Skip to Content

04. மஹாபாரதத்தில் சொல்லாதது எது!

மஹாபாரதத்தில் சொல்லாதது எது!

M.மணிவேல்

"அதிர்ஷ்டம்'' என்ற புத்தகத்தில், மஹாபாரதத்தில் விளக்கம் கூற முடியாதது எதுவாக இருக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு விடை காண்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். அந்தக் கேள்வி "அதிர்ஷ்டம்'' புத்தகத்தில் பக்கம் 164இல் இடம் பெற்றுள்ளது.

"மஹாபாரதத்தில் விளக்கம் கூற முடியாத பகுதிகளுக்கு ஸ்ரீ அரவிந்தருடைய கருத்து எதுவாக இருக்கும்?"

உதாரணம்: பிரம்மச்சாரியான பீஷ்மாச்சாரியார் உயிர் போகும்முன் அம்பாலான படுக்கையில் அவஸ்தைப்பட்ட காரணம் என்ன?

இதற்குப் பகவான் ஸ்ரீ அரவிந்தரின் "THOUGHTS ANDAPHORISMS'', MOTHER VOLUME 10இல் உள்ள விளக்கத்தை எடுத்துக் கொள்ளலாம்.

93. "Pain is the touch of our MOTHER teaching us how to bear and grow in rapture. She has three stages of her schooling, endurance first, next equality of soul, last ecstasy."

சில ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழில்:

touch of
ஸ்பரிசம்
teaching
கற்பித்தல்
rapture
பரவசம்
stages
நிலைகள்
schooling
கல்வி (ஞான அறிவு)
endurance
தாங்கிக்கொள்ளுதல்
equality of soul
ஆன்மாவின் சமநிலை
ecstasy
ஆனந்தப் பரவசம்

 93. "வலி என்பது நம் அன்னையின் ஸ்பரிசம். அன்னை நமக்குக் கற்பித்ததில், வலியை எவ்வாறு தாங்கிக்கொண்டு பரவச நிலையை அடைதல் என்பதாகும். அவர் பெற்ற கல்வி (ஞான அறிவு) மூன்று நிலைகளை உடையன. முதலாவதாகத் தாங்கிக்கொள்ளுதல் (பொறுத்துக் கொள்ளுதல்), அடுத்ததாக ஆன்மாவின் சமநிலை, கடைசியாக ஆனந்தப் பரவசம் அடைதல்".

குறிப்பு:

ஸ்பரிசம் என்பதற்கு "நூறு பேர்கள்" என்ற புத்தகத்தில், பக்கம் 368, 369இல் ஒரு விளக்கம் உள்ளது. அன்னை நம்மைத் தீண்டினால் - ஸ்பரிசம் - தீண்டுதல் இதுவரை நாம் அறிந்திராத குளிர்ந்த, இனிமையை உடலில் பரப்பும். ஸ்பரிசம் எப்படி ஏற்பட்டாலும் அது மாற்றத்திற்கு உதவும். நினைவு முதிர்ந்து அழைப்பானால் ஸ்பரிசம் மாற்றத்தைத் தரும் (பக்கம் 369இல்). "அன்னையின் ஸ்பரிசம் பட்டவுடன் நம் வரையறை விசாலப்படுகிறது. மனம் பரந்த நிலை சந்தோஷம் உற்பத்தியாகும் நிலையாகிறது'', என்று வேறோர் இடத்தில் திரு.கர்மயோகி அவர்கள் குறிப்பிடுகிறார்கள் (பக்கம் 257 - மேற்படி புத்தகம்). இந்த விளக்கம் பின்னால் வரும் விளக்கங்களுக்குப் பொருத்தமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ அரவிந்தரின் நீதிமொழி 93க்கு அன்னையின் விளக்கம் விரிவாக உள்ளது. MOTHER'S VOLUME 10 பக்கம் 169 முதல்.....

விளக்கத்தில் சுருக்கமாக சில விளக்கங்கள் மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவை பின்வருமாறு:

MOTHER'S VOLUME 10, PAGE 169:

நீதி நெறி ஒழுக்கமுறைமை பொறுத்தமட்டில் (Moral) இது முற்றிலும் வெளிப்படையாகத் தெரியக்கூடியது. மறுக்க முடியாதது. ஒழுக்கம் சார்ந்த எல்லா துன்பங்களும் (Moral sufferings), சீலம் மிகுந்த உன்னுடைய நற்குணத்தை (character) சிறந்த முறையில் உருவாக்கி நேரே ஆனந்தப் பரவசத்திற்கு இட்டுச் செல்கின்றன.

டாக்டர்களின் கூற்றுப்படி, ஒருவர் வலியை பொறுத்துக் கொள்ள உடலுக்குத் தக்க பயிற்சி அளித்தால், உடற்பிணி, அதிர்ச்சி, மாற்றம் முதலியவற்றிற்கு ஈடுகொடுக்கும் அளவு உறுதிவாய்ந்த தாக்க விளைவுகளைக் கையாளவல்ல சக்தியை உடல் மேன்மேலும் பெறுகிறது (Resilient). உடலில் ஏற்படுகிற தடைகள் முதலியவற்றின் கடுமையான தாக்குதல்கள் சுலபமாக தகர்க்கப்படுகின்றன (disrupted). இது ஒரு பிரத்யட்சமான செயலின் விளைவாகும். உடலில் எங்கேயாவது வலி ஏற்படும்போது உடலின் நிலைகுலைவை (upset) எவ்வாறு விலக்குவது என்று தெரிந்தவர்கள் விஷயத்தில், சீர்குலைவை (disorder) அமைதியாக பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள் உடல் திறன், சிதறுண்டு போகாமல் உடலின் சக்தி அதிகரிக்கிறது என்று தோன்றுகிறது. இது ஒரு பெரிய சாதனையாகும்.

உடல், வலியைத் தாங்கிக்கொள்ள முடிவு எடுத்தால் கடுமையான வலி மறைந்துவிடுகிறது. அகத்தில் ஆழ்ந்து அமைதியை ஏற்படுத்திக்கொண்டால் வேதனை ஒரு இன்பகரமான உணர்வாக மாறிவிடுகிறது.

உடலில் உள்ள அணுக்களுக்கு இறைவனின் தரிசனத்திலும் (Divine Presence) தெய்வத்தின் சித்தத்திலும் (Divine Will) நம்பிக்கை வந்துவிட்டால், எல்லாம் நன்மைக்கே என்று திடமான நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால், ஆனந்தப்பரவசம் ஏற்படுகிறது. உடலின் அணுக்கள் திறக்கப்படுகின்றன. இவ்வாறு, ஒளி வீசுகின்ற (Luminous) ஆனந்தப் பரவசம் நிகழ்கிறது.

MOTHER'S VOLUME 10, PAGE 172, 173:

இறை உணர்வு நிலை, மற்றும் இறைவனுடன் ஐக்கியப்படுதல் பரவசத்தைக் கொண்டு வருகிறது. இது அடிப்படையான உண்மை.

இப்பொழுது, கேள்விக்கு விடை காண்பது பற்றி பார்ப்போம்.

பீஷ்மாச்சாரியார் உயிர் போகுமுன் அம்பாலான படுக்கையில் அவஸ்தைப்பட்டக் காரணம் தெரிந்துகொள்ள மஹாபாரதத்தில் அறியப்படாத உண்மைக்கு, பகவான் ஸ்ரீஅரவிந்தரின் "சிந்தனை மற்றும் நீதிமொழி''யில் (Thoughts and Aphorisms) விடை காணப்படுகிறது. இதனை விரிவாக அறிந்துகொள்வதற்கு ஏதுவாக, பீஷ்மர் வேதனைப்பட்ட விபரம் மற்றும் அவருடைய முற்பிறப்பின் வரலாறு பற்றி தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

பீஷ்மர் அம்புப்படுக்கையில் சாய்ந்தது:

பாரதப்போரில் பத்தாம் நாள், பீஷ்மருக்கும் பாண்டவர்களுக்கும் கடுமையான யுத்தம் நடந்தது. அர்ச்சுனன் சிகண்டியை முன்னிட்டு பீஷ்மரைக் கொல்லும்படி விரைவுபடுத்தினான். பெண்ணின் தன்மை பெற்ற சிகண்டி முன் நிற்க, பீஷ்மர் தன்னுடைய தர்ம நெறிப்படி பெண்களைக் கொல்லக்கூடாது என்ற தர்ம சிந்தனையில் ஆயுதம் எடுக்காமல் இருந்தார். சிகண்டி மீது கணைகளைத் தொடுக்கவில்லை. அச்சமயம் காண்டீபனுடைய சரமாரியான அம்புகளால் பீஷ்மர் மூர்ச்சை அடைந்து தேரிலிருந்து கீழே விழுந்தார். உடல் முழுவதும் அம்புகளால் தைத்து மூடப்பட்டிருந்த பீஷ்மர், பூமியைத் தொடாமல் அம்புப்படுக்கையில் சாய்ந்தார். தந்தை வரத்தால் தான் நினைக்கும்போது உயிர் நீங்க உத்தராயணக் காலத்தை எதிர்நோக்கியிருந்தார். அம்புகளால் உயிர் வருத்தப்பட்டிருந்தாலும் மனத்தை ஒருநிலைப்படுத்தி ஆத்மாவில் ஆழ்ந்திருந்தார். (அபிதான சிந்தாமணி, பக்கம் 1655). உபநிஷதங்களையும் உச்சரித்துக்கொண்டிருந்ததாக பாரதக் கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறாக அவர் ஆழ்மனத்தின் அமைதியை அடைந்திருந்தார்.

பகவான் ஸ்ரீஅரவிந்தரும், நம் அன்னையும் நீதிமொழி 93இல் கூறியதுபோல், பீஷ்மர் வலியைத் தாங்கிக்கொண்டு உள்ளூர ஆன்மாவில் ஐக்கியப்பட்டு சமநிலை அடைந்ததால், ஆழ் மனத்தின் அமைதியை அடைந்திருந்ததால், அவருக்கு வலி இன்ப உணர்வாக மாறி இருந்திருக்கலாம். பீஷ்மர் உயர்ந்த ஒழுக்க நெறியில் இருந்தவராதலால் உடலின் துன்பம் ஆனந்தப் பரவச நிலையாக மாறியிருந்திருக்கலாம் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

பீஷ்மர் அம்புப்படுக்கையில் படுத்திருக்கும்படி நேர்ந்தது ஏன்?

பீஷ்மர் முற்பிறவியில், தேவர்களில் அஷ்ட வசுக்களில் ஒருவர். இந்த வசுக்கள் எட்டு பேரும் வசிஷ்டருடைய காமதேனு பசுவைக் கவர்ந்து சென்றதால் அவர்கள் பூலோகத்தில் மானிடர்களாக பிறக்கும்படி வசிஷ்டரால் சாபம் இடப்பட்டார்கள். பிறகு வசுக்கள் யாவரும் சந்தனு மகாராஜாவின் தேவியாகிய கங்கையிடம் பிறந்தார்கள். (அபிதான சிந்தாமணி, பக்கம் 821; மஹாபாரத சாரம், பக்கம் 89).

இவர்களில் ஏழு வசுக்கள் பிறந்தவுடனே கங்காதேவியால் கொல்லப்பட்டு கங்கையில் மூழ்கடிக்கப்பட்டு சீக்கிரமாக சாப விமோசனம் அடைந்தார்கள். (மஹாபாரத சாரம், பக்கம் 90). எட்டாவது வசு மட்டும் தன்னுடைய மனைவியின் சந்தோஷத்திற்காக காமதேனுவைக் களவு செய்ய விரும்பி, மற்ற வசுக்களையும் தன் தீய செயலுக்கு உட்படும்படி செய்து அவர்களையும் தன்னுடன் சேர்ந்து திருட்டுக் குற்றம் புரியத் தூண்டியதால், எட்டாவது வசுவின் குற்றம் கடுமையானது. இந்த வசு, மற்ற வசுக்கள் சாபம் அடையக் காரணமாக இருந்ததாலும், பசுவைத் திருடியதாலும், கடுமையான குற்றத்திற்காக நீண்ட காலம் பூலோகத்தில் வசிக்கும்படியாக வசிஷ்ட முனிவரால் சாபம் இடப்பட்டான். எனவே, எட்டாவது வசுவான பீஷ்மர் இப்பிறவியில் பூலோகத்தில் நீண்ட காலம் இருந்து மரணத்தைத் தழுவி, சாப விமோசனம் பெற்றார்.

பீஷ்மர் மாவீரனாகவும், தர்மம் தெரிந்தவராகவும், சத்தியத்தைக் கடைப்பிடித்தவராகவும், பிரம்மச்சரியத்தில் கடுமையான விரதம் பூண்டவராகவும் இருந்தும், முற்பிறவியில் செய்த திருட்டுக் குற்றத்திற்கு, இப்பிறவியில் அம்புப்படுக்கையில் வீழ்ந்து தண்டனை அனுபவிக்க நேர்ந்ததென்று தீர்க்கமாகத் தீர்மானிக்கலாம்.

ஒரு பிறவியில் செய்த வினைப்பயனுக்கு அடுத்த பிறவியில் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்பது இயற்கையின் நியதி. இதற்குக் கடவுள்கூட விதிவிலக்கல்ல. மஹாவிஷ்ணு இராமாவதாரத்தில் வாலியை மறைந்து நின்று கொன்றார். அடுத்த கிருஷ்ணாவதாரத்தில் அந்த வினைப்பயனை அனுபவிக்க நேர்ந்தது. கிருஷ்ண பரமாத்மா, ஒரு வேடனால் மறைந்து நின்று அம்பு எய்தப்பட்டு மானிட வடிவு நீங்கப்பெற்றார். கிருஷ்ணாவதாரமும் முடிவுக்கு வந்தது.

பீஷ்மாச்சாரியார் உயிர் போகுமுன் அம்பாலான படுக்கையில் அவஸ்தைப்பட்டதற்கு, முன்வினைப் பயனே இப்பிறவியில் துன்பப்பட்டதற்குக் காரணமாக இருந்தது என்பதே இரண்டாவது கேள்விக்கு ஏற்புடைய பதிலாகக் கொள்ளலாம் என்பது நியாயமாகத் தோன்றுகிறது.

கேள்வியின் முதல் பகுதிக்கு ஸ்ரீ அரவிந்தருடைய கருத்து எதுவாக இருக்கும் என்று ஆராய்ந்து பார்த்தால், பகவானின் நீதிமொழி 93இல் கண்டுள்ள விளக்கங்கள் இக்கேள்விக்கு விடை காண துணைபுரிகின்றன. அந்த விளக்கங்களின் அடிப்படைகளைக் கொண்டு, பீஷ்மர் வலியைத் தாங்கிக்கொண்டு ஆன்மாவின் சமநிலை அடைந்து, ஆனந்தப் பரவசம் அடைந்து, வலியை இன்ப உணர்வாக மாற்றிக்கொண்டார் என்று கருதுவது சாலப்பொருந்தும். அவர் உடலில் அம்புகள் துளைக்கப்பட்டபோதும் துன்பத்தை இன்ப உணர்வாக மாற்றிக்கொண்டார் எனக் கருதலாம். மனவலிமையினால் உடல் வலியின் தாக்குதலைச் சுலபமாகத் தடுத்து நிறுத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தார் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இருக்க முடியாது. பகவானின் நீதிமொழியின் கருத்துப்படி பீஷ்மர் வேதனையில் அவஸ்தைப்படாமல் இருந்தார் என்று எடுத்துக் கொள்வதே உசிதமாகும். எனவே, மஹாபாரதத்தில் விளக்கம் கூற முடியாத பகுதிகளுக்கு, ஸ்ரீ அரவிந்தரின் நீதிமொழி 93இல் கண்டுள்ள சூட்சுமமான கருத்துக்களாகத்தான் இருக்க முடியும் என்பதே கட்டுரையின் முடிவு.


*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பழக்கத்தைக் கொண்டு மனிதனை அறியவே முடியாது.
 

******book | by Dr. Radut