Skip to Content

13. அன்னை இலக்கியம் - சரண்டர் சத்யன்

அன்னை இலக்கியம்

சரண்டர் சத்யன்

இல. சுந்தரி

பிரான்ஸ் சுமாநகரின் செல்வந்தர் வசிக்கும் பகுதி அது. அங்கு ஒரு வீட்டில் லூயி என்ற பெயர் கொண்ட துடிப்பான இளம்பெண். வீட்டிலுள்ள புத்தக அலமாரியை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறாள். நிறைய படிப்பதில் பேரார்வம் கொண்டவள். அடுத்தவர்க்கு உதவி செய்வதிலும் ஆர்வம் கொண்டவள்.

புத்தகங்களை எடுத்துத் துடைத்து வரிசைப்படுத்தும்போது, ஒரு புத்தகத்திலிருந்து ஓரிளம் பெண்ணின் புகைப்படம் கீழே விழுந்தது. கையில் எடுத்துப் பார்த்தாள். யாரெனத் தெரியவில்லை. அந்தப் புத்தகத்தின் பெயரும் சற்று வித்யாசமாய் இருந்தது.

உடனே அப்புத்தகத்துடன், புகைப்படத்தையும் கையில் எடுத்துக்கொண்டு தன் தாயிடம் ஓடினாள். "அம்மா, இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் யார்? இது யாருடைய புத்தகம்?'' என்று கேட்டாள்.

அதைக் கையில் வாங்கிய அவள் தாய் ஒரு கணம் அப்படத்தை உற்றுப் பார்த்தாள். லேசாகக் கண்கலங்கினாள்.

"சொல்லம்மா. இந்தப் புகைப்படத்திலிருப்பவர் யார்? அது ஏன் இந்தப் புத்தகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது?'' என்றாள் மேலும்.

"மறைத்து வைக்கப்படவில்லை. மறந்து வைக்கப்பட்டிருக்கிறது'' என்றாள் அம்மா.

"யாரிவர்? இவரை ஏன் மறந்துவிட்டீர்?''

"இவர் உன் பாட்டியாரின் (தன் தாயின்) சகோதரி'' என்றாள் அம்மா.

"நானிவரைப் பார்த்ததில்லையே'' என்றாள் லூயி.

"ஆம், இவர் இளம் வயதிலேயே இந்தியாவிற்குச் சென்றுவிட்டார். அதனால் அவருடன் நம் குடும்பத்திற்கு தொடர்பு நின்றுவிட்டது'' என்றாள் தாய்.

லூயிக்கு தன் இந்தியப் பாட்டியாரைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாயிருந்தது. அவள் இந்தியாவைப் பற்றி நிறையப் படித்திருக்கிறாள். அது தெய்வீகம் நிறைந்த மண் என்று அதன் மீது அவளுக்குப் பெருமதிப்பிருந்தது. அத்தகைய இந்தியாவிற்குத் தன் பாட்டியார் இளம் வயதிலேயே ஏன் சென்றிருக்க வேண்டும் என்றறிய ஆசைப்பட்டாள்.

"ஏனம்மா இவர் இளம் பருவத்திலேயே இந்தியா சென்று விட்டார்? இப்போது இவர் எங்கிருக்கிறார்?'' என்றாள். "அந்தக் காலத்தில், நம் (பிரெஞ்சு) நாட்டில் பிறந்த மிரா என்பவர் மிகுந்த ஆன்ம நாட்டத்துடனிருந்தாராம். யோக சக்தி பெற்றிருந்தாராம். அவர் இந்தியாவில் தம் குருநாதர் இருப்பதை உணர்ந்து அங்குச் சென்று, பாண்டிச்சேரியில் எழுந்தருளியிருந்த ஸ்ரீஅரவிந்தரே தம் குழந்தைப் பருவ முதல் தாம் தம் தியானத்தில் கண்ட, தாம் "கிருஷ்ணா' என்று பெயரிட்டிருந்த யோகி என்பதை உணர்ந்து அவருடன் தங்கி பூரணயோகம் என்ற யோகத்தைச் செய்தாராம்.

ஸ்ரீ அரவிந்தர் என்ற அந்த தெய்வீக புருஷர் தம் யோக சக்தியால் "மிரா' என்ற பெயர் தாங்கி வந்த அவரே பரம்பொருளின் மகாசக்தி என்பதைக் கண்டுணர்ந்து கூறினாராம். அதன் பிறகு "மிரா' என்ற அவரை அனைவரும் ஸ்ரீஅன்னை என்று அழைத்து அவர் மீது பக்தி கொண்டு பேரின்பம் அடைய ஆரம்பித்தார்களாம். இது பற்றியெல்லாம் அறிந்த இந்தப் (புகைப்படத்தைக் காட்டி) பாட்டியார் அப்போதே இந்தியாவிற்குச் சென்று ஸ்ரீஅன்னைக்குத் தொண்டு செய்து வாழ ஆரம்பித்தார். அப்போது அவர் அனுப்பிய புத்தகம்தான் இது. இது பற்றி இங்கு ஒருவர்க்கும் ஆர்வமில்லாததால் இவர் புகைப்படத்தை இப்புத்தகத்தில் வைத்ததும் அப்படியே இருக்கிறது'' என்றாள்.

"இப்போது அவர் எங்கிருப்பார்? அவரை நான் போய்ப் பார்க்க முடியுமா?'' என்றாள் லூயி.

"இல்லை கண்ணே. அவர் இப்போது உயிருடனில்லை. அவர் வாழ்ந்த இடம் பாண்டிச்சேரியில் ஸ்ரீ அன்னை இருந்த வீடு'' என்றாள் அம்மா.

லூயிக்கு மேற்கொண்டு அறிந்து கொள்ள இந்த விபரம் போதுமானதாயிருந்தது. அன்றே அவள் பாட்டியார் இருந்த இடத்துடன் தொடர்பு கொண்டு, ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் பற்றிய புத்தகங்களையெல்லாம் வரவழைத்துவிட்டாள். ஸ்ரீ அன்னையின் எழுத்துகள் அவள் தாய்மொழியிலேயே இருந்ததால் ஒன்றிய உணர்வுடன் அவற்றைப் படித்துணர முடிந்தது.

"படிக்கப் படிக்க எவ்வளவு சுவையாக இருந்தது. என் தாய் மண்ணில் அவதரித்த ஒரு புனிதரைப் பற்றி இதுநாள் அறியாதிருந்தேனே. எனக்கிதனை நினைவூட்டிய என் பாட்டியாரே! நீர் எத்துணைப் பேறுபெற்றவர். ஸ்ரீ அன்னை என்பவர்க்குத் தொண்டு செய்த உம்மைப் பாட்டியார் என்றழைக்க நானும் சிறிது புண்ணியம் செய்தவளே' என்றெல்லாம் எண்ணியவண்ணம் தினமும் ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரைப் பற்றியும், சாதகர்களின் அனுபவங்கள் பற்றியும் இராப்பகலாய்ப் படிக்கலானாள்.

என் தாய்நாட்டில் அவதரித்தவர், எல்லோரும் மானுடமாய்க் கண்டபோது, இந்தியத் திருநாட்டில் அவதரித்த ஒரு மகாபுருஷரால் மகாசக்தி என அடையாளம் காட்டப்பட்டவர். சிறு வயதிலேயே தியானம் செய்தவர். இரவில் பாரிஸ் நகரில் பிரமாண்டமாய் வானுயர எழுந்து நிற்க, அவர் அணிந்த பொன்னாடை குடை போல் விரிந்து பூமியளவும் பரவ துன்புற்றோரெல்லாம் வந்து அப்பொன்னாடையைத் தீண்டியமாத்திரத்தில் துன்பம் தீர்த்து மகிழவைத்தவர் என்று அவரைப் பற்றி எண்ணி எண்ணி மகிழ்வெய்தினாள். மேன்மேலும் அவர் கோட்பாடுகளைப் படித்தறிந்து மேற்கொள்ளவும் ஆர்வங்கொண்டாள்.

முன்கோபமுடையவளான லூயி சாந்தசொரூபியாய் மாறுவதைக் கண்ட தாய் மகிழ்ந்தாள். அவள் அவசரம் நிதானமாய், பொறுமையாய் மாறுவது கண்டு மகிழ்ந்தாள். அதே நேரம் இவளும் தன் சிற்றன்னையைப் போல் வீட்டைத் துறந்து போய்விடுவாளோ என அஞ்சியவண்ணம், "லூயி, என் கண்ணே, நீயே என் ஒரே பற்றுக்கோடு. எங்கே நீ என்னைப் பிரிந்து சென்றுவிடுவாயோ என்று அச்சமாக உள்ளது'' என்றாள்.

"இல்லையம்மா, பயப்படாதே. ஸ்ரீ அன்னை என்பவர் திருவுடல் தாங்கி பாண்டியில் இருந்ததால் என் பாட்டியார் அங்குச் சென்றார். ஆனால் இன்று அவர் என் இதயத்திலேயே இருப்பதால் நான் எங்கும் செல்லத் தேவையில்லை. அவர் நினைவுடன் வாழ்வேன். அவர் கோட்பாடுகளை ஏற்று வாழ்வைத் தெய்வீக வாழ்வாக மாற்றுவேன். அவரை அறியாது துன்பத்தில் உழல்கின்றவர்களுக்கு அவர் அன்பை, அவர் அருளைப் பெற உதவுவேன். அதற்கு முன் ஒரே ஒரு முறை அவர் எழுந்தருளியிருந்த பாண்டியிலுள்ள திருக்கோயிலை தரிசிக்க நீ என்னை அனுமதிக்க வேண்டும்'' என்றாள்.

அப்போது திடீரென்று அவளுக்குத் தன் தோழியின் சகோதரி தெரசாவின் பெண் குழந்தை மோனா ஏழு வயதாகியும், உடல் வளர்ச்சி குன்றி, மனவளர்ச்சியே இல்லாது மரக்கட்டைபோல் இருப்பது நினைவுக்கு வந்தது.

உடனே அவள் ஸ்ரீ அன்னையைப் பற்றிய செய்திகள், அன்னையின் திருவுருவப் படங்கள் இவற்றுடன் தெரசாவின் வீட்டிற்குச் சென்றாள்.

தெரசா தன் பெண் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு, "இறைவா! இவள் மானுடமா? மரக்கட்டையா? எனக்கேன் இந்தச் சோதனை? நீர் கருணை உள்ளவர்தாமா? இல்லை, கடுமையானவரா?'' என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது அங்கு வந்த லூயி, "அக்கா, கடவுள் கருணையுள்ளவர்தாம். பிரச்சனையை வாய்ப்பாக மாற்றும் கடவுளைக் கொண்டு வந்திருக்கிறேன். உமக்கொரு நற்செய்தி கூறவே இப்பொழுது வந்தேன்'' என்றாள்.

லூயியின் முகத்தில் தெளிவும், பிரகாசமும் இருந்தது. அவள் பேச்சு நம்பிக்கையூட்டுவதாய் இருந்தது.

"இந்தக் குழந்தையின் நிலையில் மாறுபாடு ஏற்படாதவரை எனக்கேது நற்செய்தி?'' என்று விரக்தியாகக் கூறினாள் தெரசா.

"பிரபல அமெரிக்க மருத்துவரிடம் சென்றிருந்தீர்களே, அவர் என்ன கூறினார்?'' என்று லூயி விசாரித்தாள்.

"அவர் தம் அனுபவத்தில் குணப்படுத்த முடியாத நோய் இருந்ததில்லையென்றும், இவள் விஷயத்தில் தம் திறமை பொய்த்துவிட்டது என்றும் கூறினார்'' என்றாள் தெரசா.

"அக்கா, நீங்கள் கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் இம்முறை நிச்சயம் மோனா குணமடைந்துவிடுவாள். அது குறித்து தெய்வாதீனமாய் எனக்கொரு செய்தி கிடைத்திருக்கிறது. அதைச் சொல்லத்தான் ஓடிவந்தேன்'' என்றாள் லூயி.

"சொல் லூயி. எதுவானாலும் சொல். என் மகள் மனமும், உடலும் வளர வேண்டும். அவளும் மற்ற குழந்தைகளைப் போல் ஓடி விளையாட வேண்டும். எத்தனை மருத்துவம் செய்தோம். எவ்வளவு பணம் செலவு செய்தோம். பலனேதும் இல்லை. நான் மனம் சோர்ந்துபோன நேரத்தில் வந்து நம்பிக்கையூட்டுகிறாய். சொல் லூயி'' என்றாள்.

தான் பழைய புத்தகமொன்றில் தன் சிறிய பாட்டியாரின் புகைப்படத்தைக் கண்டெடுத்ததையும், அவர் தம் இளம் பருவத்தில் ஸ்ரீ அன்னை என்பவரால், அவர் தெய்வீகத்தால் ஈர்க்கப்பட்டு இந்தியாவில் பாண்டிச்சேரியில் அவரிருந்த இடத்தில் சென்று சேர்ந்துவிட்டதையும், ஸ்ரீ அன்னையின் மகாசக்தி பற்றியும் கூறி, கொண்டு வந்த ஸ்ரீ அன்னையின் திருவுருவப் படங்களையும் கொடுத்தாள். அத்துடன், தான் இந்தியா செல்ல விரும்புவதையும் கூறினாள். தெரசா இயல்பாகவே மென்மையும், நல்லெண்ணமும் கொண்ட பெண் ஆதலால் தம் தாய்நாட்டில் அவதரித்த ஸ்ரீ அன்னையைப் பற்றிய செய்திகள் அவளைப் பெரிதும் கவர்ந்தன. ஸ்ரீ அன்னை தம் யோகத்தால் சத்தியஜீவிய சக்தியைப் புவிக்குக் கொண்டுவந்துள்ளதையும், ஆழ்ந்த நம்பிக்கையும், தூய பக்தியும் அதைச் செயல்படவைக்கும் என்பதையும் பூரணமாய் நம்பினாள். நம்பினாளோ அல்லது அவள் மகள் நிலை அவளை நம்பவைத்ததோ, இந்தியா செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வலுப்பெற்றது. தன் கணவர் வந்ததும் இவற்றைக் கூறிப் புறப்பட ஏற்பாடு செய்வதாய்ச் சொன்னாள்.

ஆனால் தெரசாவின் கணவருக்கு இதில் நம்பிக்கையில்லை. பெரும் மருத்துவ நிபுணர்கள் செய்ய முடியாததை ஒரு சக்தி செய்யும் என்பதை அவர் நம்பவில்லை. இந்தியர்களுக்கு மூடநம்பிக்கைகள் அதிகம் என்று கூறியபோதும், தம் மனைவியின் மன ஆறுதலுக்குத் துணையாக இருப்பது தன் கடமை என எண்ணி புறப்படச் சம்மதித்தார். லூயியும் இந்தியா செல்லத் தயாரானதால் மூவரும் புறப்பட்டனர்.

லூயி தன் பாட்டியார் தங்கி வாழ்ந்த இடம் என்பதால் முன்னதாகத் தொடர்பு கொண்டு சென்னையிலிருந்து நேரே பாண்டிக்குச் செல்ல ஏற்பாடு செய்திருந்தாள். அவர்கள் சென்னையில் ஒரு ஹோட்டலில் தங்கி, மறுநாள் பாண்டிச்சேரி செல்வதாய் முடிவாயிற்று.

லூயி, தெரசா குடும்பத்தினரிடம் விடை பெற்று பாண்டி புறப்பட்டாள். மறுநாள் அன்னை இருந்த இடத்தில் லூயியும் தெரசாவும் சந்திக்கத் தீர்மானித்தனர். தடையில்லாத பயணம் தெரசாவிற்கு நம்பிக்கையூட்டுவதாயிருந்தது.

அவள் கணவருக்கோ எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை, நம்பிக்கையுமில்லை. ஆனால் ஏழு ஆண்டுகளாக தெரசா தன் குழந்தையுடன் படும் வேதனையைப் பார்த்து அவள் மீது ஏற்பட்ட இரக்கவுணர்வு அவளுக்கு ஆறுதலாக நடக்கச் சொல்வதால் இந்தப் பயணத்தை ஏற்றார்.

அன்று சென்னையில் ஒரு ஹோட்டலில் தங்கினர். தெரசா தன் மகளைப் பரிவுடன் பல முறை பார்க்கிறாள். கனிவு ததும்பும் அன்னையின் முகம் அவளுக்கு நம்பிக்கையூட்டுகிறது. புகைப்படத்தில் பார்த்த அந்த அன்னையின் திருமுகம், அவர் அணிந்த பொன்னாடை, அதிலிருந்து வீசும் பொன்னொளி, அது தன் மகள் மீது ஒளிர்ந்து அவளுக்கு உணர்வூட்டும் என்ற நம்பிக்கை என்று இவ்வாறு அவள் அன்னையால் நிறைந்து உறங்கினாள்.

அன்றிரவு கனவில் ஸ்ரீ அன்னை அவள் முன் தோன்றி கனிவுடன் அவளைப் பார்க்கிறார். மிகுந்த மகிழ்வுடன் உடல் சிலிர்க்க, அவர் முன் மண்டியிட்டு அமர்கிறாள். "மதர், என் மகளைக் குணப்படுத்துங்கள். எனக்கு வேறு வழி தெரியவில்லை. எத்தனையோ மருத்துவர்கள் அவளைச் சோதித்து மருத்துவம் செய்து தோற்றுப்போனார்கள். இனி நீர்தாம் எங்கள் துணை'' என்கிறாள். சிரித்துக்கொண்டே அன்னை மேலே மேலே வளர்கிறார். அவர் மீது பொன்னிற அங்கி வந்து தானே தன்னை அணிவித்துக்கொள்கிறது. அந்த அங்கி கீழே தரை வரை வளர்ந்து வந்து தொங்குகிறது. உடனே தெரசாவுக்கு லூயி சொன்ன செய்தி நினைவுக்கு வருகிறது. அவர் அணிந்துள்ள பொன்னிற ஆடையைத் தீண்டியவர்கள் சோகம் நீங்கி சுகம் பெறுவார்கள் என்று லூயி சொல்லியிருக்கிறாளே. சரேலென எழுந்து தொட்டில் போன்ற ஒன்றில் கிடந்த அவள் குழந்தையை தூக்கி வந்து அவர் காலடியில் கிடத்துகிறாள். அவர் அணிந்திருந்த அங்கி காற்றில் அசைந்து பரவி அக்குழந்தையின் உடல் மீது பரவித் தொடுகிறது. அக்குழந்தையின் முகத்தை வருடுவதுபோல் தீண்டுகிறது. சிறிது சிறிதாக குழந்தை உணர்வு பெறுகிறாள். முகம் நிறைய புன்னகையுடன் அன்னையைப் பார்க்கிறாள். கை, கால்கள் உணர்வுடன் அசைகின்றன. வாய்விட்டுச் சிரிக்கிறாள்.

"ஆகா! இது என்ன அற்புதம்! இப்படியும் நிகழுமா!' மெய்ம்மறந்து நின்றபோது அன்னை தம் பிரம்மாண்ட வடிவைச் சுருக்கிச் சாதாரண வடிவில் நிற்கிறார். குழந்தை மீண்டும் சலனமற்றுப்போனது.

"மதர், என்ன இது? என் குழந்தை சற்றுமுன் சிரித்தது பொய்யா? இது நடக்க முடியாதா?'' என்று கண்ணீருடன் கேட்டாள்.

மதர் சிரித்துக்கொண்டே, "முடியும். என்னிடம் தன்னைச் சரணாகதி செய்துகொண்டுள்ள என் அன்பன் இருப்பிடத்திற்கு உன் மகளைக் கொண்டு வா. நாளை நான் அங்குதான் இருப்பேன்'' என்று கூறி, உடனே மறைந்துவிட்டார்.

கண் விழித்துப் பார்த்தால் நடந்தது கனவு என்று புரிகிறது. அந்தக் கனவை மறவாமல் அப்படியே நினைவில் பதித்துக் கொள்கிறாள். உடனே நாட்குறிப்புப் புத்தகத்தில் ஒன்றுவிடாமல் எழுதிக்கொள்கிறாள்.

இந்த இரவு நேரத்தில் தன் மனைவி ஏதோ எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவள் கணவர் பாதி உறக்கத்தில் எழுந்து, "தெரசா, என்ன செய்கிறாய்?'' என்றார்.

உடனே அவள் ஆவலுடன் தன் கனவுக் காட்சியை விவரிக்கிறாள்.

அவர் கேலியாகச் சிரித்துக்கொண்டே, "உன் நினைவுதான் இந்தக் கனவு. நீ அதையே நினைத்துக் கொண்டிருப்பதால் இப்படிக் கனவு காண்கிறாய். இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடாதே'' என்று கூறி உறங்கிவிட்டார்.

லூயி இப்பொழுது என்னுடன் இருந்திருந்தால் இது பற்றி அவளிடம் கூறியிருக்கலாம் என்று நினைக்கிறது தெரசாவின் உள்ளம்.

தொடரும்....

********



book | by Dr. Radut