Skip to Content

09. சிந்தனை மணிகள்

சிந்தனை மணிகள்

N. அசோகன்

  1. நாம் வெளியில் செய்யும் வேலை கொண்டு வரும் வருமானத்தைவிட உள்ளே செய்கின்ற வேலை பல மடங்குக் கூடுதலான செல்வத்தைக் கொண்டுவர வல்லது. உள் வேலையைப் பற்றிய இரகசியங்களை ஸ்ரீ கர்மயோகி அவர்களுடைய புத்தகங்களிலிருந்து படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். மழைக்கால வெள்ளம்போல செல்வம் உங்கள் வாழ்க்கையில் நுழைவதைப் பாருங்கள்.
  2. எந்த ஒரு செயல்பாட்டிற்கும் நாம் மேலோட்டமாகப் புரிந்து கொள்வதைவிட ஒரு ஆழ்ந்த அர்த்தம் எப்பொழுதுமே உள்ளது என்று ஸ்ரீ அன்னை சொல்கிறார். நாம் எப்பொழுதுமே அந்த அர்த்தத்தை உணர்ந்துகொண்டோம் என்றால் வாழ்க்கை நம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.
  3. கவலையாலும், பிரச்சனையாலும் பீடிக்கப்பட்டவர்கள் தங்கள் தலையை அன்னையின் மடியில் புதைத்துக் கொண்டு தங்கள் கவலைகளை எல்லாம் மறந்து கண்களை மூடிக் கொண்டு ஐந்து நிமிடம் இருக்கலாம். அதன் பின்னர் அவர்கள் வாழ்க்கை மாறி இருப்பதை பார்க்கலாம்.
  4. பெரிய ஆன்மீக மகானான புத்தபிரான்கூட ஆன்மா என்ற ஒன்று கிடையாது என்று ஒரு தவறான கருத்தை வெளியிட்டார். ஏசுபிரானும் அன்பின் அருமையைப் பற்றி பேசினாரே தவிர உண்மையின் ஆட்சியை நிலைநாட்டுவதற்குரிய சக்தி இல்லாமல் இருந்தார். ஆனால் பகவான் மற்றும் அன்னையின் பூரண ஆன்மீகம் எந்தவிதமான தவறுகளும் குறைபாடுகளும் இல்லாத ஒரு வாழ்க்கையை நமக்கு அளிக்க முன்வருகிறது. மேலும் பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு வாழவும் வழி செய்கிறது. பழங்காலத்து மகான்களுக்குக்கூட இல்லாத ஒரு அறிவை பூரணயோகம் நமக்கு இன்று வழங்குகிறது. ஆகவே இதையெல்லாம் எண்ணிப் பார்த்து நாம் இந்த வாய்ப்பை நல்லபடியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  5. இன்றுள்ள மனநிலையில் நம்முடைய உடம்பு, உயிர், வேலை, வருமானம், வாழ்க்கைத் துணை மற்றும் குடும்பம், இளமை, உடல் நலம், சமூக அந்தஸ்து என்று எல்லாவற்றையும்விட அன்னைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று சொல்ல முடியுமா? நாம் சொல்வதை அன்னை நம்பினார் என்றால் அந்த நிமிடத்திலிருந்து நம் வாழ்க்கையில் நிகழக்கூடிய அற்புதங்களை நாம் பார்க்கலாம். நாம் சொல்வதை அவர் நம்பவில்லை என்றாலும் பரவாயில்லை. நம்முடைய சின்சியரிட்டியை நாம் அதிகரித்துக் கொள்ள முயற்சி எடுக்கலாம். நம்முடைய சின்சியரிட்டிக்கு ஒரு வரையறை இருந்தாலும் பரவாயில்லை. அன்னை தாராள குணம் படைத்தவர். அதனால் அவர் நாம் எப்படியிருக்கிறோமோ அப்படியே நம்மை ஏற்றுக்கொள்வார் என்று நாம் நம்பலாம்.
  6. ஆன்மீக உலகத்தினுடைய பொக்கிஷங்களை சிறிதளவு ஒருவர் பார்த்திருந்தால்கூட பணம், பதவி, சிற்றின்பம் ஆகியவற்றைத் தேடுவதில் மக்கள் காட்டுகின்ற தீவிரத்தைவிட இந்த ஆன்மீகச் சிறப்புகளை இன்னும் தீவிரமாக அவர் நாடுவார். நம்மில் பல பேர் இன்னமும் பணம், பதவி, சிற்றின்பம் என்று இவற்றைத்தான் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்றால் ஆன்மீக உலகைத் திறந்து காட்டும் கதவுகளை நாம் இன்னமும் தாண்டிச் செல்லவில்லை என்று அர்த்தமாகிறது. அந்த உலகத்தின் கதவுகள் மூடியிருக்கின்றன என்றும் சொல்ல முடியாது. அது திறந்துதான் இருக்கிறது. நாம்தான் வேறு ஒரு மூடியிருக்கின்ற கதவுகளுக்கு முன்னால் நின்றுகொண்டு அதைத் திறந்து காட்டும்படி அன்னையிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அன்னை ஆன்மீக உலகின் கதவுகளைத்தான் திறந்து காட்ட விரும்புகிறார். ஆனால் நம்முடைய பார்வை இப்படி வேறு ஒரு கதவின்மேல் பதிந்துள்ளது வருத்தத்திற்குரியது. நம்முடைய பார்வையை அகல விரித்து அன்னை என்னதான் நமக்குக் காட்ட விரும்புகிறார் என்று நாம் பார்க்க முன் வர வேண்டும்.
  7. நமக்குப் பிரச்சனைகள் வரும்பொழுது தவிர மற்ற நேரங்களில் அன்னையை நாம் நினைக்காமல்கூட இருக்கலாம். ஆனால் அதற்காக அன்னை நம்மைப் பற்றி இடைவிடாமல் நினைக்காமல் இருக்கிறார் என்று அர்த்தமில்லை. நம்முடைய சிறுமைக்கு ஏற்றபடி நாம் நடந்து கொள்கிறோம். அவருடைய பெருந்தன்மைக்கு ஏற்றபடி அவர் நடந்து கொள்கிறார்.
  8. எனக்கு 13 அல்லது 14 வயது இருக்கும் பொழுது என்னுடைய பிறந்த நாள் அன்று அன்னையிடம் ஆசி வாங்கச் சென்றேன். அவர் என்னைப் பார்த்து புன்முறுவல் செய்து ஒரு ரோஜா வழங்கினார். அவருடைய பேச்சு என் காதில் விழுந்தது. இன்றும் அந்த புன்முறுவலும், அவருடைய குரலும் என் நினைவில் இருக்கிறது. என் வாழ்க்கையின் மிகவும் சிறப்பான தருணம் எதுவென்றால் நான் இதைத்தான் சொல்வேன். இப்படி உங்கள் வாழ்க்கையில் சிறப்பான தருணம் என்னவென்று சிந்தித்துப் பாருங்கள்.
  9. அன்னையின் அன்பும் அவருடைய விவேகமும் ஒன்றுக்கொன்று எதிரான திசையில் வேலை செய்கிறது. அவருடைய அன்பு நமக்கு வழங்கப் பிரியப்படுவதை அவருடைய விவேகம் தடுக்கலாம். அல்லது அவருடைய விவேகம் நம் மேல் திணிக்க விரும்புவதை அவருடைய அன்பு நம்மேல் திணிக்கவிடாமல் தடுக்கலாம். இப்பொழுது உங்களுக்கு அன்னையின் அன்பு வேண்டுமா? அல்லது விவேகம் வேண்டுமா? இரண்டுமே ஒரே சமயத்தில் கிடைக்காது. ஏதேனும் ஒன்றைத்தான் நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும்.
  10. உலகம் முழுவதும் செலவு வளரும் வேகத்திற்கு ஈடாக வருமானம் வளர்வதில்லை என்று எல்லோரும் குறைபட்டுக் கொள்கிறார்கள். அன்னை அன்பர்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை. இப்பொழுது எப்பொழுதுமே செலவை முந்திக் கொண்டு வருமானம் வளர்வதற்கு என்ன வழி இருக்கிறது என்று அன்பர்கள் பார்க்க வேண்டும். இப்படி எப்பொழுதுமே செலவை முந்திக் கொண்டு வருமானம் வளர்ந்தால் பற்றாக்குறை என்ற பேச்சிற்கே இடமில்லை. உலகத்தாருடைய பொதுவான இக்கருத்தை நீங்களும் ஆமோதிக்கின்றீர்களா? அல்லது அன்னையின் அருளின் உதவியுடன் எப்பொழுதுமே செலவைவிட வருமானத்தை வளர்த்துக் கொள்ளலாம் என்று நம்புகின்றீர்களா?

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
முகம் மூலத்தைக் காட்டாது.

*******book | by Dr. Radut