Skip to Content

02. ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ ரீதியான கருத்துகளுக்கு உண்டான வரையறைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

N. அசோகன்

 

51.
காலத்தைக் கடந்த சத்தியஜீவியம்:
படைப்பிற்கும், இறைவனுக்கும் இடையேயுள்ள ஒற்றுமையைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதும் அதே சமயத்தில் காலத்தைத் தாண்டி இருக்கின்ற சத்தியஜீவியத்தின் ஒரு பகுதி.
52.
காலத்திற்குட்பட்ட சத்தியஜீவியம்:
படைப்பிலுள்ள வேற்றுமைகளை வெளிப்படுத்தி அதே சமயத்தில் பின்னிருக்கிற அடிப்படை ஒற்றுமையையும் இழக்காமல் இருக்கின்ற சத்தியஜீவியத்தினுடைய இரண்டாம் பகுதி.
53.
பழக்கம்:
சத்தியஜீவியத்தின் வளைந்து கொடுக்கும் தன்மைக்கு எதிராக உடம்பில் நிலை பெற்றிருப்பதும், திரும்பத்திரும்ப நடக்கின்றதுமான செயல்பாடுகளுக்குப் பழக்கம் என்று பெயர்.
54.
ஆன்மா:
சத்தையும், சத்தியத்தையும் இணைக்கின்ற தொடர்பாக செயல்படுவதுதான் ஆன்மா. சத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பொழுது சத்தியம் ஆகிறது. அடுத்த கட்டமாக சத்திற்கும், சத்தியத்திற்கும் இணைப்புப் பாலமாக ஒன்று தேவைப்படும் பொழுது அந்த வேலையை ஆன்மா செய்கிறது.
55.
சத்:
பரப்பிரம்மம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் பொழுது முதலில் சத்தாகத்தான் வெளி வருகிறது.
56.
அசத்:
பரப்பிரம்மத்திலிருந்து வெளிப்படாமல் அதற்குள்ளேயே மறைந்து கிடக்கின்ற விஷயங்களுக்கு அசத் என்று பெயர். இது சத்திற்கு எதிர்மறையானதாகும். உண்மையில் சத்தைவிட அசத் பெரியதாகும்.
57.
சித்:
எல்லா குணங்களையும் தாண்டி நிற்கின்ற பரப்பிரம்மம் சத்தாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் பொழுது தன்னைத்தானே உணர்ந்து கொள்ள விரும்புகிறது. அப்பொழுது சித் பிறக்கிறது.
58.
ஆனந்தம்:
இப்படித் தன்னை உணர்ந்து கொள்கின்ற பிரம்மம் தன்னைத்தானே அனுபவிக்கும் பொழுது ஆனந்தம் பிறக்கிறது.
59.
மாயை:
மாயை என்றால் பிரமை என்று கருதப்படுவது தவறு. பகவான் கருத்துப்படி பிரம்மம் படைப்பை நிகழ்த்த விரும்பிய பொழுது தனக்கென்று ஒரு படைக்கும் திறனை உருவாக்கிக் கொண்டது. அந்த படைக்கும் திறனுக்குத்தான் மாயை என்று பெயர்.
60.
தெய்வத்தாய்:
பிரம்மத்தினுடைய செயல்படும் சக்திக்குத் தெய்வத்தாய் என்று பெயர். தெய்வத்தாயின் பிறப்பிடம் சச்சிதானந்தத்தில் உள்ள சித்-சக்தியாகும். சித்-சக்திதான் அறிவும், ஆற்றலும் நிரம்பிய இடம். இதுதான் அன்னையின் பிறப்பிடம்.
 
 
தொடரும்.....



book | by Dr. Radut