்னை அழகானவள் என்று நினைத்து விட்டாலே போதும், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கண்ணாடிமுன் போய் நின்று கொள்வாள். ஏதேனும் ஒரு விசேஷத்திற்கு மேக்அப் செய்து கொண்டு கிளம்பினாள் என்றால், அவளைக் கண்டு கணவன் புகழ்ந்தாலன்றி திருப்தியடையமாட்டாள். இப்படிப் புகழ் போதையில் மூழ்கியவரின் மத்தியில் ‘நான் அடுத்த பிறவி எடுத்து வரும்பொழுது யாருக்கும், எவருக்கும் தெரியாமல் என் வேலையைச் செய்ய விரும்புகிறேன்’ என்று அன்னை சொல்லி இருக்கிறார் என்றால், அவர் எந்தளவு பணிவைக் காட்டுகிறார் என்று பாருங்கள்.

பொதுவாகவே பதவி பலம், பணபலம் இருப்பவர்களிடம் பணிவைக் காண்பதரிது. அவர்கள் சொல்கின்ற கருத்திற்கு எதுவும் மாற்றுக் கருத்து நாம் சொல்ல முடியாது. எல்லாம் தங்களுக்குத் தெரியும் என்ற எண்ணம் வந்துவிடுவதால், அவர்களுக்கு நாம் எந்த யோசனையும் வழங்கவும் முடியாது. பலர் அறிவில்லாமல் பேசினால்கூட மற்றவர்கள் கேட்டுக் கொண்டுதான் ஆக வேண்டும். இந்த இடத்தில்தான் டார்சி மிகவும் வித்தியாசப்படுகிறான். லிஸி காரமாகத் திட்டினாலும், அந்தத் திட்டில் உண்மையிருக்கிறது என்று ஏற்றுக் கொண்டு தன் சுயநலம், ஆணவம் ஆகியவற்றை விட முன்வருகிறான். அந்தக் காலத்துப் பிரபு வம்ச இளைஞர்களிடம் இத்தகைய பணிவைப் பார்ப்பதே அதிகம். இப்படி ஒரு சுடுசொல் சொல்லிவிட்டால், காலம் முழுவதும் அந்தப் பெண் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள்.

அதிகார உலகம் இப்பொழுது சற்று மாறிவருகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வாக்காளர்களை நேரடியாகப் பார்த்து நன்றி தெரிவிக்கிறார்கள். பிரதமராக இருந்தாலும், பாராளுமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் தைரியமாக மறுத்துக் கருத்துத் தெரிவிக்கிறார்கள். அவர்கள் மறுப்பையும் மாற்றுக் கருத்தையும் பிரதமர் ஏற்றுக் கொண்டு நன்றியும் தெரிவிக்கிறார். பணியிலிருக்கும் பொழுது அரசு ஊழியர்கள் இறந்து போனால், அரசாங்கத்தின் துறைத்தலைவரே நேரடியாக இறந்தவர் வீட்டிற்கு வந்து retirement benefitsக்கு உண்டான காசோலையை வழங்கிச் செல்கிறார். இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் அரசாங்க அதிகாரிகளை அவர்கள் அலுவலகத்திற்குப் பார்க்கச் சென்றால், நிற்க வைத்துதான் பேசுவார்கள். உட்காரச் சொல்வதே அரிது. ஆனால் இப்பொழுதெல்லாம் உள்ளே வந்தவுடன் முதல் வேலையாக அமரச் சொல்கிறார்கள். இத்தகைய பணிவின் வெளிப்பாடுகள் காலப்போக்கில் மேன்மேலும் வலுவடையும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

உண்மையின் வெளிப்பாடாக இதுவரை ஆறு கருத்துகளை விவரித்துள்ளேன். பாஸிட்டிவாக மனிதனிடம் தென்படும் எந்தக் குண விசேஷத்தையும் உண்மையின் வெளிப்பாடாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இன்று பொய்யின் கை ஓங்கி உண்மையின் கை தாழ்ந்து நிற்கிறது. ஆனால் உண்மையை நம்புகிறவர்கள் அன்னையின் பக்கம் வந்துவிட்டால், உண்மையின் பலத்துடன் அன்னையின் ஆன்மீக பலமும் சேர்ந்து உண்மையே எப்பொழுதும் வெல்லும்படி அன்னை செய்வார். அதை நாம் நிச்சயம் நம்பலாம்.

முற்றும்

********

ஜீவிய மணி
 
நம்மைச் சுற்றியுள்ளவர், நம்மைச் சார்ந்தவர், நம் வேலைகளைச் செய்பவர், நம் வேலையின் பலனைப் பெறுபவர் எவரானாலும் அவரிடம் நம் வேலை சம்பந்தமான குறையைக் கண்டால், அதற்கு நாம் பொறுப்பேற்பது ஜீவியத்தின் குறையை அகற்றுவதாகும், consciousness responsibility எனப்படும்.
குறை எவருடையதாயினும் பொறுப்பு நம்முடையது.
 

*******



book | by Dr. Radut