Skip to Content

08. திருடு போன Electric Drill மீண்டும் கிடைத்த விதம்

திருடு போன Electric Drill மீண்டும் கிடைத்த விதம்

என். அசோகன்

என்னிடம் சுவரில் துளை போடக் கூடிய Electric Drill ஒன்று இருந்தது. வருடம் 2000 ஏப்ரல் மாதம் நான் அமெரிக்காவிற்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் ஐரோப்பாவில் உள்ள ஹாலந்து நாட்டில் பத்து நாட்கள் தங்கி இருந்தேன். அச்சமயம் செய்த ஷாப்பிங்கில் இந்த drill-ஐயும் வாங்கி இருந்தேன். வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்ததால் மிகவும் பத்திரமாக வைத்து இருந்தேன். என்னிடம் வீடு மற்றும் எங்களுடைய ஸ்தாபனம் சம்பந்தப்பட்ட இடங்களில் எல்லாம் நடக்கின்ற மின் வேலைகளுக்கு இந்த drill மிகவும் உதவியாக இருந்தது.

இந்த மின் வேலைகளைச் செய்யும் வகையில் எனக்குப் பழக்கமான Electrician ஜூலை 18-ம் தேதி மாலை என்னை வந்து அணுகி நாங்கள் நடத்தும் பள்ளியில் செய்ய வேண்டிய மின் வேலைக்காக drill தேவைப்படுகிறது என்று கேட்டார். பள்ளியில் எங்கே வேலை என்று விசாரித்தபோது எங்கள் பள்ளியின் விரிவாக்கப் பணிகளை ஏற்றுச் செய்து கொண்டு இருக்கின்ற சிவில் இன்ஜினீயரான ஒரு அன்னை அன்பர் தங்கி இருக்கின்ற அறையில் ஒரு மின் outlet-ஐ மூடும் வேலை என்றார். இதற்கு சம்மதித்து என்னுடைய drill-ஐ வழங்கினேன். இரண்டு மணிநேரம் கழித்துத் திரும்பி வந்தவர் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார். வேலை முடித்து விட்டீர்களா என்று கேட்டபொழுது “Drill திருடு போய்விட்டது இரண்டு மணிநேரமாக அதைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறேன்” என்றார். இதைக் கேட்டபொழுது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பிறகு சமாளித்துக் கொண்டு “எப்படித் திருடு போனது என்று கேட்டேன்.”

அதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தார். என்னிடம் drill-ஐ வாங்கிக் கொண்டு பள்ளிக்குச் சென்றதாகவும் வெளி கேட்டை திறப்பதற்காக கையில் வைத்திருந்த drill-ஐ அந்த கேட்டில் வெளிப்பக்கமாக சாத்தி இருந்த ஒரு சைக்கிளின் கேரியரின் மேல் வைத்துவிட்டு பின்னர் கேட்டைத் திறந்ததாகச் சொன்னார். அந்த ஏரியாவில் உள்ள யாருடைய வீட்டிலோ கேபிள் டி.வி. சரியாகத் தெரியவில்லை என்ற புகாரைச் சரி செய்வதற்காக உள்ளூர் கேபிள் டி.வி. கம்பெனியைச் சேர்ந்த மூன்று டெக்னீஷியன்கள் அங்கு வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவரின் சைக்கிள்தான் அது. அருகில் இருந்த ஏதோ ஒரு வீட்டிற்குச் சென்றவர்கள் இவர் எங்கள் பள்ளியின் கேட்டை திறக்கும்போதே பின்னால் வந்து விட்டார்கள். இவர் கதவைத் திறந்ததும் அவர்களும் உள்ளே நுழைந்தார்களாம். பள்ளிக்குள் என்ன வேலை என்று கேட்டபோது “இந்த ஏரியாவிற்கு உண்டான ஜங்ஷன் பாக்ஸ் இந்த பள்ளியின் மாடியில்தான் இருக்கிறது. அதைச் சரி செய்வதற்காகத்தான் மேலே போக விரும்புகிறோம்” என்றார்களாம்.

கேட்டைத் திறந்தவர் drill-ஐ சைக்கிள் கேரியரில் வைத்ததையே மறந்துவிட்டு முதல் மாடியிலுள்ள இன்ஜினியரின் அறைக்குச் சென்றுவிட்டார். வந்த டெக்னீஷியன்களும் மொட்டை மாடிக்குச் சென்றார்கள். இன்ஜினியர் அறையில் இரண்டு வேலைகள் இருந்தன. ஒன்று ஜன்னலில் உள்ள ஓட்டையை மூடுவது. இரண்டாவது அறையில் ஸீலிங்கில் உள்ள outlet-ஐ மூடுவது. முதல் கால் மணிநேரத்தை ஜன்னல் ஓட்டையைச் சரி செய்வதில் செலவிட்டாராம். அடுத்த கட்டமாக சீலிங் வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்ற பொழுதுதான் என்னுடைய drill-ஐ வெளியே சைக்கிளில் விட்டுவிட்டு வந்தது நினைவிற்கு வந்ததாம். பதறியடித்துக் கொண்டு வெளியில் ஓடிவந்து பார்த்தபோது அங்கே அந்த சைக்கிளும் இல்லை என்னுடைய drill-ம் இல்லை. ஜங்ஷன் பாக்சை சரி செய்ய வந்த கேபிள் டி.வி.காரர்கள் திரும்பிச் சென்று விட்டிருந்தார்கள். அவர்கள்தாம் எடுத்திருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டவர் இன்ஜினீயரை அழைத்துக்கொண்டு கேபிள் டி.வி. அலுவலகத்திற்குச் சென்று பார்த்த பொழுது வந்திருந்த மூவரில் இருவர் கிடைத்தார்கள். அவர்களிடம் இவர்கள் விசாரித்த பொழுது “உங்கள் drill-ஐ பற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியாது. நாங்கள் ஒரு வேலையாக அங்கு வந்தோம். அந்த வேலை முடிந்தவுடன் திரும்பிவிட்டோம். எங்கள் சைக்கிள் கேரியர்மேல் வைத்ததாகச் சொல்கிறீர்கள், தெருவில் நிற்கும் சைக்கிள்மேல் வைத்த பொருளை அந்த வழியாக வந்த எவரும் எடுத்து இருக்கலாம். எங்கள் சைக்கிள் என்பதால் எங்கள்மேல் சந்தேகப் படுவது சரியில்லை. நாங்கள் மீண்டும் சைக்கிள் எடுக்கும்போது அதன்மேல் drill இல்லை” என்று அடித்துப் பேசினார்களாம். உங்களுடன் வந்த மூன்றாம் நபர் எங்கே என்று கேட்டபொழுது அவருடைய வீட்டு முகவரி எல்லாம் எங்களுக்குத் தெரியாது என்றும் சொல்லிவிட்டார்களாம்.

இதைச் சொல்லி முடித்தவர் மேற்கொண்டு என்ன செய்வது என்று என்னையே கேட்டார். இந்த மூன்றாம் நபரைத் தேடிப் பிடித்து அவரையும் விசாரிக்க வேண்டும் என்று நான் முடிவு செய்து, இப்பொழுது மூவருமாக அதே இடத்திற்குச் சென்றோம். மீண்டும் அந்த இருவரையும் சந்தித்து பிரஷர் கொடுத்தபொழுது அந்த மூன்றாம் நபர் இன்னொரு கேபிள் டி.வி. அலுவலகத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்கள். உடனே அங்குக் கிளம்பிச் சென்றோம். முகவரியே தெரியாது என்று சொன்னவர்கள் பின்னர் அந்த மூன்றாம் நபர் இருக்கும் இடத்தைச் சொன்னது என் இன்ஜினீயர் நண்பருக்குச் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. ஆனால் அந்த மூன்றாம் நபரைச் சந்தித்தபோது மற்ற இருவர் சொன்ன அதே பதிலைத்தான் இவரும் சொன்னார். இவரிடம் பேசி உண்மையை வரவழைக்க முடியாது என்று புரிந்து கொண்ட நான் “போலீசில் கம்ப்ளைண்ட் கொடுக்கப் போகிறோம், விசாரணைக்குத் தயாராக இருங்கள்” என்று சொல்லிவிட்டு மூவருமாகத் திரும்பி வந்தோம்.

வீட்டிற்கு வந்ததும் என் தகப்பனாரிடம் சென்று எலக்ட்ரிஷியனின் கவனக்குறைவால் drill திருடு போனதைச் சொன்னேன். அதற்கு அவர் அது திரும்பக் கிடைக்கும் பயப்பட வேண்டாம் என்று பதில் சொன்னார். நான் அதை மிகவும் பத்திரமாக வைத்திருந்ததால் அது என்னைவிட்டு நிரந்தரமாகப் போகவே போகாது என்றார். போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுப்பதற்கு நான் தயாராக இருந்தாலும் எலக்ட்ரிஷியன் முன்வரவில்லை.

இதை என் தகப்பனாரிடம் சொன்ன பொழுது, drill-ஐ திரும்பப் பெறுவதற்கு நான் செய்யக்கூடியது ஒன்று இருக்கிறது என்றார். “அது என்ன?” என்று கேட்ட பொழுது drill திருடு போனது ஒரு லைப் ரெஸ்பான்ஸ் நிகழ்ச்சியாக இருக்கலாம் என்றும், drill திருடு போன அதே சமயத்தில் அல்லது ஒரு நாள் முன்னதாக எங்கள் வீட்டில் உள்ள எவரேனும் அடுத்தவருடைய பொருளை அபகரித்துக் கொண்டு வந்திருக்கலாம், மேலும், அடுத்தவர் பொருள் எங்கள் வீட்டிற்குள் முறைதவறி வரும் பொழுது எங்கள் வீட்டுப் பொருள் அதேவிதமாக வெளியில் சென்றுவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

எனக்குத் தெரிந்து கடந்த சில தினங்களாக எங்கள் வீட்டைச் சேர்ந்த எவரும் இத்தகைய தவற்றைச் செய்யவில்லை என்றேன். அவர் விடாமல் கடந்த சில தினங்களாக யார் யார் வீட்டிற்கு வந்தார்கள் என்னென்ன கொண்டு வந்தார்கள் என்று விசாரித்தார். அதற்கு நான் 16-ம் தேதி கனடாவிலிருந்து ஒரு நண்பர் வந்தார் என்றும் என் குழந்தைக்கும், மற்றும் என் சகோதரர்களின் குழந்தைகளுக்கும் துணிமணிகளும், விளையாட்டுப் பொருட்களும் வாங்கி வந்தார் என்று தெரிவித்தேன்.

என்னுடைய குழந்தைக்காகக் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்களை எடுத்து வரும்படி சொன்னார். அவை எல்லாவற்றையும் பார்வையிட்ட என் தகப்பனார் இப்பொழுது கொண்டு வந்தவை எல்லாம் என் குழந்தைக்காகத் தரப்பட்டவையா? என்று கேட்டார். அதில் உண்மை என்ன வென்றால் பொம்மை கார் ஒன்று என் குழந்தைக்காகத் தரப்பட்டது இல்லை, என் இரண்டாவது தம்பியின் முதல் மகனுக்குத் தரப்பட்டது. இந்தப் பொம்மை காரை பார்த்த பொழுது என் மனைவியும், என் தாயாரும் என் தம்பி பையனிடம் ஏற்கனவே நிறைய பொம்மை கார்கள் இருப்பதால் இதை அவனுக்குத் தராமல் என் குழந்தைக்காக இங்கேயே வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்களாம். அடுத்த கட்டமாக என் தாயார் என் தம்பி மனைவியிடம் இதைத் தெரிவித்தபொழுது அவர்களும் சந்தோஷமாக விட்டுக் கொடுத்தார்களாம். ஆக இவ்வழியில்தான் இந்த பொம்மை கார் இந்த வீட்டிலேயே தங்கிவிட்டது என்பதை அவருக்குத் தெரிவித்தோம்.

இதைக் கேட்டவுடன் என் தகப்பனார், drill திருடு போனதில் ஒரு life response தொடர்பு இருக்கிறது என்றும், என் தம்பியின் பிள்ளைக்கு வந்த கார் பொம்மையை என் தாயாரும், மனைவியும் தக்க வைத்துக் கொண்டது என் drill திருடு போவதற்கு நேரடிக் காரணம் என்றும் கூறினார். ஆனால் அதை என்னால் அந்த நேரம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் தகப்பனாரோ இரண்டுமே ஒரே தரப்பட்ட நிகழ்ச்சிகள்தாம் என்று வலியுறுத்தினார். மேலும் ஒரு இடத்தினுடைய சூழல் உயர்வாகவும், சென்சிடிவாகவும் இருக்கும்பொழுது சிறு தவறுகள் கூட பெரிய வேண்டாத விளைவுகளை உண்டு பண்ணும் என்றும் கூறினார்.

அடுத்த நாள் போலீஸ் ஸ்டேஷனில் drill என்னுடையது என்றும் தொலைத்தவர் எலக்ட்ரீஷியன் என்றும் ஸ்டேட்மெண்டில் குறிப்பிட்டு கம்ப்ளைண்ட் கொடுத்தோம். மறுநாளே அதாவது ஜூலை 21-ஆம் தேதி ஸ்டேஷனுக்கு எலக்ட்ரீஷியனை வரும்படி அழைத்தார்கள். 18-ஆம் தேதி தொலைத்த drill விஷயமாக ஏன் இன்றுவரை கம்ப்ளைண்ட் கொடுக்காமல் இருக்கிறார் என்று கேட்டார். கேபிள் டி.வி. கம்பெனியைச் சேர்ந்தவர்கள்மேல் சந்தேகம் என்று ஸ்டேட்மெண்ட் கொடுத்தால் அவர்களுடன் தகராறு என்ற பயம்தான் காரணம் என்று அவர் அளித்த பதில் போலீசாருக்குத் திருப்தி அளிக்கவில்லை. கம்ப்ளைண்ட் கொடுக்க முன்வரவில்லை என்றால் போலீசாரின் சந்தேகம் அவர் பேரிலேயே திரும்பும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தார்கள்.

இப்படி ஒரு எச்சரிக்கை வந்த பிறகு drill-ஐ எப்படியாவது மீட்க வேண்டிய பிரஷர் அவருக்கு மேலும் அதிகரித்தது. சனி, ஞாயிறு, திங்கள் மூன்று நாட்களிலும் என்னைச் சந்திப்பதையே தவிர்த்தார்.

என் தகப்பனாருடைய கட்டளையை ஏற்று என் மனைவி என் சகோதரனின் மனைவியை அழைத்து, அவர்கள் குழந்தைக்காக வந்த கார் பொம்மையை எடுத்துப் போகும்படி கூறினாள். அவர்கள் இங்கு வந்து அந்தக் கார் பொம்மையை எடுத்துச் சென்றார்கள். இது ஜூலை 20-ஆம் தேதி வெள்ளிக் கிழமை நடந்தது.

இதற்கிடையில் அன்னையின் அருளால் என் drill எப்படியும் மீட்கப்படும் என்று திடமாக நம்பிய நான் தொடர்ந்து பிரார்த்தனையும் செய்து கொண்டிருந்தேன்.

ஜூலை 20-ஆம் தேதி அன்று நான் தொலைத்த அதே வெளிநாட்டு drill-ஐ புதிதாக இங்கே வாங்க என்ன செலவாகும் என்று விசாரித்தேன். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரையிலும் பழைய drill கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம், அன்றும் கிடைக்கவில்லை என்றால் புதிதாக ஒன்று வாங்குவது என்றும் தீர்மானித்திருந்தேன். அதே மாடல் drill-ன் விலை ரூ.2650/- என்று தெரிய வந்தது.

ஜூலை 20-ஆம் தேதி இரவு நான் எலக்ட்ரீஷியனைச் சந்தித்து தொலைந்தது கிடைக்கவில்லை என்றால், புது drill வாங்கவேண்டிவரும் என்று சொன்னேன். அதனுடைய விலையில் 1500 ரூபாவையாவது இவர் ஏற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் ஒத்துக் கொண்டார்.

இப்படி வாக்குக் கொடுத்திருந்தாலும், அதன் பிறகு தொடர்ந்து மூன்று நாட்கள் அவர் என்னைச் சந்திப்பதை தவிர்த்த போது எனக்குச் சந்தேகம் வரத்தான் செய்தது. 24-ஆம் தேதி காலையில் வீட்டு வாசலில் நின்றுகொண்டு அவர் என்னை கூப்பிடுவது கேட்டது. வெளியே வந்து பார்த்தபோது என்னுடைய drill-ஐ கையில் வைத்துக்கொண்டு அவர் நின்று கொண்டிருந்தார். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.

எப்படி drill-ஐ மீட்டீர்கள் என்று நான் கேட்ட போது, அவர் நீண்ட கதை சொன்னார். அதன் சாரம் பின்வருமாறு: என்னுடைய drill-ஐத் தொலைத்த விஷயத்தைத் தனக்குத் தெரிந்த ஒரு கடை உரிமையாளரிடம் சொல்லியிருந்தாராம். அந்தக் கடைக்கு வாடிக்கையாக வந்து போய்க் கொண்டிருந்த ஒரு இளைஞர் அந்த கேபிள் டி.வி. கம்பெனியைச் சேர்ந்த டெக்னீஷியர்களுடன் நண்பராக உறவாடிக் கொண்டிருந்தார். கடை உரிமையாளர் இந்த இளைஞரிடம் drill தொலைந்து போன விஷயத்தைச் சொல்லிவைத்திருந்தாராம். இவ்விளைஞர் அந்த டெக்னீஷியருடன் பேசிக் கொண்டு இருந்தபோது, அவர்களும் இப்படி ஒரு drill-ஐ எடுத்துக் கொண்டு வந்து விட்டதாகவும், அதை விற்பதற்கு ஆள் தேடிக்கொண்டு இருப்பதாகவும் சொன்னாராம். ஏற்கனவே இதைக் கேள்விப்பட்டிருந்த அந்த இளைஞர் உடனடியாக கடை உரிமையாளரிடம் வந்து drill இவர்கள் கையில்தான் இருக்கிறது என்று தெரிவித்தார். அவரும் உடனடியாக இந்த டெக்னீஷியர்களைச் சந்தித்து நல்லவிதமாக drill-ஐத் திருப்பித்தரும்படி புத்திமதி கூறினாராம். அவர்களுக்கும் ஒரு மனமாற்றம் வந்து இவரிடம் அதைக் கொடுத்து விட்டார்களாம். பின்னர் அவரிடமிருந்து எலக்ட்ரீஷியன் கையில் வந்து இப்பொழுது அவர் என்னிடம் தருவதாகச் சொன்னார்.

இப்படியாக என்னுடைய drill என்னிடம் திரும்பி வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உடனே அன்னைக்கு நன்றி தெரிவித்தேன். பிறகு என் தகப்பனாரைச் சந்தித்து drill திரும்பி வந்த விதத்தைப் பற்றி சொன்னேன். அவரும் மிகவும் சந்தோஷம் அடைந்தார். Drill திரும்பக் கிடைத்ததற்கு எலக்ட்ரீஷியன் ஒரு காரணம் சொன்னாலும், பிறர் பொருளை திருப்பிக் கொடுத்ததுதான் உண்மையில் drill-ஐ மீட்டுத் தந்தது என்று மீண்டும் வலியுறுத்தினார். அதைத் திருப்பித் தராமல், அதற்கும் drill தொலைந்து போனதற்கும் உண்டான தொடர்பை ஏற்காமல் அன்னையிடம் நான் எவ்வளவு தீவிரமாக பிரார்த்தனை செய்திருந்தாலும் அருள் செயல்பட்டிருக்காது. Drill திரும்பி வந்திருக்காது என்று விளக்கினார்.

******



book | by Dr. Radut