Skip to Content

03. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/72) மனம் ஆரம்பத்தை இழக்க வேண்டுமெனில் அது மௌனத்தால் நிரம்பியும் அதன் அமைப்பை இழந்தும் நிற்க வேண்டும். அந்நிலையில் சக்தி (the force) மௌனத்தைச் சந்தித்து அதில் கரைந்துவிடும்.

  • மௌனம் நிறைந்த மனம் சக்தியில் கரையும்.
  • எல்லோரும் மனத்தை அறிவோம்.
  • அது என்ன, எப்படிச் செயல்படுகிறது என அறியோம்.
  • அனைவரும் பேசுகிறோம்.
  • பேசக் குரல் வேண்டும். குரலின் சக்தியால் பேச்சு எழுகிறது, கேட்கிறது.
  • பேச்சுக்கு அமைப்புண்டு (construction).
  • சுவர்கள் வீட்டின் அமைப்பு.
  • வீட்டை அறைகளாகத் தடுப்பது, எல்லையை நிர்ணயிப்பது சுவர்கள்.
  • சுவர்களில்லாமல் வீடு கட்ட முடியாது.
  • சுவர்களை அதனால் வீட்டின் அமைப்பு என்கிறோம்.
  • சட்டையின் அமைப்பு வெட்டிய இடங்களின் தையல்.
  • தையலின்றி, வெட்டாமல் சட்டையில்லை.
  • வீதிகள் ஊரின் அமைப்பு.
  • அவைபோல் பேச்சுக்குச் சொற்கள் அமைப்பாக இருக்கின்றன.
  • சொற்களின்றிப் பேச்சில்லை.
  • அதேபோல் எண்ணங்கள் மனத்தின் அமைப்பு.
  • ஒரு ஊரை இடித்து அகற்றி புது ஊர் கட்ட வேண்டும் என்றால் வீடுகளை இடிக்க வேண்டும், வீதிகளை மூட வேண்டும்.
  • வீடுகட்கு அஸ்திவாரம் உண்டு.
  • ஆயிரம் ஆண்டுகட்குப் பின்னும் தோண்டி எடுத்தால் அஸ்திவாரம் தெரியும்.
  • களிமண் பானையைச் சூளையில் சுட்டுவிட்டால் மீண்டும் களி மண்ணாகாது.
  • சுடாத பானையை நீரில் மூழ்கி ஊற வைத்தால் பானை கரைந்துவிடும்.
  • சூளை சுடுவதால் பானையின் அமைப்பு உருவாகிறது.
  • சுடாத பானையின் அமைப்பு கரையக்கூடியது.
  • மனத்தின் அமைப்பு எண்ணம்.
  • எண்ணம் மாறக்கூடியது.
  • எண்ணம் உணர்வு பெற்று நம்பிக்கையானால், எண்ணம் அமைப்பு பெறும்.
  • மனத்தின் பொருளில் அந்த அமைப்புக்கு அஸ்திவாரம் விழும்.
  • மௌனம் நிறைந்தால் (saturate) எண்ணம் கரையும்.
  • எண்ணம் கரைவதால் அதன் அஸ்திவாரம் கரையாது.
  • மௌனம் மனத்தின் பொருளை நிரப்பினால் அஸ்திவாரமும் கரையும்.
  • பொதுவாக மௌனி, சாது என்பவர் பேசமாட்டார்.
  • பேசாதவர் மனத்தில் பேசிக் கொண்டிருப்பார்.
  • அவர் பேசுவதை நிறுத்தினால் எண்ணம் எழுந்து பேசும்.
  • எண்ணத்தை நம்பாவிட்டால், நம்பிச் செயல்படாவிட்டால் எண்ணம் மௌனத்தால் கரையும்.
  • எண்ணம் உணர்வால் நம்பிக்கையாகி இருப்பதால் அப்பொழுதும் அஸ்திவாரம் கரையாது.
  • எண்ணத்தைச் செயலுக்கு நம்புகிறோம். அதைக் கடந்து எண்ணத்தை எண்ணமாக நம்புகிறோம்.
  • அது கரைய மௌனம் மனத்தின் பொருளை நிரப்ப வேண்டும்.
  • ஆரம்பம் (initiative) என்பது எண்ணத்தையும் நம்பிக்கையையும் பொறுத்தது.
  • அதை இழப்பது அகந்தை கரைவது.

******

II/73) ஆரம்பத்தை இழக்கும் நிலையை மௌனம் ஏற்படுத்தும். ஆனால் சக்தியைச் சைத்திய புருஷனிடம் அனுப்ப அதனால் இயலாது. அது சமர்ப்பணம், ஆர்வத்தால் பூர்த்தியாவது.

  • ஆரம்பத்தை இழந்த பின்னும் சமர்ப்பணம் தேவை.
  • மனிதனுடைய சரணாகதி பூர்த்தியான பின்னும், கருவி, வேலையைச் செய்பவன் (instrument, worker) இருக்கும் என்கிறார் பகவான்.
  • வீட்டை இடித்து அப்புறப்படுத்திய பின் அஸ்திவாரம் பூமியிலிருக்கும்.
  • நான் எனும் முனைப்பு அகந்தை, கருவி, வேலைக்குரியவன் என்ற உருவில் இருக்கும்.
  • ஆங்கிலேயன் போனபின் ஆங்கிலேய ஆபீசர்களிருந்தனர்.
  • அதுவும் போனபின் இன்றுவரை அவன் நிர்வாகம் இருக்கிறது.
  • ஒரு அமைப்பு மாறும் பொழுது பெரும்பாலும் மாறும், அனைத்தும் மாறாது.
  • திருவுருமாற்றம் பொறாமையைப் பேருதவியாக்குவதால் அடியில் தங்க எதுவுமில்லை.
  • (Initiative) ஆரம்பம் என்பது யுகம் யுகமாக நம்முள் தயாரானது.
  • சக்தி உடலிலும், உயிரிலும், மனத்திலும் சேர்கிறது.
  • சேர்ந்தது முழுமையானால் (saturated) அதற்கு முனைப்பு எழும்.
  • முனைப்புக்கு முழு உருவம் தருவது ஆரம்பம்.
  • இளைஞர்கள் ஓர் ஊரில் எது செய்ய ஆரம்பித்தாலும், பெரியவர்கள் எதையும் மாற்றாதே, எதையும் புதியதாக ஆரம்பிக்காதே எனக் கூறுவார்கள்.
  • புதியன செய்தல் புரட்சி செய்தல்.
  • காசு சம்பாதித்தவனால் சும்மாயிருக்க முடியாது, கல்யாணம் செய்வான், அதிகப் பணமிருந்தால் வீடு கட்டுவான், ஏராளமாக இருந்தால், எலக்ஷனில் நிற்பான்.
  • அணு ஆயுதங்களைப் பற்றி அன்னை பேசியபொழுது அவையிருந்தால் உபயோகப்படுத்தும்படி தூண்டும் என்றார்.
  • நாலு பேர் பேசும் விஷயத்தில் நமக்குப் படிப்பு, தெளிவு இருந்தால், அவர்கள் அறியாததை நாம் கூற விரும்புவோம்.
  • அதைத் தடை செய்வது இயலாத காரியம்.
  • அப்படி ஒருவர் வென்றால், அந்த எண்ணம் பசுமையாக ஜீவனோடு எந்த நேரமும் மனதிலிருக்கும்.
  • மேடைப் பேச்சாகவோ, கட்டுரையாகவோ, பிறரிடமோ அது வெளிவரத் துடிக்கும்.
  • சமர்ப்பணத்தின் சிறப்பை அறிய அதுபோன்ற உந்துதலை சமர்ப்பணம் செய்து பார்ப்பது தெரிவிக்கும்.
  • மௌனம் மகத்தானது.
  • பெரும்பாலும் தானே மேலிருந்து நம்முள் வருவது.
  • மௌனம் குடிகொண்டால் ஆரம்பம் முனை மழுங்கும்.
  • மௌனம் கலைந்தபின், மீண்டும் வெளிவர முயலும்.
  • ஆரம்பத்தின் அஸ்திவாரத்தை மௌனத்தின் ஆழம் தொட்டால், ஆரம்பம் கரைவது தெரியும்.
  • கரையாத ஆரம்பம் இருக்கும்வரை சமர்ப்பணம் தேவை.
  • விக்காம் போக்கடா என்று டார்சி கடிதம் கூறியதை எலிசபெத் ஏற்றாள்.
  • ஏற்றவுடன் அவன்மீது இருந்த ஆசை, ஆர்வம், பரிவு அப்படியே மறந்துவிட்டது.
  • அவனை மனம் மறந்துவிட்டது.
  • உணர்வு மனத்தைவிட ஆழத்திலிருப்பது.
  • உணர்வு அறிவை ஏற்காது.
  • லிடியாவால் குடும்பத்தைச் சர்வ நாசம் செய்த பின்னும் அவன் மீது அவளுக்கு அனுதாபமிருந்தது.
  • தன் சிறுவாட்டுக் காசிலிருந்து அவனுக்காக லிடியாவுக்குத் தவறாது பணம் அனுப்புவாள்.
  • மரத்தை வெட்டியபின் அடிமரம் நிற்கும்.
  • அதையும் வெட்டி எடுத்தபின் ஆணிவேர் ஆழ்ந்திருக்கும்.
  • கிளைகளை வெட்டியதால் மரம் அழிந்தது உண்மையானாலும், மரம் உற்பத்தியான வரலாற்றைக் கருதினால், கிளைகள், அடிமரம், ஆணிவேர் என ஒன்றன்கீழ் ஒன்றாக அடுத்த அடுத்த நிலைகள் ஏற்படும்.

தொடரும்....

*******



book | by Dr. Radut