Skip to Content

14. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

("அன்னையின் தரிசனம்" என்ற நூலிலிருந்து)

அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

3. சுத்தம், வரிசைக்கிரமம்

வீட்டில் உள்ள எல்லாப் பொருள்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை வரிசைக்கிரமமாக அடுக்கி வைத்துக்கொள்வதும் அவசியம். நாம் கையாள்கின்ற பொருள்களை அசுத்தமாகவும், தாறுமாறாகவும் வைத்திருந்தால், அவை அந்தப் பொருள்களைப் பெரிதும் பாதிக்கின்றன. அதன் காரணமாக அவை நமக்குப் போதிய பலனைத் தர விரும்புவதில்லை. அவற்றைத் தூய்மையாகவும், சீராகவும் வைத்துக்கொண்டால், அவை நமக்குப் பெரும் பலனைத் தருவதோடு, பன்மடங்காகப் பெருகவும் செய்கின்றன.

வீட்டில் தரை, ஜன்னல் கதவு, சுவர், சமையல் அறை, குளியல் அறை, வீட்டின் பின்புறம் போன்ற இடங்களில் அன்றாடம் தூசியும், அழுக்கும் சேர்ந்து விடுகின்றன. நாம் அவற்றில் கவனம் செலுத்தாமல், தரையை மட்டும் சுத்தப்படுத்தினால் போதாது. சுவர், ஜன்னல் கதவு போன்ற இடங்களில் அழுக்குச் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த இடங்களில் கண்டபடி காகிதங்களை ஒட்டுவதும், கரித்துண்டாலும், பென்சிலாலும் எழுதுவதும் அல்லது கிறுக்குவதும் தவறாகும். கையில் ஒட்டிக்கொண்ட கரி, அழுக்கு, எண்ணெய் முதலியவற்றைப் போக்கச் சுவரையோ, கதவு, ஜன்னல் போன்றவற்றையோ உபயோகிக்கக்கூடாது. தண்ணீர் படுகின்ற இடங்களில் அழுக்கும், பாசியும் சேர்ந்துகொண்டு இருப்பது இயற்கை. அவற்றைத் தினமும் ஒரு தடவையோ அல்லது வாரத்துக்கு ஒரு முறையோ போக்கிச் சுத்தம் செய்ய வேண்டும்.

சமையல் அறையில் நிறையக் குப்பையும், கூளமும் சேர்ந்துகொண்டே இருக்கும். அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அங்கே எண்ணெய்ப் பொருள்கள் அதிக அளவில் உபயோகப்படுவதால், அது சுவரில் பூசப்பட்டு, அழுக்குச் சேர்வதற்கு வழி ஏற்பட்டுவிடுகின்றது. கையில் எண்ணெய்ப் பொருள்கள் ஒட்டிக்கொண்டால், பிசுக்கைப் போக்குவதற்குக் காகிதத்தையோ, கிழிந்த துணியையோ பயன்படுத்தலாம்; சோப்பையும் உபயோகிக்கலாம்.

வீட்டின் மூலைமுடுக்குகளிலும், கூரைப்பகுதிகளிலும் அழுக்குச் சேராதபடி கவனித்துக்கொள்ள வேண்டும். "தேவை இல்லை' என ஒதுக்கப்பட்ட பொருள்கள், வீட்டைச் சுற்றிலும் அலங்கோலமாக இறைந்துகிடப்பதை அனுமதிக்கக்கூடாது. அவற்றை ஓர் இடத்தில் சேமித்து வைத்து, பிறகு தெருவில் உள்ள குப்பைத்தொட்டியில் சேர்ப்பித்துவிட வேண்டும். வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவசியம் இல்லாத செடி, கொடிகளை அகற்றிவிட்டு, நல்ல பூச்செடிகளையும், பயனுள்ள தாவர வகைகளையும் வளர்க்க வேண்டும். செடிகளிலிருந்தும், தாவரங்களிலிருந்தும் விழும் சருகுகளையும், சேரும் குப்பையையும் அவ்வப்போது நீக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.

அடுத்து, வீட்டில் உபயோகப்படுத்தப்படும் பொருள்களைத் தூய்மையாகவும், பாத்திரங்களைக் கழுவித் துடைத்தும் வைத்துக்கொள்ள வேண்டும். உணவைத் தயாரித்து முடித்த பிறகோ அல்லது உணவை அருந்திய பிறகோ பாத்திரங்களைக் கழுவாமல் நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது. மின்விசிறி, டி.வி., ரேடியோ, சைக்கிள், தையல் இயந்திரம், மாவு ஆட்டும் இயந்திரம் போன்றவற்றைத் துடைத்துத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். செய்தித்தாள்கள், நூல்கள், பத்திரிகைகள், பாடப்புத்தகங்கள் முதலியவற்றின் மீது தூசி படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேஜை, கட்டில், நாற்காலி போன்ற மரச்சாமான்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். உடுத்திய உடைகளைத் தினமும் துவைத்துவிட வேண்டும். அணியும் உடைகளில் அழுக்கோ, கறையோ பட்டுவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.

வீட்டிலுள்ள பொருள்களைச் சுத்தமாக வைத்திருந்தால் மட்டும் போதாது. அவற்றை நன்றாக அடுக்கி, அவற்றுக்குரிய இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். பாத்திரங்களைத் தாறுமாறாகப் பரப்பிக்கொள்ளாமல், தேவையானவற்றை மட்டுமே எடுத்தும், தேவை இல்லாதவற்றை அப்புறப் படுத்தியும் சமையல் அறையைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். துணிகளைக் கண்ட கண்ட இடங்களில் தொங்கவிடாமல், அவற்றை ஓரிடத்தில் மடித்துவைக்க வேண்டும். அந்த ஆடைகளை உடனுக்குடன் துவைத்துவிட வேண்டும். துவைப்பதற்குமுன் அவற்றை ஒரு கொடியிலோ அல்லது ஒரு வாளியிலோ போட்டுவைக்க வேண்டும். துணி கிழிந்துபோனால் உடனே அதைத் தைத்துவிட வேண்டும். செய்தித்தாள்களையும், நூல்களையும், பத்திரிகைகளையும் இங்குமங்குமாகப் போட்டு வைக்காமல் ஓர் இடத்தில் அடுக்கி வைக்க வேண்டும். புத்தகங்களில் கிறுக்குவது, எண்ணெய், மை போன்றவற்றைக் கொட்டி அசிங்கப்படுத்துவது தவறாகும்.

ஜப்பான் நாட்டில் உள்ள ஜென் (Zen) மதத்தைச் சேர்ந்த "வின்சி" என்ற ஞானியின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி இங்கு நினைவுகூரத் தக்கது.

ஒரு சமயம் வின்சியைச் சந்திப்பதற்காக ஒருவர் வந்தார். என்ன காரணத்தாலோ அவர் கோபத்தால் குமுறிக்கொண்டிருந்தார். வின்சியை அணுகுமுன் சாத்தப்பட்டிருக்கும் அறைக் கதவைத் திறந்துகொண்டு போக வேண்டும். வந்தவர் தம் காலணிகளைக் கழற்றி வீசி எறிந்துவிட்டு, கதவை உடைத்து நொறுக்குவதைப் போன்ற பேரொலியுடன் திறந்துகொண்டு வின்சியின் முன்னால் போய் நின்று வணங்கினார்.

அவருடைய செயல்களை ஏற்கனவே கவனித்திருந்த வின்சி, "முதலில் உன் செருப்புகளிடத்தும், கதவினிடத்தும் நீ செய்த தவற்றுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும். நீ அப்படிச் செய்யத் தயாராக இல்லாவிட்டால் இந்த இடத்தை விட்டுப் போய்விடலாம். நீ என்னைச் சந்திப்பதில் எந்தவிதப் பயனும் இல்லை'' என்று கண்டிப்பாகக் கூறினார்.

வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. அதனால் எழுந்த எரிச்சலுடன், "அந்தப் பொருட்களிடம் மன்னிப்புக் கேட்பது பைத்தியக்காரத்தனம்'' என்றார். உன்னுடைய கோபத்தை அவற்றின்மீது காட்டுவது பைத்தியக்காரத்தனம் இல்லையா? அப்படி இருக்கும்போது அவற்றிடம் மன்னிப்புக் கேட்பது மட்டும் பைத்தியக்காரத்தனமாகிவிடுமா? அவை உன்னை மன்னிக்காத- வரை நான் உன்னை இங்கே அனுமதிக்க முடியாது'' என்றார் வின்சி.

அந்த அறிஞரின் சந்திப்பை அவரால் அலட்சியப்படுத்திவிட்டுப் போக முடியவில்லை. அதே சமயத்தில் அவற்றிடம் மன்னிப்புக் கேட்கவும் அவருடைய பகுத்தறிவு இடம் தரவில்லை. அவருடைய மனத்துக்குள் ஒரு போராட்டம் நிகழ்ந்து முடிந்தது. "வின்சியின் கூற்றில் ஏதோ ஓர் உண்மை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர், அவ்வாறு கூறி இருக்கமாட்டார்' என்று எண்ணிய அவர், மனத்தில் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, கதவிடம் சென்று தம்மை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டார். முதலில் அது அர்த்தமற்ற செயலாகத் தோன்றினாலும், போகப் போக அது மிகவும் உண்மையான ஒன்றாகத் தோன்றியது. அருகில் வின்சி இருந்ததோ, மற்றவர்கள் இருந்ததோ அவருக்கு முற்றும் மறந்துவிட்டது. கதவும், காலணிகளும் மட்டுமே அவர் கண்களுக்குத் தெரிந்தன. அவை அவர் செய்த தவற்றை மறந்துவிட்டு அவரிடம் அன்பு செலுத்தியதை உணர்ந்தார்.

எந்த நிமிடம் அவர் அப்படி உணர ஆரம்பித்தாரோ, அந்த நிமிடம் வின்சி அவரை அழைத்துத் தம்மிடத்தில் வர அனுமதி அளித்தார்.

பிற்காலத்தில் அவர் வின்சியைப் போல ஒரு ஞானியாக மாறினார்.

வாயற்ற பொருள்களுக்குச் செய்யப்படும் தவறுகளால் அருட்செல்வம் கிடைப்பதே தடைப்படுமானால், பொருட்செல்வம் கிடைப்பது மட்டும் எப்படித் தடைப்படாமல் இருக்கும்? அன்பர்கள் ஊன்றி உணர வேண்டும்.

ஸ்ரீ அரவிந்தாசிரமத்தில் இது போல நடந்த ஒரு நிகழ்ச்சி உண்டு. அங்கு இயங்கும் பல பிரிவுகளில் காகித ஆலையும் ஒன்று. அவ்வப்போது அன்னை ஆசிரமத்தைச் சார்ந்த அந்தப் பிரிவுகளை நேரில் சென்று பார்வையிடுவார். ஒரு தடவை அன்னை, காகித ஆலைக்குச் செல்ல முடிவு செய்திருந்தார். இதனை அறிந்த சாதகர்கள், "வழக்கமாக இருப்பதைவிடத் தூய்மையாகவும், சீராகவும் இருக்க வேண்டும்' என நினைத்து, எல்லா இடங்களையும், எல்லாப் பொருட்களையும் சரி செய்துவிட்டு, அன்னையின் வருகையைப் பெருமிதத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அன்னையும் வருகை தந்தார்கள். உள்ளே நுழைந்ததும் ஒரு மர அலமாரியை நோக்கிச் சென்றார். அதன் கதவைத் திறந்தார். அதனுள் பல பொருள்கள் தாறுமாறாகத் திணிக்கப்பட்டிருந்தன. "அவற்றை வெளியே எடுத்து, அவற்றிற்குரிய இடங்களில் சீராக அடுக்கி வைக்க வேண்டும்'' என்று கூறிவிட்டுச் சென்றார் அன்னை.

இந்த நிகழ்ச்சி நிகழ்ந்த சில நாள்களுக்குப் பின்னர், "காகித ஆலைக்கு நீங்கள் சென்றிருந்தபோது அங்குள்ள மூடியிருந்த ஒரு மர அலமாரிக்குள் சில பொருட்கள் தாறுமாறாகத் திணிக்கப்பட்டிருந்தது உங்களுக்கு எப்படித் தெரியவந்தது?'' என்று அன்னையிடம் கேட்டார் ஒரு சாதகர்.

"நான் அங்கே சென்றவுடனேயே, அந்தப் பொருள்கள் என்னிடம் முறையிட்டது என் காதில் விழுந்தது. ஆகையால்தான் நான் அந்த மர அலமாரியைத் திறந்து பார்க்க நேர்ந்தது'' என்று அன்னை விளக்கினார்.

இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலிருந்தும் நாம் அறிந்துகொள்ள வேண்டியவை இரண்டு. அவை, (1) எந்தப் பொருளையாவது நாம் அலட்சியப்படுத்தி அதற்குத் தர வேண்டிய கவனத்தைத் தரத் தவறிவிட்டால், அது நம் அலட்சியப் போக்கைக் கண்டு துன்புறுகிறது; (2)அப்பொருள் மீது திணிக்கப்பட்ட துன்பமானவை நம் வாழ்க்கையில் தடையாக மாறி, பல துன்பங்களை உண்டாக்குகிறது.

பொருள் நம்மை நாடி வர வேண்டுமானால், நாம் எந்தப் பொருளையும் பரிவோடும், முறையோடும் கையாள வேண்டும்.

தொடரும்....

********



book | by Dr. Radut