Skip to Content

05. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அன்னையே சரணம்!

ஸ்ரீ அன்னை, பகவான், தவத்திரு கர்மயோகி அவர்களின் பாதாரவிந்தங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரம். மகன் பிரசன்னா B.E. படித்து, பின்னர் சிங்கப்பூர் Universityஇல் MS படித்து, பின்னர் அங்கேயே ஒரு நிறுவனத்தில் பணி செய்து வந்தது எல்லாம் ஸ்ரீஅன்னையின் திருவருளே என்று விரிவாக ஏற்கனவே தங்களுக்குக் கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். அக்கடிதம் ஜூன் 2008ஆம் ஆண்டு மலர்ந்த ஜீவியத்தில் பிரசுரமும் ஆகியுள்ளது. அதன் பின்னரும் அன்னையின் அருள் எங்கள் வாழ்வில் செயல்பட்டதைக் கீழ்க்கண்டவாறு சமர்ப்பிக்கிறேன்.

மகனுக்கு 2007ஆம் ஆண்டு கடைசியில் சிங்கப்பூரிலேயே Intel நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அமெரிக்காவில் யூட்டா என்ற இடத்தில் traineeஆக அனுப்பினார்கள். அங்கு பனிப்பொழிவு மிக அதிகம். இதற்கிடையில் மே 2008இல் அவனுக்கு அன்னையின் அருளால் திருமணமும் நடைபெற்றது. அவனுக்கு அந்நாட்டில், இந்நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிய விருப்பம் இல்லாமல் ஆகி, போன 2008 அவ்வேலையை விட்டு திரும்ப சிங்கப்பூர் வந்து வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டான். அப்பொழுது உலகெங்கும் recession period. பிரபல நிறுவனங்களில் எல்லாம் ஆட்குறைப்பு நடைபெற்ற சமயம். திருமணம் ஆன 6 மாதத்தில் இந்த மாதிரி recession periodஇல் வேலையை விட்டுவிட்டு வந்தது குறித்து வருந்தி தினமும் அன்னையிடம் கூறிப் பிரார்த்தனை செய்து வந்தேன். இந்நிலையில் 6 மாதங்கள் கடந்துவிட்டது. மார்ச் 2009 கடைசியில் (25.3.09) என நினைக்கிறேன், நான் அலுவலகம் செல்லும் போது trainஇல் அன்னையிடம் கண் மூடி பிரார்த்தனை செய்தபடி இருந்தேன். என்னையும் அறியாமல் எனக்குள் உள்ள அன்னையின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டு, "அக்குழந்தைக்கு வழி காட்டுங்கள் அம்மா'' என்று அழுகிறேன். ஆனால் நான் இறங்க வேண்டிய இடம் வந்தபின் என் உணர்வே இன்றி என்னை யாரோ அழைத்துக் கொண்டு போவது போல் நடந்து அலுவலகம் சென்றேன். அலுவலகத்தில் என் tableஇல் bag வைத்தவுடன் என் cell phoneஇல் மகன் கூப்பிட்டு, "அம்மா எனக்கு Hyderabadஇல் ஒரு private companyஇல் வேலை கிடைத்துவிட்டது'' என்றும், சிங்கப்பூரிலிருந்து கிளம்பி வருவதாகவும் தெரிவித்தான். அன்னைக்கு உடன் நன்றி சொன்னேன். ஆனாலும் இச்சம்பவத்தை நினைத்தும் அன்னையின் கருணையை நினைத்தும் கண்ணீர் பெருகுகிறது. இச்சம்பவம் என் மனத்தில் ஸ்ரீ அன்னை, "மகளே, நான் இருக்கும்போது நீ ஏன் கண்ணீர் விடுகிறாய்'' எனக் கூறி, கண்ணீரைத் துடைத்துவிட்டது போல் உணர்கிறேன்.

இந்நிறுவனம் ஒரு தனியார் நிறுவனம். புதியதாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமும்கூட. ஒரு வருடம் கழித்து அவன் தகப்பனார், "வேறு கம்பனிகளுக்கு மனு போட்டுக்கொண்டே இரு. கிடைத்தால் மாறிவிடு'' என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அவனோ, இந்நிறுவனம் வேலை கிடைக்காத periodஇல் தனக்கு வேலை கொடுத்ததாகவும், அதிலிருந்து உடனடியாக விலகுவது முறையல்ல என்றும், அந்நிறுவனம் ஓரளவு லாபம் ஈட்ட ஆரம்பித்தால்தான் வேறு கம்பனிக்கு போவது குறித்து மனுப் போட இயலும் என்றும் கூறிவிட்டான். அவனுடைய இக்கருத்து மிகவும் நியாயமானதால் அன்னையே எல்லாம் பார்த்துக் கொள்வார் என இருந்துவிட்டோம்.

இந்நிலையில் அந்த நிறுவனத்திற்கு மெஷின்கள் purchase செய்ய 2010 செப்டம்பர் மாதம் அவன் அலுவலக நண்பருடன் பாண்டி வந்து 5 நாட்கள் தங்கும் சூழ்நிலையை அன்னை கொடுத்தார். அச்சமயம் அவன் அன்னையின் சூழல் உள்ள புண்ணிய பூமிக்கு செல்வது அன்னையின் அருள் என்று நினைத்தேன். அங்குதான் ஸ்ரீ அன்னையின் கருணை மீண்டும் செயல்பட்டது.

அக்டோபர் 2010இல் தற்போது வேலை பார்க்கும் கம்பனியில் sales deptஇல் ஏற்பட்ட பிரச்சனையில் நிறுவன ஸ்தாபகர் உடனடியாக இவன் கீழ் வேலை பார்க்கும் 10 நபர்களைக் குறைக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார். மேலும் இக்கம்பனியின் fundsஐ வேறு ஒரு பிஸினஸ்க்கு (business) திருப்பவும் நிர்வாகம் உத்தேசித்துள்ளது.

இவனுக்கு BE (Mech.) படித்ததால் manufacturing lineஇல் வேலை பார்த்தால்தான் நல்ல future என்று நினைத்து அக்கம்பனியில் தொடர்ந்து இருக்க விரும்பாமல் வேறு வேலைகளுக்கு அக்டோபர், நவம்பர் 2010இல் மனுப் போட்டான். டிசம்பர் மாதம் interview வர ஆரம்பித்தது. அச்சமயம் நான் அவர்களுடன் Hyderabadஇல் இருந்தேன். நான் அவனிடம், "Intel வேலையை விட்டது தொடர்பாக உன்னிடம் உள்ள தவறுகளை அன்னையிடம் சமர்ப்பித்து மன்னிப்பு கோரினால் தடங்கலின்றி அன்னையின் அருள் செயல்படும்'' எனத் தெரிவித்து நானும் தீவிரமாக பிரார்த்தனை செய்தபடி இருந்தேன். அன்னையின் எல்லையற்ற கருணையால் ஒரு leading நிறுவனத்தில் பொறுப்பான வேலை கிடைத்துள்ளது. March 2011, 1ஆம் தேதி வேலைக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். ஸ்ரீ அன்னைக்குத் தினமும் மனமுருகி நன்றி தெரிவித்து வருகிறேன். அன்னையைத் தவிர என்னிடம் அன்பு கொள்ளவோ, கருணை காண்பிக்கவோ எவரும் இல்லை என்பதை பரிபூரணமாக உணர்கிறேன். எனது இனிய அன்னையே, கருணைக் கடலே, பொன்னொளி வீசும் தங்கள் சன்னதியில் அடைக்கலமாய் வந்துள்ளோம். காத்து வரமருள்வாய் தாயே. ஸ்ரீ அன்னைக்கும், பகவானுக்கும் அனந்த கோடி நமஸ்காரமும் நன்றிகளையும் சமர்ப்பிக்கிறேன்.

அப்பா, தங்களுடைய எழுத்துகள்தான் எனக்கு உறுதுணையாக உள்ளது. தங்களுடைய படைப்புகள் மூலம்தான் அன்னையைப் பற்றி அறிந்து, அன்னையின் அளவற்ற கருணையைப் பெற முடிகிறது. தவறுகளையும் திருத்திக்கொள்ள முயற்சியும் எடுக்க முடிகிறது. தங்களுக்கு என் பணிவான நமஸ்காரத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

-- நன்றியுடன் பூர்ணவள்ளி, சென்னை.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அன்னை மீதுள்ள பக்தி அகங்காரத்தைத் தடை செய்ய அனுமதிப்பது இல்லை.
அன்னை அன்பரின் அன்புக்கு அன்னையே பாதுகாப்பு.
 

 
*******
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சமர்ப்பணம் முடியாத நேரம் அழைப்பு உதவும். அழைப்பும் முடியவில்லையெனில் தியானம் உதவும். தியானம் வரவில்லையெனில் வாயால், நெஞ்சால் "அன்னை' அன்னை எனச் சொல்லலாம்.
 
முடியுமிடத்தில் ஆரம்பிக்க வேண்டும்.
எதுவும் முடியாது என்பதில்லை.

 

*******



book | by Dr. Radut