Skip to Content

11. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/45) பற்றாக்குறையை உபரியாக்கி, வாழ்வைப் பூரணப்படுத்த முடியாது. பகுதியை முழுமைப்படுத்தினால் முடியும்.

 • உபரி பூரணம் தராது, முழுமை தரும்.  
 • சிரங்குக்கு மருந்து தடவலாம், அது உதவும், நிலையான குணம் தராது.
 • இரத்த சுத்திக்குரிய மருந்தும், உணவும் உதவும்.
 • முறைகள் மூலத்தை நாட வேண்டும்.
 • மூலத்தை நாடுவது பல வகை.
  • வருமானத்தை உயர்த்தும் மூலம் திறமை.
  • திறமையை உயர்த்தும் மூலம் கல்வி.
  • கல்வியின் தரத்தை உயர்த்தும் மூலம் பண்பு.
  • பண்பின் மூலத்தை உயர்த்துவது இலட்சியம்.
  • இலட்சியங்களில் உயர்ந்தது மனிதத் தன்மை.
  • மனிதத் தன்மையைப் போற்றும் அஸ்திவாரம் வன்முறை அழிந்த சமூகம்.
  • வன்முறைக்கு எதிரானது (human relationship) பழக்கம்.
  • பழக்கம் உயர்வது அறிவின் தீட்சண்யத்தால்.
  • அறிவு பகுதியானது.
  • ஆத்மா முழுமையானது.
 • பற்றாக்குறை பகுதிக்குரியது.
 • உபரி முழுமைக்குரியது.
 • எந்த சமூகம் ஒரு கொள்கையாக பகுதியைப் பாராட்டாமல், முழுமையைப் பாராட்டுகிறதோ, அங்கு பற்றாக்குறையிருக்காது.
 • வேதம் இயற்கையோடு ஒன்றி வாழ முயன்றது. பற்றாக்குறை அவர்கள் அறியாதது.
 • பகுதியின் திறமை உயர்ந்து வளரும் உபரி, முடிவில் பெரிய பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
 • 20ஆம் நூற்றாண்டு கண்ட வித்தைகள் ஏராளம் - கார், விமானத்திலிருந்து போன் வரை ஆயிரம் டெக்னாலஜி உலகை அலங்கரித்தது.
 • இவற்றுள் எதுவும் முழுமையை நாடவில்லை.
 • அனைத்தும் பகுதியையும், பகுதியின் பகுதியையும் நாடினர்.
 • (Specialisation) பகுதியின் சிறப்பைப் பாராட்டும் முறை அடிப்படை.
 • இன்று பெட்ரோலைப் பற்றி என்ன நினைப்பது, எப்படிப் பேசுவது எனவும் அறிய முடியாத நிலையை அடைந்து விட்டோம்.
 • நாடு பகுதி, உலகம் முழுமை என்ற நிலையை 1900இல் நாம் எட்டிவிட்டோம்.
 • இயல்பான வளர்ச்சியை மனிதன் புறக்கணித்து வசதியான வாழ்வைத் தேடுவதை மனிதன் மேற்கொண்டாலும், இயற்கையும், இயல்பும் தம் போக்கை ஓரளவு வற்புறுத்துகின்றன. அதன் விளைவு,
  • மனிதன் உலகத்திற்குப் பொதுப் பணம் உற்பத்தி செய்ய மறுத்தால் US டாலர் அந்தக் கடமையை மேற்கொள்கிறது.
  • உலக சர்க்கார் நிறுவும் நேரம் வந்தபின் உலகம் பேசாமலிருந்தால் ஏகாதிபத்தியங்கள் அக்கடமையைச் செய்கின்றன. Common Wealth ஏற்படுகிறது. EU எழுகிறது. USSR ஏற்பட்டு விரிவடைகின்றது.
  • ஜீவன் முழுமைக்குரியது. பகுதிக்கல்ல.
  • பகுதி பற்றாக்குறை.
  • முழுமை உபரி.
  • இது ஆன்மீகச் சட்டம், அடிப்படைக் கொள்கை.
  • சச்சிதானந்தம் முழுமையுடையது.
  • சத் பகுதி, சித் பகுதி, ஆனந்தம் பகுதி.
  • மனம் பகுதியை நாடிற்று.
  • சத்தியஜீவியம் முழுமையாக இருக்கிறது.

*******

II/46) பிரம்மம் ஜடத்தில் சித்தித்தால் வாழ்வு பூரணம் பெறும். அல்லது அறியாமை ஞானத்தைவிடப் பெரியது எனக் காண வேண்டும்.

 • பிரம்மம் ஜடத்தில் பெறும் பூரண ஞானம் முழுமை.  
 • பிரம்மம் ஜடத்தில் பூரணம் பெறுவது தத்துவமாகிறது.
  மக்களாட்சியில் வாக்காளர் அரசியல் தலைவர்களைவிட முக்கியம் என்பது எளிய உண்மை.
 • குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதும் அதே தத்துவம்.
 • கொல்லையில் தான்யத்தைக் காய வைத்துக் காலால் துழாவி விட்டு வெளி வரும்பொழுது தான்யத்தை தான்யலக்ஷ்மி எனக் கண்ணில் ஒற்றிக்கொள்வது ஜடத்தைப் பிரம்மமாக்குவது.
 • பெரியது சிறியதைப் பாராட்டும்.
  சிறியதைப் பாராட்டும் மனப்பான்மையே அதைப் பெரியதாக்குகிறது.
  சிறியதைச் சிறியதாகக் காணும் மனம், சிறுமையை விட்டு அகல முடியாத மனம், காலத்திற்கும் சிறியதாகவே இருக்கப்போகும் ஜீவன்.
 • ஒரு ஊரில் போய் குடும்பம் செய்ய வேண்டுமானால் உன் தொழிலை மட்டும் பாராட்டுவது பகுதி.
  ஊரை முழுவதும் மனதால் ஏற்று செயல்படுவது முழுமை.
  பகுதியாக வாழ்பவனுக்கு எந்த நேரமும் சிரமம் எழும்.
  முழுமையைப் பாராட்டுபவனுக்குச் சிரமம் எழ வழியில்லை.
  எந்த நேரமும் வாய்ப்பு வந்தபடியிருக்கும்.
 • அறியாமை ஞானத்தைவிடப் பெரியது என்பதை உலகுக்கு முதலில் கூறியவர் பகவான்.
  அப்படியானால் சிருஷ்டி பிரம்மத்தைவிடப் பெரியது.
  வாக்காளர் அரசைவிடப் பெரியவர்.
  வாடிக்கைக்காரர் கடைக்காரரைவிடப் பெரியவர்.
  மாணவன் ஆசிரியரைவிட உயர்ந்தவர்.
  கல்வி கற்பவரைவிட உயர்ந்தது.
  நடிகன் இலக்கியத்தைவிட உயர்ந்த நிலையிலிருப்பவன்.
 • உழவன் கணக்குப் பார்த்தால் உழவு கோலும் மீறாது என்பது சொல்.
  உழவன் அந்தக் கணக்கைப் பார்த்தால் உலகம் பட்டினி கிடக்கும்.
  கணக்குப் பார்ப்பது பகுதி.
  கடமையைக் கருதுவது முழுமை.
 • உலகம் முன்னேறுவது விஞ்ஞானத்தால்.
  விஞ்ஞானம் என்பது நம்மைப் பொருத்தவரை டெக்னாலஜி, தொழில் நுணுக்கம்.
  அச்சாபீஸ் வந்த காலத்தில் அது புரட்சி.
  தினசரிப் பத்திரிகைகள் பிரெஞ்சுப் புரட்சியை மிஞ்சியவை.
  மக்களாட்சி வந்தது ஆயிரம் புரட்சிகளின் திரட்சி.
  சிகரமான மன்னன் சிரச்சேதம் அடைந்தான்.
  சொத்தே பதவி என்ற நிலை மாறி நியாயத்திற்கு வலிமை வந்தது.
  பணமேயெல்லாம் என்பது போய் பண்பு பணத்தைவிட உயர்ந்ததாயிற்று.
  ஏழ்மை கொடுமைக்காளாகும் என்பது பழைய நிலை.
  எளிமைக்குரிய உயர்வு ஆடம்பரத்திற்கில்லை என்பது புது நிலை.
  எந்தக் கலையும் பணக்காரனுடைய ஆதரவு தேடிற்று.
  கலை பணம் சம்பாதிக்கும் என்பது மார்க்கட் கூறும் உண்மை.
  ஜடம் ஜீவனற்றது என்பது மரபு.
  ஜடத்தின் அணுவுள் அகில உலகமும் அடங்கும் சக்தியுண்டு என்பது அணு ஆராய்ச்சி.
  பெண்ணுக்குரியது சமையலறை என்ற பழைய சட்டம் மாறி பெண்ணுக்கு முதலிடம், அது போக ஆணுக்கு என்பது புதியது.

ஜடம் பிரம்மம்.
ஜடப் பிரம்மம் பிரம்மத்திற்கு உரிய உயர்வு.
ஜடம் என்பது தாழ்வில்லை.
ஜடம் உலகை உட்கொண்ட சக்திக்குரிய லோகம்.

*******

II/47) பிரம்மமும் சிருஷ்டியும் ஒன்றே. நம் பார்வைதான் மாறுகிறது என்றறியும் நேரம் வாழ்வு பூரணம் பெறுகிறது.

 • சிருஷ்டியில் பிரம்மத்தைக் கண்டால் வாழ்வு பூரணம் பெறுகிறது.  
 • மஞ்சள்காமாலை கண்ணுக்கு எல்லாம் மஞ்சளாகத் தெரியும், எதுவும் மஞ்சளில்லை.
 • காமாலை நோய் தானே போக வேண்டும்.
 • நாம் போட்டிருப்பது மஞ்சள் கண்ணாடி. எப்பொழுது வேண்டுமானாலும் அகற்றலாம்.
 • கண்ணாடிதான் உலகை மஞ்சளாகக் காட்டுகிறது என அறிய வேண்டும்.
 • இந்தக் கண்ணாடியை நாம் எந்த நேரத்திலும் கழட்டலாம் எனத் தெரிய வேண்டும்.
 • கழட்ட முடிவு செய்ய வேண்டும், கழட்ட வேண்டும்.
 • 6 குருடர்கள் யானையை வர்ணித்தார்கள்.
 • அவர்களை யானையைப் பார்க்க வைப்பது முடியாது.
 • குருடனுக்குப் பார்வை வந்தால்தான் அது நடக்கும்.
 • மனிதன் குருடனல்லன்.
 • மனிதன் கண்மூடி குருடனாக இருக்கிறான்.
 • கண் திறப்பது முடியாத காரியமில்லை.
 • கண் திறந்தால் யானையைப் பார்க்கலாம். அதுவே மனிதனுடைய நிலை.
 • மனிதன் அகந்தையால் குருடனாக இருக்கிறான்.
 • மனிதன் குருடனில்லை.
 • இந்தக் குருட்டுத்தனம் ஆயிரம் வகையாக வாழ்வை ஆட்கொள்கிறது.
  • மேல்நாட்டு விஞ்ஞானிக்கு விஞ்ஞானம் குருடு.
  • அமெரிக்கர்கட்கு தன்னம்பிக்கை தலைமையளித்தது.
  • அதே தன்னம்பிக்கை அவரைக் குருடாக்கியது.
  • இங்கிலாந்து மக்களாட்சிக்குத் தாய்.
  • அந்த இங்கிலாந்து மன்னரைப் போற்றி அழிகிறது.
  • வேதமும், உபநிஷதமும் இந்தியாவுக்கு இரு கண்கள், கீதை நெற்றிக்கண். பிராமணனின் மறுப்பு இந்தியாவைக் குருடாக்கியது.
   (The final refusal of Brahmin – Sri Aurobindo).
  • கிராமத்து மனிதனுக்கு நகரத்திலுள்ள கொள்ளை வாய்ப்பு தெரிவதில்லை.
  • ஆண்டுதோறும் வேலை தேடும் 70 லட்சம் இளைஞர்கட்கு (self-employment) சொந்தத் தொழில் செய்யும் வாய்ப்பு கண்ணில் படுவதில்லை. வேலை தேடி அலைகிறார்கள்.
   வேலையில்லாத் திண்டாட்டம் என்கின்றனர்.
  • 1970இல் நான் பார்த்துப் பேசிய எந்த இளைஞரும் பாங்கு உதவி செய்யும் என்பதை அறியவில்லை.
  • செல்போனில் உள்ள வசதிகளை 7% பயன்படுத்துவது போல் இன்று பாங்கு வழங்கும் உதவிகளை 10%க்கு மட்டும் பெறுகின்றனர்.
  • ஐரோப்பியர் பெற்ற உயர்ந்த பண்பையும், அது வழங்கும் சுபிட்சம், தலைமையையும் அறியாது, அமெரிக்காவை எதிர்பார்க்கின்றனர்.
  • கீதை, மகரிஷி, தியானம் இவற்றின் பெருமையை இந்தியர் அறியாமல் அமெரிக்கர் பாராட்டியபின் ஏற்றுக் கொள்கின்றனர்.
  • பணத்தை உற்பத்தி செய்த மனிதன் பணத்திற்கு அடிமையானான்.
  • தானே இறைவன் என்பதை குருடர் போல் மறந்து இறைவனை எங்கும் தேடுகிறான் மனிதன்.

தொடரும்....

*******book | by Dr. Radut