Skip to Content

07. வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

6. இடையறா முன்னேற்றத்தை வாழ்க்கையினுடைய குறிக்கோளாக ஏற்றுக்கொள்ள வேண்டும். கிடைத்த முன்னேற்றம் போதும் என்ற எண்ணம் வரவே கூடாது. ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று விரும்பவும் கூடாது.

சைத்தியக் கல்வி என்று அன்னை எழுதிய 10 சட்டங்களில் இது 6-ஆவது சட்டம். பூரண யோகத்திற்கு அடிப்படையான சட்டம் எனவும் கூறலாம். இந்தச் சட்டப்படி பிரபஞ்சம் இயங்குகிறது. மனித உடல், ஜீவராசிகள் இந்தச் சட்டப்படியே இயங்குவது உண்மையானால், அது கண்ணுக்குத் தெரிவதில்லை. மனம் விழிப்பானால் அறியும். பிறந்த குழந்தை விடும் மூச்சு, கடைசிவரை இடைவிடாதுள்ளது. குழந்தை வளர்ந்தாலும், 25 வயதிற்குமேல் உயரம் வளர்வதில்லை. மரம், செடி, கொடிகளும் அப்படியே, ஆனால் வளர்ச்சி நிற்பதில்லை. உயரத்தில் மாற்றம் தெரியாவிட்டாலும், உணர்ச்சி வளரும், உள்ளுறை ஜீவியம் வளரும், மனம் வளரும், ஞானம் வளரும், ஆத்மா வளரும், பரிணாம வளர்ச்சிபெறும், தாழ்ந்த பகுதியான உடல் வளர்வதை நிறுத்திவிட்டால், உயர்ந்த பகுதிகள் தொடர்ந்து உயர்ந்த அளவில் வளரும். நமது முன்னேற்றம் இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டால், பிரபஞ்சம்போல் தொடர்ந்து வளரும். ஒரு குடும்ப முன்னேற்றம் தடையின்றி, முடிவின்றி வளர்ந்தால் வெகு சீக்கிரம் அது ஊரில் முதல் குடும்பமாகும். அதையே தொடர்ந்தால் மாவட்டத்திலும், மாநிலத்திலும், நாட்டிலும், உலகிலும் முதன்மையான குடும்பமாகும். Bill Gates-இன் பணம் இதுபோல் வளர்ந்தது. பண வளர்ச்சிக்கு முடிவில்லை. முடிவு வந்தாலும் தொடர்ந்த மன வளர்ச்சி, பண்பின் வளர்ச்சி, ஆத்ம வளர்ச்சியெனத் தொடரும். வளர்ச்சியின் தரம் தொடர்ந்து மாறினால் வளர்ச்சிக்கு முடிவில்லை. நாட்டின் பெரிய தலைவர்கள் வாழ்வைக் கவனித்தால் இந்த உண்மை விளங்கும்.

மனிதனை சோம்பேறி என்கிறார் அன்னை. பகவான் 100 பேருக்கு யோகம் பலித்தால் சத்திய ஜீவியம் வரும் என்றார். குறைந்தபட்சம் 12 பேராவது வேண்டும் என்றார். அப்படிக் கூறியவர் தம்மை நாடி வந்த சாதகர்களின் யோகத்தை வழி நடத்தும் பொறுப்பை நேரடியாகத் தானே மேற்கொண்டார். அதை நிர்வாகம் செய்ய சாதகர்கட்கு வேலைகளை பொறுப்பாகக் கொடுத்தார். அவ்வேலைகளை நேரடியாக நிர்வாகம் செய்யும் பொறுப்பை அன்னையிடம் ஒப்படைத்தார். சாதகர் குழந்தைகட்குக் கல்வி புகட்டும் கடமையை ஆசிரமப் பள்ளி ஏற்றது. வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் அன்னையே அளித்தார். சாதகர்களுடைய யோகானுபவங்களை நேரடியாகத் தனக்கே எழுதச் சொன்னார். பதில் எழுதினார். 20,000 கடிதங்கள் எழுதினார். அது எப்படிப்பட்ட உதவி, ஸ்தாபனம், சூழல் என்று அறிய ஆசிரமத்திற்கு வெளியேயிருந்து யோகம் பயில்பவர் அறிவார்.

யோகத்தில் முதற்கட்டம் மௌனம், நாள்கணக்காக, வருஷக்கணக்காகப் பயின்றாலும் கிடைக்காது. பால்கனி தரிசனத்தில் முதல்நாள் பூரண மௌனம் கிடைக்கும். சமாதியில் உட்கார்ந்தால் 10 அல்லது 20 நிமிஷத்தில் கிடைக்கும். ஆசிரமச் சூழலில், அன்னையின் பார்வையில், பகவான் நேரடியாகத் தந்த உதவியால் வருஷம் நாளாகும், ஜென்மம் சில மாதமாகும். ஒரு கட்டம் பலித்தால் அதை நிரந்தரமாகப் பெற நம் வாழ்வு முறையை அன்னை முறையாக்கிக் கொள்ள வேண்டும். அது எவராலும் இதுவரை இயலவில்லை என்பது அன்னை அனுபவம். அம்பானி வளர்ந்ததைப் போன்ற வளர்ச்சியே ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான இளைஞர்கள் பெறுவது, எவரும் தொடர்ந்து வளர்வதில்லை. ஏனெனில் வளர்ச்சி வரும் பொழுது ஆயிரம் கிளைப் பாதைகளுண்டு. பணத்திற்குப் பல்லாயிரம் செலவு வரும். 50,000 கோடி சம்பாதிப்பவன், 50 கோடியில் நின்றுவிடுகிறான். 5 கோடியிலேயே நிற்பவர்கள் ஏராளம். வளரும் பொழுது தெம்பு அதிகரிக்கும். தெம்பு திறமையானால் தொடர்ந்த வளர்ச்சியுண்டு. அதற்கு முதலில் கட்டுப்பாடு தேவை. திறமை தொடர்ந்து வளர பண்பு தேவை. பண்பு உயர அந்நிலைக்குரிய skills, attitudes, திறமைகள், நோக்கங்கள் தேவை. இவற்றைப் பெற விரும்பாதவர், முடியாதவரைவிட அதிகம்.

தொடர்ந்த முன்னேற்றம் பெற தொடர்ந்து உயரும் அடுத்த கட்ட முயற்சி தேவை. முயற்சி செய்ய மனிதன் விரும்புவதில்லை. பெற்றதை அனுபவிக்க விரும்புவான். அனுபவித்து அழிக்க விரும்புவான். சேகரம் செய்து கொண்டே போனால் எப்பொழுதுதான் அனுபவிப்பது என்பான். அனுபவிக்கும் ஆசை வந்ததும், வளர்ச்சி நின்று போகும். சம்பாதிப்பவனுக்கு வீடு கட்ட, திருமணம் செய்ய, வெளிநாடு செல்ல அளவு கடந்து ஆர்வம் பெருகி, அவையே தடையாகும். வளர்ச்சிக்குரிய மனப்பான்மை இடையறாத வளர்ச்சி. மற்ற விஷயங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்வரை பொருந்தும். எதிராக இருப்பதே இயல்பு. வளர்ச்சியை நிறுத்தி, அனுபவிப்பதை வளர்த்தால் 10 அல்லது 20 ஆண்டுகள் வளர்ச்சியில் பெற்றது ஓராண்டில் விரயமாகும். அதன்பின் வளர்ச்சிக்கே மனம் போகாது.

பூரண யோகத்தில் எதுவும் கூடிவரும். எந்த அளவிலும் கூடிவரும். தொடர்ந்தும் கூடிவரும். பணத்தில் ஏற்படும் தளர்ச்சி யோகத்தில் பலமடங்கு ஏற்படும். அன்னையின் காலடியில் யோகம் செய்வது கல்லூரியில் பயில்வது, நாமே யோகம் செய்வது தபாலில் படிப்பதுபோல். இன்று தபால் வழி படிப்புண்டு. அன்று அது இல்லை. புத்தகமில்லாமல், ஒருவர் உதவியில்லாமல், நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு, தானே பட்டம் பெற ஆயிரத்திலொருவரால் அன்று முடிந்தது. யோகம் வெளியில் வாழ்பவருக்குண்டு என்பது சட்டமானாலும், நடைமுறையில் அது மிகமிகச் சிரமம். அதுவும் அன்னையை மனதில் யோகத்தில் பிரதிஷ்டை செய்தால் கூடிவரும். கூடிவரும் பொழுது அதைத் தொடர மனித மனம் இடம் தராது. யோகம் கூடிவருவதைவிட கூடி வந்ததைத் தொடரும் மனப்பான்மையை மேற்கொள்வது கடினம். அது அளவு கடந்து திட்டிய எலிசபெத்தை அன்போடு அணுகிய டார்சியின் மனப்பான்மைக்குத்தான் முடியும்.

முற்றும்.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பிறரை அவர் தன்னையறியும் வகையில், அவர் விரும்பிப் போற்றும் வகையில், நம்மால் புரிந்து கொள்ள முடியுமானால், அவர் குறைகளை அவர் புறக்கணிப்பதுபோல் நாமும் புறக்கணித்தால், அவர் நிறைவுகளை அவர் போற்றுவதுபோல் நாமும் போற்றினால், அவர் நம்மை உணர்ச்சியுடன் சேர்த்துக் கொள்வார். உணர்ச்சி ஒன்றினால் நல்லது நடக்கும்.
  •  நல்லது நடக்க, பிறரை அவர் அறிவதுபோல் அறிய வேண்டும்.
  • அனைவரையும் அவரவர் கண்ணோட்டத்தில் புரிந்துகொண்டால், அனைவராலும் நமக்கு நல்லதுண்டு.
  • நம்மால் அனைவருக்கும் நல்லது செய்ய முடியும்.
  • அவரவர் விரும்பி ஏற்பதே அனைவருக்கும் நல்லது.
  • பிறர் விருப்பத்தை ஏற்பது பிறரை ஏற்பதாகும்.
  • எவரை ஏற்றாலும் நல்லது நடக்கும்.
  • நடப்பனவெல்லாம் நல்லனவாக நடக்க, பழகுபவர் எல்லோரையும் ஏற்கும் மனம் வேண்டும்.
  • பெரிய மனம் அதிகமான பேரை ஏற்கும், அதனால் அதிகமான பேருக்கு நல்லது செய்ய முடியும், அதிகமான பேர் நல்லது செய்வார்கள்.  
உலகம் உய்ய அனைவரையும் நல்லவர்
என அறிந்து மனம் ஏற்பது அவசியம்
 

*******



book | by Dr. Radut